ஆசை இருக்கு தாசில் பண்ண....!


மாஸ்லோ சொல்லும் மனிதனின் தேவைகள்அடுக்கு !

எத்தனை காலம் ஆனால் தான் என்ன? கி.மு., கி.பி என்று சகாப்தங்களையும் தாண்டி, மனிதனுடைய சில அடிப்படையான தாகங்கள், தேவைகள், தேடல்கள், தவிப்புக்கள் என்று எத்தனை வார்த்தைகளில் சொல்ல முனைந்தாலுமே கூட, இந்த இரண்டு தான் மிக முக்கியமாக இருக்கிறது.

என்ன அந்த இரண்டு?

தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்பது முதலாவது! எல்லோருக்கும் தெரிந்த ஆளாக, பிரபலமாக இருக்க வேண்டும் என்பது அடுத்தது! மிக இயல்பான இந்த தேவைகளை நம்மில் நிறையப் பேர், ச்சே ச்சே நான் அப்படியில்லைப்பா என்று மறைத்துக்  கொள்ள விரும்பினாலுமே கூட, நம்முடைய செயல்கள், வார்த்தைகள் காட்டிக்  கொடுத்து விடுவதை, எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?

சின்னப்பிள்ளைகள், வகுப்பறையில் பாடத்தில் நாட்டம் இருக்காது, நல்ல மதிப்பெண்களும் பெற முடியாது, கொஞ்சம் ராவடி செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருக்கும். ஒரே காரணம், ஒரேயடியாகக் கவனிக்கப்படாமலேயே போய்விடுவதை விட, ராவடி, வால்தனம், ரவுசு செய்வது மிகவும் எளிது என்பது தான்! இப்படி ராவடி, ரவுசு செய்துகொண்டிருக்கும் குழந்தைகளிடம் கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டாலே போதும், ரவுசு கட்டி ஆடுகிறவர் சாதுவாய் மாறிப்போவார்! வாத்திமாரைக் கேட்பதை விட, இதை அம்மாக்களிடம் கேட்டுப்பாருங்கள்!

கவனிக்கப்படவேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கிற குழந்தைத்தனமான இந்த வீம்பு, வளர்ந்த பின்னாலுமே கூட வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுவதை, கொஞ்சம் கவனிக்கப் பழகினோமானால், நம்மிடத்திலேயே காணமுடியும்! எப்போதாவது, முயற்சித்துப் பார்த்திருக்கிறீர்களா?

தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள விரும்பும் எவருமே புறக்கணித்து விடமுடியாத விஷயங்களாக, மனிதனின் இந்த இரண்டு அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. இந்த இரண்டு தேவைகளைச் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்துகொள்ளும்போது, தலைவனாக இருப்பவன், அதிகமாகச் சாதிக்கிறான்!வேலை செய்கிற இடமாக இருக்கட்டும், நட்புவட்டம், குடும்பம் என்று சமூகச் சூழலிலாகட்டும், இந்த இரண்டு அடிப்படைத் தேவைகளே, மற்றவற்றை முடிவு செய்கின்றன. அல்லது முடிவு செய்வதற்குப் பலமான காரணிகளாக இருக்கின்றன.

வேலை செய்கிற இடத்தை முதலில் பார்ப்போம். உங்களுடன் ஒரு பத்துப் பேர் பணியாற்றுகிறார்கள். உங்களுடைய மேலாளர், உங்களிடம், உடன் பணிபுரிபவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பது உங்களுடைய வேலைத் திறமையைப் பாதிக்கிறது. எப்படி?

உங்களுடைய மேலாளர், அல்லது உடன் பணி செய்கிறவர்கள், உங்களைப் புறக்கணிப்பதாக, அல்லது உங்களுக்கு உரிய முக்கியத்துவம், கவனத்தைக் கொடுப்பதில்லை என்று, அது நிஜமாகவோ, அல்லது மிகைப்படுத்தப் பட்ட கற்பனையாகவோ கூட இருக்கலாம், அப்படி ஒரு எண்ணம் வந்துவிட்டால், உங்களுடைய குணமே பாய்ந்து பிராண்டுவதாக, மாறிப்போய்விடுகிறது.

