ஏனென்றால், அதில் எந்தப் பொய்யும், மிகைப்படுத்துதலும் இல்லை. உண்மை மிக எளிமையாகத் தான் இருக்கும் கண் முன்னாலேயே தான் இருக்கும். ஆனால், நம்முடைய கவனம் தான் சிதறி வேறெங்கோ போய் விடுகிறது! நாம் அதைக் கவனிக்கவில்லையே என்பதற்காக, உண்மை நம்மோடு கோபித்துக் கொண்டு எங்கோ போய்விடுவதில்லை! நாம் அதை அறிந்துகொள்வதற்காக, புரிந்துகொள்வதற்காக உரிய தருணத்தை எதிர்நோக்கிப் பொறுமையோடு காத்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்!
புவனேஸ்வரி விஷயமாக நான்கு பதிவுகளை எழுத நேர்ந்ததில் சில விஷயங்கள் என்னுடைய குருவி மண்டைக்கும் புரிய வந்திருக்கிறது. பராக்குப் பார்ப்பது என்பது, எந்த வயதிலும் மனிதனை விடுவதில்லை என்பதும் பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதில் இருந்து விடுபடுவது உண்மையிலேயே மிகக் கடினமானது தான் என்பதும் ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடல்களைத் தொட்டு பேசிய விஷயங்கள்தான்! ஞானத்தைப் பற்றி கதையளப்பதென்பதுவேறு, உண்மையிலேயே ஞானம் வாய்க்கப் பெறுவது வேறுதான் இல்லையா?
இரண்டு மாதங்களுக்கு முன்னாலும், ஏறத்தாழ இதே மாதிரி நிலைமை வந்தது. போகும் திசை மறந்து போச்சு! என்ற தலைப்பில் இதை எழுதியபோது ஒரு நண்பர் சொல்லாமல் ஒரு விஷயத்தைச் சொல்ல முயன்றார். சென்றபதிவில் திரு கௌதமன் மிகவும் வெளிப்படையாகவே, சேற்றை எடுத்துப் பூசிக் கொண்ட கதையாக, வலைத்தரம் தாழ்ந்து விட்டது என்றும் சொல்லியிருந்தார். உண்மைதான்!
சொல்ல வந்த விஷயத்தை, வீரியம் குறையாமல், நறுக்கென்று வசிப்பவர் மனதில் தைக்கிற மாதிரியும் சுருக்கமாகவும் பதிவு எழுதும் கலை எனக்குக் கை வரவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி நாலு வரியோ, நாற்பது வரியோ சொல்லவந்ததை நச்சென்று எழுதும் கலையை முழுதும் அறிந்தவராக,அதைக் கடைப்பிடிக்கும் வலைப்பதிவராக திரு.ராஜநாயகம் ஒருவரைத் தான் சொல்ல முடிகிறது!
புவனேஸ்வரி என்பது ஒரு பெயர்ச் சொல்! வினையான தொகையுமாகி கொஞ்சம் அதிகமாகவே நிறையப்பேருடைய அடிவயிற்றைக் கலக்கிவிட்டுப் போன ஒன்று! இரண்டு வருடங்களுக்கு முன்னால் கன்னட பிரசாத், இன்றைக்கு புவனேஸ்வரி,நாளை இன்னொன்று வேறு பெயரில் வரும், அவ்வளவுதான்!
இதுக்கெல்லாம் இவ்வளவு அலட்டிக் கொள்ளலாமா என்று கேட்டால், அலட்டிக் கொள்வது நல்லது என்றே இங்கே ஒருத்தர் ஒன்றரை வருடத்திற்கு முன்னாலேயே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
இங்கே கீதையில் கண்ணன் "மா ஸுச:" என்று எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறான் அதனால் கவலைப்படாமல் தொலைகாட்சி முன்னால் உட்கார்ந்து கொண்டு அவர்கள் எதையெல்லாம் கொண்டாடச் சொல்கிறார்களோ அதைக் கொண்டாடிவிட்டுப் போய்விடவேண்டியது தானே என்பவர்களுக்காக, ஒரு சேதி!
கவலைப்படுங்கள்! அது மிகவும் நல்லது! என்ன, எந்த அளவுக்குக் கவலைப்படுவது என்பதைத் தெரிந்து கொண்டு கவலைப் படுங்கள் என்று சொல்கிறார். ராபர்ட் ரோசென் என்கிற உளவியல் மற்றும் தலைமைப் பண்பு நிபுணர்!
