வால் இருக்கிறது, சரி! தலை(மை) எங்கே?

நிர்வாகவியலைப் பற்றிய பதிவு ஒன்றில் படித்த சுவாரசியமான கதை!
அதாவது, கதை சொல்லி, ஒரு கருத்தை விளங்க வைப்பது!



பலூன் ஒன்றில் பறந்துகொண்டிருந்த ஒருவர்,  எங்கே பறந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிவதில் குழப்பம் ஏற்படவே, உயரத்தைக் குறைத்து மெல்ல மெல்லக் கீழே இறங்க ஆரம்பித்தார். கீழே கூப்பிடு தொலைவில் ஒரு மனிதர் நடந்துபோய்க் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டுக் கூவினார்!

"ஹலோ! நான் எங்கிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?"

 "பலூனில் பறந்து கொண்டிருக்கிறீர்கள். தரையில் இருந்து சுமார் முப்பது அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள்!"
என்று கீழே இருந்து அந்த மனிதர் பதில் சொன்னார்.பலூனில் பறந்து கொண்டிருந்தவர் சொன்னாராம், "நீங்கள் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவராகத் தான் இருக்க வேண்டும்! அப்படித்தானே!"

கீழே இருந்தவர் கொஞ்சம் ஆச்சரியப்பட்டு , "ஆமாம்! எப்படிச் சரியாக கண்டுபிடித்தீர்கள்?" என்று கேட்டாராம்.

பலூனில் பறந்து  கொண்டிருந்த மனிதர் சொன்னார்:  "அதுவா! நீங்கள் சொன்ன எல்லாமே மிகவும் துல்லியமான விவரங்கள்! ஆனாலும், எவருக்குமே பயன்படாதவை. அதை வைத்துத் தான் சொன்னேன்"

"சரிதான்!" என்று ஒப்புக் கொண்டார் கீழே இருந்தவர். "நீங்கள் ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பவராகத் தான் இருக்க வேண்டும்!" என்று சொன்னார். பலூனில் பறந்து கொண்டிருந்த மனிதருக்கோ ஆச்சரியம், "அட ஆமாம்! அது எப்படி இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறீர்கள்?"

"கண்டுபிடிப்பதற்கான காரணம் பெரிதாக ஒன்றுமில்லை! உங்களுக்கு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை, எங்கே போகவேண்டும் என்பது கூடத் தெரியவில்லை! ஆனால், நான் உங்களுக்காக அதைத் தெரிந்து சொல்ல வேண்டுமென்று  நினைக்கிறீர்கள்! என்னை பார்ப்பதற்கு முன்னால் என்ன நிலையில், தெளிவில்லாமல் இருந்தீர்களோ அதே நிலையில் தான் இப்போதும் இருக்கிறீர்கள். ஆனால், குறை சொல்வதற்கு ஒரு ஆள் கிடைத்தவுடன், என் மேல் குற்றம் சொல்கிறீர்கள் பாருங்கள் அதிலிருந்து தான் !"



இந்த மாதிரிக் "கடி" களை நம்முடைய வாழ்க்கையில் பலமுறை பார்த்திருக்க முடியும்! கவனித்திருக்கிறீர்களா?


தலைமைப் பொறுப்பில், இப்படிப் பொறுப்பில்லாதவர்கள் அமர்த்தப் படும் சூழ்நிலைகளில். இந்த மாதிரித் தான் போகாத ஊருக்கு வழி கேட்கிற கதையாகிப் போய்விடுகிற துயரம் நேர்கிறது. இதை வெறும் கதையாக மட்டும் பார்க்காமல், இதில் இருக்கும் யதார்த்தத்தை, நம்மைச் சுற்றியுள்ள எதில் வேண்டுமானாலும் பொறுத்திப் பார்க்க முடியும்!

தகவல்கள் இருந்து மட்டும் என்ன பயன்? தகவலை வைத்து என்ன முடிவுக்கு வருகிறோம், என்ன செய்கிறோம் என்பது தெளிவாக இல்லாத போது அந்தத் தகவல் உபயோகமற்ற வெறும் குப்பையாகி விடுகிறது. 


