கோமாளிகள் அரசாள வந்தால் ஏமாளியாவது நாம் தான்!




பழைய எம் ஜி ஆர் படம். கடைசி சீன்! கதாநாயகனும் கதாநாயகியும் , மெய் மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சந்திரபாபு வருவார். என்னென்னமோ செய்து பார்த்தும், ஜோடி, மயக்கம் தெளியாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கும் போது, வெறுத்துப் போய்,"கூப்பிடு அந்த நாடகக் கோஷ்டியை!" என்பார்!




உடனே, நாடகக் கோஷ்டி உள்ளே வரும்! ஒரு பத்துப் பதினைந்து பேர் குழுவாக வந்து "ஐயா யாருக்கு வேண்டும் இந்த மின்னல் வெட்டு!" என்று பாடிக் கொண்டு வருவார்கள்.இத்தனைக்குப் பின்னாலும், கதாநாயகனும் நாயகியும் அப்படியேதான் இருப்பார்கள்!

அரசியலில் அப்படி யாரும் நாடக கோஷ்டியை கூப்பிட, நாடக கோஷ்டி உடனே வந்து பாட்டுப் பாட என்றெல்லாம் அவசியம் கூட  இல்லை. கோமாளித்தனம் எங்காவது அல்ல, எப்போதுமே நடந்து கொண்டேஇருப்பதாக  இந்திய அரசியல்  களம் ஆகி விட்டது!

காங்கிரஸ் கட்சியில் கோமாளிகளுக்குப் பஞ்சமே இல்லை! Congress, is a party of clowns, and nuisance!



கஷ்டம் என்னவென்றால், இவர்கள் அடிக்கும் கோமாளிக் கூத்தைப் பார்த்து சிரிக்க முடிவதில்லை. இப்படிக் கோமாளிகளின்  கையில் சிக்கிய பூமாலையாகிப் போனதே இந்த தேசம் என்று பொருமத்  தான் முடிகிறது! கிட்டத்தட்ட எண்ணூறு வருடங்கள் மொகலாயர்கள் ஆட்சி, அதற்கப்புறம் முன்னூறு வருடங்களில் பிரிட்டிஷ் குள்ளநரிகளின் ஆட்சி என்று சீரழிந்ததை விட, இந்தக் கோமாளிகளின் கையில் சிக்கிக் கொண்டு இந்த அறுபது ஆண்டுகளில், தேசம் படும் பாடு இருக்கிறதே, என்னவென்று சொல்வது?

போதாக்குறைக்கு,கோமாளித் தனம் எனக்கும் வரும் என்று அப்பிராணி மன்மோகன் சிங் வேறு அவ்வப்போது வந்து காட்டிக் கொள்கிறார்.  
இப்போது நாம் பார்க்கப் போகும் கோமாளி, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல். சமீபத்தில் ஐ ஐ எம் களுக்கான நுழைவுத்தேர்வு ப்ரோமெட்ரிக் முறையில் கணினியில் ஆன்லைனில் நடக்க இருந்த தேர்வு, செர்வர் பழுதால் தடைப்பட்டு விட்டது
மந்திரி சொன்னது என்ன என்பதை முதலில் பார்ப்போம்: "45,000 மாணவர்கள் நுழைவுத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 8000 பேர் தேர்வை எழுத முடியவில்லை. இது மிகப் பெரிய சதவீதம். ஐ ஐ எம் களை உடனடியாக எனக்கு அறிக்கை தரும்படி கேட்டிருக்கிறேன்."

அதுவரை சரிதான்! அதற்கப்புறம் திருவாய் மலர்ந்தருளியது..? அப்படி நடந்திருக்கவே கூடாதாம்! ஒரு அரசாக, மிகவும் கவலைப் படுகிறார்களாம்!

மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்மந்திரி என்பவன், எல்லாவிதமான சாத்தியக் கூறுகளையும், நுணுக்கமாக ஆராய்ந்து அரசனுக்கு ஆலோசனை சொல்பவனாக இருந்ததாகவும் சரித்திரம் சொல்கிறது. அது உண்மையான, நேர்மையான, திறமையான அமைச்சனுக்கு அடையாளம்!