கவலைப்படுவதா? அது மிக மோசமாயிற்றே என்று தான் நமக்குத் தோன்றும். கவலைப் படுவதால் என்ன ஆகிவிடப்போகியாது என்று வேதாந்தமும் கூடப் பேசுவோம். கவலைப் படவேண்டிய தருணங்கள் வரும்போது அதை முரட்டுத்தனமாக எதிர்ப்பதிலோ, அல்லது அந்தச் சூழ்நிலையை விட்டு ஓடிவிடுவதிலோ தான் நம்முடைய கவனம் இருக்கும். ஆனால், இந்த மனப்பான்மை மிகவும் காலாவதியாகிப் போனது என்கிறார் ராபர்ட் ரோசென்.
கவலைகள் அளவுக்கு அதிகமாகும்போது பயம், குழப்பம் இவைகளோடு நம்பிக்கையை இழந்து விடுவதும் உண்மை தான்! அதே நேரம், கவலைப்படாமல் அசட்டையாக இருந்து விடுவதும் கூட, ஒருவிதமான மந்தத்தன்மையுடன், போலியான அல்லது அசட்டுத் தனமான தைரியம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மாதிரிக் கற்பனையில் மிதப்பதுமே கூட ஆபத்தானது தான்! ஒரு ரப்பர் பான்ட் இருக்கிறது, அதை ஒரு எல்லைக்கு மேல் இழுத்தால் பிய்ந்து விடும்! அந்த எல்லையை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் சும்மா இருந்து விட்டால் ரப்பர் பான்ட் நமக்கு எந்த விதத்திலுமே பயன்படாது போய்விடும் இல்லையா? அதே மாதிரி, பிய்ந்து விடுகிற நிலைக்கும், அதனுடைய எலாஸ்டிசிடியைப் பயன்படுத்தாமல் இருக்கிற நிலைக்கும் மத்தியில் இருக்கும் அதிகப்பயன்பாடு அல்லது பயன்பாட்டு உச்ச நிலையைக் கண்டுகொள்வதில் தான், கவலைகள் மிக வலி.மையான கருவிகளாக, வெற்றியைத் தருபவையாக நமக்குக் கிடைக்கின்றன என்கிறார் ஆசிரியர்.
பாதுகாப்பின்மை, அசௌகரியம், குழப்பம், வலி இவைகளை அனுபவித்துப் புரிந்துகொள்வதில் நம்முடைய உச்சகட்டத் திறமையை வெளிப்படுத்தும் தருணங்களாக,தனிநபராகவோ அல்லது குழுக்களாகவோ எப்படியிருந்தாலும் சரி, 'போதுமான அளவுக்குக் கவலைப்படு' என்பது ஒரு வாழும் கலையாகவே ஆகிவிடும் என்று சொல்கிறார்.
கவலைப்படுவது என்பது, அதைப் பற்றி எவ்வளவு மோசமாகச் சொல்லப்பட்டபோதிலும், அதன் மோசமான விளைவுகள் உண்மையாக இருந்தபோதிலும் கூட, உண்மையான பிரச்சினை இல்லை! கவலைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், என்ன செய்கிறோம் என்பதே உண்மையான பிரச்சினை என்கின்ற இந்த வலைப்பக்கங்களையும் படித்துப்பாருங்கள்!!
எவ்வளவு அருமையான உண்மை! இந்தப்பாடம் மட்டும் எனக்கு ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருந்தால்..........!
இப்போது கூட ஒன்றும் குறைந்து போய்விடவில்லை! சுவாசம் உள்ளே இழுக்கிற ஒவ்வொரு தருணமும் பிறப்பாகவும், வெளிவிடுகிற நேரம் மரணமாகவும் இந்தியத் தத்துவ மரபு மிக அழகாக வாழ்க்கையைத் துல்லியமாக அனுபவித்து உணர்ந்திருக்கிறது. என்னுடைய தோல்விகளே எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்திருப்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்!
"வாழ்க்கை முழுவதுமே யோகம்" என்று ஸ்ரீ அரவிந்தரும் சொல்லியிருக்கிறார்!
ஒவ்வொரு தருணமும், ஒவ்வொரு விஷயமும் கற்றுக்கொடுப்பதாகவும், கற்றுக் கொள்வதாகவுமே அனுபவத்தில் உணர்கிறேன்!
