யாருக்கும் வெட்கமில்லை! புவனேஸ்வரி புராணம் தொடர்கதையா..!



சினிமா நடிகர்கள், எதையோ கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொள்கிற கதையாக, ஹீரோ வேஷம், ஒரே குத்தில் நாற்பது பேரைப் பந்தாடுவது, சுழன்று சுழன்று சண்டைபோடுவது எல்லாம் சும்மா நடிப்புத் தான், மற்றப்படி நிஜ வாழ்க்கையில் இந்தப் பந்தாப்பேர்வழிகள்  வெறும் ஜீரோக்கள் தான் என்பதை, புவனேஸ்வரி புராணம் மறுபடி நிரூபித்திருக்கிறது.



பெண்கள் மீதான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளின் படி கைது செய்யப்பட்ட தினமலர் செய்தி ஆசிரியர் பி. லெனின் இன்று மாலை, ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் ஹீரோ ஆக்கப்பட்டது, உண்மையிலேயே லெனின் தான்! கையைச் சுட்டுக் கொண்டவர்கள், காவல்துறையினர் தான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை!


சினிமாவில் நாட்டாமை வேஷம் கட்டினவன் எல்லாம்,  நிஜமாகவே நாட்டாமை ஆகிவிட்ட மாதிரி, காவல்துறைக் கமிஷனர் திரு ராஜேந்திரன் முன்பு வசனம் பேசிக் குதித்ததாகவும், கமிஷனர் அங்கேயே எச்சரித்ததாகவும் செய்திகளைப் படித்தபோது, தமிழ் நாட்டில் அத்தனை காமெடி சானல்களையும்  பார்த்தால் கூட வராத சிரிப்பு, அப்படிப் பொங்கி வந்தது:-))

சிறையை விட்டு ஜாமீனில் வெளியே வந்த திரு லெனினை மாலைகள் சூட்டி, பத்திரிகையாளர்கள் வரவேற்ற காட்சியைப் புகைப்படத்தில் பார்த்தபோதும் சரி, நடிகர் சங்கக் கண்டனக்கூட்டத்தில் வாய்க்கு  வந்தபடி பேசி .............தைப் புண்ணாக்கிக் கொண்ட கோமாளி விவேக் தமிழக முதல்வரை இன்று சந்தித்துப் பேசியதாகச் செய்தியைப் படித்தபோதும் சரி, இந்தக் காமெடி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ஓயாது என்றே தோன்றியது.

“விரிக்கப்பட்டுள்ள வலைப் பின்னல்களின் வழியே தகவல்கள் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. வாய் மொழியாகவும் அச்சு வடிவிலும் காட்சிப் படிமங்களாகவும் அலையும் பிம்ப அடுக்குகளாகவும் வாசகனின் புலன்களைத் தாக்கும் தகவல்களை அர்த்தப்படுத்திக் கொள்ள அவனுக்கு உள்ள ஒரு மூளை போதாது"

இப்படி அலுத்துக்கொள்கிறார் பேராசிரியர் அ. ராமசாமி! காலச்சுவடு இதழில், இரண்டு வருடங்களுக்கு முன்னால், இதே மாதிரி அச்சு ஊடகங்களில், நடிகைகளைப் பற்றி வித விதமான செய்திகள், கதைகள் புற்றீசல்  மாதிரிக் கிளம்பிக் கொண்டிருந்த தருணத்தில் எழுதப்பட்ட, மிக அற்புதமான கட்டுரை. படித்துப்பாருங்கள்! அந்த நேரத்தில் எங்குபார்த்தாலும் ஒரே நடிகைகளின் கதையாகத் தான் இருந்தது. கன்னட பிரசாத் என்ற பெயர் மிகவும் அறியப்பட்ட பெயராக இருந்தது. காரணம் என்ன என்பதைத் தான் பேராசிரியர் ராமசாமி மிக அழகாக எழுதியிருந்தார்!

ஏன் எதற்கு என்று வெள்ளந்தியாகக் கேட்க நினைப்பவர்களுக்கு கூகிள் தேடலில் 'கன்னட பிரசாத்' என்று மட்டும் கொடுத்த தேடிப்பாருங்கள். முதல் ரிசல்டாக, குமுதம் ரிபோர்டரில் இருந்து ஒரு கட்டுரையை அப்படியே வோர்ட்ப்ரெஸ் தளத்தில் படிக்கக் கிடைக்கும்.





