தகவல் அறிவது நமது உரிமை!மு.க.வுக்கும் நீதிமன்றம் குட்டு!


தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி தினமணி நாளிதழில் வெளியாகி இருந்த இரண்டு தலையங்கங்களைத் தொட்டு எழுதியிருந்த பதிவுகள் இவை. ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றின், உருப்படியான சாதனை என்று ஒன்றிரண்டைச் சொல்ல முடியுமானால், அதில் இந்தத்தகவல் அறியும் உரிமைச் சட்டமும் ஒன்று. ஆனால், வெளிப்படையான நிர்வாகம், சரியான விவரங்கள் ஊழல் செய்யும் புள்ளிகளுக்கு இடைஞ்சலாகத் தான் இருக்கும் என்பது புரிய வந்ததுமே, இந்தச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளைக் காங்கிரஸ் செய்ய ஆரம்பித்துவிட்டது.
 


தமிழ்நாட்டில் அன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருந்த கருணாநிதி சட்டத்தை வளைப்பதிலும், தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் , எப்படிப்பட்ட கில்லாடி என்பது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் வெளியாகி இருக்கிறது.ஜெயலலிதா தொடர்ந்து நீதிமன்றங்களில் குட்டு வாங்கிக் கொண்டிருப்பதைப் பறைசாற்ற ஆயிரம் ஊடகங்கள், பதிவுகள் இருக்கின்றன. தாத்தா செய்திருக்கும் சாதனையை அவை கண்டு கொள்வதில்லை என்பதில் எனக்கு ஏகத்துக்குமே வருத்தமுண்டு.எமெர்ஜென்சி காலத்தில் உச்சநீதிமன்றத்தில் எச் ஆர் கண்ணா ஒருவர் தவிர, நீதிபதிகளாக இருந்தவர்களே பயந்து, வளைந்து கொடுத்தார்கள் என்பது பதிவு செய்யப்பட்டிருப்பது போல, தலீவர் கலைஞர் செய்தது பதிவு செய்யப்படவில்லை!

நேர்மையான நீதிபதி என்று வெகுஜன ஊடகங்களால் சித்தரிக்கப் பட்டவர்களுமே கூட, கலைஞர் ஒதுக்கீடு செய்த வீட்டுமனை, வீடுகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் (அதிக விவரங்கள் வேண்டுவோர் http://savukku.net  தளத்தில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம்), மாநிலத்தில் இருந்த நீதி மன்றங்கள் அந்த கால கட்டத்தில் அரசுக்கு எதிராக ஒரு சிறு முணுமுணுப்பைக் கூட  எழுப்ப முனையவில்லை என்பதும் வெளியே தெரிந்தாலும் அதிகம் கவனிக்கப்படாத அல்லது கண்டுகொள்ளப் படாமல் விடப்பட்ட விஷயம் தான்!

ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட நீதிபதி பி டி தினகரன், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் தலைமை நீதிபதி கே ஜி பாலக்ருஷ்ணன்  முதலானோர் அன்றைய அரசின் கனிவான பார்வையைப் பெற்றவர்கள் என்பதும், இந்தநேரம் பார்த்து நினைவுக்கு வந்து தொலைக்கிறது. 

மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்க விவகாரத்தில் ஜெய லலிதா உச்ச நீதிமன்றத்தின் குட்டை நேற்றைக்கு வலுவில் வாங்கி இருக்கிறார். சென்னை நீதிமன்றம் தொடர்ந்து குட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இன்னமும் குட்டும்!அது தம்பட்டம் அடிக்கப் படுகிற அளவுக்குக் கருணாநிதி வாங்கிய குட்டுக்களையும் பார்க்க வேண்டாமோ?

இப்போது கருணாநிதி அல்லது ஜெயலலிதா வாங்கிய குட்டு அல்ல விஷயம்!

இந்த தேசத்தில் ஊழல் செய்கிற அரசியல்வாதிகள், அவர்களுக்குத் துணைபோகிற நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் என்று ஜன நாயகத்தின் தூண்களாகச் சொல்லப் படுகிற ஒவ்வொன்றுமே எப்படி இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்காகவும்!

ஜூனியர் விகடனில் இன்றைக்கு வெளியாகி இருக்குமொரு  செய்திக் கட்டுரை, ஜூவிக்கு நன்றியுடன்!

 
தீர்ப்பில் தள்ளாடும் தகவல் ஆணையம்!

ஆணையத்தின் மீது அடுக்கடுக்காய் வழக்குகள்!

'தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மூன்று தகவல் ஆணையர்கள் நியமனம் செல்லாது’ என்று அதிர்ச்சித் தீர்ப்பு அளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். 

அரசு அலுவலங்களில் ஒளிவுமறைவு இல்லாத செயல்பாடும், லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகமும் நடக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

இந்தச் சட்டத்தின்படி தகவல்கள் கேட்டுக் கிடைக்காமல் போனால், தகவல் ஆணையங்களில் மேல்முறையீடு செய்ய லாம். இதற்காகவே இந்திய அளவில் மத்தியத் தகவல் ஆணையமும் மாநிலத் தகவல் ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன.