அசதோ மா சத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி:
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி:
சீன பூதம் அல்லது டிராகன் மறுபடி பரபரப்புச் செய்திகளாக ஆகிக் கொண்டிருக்கிறது. பிரச்சினை என்னவென்றே தெரியாமல் நிறைய கருத்து கந்தசாமிகளும், ஏதோ ஒன்றைப் பூதாகாரமாக்கிக் காட்டுவதே பத்திரிகை தர்மம், தொழில் என்றிருப்பவர்களுக்குக் கொஞ்சம் தீனி கிடைத்திருக்கிறது. அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், சீனர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள உருப்படியான விஷயங்களும் இருக்கிறது. அவற்றில் ஒன்று இதோ!
நன்றி திரு. கௌதமன்!
//ஒரு எழுத்தாளனாக(!?), அல்லது பதிவராக அடையாளம் காட்டப்படுவதை விட ஒரு வாசகனாகவே என்னை மிகவும் சந்தோஷத்தோடு உணருகிறேன்.//
ReplyDeleteநானும் தான்!
//பராக்குப் பார்ப்பது என்பது, எந்த வயதிலும் மனிதனை விடுவதில்லை//
ReplyDeleteபராக்கு பார்ப்பதில் தப்பில்லை! எட்டிபார்ப்பதில் தான் தப்பு!
//ஞானத்தைப் பற்றி கதையளப்பதென்பதுவேறு, உண்மையிலேயே ஞானம் வாய்க்கப் பெறுவது வேறுதான் இல்லையா?//
ReplyDeleteஎது ஞானம் என்பதை வரயுறுத்துவதை பொறுத்து அது!
மனநிலை பிறழ்ந்த ஒருவன் அளவில்லாத ஞானம் பெற்றவனாக என் கண்களுக்கு தெரிகிறானே!
மூன்று வயது குழந்தையின் கேள்விகள் கூட மீறிய ஞானமாக தெரிகிறதே!
//போதுமான அளவுக்குக் கவலைப்படு'//
ReplyDeleteபோதுமான அளவு என்பது எவ்வாறு அளவீடுவது என்பதே இப்போது எனக்கு பெரும் கவலையாக இருக்கிறதே!
//இந்தப்பாடம் மட்டும் எனக்கு ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருந்தால்..........! //
ReplyDeleteநாங்கெல்லாம் தப்பிச்சிருப்போம்!
இந்த கட்டுரை வந்திருக்காதே!
//அசதோ மா சத் கமய
ReplyDeleteதமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி: //
சமஸ்கிருத மந்திரங்கள் எல்லாம் பொம்பள பேர்லயே இருக்கே!
//வந்தீங்க, மேம்போக்கா ஒரு பார்வை பாத்தீங்க அல்லது படிச்சீங்க, சரி! என்ன நெனைக்கறீங்கன்னு தான் சொல்லிட்டுப் போகலாமே!//
ReplyDeleteஆயிரம் நெனப்பு ஓடும், எதை சார் சொல்றது!
எது ஞானம் என்பதை வரயுறுத்துவதை பொறுத்து அது!
ReplyDeleteமனநிலை பிறழ்ந்த ஒருவன் அளவில்லாத ஞானம் பெற்றவனாக என் கண்களுக்கு தெரிகிறானே!
மூன்று வயது குழந்தையின் கேள்விகள் கூட மீறிய ஞானமாக தெரிகிறதே!/
தொடர்ந்து ஏழு கேள்வி விமரிசனச் சரங்களுக்கு நன்றி அருண்!
மிக அருமையான பார்வை! இன்னும் கொஞ்சம் கூர்மைபடுத்திக் கொள்வதற்காக, சில உதவிக் குறிப்புக்கள்:
குழந்தையின் சிறிய கேள்விகள் கூட மீறிய ஞானமாகத் தெரிவதற்கு ஒரே காரணம், குழந்தைகள் உண்மையிலேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு கேட்பது தான்! தவிர, முன் கூட்டியே ஒரு முடிவு, ஒரு பக்கச் சார்பு நிலை எடுத்துக் கொண்டு அதற்குத் தகுந்த மாதிரிக் கேள்விகளைக் குழந்தைகள் கேட்பதில்லை! அதனால் தான் ஞானத்தைப் பெறுகிற பாத்திரம் அங்கே தயாராக இருக்கிறது!
