Showing posts with label சாவித்ரி. Show all posts
Showing posts with label சாவித்ரி. Show all posts

சண்டேன்னா மூணு! ஸ்ரீ அரவிந்தர்! அன்னை! மோகனத் தமிழ்!

டிசம்பர் மாதம் முதல்நாள் இன்று! புதுச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும், அங்கேயே தங்கியிருந்து  ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தைப் பயிலும் சாதகர்களுக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை அவர்களுடைய மாதாந்தரத் தேவைகளை வழங்குகிற  நாளாக Prosperity Day என்று அழைக்கப்பட்டது. 1926 இல்  ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டது என்பதை நவம்பர் 24 தரிசனநாள் செய்தியிலேயே இப்படிப் பார்த்திருக்கிறோம்.

தங்களுடைய சகலத்தையும் ஸ்ரீ அரவிந்தரிடத்தில் ஒப்படைத்துவிட்டு அவருடனேயே தங்கியிருந்து அவரது யோகத்தைப் பயில முன்வந்தவர்களே சாதகர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுடைய மாதாந்திரத் தேவைகள், சோப்பு, எண்ணெய், முதலான நடைமுறைத் தேவைகளை ஸ்ரீ அரவிந்த அன்னை அவர்களுக்கு வழங்குகிற நாளாக மாதத்தின் முதல் நாள் இருந்தது.       



அது தவிர ஸ்ரீ அரவிந்தர் தனது தபசு, யோகத்தில் கண்டுணர்ந்த  பொன்னொளி (Supramental Light)  இந்தப் பூமியில் தங்குவதற்காக தன்னுடலையே அர்ப்பணித்து மகா சமாதிக்கு ஏகிய நாளும் டிசம்பர் மாதத்தில் தான் (டிசம்பர் 5) வருகிறது. 24000 வரிகளில் ஸ்ரீ அரவிந்தர் ஆங்கிலத்தில் இயற்றிய சாவித்ரி மஹா காவியம், அவருடைய தவத்தில் கண்டுணர்ந்த அனுபவங்களை அதிமானச ஒளி / அருட்பெருஞ்சோதியாக மண்ணில் இறங்கி வரக் காத்திருப்பதை விவரிக்கிறது. 

மஹாபாரதத்தில், போகிற போக்கில் சொல்லப் படும் நூற்றுக் கணக்கான கதைகளுள் ஒன்றான இந்த சத்தியவான்-சாவித்திரி கதையினுள் ஒரு மிகப் பெரிய ஆன்மீக ரகசியம் பொதிந்து கிடப்பதைக் கண்டார் ஸ்ரீ அரவிந்தர். இந்தக் கதை, வேதங்களின் திரண்ட உட்பொருளை, சிருஷ்டியின் ரகசியத்தை ஒரு சங்கேதமாகக் குறிப்பிடுவதாகவே ஸ்ரீ அரவிந்தர் கண்டார். அதன் விளைவாக, சாவித்திரி மகாகாவியம் சற்றேறக் குறைய 24000 வரிகளில்  உருவானது. ஸ்ரீ அரவிந்தர் , 1901 வாக்கில் பரோடாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே இந்தக் கதையை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பின்னாளில் சாவித்ரியே அவரது தவமாகவும்,யோக சாதனையாகவும் ஆனது. ஏறத்தாழ முப்பத்தைந்து கால ஞான வேள்வியாக, "சாவித்ரி" ஸ்ரீ அரவிந்தரின் பெரும் காவியமாக உருவெடுத்தது. 1930 களில் "சாவித்திரி- ஒரு கதையும் அதன் தரிசனமும் " என்று வெளியானது,தொடர்ந்து மெருகேறி, SAVITRI - A Legend and Symbol என ஏறத்தாழ 24000 வரிகளில் உருவானது.

சாவித்ரியை படிப்பதே பலவிதமான அனுபவங்களைத் தர வல்லது என்பதை முந்தைய பதிவில் கொஞ்சம் விரிவாகவே எழுதியிருந்ததை வாசிக்கலாம்.