முன்னால் பார்த்தோமே, சிறு குழந்தைகள், அதே மாதிரி, ஒரு முரட்டுத் தன்மையோடு, எதையுமே ஆக்ரோஷமாக நிராகரிக்கிற, மறுக்கிற தன்மையாக ஆகிவிடுகிறது. ஆரம்பத்தில், சிறிதாக வெளியே தெரியாத இறுக்கமாக ஆரம்பிக்கும் இந்தக் குணம், பின்னால் மாற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு, ஒரு வெட்டி வீம்பாகவே மாறிவிடுகிறது.

வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஒரு காட்சி, தரையைத் துடைத்துச் சுத்தம் செய்கிற தொழிலாளியாக வீராச்சாமி, எல்லோருடனும் முறைத்துக் கொண்டு சண்டை போடுகிறவராக ஒரு காட்சியில் அறிமுகமாவார். கமல் அவரிடம், அவருடைய வேலையை சிலாகித்துப் பேசியவுடனேயே, வீராச்சாமி உருகி, முரசக்குணம் மாறி,  தேம்புவார். அடுத்து வருகிற ஒருவர், இவர் துடைத்த இடத்தை மிதித்துக் கடந்துபோகவேண்டும், பயந்து நிற்பார். வீராச்சாமி அவரிடம் மிகவும் தன்மையாக, 'நீங்க போங்க, உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும், எனக்கு இதைத் துடைக்கிறது ஒண்ணு மட்டும் தானே வேலை' என்பார். தமிழ் சினிமாப்படங்களில் கூட, அவ்வப்போது, இந்த மாதிரி வாழ்க்கையின் யதார்த்தத்தைச் சொல்லும் ஒன்றிரண்டு காட்சிகள் வந்து விடுகின்றன.

இந்த இடத்தில், தான் முகமற்ற ஒரு நபர், தன்னை எவருமே சட்டை செய்வதில்லை என்ற எண்ணம் வீம்பாக வெளிப்படுவதும், தன்னையும் ஒருவர் மதித்து அங்கீகரிக்கிறார் என்ற நிலையில் அந்த வீம்பு,  சண்டைக் குணம் மாறிவிடுகிறது, அல்லது அதற்கு இடமே இல்லாமல் போய் விடுகிறது என்பதைப் பாருங்கள்!

மதிப்பது, அங்கீகரிப்பது என்பது மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள், விருதுகள் வழங்குவதெல்லாம்  இல்லை. சாதாரணமான, எளிய, சின்னச் சின்ன விஷயங்களே  கூடப் போதும். சின்னச்  சின்ன முறுவல்கள், முகமன்கள், நலமாக இருக்கிறீர்களா என்ற விசாரணைகள், குடும்பம், பிள்ளைகள் பற்றிய சிறு விசாரணைகள்  இப்படி மிகவும் எளிதான விஷயங்களிலேயே, மனிதமனம், தன்னையும் மதித்து, கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று திருப்தி அடைந்து விடுகிறது. திருப்தி அடைந்த மனித மனம், குரங்கு போல அங்கே இங்கே தாவுவதில்லை, மேலே விழுந்து பிராண்டுவதில்லை, வாலாட்டுவதுமில்லை!

Getting noticed கவனத்தை ஈர்ப்பது என்ற முதல் தேவை சரி! அது என்னென்ன விதங்களில் வெளிப்படும் என்பதைக் கூட, ஒரு நான்கைந்து ரகங்களாக வகைப்படுத்திச் சொல்லிவிடலாம். சின்னச் சின்ன விஷயங்களிலேயே, நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள் என்பதைச் சொல்லிவிடலாம்! திருப்தி செய்து விடலாம்!அடுத்து வருகிறதே, எல்லோருக்கும் தெரிந்த பிரபலமாக ஆவதென்ற ஆசை, தேவை, இதை எப்படிப் பூர்த்திசெய்வது? 


"தெரிந்து வைத்துக் கொள்வது"  இது கொஞ்சம் எளிதானதல்ல.இது கொஞ்சம் நேரமும் முயற்சியும் தேவைப் படுகிற சமாசாரம்!மறுபடியும் வேலை செய்கிற சூழலையே எடுத்துக் கொள்வோம்! நம்முடன் பணிபுரிபவர்களைப் பற்றி நாம் எந்த அளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? நமக்கு உடனே தெரிவது, அவர்களுடைய குற்றம் குறைகள் தான்! அடுத்து அவர்களைப் பற்றி நாமாகவோ, மற்றவர்கள் சொல்கிற அபிப்பிராயங்களை வைத்து, ஒரு கலர்க் கண்ணாடி வழியாகவே, அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! அது தான் நாம் அவர்களைப் புரிந்து கொண்டதாகவும், தெரிந்து கொண்டதாகவும் இருக்கிறது! ஆனால் அவர்களிடம் இருக்கும் திறமை, நல்ல அம்சங்களைப் பார்க்க விடாமலேயே தடுத்தும் விடுகிறது!