மனநிலை பிறழ்ந்த ஒருவன்-சரி! யாருடைய பார்வையில்? அங்கே தான் உண்மையான விடை இருக்கிறது. உங்களுடைய பார்வைப்படி, ஞானம் பெறுவதற்கு முதல் தகுதி மன நிலை பிறழ்ந்திருப்பது என்றாகிறதே! கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களா?
வால்பையன் கேட்டது: /ஆயிரம் நெனப்பு ஓடும், எதை சார் சொல்றது!/
ReplyDeleteநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை ஒருமுறை வாய்விட்டுப் பாடிப்பாருங்கள்! கவிஞர் அதற்கும் ஒரு விடை வைத்திருக்கிறார்!
வால்பையன் கொஞ்சம் பொறாமையோடு கேட்டது:
ReplyDelete/சமஸ்கிருத மந்திரங்கள் எல்லாம் பொம்பள பேர்லயே இருக்கே!/
வால் பையன்கள் பேரிலும் மந்திரம் இருக்கிறது! அந்த வால்பையனுக்குப் பேர் குட்டிக் கிருஷ்ணன்! அவனே பெரிய மந்திரம்!
//ஞானம் பெறுவதற்கு முதல் தகுதி மன நிலை பிறழ்ந்திருப்பது என்றாகிறதே! கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களா? //
ReplyDeleteஉண்மையை தானே சொல்லியிருக்கிறேன்!
உலக அறிவு அற்றிருப்பது தானே ஆன்மீக பாதையில் உண்மையான ஞானம்!
ஆன்மீக ஞானம் என்பது உலக ஞானம் இல்லாமல் இருப்பது அல்ல. அல்லது இந்த உலகத்தை விட்டு ஒதுங்கிப்போவதும் அல்ல. மனம் பிறழ்ந்த என்ற இடத்தில் மனமிறந்த அல்லது மனம் அற்ற நிலை என்று சொல்லப்படும், மனம் ஒரு தடுப்புச் சுவராக இல்லாத நிலையில் என்று பொருத்திப்பாருங்கள்!
ReplyDeleteஇப்போது உண்மை போலத் தோன்றுவது, உண்மையாகிவிடும்!
//இப்போது உண்மை போலத் தோன்றுவது, உண்மையாகிவிடும்!//
ReplyDeleteஅரவிந் அன்னையாருக்கு முன்னும் பல ஆன்மிக தலைவர்கள், தலைவிகள் இருந்திருக்கிறார்கள்! ஆனாலும் பாருங்கள் ஆளுக்கு ஒரு வழி, எதுவும் இன்று வரை இறுதியானது, உண்மையானது என நிறுபிக்கப்படவில்லை!
வலித்தால் அழாதீர்கள் என்பார்கள், அதெல்லாம் காயம் அவர்களுக்கு வராத வரை தான்! தத்துவங்களும், அறிவுரைகளும் கேட்க்கத்தான் நல்லாயிருக்கும்!
பட் பிராக்டிகலி இட்ஸ் நாட் பாஸிபுள்!
குழப்பங்களில் இருந்து தெளிவு பெற வேண்டுகிற உயிர்கள் இருக்கும் வரை, ஆன்மீக ஒளி பரப்பும் இறைவனது கருவியாகப் பலப்பல வடிவங்களில், பெயர்களில் வந்துகொண்டேதான் இருப்பார்கள்.
ReplyDeleteகொஞ்சம் கவனித்துப்பார்த்தால், ஆன்மீகச் சிந்தனையை வளர்ப்பவர்கள் ஆளுக்கு ஒரு வழி, நேரத்துக்குஒரு உபதேசம் என்றெல்லாம் செய்துகொண்டிருப்பதில்லை. தங்களுடைய அனுபவத்தில் காணாததை ஒருபோதும் ஒரு கற்பனையாகச் சொல்லி ஏமாற்றுவதுமில்லை.
மகான்களாக, மகாத்மாக்களாக வணங்கப்படுகிறவர்கள் வலியை, வேதனையைத் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவர்கள். பிறருடைய வலியையும் ஏற்றுக் கொண்டவர்கள்!
பால் தினகரன், மோகன் லாசரஸ் அல்லது விஜய் டீவீயில் அனுமார் தாயத்து விற்பவர்களை வைத்து முடிவு செய்து விடாதீர்கள்!
//பால் தினகரன், மோகன் லாசரஸ் அல்லது விஜய் டீவீயில் அனுமார் தாயத்து விற்பவர்களை வைத்து முடிவு செய்து விடாதீர்கள்! //
ReplyDeleteஅனுமார் தாயத்து விற்ப்பவர் ஜெயா டீவி!