தெளிவான பார்வையும், செயல் திறனும் உள்ள தலைவர்கள், நிர்வாகிகள், கிடைக்கும் எந்தத் தகவலையும் வீணாக்குவது இல்லை. 


தேவையே இல்லாமல், குப்பை சேர்க்கிற மாதிரித் தகவல்களை சேகரிப்பதோடு மட்டும் நின்றுவிடுகிறவர்கள், தலைவராகவோ, நிர்வாகியாகவோ இருக்க  லாயக்கற்றவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில், பல முறை பார்த்துக் கொண்டு வருகிறோம்.

அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ, போக வேண்டிய திசை தெரிகிறதோ இல்லையோ, மாதத்திற்கு நூறு ஸ்டேட்மென்டுகளுக்குக்  குறையாமல் தயார் செய்வது மட்டும் தான் வங்கித் தொழில் என்று, புள்ளி விவரங்கள் மீது ஆசையோடு இருக்கும் புள்ளிராசா வங்கியை பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இங்கே பார்த்திருக்கிறோம்!


புள்ளி விவரத்தின் மீது ஆசைகொண்ட அந்தப் பொதுத்துறை வங்கியை எடுத்துக் கொள்வோம். அதனுடைய தலைமை நிர்வாகியாக இருந்தவர், house magazine என்று ஊழியர்களோடு தொடர்பில் இருப்பதற்காக ஒரு பத்திரிக்கை வருமல்லவா, அதில், வெளிப்படையாகவே புலம்பினார். 'நம்முடைய வங்கியில் கடனுக்கு வட்டி மற்றவர்களோடு ஒப்பிடுகையில் குறைவு, சேவைக் கட்டணங்கள் மிகக் குறைவு,இப்படி எல்லா வகையிலும் மிகக் குறைவான விகிதத்திலேயே கட்டணங்கள் இருந்த போதிலுமே கூட, வாடிக்கையாளர்களோ , வருமானமோ அதிகரிக்கவே இல்லை. ஏனென்று தெரியவில்லை' என்று முதல் பக்கத்திலேயே, தலைமை நிர்வாகியின் செய்தி, உடன் பணியாற்றுகிறவர்களையும் சிந்திக்க வைப்பது, செயல்பட வைப்பது, என்பதற்குப் பதிலாகத் தோற்றுப் போனவன் புலம்பலாகவே இருந்தது.
அவரால் புலம்ப மட்டுமே முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், புலம்பல்கள் கேள்விகளாகவும், விடைகள் கண்ணெதிரிலேயே நிதரிசனமாகவும் இருந்தன.மாற்றத்தைச் சாதிக்க அவரால் முடியவில்லை, அவரைச் சுற்றியிருந்தவர்கள் விடவில்லை.அவர்களைச்   சரி செய்வதற்குக் கூடத் தலைமை நிர்வாகிக்கு தெரியவுமில்லை, திறமையுமில்லை!

அப்புறம்,புள்ளி ராசாவுக்குப் புள்ளி வருமா? வராதா?

இதில் என்ன புதிதாக இருக்கிறது? பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் இப்படித் தானே இருக்கின்றன என்று ஒதுக்கிவிடாதீர்கள்.

ஒரு தலைமை நிர்வாகி எப்படி இருக்கக் கூடாது என்பதை இந்த வங்கியின் தலைமை நிர்வாகிகள் பலர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்
.
 

இதே வங்கியின் இன்னொரு தலைமை நிர்வாகி! வழக்கம் போலவே அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப் பட்டு, ஸ்டேட் வங்கியில் இருந்து, இந்த  வங்கியின்  தலைவராக வந்தவர். ஸ்டேட் வங்கியின் பலம்  Professional Approach!. இவர் அங்கே வளர்ந்த சூழ்நிலையே வேறு. இங்கே இருந்த சூழ்நிலையே வேறு!

