தெய்வம் என்றால் அது தெய்வம்! இல்லையென்றால் அது...?


டாகின்ஸ் எழுதிய "The God Delusion" பற்றியே தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால், இந்தப் பக்கங்களைப் படிக்க வருகிற கொஞ்சப் பேரும் காணாமல் போய்விடுவார்கள் என்பது நன்றாகவே தெரிந்தாலும், மெய்ப்பொருள் எது, மெய்ப்பொருள் காண்பதற்கான அறிவு எது என்ற விவாதத்தை, அப்படியே அந்தரத்தில் தொங்கவிட்டு விட்டு, வேறு பின் நவீனத்துவமான பதிவுகளை எழுதுகிற உத்தேசம் எனக்கில்லை, எதிர்பார்க்க வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்து விடுகிறேன்!

ஒரு நண்பர் ஜூன் முப்பதன்று,

"என்ன ஆச்சர்யம்! இன்று புதுமைபித்தனின் நினைவு நாள்! ஆனால் ஒருவர் கூட அது குறித்து பதிவு போடவில்லை, ஒருவேளை இலக்கியவாதிகளுக்கு சண்டையிடவே நேரம் சரியாக இருக்கிறதோ!"

என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். என்ன விவரம் என்று வினவியபோது தான், சாரு-ஜெயமோகன் இருவரது வலைத்தளங்களிலும்தொடர்ந்து கொண்டிருக்கிற குடுமிப்பிடிச் சண்டையைத் தொட்டு சொன்னார் என்பது புரிந்தது. அவரது ஆதங்கத்தை இப்படிச் சொல்லியிருந்தார்:

"
நான் சொல்ல வந்த காரணம், கடந்த சில நாட்களாக சாரு,ஜெமோ ஜல்லிகள் குறித்து! அவர்களது பதிவுகளில் கட்டாயம் புதுமைபித்தன் இடம்பெறுவதையும் கண்டேன், ஆனால் கடைசியில் புதுமைபித்தன் அவர்களது போதைக்கு ஊறுகாய் என்பது தற்போது தான் தெரிகிறது!. தான் பின்நவீனத்துவவாதி தன்னை அழைத்து கொள்லும் இலக்கியவியாதிகள் அனைவரும் புதுமைபித்தன் தான் தம்மை இலக்கிய உலகுக்கு இழுத்து வந்தது என்கிறார்கள், ஆனால் தம்மை முன்நிறுத்தி யாரோடும் ஒப்பிடும் கேவலமான சிந்தனைகள் நீரோடு கலந்த விஷமாய் எங்கும் பரவியுள்ளது. எனது ஆதங்கம் மட்டுமே தான்!"

இந்த உரையாடல் தனிப்பட்ட முறையில், மின்னஞ்சலில் பரிமாறிக்கொண்டது என்றாலும் கூட ஒரு விஷயம் புலப்பட்டது. எல்லாக் காலங்களிலும், இப்படி ஒரு சிந்தனையோட்டத்தை ஒட்டியும், வெட்டியும் எழுகிற சிந்தனைகளை அப்படியே hijack செய்து கொண்டு போய்விடும் இன்னொரு சாத்தியப்பாடும் இருக்கிறது.

ஏன், எப்படி, எதனால், யாரால், எப்பொழுது என்பது மாதிரியான அடிப்படைக் கேள்விகளின் மீது தர்க்க ரீதியாகப் பேசி, உண்மையைப் புரிந்து கொள்ளத் தொடங்கும் கடவுளை ஒப்புக் கொள்கிற தரப்பும், கடவுளை மறுக்கிற தரப்பும், சீக்கிரமே, எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விட்டு வேறு திசைக்குப் போய்விடுகிறதாக மட்டும் இல்லை, ஒரு வரட்டுப் பிடிவாதத்தோடு, வேறுவேறான விளிம்புநிலைக்கே(extremes) போய்விடுவது தான், இங்கே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ரிச்சர்ட் டாகின்சும் அந்தத் தவறைத் தான் தனது புத்தகம் முழுவதிலும் செய்திருக்கிறார் என்பது தான் நான் இந்தப் புத்தகத்தின் மீது முன்வைக்கிற முதல் விமரிசனமே!

ஒரு extreme நிலையில் இருந்து கொண்டு அவரால் தான் எடுத்துக் கொண்ட எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையான முறையில் விவாதிக்க முடியவில்லை. மதத்தின் பெயரால், ஏகப்பட்ட தவறுகள், குற்றங்கள் இழைக்கப் பட்டிருக்கிறது என்று சொல்லும் போதே, மத நம்பிக்கையற்ற ஸ்டாலின் போன்றவர்களாலும், அதே தவறு, குற்றங்கள் இழைக்கப் பட்டிருக்கிறது என்பதை கவனிக்கத் தவறி விடுகிறார்.

வெறும் தர்க்க ரீதியாக இவர் வாதிடும் போது, மத நம்பிக்கை உள்ளவர்களாகச் சொல்லிக் கொள்கிறவர்கள் நக்கலடிக்கிறார்கள். கேலி செய்கிறார்கள். டாகின்ஸ், நிறையவே உணர்ச்சி வசப் படுகிறார், கோபப் படுகிறார் என்பதையே நானூற்றுப்பதினாறு பக்கங்களிலும் பார்க்க முடிகிறதே தவிர, அறிவுக்கோ, இதயத்திற்கோ புரிகிற மாதிரியான மொழியோ, கருத்தோ இல்லை என்பது தான் விஷயமே!