தகவல் தரவில்லை என்றால் அதிகபட்சமாக Rs. 25,000 அபராதம் விதிக்கப்படும். இத்தகைய அதிகாரம் கொண்டது தகவல் ஆணையங்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் தகவல் ஆணையத்துக்கு, ஏ.ராமையா, சி.மனோகரன், ஏ.ஆறுமுக நயினார் ஆகிய மூவர் நியமிக்கப்பட்டனர். சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வந்த அன்றுதான் இதற்கான உத்தரவு வெளியானது. இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இந்த நியமனம் செல்லாது’ என்றது.
''தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நாளில், இந்த நியமனம் நடந்துள்ளது. மாநில முதல்வர், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் முதல்வரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒருவர் அடங்கிய குழுதான், மாநிலத் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும். இந்த நியமனத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் கருத்தைக் கேட்காமலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றாமலும் நியமனம் செய்யப்பட்டுள்ளது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


தகவல் அறியும் உரிமை ஆர்வலரான கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். ''தகவல் ஆணையங்கள், தேர்தல் கமிஷனைப் போலவே தன்னாட்சி அதிகாரம்கொண்ட ஓர் அமைப்பு. அறிவியல், சட்டம், இதழியல், சமூக சேவை, நிர்வாகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், இங்கே அரசியல் புகுந்து விளை யாடுகிறது. வெளிப்படையான ஊழல் அற்ற அமைப்பு உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் தகவல் அறியும் சட்டமே கொண்டுவரப் பட்டது. ஆனால், இதன் ஆணையர்கள் நியமனம்கூட வெளிப்படையாக நடைபெறவில்லை. ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். 

கருணாநிதியின் செயலாளராக இருந்த டி.ஆர்.ராமசாமி, தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ஸ்ரீபதி போன்றவர்கள் தகவல் ஆணையர்களாக இருக்கிறார்கள். 

2008-ல் தகவல் ஆணையர்களாக சாரதா நம்பி ஆரூரான், டி.சீனிவாசன், டி.ஆர்.ராமசாமி மற்றும் பெருமாள்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்துக்கான கூட்டம் 11.4.2008-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டம் நடப்பதற்கு 10 நாட்களுக்குள்தான் டி.ஆர்.ராமசாமியும் பெருமாள்சாமியும் விண்ணப்பிக்கிறார்கள். டி.சீனிவாசன், சாரதாநம்பி ஆரூரான் ஆகியோர் முதல் நாள்தான் விண்ணப்பித்தார்கள். அவர்களுக்குப் பதவி தர வேண்டும் என்பதற்காகவே, அவசர அவசரமாக விண்ணப்பங்களை அரசு வாங்கியது. ஒரு வழக்கு தொடர்பாக சீனிவாசன் என்னிடம் பேசிய போது, 'தகவல் ஆணையர் பதவிக்காக நான் விண்ணப்பிக்கவே இல்லை. டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்குத்தான் விண்ணப்பித்தேன். அந்த பயோ-டேட்டாவை வைத்து என்னைத் தேர்வு செய்துவிட்டார்கள். பெருமாள் சாமியும், சாரதாநம்பி ஆரூரானும் வேறு பதவிகளுக்குத்தான் விண்ணப்பம் கொடுத்தார்கள்’ என்றும் சொன்னார்.

இப்படிப்பட்டவர்களை தகவல் ஆணையத்தில் நியமித்தால், அங்கே வரும் மேல்முறையீட்டு மனுக்களை எப்படி விசாரிப்பார்கள். இனி மேலாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அறிந்தவர்களையும், சமூக ஆர்வலர்களையும் நியமிக்க வேண்டும்'' என்றார்.  

இந்த வழக்கை, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். 'தகவல் ஆணையர் தேர்வு நடவடிக்கைகள் தொடர்பான கோப்பு ஒரு நாளிலேயே பிரிவு அலுவலர் தொடங்கி முதல்வர் வரை சென்றிருக்கிறது. ஆணையர்கள் தேர்வுக்கான கூட்டம் 1.3.11 அன்று நடந்தது. எதிர்க் கட்சித் தலைவரின் (ஜெயலலிதா) ஆலோசனையைப் பெறவில்லை. கூட்டத்தை வேறு தேதிக்குத் தள்ளிவைக்கும்படி எதிர்க் கட்சித் தலைவர் கருத்துத் தெரிவித்து இருந்தார். ஆனாலும் ஆணையர்கள் நியமனம் செய்து அன்றே அதற்கான ஆணையை வெளியிட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைக் கருத்தில்கொள்ளாமல் அன்றே கவர்னரின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர். இந்தப் பதவிக்கு விண்ணப்பம் செய்யும்போது, ராமையா அரசுப் பதவியில் இருந்தார் என்றும் தேர்வுக் கூட்டம் நடந்த அன்றுதான் அவருக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்றும் மனுதாரர் கூறினார். இப்படி நடந்திருப்பது சட்டப்படி குற்றம். இதனை எல்லாம் பார்க்கும்போது, மூன்று பேர் நியமனத்திலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை எனவே, மூன்று பேரின் நியமன உத்தரவு சட்ட விரோதமாகவும், நடைமுறைக்கு முரணாகவும் உள்ளது’ என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

''தகவல் அறியும் சட்டத்தில் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உள்ள விதி முறைகள்தான் இந்த மூன்று பேர் நியமனத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. நியமனத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, மாறிவிட்ட அரசுகளின் நிலைப்பாட்டைப் பார்க்கக் கூடாது'' என்கிறார்கள் இந்த மூன்று பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்.

தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் தகவல்களைப் பெறுவதைவிட... நல்ல ஆணையர்களைப் பெறுவது கஷ்டமாகி விட்டது!

- எம்.பரக்கத் அலி

ஸ்ரீபதிக்கு சிக்கல் இல்லை!

தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக கடந்த 2010-ல் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'அவருடைய நியமனம் செல்லும்’ என்றது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், 'ஸ்ரீபதி தேர்வுக்காக நடந்த கூட்டத்திற்கு எதிர்க் கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களைக் கூறி அவர் கலந்துகொள்ளவில்லை. எனவே, அவர் இல்லாமல் எடுத்த முடிவை சட்ட விரோதம் என்று குற்றம் சாட்ட முடியாது’ என்றும் சொன்னது.