காங்கிரஸ் ஆளத் துவங்கின காலம் முதல், இப்படி, பொறுப்பான அமைச்சராக இருந்த எவரையாவது சொல்ல முடியுமா என்று பார்த்தால் இரண்டே இரண்டு பேர்கள் தான் கண்ணுக்குத் தெரிகிறார்கள்! ஒன்று, சர்தார் வல்லபாய் படேல்! ஹைதராபாத் நிஜாம் மாதிரி சில ஆசாமிகள் ரொம்பவும் கொக்கரித்துக் கொண்டிருந்தபோது, அதை உறுதியோடு எதிர் கொள்ள அவர் ஒருவராலேயே முடிந்தது. அவர் மட்டும் இல்லையென்றால், ஹைதராபாத் இன்னொரு காஷ்மீராகக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும். நேரு ஒரு கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டிருந்தார். அவருக்கு யோசனை சொல்லும் அளவுக்கு, அமைச்சரவையில் யாருமே இல்லை. நேருவை விடத் தன்னை ரொம்பவுமே உசத்தியாகவும், நேருவுக்குப் பின்னால் தான் தான் என்ற கர்வமும், வி.கே.கிருஷ்ண மேனனுக்கு இருந்ததாகவும் சொல்லப் பட்டதுண்டு. இந்த இரண்டு நபர்கள் ஆரம்பித்து வைத்த குழப்பங்கள்...!

இரண்டாவதாக, லால் பகதூர் சாஸ்திரி! நேருவின் வசீகரமும், கோடீஸ்வரப் பின்னணியும், ஆங்கில மோகமும், இல்லை. நேருவின் கோழைத்தனமுமே இல்லாதிருந்த ஒரே காங்கிரஸ் பிரதம மந்திரி ! ஜெய் ஜவான்! ஜெய் கிசான்! என்ற முழக்கம், இந்தியர்களை எதற்குமே லாயக்கில்லாத தொடை நடுங்கிகளாக மட்டுமே எடைபோட்டுத் தாங்களே ஆளப் பிறந்தவர்கள் என்ற கனவோடு படையெடுத்து வந்த பாகிஸ்தான் ராணுவம், ஆட்சியாளர்களுக்குத் தகுந்த பாடத்தைக் கற்றுக் கொடுக்க முடிந்த ஒரே நபர்!

பழைய கதையை நினைவு படுத்திக் கொள்வது நேரு காலத்தில் இருந்து இப்போது வாரிசுகள் காலத்திலும் கூட காங்கிரஸ் கட்சி எப்போதுமே தொடை நடுங்கிகளது கட்சியாகவே இருந்து வந்திருக்கிறது என்பதைச் சொல்லத் தான்! பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் அவையில் இல்லாத எம் பி  எழுவரிடம் என்ன காரணம் என்று சோனியா விசாரிக்கப் போகிறாராம்! அந்தக் கூத்து நடக்கும்போது அதையும் பார்த்து விடலாம்.

இப்போது இந்த ஐ ஐ எம் நுழைவுத் தேர்வு விஷயம் சொல்லும் பாடம் என்ன? கோமாளி மந்திரியானால், இல்லாத ஒன்றைப் பெரிதாக்குவதும், அறிக்கை கேட்பதும் விசாரணை நடத்துவதும் மட்டுமே நடக்கும்! அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது.
நிர்வாகத் துறை நிபுணர்களை உருவாக்குவதில் டாப் என்று பீற்றிக் கொள்ளும் ஐ ஐ எம் நிறுவனங்கள் என்ன செய்தன? செர்வர் க்ராஷாகி விட்டது, இந்தத் தேர்வை நடத்துவதில் தொழில் நுட்பக் கூட்டாளியாக இருந்த ப்ரோ மெட்ரிக் நிறுவனம் சொதப்பி விட்டது என்றுஅடுத்தவர் பக்கம் கையைக் காட்டி இருப்பது, இவர்களெல்லாம், உண்மையிலேயே நிர்வாகவியலை, தலைமைப் பண்பைக் கற்றுக் கொடுக்கத் தகுதியானவர்கள் தானா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. ப்ரோ மெட்ரிக் நிறுவனம், வைரஸ் தாக்குதலினால் தான் இப்படித் தவறு ஏற்பட்டு விட்டது என்று முனகிக் கொண்டிருக்கிறது! Backup Servers, Data Disaster Management ன்று தகவல் தொழில் நுட்பத்தில் ஏகப்பட்ட முன்னேற்றங்கள் இருக்கும்போது, தொழில் நுட்பக் கோளாறு, என்பதைத் தவிர்த்திருக்க முடியும்!