இங்கே இந்த  வங்கியில் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்சாக இருப்பது மட்டுமே பெரிய தகுதியாக இன்றைக்கும் கூட இருக்கிறது..  தலைமைப்  பொறுப்பேற்க வந்து, பலருக்குப் பொருந்தாமலேயே ஆகிப்போன சந்தர்ப்பங்கள் இந்த வங்கியில் சர்வசாதாரணம்! ஸ்டேட் வங்கியில் இருந்த, தொழில் தெரிந்த நிர்வாகத்தைப் பார்த்துப் பழகினவருக்கு, இந்த வங்கியில் இருந்த நடைமுறைகள்  பொருந்தாமல் போனது. தலைமைப் பொறுப்பு வெறும் பதவியில் மட்டும் தான்! உருப்படியான மாற்றம், அதற்கான வழி வகை என்ன என்பதைப் பற்றிய சிந்தனையோ, செயல் திட்டமோ இல்லாத தலைமை நிர்வாகிகளில், அவரும் ஒருவர். பெயரளவுக்கு மட்டுமே சேர்மன் அண்ட் மேனேஜிங் டைரக்டராக இருந்த இந்த மனிதர்  தென் தமிழ்நாட்டின் தலை என்று சொல்லக் கூடிய ஒரு நகரக் கிளைக்கு விஜயம் செய்தார்.

சுத்தம் செய்யப்படாமலேயே மேலும் மேலும் கழிவுகளைக் கூட்டிக் கொண்டிருக்கும் பொதுக் கழிப்பறை போல இருந்த அந்த வங்கிக் கிளையைப் பார்த்து அருவருப்பு அடைந்து கமென்ட் எழுதினதோடுசரி!. கிளையின் விருந்தினர் பதிவேட்டில் இப்படி எழுதி வைத்தார்.

 .  
"இந்தக் கிளையைப் பேசாமல் இழுத்து மூடி விடலாம்!"  

இந்த விமரிசனத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முக்கியமான செய்திகள் இருப்பது கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். அப்புறம், அந்தக் கிளையை சரி செய்யவோ, பரிந்துரைத்தபடி இழுத்து மூடிவிடவோ கூட அவரால் முடியவில்லை என்பது தான் மிகப் பெரிய நகைமுரண்!

இந்த நிகழ்ச்சி விவரணத்தில் நாம் உடனடியாகப் புரிந்துகொள்ளக் கூடியதில், முதலாவதாக, விமரிசனம் எழுதியவர் தலைமை நிர்வாகியாகவே இருக்க லாயக்கற்றவர்.

இரண்டாவதாக, அவர் விரும்பிய மாற்றம் என்ன என்பதைத் தானும் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல், உடன் பணியாற்றுபவர்களுக்கும் புரிய வைக்க உருப்படியான முயற்சி எதையுமே செய்யாமல், இப்படி மாற்றத்திற்காக உழைக்காமலேயே, 'மாற்றம் வேண்டும்' 'மாற்றம் வேண்டும்' என்று அரசியல் வாதிகள் மாதிரியே வெறும் உத்தரவுகள் மட்டுமே போடத் தெரிந்த வெத்துவேட்டு

இந்த மாதிரியான வெத்துவேட்டுக்கள்
, தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தையுமே பொட்டல் காடாக்க மட்டுமே தெரிந்தவர்கள்.


மூன்றாவதாக, இந்தப் பொதுத்துறை வங்கி, தலைமைப் பண்பு என்றால் என்னவென்றே அறியாத ஒரு முட்டாள்களின் சுவர்க்கம். தலைமை தாங்குவதில் வெற்றிடம் ஏற்படும்போது, அடுத்தடுத்துப் பொறுப்புக்களைச் சுமக்க முன்வரத் தயாராக இல்லாத தண்டங்களை மட்டுமே கொண்டது.



இது இந்த வங்கியில் மட்டும் தான் என்று பார்க்காமல், கொஞ்ச விரிவு படுத்திப் பாருங்கள்! அரசு, அதன் செயல்பாடுகள், அரசியல், அரசியல்வாதிகளுடைய குறுகிய புத்தி, இப்படி எல்லா வகையிலுமே இந்த தேசம் எப்படிப் பட்டவர்களுடைய கைகளில் சிக்கியிருக்கிறது, சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்!

இப்போது ஆரம்பத்தில் பார்த்த கதைக்கே மறுபடி வருவோம்!