சரி, முகவுக்கு எங்கே நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது? 

குறைந்தபட்சம், முக பெயராவது இந்தத் தீர்ப்பில் இருக்கிறதா என்று கேட்டாவது பின்னூட்டம் வரும் என்று காத்திருந்தேன்! எவரும் அந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டதாகத் தெரியவில்லை! போகட்டும், இந்தக் கேள்விக்கு விடை வழக்கைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் எஸ் விஜயலட்சுமியின் மனுவில் இருக்கிறது. மனுவின் முழுவிவரம் இந்த செய்திக் கட்டுரையில் சொல்லப்படாவிட்டாலும், அதன் சாராம்சத்தை RTI activist கோபாலக்ருஷ்ணன் விளக்கியிருக்கும் பகுதியிலேயே இருக்கிறது.

இதே மாதிரித்தான், TNPSC குழுத்தலைவர் உறுப்பினர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள், அவர்கள் செய்த முறைகேடுகளை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் நடத்தப்பட்ட சோதனைகளும் காட்டின. ஆனால்,அது வழக்கு நடந்து தீர்ப்பு வரும் வரை, தீர்மானமான முடிவாகச் சொல்ல முடியாது என்பது தான் வித்தியாசம்.

பதிவிடுகிறவர் தான் சொல்ல வந்ததைத் தெளிவாக சொல்லியிருக்கிறாரா என்பதும்,சொன்ன விஷயம் சரிதானா என்பதும் ஒரு ஆரோக்கியமான உரையாடலில் மட்டுமே சாத்தியம்!ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிறேன்.பின்னூட்டப்பெட்டி மேல் இருப்பதையும் படித்து விட்டு அதன் பிறகு பின்னூட்டங்களில் உங்கள் மனதில் படுவதை சொல்லுங்கள்!

நாளைய தி.மு.க-வின் தவிர்க்க முடியாத,அந்த சக்தி!


பெயில் கெடச்சவுடனே அடுத்தது இதுதானே!

அப்படி இப்படி வசனம் எடுத்து உட்டாத்தானே அனுதாபம் பெருகும்!


அம்மாவை ஆறுதல் படுத்தி, மகனுக்கு தைரியம் சொல்லி, கட்சிக் காரர்களை நம்பிக்கையூட்டி, வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லி நிமிர்கிற கனிமொழியை ஆச்சரியமாகப் பார்க்கிறோம். வாட்சைக் காட்டி போலீஸ் அதிகாரிகள் ஏதோ சொல்ல, ''ஓ... தாராளமாகக் கிளம்பலாமே...'' என்றபடி கோர்ட்டுக்கு அருகே நிற்கும் வேனில் ஏறச் சென்றார். குழுமி இருந்த கட்சிக்காரர்களை வணங்கியபடி, மாறாத புன்னகையோடு திகாருக்கு கிளம்பினார்  

நாளைய தி.மு.க-வின் தவிர்க்க முடியாத அந்த சக்தி!
என்று டெல்லியில் இருந்து இரா.சரவணன்கள் தொடர்ந்து பரப்புரை செய்துகொண்டிருந்தது நினைவிருக்கிறதா?


இப்படித் தொடர்ந்து கனிமொழிக்கு அனுதாபம் தேடித் தருகிற மாதிரி செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி! என்று போஸ்டர் அடித்துத் திருவிழாக்கள் சங்கமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு முன்னால்,தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகிப் போயிருக்கிறது, கனிமொழி ஜாமீன் விவகாரம்!

அடுத்த நிகழ்ச்சி, நவாப் நாற்காலி!

நிகழ்ச்சிக்குப்போகுமுன் ஒரே ஒரு கேள்வி!

ஒரே நாற்காலிக்கு எத்தனை வாரிசுகள்? எத்தனை போட்டிகள்?

  •  

சண்டேன்னா மூணு! கேடிகள்,கேலிச் சித்திரங்கள், கமெண்டுடன் !

Sandeep Adhwaryu is a political cartoonist. 

He considers himself an ‘extremist’ who is out to destroy the extremities of Indian democracy 

இப்படி ஒரு வித்தியாசமான அறிமுகத்துடன் சந்தீப் அத்வர்யு என்பவருடைய கருத்துப்படங்களை சண்டே கார்டியன் இதழில்  பார்த்தபோது, மிகவும் ஆச்சரியப்பட்டேன். வித்தியாசமான கண்ணோட்டத்தோடு ஒவ்வொரு படமும்...! சண்டே கார்டியன் இதழுக்கும் ஓவியருக்கும் மனமார்ந்த நன்றியுடன், சண்டேன்னா கொஞ்சம் (கருத்து) சண்டை போடுகிற படங்களாக...! ஒவ்வொரு படத்துக்கும் என்னுடைய விமரிசனக் குத்துகளுடன்!  