//குழப்பங்களில் இருந்து தெளிவு பெற வேண்டுகிற உயிர்கள் இருக்கும் வரை, ஆன்மீக ஒளி பரப்பும் இறைவனது கருவியாகப் பலப்பல வடிவங்களில், பெயர்களில் வந்துகொண்டேதான் இருப்பார்கள்.//
இறைவனின் கருவி ஏன் பலப்பல வடிவங்களில் வரணும்! அப்படியே வரும் வடிவம் ஏன் நமிதா மாதிரி குஷ்பூ மாதிரி இருக்க மாட்டிங்குது!
//கொஞ்சம் கவனித்துப்பார்த்தால், ஆன்மீகச் சிந்தனையை வளர்ப்பவர்கள் ஆளுக்கு ஒரு வழி, நேரத்துக்குஒரு உபதேசம் என்றெல்லாம் செய்துகொண்டிருப்பதில்லை.//
ஆமாம், மாடசாமி குப்புசாமியாகவும், தங்கம் வைரமாகவும் பெயர் மட்டும் தான் மாறுகிறது, கதைகள் என்னவோ ஏற்கனவே ஜென் கதைகளீல் வந்தது தான்!
//தங்களுடைய அனுபவத்தில் காணாததை ஒருபோதும் ஒரு கற்பனையாகச் சொல்லி ஏமாற்றுவதுமில்லை. //
கடவுள், மதம், புராணம், சொர்க்கம், நரகம் இவைகளெல்லாம் கற்பனையில்லாமல் என்னவாம்!
//மகான்களாக, மகாத்மாக்களாக வணங்கப்படுகிறவர்கள் வலியை, வேதனையைத் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவர்கள். பிறருடைய வலியையும் ஏற்றுக் கொண்டவர்கள்!//
அப்படி பார்த்தால் விளிம்புநிலை மனிதர்கள் தான் மகான்களாக இருக்க முடியும், தினம் தினம் தமது வாழ்வில் வலியை அனுபவிப்பவர்கள்!, நீங்கள் சொல்லும் மகான்கலும் மகாத்மாக்களும் விளம்பரபிரியர்கள்!
எனக்கு ஒவ்வோரு விவசாயியும் மகான் தான்!
அன்பு நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு !
ReplyDeleteஎன்னை இரண்டு இடங்களில் இழுத்து கட்டிப் போட்டிருக்கிறீர்கள். நன்றி.
என்னுடைய அலுவலக நாட்களில் - நான் பங்கேற்ற தகவல் பரிமாற்றம் பற்றிய வகுப்புகளில், ஒரு முக்கியமான விஷயம் கூறினார்கள் - அது மேடைப் பேச்சுக்கு - ஆனால் வலைப் பதிவுக்கும் அதை நாம் பயன் படுத்துவது நல்லது என்று தோன்றுகிறது.
It is, "Just one subject only, in one presentation"
Clear Hai?
பாவன்னா'ராகவன் கொஞ்சம் பயத்தோடேயே தன்னுடைய வம்புப்பின்னூட்டங்களினால் பிரபலமான வால்பையன் என்று சொன்னதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன!
ReplyDeleteஒரு சொலவடை உண்டு. பட்டறி அல்லது கேட்டறி! அதுவும் முடியாவிட்டால், கெட்டறி.
விவாதங்களில், பட்டிமன்றங்களில் உண்மையை நிறுவ முடியாது.
அன்புள்ள திரு கௌதமன்,
ReplyDeleteநீங்கள் சொல்வது ஒரு விதத்தில் உண்மைதான்! கிட்டத்தட்டஇதே விஷயத்தைத் தான் சென்ற பதிவில் வால்பையன் கூட இதையே மூன்று பகுதிகளாகப்போட்டிருக்கலாம்-உண்மைத்தமிழனுக்குப் போட்டியாக ஆரம்பிக்காதீர்கள் என்று சொல்லியிருந்தார்.
ஒரே மையக் கருத்தைத் தொட்டுப் பேசுவதற்காகவே இத்தனை விஷயத்தையும் தொட்டுப் பேச முற்பட்டேன். இப்போது கூட, இந்தப் பதிவு மேம்போக்காக, தலைமைப் பண்பைத் தொட்டுச் சொல்லும் ஒரு புத்தக விமரிசனமாக இருந்தாலும் கூட, இந்த மாதம் முதல் மூன்று பதிவுகளில் சொன்ன விஷயங்களையே கொஞ்சம் விரிவு படுத்தி, அழுத்திச் சொல்வதற்காக மட்டுமே.