ஒரு அமைச்சராக இருப்பவர், இதை ஒரு அரசியல் ஸ்டண்டாகப் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது தான், இங்கே கோமாளித்தனமாக இருக்கிறது! அமைச்சராவதற்கு முன்னாலேயே, ஒரு வழக்கறிஞராக இருந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசினவை எல்லாமே முழுநேரக் கோமாளித்தனம் தான் என்பது எனது கருத்து. அந்த ஒரு தகுதிக்காகவே, அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறதோ?


ஒழிஞ்சாண்டா இத்தோட என்று சந்தோஷமாக, ப்ரோ மெட்ரிக் முறையில் தோற்றுப் போன ஒருவராகத் தான் இருக்க வேண்டும், இந்தச் செய்திக்குக் கமென்ட் எழுதியிருக்கிறார்:
"bongooo,kumeru,says: this should be the end of Prometric in India at least! yipeeeeee!
[1 Dec, 2009 1700hrs IST]

சேத் கோடின் வலைப் பதிவில் மூன்று மாதங்களுக்கு முன்னால் படித்த சிறிய பதிவு நினைவுக்கு வந்தது:

All storms are perfect

That's what makes them storms.
When someone describes a situation as a perfect storm ("two different backup servers failed, plus there was a blackout, no one could have predicted this, it was a perfect storm,") it's important to remember that if the backup server hadn't failed, there wouldn't have been a problem at all.
Just because a storm is perfect doesn't mean you shouldn't have anticipated it.

தலைமைப் பண்பு! ஒரு தலைவனாக இருப்பவனிடம் இருக்க வேண்டிய முக்கியமான தகுதிகள் என்று சில விஷயங்களை, இந்திய அரசியலையே உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டு, நடந்த சம்பவங்களில் எப்படித் தலைமைக்குரிய பண்போ, தகுதியோ இல்லாமல் இருந்தது என்பதை முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இந்த பதிவுமே கூட, கபில் சிபல் என்ற தனி நபர் மீதான விமரிசனமாக அல்ல, கபில் சிபல் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் அமைச்சுப் பணிக்கு அவர் லாயக்கானவர்தானா, இந்த விஷயத்தில் இவர் இப்படிப் பேசி இருப்பது சரிதானா என்பதை யோசித்துப் பார்க்கிற, எடைபோடுகிற ஒன்றாகத்தான், இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய செய்தி, ஐ ஐ எம் நுழைவுத் தேர்வுகள் ஆறாவது நாளாக, எந்தபிரச்சினையும் இல்லாமல் நடந்ததாகத் தெரிவிக்கின்றன பரீட்சை எழுதமுடியாமல் போன வெறும் எட்டாயிரம் பேர் மட்டும் தான் அமைச்சருக்கு முக்கியமான பிரச்சினையா? வேறு பிரச்சினைகள் எதுவுமே இந்த தேசத்தில் அமைச்சருடைய, அரசின் கவனத்திற்கு வரவே இல்லையா?

மனிதவளமேம்பாட்டுத்துறை இந்தியாவில் என்ன லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு கபில் சிபல் அமைச்சர் அந்தஸ்தில் உதாரணம் என்றால், பொதுத்துறை நிறுவனங்களில் HRD எனப்படும் மனித வள மேம்பாடு என்பது பெரும்பாலும், பிரிடிஷ்காரன் ஏற்படுத்திவிட்டுப் போன வகையில் "அநியாயத்தையே, நியாயம் நியாயம் என்று சொல்" என்ற ரீதியில் தான் இயங்குகின்றன.

