திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போனவன்....!

கென்னெடி அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற விழாவில்.. ஜாக்கி கென்னெடியுடன் பேசிக்கொண்டிருக்கும், கவிஞர் ஃபிராஸ்ட்

திருவிழாக்
கூட்டத்தில் வேடிக்கை பார்க்கிற ஆர்வத்தில், பராக்குப் பார்த்துக் கொண்டு திருவிழாவையே மறந்து போய் விடுவது போலத் தான் என்நிலைமையும் ஆகிப் போனது. திருவிழாக் கூட்டத்தில் பலதும் கலந்திருக்கும், அவைகளில் கவனம் வைத்தால் திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன பிள்ளை மாதிரித் தான் ஆகிப் போக வேண்டிவரும் என்பது தெரிந்தும், இந்த மாதத்தில் பெரும் பகுதிப்பதிவுகள், பராக்குப் பார்க்கிற பதிவுகளாகவே ஆனது.

இந்த மாதம் முதல் பதிவே "கேள்வி பிறந்தது அன்று" என்று புள்ளிராஜா வங்கியைத் தொட்டு, புள்ளிவிவரம் பற்றிப் பேசியதாலோ என்னவோ, புள்ளி விவரம் சொல்வதென்ன என்பதைப் பராக்குப் பார்க்கிற புத்தி வந்து ஒட்டிக் கொண்டது!

அப்புறம் என்ன, சர்க்கஸ் கோமாளி இரண்டு கைகளாலும் வரிசையாகப் பந்துகளைக் கீழே விழாமல் போட்டு விளையாடும் விளையாட்டு மாதிரி ஆகிப் போனதை, தொடர்ந்து இந்தப் பக்கங்களுக்கு வருகிற ஒன்றிரண்டு நண்பர்கள் அறிவார்கள்.

இப்போதைக்கு இது போதும்னு, தெளிவு வந்தப்பறமும், முட்டிக்கிறதுக்கு எதுக்காக போதி மரத்தைத் தேடணும்?

அப்புறம் என்ன, ட்ராக் மாறிப் போனதைச் சரி செய்ய வேண்டியது தானே?

தெய்வம் என்றால் அது தெய்வம் என்ற இரண்டாவது பதிவிலேயே ஒரு கருத்து, அதன் தாக்கங்கள், அப்புறம் விளைவு இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருந்ததை, இப்போது எனக்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

"இது அனைத்துமே புரிந்து கொள்ளாமையினால் முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கும் பிரச்சனைகள். இதை களைவதற்கே 'முழுமைநோக்கு'. தருக்கத்தின் தேவையும் இதற்கே. வகைப்படுத்துதலும் இதற்கே. இன்று பொருளியலில் இருந்து கலைஇலக்கியம் வரை இருக்கும் மனக்காழ்ப்புக்களுக்கு புரிந்துகொள்ளாமையே முக்கிய காரணம்."

இதை எழுதியது அரவிந்த் (என்கிற பராகா) திரு அருள்செல்வன் கந்தசுவாமியுடைய பதிவில் எழுதியிருந்த பின்னூட்டத்தின் ஒரு பகுதி.
ரிச்சர்ட் டாகின்சைப் பற்றி அவர் எழுதிய புத்தகத்தைப் பற்றி ஒரு விமரிசனப் பார்வையை எழுதிக் கொண்டிருந்த தொடரில், மேற்கோளாகக் காண்பித்து, 'அங்கே ஒரு செழுமையான விவாதம் நடந்திருக்கிறது, இப்படித் தொடர்ந்து சிந்திக்கும் போதுதான் Thesis->Anti-thesis-->Synthesis என்பதாக, பாலின் சாரமாக வெண்ணெயை கடைந்தெடுக்கிற மாதிரி, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ள முடியும்' என்பதையும் அந்தப் பதிவைச் சுட்டி எழுதியிருந்தேன்.

பாடங்களில் படித்தது தான், இல்லையென்றால் யார் வந்து கம்பனையும் ஷெல்லியையும், கீட்ஸ், ஃபிராஸ்ட், ஷேக்ஸ்பியர் போன்ற ஆங்கிலக் கவிஞர்களைத் தேடிப் படித்திருக்கப் போகிறார்கள்? அப்படி படித்த ஒரு ஆங்கிலக் கவிதை, ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் ஃபார்வர்ட் மெயிலில் நிறைய ரவுண்டுவரும், இப்போதும் வந்துகொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை, ராபெர்ட் லீ ஃபிராஸ்ட் 1916 இல் எழுதிய கவிதையை R Y தேஷ் பாண்டே அவர்களின் வலைப் பக்கங்களில், இன்றைக்கு மறுபடி படித்தேன்.

Two roads diverged in a yellow wood,

And sorry I could not travel both

And be one traveler, long I stood

And looked down one as far as I could

To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,

And having perhaps the better claim,

Because it was grassy and wanted wear;

Though as for that the passing there

Had worn them really about the same,

And both that morning equally lay

In leaves no step had trodden black.

Oh, I kept the first for another day!

Yet knowing how way leads on to way,

I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh

Somewhere ages and ages hence:

Two roads diverged in a wood, and I—

I took the one less traveled by,

And that has made all the difference.

ராபர்ட் லீ பிராஸ்ட், 1916

http://www.youtube.com/watch?v=SnWU29o2xwA&NR=1

திருவிழாக் கூட்டத்தில் தொலைந்துபோனவன்....! நல்லவேளை, திருவிழாஇன்னமும் முடிந்துவிடவில்லை!


போதி மரம் எங்கேன்னு சொல்லுங்க! அங்கே வந்து முட்டிக்கறோம்!


இட்லி வடையில் வந்திருந்தது மாதிரி இதுவும் கூட அந்த 'வரும்' ஆனா...'வராது' ரகப் பின்விளைவுதான்! பின் விளைவுன்னா சும்மாவா?

படித்துவிட்டு, கண்ணில் தென்படுகிற எதிலாவது தலையை முட்டி மோதிக்கொள்ள விரும்புகிறவர்கள், தங்கள் சொந்தப் பொறுப்பிலேயே, செய்துகொள்ளும்படித் தாழ்மையோடு, திமிரோடு, கொழுப்போடு, அப்புறம் இதோடு அதோடு என்று ஏகப்பட்ட தோடுகளோடு உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

கல்லுளிமங்கன்னு கேள்விப்பட்டிருப்போம், ஆனா நேர்ல பாத்திருக்க மாட்டோம். அந்தக் குறையப் போக்கவும் ஒருத்தர் வந்துட்டாருய்யா...வந்துட்டாரு!
வேற யாரு? சாரு தான்!
இவருக்கு இருக்கிற தாக்குப் பிடிக்கிற சக்தி இருக்குதே, சும்மாப் போட்டுத் தாக்கு..சும்மாவே போட்டுத்தாக்கு ரகம் என்பது, தமிழ் இணைய வாசகர்களின் ஒரே சோகம்!

பாம்பும் கீரியும் சண்டை போடப்போகுது பாரு,,எல்லாரும் ஜோராக்க ஒரு தபா கையத் தட்டு! இப்படி வித்தை காட்டுகிறவன் சொல்றதைக் கேட்டு, நிறையத் தபா, கையத் தட்டியிருப்போம்! பாம்பு-கீரிப்பிள்ளை ரெண்டுமே வெளியிலேயே வராது..கையத்தட்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்!

இப்பல்லாம் நிறைய காமெடிச் சானல்கள் வந்திருக்கிற மாதிரியே, இணையத்திலும் காமெடி தர்பார் எதுவும் காணோமே என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்காக, அந்தக் குறையைப் போக்க சாரு கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டது மாதிரியே, சமீபத்திய நிகழ்வுகள், தகவல்கள் பேஜார் படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதுக்கெல்லாம் பேஜாராவாங்கோ, இன்னா இது குயந்தப்பிள்ள கணக்கான்னு கேக்குற தைரிய சாலிகள், சாருவோட இந்த வார்த்தைகளைப் படித்துப் பார்க்கவும்......பின்விளைவுகளுக்குப் படிப்பவர்களே பொறுப்பு!