ஸ்ரீ அரவிந்தரையும் ஸ்ரீ அரவிந்த அன்னையையும் வணங்குகிறேன்! திருவடிகளை சரண் அடைகிறேன் .
  ******

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுத மாட்டேனென்கிற தன்னுடைய பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்து மறுபடியும் முகநூலில் மோகனத்தமிழைப் பொழிய ஆரம்பித்திருக்கிறார் .


நமது குருநாதர்
"ஐயய்ய....என்னிடம் அதெல்லாம் சொல்லாதீர்கள்...அதெல்லாம் நான் ஒருகாலும் செய்ய மாட்டேன்" என்றார் நரேன் என்ற இளைஞர்.
"காலம் வரும் பொழுது நீயே என்னதான் முடியாது என்று மறுத்தாலும் உன் எலும்புகள் தாமே போதிக்கத் தொடங்கிவிடும்." என்று இளநகை தவழ பதிலளித்தார் குரு ஸ்ரீராமகிருஷ்ணர்.
காலமும் கனிந்தது. அதுவரை வாழ்வின் பண்பாடாகவும், உணர்வுகளின் வெளிப்பாடாகவும் மட்டுமே பெரும்பாலும் உள்கலந்து விரவியிருந்த ஹிந்து மதம் என்ற திட்ட வட்டமான வடிவம் ஓர் இந்திய இளைஞனின் சுய அனுபவத்தில் கனிந்து ஆங்கில மொழியில் அகில உலகும் மாணாக்கர்களாக அமர்ந்து கேட்க, சிகாகோ சபையில் வெளிப்பட்டது.
ஆங்கிலம், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டிலும் நிகரற்ற புலமை பெற்ற வங்காள பாரத வாலிபன் பேசினான். நவீன நாகரிகத்தின் கல்வியால் விளைந்த பெரும்பயன் பேசியது. அறிவொன்றையே ஆதிமுதல் தன் அந்திம நாள்வரையில் தன் கவசமாகப் பூண்ட தற்காலச் சிந்தனை விழிப்புற்ற ஹிந்து பேசினான்.
ஹிந்து மதத்தின் உண்மையான பெரும் சிறப்புகள் எல்லாம் வெறுமனே புராணங்களாகவும், பொழுது போவதற்காக மாலை வேளையில் அமர்ந்து சொல்லப்படும் கதைகளாகவும் போய்விடாமல், அந்த அத்தனை சிறப்புகளையும், காலம் காலமாக வந்த ஹிந்து மதப் பெருமைகள் அனைத்தையும் ஒருங்கே தன் உன்னத வாழ்வால் மெய்ப்பித்துக் காட்டிய தக்ஷிணேஸ்வரத்து முனிபுங்கவன் பேசினான்.
"குழந்தாய்! நான் சொன்னேன் என்று எதையும் நம்பிவிடாதே! வியாபாரி ஒவ்வொரு நாணயத்தையும் சுண்டிப் பார்த்து வாங்குவதைப் போல், நான் கூறுவனவற்றை அறிவால் நன்கு ஆராய்ந்து சோதனையிட்டுப் பின் உடன்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்' என்று கூறிய வினோதமான குருநாதன் பேசினான்.
ஹிந்து மதமே தன் சிறப்புகளை உள்ளபடி எடுத்துக்காட்ட ஒரு வாழ்வு பூண்டதைப் போன்று வந்த பரமஹம்ஸரிடம் தான் கண்ட ஹிந்து மதத்தைப் பற்றிய நேரடிக் காட்சிக்குப் பின், காலகதியில் என்னென்ன தீங்குகளும், நோய்களும், சமுதாயக் கொடுமைகளும் ஹிந்து மதத்தில் புகுந்து நிலவுகின்றன என்பதை நேரடியாகக் காணவேண்டியோ என்னவோ பாரத தேசம் அனைத்தும் பரிவ்ராஜகனாக அலைந்த பாரதத் துறவி பேசினான்.
ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளின் மூலம் பெற்ற கல்வி;
ஸ்ரீராமகிருஷ்ணரின் உதாரண வாழ்வால் பெற்ற உணர்வு ரீதியான கல்வி;
பாரத தேசத்தை இண்டு இடுக்கெல்லாம் நேரடியாகக் கண்டு தான் பெற்ற அனுபவக் கல்வி --
ஆகிய இந்த மூன்று கல்விகளும் சேர்ந்த வெளிப்பாடுதான் விவேகாநந்தர் என்கிறார் சகோதரி நிவேதிதா.