மேலே இருந்தவருக்கு எப்படிக் கேட்க வேண்டும் என்பதில் தெளிவோ, ஞானமோ இல்லை! கீழே இருந்தவராவது, கொஞ்சம் எங்கே போக வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கலாமே! 

ஏன் அப்படி நடக்கவில்லை?

நெல்லைப் பயிரிடுவது மட்டும் போதாது! அவ்வப்போது களை எடுக்கவும் தெரிந்திருக்க வேண்டும்! தவறும் போது, களைகள் மட்டும் தான் மிஞ்சும்!
பொறுப்பு எல்லோருக்குமே இருக்கிறது,  நம்மிடமிருந்தே
மாற்றத்திற்கான முதல் அடி தொடங்குகிறது! 

தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்வதும், செயல் திறனை வளர்த்துக் கொள்வதும் ஐ ஐ எம் களில் சொல்லித் தரப்படுவது மட்டுமல்ல!
நம்மால் முடியும்! முதலில் எங்கெல்லாம் ஏமாந்துகொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு, ஏமாற்றுகிறவனுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது முதல் படி!

என்ன செய்யப்போகிறோம் ?



6 comments:

  1. அருமையான‌ க‌ட்டுரை சார். எம்ட‌ன் ப‌த்தி நான் ஆன‌ந்த‌ விக‌ட‌ன்ல‌ ப‌டிச்சிருக்கேன். அவ‌ர் ப‌த்தி நாவ‌ல் இருக்க‌ற‌து நீங்க‌ சொல்லி தான் என‌க்கு தெரியும். ப‌டிக்கிறேன். இது போல் இன்னும் ப‌ல‌ ப‌திவுக‌ள் போடுங்க‌ள்

    ReplyDelete
  2. Krishnamurthi Sir!

    Thanks for the note on my book.

    Regarding Banks, I remember one incident, which I put without any reservation here. Once Mr. Raghavan, the then CMD of Indian Bank, (during his tenure and I forgot the year) told in the 'Jaya TV's Kalai Malar interview' that ATMs were of no use, and have arrived in India to spoil the man-to-man relation, so the bankers will lose touch with his client, that may lead to lower level of deposits.

    But actually Time proved otherwise.

    Dhivakar

    ReplyDelete
  3. மகா!

    எஸ் எம் எஸ் எம்டன் என்பது ஒரு ஜெர்மானியப் போர்க்கப்பல். முதல் உலகப் போர் சமயத்தில், பிரிடிஷ்காரர்கள் 'எங்களுடைய சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை' என்று பீற்றிக் கொண்டிருந்ததைப் பொத்தல் போட்ட ஒரு நிகழ்வின் தொடக்கம். சென்னையிலும் வந்து குண்டு வீசிவிட்டுப் போய் விட்டது. குண்டு சென்னையை ஒன்றும் செய்யவில்லை! பிரிட்டிஷ் காலனியாதிக்கம் கேல்விக்குறியாக்கப்பட்டதும், பலவீனப்பட ஆரம்பித்ததும் "எம்டனுடைய சாதனை!". இன்றைக்கும் சென்னைத் தமிழில், நீ என்ன எம்டனா என்று கேட்டது நேற்றைய நாட்களின் வழக்குச் சொல்லாக நீடிக்கிறது.

    மேலே இருக்கிற புத்தக அறிமுகம், பதிவுகளின் ஒரு பகுதியாக அல்லாமல், பக்க வாட்டில் இருக்கும் பகுதிகளைப் போலவே தனியாக உருவாக்கப் பட்டது. எந்தப் பதிவைப் பார்த்தாலும் அது மேலே நிற்கும்.

    வருகிற முப்பது தொடங்கி சென்னையில் புத்தகச் சந்தை தொடங்குகிறதே! அங்கே திரு வி.திவாகர் எழுதிய புத்தகங்கள் கிடைக்கும். படித்துப் பார்த்துவிட்டு, முடிந்தால் உங்களுடைய விமரிசனங்களையும், ஒரு தனிப்பதிவாக எழுதுங்கள்.