"போகட்டும். இப்போது ஏழைக் குழந்தைகளைப் பிடித்துத் தரச் சொல்லுகிறீர்கள். இன்னும் அந்த மாதிரி பிள்ளை பிடிக்கும் வேலையில் நான் இறங்கவில்லை. சென்னையில் அல்லது தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் திரும்பினாலும் ஏழைக் குழந்தைகளுக்குப் பஞ்சமில்லை. ஏதோ நான் படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளே இல்லாத ஸ்விட்சர்லாந்தில் வாழ்வது போல் ஏழைக் குழந்தைகளைத் தெரியுமா என்று என்னைக் கேட்டிருக்கிறீர்களே; கொழுப்புதானே?

நானே ஒரு ஏழை எழுத்தாளன்; அடுத்த வேளைக் கஞ்சிக்கே என் வாசகர்களை எதிர்பார்க்கும் ஒரு அன்றாடங் காய்ச்சி. நான் போய் ஏழைக் குழந்தைகளைத் தேட வேண்டுமாக்கும்? இதற்குப் பெயர் தமிழ்க் கொழுப்பா? குவைத் கொழுப்பா? "

இது என்ன மாதிரிக் கொழுப்புன்னு தெரியாம பேஜாராவுரவுங்கோ, அடுத்த கொழுப்புக்குத் தயாராவுங்கோ!
"குஜராத் கலவரத்தின் போது ஒரு முஸ்லீம் தன்னைக் கொல்ல வருபவர்களைப் பார்த்துக் கண்ணீர் மல்க தன் இரு கைகளையும் கூப்பிக் கெஞ்சுவார் இல்லையா; அதேபோல் அந்த ஓரினச் சேர்க்கை நண்பர் எழுந்து நின்று கைகளைக் கூப்பிக் கொண்டு “நான் இப்படி ஆணும் இல்லாமல், பெண்ணும் இல்லாமல் பிறந்தது என் குற்றமா, கடவுளின் குற்றமா? உங்கள் வீட்டில் உங்கள் சகோதரனோ சகோதரியோ என்னைப் போல் பிறந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ” என்றெல்லாம் என்னென்னவோ எடுத்துக் கூறிக் கெஞ்சினார்."

"இந்தக் கோபமும் வன்மமும்தான் மிகப் பெரிய படுகொலையாக மாறுகிறது. இதே மனோபாவம்தான் என்னை கக்கூஸ் சந்து என்று எழுதிய உயர்சாதிக் காரரிடமும், எனக்கும் ஜெயமோகனுக்கும் கடிதம் எழுதியவரிடமும் காணப்படுகிறது. மேலும் ஒரு தகவல், என்னை கக்கூஸ் சந்து என்று எழுதியவர் ஐ.ஐ.டி.யில் கணிதத்தில் தங்க மெடல் வாங்கியவர்; பிராமணர்."

"ஆக, தமிழின் மிக முக்கியமான மூத்த எழுத்தாளர் ஒருவரால் இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு நாவலை எழுதிய எழுத்தாளனை ஒரு ஆள் எப்படி அணுக வேண்டும்? ஒரு பணிவு வேண்டாமா? பணிவு இல்லாதது மட்டும் அல்ல; அந்த எழுத்தாளனை அவமானப்படுத்தியும் இருக்கிறார் மேற்படி நபர். அதனால்தான் இதில் நான் தலையிட வேண்டி வந்தது. இப்போது பாருங்கள்; அவருடைய உண்மையான முக விகாரம் தெரிந்து விட்டது. “நீ நட்சத்திர ஓட்டலில் ஓசியில் தண்ணி அடிக்க்கும் பாரஸைட்தானே? ” என்று என்னைப் பார்த்துக் கேட்கிறார்."

சாரு நிவேதிதா! மனுஷன் என்ன பண்ணினாலும், எத்தனை பட்டாலும் ஓய மாட்டார் போலிருக்கிறது! இணையத்தில் ஆதித்யா, சிரிப்பொலி மாதிரிக் காமெடிச் சானல்கள் இல்லையே என்ற குறை இல்லாமல், சாருவும் ஜெயமோகனும் அதிரடியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், சமீப காலமாகச் சாருவின் காமெடிக் கொடுமை கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

ஏதோ இணையத்தில் வந்தோமா, எதையாவது படித்தோமா, ஏதோ பின்னூட்டம் போட்டோமா என்று சாதுவாகவே இருந்துவிட்டுப்போய் விடலாம்தான்! அப்படியெல்லாம், பதிவுலகமும், படிக்க வருகிறவர்களும் அமைதியாக இருந்துவிட்டுபோய் விட்டால், அப்புறம் காமெடி ஷோ நடத்துவது எப்படி? கேண்டிட் காமெரா என்ற பெயரில் லூசுத்தனமாக எதையாவது செய்து, அதையே காமெடி ஷோவாக மாற்றிக் காட்டுகிற தொலைகாட்சி சானல்களெல்லாம், சாரு சமீப காலமாக அவரது வலைப் பக்கங்களில் காட்டுகிற வித்தைகளுக்கு முன்னால் பிச்சை வாங்க வேண்டும்! அப்படி ஒரு வக்கிரம்! அப்படி ஒரு கொடூரமான எழுத்து! இதையும் இலக்கியம் என்று கொண்டாடுகிற சாக்கில், சாருவை இன்னமும் உசுப்பேத்தி விட ஒரு கும்பல்!

ஒரு சாம்பிளுக்கு,

அன்புடைய சாரு ,

நாம்தான் சிறிது மென்டல்; பாவம் என் மனைவி என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். நம்மை விட பல மடங்கு வன்மமும் , குரோதமும் , மனக்குஷ்டமும் உடைய ஒரு மென்டலை அறிமுகப்படுத்தியதுக்கு மிக்க நன்றி. இந்த லூஸு படித்ததாகவும் கேட்டதாகவும் சொன்ன மேதைகள் இது எழுதியதை கேட்டால்.. பாவம்.. நல்ல வேளை யாரும் உயிரோடு இல்லை. "ஜும்ப்பாவைக் குறிப்பிட்டிருந்தேனே; நாய்ப்பாலை குறிப்பிட்டிருந்தேனே - இது கூட தெரியாதா" என்று இந்த மென்டல் கேட்கலாம். நான் சொன்னது மேதைகள். ஜும்ப்பா போன்ற லைட் வெயிட்டை ப்ளேட்டோவுடன் வைத்திருப்பதிலேயே இதன் அறிவின்மை தெரிகிறது.

ஆங்கில மொழிக் கல்வி எப்படி மற்ற பண்பாடுகளைச் சீரழிக்கிறது என்பதற்கு இந்த மென்டல் மிக முக்கியமான எடுத்தக்காட்டு. இதன் மெயில்களை அச்சிட்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி அதை வைத்து ஒரு பாடத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டுகிறேன்.

பி.கு - இது திரும்ப எழுத எழுத அப்படியே ஏற்றி விடுங்கள் சாரு. படு டமாஸா இருக்கு.

அன்புடன்

சிவா – ஹ்யூஸ்டன்


இத்தனைநாள், இந்தமாதிரி உசுப்பேத்தி விடுகிறவர்களால் தான் சாரு இப்படியெல்லாம் எழுதுகிறார், உண்மையில் அவர் மென்மையானவர், ஜெயமோகனைப் போல வேஷம் போடத் தெரிந்தவரல்ல என்ற சாருவின் ஆதரவாளர்கள் சொன்ன வாதத்தில் உண்மை ஓரளவுக்கேனும் இருக்கும் என்று நம்பினதுண்டு.. இந்த மாதிரி "ஆதரவாளர்கள்" சாருவை ஒருவிதமான பைத்தியக்காரத்தனத்தின் உச்ச கட்டத்திற்குத் தள்ளிவிடாமல், விட மாட்டார்கள் என்று கூட ஒரு நண்பர் என்னிடம் சொன்னதுண்டு.

சாரு பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்திற்குப் போவது ஒருபக்கம் கிடக்கட்டும், படிக்கிற அத்தனை பேரையுமே ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார் போலிருக்கிறதே? இவரது படைப்புக்களைப் படிக்காதவர்கள் கூட இணையத்திற்கு வந்தால் இப்படி வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறதே,
"நான் ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுதியிருப்பேன். அதைப் பற்றியெல்லாம் சொல்வதற்கு உங்களிடம் ஒரு வார்த்தை உண்டா? ராஸ லீலா 700 பக்கம். காம ரூப கதைகள் 350 பக்கம். இதையெல்லாம் பற்றி உங்கள் கருத்து என்ன? இதையெல்லாம் விட்டு விட்டு ஏதோ தெருச் சண்டையை வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துடன் வேடிக்கை பார்த்துக் களித்து விட்டு என்னங்கடா எனக்கு அறிவுரை?"