சிகாகோ சொற்பொழிவுகள் என்னும் சிறு நூலின் பெரும் விளக்க உரையாகத்தான் விரிந்து கிடக்கின்றன ஹிந்து மத சம்பிரதாயங்கள் அனைத்தின் மொத்த நூல் உலகமே. விவேகாநந்தர் தன்னியல்பாகப் பேசிச் செல்லும் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் நெடிய கல்வியும், ஆழ்ந்த அனுபவமும் இருப்பதை நாளுக்கு நாள் வளரும் அதிசய விளக்கமாய் வியந்து கொண்டிருக்கிறேன். நான் விவேகாநந்தரை வெறுமனே வழிபாடு செய்பவன் அல்லன். அவர் கூறுவனவற்றைக் கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்ளும் தன்மையும் எனக்கு இல்லை. ஆனால் ஹிந்து மத சம்பிரதாயங்களின் மூல நூல்கள், ஹிந்து மத வரலாறு இவற்றில் ஆழ்ந்து போகப்போக எத்தனை பெரிய வேலை! எப்படி அந்த மனிதனால் செய்ய முடிந்தது! -- இந்தப் புதிருக்கு என்னிடம் விடையில்லை.
இப்படி ஒரு மனிதன் எழுவதற்கான முன் காரணங்கள் அன்றைய சமுதாயத்திலும் இருந்திருக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவ்வாறே. அவர் தோன்றுவதற்கான கருத்தியல் காரணங்கள் எதுவும் அன்று இல்லை. அப்படி இருந்தால் சொல்லிவிடலாம் -- இந்தக் காரணங்களால் இவர்களது தோற்றம் பொருத்தம் என்று.
ஹிந்து மதமே தன் சிறப்புகளை வாழ்ந்து காட்டினால் எப்படி இருக்கும் என்பதை குரு காட்டினார்.
ஹிந்து மதமே தன்னைத் தெள்ளத் தெளிவாக உலகிற்கு எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் என்பதை சீடர் காட்டினார்.
ஜூலை 4, 1907ல் நான்கு தொகுதிகளாக விவேகாநந்தரின் நூல்கள் அன்று கிடைத்தவை வரையில் வந்த போது, அதற்கு முன்னுரை எழுதியவர் சகோதரி நிவேதிதா அவர்கள். அதில் அவர்கள் கூறுவது :
In the ... volumes of the works of the Swami Vivekananda which are to compose the present edition, we have what is not only a gospel to the world at large, but also to its own children, the Charter of the Hindu Faith.
What Hinduism needed, amidst the general disintegration of the modern era, was a rock where she could lie at anchor, an authoritative utterance in which she might recognise her self. And this was given to her, in these words and writings of the Swami Vivekananda. For the first time in history, as has been said elsewhere, Hinduism itself forms here the subject of generalisation of a Hindu mind of the highest order. For ages to come the Hindu man who would verify, the Hindu mother who would teach her children, what was the faith of their ancestors will turn to the pages of these books for assurance and light. Long after the English language has disappeared from India, the gift that has here been made, through that language, to the world, will remain and bear its fruit in East and West alike.
What Hinduism had needed, was the organising and consolidating of its own idea. What the world had needed was a faith that had no fear of truth. Both these are found here.
சுவாமி விவேகாநந்தரின் முழுநூல் தொகுதியும் தமக்கு சௌகரியமான எந்த மொழியிலோ, ஒவ்வொரு ஹிந்துவின், ஆணோ, பெண்ணோ, இளம்வயதோ, முதியவரோ, ஒவ்வொருவரின் படிப்பிலும், ஆழ்ந்த சிந்தனையிலும் திகழும் காலத்தைக் காலமே அருள்வாயாக!

