தேடிப்பார்த்தேன், காந்தியைத் தான் காணோம் !"தேடிப்பாத்தேன் காந்தியத் தான் காணோம்- காந்தியத்தான் காணோம்!
ரூபாய் நோட்டில் வாழுகிறார் காந்தி!"


இந்தப் பாட்டைக் கமல் ஹாசன் சொந்தக் குரலில் பாடியிருப்பதைக் கேட்கிற தருணங்களில் பரமக்குடி வக்கீல் ஸ்ரீநிவாசன் நினைவு வரும்.


பரமக்குடி வக்கீல் ஸ்ரீநிவாசன், அந்த நாளைய காங்கிரஸ்காரர், சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்ததாகவும் சொல்வார்கள். சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொண்ட ஒரு முஸ்லிம் நண்பர் ஏதோ ஹாசன் என்று முடியும் சரியாக நினைவு வர மாட்டேனென்கிறது, அவருடைய நினைவாகத் தன்  மகன்களுக்கு வரிசையாக, சாரு ஹாசன், சந்திர ஹாசன், கமல் ஹாசன் என்று பெயர் வைத்ததாகவும் சொல்வார்கள். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயமெல்லாம் சரியாக நினைவில் நிற்க மாட்டேன் என்கிறதே!

கூகிள் ஆண்டவர் தயவில்  ஆழ்வார்பேட்டை ஆண்டவர் பற்றிய சேதியும் தேடக் கிடைத்தது:

"என் தந்தை சீனிவாசய்யங்கார் பிரபல வழக்கறிஞர்,தேச பக்தர். காங்கிரஸ் இயக்கங்களில் தேச விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர்.அவருடன் சிறைச்சாலையில் ஒரே அறையில் யாகுப் ஹாசன் என்னும் முஸ்லிமும் ஒன்றாகவே தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தார். அப்பாவும் அவரும் நல்ல நண்பர்கள் . இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக தோழமை கொண்டிருந்தனர். அவரிடம் இருந்த ஈடுபாடு காரணமாக என் தந்தை தனது
மகன்களான எங்களுக்கு சந்திரஹாசன் சாருஹாசன் கமல ஹாசன் என்று பெயர்
வைத்தார்."

சாருஹாசனின் பேட்டி தினமலர் 16.9.2001
 


சரி, பரமக்குடி வக்கீல் நினைவு எதற்காக வந்தது என்று கேட்க மாட்டீர்களா? பரவாயில்லை, நானே பெருந்தன்மையாகச் சொல்கிறேன்!


ஒரு காந்தீய வாதியாகச் சொல்லப் பட்டவர் மகனே காந்தியை இப்படி நக்கல் அடித்துப் பாட்டுப் பாடி நடித்திருப்பதைப் பார்த்திருந்தால் என்ன நினைத்திருந்திருப்பார் என்று என்னால் ஊகம் செய்ய முடியவில்லை, உங்களுக்காவது ஏதேனும் ஊகம் இருக்கிறதா, வந்து மறக்காமல் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுப் போய் விடுங்கள்!


நேற்றுத் தான் சீனப் பெருமிதம் வயது அறுபது என்று பதிவெழுதினேன்! நியாயமாகப் பார்த்தால், இன்றைக்கு காந்தி ஒரு நூற்று நாற்பது என்றல்லவா தலைப்பு வைத்திருக்க வேண்டும்? எதற்காக கமல் ஹாசன் பாட்டைத் தேடித் பிடித்து, அதில் அவர் 'தேடிப்பாத்தேன் காந்தியத் தான் காணோம்-காந்தியத்தான் காணோம்னு' பாடினதை வைத்து ஆரம்பிக்க வேண்டும்?

தவிர, இன்றைக்கு காந்திக்குத் தானே பிறந்த நாள்? போதாக்குறைக்கு உன்னைப் போல் ஒருவனை வைத்து ஏற்கெனெவே தமிழ் வலைப்பதிவர்கள் கமலை வறுத்துத் தாளித்து, கை சோர்ந்து போய் வேறு வேலை பார்க்கப்போகலாம் என்று இருக்கும் தருணத்தில் இது என்ன புதுக் கமல்..சாரி..குழப்பம்?