இந்தக் கொடுமையை முந்தின பதிவொன்றில் பார்த்திருக்கிறோம்.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்கே இன்னும் ரெண்டு ஜிங்குச்சான் , ஜிங்குச்சான்னு ஆடிட்டிருக்கே, என்னத்தைச் சொல்ல?

ஐயா, ப்ளீச்சிங் பௌடர் ஐயா, நீங்க கண்டுபிடிச்ச போதி மரம் எங்கேன்னு சொல்லுங்க! அங்கே வந்து முட்டிக்கறோம்!

அது மட்டும் தான் நம்மால முடியும்!

'

ஒரு தீர்ப்பு, முன்ஜாக்கிரதை முத்தண்ணா, புத்தகத்தின் தலைப்பு!


இது நேற்று தினமணியில் வெளியான செய்தி...

சென்னை, ஜூலை 27: "குடியரசு' இதழில் வெளியான பெரியாரின் எழுத்துகளை, "பெரியார் திராவிடர் கழகம்' புத்தகமாக வெளியிட தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுவை விசாரித்த பிறகு நீதிபதி அளித்த தீர்ப்பு:

பெரியார் "குடியரசு' இதழில் மதம் மற்றும் சமூக, பொருளாதார விஷயங்கள் குறித்து நிறைய எழுதியுள்ளார்.
இந்தப் படைப்புகளுக்கு பெரியார்தான் உரிமையாளர் ஆவார். எனவே, இந்த எழுத்துகளை மீண்டும் பதிப்பிப்பதற்கான உரிமை முழுவதும் பெரியாரிடமே உள்ளது.
எழுத்துகளுக்கான உரிமை அறிவுசார் சொத்துரிமையின்கீழ் வருகிறது. எனவே, இந்த உரிமையை மனுதாரரிடம் பெரியார் அளித்ததற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
பெரியார் தன் படைப்புகளுக்கான பதிப்புரிமையை கி. வீரமணியிடம் அளித்ததாக எந்த ஆவணங்களிலும் குறிப்பிடப்படவில்லை.
இதுதொடர்பாக, பெரியாரின் உயிலிலோ அல்லது வேறு ஆவணங்களிலோ எந்தக் குறிப்பும் இல்லை.
பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தன்னிடம் உள்ளது என்பதை மனுதாரர் நிரூபிக்கத் தவறியதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
பெரியாரின் எண்ணங்கள் மக்களைச் சென்றடைய, "குடியரசு' வின் பல இதழ்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பெரியாரின் 130-வது ஆண்டு ஆகும். இந்நிலையில், அவரது எழுத்துக்கான பதிப்புரிமை தொடர்பான சட்ட விவாதம் வேதனையைத் தருகிறது என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு ஒருபுறம் இருக்கட்டும், தீர்ப்பைப் பற்றிய இந்த செய்தியை வாசித்தவர்கள் , படித்துவிட்டுப் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் இந்தத் தீர்ப்புக்கள் இன்னமும் கூர்மையாக, இருக்கிறது!

"பெரியார் பெயரை பஞ்சத்துக்கு பயன்படுத்தும் வீரமணியையும், பரம்பரைக்காக அவ்வப்போது பயன்படுத்தும் கருணாநிதியையும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பினால் தான் திராவிட இயக்கமும் தமிழ் நாடும் உருப்படும்."
இது மலேசியாவிலிருந்து டாக்டர் சொக்கலிங்கம் கருப்பணன் சொன்ன கருத்து

"வீரமணி கும்பலிடமிருந்து பெரியாருக்கு விடுதலை! இனிமேலாவது நாகரிகமாக, பெரியார் மக்களின் சொத்து, யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் என்று சட்டவிரோத குத்தகை வீரமணியும், நாட்டுடைமையாக்க வேண்டிய தேவையேயில்லை என்று கூறி `நாகரிகமாக' நாட்டுடைமையாக்கிக் கருணாநிதியும் அறிவிக்க வேண்டும்!"

இது நந்தன் என்பவர் சொன்ன கருத்து.

“Because of this type of politicians and half bugged literates, we and ous siblings will live only with hatred, without any development, not able to cross the border of Tamilnadu, ruin ourself anid fight among ourself by the caste ridden politics of Pillais and Mudalis and Naidus. I am setled in US. I am a software engineer from a backward community, from a backward village ruled by caste leaders. In my village I have seen no Avaal or parpanar. But I have seen the caste leaders who talk on Periyar gave me tea in a plastic cup. --...................But who will save Tamil Inam misguided by Pillai, Mudali and Naidus.”

இது தமிழ் மறவன் என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து ஒருவர் சொன்னது, ஒன்றல்ல நான்கைந்து பின்னூட்டம் எழுதியிருக்கிறார். இப்படிப் பலரும் பெரியாரைப் பற்றிஎழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தொடர்புடைய, படித்தால் கொஞ்சம் விஷயங்களையும் தெரிந்துகொள்கிரமாதிரி இருக்கும்இந்தப் பக்கத்தையும் தவறாமல் படித்து விடுங்கள்!

இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து, இங்கே ஒருவர் 'வீரமணி ஐயாவின்பகுத்தறிவு எத்தன்மையது ? தமிழ் ஓவியா ஐயா விளக்க வேண்டும் !' என்று கேட்டிருக்கிறார்.அவரும் வந்து, இங்கே படித்துப் பாருங்கள் என்று ஒரு லிஸ்டும் கொடுத்திருக்கிறார்!

கிழக்கு பத்ரியும் தன பங்குக்கு இதைப் பற்றி எழுதியிருக்கிறார். ஒரு பதிப்பாளர் என்ற முறையில் காப்புரிமை பற்றி எழுதியிருந்தால், அது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால்,

"ஆனாலும் knee-jerk எதிர்வினை ஒன்றை ஆற்றவேண்டும் என்ற ஆவலால் அவசர அவசரமாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.

பெரியாரின் எழுத்துகள் பரவலாக அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த பற்று உண்டு என்பதை முதற்கண் disclaimer ஆகச் சொல்லிக்கொள்கிறேன்."
என்பதையும் சேர்த்துச் சொல்லியிருப்பதால், முன்ஜாக்கிரதை முத்தண்ணாவை நினைவு படுத்திக் கொள்ள வேண்டி வந்தது.

கூடிய சீக்கிரமே, இந்த வழக்கைப் பற்றியும், தீர்ப்பைப் பற்றியும் சுடச் சுட அலசி, இன்றைக்கோ, நாளைக்கோ ஒரு புத்தகம் வெளியிடும் எண்ணம் இருக்கிறதா, பத்ரி?!

செய்தி எதுவானாலும், அதற்குச் சூடான தலைப்பு வைத்துப் புத்தகமாக்கி சுடச் சுட விற்பனை செய்கிற சாமர்த்தியத்துக்காக, 'கிழக்கு' பத்ரியைப் பாராட்டியே ஆக வேண்டும்!

இப்போது என்னைக் குடைந்துகொண்டிருக்கும் ஒரே கேள்வி, கிழக்கு வழக்கம் போலவே இதற்கும் ஒரு புத்தகத்தை ரெடி செய்தால், வைக்கப் போகும் சூடான தலைப்பு என்னவாக இருக்கும்?

உங்களுக்குத் தெரியுமா, தெரிந்தால் எனக்கு மட்டுமாவது சொல்லுங்களேன்!

"One of the greatest comforts of religion is that you can get hold of God sometimes and give him a satisfactory beating. People mock at the folly of savages who beat their gods when their prayers are not answered; but it is the mockers who are the fools and the savages".

Sri Aurobindo
Thoughts and Aphorisms - 60

இப்போதைக்கு இது போதும்!


"சாரு-ஜெமொவைப்பற்றியே எழுதிக் கொண்டிருந்தது, நகைச்சு வையுற மாதிரிஆயிடுச்சு போல!" என்று சொல்லிக் கொண்டே நண்பர் உள்ளே வந்தார். அவரே விஷயத்தைக் கிண்டி கிளறட்டும் என்று அமைதியாக இருந்தேன்.