"Give a dog a bad name and then hang it!" தூக்கில் போடுவதென்று முடிவு செய்து விட்டாயானால், முதலில் அந்த நாயை, மிகவும் கெட்ட நாய் என்று பழி சுமத்து, பழி நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப்பும் சொல், அப்புறம் தூக்கிலும்போடு!


பிரிட்டிஷ்காரர்களிடம் கற்றுக் கொள்வதற்கு சில நல்ல விஷயங்களுமே இருக்கின்றன. உதாரணமாக, நாற்றம் பிடித்த தேம்ஸ் நதிக் கரையை, நதியை, விக்டோரியா ராணி காலத்தில் எப்படிச் செம்மை செய்தார்கள், பூமிக்கடியில், போக்குவரத்துக்கான சுரங்கப் பாதைகளும், கழிவுநீரை, எப்படிக் கடத்துவது என்பதிலும் ஒரு பொறியியல் சாதனையை நடத்திக் காட்டினார்கள் என்பதை எல்லாம் பார்க்க மாட்டோம்! அவர்களிடமிருந்து கழிசடைத்தனமான ஊழல், பிரித்தாளும் தந்திரம் இப்படி மோசமான விஷயங்களை மட்டும் அவர்கள் வெளியே அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னாலும் போற்றிப் பாதுகாத்து வருவோம் என்கிற மனப்பான்மை நல்லதல்ல.


இந்த விஷயத்தைத் தொடர்ந்து அடுத்த பதிவிலும், பாசிடிவான அணுகுமுறை எப்படித் தீர்க்கவே முடியாத சிக்கல்கள் என்று தெரியும் போது கூட, தீர்வுக்கான வழிமுறைகளை எப்படிக் கண்டடைவது, எது உண்மையிலேயே தலைவனாக இருப்பவனுக்கு இருக்க வேண்டிய தலைமைப் பண்பு என்பதிலுமே கொஞ்சம் விரிவாகப்பார்ப்போம்

 



14 comments:

  1. தலைவனாக தலைமைபண்பு தேவையில்லை!

    தலைவரின் வாரிசாக இருந்தால் போதுமானது!

    ReplyDelete
  2. வாங்க வால்ஸ்!
    லவ்டேல் மேடி கல்யாணத்துல பதிவர் சந்திப்பு சரியா நடத்த முடியலைன்னு, தனியாவே ஒண்ணு ஈரோட்டில் அரேஞ் பண்ணிட்டீங்க போல இருக்கு!ஈரோடு, திருப்பூர் வட்டாரம், தொழிலில் மட்டுமில்லை, பதிவுகளிலுமே கலக்கிக் கொண்டிருப்பதை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

    அப்புறம் என்ன சொன்னீங்க? வாரிசா இருந்தாலே போதும்! தலைமைப் பண்பு அது இது என்றெல்லாம் வேண்டாம்!
    கொஞ்சம் அவங்க கதையைப் பாத்தீங்கன்னாலே, வாரிசா இருப்பதற்கும் ஒரு பெஞ்ச்மார்க் (குறைந்தபட்சத் தர நிர்ணயம்) இருக்கற கதை தெரியுமே! ஏதோ கழுதை ஓடற வரைக்கும் ஓடும் அப்புறம்..?

    ReplyDelete
  3. // கதாநாயகனும் கதாநாயகனும், மெய் மறந்து ஒருவரை ஒருவர் //

    What is that again Krish? 2 naayagans?

    ReplyDelete
  4. அந்த சீனை எழுதறப்ப நானே கொஞ்சம் மெய் மறந்து போயிட்டேன் போல இருக்கு! திருத்தியாச்சு!