நியாயமான கேள்வி தான் என்று ஒரு வார்த்தை இதமாகச் சொல்ல மாட்டீர்களா? போகிறது, அப்படி நீங்கள் கேட்டதாகவே வைத்துக் கொண்டு பதில் சொல்லப் பார்க்கிறேன்!


வலையில் படித்துக் கொண்டிருந்தபோது நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் சீனப் பெருமிதம் குறித்த விவரமான செய்திக் கட்டுரைகளைப் படித்து முடித்த பிறகு, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இருந்த சில ஒற்றுமைகளைப் பற்றியும், கடந்த அறுபது ஆண்டுகளில் கிடைத்த வாய்ப்புக்களைச் சீனாவும், இந்தியாவும் எப்படிப் பயன் படுத்திக் கொண்டன, என்ன நிலைமையில் தற்போது இருக்கின்றன என்ற ஒப்பீடு செய்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.

கடந்த சில காலமாகவே எழுத்தாளர் ஜெயமோகனின் பக்கங்களில், காந்தியைக் குறித்த சிந்தனைகள், விவாதங்கள், நடந்து வருகின்றன. 
முடிந்துபோன ஒரு கடந்த காலமாகவும், இன்னும் ஒரு லீவு நாளாகவும் மட்டுமே இருந்து விடாமல் காந்தியைக் குறித்த விமரிசனங்கள், வெவ்வேறு விதமான புரிதல்கள் அங்கே நிறையப் படிக்கக் கிடைக்கின்றன.


ஜெயமோகன் எடுத்து வைக்கும் வாதங்கள், பதில்களைக் கவனித்தும் வந்ததில் மோகன்தாஸ் கரம் சந்திர காந்தி என்ற தனிநபர் மகாத்மா காந்தியாக வளர்ந்ததை அவருடைய பதில்கள், கட்டுரைகளிலும், மாறுபட்ட கருத்துக்கள், விமரிசனங்களை அவரிடம் கேள்வி எழுப்பியவர்கள் வார்த்தைகளிலும் ஒருங்கே படிக்கக் கிடைத்ததில்,காந்தியைப் பற்றி நான் புரிந்துகொண்டதென்ன, இங்கே நான் சந்திக்கும் நண்பர்கள், பதிவர்கள் புரிந்துகொண்டதென்ன என்பதைத் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில். சீனக் கொண்டாட்டங்களையும் பற்றிப் படிக்க நேர்ந்தபோது, இரண்டு நாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் புதிய சிந்தனை இழையோட ஆரம்பித்தது.

சமீப கால வரலாற்றில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மனிதர் என்றால், மகாத்மா காந்தி ஒருவராகத்தான் இருக்க முடியும். ஒரிஜினலைத் தள்ளி விட்டு வேறு எவரெவரோ காந்தி என்று தன்னைச் சொல்லிக் கொள்ள முடிகிற ஒன்றே போதுமே. அப்புறம் கமல் தனது படத்தில் "தேடிப்பாத்தேன் காந்தியைத் தான் காணோம்-ரூபாய் நோட்டில் வாழுகிறார் காந்தி" என்று பாடினதை மட்டும் எதற்கு நொள்ளை சொல்ல வேண்டும்?


ரூபாய் நோட்டில் மட்டுமாவது காந்தியை வாழ விட்டிருக்கிறார்கள் என்றால், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அந்த வட்டமான, வழுக்கைத்தலையும், பொக்கை வாய்ச் சிரிப்பும், கண்ணாடியும் என்க்ரேவ் செய்வதற்கு மிக நுட்பமாக இருப்பதால் மட்டுமே! டிசைன் செய்வதில் ஹூக்குகளைப் பயன்படுத்தியே மிக நேர்த்தியாக காந்தியின் படம் வரையப்பட்டிருப்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தாலே தெரியும். ஏதோ காந்திக்கு மரியாதை, அபிமானத்தில் இன்னமும் ரூபாய் நோட்டில் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று நம்புவது உங்கள் இஷ்டம், அவ்வளவுதான்!