ஸ்ரீ அரவிந்த அன்னையே! ஸ்ரீரங்கம் மோகனரங்கனின் மோகனத்தமிழ் தங்கு தடையின்றிப் பெருகிவர அருள் செய்வாய்! 

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்?  எதற்காகப் பிறந்தேன்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்விகள் அவ்வப்போது ஒவ்வொரு மனிதனுக்கும் வந்துபோகும். மரணபயம் அல்லது மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு அடிப்படையாக இருப்பதையும்   கொஞ்சம் கூர்ந்து கவனித்துப்  பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய சிந்தனையோட்டம் மனிதகுலத்தின் ஆரம்பநாட்களில் இருந்தே  இருந்துவருவதையும் இந்தப்பக்கங்களில் அவ்வப்போது பேசி வந்திருக்கிறோம். முந்தைய பதிவில் சத்தியவான் -சாவித்திரி கதையை வைத்து ஸ்ரீ அரவிந்தர்  சாவித்ரி என்ற மகாகாவியத்தை எழுதியதையும் பார்த்திருக்கிறோம். 


மேலே மதுரை மீனாக்ஷி கோவில் தெற்கு கோபுரம் எதிரே இருக்கும் சொக்கப்ப நாயக்கன் கோவில் தெருவில் இருந்த உறவினர் வீட்டில்தான் பால ரமணனுக்கு மரண அனுபவமும் அதைத் தொடர்ந்து நான் யார்  என்ற கேள்வியும்  அதைத் தொடர்ந்த தேடலில் திருவண்ணாமலைக்குப் புறப்படுகிற நிகழ்வுமாக ......


வீட்டை விட்டு வெளியேறிய  தருணத்தில் ஸ்ரீ ரமணர் எழுதி  வைத்து விட்டுப்போன கடிதம் இன்றைக்கு ஸ்ரீ ரமண மந்திரமாக இருக்கும் அந்த வீட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது  நான் என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது  இந்தக் கடிதத்தின் முடிவில் இது என்று ஆகிப்போன முதிர்ச்சி,பக்குவத்தை பகவான் ஸ்ரீ ரமணரின் சரிதத்தில் பார்க்க முடியும்.
மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்தப்பக்கங்கள் உதவியாக இருக்கும் 

ரமணருடைய பாதையை, 'மலைப் பாதைஎன்றே வைத்துக் கொள்ளலாம்.  ஆனால்இந்த மலைப்பாதை,எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமோ?  இப்படி ஒரு பாதை இருப்பது தெரிந்தாலும்எல்லோருக்கும் அதில் ஈடுபடும் மனமும்வாய்ப்பும் வாய்த்து விடாது என்பதே

"ஒரு தரம் கபாலி சாஸ்திரியாரிடம் கேட்டேன், "உங்களை வணங்கும் போது, உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கிற அதே மாதிரி வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் மூவருடைய ஆசியும் ஒருங்கே கிடைக்கும் அல்லவா?!"

"ஆமாம்உனக்குக் கிடைக்கும்என்று தனக்கே உரித்தான பாணியில் சாஸ்திரியார் பதிலிறுத்தார்.