மறுபடியும், முதலில் பார்த்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படக் காட்சியையே எடுத்துக் கொள்வோம்! வீராச்சாமி, தன்னையும் ஒருவர் கவனிக்கிறார், தன்னுடைய வேலையைப் பாராட்டுகிறார் என்று தெரிந்து கொண்ட உடனேயே, அது வரை மூடி மறைத்து வைத்திருந்த அவருடைய நல்ல குணங்கள் வெளிப்படுகிற தருணமாக அது ஆகி விடுகிறது என்பதைப் பார்த்தோமல்லவா!  ஒரு நல்ல நிர்வாகி, மேலாளர் அல்லது குழுத்தலைவராக இருப்பவருடைய திறமையே, இந்த இடத்தில் தான் மிகவும் முக்கியமானதாக ஆகிறது!

தன்னுடன் பணிபுரிபவரைப் புரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்கிறார். அவரை விமரிசிப்பதற்கோ, மிரட்டுவதற்கோ அல்ல. உடன் வேலை செய்பவரின் சூழ்நிலை, பயங்கள், வேலை செய்வதில் உற்சாகமிழத்தல்  இவற்றைப் புரிந்து கொண்டு, முதலில் அவர் மேல் தான் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார், அடுத்து  சிநேகபூர்வமான பேச்சு, செயல்களால், பயத்தைப் போக்குகிறார், வேலை செய்வதில் ஒரு ஆர்வத்தை உண்டாக்குகிறார். இப்படிப்பட்ட ஒரு தலைமை, நிர்வாகி, அல்லது குழுத்தலைவருடன் வேலை செய்கிறவர்கள் முக மலர்ச்சியோடும், வேலை செய்வது ஒரு சந்தோஷமான அனுபவமாகவும், திறமையை வளர்த்துக் கொள்வதிலும், புதிய சவால்களை எதிர்கொள்வதிலும்  சிறந்தவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களிடமிருக்கும் திறமையை வெளிக் கொணர்வதில், உற்சாகப்படுத்துவதில், நம்பிக்கையூட்டுவதில் தான்  நல்ல நிர்வாகியின் திறமையே இருக்கிறது! இந்த நிர்வாகி என்ற இடத்தில், நண்பர்கள், உறவு, குடும்பம், அப்புறம் சக பதிவர்கள் என்று எதை வைத்து வேண்டுமானாலும் வைத்து யோசித்துப் பாருங்கள்! இப்படி, சக மனிதர்களை அங்கீகரிக்கிற, புரிந்துகொள்ள முயல்கிற தன்மை, எவ்வளவு முக மலர்ச்சியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது! தன்னை நேசிக்கிற அதே அளவு, தன்னைச் சேர்ந்தவர்களையும் நேசிக்கும் இயல்புவளருகிறது.

உற்சாகப்படுத்துவது என்பது ஒத்து ஊதுவது அல்ல!  கருத்து வேறுபாடு இருந்தாலுமே கூட அதையுமே ஒரு பண் பட்ட வகையில், இது என்னுடைய கருத்தாக இருக்கிறது என்ற அளவில் மட்டுமே நிறுத்திக் கொள்வது நம்மைப் பலவீனப்படுத்திவிடும் என்று நாமாகவே ஒரு முடிவு செய்துவிட்டு  ஆஹா விட்டேனா பார்  என்று  ஒரு எல்லைக்கு மீறி போய் விடும்போது,
நாம் சொல்ல வந்தது ஒன்றும், சொன்னது வேறாகவும் ஆகிப் போய் விடுகிற நிலையில், வரட்டுப் பிடிவாதம் மட்டுமே மிஞ்சி நிற்கும். அப்புறம் எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி என்று பாடிக்கொண்டு பாட்டிலுடன் திரிய வேண்டியதுதான்!