அப்புறம் அவரே தன்னுடைய புத்தகத்தில் சொல்கிற இந்த வார்த்தைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்:

"Thomas Jefferson, as so often, got it right when he said, 'Ridicule is the only weapon which can be used against unintelligible propositions. Ideas must be distinct before reason can act upon them; and no man ever had a distinct idea of the trinity. It is the mere Abracadabra of the mountebanks calling themselves the priests of Jesus."

நாத்திக வாதத்தில் இருக்கும் பெரிய ஓட்டையே, அது எதிர்கொள்ளும் கருத்தை நேர்மையாகச் சந்திக்க மறுப்பது தான். புரிந்து கொள்ள முயற்சி சிறிதுமில்லாமல்,வெற்று வாதங்களையும், கேலி, அவதூறு பேசுவதையும் மட்டுமே கொண்டிருப்பது தான்!

இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது தான், கீழே இருக்கும் பகுதியைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

"டாகின்ஸின் கோபம் தருக்கத்தை மிக இயல்பாக உதறுபவர்கள், நக்கல்டிப்பவர்கள் மீது ஏற்படுவது. இந்த கோபமே அவரை இதன் மறுமுனைக்குக் கொண்டு செல்கிறது. தருக்கத்தை மீறிய ஒன்று கிடையவே கிடையாது, "trans-rational", "mysticism" போன்ற அனைத்துமே பஜனைகள் என்ற எல்லைக்குக் கொண்டு செல்கிறது."

"இது அனைத்துமே கொள்ளாமையினால் முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கும் பிரச்சனைகள். இதை களைவதற்கே 'முழுமைநோக்கு'. தருக்கத்தின் தேவையும் இதற்கே. வகைப்படுத்துதலும் இதற்கே. இன்று பொருளியலில் இருந்து கலைஇலக்கியம் வரை இருக்கும் மனக்காழ்ப்புக்களுக்கு புரிந்துகொள்ளாமையே முக்கிய காரணம்."
........................................................................................................................................................................

"“பகுத்துப் பகுத்துப் பார்ப்பதன்மூலம் பூரணத்துவம் காணாமல்போய்விடும் அல்லது பூரணத்துவத்தை உணரமுடியாது என்று இவர்கள் சொல்வது அறிவியல் ரீதியில் பகுத்தாயும் திறன் இல்லாததாலோ என்று தோன்றுகிறது.”

பகுத்தலும் அறிதலின் ஒரு பகுதியே. ஆனால் அறிவியல் முறை பகுத்தல்களை மட்டும் கொண்டு பூரணத்தை உணரமுடியாது. ஒரு பாடலை கேட்கும் பொழுது எண்ணற்ற எண்ணங்கள் , படிமங்கள் தோன்றி மறைகின்றன. அவற்றை எல்லாம் dopamine, serotonin, neuro transmitterஐ மட்டும் கொண்டு விவரிக்க இயலாது. the experience is very dense and has lot of subtleties which can't be reduced just to exterior dimensions. "

அண்டை அயல் என்ற வலைப் பதிவில், திரு அருள்செல்வன் கந்தசாமி எழுதியிருந்த அன்றாட மெய்யியல்-முழுமையின் முயக்கம் என்ற பதிவிற்கு திரு பராகா என்பவர் எழுதியிருந்த பின்னூட்டம் தான் மேலே நீங்கள் கண்டது.இந்தப் பதிவையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் முழுமையாகப் படிக்குமாறு பரிந்துரை செய்கிறேன். திரு அருள்செல்வன் கந்தசாமி, என்னுடைய கருத்தோடு ஒத்துப் போகிறார் என்று அல்ல, ( உண்மையில், இருவரும் மாறுபடுகிறோம்) அங்கே ஒரு செழுமையான விவாதம் நடந்திருக்கிறது, இப்படித் தொடர்ந்து சிந்திக்கும் போதுதான் Thesis->Anti-thesis-->Synthesis என்பதாக, பாலின் சாரமாக வெண்ணெயை கடைந்தெடுக்கிற மாதிரி, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ள முடியும்.

தருமி ஐயா தன்னுடைய தொடர்பதிவில் மேம்போக்காகப் பேசிவிட்டுச் சென்றிருக்கும் இந்தப் புத்தகத்தைப் பற்றிய முழுமையான புரிதலுக்காகத் தேடிப் படித்துக் கொண்டிருந்தபோது, நிறைய விஷயங்கள் புலனாயின.

திரு அருள்செல்வன் கந்தசாமியின் இன்னொரு பதிவு, நாத்திகம் பயில் இதையும் படிக்க வேண்டிய பதிவாகப் பரிந்துரைக்கிறேன்.

இந்தப் பதிவு 2004 இல எழுதப்பட்டது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு படிக்கும் போது இன்னும் சுவாரசியம் கூடுகிறது! எதிரெதிர் கோணத்தில் பார்க்கும் போது தான், எந்த ஒருவிஷயத்தின் ஆழமான பொருளையும் அறிந்து கொள்ள முடிகிறது என்பதற்காகவே, டாகின்ஸ் எழுதிய இந்தப் புத்தகத்தின் மீது தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலையென்றால் அது சிலை தான்!
உண்டென்றால் அது உண்டு!
இல்லையென்றால் அது இல்லை!

கண்ணதாசனுடைய இந்த அருமையான பாடல் வரிகளை நினைவு படுத்திக் கொண்டு, தொடர்ந்து பேசுவோம்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!