கண்ணதாசனுடைய இந்தப்பாடலை மேலே படியுங்கள்! கவிஞர் எப்படி வாழ்வியல் யதார்த்தத்தை, கவிதை வரிகளில் சொல்லியிருக்கிறார், இப்போதைய சூழ்நிலைக்கும் அது எப்படிப் பொருந்துகிறது என்பதையும் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்!

பாடலை இங்கே கேட்கலாம்! கீழே உள்ள படம், இணையத்தில் கிடைத்தது

ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன..!
ஏ சமுதாயமே....

மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா..!
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா..!

அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே..!
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெக்கமில்லை..!
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்..!
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்..!

சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்..!
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா..!
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்..!
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்..!

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை..!
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..!
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை..!
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை..!

வெட்கமில்லை வெட்கமில்லை என்று சொல்லிக் கொண்டே இத்தனை கதையையும் சொல்கிறார்களே, அதையும் நாம் படிக்கிறோமே ஏன் என்று ஒருவருக்கு அன்றைக்கே சந்தேகம் வந்துவிட்டது. கேள்வியும் கேட்டு விட்டார்!

கன்னட பிரசாத்திற்கு தமிழ் இதழ்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனவே?

கேட்டவர்:  சிவகுமார், திருப்பூர்.

பதில் சொன்னவர் :

"ஒரு வேளை “தொழில்’ ஒற்றுமை காரணமோ என்னவோ? ஏன்னா இரண்டு பேருமே நடிகைகளைதான் முதலீடா வைச்சி தொழில் நடத்துகிறார்கள். தமிழக காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கன்னட பிரசாத்தின் ‘தீரமிக்க’ வாழ்க்கை வரலாற்றை பத்திரிகைகள் போட்டி போட்டு வெளியிடுகின்றன. அவைகளை அவர் படிக்க நேர்ந்தால், திடுக்கிட்டிருப்பார். “இவர்கள் நம்ம “தொழிலுக்கு’ வந்தால் நம்மநெலமை அதோ கதியாகியிருக்கும். நல்லவேளை ஜெயில் தண்டனையோடு தப்பிச்சோம்’ என்று!. கன்னட பிரசாத் நடிகைகளுக்கு, தொழில் அதிபர்களுக்கு, பணக்காரர்களுக்கு “மாமா வேலை’ பார்த்தார். இந்தப் பத்திரிகைகள் வாசகர்களுக்கு ‘மாமா வேலை’ பார்க்கிறது!"

உண்மைத் தமிழன் சரவணன் தன்னுடைய பதிவில் சொன்னது போல, இரண்டு தரப்பிலேயும் வண்டி வண்டியாகத் தவறு இருக்கிறது. இதில் நீ சொத்தை! இல்லை இல்லை நீதான் சொத்தை என்று உதார் விட்டுக் கொண்டிருந்தது, நிஜமாகவே கை மீறி விட்டதோ?

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இந்தப் புண்ணியவாளர்களிடமிருந்து அவ்வளவு சீக்கிரமாக விடுதலை கிடைத்து விடுமா என்ன?!

பகுத்தறிவு பேசும் நண்பர்களாக இருக்கட்டும், என்றைக்கோ மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்று ஆன்மிகம் பேசிக் கொண்டிருக்கும் நண்பர்களாகட்டும், உடனடியாகச் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது!

எதை எங்கு வைக்க வேண்டுமோ, அதை அங்கே வைக்கப் பழகிக் கொள்ளுங்கள்!

மலமும் மூத்திரமும் நம் ஒவ்வொருவர் உடலுக்குள்ளேயும் தான் இருக்கிறது, சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காக, தனியாக எடுத்து வைத்து, சாப்பிடும் தட்டிலும் வைத்துக் கொள்வோமா என்ன?



சினிமா மயக்கங்களில் இருந்து, பரபரப்புச் செய்தியாகக் குப்பைகளையே விற்பனை செய்து வரும் ஊடகங்களில் இருந்து, அது அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, தொலைக் காட்சியாக இருந்தாலும் சரி, குப்பைகளைப் புறக்கணித்து ஒதுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.


