கத்தியைத் தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு!


தாங்கள் பணிபுரியும் வங்கியைப் பற்றி, ஒரு பொது ஊடகத்தில் எழுதியதற்காக இரண்டு ஊழியர்களை, பாண்டியன் கிராம வங்கி சென்ற 17 ஆம் தேதி தற்காலிகப் பணி நீக்கம் செய்திருப்பதைக் குறிப்பிட்டு, திரு மாதவராஜ் எழுதியிருந்ததை இரண்டு நாட்களுக்கு முன்னாள் மேற்கோள் காட்டியிருந்தேன். நேற்றைக்குமாதவராஜின் வலைப்பக்கங்களில் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்று "தர்மம் மறுபடியும் வெல்லும்" என்ற பதிவில், அந்த இரண்டு ஊழியர்களும், பணியில் திரும்பச் சேர்ந்ததைப் பற்றிய தகவலையும் பார்த்தேன்.

மகிழ்ச்சி!

இதே மாதிரி, சூளைமேடு சரவணா மேன்ஷனில் குடிநீரில் கழிவுநீரும் கலந்து ஒன்பது மாதங்களுக்கும் மேலாக அவதிப்படும் சக மனிதர்களுக்கும் இதே மாதிரி "தர்மம் மறுபடியும் வென்றதாக" செய்தி, வலைப்பதிவு இப்படி எதையாவது பார்க்க முடிந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாயிருந்திருக்கும்? அது என்ன மாதவராஜ் சொல்லும் தர்மம், இப்படி selective ஆக மட்டும் ஜெயித்துக் கொண்டிருக்கிறது? ஏன் ? ஏன் ?

ஆனால், நடைமுறைவாழ்க்கையில் இப்படியெல்லாம் மகிழ்ந்து கொண்டிருப்பதற்காக, தர்மங்கள் எப்போதுமே வென்று கொண்டிருப்பதில்லையே என்ற ஆதங்கத்தில் தான் அந்தப் பதிவின் தலைப்பே, "யாருக்கும் வெட்கமில்லை, அட எனக்கும் வெட்கம் இல்லை, அதனால் பதிவு எழுதுகிறேன்!" என்று இருந்தது.செய்தித் தாளில் வந்த செய்தியையே மனுவாக ஏற்றுக் கொண்டு விசாரிக்க, சில நேரங்களில் உயர்நீதிமன்றம் உத்தரவிடுவதும் உண்டு. அப்படி வரும் செய்திகளை எல்லாம் படித்து விட்டு, அதே மாதிரி இதில் நடக்கும், அதில் நடக்கும் என்று எதிர்பார்த்தால், மிஞ்சுவது வெறும் ஏமாற்றம் தான்.

"சங்கம் வைத்துக் கொடி பிடித்துக் கோஷம் எழுப்பாமலேயே, இணையம் வழியாக, திரு ரமேஷ் சதாசிவம் ஒரு புதுமையான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்."

இந்த மாதிரிச் சின்னச் சின்ன விஷயங்களில் கூட "தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக ஒவ்வொரு சம்பவத்திலும் நான் அவதரிக்கிறேன்" என்று கண்ணன் மறுபடி வந்து ஒரு புதிய கீதை சொன்ன பிறகு தான் தர்மம் ஜெயிக்குமோ?

உண்மையில், அந்தப் பதிவை எழுதும் நேரம், பதிவர்களுடைய பொறுப்புக்கள், பின்விளைவுகளைப் பற்றிய ஞானம் இவற்றையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்று தான் ஆரம்பித்தேன். ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்த பழைய வாசனையினால், ஒரு வருத்தப் பட வேண்டிய விஷயம், திசை மாறிப்போய் விடக் கூடாதே என்ற எண்ணத்தினால் தான், அதிக அழுத்தம் கொடுத்தும், மேலதிக விவரங்களுடனும் எழுதவில்லை.

இப்போது பிரச்சினை தீர்ந்து போய்விட்ட படியால், பேசலாம் அல்லவா?

விஷயம் பாண்டியன் கிராம வங்கியைப் பற்றியது அல்ல, வலைப் பதிவில் எழுதுகிற ஒவ்வொருவரும் எழுதும் போதும், வெளியிடும்போதும், கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றியது மட்டுமே. முந்தைய பதிவில், திரு.செல்வமுரளி ஒரு வலைக்குழுமத்தில் கேட்டிருந்த கேள்வி நினைவிருக்கிறதா? நினைவுபடுத்திக் கொள்ள இங்கே படிக்கவும்.

"அனைத்துப் பின்னூட்டங்களும் வாசகர்களின் சொந்தக் கருத்துக்களே. இதில் வலைப்பதிவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை." இப்படி ஒரு Disclaimer ஐ ஒரு பதிவரின் கமென்ட் பெட்டியின் மீது பார்த்தேன். ஒரு வலைப்பதிவில், பின்னூட்டங்கள் உட்பட அனைத்துக்கும் அந்த வலைப்பதிவரே பொறுப்பு என சமீபத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. தார்மீகரீதியாகவும், கன்னாபின்னாவென்று பின்னூட்டங்களை அனுமதித்து விட்டு, 'ஐயோ, வந்தவுங்க இப்படிக் கலீஜ் பண்ணிட்டாங்க, நான் பொறுப்பு இல்லே"ன்னு தப்பித்துக் கொள்ள முடியாது என்பதே நடைமுறை உண்மை. தெரியும் தானே!

நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்து, ஒரு வலைப்பதிவில் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுடைய நிறுவனத்திற்கு, நீங்கள் வலைப்பதிவு வைத்துக் கொள்வது பற்றிய கொள்கை ஏதாவது இருக்கிறதா? அப்படியே வலைப்பதிவு குறித்துக் கொள்கை எதுவும் இல்லை என்றாலும், பணிபுரியும் நிறுவனத்தைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுத் முடியுமா? அப்போது உங்களுடைய நிலைமை என்னவாக இருக்கும் என்பதில், உங்களுக்குத் தெளிவு இருக்கிறதா?

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் என்னவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதிவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்களா? வலைப்பதிவுகளில்,கருத்துச் சுதந்திரம் என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்த விஷயங்களைத் தொட்டுப் பேசுவதற்கான முன்னோட்டமாகத் தான், அந்தப் பதிவில் ஆரம்பித்தேன். இதை ஒரு செழுமையான, பயனுள்ள விவாதக் களமாக, உங்களுக்குப் பயன்படுவதாக அமைய, என்ன நினைக்கிறீர்கள் என்பதை எழுதுங்களேன்!


மக்கா, மொக்கப்பதிவுகளாப் படிச்சுப் படிச்சு, மழுங்கிப்போனதைத் தீட்டி வைக்கணுமில்லா....? நல்லாத் தீட்டுங்க! அட, கத்தி, அருவாளை சொல்லலீங்க, புத்தியை !

அதுக்காவத்தான் இது:-)No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!