இந்தப் பகுதியில் படித்த 'சின்ன நாயனா'வின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப என்னைச்சுற்றி வந்து கொண்டே இருந்ததுஇந்தப் புண்ணிய புருஷர்கள்ஸ்தூல சரீரத்தில் இருந்த காலத்தில்நான் பிறக்கவில்லைநேரடி தரிசனம் பெறுகிற வாய்ப்பும் எனக்கு இருந்ததில்லைஎழுதியவர் எத்தனைபாக்கியம் செய்திருமுடக்கி க்க வேணும் என்கிற நினைப்பிலேயே, எழுத உத்தேசித்திருந்தது தள்ளிப் போனது.கபாலி சாஸ்திரியாரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று மறுபடி அமரும் போதுசங்கரநாராயணன் வார்த்தைகளில் பொதிந்திருந்த திரிவேணி சங்கமத்தைக் கண்டேன். இப்படி மனம் கசிந்து எழுதியது இங்கே 

இப்போது இதெல்லாம் எதற்காக என்கிறீர்களா?

கடந்த இரண்டு வருடங்களாகவே உடல் உபாதைகள்  என்னை முடக்கி வைத்திருப்பதோடு மரணத்தை வலிந்து வரவேற்கிற மனநிலையைத்தூண்டி விட்டுக் கொண்டே இருப்பதை என்னதான் அசட்டை செய்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தாலும் முற்றிலும் தவிர்க்க முடியவில்லை.

अप्ना तो कोई नहीं, हम काहे को नांहि ।
पार पहूंची नाव जब, मिलि सब बिछुडे. जांहि ॥


தன்னவரென்று எவரும் ஏது, தானும் பிறர்க்கு உறவேது
முன்னம் சேர்ந்தவர் பிரிவரே, படகு கரைதொடும் போது 


மாற்று :

என்ன வரென்று எவருமில்லை, யானும் பிறர்க்கு றவில்லை
பரிசல் கரைசேர்ந்த பின்னே, பயணியர் போவார் தம் வழியே


வாழ்க்கைப் பயணம் ஏதேதோ காரணங்களால் திசை மாறிக் கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு இலக்கு வந்ததும் ஒரு சிலர் விட்டு போகிறார்கள் அல்லது நாம் விட்டுச் செல்கிறோம். புது உறவுகள் அல்லது நண்பர்கள் சில காலத்திற்கு சேர்கின்றனர். இவையெல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மரணம் என்கிற இலக்கை அடைந்தவுடன் எல்லாமே அர்த்தமற்ற உறவுகளாகி விடுகிறது. அதை ராமகிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார்.

“கடலில் மிதக்கும் சில கட்டைகள் ஏதோ ஒரு அலையால் நெருங்கி வருகின்றன. அடுத்த ஒரு பெரும் அலை வந்து பிரிக்கும் வரை அருகருகே மிதக்கின்றன. உலகின் உறவுகள் தந்தை-தாய், கணவன் -மனைவி, மகன்-மகள் என்ற உறவுகளும் இப்படிப் பட்டவைதான். எதுவும் உண்மையானது கிடையாது. உண்மையான உறவு என்று ஒன்று உண்டானால் அது இறைவனுடைய திருவடிகள் மட்டுமே” என்று கபீரன்பன் இந்தப் பக்கங்களில்அழுத்தம்திருத்தமாகச்சொல்கிறார்.

பொதுவாக என்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்துக் கொள்வதோ கொண்டாடுவதோ வழக்கமே இல்லை என்றாலும் இன்றுடன் 61 வயது நிறைந்து நாளை பிறந்தநாள் (20 மார்ச்) என்று நினைவு  வரும்போது நான் ஏன் பிறந்தேன், எதற்காகப் பிறந்தேன், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி எதற்கும் விடை காணமுடியாமல், கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தவற  விட்டுவிட்டேனோ என்ற  தவிப்பு மட்டும் உருக்கிக் கொண்டிருக்கிறது.


அண்டினபேரை நழுவவிடாதவன் அச்சுதன் என்னை மட்டும் விடுவானோ?

அவன் கைவிடமாட்டான் என்கிற நம்பிக்கையோடு ......