இங்கே ஒரு நல்ல நிர்வாகி அல்லது நண்பர் செய்வது, அவசரக் குடுக்கையாகப் பேராசையோடு இலக்கை நிர்ணயிப்பது அல்ல. சக மனிதரிடம் காண்பிக்கும் நல்லெண்ணம், அவரால் முடியும் என்று தெம்பு ஊட்டுகிற  நம்பிக்கை,  செய்து முடிப்பதற்கு துணையிருக்கிறது என்ற தைரியம் இவற்றைத் தருவதுதான்!

தனித்துவிடப்பட்டதாகவோ, புறக்கணிக்கப்பட்டதாகவோ எண்ணாமல், தான் ஆதரவோடு  இருப்பதை உணர வைப்பது   தான்! நான் தனித்து இல்லை என்கிற உத்தரவாதத்தை வேண்டியே, இப்படித் தான் கவனிக்கப்பட வேண்டும், பிரபலமாக வேண்டும் என்கிற தேவையும் தவிப்பும் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்!

மனிதன் ஒரு சமூகமாக வாழவே பிறந்தவன், சமூகப் பிராணி என்பதெல்லாம் இதைச் சொல்வதுதான்!

6 comments:

  1. ஒருவரை உற்சாகப் படுத்துவதால் மட்டுமே அவரை நல்ல வேலைக்காரராகவோ, எதிர்ப்புணர்வு இல்லாதவராகவோ ஆக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை. கவனத்தைக் கவர்வது என்பதெல்லாம் இருக்கட்டும்... ஒரு வங்கியில் ஐந்து பேர்கள் வேலை பார்க்குமிடத்தில் ஒருவர்தான் இருக்கிறார்...எல்லா வேலையையும் அவரே செய்ய வேண்டும் என்ற நிலையில் அவரை என்ன அப்பா, ஐயா என்றாலும் அவரால் சந்தோஷமாக எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய முடியுமா? எத்தனை நாள்?

    ReplyDelete
  2. வாருங்கள் ஸ்ரீராம்!
    இந்தப் பதிவு மனிதத் தேவைகளின் கட்டுமானங்களைப் பற்றியது, தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும், அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற (Getting noticed and known! ) இரண்டு அம்சங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, வேலைச் சூழலை வைத்து ஒரு உதாரணத்துக்கு மட்டுமே இட்ட பதிவு இது.நீங்கள் சொல்கிற சூழ்நிலையை, ஒரு முன்னாள் வங்கியாளனாக நானே அனுபவித்திருக்கிறேன். கசப்பு, வெளியே வந்த பிறகும் கூட, தொண்டையில்நிற்கிறது.

    ஒரு நல்ல நிர்வாகியின் பணிகளில், வேலையைப் பங்கிட்டுக் கொடுப்பது மட்டுமல்ல, ஓவர்லோட் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வதுமே முக்கியமானது. அடுத்து, ஒரு குழுவாகச் செயல் படும்போது, சுமைகளைப் பகிர்ந்து கொள்ளும் தன்மையும் தானாகவே வர வேண்டும். இது இருவழிப்பாதை. அதற்கு ஒரு இணக்கமான சூழலை, ஏற்படுத்தி தருவது என்ற அம்சம் தான், இந்தப் பதிவில் நிர்வாகியின் லட்சணமாகச்சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  3. //வால்தனம்,
    வாலாட்டுவது//

    புரியுது, புரியுது!

    ReplyDelete
  4. நீங்கள் புரிந்து கொண்டதாக நினைப்பது தவறு.

    உங்களையோ, அல்லது வேறு எதையுமே குறிப்பிட்டு இந்தப் பதிவில் எழுதவில்லை. மனம் ஒரு குரங்கு என்ற வாக்கியக் கட்டமைப்போடு தொடர்பு படுத்தி வந்த வார்த்தைகள் அவை.

    ReplyDelete
  5. // உற்சாகப்படுத்துவது என்பது ஒத்து ஊதுவது அல்ல! கருத்து வேறுபாடு இருந்தாலுமே கூட அதையுமே ஒரு பண் பட்ட வகையில், இது என்னுடைய கருத்தாக இருக்கிறது என்ற அளவில் மட்டுமே நிறுத்திக் கொள்வது //
    U have my consent also, for this.

    ReplyDelete
  6. நான் தொடர்ந்து உங்கள் இடுகைகளைப் படித்துக் கொண்டு இருக்கிறேன் ஐயா - கால தாமதம் ஆனாலும். இந்த இடுகைக்குப் பின்னூட்டம் இடவேண்டும் என்று தோன்றியது. இடுகிறேன்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!