    ReplyDelete
  5. இதெல்லாம் விவரமாக் கேளுங்க! பதிவுல சொல்லியிருக்கற மத்த விஷயங்களைப் பத்தி மட்டும் மூச்...! எனக்கு எங்க தமிழ் வாத்தி நினைவுக்கு வருகிறார்!

    ReplyDelete
  6. அது சரிங்க...பதில்ல நாங்க புலம்ப வேண்டியதையும் நீங்களே நீ...ள...மா எழுதிய பிறகு நாங்க என்ன எழுத?!

    வாரம் ஒரு மந்திரி என்று வகை வகையாகக் கிழிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. @ஸ்ரீராம்,
    "உன்னைப் போல் ஒருவனை" விமரிசிக்கிறேன் என்று இங்கே தமிழ் வலைப் பதிவர்கள் கமலைக் கடித்துக் குதறித் துப்பிக் கொண்டிருந்தார்களே, அந்த மாதிரிக் கடித்துக் குதறும் பொறுமை, திறமை என்னிடம் இல்லை என்பதை முதலிலேயே ஒப்புக் கொண்டு விடுகிறேன்!

    வலைப் பதிவுகளில் எழுதிக் கிழித்து விடுவதால் மட்டுமே என்னமோ மாற்றம் வந்து விடும் என்ற நினைப்பு, எவ்வளவு தவறானது என்பதை, சென்ற தேர்தலின்போது, நிறைய ஆதரவுப் பதிவாளர்கள் எதிர்ப்புப் பதிவர்களாக மாறி, ஓட்டுப் போடாதே, தோற்கடி, ஒழித்துக் கட்டு என்றெல்லாம் பிரசாரம் செய்து கடைசியில் என்ன நடந்தது என்பது நினைவிருக்கிறதல்லவா!

    இங்கே நெகடிவான ஒரு விஷயத்தில் இருந்துகூட கற்றுக்கொள்ளக் கூடிய நல்லவிஷயங்களைப் பற்றி மட்டுமே மாற்றுச் சிந்தனைக்காக வைத்திருக்கிறேனே தவிர, மந்திரிகள் மீது எனக்குப் பிரமாதமான ஈர்ப்பு எதுவும் கிடையாது!

    ReplyDelete
  8. //வருடங்களில் பிரிட்டிஷ் குள்ளநரிகளின் ஆட்சி என்று சீரழிந்ததை விட, இந்தக் கோமாளிகளின் கையில் சிக்கிக் கொண்டு இந்த அறுபது ஆண்டுகளில், தேசம் படும் பாடு இருக்கிறதே, என்னவென்று சொல்வது?//

    அறுபது ஆண்டுகளில், தேசம் படும் பாடு அப்படின்னு எழுதி, ரொம்ப எளிதாக ஒரு கட்சி மேல பலி போடுறது ஏற்று கொள்ள முடியாத ஒரு வாதம், democracy, by the people,for the people,of the people....அப்படின்னு தானே சொல்லுவாங்க...அறுபது ஆண்டா அதை தேர்ந்தடுத்த மக்கள் ?

    சரி ....இந்தியா பல மாநிலங்கள் கொண்ட ஒரு நாடு தானே, மாநில ஆட்சி அறுபது ஆண்டா எந்த கட்சி வச்சிருந்தது ?

    ReplyDelete
  9. ஐ ஐ எம் நுழைவுத் தேர்வுகள் ....சொதப்பல்ஸ் ஆப் இந்தியா தான்....IT infrastructure இன்னும் நாம வளர வேண்டி இருக்குது...முதல் முறை இந்த மாதிரி தேர்வு நடத்த படுவதையும், நீங்கள் கவனிக்க வேண்டும்.

    ReplyDelete
  10. சாம்,
    ஐ ஐ எம் நுழைவுத் தேர்வு மட்டும் சொதப்பல், மற்ற தேர்தல்கள், தேர்வுகள் எல்லாம் எதோ கொஞ்சமாவது பரவாயில்லை என்று நினைக்கிற மாதிரி இருக்கிறதே:-)
    All storms are perfect
    சேத் கோடின் வலைப் பதிவைப் படித்தீர்களா? அதற்குக் கீழேயே, அப்புறம் நடந்த தேர்வுகள் எல்லாம் பிரச்சினை ஏதுமில்லாமல் நடந்ததைக் குறிப்பிட்ட செய்தி, அதன் லிங்கைப் படித்தீர்களா?