இதற்குத் தனிவிளக்கம் அவசியமில்லைதான்! ஆனாலும்,இது தமிழில் எழுதப்படுகிற வலைப்பதிவு என்பதால்,தமிழினத்தலீவராகத் தன்னை சொல்லிக் கொள்பவரிடத்தில் இருந்து ஆம்பிப்பதில் தவறேதும் இல்லையல்லவா?
காங்கிரஸ்காரர்கள் தங்களை மாதிரியே ஆம் ஆத்மிக்கும் முதுகெலும்பு இருக்காது என்று தான் நினைக்கிறார்கள்! பரிணாம வளர்ச்சியில் சாமானியனுக்கும் முதுகெலும்பு மிக வலுவாக வளர்வது தவிர்க்க முடியாததுதான் இல்லையா!
நேரு பரம்பரை வாரிசை, அடுத்த ஆண்டு மத்திக்குள் எப்படியாவது பிரதமர் நாற்காலியில் உட்கார்த்தி வைத்துவிடவேண்டும் என்று இத்தாலிய மம்மிக்கு ரொம்பவே ஆசை! டம்மிப் பீசை விட்டே அறிவிப்பு வெளியிடவும் நாள் குறித்தாயிற்றாம்! ஆசை,தோசை, அப்பளம் வடை என்று, புத்து (budhdhu) இன்னும் வளராமல், கொள்ளுத் தாத்தாவின் செருப்பு சைசுக்குக் கூட உயராமல் இருக்கிறேனே மம்மி என்று ராவுல் விஞ்சி தவழ்ந்து கொண்டிருக்கிறாரே! பாவம், மம்மியின்  ஆசை அம்பேல்தானா?
கைவிடப்பட்டதாக உணர்கிறீர்களா?
ஆமாம்!
 
விரக்தியின் உச்சகட்டத்திற்கே போய் விட்டீர்களா?
ஆமப்பா, ஆமாம்!
 
என்ன செய்வது என்றறியாமல் திகைக்கிறீர்களா?
அட ஆமாம்பா ஆமாம்!
 
அப்படியானால், என்ன செய்வது என்று எனக்கு வழிகாட்டுங்கள்!
...................
(....
மன்மோஹனுக்குச் சொன்ன பதில் சென்சார் செய்யப்பட்டது!
அதற்காக யாரும் நாண்டுக்கிடவோ, நாக்குத் தள்ளவோ வேண்டாம்!)

சீசரா இருப்பதற்கும் சீசரின் முகமூடியாக இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை!சீசருக்கு, ஒரே ப்ரூடஸ், ஒரே கத்தி! முகமூடிக்கு,சந்து கிடைத்த இடத்தில் எல்லாம்கத்தி!

டம்மிப் பீஸ்களுக்கு அனுதாபப் பட இங்கே எவருமில்லை!இது தான் முக்கியமான வித்தியாசம்!
பூனை இளைச்சுதுன்னா, எலியே,ஓடைப்பக்கம் ஒதுங்கிக்கலாம் வாரியா என்று கூப்பிடுமாம்!பவார், கருணா பெருச்சாளிகள் என்ன என்ன செய்திருக்கும்?

பானாசீனா தானா சால்வை அழகர்தானா தாளம் வரும் தானா எகத்தாளம்வரும் தானா ......

தந்தனாப் பாட்டு பாடோணும்! துந்தனாத் தாளமும் போடோணும்! தந்தனா அடத் தந்தனா....
உன்னைக் கண்டு நான் பாட.......வாத்து மடையா வாத்து மடையா
என்னைக் கண்டு நீ ஆட .............
வாத்து மடையா வாத்து மடையா 
காங்கிரஸ்காரர்களின் கோஷ்டி கானம்!! 
காங்கிரசே!கலைஞரின் இளைஞனை சிறைக்குள் அடைத்து விட்டு சீனாவுடன் போட்டியா? ஆ.ராசாவை வெளியே விட்டுப் பார்!
இல்லையென்றால் கனிமொழிக்கு  மத்திய அமைச்சர் பொறுப்பை கொடுத்துப் பார்!!


போகும் திசை மறந்து போச்சு! இங்கே பொய்யே வேதமுன்னு ஆச்சு!


மும்பை மீது பாகிஸ்தான் தீவீரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் மூன்றாவது ஆண்டு நினைவுதினம் இன்று! ஜனங்களுடைய கோபத்தை சாந்தப்படுத்துவதற்காக, முதலாண்டு முடிவில் நினைவு ஊர்வலத்தை நடத்தி மகாராஷ்டிரா அரசு தன்னுடைய பொறுப்பைக் கைகழுவிக் கொண்டது.

கசாபுக்குப் பெரும் செலவில் தீனி போட்டு, அரசே பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அப்சல்குருவோ, கசாபோ அல்லது வேறு கொடூரமான கொலையாளிகளோ எவரானாலும் தூக்கு தண்டனையை நிறைவேற்றத் துணிவில்லாத ஒரு கூட்டம், அரசு, ஆட்சி என்ற பெயரில், சாதாரண ஜனங்களை மட்டும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

சரத் பவாருக்கு அடி விழுந்தது குறித்து நாடாளுமன்றம்கவலை தெரிவித்திருக்கிறது. வி ஐபிக்களுக்குப் பாதுகாப்பை அரசு அதிகப்படுத்தி இருக்கிறது. மீடியாக்கள் கவனம் தன மீது விழுந்திருப்பதில், பெருச்சாளி மாதிரியே பதுங்கிக் கொண்டிருந்த சரத் பவார், தைரியமாக, முதல் தடவையாக அண்ணா ஹசாரே பெயரைக் குறிப்பிடாமல் தாக்கியிருக்கிறார்.

ஊழல் பெருச்சாளிகள் அடிவாங்கியதற்குக் கவலைப்படும் அரசியல் புள்ளிகள் எவரும்,அடி மேல் அடிவாங்கிக் கொண்டிருக்கும் அப்பாவிப் பொதுமக்களைப் பற்றிக் கவலைபடுவதே இல்லை.  விவசாயத்துறை அமைச்சர் பவார், விவசாயிகள் தற்கொலை குறித்தோ, அவர்கள் நலன் குறித்தோ ஒருநாளும் கவலைப்பட்டவருமில்லை.அமைச்சராகப் பணியாற்றியதுமில்லை!