காந்தியைப் பற்றி, ஒரு இடதுசாரிச் சிந்தனையாளனாக இருந்த காலத்தில், பெரிதாக ஒரு சித்திரம் இருந்ததில்லை. சுதந்திரமாகச் சிந்திக்கும்போது தான், உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கிறது. அந்தவகையில், காந்தி என்ற மாபெரும் மக்கள் தலைவனை அறிந்து கொள்ளும் தருணமும் சமீபகாலமாகத் தான் கிடைத்திருக்கிறது.


கொஞ்சம் பொறுமையாக காந்தி என்ற மனிதரைப் புரிந்து கொள்ள முயற்சித்தாலே, எவ்வளவு அற்புதமான மனிதர் என்பதும், தன்னுடைய மக்களை முழுமையாகப் புரிந்து கொண்ட, அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்பதிலும் மிகத் தெளிவாக இருந்த ஒரே தலைவர் என்பது தெரிய வரும். குறைகள் இல்லாத மனிதர் என்று எவருமே இல்லை, ஆனால் தன்னுடைய குறைகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு தன்னுடைய ஜனங்களுக்கு அதனால் எந்தத் தீங்கும் நேராமல் பார்த்துக் கொள்ளக் கூடிய பக்குவமும் அவருக்கு இருந்தது.


"வைஷ்ணவ ஜனதோ" நரசி மேத்தா என்ற குஜராத்திக் கவிஞனின் பாடல் காந்திஜி விரும்பிய கீதமாகச் சொல்வார்கள். கீழே இருக்கும் யூட்யூப் இணைப்பில் காந்திஜி விரும்பிய கீதத்தைக் கேட்பதோடு, காந்தியின் உரையாடல் ஒன்றையுமே கொஞ்சம் கேட்கலாம். மைசூருக்குச் சென்றிருந்த பொது அங்கே கிராமத்து ஜனங்களைச் சந்தித்த அனுபவத்தையும், அவர்களுடைய அறியாமை, நம்பிக்கை, வாழ்க்கை முறையைப் புரிந்து கொண்ட விதத்தை இந்த உரையாலில் கேட்க முடியும்.


காந்திஜி பிறந்த நாளான இன்று, வாழ்க நீ எம்மான்! என்று வணங்குவோம்!


ஜெயமோகனின் வார்த்தைகளில், "ஆனாலும் ”பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க வாழ்க” என என் மொழியின் நவகவிஞனுடன் சேர்ந்து கூத்தாடுவதற்கு எனக்குத் தயக்கமில்லை."

எனக்கும் தான்!There comes a time in the life of every nation when it stands at the cross-roads of history and must choose which way to go. But for us there need be no difficulty or hesitation, no looking to right or left. Our way is straight and clear – the building up of a socialist democracy at home with freedom and prosperity for all, and the maintenance of world peace and friendship with all nations. ”


நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னாள், ஜூன் பதினொன்றாம் தேதி நேருவிற்குப் பிறகு யார் என்ற கேள்வி பூதாகாரமாக எழுந்த நிலையில், பிரதமராகப் பதவியேற்ற எளிய மனிதர் லால் பஹதூர் சாஸ்த்ரியின் முதல் உரை இது. நேருவைப் போல பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறக்கவில்லை, அந்நிய மோகம் இருந்ததில்லை,தனிநபர் ஒழுக்கத்திலும் அப்பழுக்கற்ற மனிதர், இந்தக் குள்ளமான மனிதரா, நேருவின் இடத்தை நிரப்பப் போகிறார் என்று பலரையும் புருவம் நெரியச் செய்த தருணம் அது. ஆட்சிப்பொறுப்பில் இருந்தது சிறிது காலம் தான். ஆனால், அந்தக் குறுகிய காலத்தில் தான் எத்தகைய சாதனை?


1965 ஆம் ஆண்டு, அமெரிக்காவிடமிருந்து ஏராளமான நிதி உதவி, போர்த் தளவாடங்களையும் பெற்ற மமதையில் பாகிஸ்தான், இந்த தேசத்தின் மீது தாக்குதல் தொடுத்தது. 1962 ஆம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின்போது, நேருவின் கோழைத்தனம் வெளிப்பட்டதை வைத்துக் கூட பாகிஸ்தானுக்கு தைரியம் வந்திருக்கக் கூடும்.