நாளை புதிதாய்ப் பிறக்கிறேன்!

இன்னும், இன்னும்...!


ஒரு அழகிய கனவு கலைகிறது என்று என்னுடைய வருத்தங்களை, சில நாட்களுக்கு முன் பகிர்ந்து கொண்டிருந்தேனே, நினைவிருக்கிறதா? யாரோ, அதை யாகூவுக்குச் சொல்லியிருக்கிறார்கள் போல! இன்னும் கொஞ்ச நாள், வேறு ஒரு தளத்திற்கு மாற்றிக் கொள்வதற்கு, அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். நன்றி யாகூ!

யாஹூ!360 பக்கங்களில், எனது பழைய பதிவு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு சின்னக் கதைதான்! கதைகளில் தான், எத்தனை விஷயங்களை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது?! கதையை முதலில் பார்ப்போம், அப்புறம் அது என்ன சொல்ல வருகிறது என்பதை யோசிப்போம்.

குரு, சீடர்கள், காலிப்பாத்திரம்!


அந்தநாட்களில் குருகுல வாசம் என்று, மாணவர்கள், குருவுடைய இடத்திலேயே தங்கிக் கற்ற நாட்களில், கற்றதை முறையாகப் பெற்றார்களா என்பதை சோதித்துப் பார்க்கிற முறை ஒன்று இருந்தது. அன்றைய கல்வி என்பது, வெறும் ஏட்டுப்படிப்பு, மனப்பாடம் அல்லது பிட் அடித்து அப்படியே வாந்தி எடுப்பது என்ற பின் நவீனத்துவம் எல்லாம் இல்லாத, குழப்பம் இல்லாத கல்வி முறை. கற்றது, வாழ்க்கைக்குப் பயன்படுகிறதா என்பதை, ஒவ்வொரு கட்டத்திலும் பிரயோகிக்கவும், உன்னதமான ஒழுக்கத்தோடு வாழ்வதே கல்வியின் பயன் என்றும் இருந்த நாட்கள்.

அந்தப்படிக்கே, ஒரு குரு, தன்னிடம் கல்வி பெற வந்திருந்த மூன்று மாணாக்கர்களை, அவர்கள் புரிந்து கொண்டது எந்த அளவுக்கு இருக்கிறதென்பதைப் பரீட்சை செய்வதற்காக அழைத்தார். ஒவ்வொருவரிடமும், ஒரு குடத்தைக் கொடுத்தார். குடத்தில் இருக்கிற காற்றை, முழுதுமாக எடுத்து விட வேண்டும்-இது தான் அவர்களுக்கு வைத்த முதல் தேர்வு.

நானாக இருந்தால் "போடா ஜாட்டான்" என்று பரீட்சையை விட்டு ஓடி வந்திருப்பேனோ, என்னவோ!
[
நன்றி:டோண்டு ராகவன். அவர் இந்த வார்த்தையை, ஜெகசிற்பியன் என்ற சமீப காலத்திய எழுத்தாளர், 1960 களில் அவர் எழுதிய கதையில் இருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்]

ஆனால்,அந்தநாட்களில் அப்படியெல்லாம், முன்-பின் நவீனத்துவமாகச் சிந்திப்பது, ஆசிரியர்களுக்கோ, மாணவர்களுக்கோ கிடையாதாகையால், அந்த மூன்று மாணவர்களும் உண்மையாகவே, பூரண விசுவாசத்துடன், குரு சொன்ன வேலையைச் செய்ய முனைந்தார்கள்.

முதல் சீடன், பாத்திரத்தின் வாயிலிருந்து காற்றைக் கஷ்டப்பட்டு வெளியேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான். இரண்டாமவனோ, பாத்திரத்துக்குள், கல், மணல் இவற்றை நிரப்பி, காற்றை வெளியேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான். இந்த இருவருமே, தங்களுடைய முயற்சி பலனில்லாமல் போனதை, எப்படியோ காற்று கொஞ்சமாவது பாத்திரத்துக்குள் இருப்பதை உணர்ந்தார்கள்.