கையாலாகாத ஐமு கூட்டணிக் குழப்பத்தை இன்னும் விட்டு வைத்திருந்தால், சரத் பவாருக்கு அறை கொடுத்த நாளுக்கு வருடாவருடம் நினைவு தினமாகக் கொண்டாடுவார்கள்.

அறை வாங்கிய தியாகி என்று பட்டமும் கொடுத்து, பந்த் நடத்துவார்கள். வெட்கம் கெட்ட டம்மிப் பீஸ்பிரதமர், வழக்கம் போல இதற்கும் வந்து அஞ்சலி செய்வார். கசாப் வகையில், கையாலாகாத அரசின் செலவு இப்போது வரை அறுபது கோடி ஆகியிருக்கலாம், அறுநூறு கோடி செலவு ஆனபின்னாலும் சொகுசாக, சிறைக்குப்பின்னால் இவர்களை ஏளனம் செய்து கொண்டிருக்கலாம்.

இந்தியர்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்களாக இருக்கலாம்! எங்கோ மழை பெய்கிறது என்றிருக்கும் எருமை மாடுகள் மாதிரி ஆகி விடக் கூடாது இல்லையா?


26/11 attacks: Still waiting for Pak to bring the guilty to book, says Krishna

 காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களைத்  தவிர வேறு எவர் இப்படிப் "பொறுப்போடு" பேச முடியும்?

இதை எழுதிக் கூட இரண்டு ஆண்டுகள் நிறைந்துவிட்டது.
மும்பை நகரத்தில் பாகிஸ்தானியத் தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் நடந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.

இதைத் தீவீரவாதிகளின் வெற்றி என்று சொல்வதை விட, பலவீனமான அரசியல் தலைவர்கள், எதற்கெடுத்தாலும் அடித்துக் கொள்வது என்பதைத் தவிர வேறு அஜெண்டா இல்லாத அரசியல் கட்சிகள், ஊழல்மயமான அரசு இயந்திரம், செயல் திறனற்றுப்போன உளவுத்துறை, செயல் பட முடியாத காவல்துறை, இப்படி, நம்மிடம் இருக்கும் பலவீனத்தையே மறுபடி மறுபடி வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிற மாதிரி இருப்பதை எவரும் இங்கு உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏற்கெனெவே, இந்தப் பக்கங்களில், தலைமைப் பண்பு, சீனப் பெருமிதம், விமரிசனம் என்ற தலைப்புக்களில், நேரு, சாஸ்திரி இருவரது முடிவெடுக்கும் திறனைப் பற்றிக் கொஞ்சம் பேசியிருக்கிறோம்.

வெளியே எல்லாத் திசைகளிலும், இந்தியாவுடன் பகைமை பாராட்டும் நாடுகள், ஒவ்வொரு நாட்டிடமிருந்தும் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள் என்று ஒருபக்கம், உறுதியான அரசியல் முடிவுகளை எடுக்கத் தைரியமில்லாத, ஆண்மையற்ற அரசியல் தலைவர்கள், ஊழல் மயமாக இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும், முன்னெச்சரிக்கை என்றால் என்ன என்று கேட்கும் அரசு நிர்வாகம், காவல்துறை இத்தியாதிகள் இதெல்லாம் ஒருபுறம் என்றால், ஜனங்களுடைய அலட்சிய மனோபாவம், கையறுநிலை, அல்லது தட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கேட்பதும், குட்ட வேண்டிய நேரத்தில் குட்டுவதும் நம் கைகளிலேயே இருக்கிறது என்பதை உணராத பொறுப்பற்ற தன்மையும் சேர்ந்து, இந்த மாபெரும் தேசத்தைத் தலை குனிய வைத்துக் கொண்டிருக்கிறது.

நம்முடைய முன்னுரிமைகள், அல்லது பிரதானமான கவனமெல்லாம் எங்கே இருக்கிறது?

இந்த ஒரு கேள்விக்கு, சரியான பதிலைக் கண்டு கொள்ள முடிந்தாலே, பிரச்சினை என்ன என்பதையும், அதற்குத் தீர்வு என்ன என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?

ஆங்கில ஊடகங்களில் 26/11-மும்பை மீதான போர்! ஓராண்டு நிறைவு என்று கூவிக் கூவிப் பழைய செய்திகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூத்துக்களைப் பார்த்துத் தொலைய வேண்டியிருக்குமே என்பதற்காக, வழக்கமாகப் பார்க்கும் செய்தி சானல்களைக் கூட இன்றைக்குப் பார்க்க வேண்டாம் என்றே இருந்தேன்.

வெட்கம் கெட்ட மும்பை அரசும், அரசியல்வாதிகளும், மும்பை மீதான தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செய்வதாக, வீதிகளில் அணிவகுப்பை நடத்தி, தங்களைப் புனிதர்களாக ஆக்கிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் ஆதாயம் ரொம்ப என்றால் ரத யாத்திரையும், கம்மி என்றால் அறிக்கைப் போரும், கேள்விகள் எழுப்புவது மட்டுமே என்று வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கும் அத்வானி பாராளுமன்றத்தில் மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடும், நிவாரணமும் வழங்குவதில் அரசு மெத்தனமாக இருப்பதாகக் கவலை தெரிவித்திருக்கிறார்.

பழைய ஞாபகத்தில் ரத யாத்திரை என்றெல்லாம் கிளம்பிவிடாமல் ஏதோ கேள்வியோடு கவலையை முடித்துக் கொண்டாரே என்பதைப் பாராட்டக் கூட நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மனசு வரவில்லை. பதிலுக்குக் கோபத்தில் கடித்துக் குதறியிருக்கிறார்!