Precis writing பள்ளி நாட்களோடு மறந்துபோய் விட்டது. இப்போது மறுபடி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்!
//பாவன்னா'ராகவன் கொஞ்சம் பயத்தோடேயே தன்னுடைய வம்புப்பின்னூட்டங்களினால் பிரபலமான வால்பையன் என்று சொன்னதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன!//
ReplyDeleteஹாஹாஹா
எனக்கு கெட்ட பின் வரும் அறிவும் முக்கியம்! கேட்ட பின் வரும் அறிவும் முக்கியம்!
I am just studying your blogs. They are interesting. I will follow up with comments later.
ReplyDeleteP.Kandaswamy
நான் இந்த வலைப் பதிவைப் பிடித்ததே தனியான, சுவையான கதை. சுத்தானந்த பாரதி என்ற தலைப்பில், ஒரு நாள் கூகிளிட்டேன். அப்பொழுது கிடைத்த சொற்பமான தகவல்களில் - உங்கள் வலைப் பதிவு அரிய தகவல்கள் கொண்டதாக இருந்தது. அது முதல் நான் உங்கள் பதிவுகளை படித்து வருகின்றேன். சுத்தானந்த பாரதியார் அவர்கள், என்னுடைய மன்னி வழி உறவினர் என்பதாலும், அவரை நான் அடையாறு ஆஷ்ரமத்தில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன் என்பதாலும் தான் நான் வலை தேடல் செய்தேன்.
ReplyDeleteஒரு புதிய தகவலைச் சொல்லியிருக்கிறீர்கள், திரு கௌதமன்! நன்றி!
ReplyDeleteகவியோகியாரை ஒரு விதத்தில் உறவினராகப் பெறும் புண்ணியம் செய்திருக்கிறீர்கள்!
எனக்கு அவருடைய நூல்கள் வழியே தான் அறிமுகம், ஒரே ஒரு முறைதான் தரிசித்திருக்கிறேன். பன்முகத் திறமை கொண்ட ஒரு மாமனிதரை, இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய வேண்டும், அவருடைய நூல்களோடு விட்டுப்போன உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகவும் எனக்குண்டு.
அவருடைய சுயசரிதையான ஆத்மசோதனை தான் எனக்கு முதன்முதலாக அறிமுகமான புத்தகமும் கூட.
இப்போதுதான் உங்கள் பதிவில் நுழைந்திருக்கிறேன்.உடனே பின்னூட்டம் போட முடியாத ஆழமான கருத்துக்களைப் பகிர்கிறீர்கள் அதனால் பாராட்ட மட்டுமே இந்தத் தொடர்பு.
ReplyDeleteநன்றி,சார்.
நல்லதொரு புத்தகத்தையும் அதன் கருத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா. இந்தப் புத்தகத்தைப் படிக்க இயன்றால் படிக்கிறேன். ஆனால் உங்கள் அறிமுகமே தேவையான அளவிற்கு இந்தப் புத்தகத்தின் கருத்தினை விளக்கிவிட்டது என்று நினைக்கிறேன்.
ReplyDeleteவாருங்கள் திரு.குமரன்!
ReplyDeleteபுத்தகங்கள் ஒரு ஆரம்பப் புள்ளியாக மட்டுமே இருக்க முடியும். How to stop worriying and start living புத்தகத்தில் டேல் கார்னகி சொன்ன விஷயங்களில் இருந்து இவர் சொல்வது அதிக வித்தியாசமில்லை. கார்னகி நிறைய விஷயங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார், இவர் கவலைப்படுவது என்ற ஒரே ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்!
இன்னொருத்தர் Fear is the Real Driving Force என்று ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, பயப்படுங்கள் அதுவும் நல்லது என்று புத்தகம் எழுத, அதுவும் கூட பரபரப்பாக விற்பனையாகும்! பேசப்படும்!
வாழ்க்கையை நாம் எவ்விதம் எதிர்கொள்கிறோம் என்பது மட்டுமே நம்முடைய அணுகுமுறையைத் தீர்மானிக்கிறது. அந்த அணுகுமுறையைப் புத்தகங்கள் மட்டுமே கற்றுக் கொடுத்து விட முடியாது என்பதே என்னுடைய கருத்தாக இருக்கிறது.