மூன்றாவது சீடன் என்ன செய்கிறான் என்பதை குருவும், முதல் இரண்டு சீடர்களும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தபோதே, அவன் குருவிடம் வந்து பணிவுடன் சொன்னான்: "நீங்கள் சொன்னபடி செய்துவிட்டேன்"

குரு கேட்டார்: "எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்?"

"
குருவே, பாத்திரம் வழிய வழிய நீரால் நிரப்பி விட்டேன். ஒரு குமிழியளவு கூடக் காற்று இல்லாதபடிக்குப் பாத்திரத்தை, நிரப்பி விட்டபடியால், நீங்கள் சொன்னபடியே, பாத்திரத்தில் இருந்த காற்று முழுதையும் வெளியேற்றி விட்டேன்."

சின்னக் கதை தான், இந்தக் கதை, இரண்டு உன்னதமான வாழ்வியல் அனுபவத்தையும், ஆன்மீக வெளிச்சத்தையும் அறியத் தருகிறது.

முதலாவதாக, இங்கே பிரபஞ்சத்தில், பரிணாமத்தில் வெற்றிடமாக எதுவுமே இருக்க முடியாது, ஏனென்றால், இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது, நிராகரிக்கிறது. அதனால் தான், ஒரு விஷயத்தை காலி செய்வது என்பது, இன்னொரு விஷயத்தை நிரப்புவதாகத் தான் இருக்கிறது. இயற்கையின் இந்த சூட்சுமத்தை அறிந்ததனால் தான், நம்முடைய முன்னோர்கள், "சேரிடம் அறிந்து சேர்" என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். இதையே கொச்சையாக, வழக்குத் தமிழில், பன்றியோடு சேர்ந்த கன்றும் எதையோ தின்னப் போகும் என்று தெரிந்தும் வைத்திருக்கிறோம்.

நடைமுறைக்கு வராத தெரிதல், என்ன செய்யும்? திரிந்து, உருமாறி, அர்த்தமில்லாத வெறும் சடங்காக மட்டுமே நிற்கும். நமக்குத் தெரியவில்லை, அல்லது பிடிவாதமாக நாம் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம் என்பதனாலேயே மூத்தோருடைய அனுபவங்கள், அவர்கள் சொல்லி வைத்தவை எல்லாம் 'மூட நம்பிக்கை' என்று ஒதுக்கி வைத்து விட முடியாது! மூடத்தனம் வந்ததெல்லாம் புரிந்து கொண்டதில் வந்த தவறுகளே!

நடைமுறை வாழ்க்கையில், பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதான, 'பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியாக' ஆகி விடாமல் இருப்பதற்கு, கொஞ்சம் சிரமப் பட்டுத் தான், வெளியே வர வேண்டியிருக்கிறது. இந்த முயற்சி கூட இல்லை என்றால், 'பகுத்தறிவு' என்ற சொல் எப்படி இன்றைக்கு, அதன் உண்மையான பொருளில் இல்லாமல், வேறு விதமான அசட்டுத்தனமாக இருக்கிறதோ, அது மாதிரி ஆகி விடும்! நடைமுறை வாழ்க்கையில், இப்படி ஒன்றை எதிர்ப்பது என்பது ஏன் என்று தெரியாமலேயே அதன் பின்னால் கூட்டமாக ஓடுவது, சேரிடம் அறியாமலேயே சேர்ந்து, அதிலேயே சிக்கிக் கொள்வதுதான். ஒரு சிக்கலில் இருந்து விடுபடுகிறேன் என்று இன்னொரு புதைகுழிக்குள் விழுந்து விடுவது மாதிரித்தான்.