    மேலாண்மைத் துறை நுழைவுத் தேர்வுகளுக்கான உதவிக் குறிப்புக்களாக உங்களுடைய பதிவையும் இன்னொரு தமிழ் வலைப் பதிவையும் பார்த்தேன். நுழைவுத்தேர்வுகளுக்கான உதவிக் குறிப்புக்கள் பயனுள்ளதாக வளர வாழ்த்துக்கள்.

    @ஸ்ரீராம்!

    குறளை விடக் கமென்ட் சுருக்கமாக......!
    படித் .....தேன் தரமா, இல்லையா? அதையாவது கோடி காட்டியிருந்தால் குரலுக்குக் கோனார் பொழிப்புரை, நோட்ஸ் தேடி அலைய வேண்டாமே!

    ReplyDelete
  4. திவாகர் சார்,

    இந்தியன் வங்கி சேர்மன் ராகவனை மட்டுமே குற்றம் சொல்லிப் பயனில்லை. இங்கே பொதுத்துறை வங்கிகளின் தலைமைப் பொறுப்பு ஏலத்தில் அதிக விலை கொடுப்பவர், அதிகம் கூஜா தூக்குபவர்களுக்கே கொடுக்கப் படுகிறது என்பது சிதம்பர ரகசியம் மாதிரி எல்லோருக்குமே தெரிந்த ரகசியம்! திரு.ராகவனுடைய பேட்டி வெளி வந்த சமயத்தில், ATM நிறுவுவது, பராமரிப்பது கொஞ்சம் காஸ்ட்லி. அந்த நேரத்தில், ஒரு பொதுத்துறை வங்கி கற்பனை செய்தே பார்க்க முடியாத தகவல் தொழில் நுட்பம் தேவைப் பட்ட காலம்.

    கோபாலனோடு நான் ஆடுவேனே என்ற மாதிரித் தன்னை எப்போதுமே கோபாலனாக நினைத்துக் கொண்டு விளையாடுவது மட்டுமே தொழிலாகத் தெரிந்து வைத்திருந்த ஒருவர் CMD ஆக இந்தியன் வங்கிக்கு வந்தபோது, ஒரு கோடம்பாக்கம் எக்ஸ்ட்ரா, ஒரு பாட்டில், வெள்ளி கத்திரிக்கோல், சௌகரியமான அறை என்று ஏற்பாடு செய்து கொடுத்து விட்டால் போதும்! மனிதன் ஓடோடி வந்து திறப்பு விழா நாயகனாகப் போஸ் கொடுத்து விட்டு, வங்கிக் கடன்களை அள்ளியிறைத்தார் என்று சொல்லப்பட்டதுண்டு.

    புதுத் தொழில் நுட்பம் வந்த பின்னாலும் கூட, அதைத் திறமையாகப் பயன்படுத்துவதில் பொதுத்துறை வங்கிகள் இன்றைக்கும் சற்றுப் பின்தங்கித்தான் இருக்கின்றன. வேலைசெய்பவர்களும், புதிய மாற்றங்களுக்குத் தயாராவதில் ஆரம்பத்தில் சுணக்கம் இருந்தது. முழுக்கத் தேர்ச்சியுள்ளவர்கள் என்று இன்றைக்கும் பெரும்பாலான பொதுத்துறை வங்கி ஊழியர்களைச் சொல்ல முடியாது.

    Core Banking என்பது முடிவெடுப்பதற்கு உதவியான தகவல்களை உள்ளடக்கியது. முழுமையான சேவை என்பது, விரைவாக முடிவெடுப்பதில் தான் என்ற நிலையில், முடிவெடுக்கத் தெரியாதவர்கள் கையில் தொழில்நுட்பம் இருந்து என்ன பயன், மாறுதல் வந்துவிடும்?

    ReplyDelete
  5. சுயதேடல் இல்லாத மனிதன் எவனும் இருக்கமுடியாது என்பது என் எண்ணம், ஆனால் அதை வெளிப்படுத்துவதில் தொடர்பு சிக்கல் இருக்கலாம்!

    பியூனாக இருந்தாலும், முதலாளியாக இருந்தாலும் அடுத்த படி தான் நிச்சய குறிக்கோள்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!