    சொதப்பிக் கொண்டிருப்பது நாமுடைய அரசியல் வாதிகளும், பொறுப்பற்ற அரசு இயந்திரமும் தான்! தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பில் கோளாறு இல்லை. நாம் அதைப் பயன்படுத்தும் விதத்தில், புரிந்துகொண்டிருக்கிற விதத்தில் மட்டுமே கோளாறு இருக்கிறது. அது தவிர, கோளாறு, சொதப்பல் என்று கூவிக் கொண்டிருப்பதால், விசாரணை நடத்துவதால் மட்டும் என்ன நடந்து விடும் என்று நினைக்கிறீர்கள்?

    ஒவ்வொரு பிரச்சினையும், சொதப்பலும், அது மறுபடி நிகழாதவண்ணம் காத்துக் கொள்வது எப்படி என்ற பாடத்தையும் சேர்ந்தே கொண்டு வருகிறது.
    நல்ல நிர்வாகி, தலைமை ஏற்கத் தகுதியானவன், பாடத்தைக் கற்றுக் கொள்கிறான். முன்னெடுத்துச் செல்கிறான்!

    ReplyDelete
  11. சாம்,
    மாணவனாக இருந்த நாட்களில் இருந்தே, 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட நாட்களில் இருந்தே அரசியலைக் கவனித்து வருபவன் என்ற முறையில் ஒன்றைத் தெளிவாகவே சொல்கிறேன்!

    காங்கிரஸ் கட்சியையோ, அல்லது யாரோ சில நபர்களை மட்டுமே குற்றம் சொல்லி, விமரிசிப்பதர்காக மட்டும் இங்கே எழுதிக் கொண்டிருக்கவில்லை. 1967 இற்குப் பின்னால், காங்கிரஸ் பல மாநிலங்களில் செல்வாக்கை இழந்ததோடு, மாநில அளவில் ஆட்சி அமைக்கும் அளவுக்குப் போதுமான சட்ட மன்ற உறுப்பினர்களையும் பெறத் தவறியது. தமிழ்நாட்டில், 1952 முதல் பொதுத் தேர்தலிலேயே நடந்துவிட்டது. இன்றைக்கு நடக்கும் குதிரை பேரம், கழுதை பேரம் அப்புறம், லைன்ஸ் பெர்மிட் ராஜ் என்று ஊழலை வளர்த்துவிட்ட ஆரம்பம் காங்கிரஸ் கட்சி செய்திருக்கிற பேரழிவு. காங்கிரசிடம் இருந்து அரிச்சுவடியை கற்றுக் கொண்டவர்கள், காங்கிரஸ் கட்சிக்கே ஆ!...ராசா என்று வாயைப் பிளக்க வைக்கிற விதத்தில் பாடம் சொல்லிக் கொடுப்பதில் டாக்டரேட் பட்டம் ஒன்றல்ல, இரண்டல்ல நிறையவே வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியும் இப்போது டாக்டரேட் வாங்குவதில் வெகு முனைப்பாகவே செயல் பட்டுக் கொண்டிருக்கிறது! எதில் எதில்....?!

    இப்போது சொல்லுங்கள்!

    ReplyDelete
  12. //காங்கிரஸ் கட்சியையோ, அல்லது யாரோ சில நபர்களை மட்டுமே குற்றம் சொல்லி, விமரிசிப்பதர்காக மட்டும் இங்கே எழுதிக் கொண்டிருக்கவில்லை//


    உங்களுடைய பதிவுகளை கொஞ்ச நாலா(நான் பதிவுலகுக்கு புதுசு) தொடர்ந்து படிச்சிட்டு வரேன், நீங்கள் அந்த அர்த்தத்தில் எழுதவில்லை என்றாலும், ..... இந்த அறுபது வருடம்
    இந்தியா பாலா போனதுக்கு காரணம் இந்த கட்சி மட்டும் தான் காரணம் அப்படின்னு சொல்றது, காங்கிரஸ் கட்சியை மட்டும் எதிர்பவர்கள் சொல்லும் ஒரு கூற்று என்பதும்
    உங்களுக்கு தெரிந்திருக்கும்.