வெங்கடராமன் ராமகிருஷ்ணன் இந்த வருட ரசாயனத்துறை ஆராய்ச்சியில், நோபெல் பரிசை வென்றிருப்பதற்காக, அனேகமாக எல்லோருமே வாழ்த்துத் தெரிவித்தாயிற்று! தமிழர் என்று பெருமிதப்பட்டாயிற்று! இதற்கு முன்பு நோபெல் பரிசை வென்ற சி வீ  ராமனுக்கும் இவருக்கும் உள்ள பெயர்ப்பொருத்தம் பற்றிக் கதைத்தாயிற்று.

சூடு சுரணை உள்ள இந்தியர்கள் அனைவரும்  அவமானத்தில் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கொதித்திருக்கிறது இன்றைய எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை! நோபெல் பரிசை வென்றதற்காக அல்ல. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்தியாவை விட்டு ஓட வேண்டியிருக்கிறது, முன்னேறிய நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்து, அங்கே உள்ள ஆராய்ச்சி வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு, நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் படும் பட்டியலில் இடம் பிடித்தாக வேண்டியிருக்கிறது.

கிட்டத் தட்ட எழுபது வருடங்களுக்கு முன்னால் சி வி ராமன், முதலும் கடைசியுமாக ஒரு இந்திய விஞ்ஞானியாக நோபெல் பரிசை வென்றார். அதற்குப் பின்னால், கங்கையில் ஏகப்பட்ட சாக்கடைகளும் சேர்ந்து ஓட ஆரம்பித்தது, இந்தியா ஒரு அடிமை நாடாக இருந்ததில் இருந்து விடுபட்டது.

அதன் பிறகு ஒவ்வொரு புதிய அரசு அமையும் போதும், விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் வளர்க்கப்போவதாகத் தம்பட்டம் பெரிதாக இருக்கும். செயலளவில் ஒன்றுமே இருக்காது.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், அங்கே வாய்ப்பைப் பயன்படுத்தி நோபெல் பரிசை வெல்வது இருக்கட்டும்! இந்தியாவிலேயே, இந்திய ஆராய்ச்சிக் கூடங்களிலேயே பணியாற்றும் இந்தியர்கள் நோபெல் பரிசை வெல்லும் அளவுக்கு வாய்ப்பையும், வேண்டிய வசதிகளையும் செய்து தர முடியுமா, முடியாதா?

மனித வள மேம்பாட்டுத்துறையைக் கவனிக்கும் மத்திய அமைச்சர் திரு.கபில் சிபலுக்கு ஒரு கேள்வி என்ற தலைப்பிட்டு எகனாமிக் டைம்ஸ் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறது.

அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு எங்கே அதற்கெல்லாம் நேரம் கிடைக்கப் போகிறது?


மாநில அளவில் ஒரு பூனைக்கண் புவனேஸ்வரி என்றால், தேசிய அளவில் என்ன முக்கியமான பிரச்சினை அவர்களுக்குக் காத்திருக்கிறதோ?

வளர்ச்சியில், உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்த அரசியல் வாதிகளுக்கு எப்போது நேரம் கிடைக்கப் போகிறதோ?

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?

யோசித்து, விடுபட வேண்டிய நேரம் இது!


 

3 comments:

  1. போலிஸ்காரர்களுக்கு தான் சரியான ஆப்புன்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  2. //சூடு சுரணை உள்ள இந்தியர்கள் அனைவரும் அவமானத்தில் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கொதித்திருக்கிறது இன்றைய எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை!//


    கீழே உள்ள இணைப்பைப் பாருங்கள்.

    படித்தாலே... பற்றி எரிகின்றது....
    http://escapefromindia.wordpress.com/

    ReplyDelete
  3. நீங்கள் சுட்டிய வலைப் பக்கங்களில் பலபகுதிகளைப் படித்தேன். என்னுடைய தொழிற்சங்க நாட்களில், இதை விட விஷத்தையும் வெறுப்பையும் கக்கும் புத்தகங்கள், பிரச்சாரத்தைக் கண்டதுண்டு, விவாதித்ததுண்டு.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!