யாருக்கும் வெட்கம் இல்லை, அட, எனக்கும் வெட்கம் இல்லை அதனால் பதிவு எழுதுகிறேன்!

சூரியனை மறைத்த கிரகணமும் முடிந்தது!
சுமுகத்தைக் குலைக்கும் கிரகணம் முடிவது எப்போது?

ஒரு வலைக்குழுவில், திரு எம்.செல்வமுரளி, ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் கம்ப்யூட்டர் இதழில், ப்ளாக்எழுதுவது எப்படி என்று சொல்லியிருந்த தகவல்களில், "அந்த வலைப்பூ தகவலில்
* கருத்துச்சுதந்திரம் மிக்க ஒர் இடம் வலைப்பூ* என்ற வார்த்தை மட்டுமே என் மனதில் ஆழப்பதிந்த விஷயம். உண்மையில் ஒரு வலைப்பூவில் நாம் நமக்கு தெரிந்ததையும், தெரியப்படுத்த விரும்பும் தகவலையும் தரலாம் என்றாலும் கருத்துச்சுதந்திரம் என்றால் என்ன என்பதை எடுத்துச் சொல்லுங்களேன். " இது அவருடைய கேள்வி.

கருத்துச் சுதந்திரம், கட்டற்ற சுதந்திரம் என்பது கட்டவிழ்த்துவிட்ட
காளையைப் போல அடுத்தவன் வயலில் மேயப் போவது போல என்று இன்றையசூழலில் ஆகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுதந்திரம் என்பது சுயகட்டுப்பாட்டுடன் கூடியது, என்ன வேண்டுமானாலும் எழுதுவேன், பேசுவேன்,செய்வேன் என்பது அல்ல.

On the rule of the road என்ற ஒரு கட்டுரை, கல்லூரிக்குள் நுழைந்தபோது பாடமாகப் படித்தது, மனதில் தங்கி விட்ட கருத்து, அந்தக் கட்டுரையிலே ஆரம்பத்தில் ஒரு பெண்மணி நட்ட நடு வீதியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடந்துபோய்க் கொண்டிருப்பார். வண்டி ஓட்டிக் கொண்டு வருகிறவர்கள் அல்லவா கவலைப்பட வேண்டும்!

நடப்பதற்கு சாலையின் இரு பக்கங்களிலும் நடை பாதை இருப்பதைக் காட்டி அதில் நடக்கலாமே என்று ஒருவர் நல்லெண்ணத்தோடு சொல்கிறார், உடனே அந்தப் பெண்மணி சொல்வார், "எதற்காக? நமக்குத் தான் சுதந்திரம் கிடைத்து விட்டதே!"

அதாவது, சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வது!

கருத்துச் சுதந்திரம் என்பது, இப்படி எல்லைகளே இல்லை என்று சொல்வதற்காக
இல்லை. நாமாக உணர வேண்டும். ஒரு பொது விதிக்கு உட்பட்டு நடந்து கொண்டால் எவர்க்கும் பிரச்சினை இல்லை. இணையத்தில், குறிப்பாகத் தமிழ்
வலைப்பதிவர்களிடத்தில், இந்த ஒரு அம்சம் மிகவும் குறைந்து காணப்படுகிறது
என்பதே என் வருத்தம். அந்த வருத்தம் தீர, ஒரு பழைய, ஆனால் இந்த
விஷயத்திற்குப் பொருத்தமான ஒரு கதையைப் பார்ப்போம்.

"குருஷேவ் ஒரு முட்டாள்", "குருஷேவ் ஒரு அடிமுட்டாள்" என்று மாஸ்கோ நகர
வீதியில் ஒருவன் கத்திக் கொண்டே ஓடினான். காவலர்கள் அவனைக் கைது செய்து, நீதி மன்றத்தில் ஆஜர் செய்தார்கள்.