மும்பைத் தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் மரணம் என்றால் மூன்றுலட்சம், வெறும் காயமென்றால் ஐம்பதாயிரம் தான்! இந்த அற்பத் தொகையுமே கூடப் பெரும்பாலானவர்களுக்கு, தாக்குதல்கள் நடந்து ஓராண்டாகியுமே கூட  வழங்கப் படவில்லை என்பது எப்போதும் போல் நடக்கிற கூத்துத் தான்!  

அதே நேரம், தாஜ் ஹோட்டலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக, இன்ஷ்யூரன்ஸ் தொகை ரூ.167 கோடி வழங்கப்பட்டு விட்டது என்ற செய்தியோடு சேர்த்துப் பார்த்தால் தான், பிரச்சினையைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும்.

இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியில் உள்ள நிவாரணம் வேண்டி வந்த மனுக்கள் எண்ணிக்கைக்கும், எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அதே செய்தியை வெளியிட்டதில் வந்திருக்கும் எண்ணிக்கைக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது.

பாராளுமன்றத்திற்கு வெளியே பிஜேபி கட்சியைச் சேர்ந்த அலுவாலியா, ஐந்து நட்சத்திர ஹோட்டல் தாக்கப் பட்டதினாலேயே, இந்தத் தீவீர வாதிகளுடைய தாக்குதல் பற்றிய செய்தி, மீடியாக்களினால் பரபரப்புச் செய்தியாக்கப் பட்டதாக வருத்தப் பட்டிருக்கிறார்.

பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "காஷ்மீர், சாட்டிஸ்கார், ஆந்திரா, ஒரிசா என்று நிறைய இடங்களில் இந்த மாதிரித் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.ஆனால், மும்பையில் நடந்ததை மட்டும் நீங்கள் பெரிதுபடுத்திப் போடுகிறீர்கள்! காரணம் அது ஐந்துநட்சத்திர ஹோட்டல் தாஜ் மீது நடந்தது என்பதால் தானே?"

அலுவாலியா உண்மையைத் தான் பேசியிருக்கிறார்! தாஜ் ஹோட்டல் மீது அல்லாமல், அன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினலில் (ரயில் நிலையம்) மட்டுமே தாக்குதல் நடந்திருந்தால், பத்திரிகையாளர்களும், தொலைக் காட்சி ஊடகங்களும் இவ்வளவு பெரிதாக, கோரசாக, ஊது ஊதென்று ஊதியிருப்பார்களா என்பது சந்தேகம் தான்!

மும்பையில், ஐபிஎன் அலுவலகம் தாக்கப் பட்டதற்கு ஹிந்து என் ராம் கொதித்தெழுந்தார்!  உள்ளூரில், வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் தாக்கப்பட்ட போதோ அல்லது வேறு அராஜகங்கள் நடந்தபோதோ இதே  கனவான் எல்லாவற்றையும் பொத்திக் கொண்டு  வேறு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்!

என் ராமைக் குறை சொல்லிக் கொண்டு, ஹிந்துவை வாங்காதே, தினமலரை வாங்காதே என்று பானர் தயாரித்துப் போட்டுக்  கொண்டு பதிவுகளில் கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருக்கும் தமிழ் வலைப் பதிவர்களாவது .......ம்ம்ஹூம்!


தாஜ் ஹோட்டல் மாதிரி ஐந்து நட்சத்திரம் கூட வேண்டாம்! நட்சத்திரம் என்று வெறுமே சொன்னால் போதும்! அவர் ரேட் என்ன என்று புவனேஸ்வரி- பெயர் சொல்லி ரேட் நிலவரம் சொல்கிறார்  என்று தலைப்பும்,சும்மா  ஒரு படமும் போட்டால் போதுமே, மொய்த்துவிட மாட்டார்களா!

அவர்கள் வரிசையாக வருவார்கள்! தாக்குதல் நடத்துவார்கள், நாம் இங்கே ஆண்டு விழா மட்டும் கொண்டாடிக் கொண்டிருப்போம். அப்படித்தானே!
சிவசேனாக்காரர்கள் சீரியஸாக ஜோக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்!  

மும்பைத் தாக்குதலின் ஓராண்டு நிறைவை ஒட்டி, அஜ்மல் அமீர் கசாபைத் தூக்கில் போட வேண்டுமென்று  ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறார்கள்! ஏற்கெனவே கசாப் என்ற அந்த பிடிபட்ட தீவீரவாதி, நம்முடைய நீதித் துறையில் உள்ள ஓட்டைகளை வைத்து செம காமெடி பண்ணிக் கொண்டிருந்தது போதாதென்று,இப்போது இந்தக் கோமாளிகளும்....!

சாமீ! புண்ணியவான்களே! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்! உங்களுக்காவது ஏதாவது திக்கு திசை புரிகிறதா?

எல்லா சிங்கும் மண்ணுமோகன் சிங் அல்ல! சிங் இஸ் கிங்!இன்றைக்கு மத்திய அமைச்சர் சரத் பவாரை ஒருவர் கன்னத்தில் அறைந்திருக்கிறார்!பரபரப்புச் செய்தி இதுதான்!
  

பரபரப்பை ஒதுக்கி விட்டு, கொஞ்சம் யோசித்தோமானால்,சரத் பவார் மாதிரி ஊழல் பெருச்சாளிகள் இந்திய அரசியலில் எப்படித் தழைக்க, தப்பிக்க முடிகிறது என்ற கேள்விக்கு பதிலாக, அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்கிற பழமொழி அரசியலுக்கும் பொருந்துவது புரியும்.ஊழல் பெருச்சாளிகளிடம், அஹிம்சை, காந்தீயம் பேசுவதில் அர்த்தமிருக்குமா?