"நீ ஒண்ணப் புரிஞ்சுக்காமலேயே எழுதினதுல தான் தப்பு இருந்தது, விஷயத்தில இல்ல, அதாவது ஒனக்குத் தெரியுமா?" என்று கேள்வியைக் கொக்கி போட்டு விட்டு, கையில் இருந்த சில காகிதங்களை உன்னிப்பாகக் கவனிக்கிற மாதிரி, அதே நேரம் நான் என்ன நினைக்கிறேன் என்பதை என் முகத்திலிருந்து கண்டு பிடிக்கிற மாதிரி,ஒரு கோணத்தில் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார். எதைப் புரிந்து கொள்ளாமல் எழுதினேன் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தாலும், கொக்கியில் சிக்கிக் கொண்டால், அடுத்ததடுத்த கொக்கிகளுள் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை மணி உள்ளே அடித்ததால், ஏதோசொல்ல வந்தவன், அப்படியே நிறுத்திக் கொண்டேன்.

நண்பர், இதற்கெல்லாம் அசருகிறவர் இல்லை. புள்ளிராஜா வங்கியில், பணியாற்றியவர், புள்ளி விவரம் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி! புள்ளி ராஜாவுக்குப் புள்ளி வருமான்னு கேட்டா என்னென்ன கலர்ல எத்தனை எத்தனை புள்ளி வரும்னு விவரத்தோட சொல்றவர். புள்ளிராஜா வங்கியில, இவர மாதிரிப் புள்ளி வச்சுக் கோலம் போடறவங்களை நிறையவே பாத்ததுனால, நண்பர் ஏதோ புள்ளிவிவரம், கோலமெல்லாம் வரஞ்சு வச்சுத் தான் வந்திருக்கணும்னு தெரிஞ்சது. விதி யாரை விட்டது?!

"வலைப்பதிவு எழுதறவங்க எல்லாம் ஏதோ தெரிஞ்சுக்கணும்னு தேடி வர்றவங்க இல்ல. ச்சும்மா, டைம் பாஸ் பண்றதுக்காக வர்றவங்க, அப்படியே நல்ல மூடுல இருந்தால், விஷயத்தைத் தெரிஞ்சுக்கவும் கொஞ்சம் படிப்பாங்க. அவ்வளவு தான்! இது தெரியாம, நீ என்னமோ, பெரிசா கருத்துக் களம், விவாதக் களம்னு சொன்னாக்க, யார் படிப்பாங்க?"

சரி, இன்னிக்குப் புள்ளி வச்சுக் கோலம் போடாமப் போக மாட்டார்னு நல்லாவே தெரிஞ்சது. பரிதாபமாக, முகத்தை வைத்துக் கொள்ள முயன்றதில், ஒரு காப்பங்கு வடிவேலு ரேஞ்சுக்குத்தான் அவ்வ..வ்வ்வ்வ்..வ்வ்வ்வ்..வ்னு பம்ம முடிஞ்சது. பம்மினாலும் எங்க விடறாங்க?

லாப்டாப்பில விறுவிறுவென என் பக்கங்களைப் புரட்டினார். ஜாதகம் பாக்கறவுங்க, கை விரலை நீட்டி, மடக்கி வாய்க்குள்ளாரையே கணக்குப் போடற மாதிரி கொஞ்சம் பந்தாக் காண்பித்துக்கொண்டிருந்தார். சரி, இன்னிக்குக் கிளிஞ்சது கிருஷ்ணகிரின்னு , அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ரொம்ப நேரம் காக்க வைத்தால், வர்ர்ட்டான்னு டாட்டா சொல்லிட்டுப் போயிடுவேன்னு நண்பருக்குப் புரிந்திருக்க வேண்டும். புள்ளி விவரங்களை, அள்ளித் தெளிக்க ஆரம்பித்தார். அப்படித் தெளிச்சதுல இருந்து கொஞ்சம் இங்கேயும்:

"அடிக்கடி வாசிப்பு அனுபவத்தைத் தொட்டு எழுதியிருக்கே இல்லியா? லிடரேச்சர் கிளாசா நடக்குது இங்க?

இணையத்துல வர்றவங்க பெரும்பாலும் வாசிக்கறதுக்காக்ன்னு வரல, பொழுது போக்கத் தான் வர்றாங்க! உண்மையான வாசிப்பு அனுபவம், இன்னும் கூடப் புத்தகங்களில் தான் கிடைக்கிறது. பொழுதுபோக்க இணையத்துக்கு வர்றவங்க, சுவாரசியமா இருந்தா அங்கே இங்கேன்னு கொஞ்சம் வாசிக்கவும் செய்யறாங்கங்கறது உண்மைதான், ஆனாலும் இன்னும் பரவலாகவில்லை."

நான்: அது உண்மைதான்.

"நம்ம தமிழ் வாத்தியாரை ஞாபகம் இருக்கா? கட்டுரை எழுதுன்ற கேள்விக்கு மாஞ்சு மாஞ்சு பதில் எழுதியிருப்போம்..பாவி வாத்தியான் விரக்கடையால அளந்து மார்க் போடுவாரே, அது மாதிரித் தான் இங்கயும், ஆனாக்க அப்படியே உல்டா! நீ எழுதற அத்தனை விஷயத்தையும் நீ ஒத்தன் மட்டும் தான் படிக்கோணும். மேலோட்டமா, பதிவைப் பாப்பாங்க, இண்டரஸ்ட் இருந்தாக்கக் கொஞ்சம் படிப்பாங்க. அத மொதல்ல ஞாபகம் வச்சுக்கோணும்."

நான்: உண்மை, உண்மை! இதைத் தான் நானும் ஒரு பதிவுல, கூத்துக்கட்டுகிறவன் எப்படி ஆடியன்சை இழுத்துப் பிடிச்சு வைப்பாங்கன்னு சொல்லியிருந்தேனே!

"சொல்லியிருந்தா மட்டும் போதுமா? அதே டெக்னிக் பதிவிடும் போது இருக்க வேண்டாமா?

படிக்க வர்றவங்க பெரும்பாலும் 600 வார்த்தைகளுக்கு மேல இருந்தா, அல்லது நீளமா இருந்தா, அப்பாலிக்காப் பாத்துக்கலாம்னு போயிடுவாங்க! கண்ணுல படற வரிகள் கொஞ்சம் இழுத்துப் பிடிச்சு வச்சாத்தான், கொஞ்சமாச்சும் படிப்பாங்க!

அப்படிப் படிக்கிரவங்களுமே கூட, முழுசாப் படிக்கிறதில்ல. அதிக பட்சம் அறுபது சதவீதத்தைத் தான் படிக்கறாங்க.அப்படிப்படிக்கிறதுலயுமே எவ்வளவு புரிஞ்சுப்பாங்க, தெரிஞ்சுப்பாங்கங்கிறது இன்னொரு ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரித்தான்! செல்லுபடியாகுமான்னு தெரியற வரைக்கும் சஸ்பென்ஸ் தான்"

நான்: நீ சொல்வது எனக்குக் கொஞ்சம் புரிகிறது!

"இதத்தான் சொன்னேன்! கிட்டத்தட்ட ஆறு வருஷமா ப்ளோக் எழுதினவன் நீ. ஆனாலும், இப்பத் தான் கொஞ்சம் கொஞ்சமாப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கே, இல்லையா?"

நான்: நான் பதிவிட ஆரம்பித்த சூழ்நிலையே வேறு! இதை ஒரு டயரிக் குறிப்பு மாதிரித் தான் ஆரம்பித்தேன். என்னுடைய டயரி என்ற அளவுக்கு மேல், வாசகர்கள் என்ற அளவில் யோசித்ததே இல்லை.

"இப்பத்தான் சாக்ரடீஸ் சொன்னமாதிரி 'உன்னையே நீ அறிவாய்' கட்டத்திற்கு வந்திருக்க நண்பா. திவுலகத்திற்கு வர்ற எல்லாருமே, இப்படித்தான் ஆரம்பிக்கிறாங்க! தடுமாறுவதும் கூட இந்தக் கட்டத்துல தான்! தன்னை எப்படி அடையாளம் காட்டிக்கிறது என்பதில் தடுமாற்றம்! தன்னுடைய உண்மையான தன்மை, அடையாளத்தை அறியாமலே இருப்பதும் இன்னொரு தடுமாற்றம்!