நீதிபதி, விசாரித்துவிட்டுத் தீர்ப்புச் சொன்னார்:
"இந்த நபருக்கு ஏழாண்டுகள் கடும் உழைப்பு தண்டனை தருகிறேன், குருஷேவ் ஒரு முட்டாள் என்று சொன்னதற்காக அல்ல, அரசாங்க ரகசியத்தை, இப்படி நடுத்தெருவில் சொன்னதற்காக"

பழைய திரைப்படம் ஒன்றில் என் எஸ் கிருஷ்ணனும், மதுரமும் சேர்ந்து கலக்கிய "ராஜா காது கழுதைக் காது...ராஜா காது கழுதைக் காது.. " காட்சி நினைவுக்கு வருகிறதா? ராஜா காது கழுதைக் காதாகஇருக்கலாம்,அதை அப்படியே சொல்லி விட முடியுமா? இங்கே ராஜா இடத்தில், நம்மையே வைத்து யோசித்துப் பாருங்கள்!

பொருத்தமே இல்லாமல், இந்தக் குழுமத்தில், ஒரு நண்பர் ஒரு தகவலின் மீது தன சொந்த வெறுப்பைக் கொட்டி எழுதியது போல, வேறு 'அரசாங்க ரகசியத்தை' எழுதி விட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன என்பது, கொஞ்சமாவது புரிய வரும். இது அங்கே அவருக்கு சொன்ன பதில். இந்தக் கருத்துச் சுதந்திரம், கட்டற்ற சுதந்திரம் என்றெல்லாம் பேசிக் கொண்டேஇருக்கிறோமே இதை நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எப்படிஅணுகுகிறோம் என்ற யோசனை கொஞ்சம் பலமாகவே இருந்தது.


என்ன நினைப்போடு எழுதியிருந்தாலும் சரி, சில வலைப் பதிவுகள்எழுதியவர்களுடைய எதிர்பார்ப்பையும் மீறி, படிப்பவர் மனத்தில் ஒருதாக்கத்தையும், ஏதாவது செய்ய் வேண்டும், இதற்குப் பதில் சொல்ல வேண்டும்என்ற தவிப்பையும் உண்டு பண்ணுவதை அனுபவித்திருக்கிறீர்களா? அப்படிச்சில பதிவுகளைக் கடந்த சில நாட்களாகப் படித்துக் கொண்டும், பதிலையோசித்துக் கொண்டும் இருந்ததன் எதிரொலி தான் இந்தப் பதிவு.

திரும்பிப்பார்க்கிறேன் -கிணறுவெட்ட பூதம் என்ற தலைப்பில், சென்னைசூளைமேடில் உள்ள ஒரு மேன்ஷனில் கடந்த ஒன்பது மாதங்களாகக் குடிநீரில், கழிவுநீரும் கலந்து வருவதைத் தட்டிக் கேட்டதற்காகத் தானும் தன் நண்பர்களும் அனுபவித்து வரும் கொடுமையான சூழலை, நடத்திவரும் போராட்டத்தை, திரு.ரமேஷ்
சதாசிவம் எழுதியிருந்ததைப் படித்த பிறகு, நாமெல்லாம் மனிதர்கள் தானா, மனிதர்களுக்கு நடுவில் தான் வாழ்கிறோமா என்றெல்லாம் ஐயப்பட வேண்டியதாகிவிட்டது. சங்கம் வைத்துக் கொடி பிடித்துக் கோஷம் எழுப்பாமலேயே, இணையம் வழியாக, திரு ரமேஷ் சதாசிவம் ஒரு புதுமையான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழக முதல்வர் கவனத்திற்கும் அவரது இணையப் பக்கங்கள் வழியாக இந்த செய்தி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஜுனியர் விகடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. இணையத்தில் நிறையப் பதிவர்கள், இந்தப்பக்கங்கள் உட்பட, இந்த செய்தியை முடிந்தவரை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனாலும், இந்த நிமிடம் வரை, அரசு இயந்திரம் விழித்துக் கொண்டதாகவோ, ஒரு நியாயமான தீர்வு பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த மாதிரித் தெரியவில்லை.