எங்கும் எதிலும் ஊழல், கையாலாகாத அரசு, பொறுப்பில்லாத மக்கள் பிரதிநிதிகள், குற்றவாளிகளைப் பாதுகாப்பது தான் தலையாய பணி என்றிருக்கும் அரசியல் தலைவர்கள்,எங்கே எது நடந்தால் நமக்கென்ன என்றிருக்கும் ஊமைச் சனங்கள்!

எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருந்துவிட முடியும்?

மானாட, மயிலாடவிட்டு, இலவசங்களை அள்ளிக் கொடுத்து ஜனங்களை ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியும்? நீ திருடினாயா என்ற கேள்விக்கு அதோ அவன் கூடத்தான் கொஞ்சமாகத் திருடினான், அவனை விட்டுவிட்டு என்னைக் கேட்கிறீர்களே என்று ஒப்பாரி வைக்கும் தலீவர்களை எத்தனை நாட்களுக்குத்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்?


கருணாநிதி அண்ட் குடும்பத்தார் ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, சினிமாத் தயாரிப்பு,கல்வி நிறுவனங்கள், தொலைக்காட்சி என்று எல்லாத் திசைகளிலும் தங்களுடைய  சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக் கொண்டு வளர்ந்ததற்கு முன்னால், மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தான் ஆகக் கூடிய பெரிய பெருச்சாளியாக இருந்தார். தமிழன் இதில் பவாரை ஓவர்டேக் செய்து விட்டதாகப் பெருமை கொள்ள முடியாது.

ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்று மற்றும் இரண்டில் சரத் பவாரின் பங்கு என்ன? விவசாயத் துறை அமைச்சர்! அதாவது முழுநேரமும் அல்ல!

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைத் தன் கையில் வைத்துக் கொண்டு, தாவூத் இப்ராஹீம், பால் தாக்கரே போன்ற எதிர் துருவங்களையும் கூடத் தன் வழிக்குள் கொண்டு வந்து ஊழலில் சத்ரபதியாக இருப்பவருக்கு, மத்திய அமைச்சர் பதவி பார்ட் டைம் வேலைதான்!
 
மத்திய அமைச்சராக இருந்துகொண்டு, வெறும் டம்மியாகவே வலம் வருகிற அஞ்சாநெஞ்சு அழகிரியை விடத் தேவலையா இல்லையா என்று கேட்டீர்களானால்,அதற்கு அந்த ஆயிரம் நாவு படைத்த ஆதி சேஷனைத் தான் பதில் சொல்ல அல்லது பயமுறுத்துவதற்காகக்  கூப்பிட வேண்டி இருக்கும்!

இப்படிப்பட்ட, மானம் கெட்ட ஒருவரை மாண்புமிகு அமைச்சராக வைத்திருப்பதற்கு டம்மிப் பீஸ் மன்மோகன் சிங் வெட்கப்பட மாட்டார்!தியாகசிகரம் இத்தாலிய மம்மிக்கு வெட்கம் என்றால் என்னவென்றே தெரியாது!

ஜனங்களுடைய கோபத்தை வெளிப்படுத்திய அந்த ஹர்விந்தர் சிங் என்ற நபர் கைகளைப் பிடித்து நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றுகிறதா? சிலநாட்களுக்கு முன்னால் தான் இன்னொரு காங்கிரஸ் ஊழல் பெருச்சாளி சுக்ராமை இதே ஹர்விந்தர் சிங் செருப்பால் அடித்தார்!

எல்லா சிங்கும் மண்ணுமோகன் சிங் அல்ல! சிங் இஸ் கிங்!

டிவிட்டரில் ஷரத் பவார் அறை வாங்கின விஷயம் மிகவும் தமாஷாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது!

இந்தியர்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்று யார் சொன்னது? ஒருவர் சொல்கிறார்!

(சரத் பவார்) அறை வாங்கின அனுபவம் எப்படி இருக்குமென்று ஸ்ரீசாந்த் மட்டும் தான் புரிந்துகொள்ள முடியும்!

கொசுவைக் கூட அடிக்கறதே அது கடிக்க ஆரம்பிச்சப்புறம் தான்! (ஷரத் பவாரை அடிச்சதில் என்ன தப்புன்னு கேக்கற கட்சி இவர்!)

இன்னொரு ட்வீட்!

சச்சின்!யாராவது வந்து ஒரு அறை கொடுக்கும் முன் சீக்கிரமாக (சதம்) அடியுங்கள்!


அதற்காக ஜனங்களை  ஏமாந்த சோணகிரிகளாகவே தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்க முடியுமா? ஏமாந்தவன் நிமிர்ந்து நின்றானானால், இவர்களால் தாங்க முடியுமா

சமீப காலத்தில் அரபு நாடுகளில் ஜனங்களுடைய எழுச்சி இந்தக் கேள்விகளை ஆளுகிற எல்லாத் தரப்பையுமே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.அரபு தேசங்களில் ஜனங்களுடைய எழுச்சியை மிக லாவகமாக, எண்ணெய் வளங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் ஜனநாயகக் காவலன் அமெரிக்கா அனேகமாக வெற்றி பெற்று விட்டதென்றே சொல்லலாம்! அமெரிக்க நலன்களுக்குத் தலையாட்டாத அதிபர்கள் மட்டுமே அகற்றப்பட்டார்கள். ஜனங்களுக்கு, அவர்களுடைய கோபாவேசத்துக்கு, இந்தப் போராட்டங்கள் ஒரு வடிகாலாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, அங்கே ஜனங்களுடைய ஆட்சி மலர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாது.