மொதல்ல, இந்தப் பரந்த பூமியில நானும் இருக்கேன்னு மத்தவங்களுக்கு சொல்ல ஆரம்பிக்கிற முயற்சி தான். என்னை அடையாளம் காட்டிக்க, என்னோட உணர்வுகளைப் பகிர்ந்துக்கன்னு ஆரம்பம் தான் எழுத்து. அது நீ உயிரோட்டத்தோடு, உணர்வோடு இருப்பதற்கு அடையாளம் அவ்வளவுதான்."

நான்: ம்ம்ம்..மேல சொல்லு!

"இப்படித் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள, தன்னோட உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கிற ஒரு முயற்சி, ஒரு தெளிவான பார்வையோ, நோக்கமோ இல்லாதனால, சீக்கிரமே நீர்த்துப் போகவோ, தடம் மாறவோ செய்கிறது. திருவிழாக் கூட்டத்துல தொலைஞ்சு போன பிள்ளை மாதிரி, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள வருபவன், இங்கே பார்க்கிற ஏகப்பட்ட அடையாளங்களைப் பார்த்துக் குழம்பி தன்னுடைய அடையாளம் என்ன என்பதிலேயே தடுமாறுகிற அனுபவமும் கூடக் கிடைக்கும்."

நான்: ஐயா! புள்ளி விவர ராசா! நான் பாட்டுக்கு ஏதோ எழுதி, எதை எதையோ படித்துக் கொண்டிருக்கிறேன். நீ என்னை ஏதோ ஒரு திருவிழாவில் தொலைத்துவிட்டுத் தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக் கொண்டு குழப்புகிற மாதிரி இருக்கிறது.

"குழப்பம் வருவது, தெளிதலுக்கான முதல் படி"

நான்: இப்படியே பேசிக்கிட்டிருந்தா, அடி தான் கிடைக்கும்!

"படிக்க வர்றவங்க ரொம்பத் தெளிவா இருக்காங்க நண்பா! நான் பள்ளிக்கூடத்திலேயே கட் அடிச்சு சைட் அடிக்கப் போனவன், இங்க நெட்ல ஏதோ கொஞ்சம் பொழுது போக்கலாம்னு வந்தா இங்கேயும் வந்து இம்சையை கூட்டுனா எப்பூடீன்னு எச்சரிக்கையாத் தான் இருக்காங்க!"

நான்: இதனால், புள்ளி விவர ராசா, சொல்ல வருவது..?

"யாருக்காக எழுதுகிறோம் என்பதை விட , என்ன எழுதுகிறோம் என்பதில், எவ்வளவு எழுதுகிறோம் என்பதில் தெளிவாக இரு."

"இப்போதைக்கு இது போதும்!"


கத்தியைத் தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு!


தாங்கள் பணிபுரியும் வங்கியைப் பற்றி, ஒரு பொது ஊடகத்தில் எழுதியதற்காக இரண்டு ஊழியர்களை, பாண்டியன் கிராம வங்கி சென்ற 17 ஆம் தேதி தற்காலிகப் பணி நீக்கம் செய்திருப்பதைக் குறிப்பிட்டு, திரு மாதவராஜ் எழுதியிருந்ததை இரண்டு நாட்களுக்கு முன்னாள் மேற்கோள் காட்டியிருந்தேன். நேற்றைக்குமாதவராஜின் வலைப்பக்கங்களில் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்று "தர்மம் மறுபடியும் வெல்லும்" என்ற பதிவில், அந்த இரண்டு ஊழியர்களும், பணியில் திரும்பச் சேர்ந்ததைப் பற்றிய தகவலையும் பார்த்தேன்.

மகிழ்ச்சி!

இதே மாதிரி, சூளைமேடு சரவணா மேன்ஷனில் குடிநீரில் கழிவுநீரும் கலந்து ஒன்பது மாதங்களுக்கும் மேலாக அவதிப்படும் சக மனிதர்களுக்கும் இதே மாதிரி "தர்மம் மறுபடியும் வென்றதாக" செய்தி, வலைப்பதிவு இப்படி எதையாவது பார்க்க முடிந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாயிருந்திருக்கும்? அது என்ன மாதவராஜ் சொல்லும் தர்மம், இப்படி selective ஆக மட்டும் ஜெயித்துக் கொண்டிருக்கிறது? ஏன் ? ஏன் ?

ஆனால், நடைமுறைவாழ்க்கையில் இப்படியெல்லாம் மகிழ்ந்து கொண்டிருப்பதற்காக, தர்மங்கள் எப்போதுமே வென்று கொண்டிருப்பதில்லையே என்ற ஆதங்கத்தில் தான் அந்தப் பதிவின் தலைப்பே, "யாருக்கும் வெட்கமில்லை, அட எனக்கும் வெட்கம் இல்லை, அதனால் பதிவு எழுதுகிறேன்!" என்று இருந்தது.செய்தித் தாளில் வந்த செய்தியையே மனுவாக ஏற்றுக் கொண்டு விசாரிக்க, சில நேரங்களில் உயர்நீதிமன்றம் உத்தரவிடுவதும் உண்டு. அப்படி வரும் செய்திகளை எல்லாம் படித்து விட்டு, அதே மாதிரி இதில் நடக்கும், அதில் நடக்கும் என்று எதிர்பார்த்தால், மிஞ்சுவது வெறும் ஏமாற்றம் தான்.

"சங்கம் வைத்துக் கொடி பிடித்துக் கோஷம் எழுப்பாமலேயே, இணையம் வழியாக, திரு ரமேஷ் சதாசிவம் ஒரு புதுமையான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்."

இந்த மாதிரிச் சின்னச் சின்ன விஷயங்களில் கூட "தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக ஒவ்வொரு சம்பவத்திலும் நான் அவதரிக்கிறேன்" என்று கண்ணன் மறுபடி வந்து ஒரு புதிய கீதை சொன்ன பிறகு தான் தர்மம் ஜெயிக்குமோ?

உண்மையில், அந்தப் பதிவை எழுதும் நேரம், பதிவர்களுடைய பொறுப்புக்கள், பின்விளைவுகளைப் பற்றிய ஞானம் இவற்றையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்று தான் ஆரம்பித்தேன். ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்த பழைய வாசனையினால், ஒரு வருத்தப் பட வேண்டிய விஷயம், திசை மாறிப்போய் விடக் கூடாதே என்ற எண்ணத்தினால் தான், அதிக அழுத்தம் கொடுத்தும், மேலதிக விவரங்களுடனும் எழுதவில்லை.

இப்போது பிரச்சினை தீர்ந்து போய்விட்ட படியால், பேசலாம் அல்லவா?

விஷயம் பாண்டியன் கிராம வங்கியைப் பற்றியது அல்ல, வலைப் பதிவில் எழுதுகிற ஒவ்வொருவரும் எழுதும் போதும், வெளியிடும்போதும், கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றியது மட்டுமே. முந்தைய பதிவில், திரு.செல்வமுரளி ஒரு வலைக்குழுமத்தில் கேட்டிருந்த கேள்வி நினைவிருக்கிறதா? நினைவுபடுத்திக் கொள்ள இங்கே படிக்கவும்.

"அனைத்துப் பின்னூட்டங்களும் வாசகர்களின் சொந்தக் கருத்துக்களே. இதில் வலைப்பதிவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை." இப்படி ஒரு Disclaimer ஐ ஒரு பதிவரின் கமென்ட் பெட்டியின் மீது பார்த்தேன். ஒரு வலைப்பதிவில், பின்னூட்டங்கள் உட்பட அனைத்துக்கும் அந்த வலைப்பதிவரே பொறுப்பு என சமீபத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. தார்மீகரீதியாகவும், கன்னாபின்னாவென்று பின்னூட்டங்களை அனுமதித்து விட்டு, 'ஐயோ, வந்தவுங்க இப்படிக் கலீஜ் பண்ணிட்டாங்க, நான் பொறுப்பு இல்லே"ன்னு தப்பித்துக் கொள்ள முடியாது என்பதே நடைமுறை உண்மை. தெரியும் தானே!

நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்து, ஒரு வலைப்பதிவில் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுடைய நிறுவனத்திற்கு, நீங்கள் வலைப்பதிவு வைத்துக் கொள்வது பற்றிய கொள்கை ஏதாவது இருக்கிறதா? அப்படியே வலைப்பதிவு குறித்துக் கொள்கை எதுவும் இல்லை என்றாலும், பணிபுரியும் நிறுவனத்தைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுத் முடியுமா? அப்போது உங்களுடைய நிலைமை என்னவாக இருக்கும் என்பதில், உங்களுக்குத் தெளிவு இருக்கிறதா?