ஆயுத பலமோ, உலக நாடுகளின் ஆதரவோ இல்லாத நிலையிலும் கூட, இந்தக் குள்ளமான மனிதர், உண்மையிலேயே தான் எவ்வளவு பெரிய மனிதர் என்பதை நிரூபித்தார். படையினருக்குக் கொடுத்த உற்சாகம், ஆதரவு, காயலாங்கடைக்குப் போட வேண்டிய பழைய ஆயுதங்களை வைத்துக் கொண்டு இந்திய ராணுவம், அந்தப் போரில் அமெரிக்க சாபர் ஜெட் விமானங்களை,பேட்டன் டாங்குகளை வீழ்த்தியதில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது. அரசியல் உறுதி, தெளிவான முடிவுகள், போர் உத்திகள், நவீன ரக ஆயுதங்களை விட வலிமையானவை!


17 செப்டம்பர் 1965, சீனா மறுபடியும் மறைமுகமாகப் பாகிஸ்தானுக்கு அதரவு தெரிவிப்பது போல இந்தியாவை மிரட்டிப் பார்த்தது. சீன எல்லைக்குள் இந்தியா ஆயுதங்களைக் குவித்திருப்பதாகவும், உடனடியாக அகற்றாவிட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை அரசுபூர்வமான கடிதமாகவே அனுப்பியது. அவர்களுக்கும் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப்பட்டது. முதல் முறையாக இந்தியாவுக்கு முதுகெலும்புள்ள, தைரியமாக முடிவெடுக்கத் தெரிந்த காங்கிரஸ் பிரதமர் பதவியில் இருக்கிறார் என்பது தான் அது!


ஆம்! சீன மிரட்டலுக்குக் கொஞ்சமும் பயமில்லாமல் சாஸ்திரி முழங்கினார்.

"சீனா வேண்டுமென்றே பொய்யான தகவலைப் பரப்பி வருகிறது. சீனா இந்தியாவைத் தாக்குமானால், உறுதியுடன் எங்களது சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக எதிர்த்துப்போராடுவோம். எங்களுடைய பிரதேச இறையாண்மையைப் பாதுகாத்துக்கொள்ள, சீனாவின் பலம ஒரு தடையாக இருக்காது."


இந்திய வரலாற்றில், இவ்வளவு தைரியமாக வேறு எந்த ஒரு காங்கிரஸ் பிரதமரும் பேசியதில்லை! உறுதியுடன் செயலாற்றியதில்லை! இந்திரா காந்தியைச் சொல்வார்கள், இந்தியாவில் இருந்த ஒரே ஆண் என்று! அது கூட, நக்கலுக்குச் சொல்லப் பட்டது தானே தவிர உண்மையில்லை. சொந்த வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி, அவருக்கு இருந்த பயமே அடுக்கடுக்காகத் தவறுகளைச் செய்யத் தூண்டின என்பதே கடந்த காலம் சொல்லும் சேதி!


மறைந்த இந்தியப் பிரதமர் திரு லால் பஹதூர் சாஸ்திரி யின் நூற்றைந்தாவது பிறந்த நாளும் இந்த அக்டோபர் இரண்டு தான்!


ஒரு இந்தியக்கனவு! இது இந்திய மக்கள் எல்லோருடைய கனவாகவும் ஆகவேண்டும் என்பதற்காகவே, ஸ்ரீ அரவிந்தருடைய பிரார்த்தனையின் ஒரு பகுதியை நினைவில் வைத்துக் கொள்வதற்காக:


Mother Durga!


India, world's noblest race, lay whelmed in darkness. Mother, thou risest on the eastern horizon, the dawn comes with the glow of thy divine limbs scattering the darkness. Spread thy light, Mother, destroy the darkness.


Mother Durga!


We are thy children, through thy grace, by thy influence may we become fit for the great work, for the great Ideal. Mother, destroy our smallness, our selfishness, our fear.


Mother Durga!


India lies now in selfishness and fearfulness and littleness. Make us great, make our efforts great, our hearts vast, make us true to our resolve. May we no longer desire the small, void of energy, given to laziness, stricken with fear.