இந்த மாதிரி உணர்ச்சி வசப்படுவது, அடித்து உதைப்பது ஒரு நிரந்தரத் தீர்வாக முடியாது.ஒரு ஜனநாயக அமைப்பில், அதன் வெவ்வேறு அங்கங்கள், தங்களுடைய வீரியத்தை இழந்து, ஆமாம் சாமி போடுகிற அல்லது கூட்டுக் களவாணிகளாக மாறிக் கொண்டிருக்குமானால், ஜனங்களுடைய கொந்தளிப்பைத் தவிர்க்கவும் முடியாது.

அதே  நேரம், இந்தியாவில் அமைதியாகத் தேர்தல் வரும்போது மட்டும் தான் ஜனங்கள் தங்களுடைய கோபத்தை ஓட்டுச் சீட்டில் வெளிப் படுத்திக் கொண்டிருப்பார்கள் என்ற காலமும் மெல்ல மெல்லக் காலாவதியாகிக் கொண்டிருப்பதை ஆட்சி செய்பவர்கள் புரிந்து கொள்வார்களா?

அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள், புரிந்துகொள்ளப் போவதில்லை!

என்பது ஏற்கெனெவே நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சுண்டெலிகளின் கர்ஜனை என்ற தலைப்பில் ஒரு குழுமத்தில் அரபு தேசங்களில் ஜனங்களின் எழுசசியை பேசிக் கொண்டிருந்த தருணங்களில் எழுதியது இது 

இந்த இழையின் முதல் பதிவில் பார்த்தீர்களானால், சுண்டெலிகளின்  கர்ஜனை என்று அரபு  மக்களை வர்ணித்திருந்தது ஒரு ஆஸ்திரேலிய செய்தித்தாளின் வலைத்தளம் என்பது தெரிய வரும்! ஜனங்களை வெறும் சுண்டெலிதான் என்று சொல்கிற தெனாவட்டு அவர்களுக்கு மட்டும் தான் வரும்.இப்போது அரேபிய மக்களிடம் பரவிவரும் கிளர்ச்சி உணர்வு மிகவும் வித்தியாசமானது. இதை எப்படி கணிப்பது, எப்படி சமாளிப்பது என்றே அங்கே ஆளுவோருக்கும் புரியவில்லை, அவர்களுடன் நல்லுறவு வைத்துத் தன்னுடையநலன்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அமெரிககாவுக்கும்புரியவில்லை. 
 
அரேபிய மக்களை முல்லாக்களும் மௌல்விகளும் இதுவரை சுதந்திரமாகச்சிந்திக்க விட்டதே இல்லை. அவர்களை மீறி, வெளியே என்ன நடக்கிறது, நாம் எப்படி இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவே அந்த மக்கள் இதுவரை பழக்கப்பட்டதும் இல்லை. அமைதியான போராட்டம் என்பதெல்லாம் பல நூற்றாண்டுகளாக அவர்களுக்குத் தெரியாத விஷயமும் கூட. 

முதலில், ஏழ்மையில் வாடும் அரேபியநாடுகளில் உள்ள மக்களிடம் இருந்து ஆரம்பித்து, இப்போது  செல்வச்செழிப்புடன் இருக்கும் பாஹ்ரைனுக்கும் பரவியிருக்கிறது. குவைத், சவூதி அரேபிய அரசுகள், இங்கே இந்தியாவில் இலவசங்களை அள்ளி இறைப்பது போல, திடீரென்று  தங்கள் ஜனங்கள் மீது கரிசனம் பிறந்து நலத் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. 

வசதி படைத்தவன் தரமாட்டான்-அவனை
வயிறுபசித்தவன்விடமாட்டான் 

என்று பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய மாதிரி, அங்கே வெறும் வயிற்றுப்பசிக்கான போராட்டமாகத் தான் நடக்கிறது என்று சொல்வதற்கில்லை ஒரேமாதிரியான  ஆட்சிமுறை, வேறு எந்த விதமாகவும் சிந்திக்கவிடாத அமைப்புக்கு எதிராகவும் தான் என்று தோன்றுகிறது. இன்னும் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

இங்கே, அரபுநாடுகளில் உள்ளமாதிரி, மதங்களின் பெயரால் அவ்வளவு கடுமையான அடக்குமுறைகளோ, குதிரைக்குக் கண்ணைக்கட்டி விட்ட மாதிரி, இப்படித்தான் சிந்திக்கவேண்டும், செயல்படவேண்டும் என்றோ எப்போதுமே இருந்ததில்லை.

எப்படி வெறும் முப்பதாயிரம் வெள்ளையர்களைக் கொண்டே (அரசு அதிகாரிகள், காவல், ராணுவத்தில்) முப்பதுகோடி ஜனங்களை அடிமையாக வைத்திருக்க முடிந்தது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், இப்போது உள்ள நிலவரத்தை நாடிபிடித்துப் பார்த்து மருந்து சொல்வதில், உட்கொள்வதில் எந்தக் கஷ்டமும் இருக்காது!! 

டிஸ்கி 1:

 2ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்த விவகாரத்தில் பதவி விலகிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரின் இடங்கள் இன்னும் காலியாகே உள்ளன. கனிமொழி கைது நடவடிக்கையால் மத்திய அரசு மீது கடும் கோபத்தில் இருந்த திமுக, அந்த இடங்களை நிரப்ப மறுத்துவிட்டது.இதையடுத்து இந்த இடங்கள் திமுகவுக்காக எப்போதுமே காத்திருக்கும் என்று பிரதமர் அறிவித்தார்.இந் நிலையில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கனிந்திருப்பதால், திமுக தனது நிலையை மாற்றிக் கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுத்தது!!