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் என்னவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதிவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்களா? வலைப்பதிவுகளில்,கருத்துச் சுதந்திரம் என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்த விஷயங்களைத் தொட்டுப் பேசுவதற்கான முன்னோட்டமாகத் தான், அந்தப் பதிவில் ஆரம்பித்தேன். இதை ஒரு செழுமையான, பயனுள்ள விவாதக் களமாக, உங்களுக்குப் பயன்படுவதாக அமைய, என்ன நினைக்கிறீர்கள் என்பதை எழுதுங்களேன்!


மக்கா, மொக்கப்பதிவுகளாப் படிச்சுப் படிச்சு, மழுங்கிப்போனதைத் தீட்டி வைக்கணுமில்லா....? நல்லாத் தீட்டுங்க! அட, கத்தி, அருவாளை சொல்லலீங்க, புத்தியை !

அதுக்காவத்தான் இது:-)"அது இருந்தா இது இல்லே, இது இருந்தா அது இல்லே"


"இருபது தேதிக்கு மேல் ஆகிவிட்டாலே வீட்டில் ஒரே நச்சரிப்பு-அது இல்லை, இது இல்லை என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தால் மனிதனுக்கு எரிச்சல் வருமா, வராதா? நீயே சொல்லேன்." என்று நண்பர் வரும்போதே கொஞ்சம் அலுத்துக் கொண்டே வந்தார்.

இந்த இல்லைப் பாட்டு, தமிழ் நாட்டுக்கோ, தமிழர்களுக்கோ, அல்லது தமிழ் வலைப் பதிவர்களுக்கோ புதிது ஒன்றும் இல்லையாகையால், சிரித்துக் கொண்டே பேசாமல் இருந்தேன். பேசினால் வம்பு வரும், மனிதர் வீட்டில் காட்ட முடியாத வீரத்தை, என்மேல் கோபப் பட்டுக் காண்பித்தால் செம காமடியாக இருக்கும், எதற்கு இப்போது தேவையே இல்லாமல் ஒரு காமடி சீன என்று மௌனமாக இருந்தேன்.நண்பர் விடுவதாக இல்லை.

"இப்பத் தேவையே இல்லாம ஏன் சீன் காமிக்கிறான்னு தானே நினைக்கிறே?"

நான் பேசாமல் மௌனமாக வேறுபக்கம் பார்க்கிற மாதிரி இருந்து விட்டேன். நண்பருக்குக் கொஞ்சம் மூடு திரும்பியிருக்க வேண்டும், "அது இருந்தா இது இல்லே, இது இருந்தா அது இல்லே" என்று பாட ஆரம்பித்தார். ஒரு பழைய திரைப்படப் பாட்டு.

கொஞ்சம் நாடகத் தனமான பாட்டு. கிராமங்களில், கூத்துக் கட்டுகிறவர்கள், இப்படி விடுகதை மாதிரி பாட்டுப் படி வசனம் பேசும் விதூஷகன் பாத்திரத்தை வைத்து, ஆடியன்ஸைக் கவர் பண்ணுகிற அரதப் பழசான, ஆனாலும் ரொம்ப வெற்றிகரமான டெக்னிக். என்னுடைய ஆர்வத்தை நண்பர் ஊகித்து விட்டிருக்க வேண்டும். அல்லது என் மனதில் ஓடிய எண்ணங்களை அப்படியே படித்திருக்க வேண்டும்.

"சந்தேகம் இல்லே-சந்தேகம் இல்லே" மனோகர திரைப்படத்தில் காகா ராதாகிருஷ்ணன் மாதிரிப் பாட ஆரம்பித்தவரை "என்ன சந்தேகம், என்ன இல்லை என்று சொல்லி விட்டு அப்புறம் பாடு" என்றேன்.

"என்னவோ, கவனிக்காதவன் மாதிரி மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு இருந்தாயே, அது தான் சந்தேகம் இல்லே, சந்தேகம் இல்லே."

இப்படித்தான், அந்தக் கால நாடகங்களில், ஒரு காமெடியன், ரொம்ப விசித்திரமாக டிரஸ் போட்டு, சாயம் பூசிக் குல்லாய் எல்லாம் வைத்துக் கொண்டு குட்டிக்கரணம் அடித்துக் கொண்டே, காட்சியில் பிரவேசிப்பார். வழக்கப்படி வந்தனம், அறிமுகம் எல்லாம் ஒரு நீளமான பாட்டாகப் பாடிவிட்டு, ஒரு விடுகதை போடுவார். அது விடுகதைதானா, வேற கதையாங்கிற பஞ்சாயத்தைத் தனியா வச்சுக்கலாம்

"ஒரு காட்டுல, ஒரு குளம். குளத்துல அது இல்ல. அந்தக் குளத்துக்குத் தண்ணீர் எடுக்க ஒருத்தி வர்றா..அவளுக்கு அது இல்ல..அவ கொண்டு வந்தாளே குடம், அந்தக் குடத்துக்கு அது இல்ல, அப்புறம், இந்தக் கூத்தைப்பாக்கக் கூடியிருக்கும் மகாசனங்களே, உங்களுக்கும் அது இல்ல..." காமெடியன் இப்படி நீட்டி முழக்கிக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு நடிகரோ, வாத்திய கோஷ்டியில் ஆர்மோனியப் பெட்டி வாசிப்பவரோ, "நிறுத்து, நிறுத்து!" என்று பெரும் குரலில் அவரை அடக்குவார்கள். "நீ பாட்டுக்கு, அதுக்கு இது இல்ல, இதுக்கு அது இல்லன்னு சொல்லிகிட்டே போனா என்ன அர்த்தம்?"

இப்படி எதிர்க் கேள்வி கேட்டவுடனேயே, குந்தியிருக்கிற நம்ம மகாசனமெல்லாம், ரொம்ப ஆர்வமா கூத்துக் கட்டுகிறவர்களைக் கவனிக்க ஆரம்பிப்பாங்க.

ஆடியன்ஸ் கவனம் வேறுபக்கம் போய் விடாமல் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே!

காமெடியன் உடனே, "ரொம்ப நல்லாக் கேட்டீங்க! என்ன கேட்டீங்க?

"எதுக்கு எது இல்லன்னு பாப்பமா? காட்டுக்குள்ளார ஒரு குளம்னு சொன்னேன் பாருங்க, அதுல தண்ணி இல்ல. அங்க தண்ணி எடுக்க வர்றாளே ஒருத்தி, அவளுக்கு ஒரு கையில்ல... தண்ணி எடுக்கக் கொண்டு வந்தாளே ஒரு குடம் அதுக்கு அடி இல்ல...அப்புறம் இந்தக் கூத்தப் பாக்க வந்த மகா சனங்க உங்களுக்கு......." அப்படீன்னு ஒரு இழுவை இழுத்து.........................................................

"ஒரு கொறையும் இல்ல" என்று சொல்லி முடித்தவுடனேயே, குந்தியிருக்கிற சனமெல்லாம் ஒரு பூரிப்பு, புளகாங்கிதம் இன்னும் என்னென்னவோ சொல்லுவாங்களே..அட, அதையெல்லாம் அனுபவிச்சுத் தான் தெரிஞ்சுக்கணும்!

ஆமா, எதுக்காக, இது இருந்தா அது இல்ல, அது இருந்தா இது இல்லைன்னு ஆரம்பிச்சோம்?

இதுக்காகத்தான்!

ஒரு சுவாரசியமான "இதுக்கு" "அது இல்லை" பட்டியல்!


அரேபியாவில் ஆறுகள் இல்லை

அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை.

ஆமைக்குப் பற்கள் இல்லை.

இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.

இந்திய அரசியல்வாதிகள், கல்லறைக்குப்போகும் வரை ஓய்வு பெறுவதில்லை.

இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.

இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.

இந்தியாவில் எரிமலைகள் இல்லை.

ஈசலுக்கு வயிறு இல்லை.

உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.

ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.

ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.

கடலில் முதலைகள் வாழ்வதில்லை.

பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.

மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.

யமுனை நதி கடலில் கலப்பதில்லை.

யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.

யானையின் கால்களிலும் எலும்புகள் இல்லை.

வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.

ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.

ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன் படுத்துவதில்லை

கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.

குயில்கள் கூடுகட்டி வாழ்வதில்லை.

குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதில்லை.

பூடான் நாட்டில் திரைஅரங்குகள் இல்லை.

பூச்சிகளும் புழுக்களும் தூங்குவதில்லை.

யாருக்கும் வெட்கம் இல்லை, அட, எனக்கும் வெட்கம் இல்லை அதனால் பதிவு எழுதுகிறேன்!

சூரியனை மறைத்த கிரகணமும் முடிந்தது!
சுமுகத்தைக் குலைக்கும் கிரகணம் முடிவது எப்போது?

ஒரு வலைக்குழுவில், திரு எம்.செல்வமுரளி, ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் கம்ப்யூட்டர் இதழில், ப்ளாக்எழுதுவது எப்படி என்று சொல்லியிருந்த தகவல்களில், "அந்த வலைப்பூ தகவலில்
* கருத்துச்சுதந்திரம் மிக்க ஒர் இடம் வலைப்பூ* என்ற வார்த்தை மட்டுமே என் மனதில் ஆழப்பதிந்த விஷயம். உண்மையில் ஒரு வலைப்பூவில் நாம் நமக்கு தெரிந்ததையும், தெரியப்படுத்த விரும்பும் தகவலையும் தரலாம் என்றாலும் கருத்துச்சுதந்திரம் என்றால் என்ன என்பதை எடுத்துச் சொல்லுங்களேன். " இது அவருடைய கேள்வி.

கருத்துச் சுதந்திரம், கட்டற்ற சுதந்திரம் என்பது கட்டவிழ்த்துவிட்ட
காளையைப் போல அடுத்தவன் வயலில் மேயப் போவது போல என்று இன்றையசூழலில் ஆகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுதந்திரம் என்பது சுயகட்டுப்பாட்டுடன் கூடியது, என்ன வேண்டுமானாலும் எழுதுவேன், பேசுவேன்,செய்வேன் என்பது அல்ல.

On the rule of the road என்ற ஒரு கட்டுரை, கல்லூரிக்குள் நுழைந்தபோது பாடமாகப் படித்தது, மனதில் தங்கி விட்ட கருத்து, அந்தக் கட்டுரையிலே ஆரம்பத்தில் ஒரு பெண்மணி நட்ட நடு வீதியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடந்துபோய்க் கொண்டிருப்பார். வண்டி ஓட்டிக் கொண்டு வருகிறவர்கள் அல்லவா கவலைப்பட வேண்டும்!

நடப்பதற்கு சாலையின் இரு பக்கங்களிலும் நடை பாதை இருப்பதைக் காட்டி அதில் நடக்கலாமே என்று ஒருவர் நல்லெண்ணத்தோடு சொல்கிறார், உடனே அந்தப் பெண்மணி சொல்வார், "எதற்காக? நமக்குத் தான் சுதந்திரம் கிடைத்து விட்டதே!"

அதாவது, சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வது!

கருத்துச் சுதந்திரம் என்பது, இப்படி எல்லைகளே இல்லை என்று சொல்வதற்காக
இல்லை. நாமாக உணர வேண்டும். ஒரு பொது விதிக்கு உட்பட்டு நடந்து கொண்டால் எவர்க்கும் பிரச்சினை இல்லை. இணையத்தில், குறிப்பாகத் தமிழ்
வலைப்பதிவர்களிடத்தில், இந்த ஒரு அம்சம் மிகவும் குறைந்து காணப்படுகிறது
என்பதே என் வருத்தம். அந்த வருத்தம் தீர, ஒரு பழைய, ஆனால் இந்த
விஷயத்திற்குப் பொருத்தமான ஒரு கதையைப் பார்ப்போம்.

"குருஷேவ் ஒரு முட்டாள்", "குருஷேவ் ஒரு அடிமுட்டாள்" என்று மாஸ்கோ நகர
வீதியில் ஒருவன் கத்திக் கொண்டே ஓடினான். காவலர்கள் அவனைக் கைது செய்து, நீதி மன்றத்தில் ஆஜர் செய்தார்கள்.

நீதிபதி, விசாரித்துவிட்டுத் தீர்ப்புச் சொன்னார்:
"இந்த நபருக்கு ஏழாண்டுகள் கடும் உழைப்பு தண்டனை தருகிறேன், குருஷேவ் ஒரு முட்டாள் என்று சொன்னதற்காக அல்ல, அரசாங்க ரகசியத்தை, இப்படி நடுத்தெருவில் சொன்னதற்காக"

பழைய திரைப்படம் ஒன்றில் என் எஸ் கிருஷ்ணனும், மதுரமும் சேர்ந்து கலக்கிய "ராஜா காது கழுதைக் காது...ராஜா காது கழுதைக் காது.. " காட்சி நினைவுக்கு வருகிறதா? ராஜா காது கழுதைக் காதாகஇருக்கலாம்,அதை அப்படியே சொல்லி விட முடியுமா? இங்கே ராஜா இடத்தில், நம்மையே வைத்து யோசித்துப் பாருங்கள்!

பொருத்தமே இல்லாமல், இந்தக் குழுமத்தில், ஒரு நண்பர் ஒரு தகவலின் மீது தன சொந்த வெறுப்பைக் கொட்டி எழுதியது போல, வேறு 'அரசாங்க ரகசியத்தை' எழுதி விட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன என்பது, கொஞ்சமாவது புரிய வரும். இது அங்கே அவருக்கு சொன்ன பதில். இந்தக் கருத்துச் சுதந்திரம், கட்டற்ற சுதந்திரம் என்றெல்லாம் பேசிக் கொண்டேஇருக்கிறோமே இதை நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எப்படிஅணுகுகிறோம் என்ற யோசனை கொஞ்சம் பலமாகவே இருந்தது.


என்ன நினைப்போடு எழுதியிருந்தாலும் சரி, சில வலைப் பதிவுகள்எழுதியவர்களுடைய எதிர்பார்ப்பையும் மீறி, படிப்பவர் மனத்தில் ஒருதாக்கத்தையும், ஏதாவது செய்ய் வேண்டும், இதற்குப் பதில் சொல்ல வேண்டும்என்ற தவிப்பையும் உண்டு பண்ணுவதை அனுபவித்திருக்கிறீர்களா? அப்படிச்சில பதிவுகளைக் கடந்த சில நாட்களாகப் படித்துக் கொண்டும், பதிலையோசித்துக் கொண்டும் இருந்ததன் எதிரொலி தான் இந்தப் பதிவு.

திரும்பிப்பார்க்கிறேன் -கிணறுவெட்ட பூதம் என்ற தலைப்பில், சென்னைசூளைமேடில் உள்ள ஒரு மேன்ஷனில் கடந்த ஒன்பது மாதங்களாகக் குடிநீரில், கழிவுநீரும் கலந்து வருவதைத் தட்டிக் கேட்டதற்காகத் தானும் தன் நண்பர்களும் அனுபவித்து வரும் கொடுமையான சூழலை, நடத்திவரும் போராட்டத்தை, திரு.ரமேஷ்
சதாசிவம் எழுதியிருந்ததைப் படித்த பிறகு, நாமெல்லாம் மனிதர்கள் தானா, மனிதர்களுக்கு நடுவில் தான் வாழ்கிறோமா என்றெல்லாம் ஐயப்பட வேண்டியதாகிவிட்டது. சங்கம் வைத்துக் கொடி பிடித்துக் கோஷம் எழுப்பாமலேயே, இணையம் வழியாக, திரு ரமேஷ் சதாசிவம் ஒரு புதுமையான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழக முதல்வர் கவனத்திற்கும் அவரது இணையப் பக்கங்கள் வழியாக இந்த செய்தி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஜுனியர் விகடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. இணையத்தில் நிறையப் பதிவர்கள், இந்தப்பக்கங்கள் உட்பட, இந்த செய்தியை முடிந்தவரை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனாலும், இந்த நிமிடம் வரை, அரசு இயந்திரம் விழித்துக் கொண்டதாகவோ, ஒரு நியாயமான தீர்வு பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த மாதிரித் தெரியவில்லை.

ஆகஸ்ட் பதினைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. கோட்டையில் மூவர்ணக் கொடி பறக்கும். எல்லாத் தொலைக்காட்சிகளிலும், 'சுதந்திரத்திருநாளை முன்னிட்டு சிறப்புத் திரைப்படம், திரைப்பட நடிகர் பெட்டி' எல்லாம் வரும்- சுதந்திரத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பாருங்கள், சுதந்திரத்தைப் போற்றுங்கள்' என்று விளம்பரம் வேறு! நமக்கும் அது தானே வேண்டும்!