    ஐயா, நிறைய வரலாறு சொன்னீர்கள், இது தான் உங்களிடம் பிடித்த விஷயம், :-)....சரி தற்போதைய மத்தியில் இருக்கும் காங்கிரஸ்
    ஆட்சி ஊழல்க்கு பேர் போனது அப்படின்னு சொல்ல முடியுமா......பொருளாதார மந்த நிலையில் பல நாடுகள் நம்முடைய வங்கி அமைப்பை பற்றியும், நம்மலுடய வளர்ச்சி (7.9)
    குறித்தும் ஆச்சரியம் அடைந்திருக்கே, இதை வைத்து பல நல்ல விஷயங்களும் நடந்திருக்கு அப்படின்னு சொல்லலாமா ?

    ReplyDelete
  13. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதற்குப் பழசு புதுசு என்ற பாகுபாடே இல்லை, சாம்!

    இந்த தேசம் சீர் கேடடைந்ததற்கு, மத்தியில் சில வருடங்கள் தவிர, தாத்தா, மகள், பேரன், அப்புறம் வாரிசுகளை ஒதுக்கிவைத்து ஐந்தாண்டுகள் முழுமையாக நரசிம்மராவ், இப்போது மன்மோகன் சிங் மாதிரி ஒரு டம்மி பீஸ் என்று இந்த அறுபத்திரண்டாண்டுகளில் காங்கிரஸ் கட்சியே நாட்டை ஆண்டுவந்திருக்கும் பொது, வேறு யாரைக் குறை சொல்ல முடியும்?

    அடுத்து வளர்ச்சி விகிதம்! புள்ளிவிவரங்களில் ஏதோ ஒரு பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு சரி அல்லது தவறு என்று தீர்ப்புச் சொல்ல நான் தமிழ் சினிமா நாட்டாமை இல்லை. வளர்ச்சிவிகிதம் உண்மைதானா, அல்லது மிகைப் படுத்தப்பட்டதா என்பதை அளவிட நிறைய வழிவகைகள் இருக்கின்றன. பழைய பதிவுகளில், அரசியல், விமரிசனம், தலைமைப்பண்பு, இது தவிர வலைப் பதிவிலேயே கூகிள் தேடலில் பொதுத்துறை என்ற குறியீடுகளில் தேடித் பாருங்கள். இன்னும் கொஞ்சம் விவரம் கிடைக்கும். ஒரு வங்கியாளனாக இருந்ததில், பொருளாதார விஷயங்களை நான் புரிந்துகொள்ள முடிகிற விதத்திலேயே, வலைப்பதிவில் பொழுதுபோக்க வருபவர்களுக்கும் புரிய வைத்துவிட முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.

    அவ்வப்போது பொருளாதாரம் குறித்தும் பதிவுகள் நிச்சயமாக வரும்.

    ReplyDelete
  14. i am saying glass is half full..... நீங்கள் glass is empty அப்படின்னு சொல்ல்றீங்கனு நினைக்கிறேன்

    //நான் புரிந்துகொள்ள முடிகிற விதத்திலேயே, வலைப்பதிவில் பொழுதுபோக்க வருபவர்களுக்கும் புரிய வைத்துவிட முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.//

    நச்சுனு சொன்னீங்க ,, பொழுதுபோக்க மட்டுமே வலைபதிவுக்கு வரேன், அவ்வ பொது எனக்கு தெரிந்த விஷயங்களையும், கருத்துகளையும் பகிர்ந்தும் வரேன்,
    பொருளாதாரம் பத்தி எழுதுங்க, இந்த மரமண்டைக்கு புரிதாணு பார்க்கலாம் .

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!