8 comments:

 1. இவர்களை பார்த்தாவது இப்போது உள்ள தலைவர்கள் நடக்கட்டும் ம். ம். ம்.

  ReplyDelete
 2. ரொம்ப ரொம்ப நல்லா தெளிவா எழுதிருக்கீங்க..  அன்புடன்

  அம்மு

  ReplyDelete
 3. வாங்க ராஜாராமன்!

  ஒரே நேரத்தில் மூன்று வலைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கிறீர்கள். மேய்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்குமே!

  கொஞ்சம் உங்களுடைய பின்னூட்டத்தைத் திருப்பிப் போட்டு யோசித்துப்பாருங்களேன்!

  தலைவர்களைப் பார்த்து நாடு திருந்துவது, பின்பற்றுவது ஒரு விதம். காந்தி, சாஸ்திரி இப்படி தலைவர்கள் தாங்கள் ஒழுக்கமாக வாழ்ந்து காட்டி, மக்களுக்கு ஒரு வாழும் உதாரணமாக இருந்தார்கள். உண்மையாகப் பின்பற்றினார்கள்! ஆயுத பலத்தை மட்டுமே நம்பியிருந்த பிரிட்டிஷ் அரசு, இந்த தேசத்தின் ஆதர்சமாக, உயிரோட்டமாக இருக்கும் ஆன்மீக பலம் வீறு கொண்டு எழுந்தபோது என்ன செய்வது என்று தெரியாமல், தோற்று நின்றார்கள். அது ஒரு விதம்.

  சாக்கடையில் புழுக்களும், கொசுக்களும், தீங்குசெய்யும் வகைகளும் தான் பிறக்கும். சீர்கெட்ட சமுதாயத்தில் இருந்து நல்ல தலைவர்கள் பிறப்பதில்லை, அப்படிப் பிறக்க, எவரோ சிலபேராவது மனமுருகி அழைக்க வேண்டும், பிரார்த்தனை செய்ய வேண்டும்.
  பேச்சில் மட்டுமே சீர்திருத்தம், இறைமறுப்பு, சாதிச் சங்கம் இப்படி புற்றீசலாக சாக்கடை பெருகி ஓடும் ஒரு சமூகத்தில், என்ன பிறக்கும்? கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள்!

  ஓசி டீவீயில்,மானாட மயிலாட பார்த்துக் கொண்டு விரலைச் சூப்பிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு இதுக்கு அது ப்ரீ,அதுக்கு இது ப்ரீ என்று இலவசங்களில் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தலைவர்கள் மட்டுமே கிடைப்பார்கள். கூடவே போனசாக, உங்கள் பணத்தை இரண்டே மாதங்களில் நான்கு மடங்காக திருப்பித் தருகிறோம் என்று விளம்பரப்படுத்தும் மோசடிப்பேர்வழிகளிடம் மிச்சம் இருக்கிற கொஞ்ச நஞ்சத்தையும் டெபாசிட் செய்து ஏமாந்து விட்டு, சென்னை நகரில் இருக்கிற அந்தப் பூங்கா, இந்தப்பூங்கா என்று மாதா மாதம் கூடி ஒப்பாரி வைத்து அழுவார்கள்! சென்னையில் தானே இருக்கிறீர்கள், ஒரு தரம் எட்டிப் பார்த்தாலே தெரியுமே!

  மாற்றம் என்பது மேலே இருந்து மட்டும் அல்ல! கீழே இருந்து கூடத் தொடங்கும்!
  ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், இவர்களைத் திருத்த வேண்டுமானால், அது உங்களிடமிருந்தும், என்னிடமிருந்தும், ஒவ்வொரு தனிமனிதனிடம் இருந்துமே ஆரம்பித்தாக வேண்டும்!

  ReplyDelete
 4. Mother Durga!
  India lies now in selfishness and fearfulness and littleness. Make us great, make our efforts great, our hearts vast, make us true to our resolve.

  மகரிஷி அரவிந்தரின் எண்ணம் சற்றுக் காலம் கடந்தே ஆயினும் நிச்சயம் நிறைவேறும். இது கஷ்ட காலம்தான். ஆனாலும் நம்பிக்கை என்ற ஒன்றை நம் பெரியவர்கள் நமக்குப் பரிசாக தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். சக்தியைப் போற்றுவோம்..