எவனுக்கு, எங்கே, என்ன நடந்தால் நமக்கு என்ன வந்தது?

இந்த யோசனையோடு இருந்தவனை, இன்னொரு பதிவு வேறு விதமாக அசைத்துப் பார்த்தது.அதிகாரத்தின் பீடங்கள் என்று தலைப்பிட்டு, பாண்டியன் கிராம வங்கியில் இரு ஊழியர்களை, வங்கியில் நடக்கும் சில விஷயங்களை Bank Workers Unity என்ற பத்திரிகையில் எழுதியதற்காகத தற்காலிகப் பணி நீக்கம் செய்திருப்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார் திரு. மாதவராஜ் . அந்த இருவரில் ஒருவர் இளைஞர், அன்டோ கால்பட் என்பது பெயர் கொக்கரகோ என்ற பெயரில் வலைப்பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். இளமையின் ஆவேசமும், பொறுமையின்மையும் எழுத்தில் நன்றாகவே வெளிப்படுகிறது. அவருடைய, இந்த வார்த்தைகளில், ஒரு சிறு பகுதி இது.

"எனக்கு மாலை அணிவித்து பாராட்டு கோஷங்கள் எழுப்பியதை பார்த்த எங்கள் கிளை வாடிக்கையாளர்களில் ஒருவர் ஏதோ எனக்கு ’பதவிஉயர்வு’ கிடைத்துள்ளது என நினைத்து விசாரித்தார்.அப்போது தோழர்கள் சுப்பிரமணியனும்,அருண் பிரகாஷ் சிங்கும் எனக்கு ’சஸ்பன்ஷன் ஆர்டர்’ வழங்கப்படுவதாக தெரிவித்தபோது விசாரித்தவர் மட்டுமல்லாமல் அருகிலிருந்த அத்துணை வாடிக்கையாளர்களும் அதிர்ந்தே போய்விட்டார்கள்.

பணி நீக்கம், போராட்டம் என்று பாண்டியன் கிராம வங்கியில் ஆரம்பமாகியிருக்கிறது. இத்தனைக்கும், சில பொதுத்துறை வங்கிகளைப் போல ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிற வங்கியில்லை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. 'மாமன் ஆடிச்சாரோ மல்லிகைப் பூச் செண்டாலே' என்று தாலாட்டுக் கேட்டிருப்பீர்களே, அந்த மாதிரி கொஞ்சம் நிதானமான அணுகுமுறை கொண்ட வங்கி, அது நிர்வகிக்கும் ஒரு கிராம வங்கியிலே இப்படி என்றால்....! நல்லது நடக்கும், வருத்தங்கள் தீரும் என்று நம்புவோம்!

பணிவிதிகளில் வலைப்பதிவில் எழுதுவது, வேறு ஊடகங்களில், பணிபுரியும் நிறுவனத்தைப் பற்றி எழுதுவது பற்றித் தெளிவான வரையறைகள் இந்தியாவில் இல்லை. நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, அதிலே வேலை செய்யும் ஊழியர்களுக்கும் கூட இந்த விஷயத்தில் இதில் எந்தத் தெளிவும் இல்லாத நிலையில், தெளிவு படுத்திக்கொள்வது நிறுவனங்கள்,தொழிற் சங்கங்களுடைய கடமை மட்டுமல்ல, அவசியமும் கூட.

பொறுப்புணர்வும், புரிந்துகொள்ளுதலும் ஒன்று சேரும்போது தான், உண்மையான தீர்வு கிடைக்கும்.

அதுவரை, ஊருக்கும் வெட்கமில்லை, இந்த உலகுக்கும் வெட்கமில்லை! யாருக்கும் வெட்கம் இல்லை, அட, எனக்கும் கூடவெட்கம் இல்லை அதனால் பதிவு எழுதுகிறேன்!

அழிவு என்பது உருமாற்றமே தவிர வேறில்லை!

தேநீர்க் கோப்பையில் வந்த சுனாமி, முந்தாநாளே போய்விட்டது! அறிவியலின் அழகான தேடல்கள், இந்தப் பிரபஞ்ச வெளியின் அற்புதத்தை படம் பிடித்துக் காட்டுவதைப் பாருங்கள்!

கிரகணம் என்பது என்ன? மேலே பார்க்கிறீர்களே, படத்தில், சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வரும் போது ஏற்படுகிற தற்காலிகமான இருட்டுத்தான். சுழற்சிப்பாதையில், பூமியும், சந்திரனும் இயங்கும்போது, கிரகணத்தின் பாதையும், நேரமும் மாறுபடுகிறது!
திடீரென இருட்டுக் கவ்வும்போது, அச்சம் உண்டாவது இயற்கை. ஆதிகாலத்தில், மனிதனும், இப்படித்தான், கிரகண இருட்டைக் கண்டு பயந்தது உண்மை. அதற்கு சமாதானம் சொல்ல நிறைய புனைகதைகளும் வந்தது உண்மை.அதற்காக....? வெறும் கதை கேட்பதிலேயே நின்று விட முடியுமா என்ன? கேள்விகள் ...கேள்விகள்..கேள்விகள்..தொடர்ந்து எழுந்தன. கேள்விகளே, தேடலின் தொடக்கம்! தேடலே, உயிர்மையின் இயக்கம்!

போன பதிவில், அறிவியல் பார்வையோடு பார்ப்பதற்காகக் கொடுத்திருந்த இந்தச் சுட்டியை, நிறையப்பேர் பாத்திருக்கீங்கன்னு புள்ளிவிவரம் சொல்லுது, நன்றி

பாருங்கள், இந்தச் சிறுவர்கள், எவ்வளவு ஆர்வத்தோடு கிரகணத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று!

அறிவியல் உண்மைகளைப் புரிய வைக்கவோ, மூட நம்பிக்கைகளைச் சீர் திருத்துவதற்கோ "உண்ணும் விரதமிருப்பது" பயன்படுமா? இதுக்குப்பேர்தானா, நீங்கள் பேசும் பகுத்தறிவு?
மேலே உள்ள படத்தில், இன்றைக்கு நிகழ்ந்த கிரகணத்தின் பாதையைப் பார்க்கலாம். சமீப காலத்தில் நிகழ்ந்த கிரகணந்களிலேயே , இது தான் மிக நீண்ட நேரம் நீடித்த கிரகணம் என்று சொல்கிறார்கள். அடுத்து இதே போல ஒரு நீண்ட கிரகனத்திற்காக இன்னம் 123 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்!
ஒளியை மறைத்த தடை நீங்கும்போது சில அதிசயங்களைக் காண முடியும்! இங்கேயும் கூட, அப்படித்தான்! அறிவை மயக்கும் சில புனைவுகளும் நீங்கும்போது மனிதன் தனக்குள்ளும் சில அழகான அதிசயங்களைக் கண்டுகொள்ள முடியுமே!
தடுத்து மறைத்தது நடுவில் நின்றாலும், ஒளி அதையும் மீறிப் புறப்படுமே!
ஒவ்வொரு இருட்டுக்குப் பின்னாலும், ஒரு பகல் உண்டு! மறைத்து வைக்கவும், மறந்து போகவும் மனிதன் எவ்வளவு முயன்றாலும், மெய்ப்பொருளாய் அது வெளிப்படுமே!
கிரகணத்தின் அதியற்புதக் காட்சி என்று, இதைத்தான் சொல்வார்கள். வைர மோதிரம் என்று வர்ணிக்கப்படும் காட்சி இது!

கவிஞர்-பதிவர் ரிஷான் ஷெரீப் அவர்களே! இருபத்திரண்டாம் திகதி சூரிய கிரகணம், நீங்கள் அஞ்சியது போல எந்தப் பேரழிவையும் கொண்டுவரவில்லை. பிரபஞ்சத்தில் அழிவு என்பது உருமாற்றமே தவிர வேறில்லை!

"It is the darkest nights that prepare the greatest dawns - and it is so because it is into the deepest in conscience of material life that we have to bring, not an intermediate glimmer, but the full play of the Divine Light."
-Sri Aurobindo

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! நலமே சூழ்க!
சற்றே
அசைபோட
அருள்செல்வன் கந்தஸ்வாமி அவர்களின் பழைய பதிவு ஒன்று !