அடுத்து, கற்றல் என்பது தொடர்ந்து நிகழ்வது, ஒரு தடவை குடத்தை நிரப்பியதும் முடிந்து போவதில்லை.நெருப்பு இன்னும் இன்னும் என்று கேட்பது போல, சாப்பிட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மறுபடியும் பசி எடுப்பது போல தொடர்ந்து கொண்டே இருப்பது. உயிர்மையின் ஒரு அடையாளமே, இந்த 'இன்னும், இன்னும்' தான்!

புதியது கற்க வேண்டுமானால், புதிய அனுபவத்திற்கும் வளர்ச்சிக்கும் தயாராக வேண்டுமானால்,ஏற்கெனெவே கற்றதைக் கழற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். Emptying the cup என்று ஜென் கதைகளில் சொல்வது இதுவே. ஏற்கெனெவே நிரம்பிய கோப்பையில், புதிதாக எதையும் நிரப்ப முடியாது, அதனால், கோப்பையை காலி செய், பிறகு நிரப்பு என்பது இது தான்.

குடத்தில் இருக்கும் பழைய நீரைக் கொட்டி விட்டு, சுத்தம் செய்து புதிதாய்த் தண்ணீர் நிரப்பி வைப்பது போல, ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து நிகழ்கிற அற்புதம். இந்த அற்புதம், நம்முடைய சம்மதம் கேட்டு நிகழ்வதில்லை, சம்மதப் பட்டுத் தெரிந்து நடந்தால் அது ஒரு விதமாகவும், முரண்டு பிடித்து மறுத்து நடந்தால், அது இன்னொருவிதமாகவும், பரிணாமச் சக்கரத்தில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.


முழுமை அல்லது பூர்த்தி என்று நாம் கருதுவதில், நல்லது, நல்லது அல்லது என்பன அளவிலும், பண்பிலும் மாறிக் கொண்டே இருக்கும். மனிதனிடத்தில், இரண்டு விதமான முரண்பாடுகள், எப்போதும் மோதிக்கொண்டே இருக்கும். முதலாவது, தனித்துவமானது, தன்முனைப்பாக வெளிப்படும்; இன்னொன்று குழு மனப்பான்மை. இந்த இரண்டு முரண்பாடுகளின் மோதலைத் தீர்ப்பதற்கு, இந்த இரண்டையும் விட உயர்ந்ததான மூன்றாவதுகுறிக்கோள் உருவாகும். இது, முந்தைய இரண்டையும் சமன் பெறச் செய்து அல்லது அவைகளை மீறி ஒரு தீர்வாக அமையும்.

ஆனாலும், முரண்பாடுகளும், மோதல்களும் ஓய்ந்து விடுவதில்லை. மாறாக, மென்மேலும் வளர்ந்து கொண்டிருப்பதாகத் தான் தோற்றும். பழைய சம்ப்ரதாயங்கள், நடைமுறைக்கு உதவாமல் போகும். இவை மேலோட்டமான பொய்த்தோற்றமே!

இதன் பின்னால் எல்லையற்ற மெய்யுணர்வு தடைகளைத் தகர்த்து வெளிப்படும். இந்த எல்லையற்ற மெய்யுணர்வு தான், நம்முடைய உன்னதமான தெய்வீக நிலை. இது தான், நமக்கும் , இந்தப் பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத உறவை வெளிப்படுத்தும்.

"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது; பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது"


மெய்ப்பொருள் காண்பது என்பது அப்படித்தான், உங்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, உங்களுடைய சம்மதத்தை வேண்டாமலேயே, உங்களை அனுபவங்கள் என்கிற படிக்கட்டுக்கள் வழியாக உயர்த்திக் கொண்டே இருப்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.


எப்படி என்பதை, இந்தப் பழைய பதிவில் மறுபடி நினைவு படுத்திக் கொள்ளலாம்.


“Our human knowledge is a candle burnt
On a dim altar to a sun-vast Truth”


ஸ்ரீ அரவிந்தர்,சாவித்ரியில் அருளியது

Savitri Bk. II, C. XII, P. 280