  அருமையான பதிவு சார்.. ஏதோ எழுதவேண்டுமே என்று எழுதவில்லை. தேச முன்னேற்றம் செழிப்பாக இருக்கவேண்டும் என்று உங்களைப் போன்றோர் நினைப்பதால்தான் இந்தியா இன்னமும் சற்று நிம்மதியாக வாழ்முடிகிறது.. உங்களோடு நானும் பங்கு கொள்கிறேன்..

  திவாகர்

  ReplyDelete
 5. //காந்தியைப் பற்றி, ஒரு இடதுசாரிச் சிந்தனையாளனாக இருந்த காலத்தில், பெரிதாக ஒரு சித்திரம் இருந்ததில்லை. //

  இந்த வார்த்தைத் தொடர் இடதுசாரி சிந்தனையாளர்களைப் பற்றிய ஒரு தவறான அபிப்ராயத்தைக் கொடுக்கும். மஹாத்மாவின் சில போராட்டங்களில் அவர்களுக்கு மாறுபட்ட கருத்திருக்கலாம். ஆனால் தேசப்பிதாவிடம் மிகுந்த மரியாதையும் நல்லெண்ணமும் கொண்டவர்கள் அவர்களில் அதிகம்.

  ReplyDelete
 6. வாங்க ஜீவீ சார்!

  இடதுசாரிகளுக்கு காந்தி மேல் இருக்கும் மாறுபட்ட கருத்து, விமரிசனங்கள் எப்படிப்பட்டதென்பதை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். அப்படிப்பட்ட கருத்துக்களின் தாக்கத்தினால் தான், காந்தியைப் பற்றிய பெரிய சித்திரம் எனக்கு இருந்ததில்லை என்ற வார்த்தையில், என் அனுபவத்தை மட்டுமே முன்வைத்திருக்கிறேன்.

  கல்கி எழுதிய மாதிரி, அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு அவர், மாந்தருக்குள் ஒரு தெய்வமாகவே இருந்திருக்கிறார், ஆதர்சமாக இருந்திருக்கிறார். ஒரு தனிமனிதனின் ஒழுக்கமும், கட்டுப்பாடும், நேர்மையும் மக்களை ஆட்கொண்ட அந்த அற்புதமான தருணங்களை, நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்கே எனக்கு இத்தனை காலம் ஆகியிருக்கிறது.

  சுதந்திரம் கிடைத்த பிறகு,பிந்தைய தலைமுறையில் வந்த எங்களுக்கு சமூக அவலங்களின் மீது ஆவேசம் இருந்ததே தவிர, காந்தியிடம் ஆதர்சம், தெய்வீகம் எதுவும் புலப்படவில்லை என்பதும், பின்னோக்கிப் பார்க்கும்போது தான், எப்படிப்பட்ட மனிதராக அவர் இருந்திருக்கிறார் என்பதே புரிய ஆரம்பித்திருப்பதையும் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறேனே!

  ReplyDelete
 7. தேடிப்பார்க்கிறேன் காந்தியத்தான் காணோம்!
  தேசத்தில நாளும் சாந்திய தான் காணோம்!

  அப்புறம் தான் ரூபா நோட்டு!

  அந்த பாடலின் உட்கருத்து மக்களிடயே காந்தியும், சாந்தியும் மற(றை)ந்து விட்டதுன்னு!

  இல்ல சாந்தி பக்கத்து வீட்ல தான் இருக்கான்னு சொன்னிங்கன்னா, நீங்க வால் ரசிகர் மன்ற தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆள்னு ஒத்துகிறேன்!

  ReplyDelete
 8. வாங்க வால்ஸ்!

  நீங்க சொல்ற சாந்தி தாக சாந்தின்னா நமக்குச் சக்கரை, ஒத்துவராது!

  அடுத்தவீட்டுல, எதிர் வீட்டுல சாந்தின்னு எந்தக் குழந்தையும் இல்லை!

  ரசிகர் மன்றத்துல சாதா உறுப்பினரா இருக்கத் தான் நமக்குக் கொடுப்பினை போல:-))

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!