ஆகஸ்ட் பதினைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. கோட்டையில் மூவர்ணக் கொடி பறக்கும். எல்லாத் தொலைக்காட்சிகளிலும், 'சுதந்திரத்திருநாளை முன்னிட்டு சிறப்புத் திரைப்படம், திரைப்பட நடிகர் பெட்டி' எல்லாம் வரும்- சுதந்திரத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பாருங்கள், சுதந்திரத்தைப் போற்றுங்கள்' என்று விளம்பரம் வேறு! நமக்கும் அது தானே வேண்டும்!

எவனுக்கு, எங்கே, என்ன நடந்தால் நமக்கு என்ன வந்தது?

இந்த யோசனையோடு இருந்தவனை, இன்னொரு பதிவு வேறு விதமாக அசைத்துப் பார்த்தது.அதிகாரத்தின் பீடங்கள் என்று தலைப்பிட்டு, பாண்டியன் கிராம வங்கியில் இரு ஊழியர்களை, வங்கியில் நடக்கும் சில விஷயங்களை Bank Workers Unity என்ற பத்திரிகையில் எழுதியதற்காகத தற்காலிகப் பணி நீக்கம் செய்திருப்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார் திரு. மாதவராஜ் . அந்த இருவரில் ஒருவர் இளைஞர், அன்டோ கால்பட் என்பது பெயர் கொக்கரகோ என்ற பெயரில் வலைப்பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். இளமையின் ஆவேசமும், பொறுமையின்மையும் எழுத்தில் நன்றாகவே வெளிப்படுகிறது. அவருடைய, இந்த வார்த்தைகளில், ஒரு சிறு பகுதி இது.

"எனக்கு மாலை அணிவித்து பாராட்டு கோஷங்கள் எழுப்பியதை பார்த்த எங்கள் கிளை வாடிக்கையாளர்களில் ஒருவர் ஏதோ எனக்கு ’பதவிஉயர்வு’ கிடைத்துள்ளது என நினைத்து விசாரித்தார்.அப்போது தோழர்கள் சுப்பிரமணியனும்,அருண் பிரகாஷ் சிங்கும் எனக்கு ’சஸ்பன்ஷன் ஆர்டர்’ வழங்கப்படுவதாக தெரிவித்தபோது விசாரித்தவர் மட்டுமல்லாமல் அருகிலிருந்த அத்துணை வாடிக்கையாளர்களும் அதிர்ந்தே போய்விட்டார்கள்.

பணி நீக்கம், போராட்டம் என்று பாண்டியன் கிராம வங்கியில் ஆரம்பமாகியிருக்கிறது. இத்தனைக்கும், சில பொதுத்துறை வங்கிகளைப் போல ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிற வங்கியில்லை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. 'மாமன் ஆடிச்சாரோ மல்லிகைப் பூச் செண்டாலே' என்று தாலாட்டுக் கேட்டிருப்பீர்களே, அந்த மாதிரி கொஞ்சம் நிதானமான அணுகுமுறை கொண்ட வங்கி, அது நிர்வகிக்கும் ஒரு கிராம வங்கியிலே இப்படி என்றால்....! நல்லது நடக்கும், வருத்தங்கள் தீரும் என்று நம்புவோம்!

பணிவிதிகளில் வலைப்பதிவில் எழுதுவது, வேறு ஊடகங்களில், பணிபுரியும் நிறுவனத்தைப் பற்றி எழுதுவது பற்றித் தெளிவான வரையறைகள் இந்தியாவில் இல்லை. நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, அதிலே வேலை செய்யும் ஊழியர்களுக்கும் கூட இந்த விஷயத்தில் இதில் எந்தத் தெளிவும் இல்லாத நிலையில், தெளிவு படுத்திக்கொள்வது நிறுவனங்கள்,தொழிற் சங்கங்களுடைய கடமை மட்டுமல்ல, அவசியமும் கூட.

பொறுப்புணர்வும், புரிந்துகொள்ளுதலும் ஒன்று சேரும்போது தான், உண்மையான தீர்வு கிடைக்கும்.

அதுவரை, ஊருக்கும் வெட்கமில்லை, இந்த உலகுக்கும் வெட்கமில்லை! யாருக்கும் வெட்கம் இல்லை, அட, எனக்கும் கூடவெட்கம் இல்லை அதனால் பதிவு எழுதுகிறேன்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!