Thursday, July 09, 2009

ஒரு அழகிய கனவு, கலைகிற நேரம்!


இங்கே உரத்த சிந்தனையாக, அன்பைப் பற்றி நேற்று இரண்டு பதிவுகளைப் படித்தேன்.

அன்பாய் இரு..பாசமாய் இராதே! இப்படி உரத்த சிந்தனையாக இங்கேயும்,
அதற்குப் பின்னூட்டம் எழுதுகிற சாக்கை வைத்து ஆன்மீக அன்பு என்கிறது..என்று இங்கேயும்!

ஒரு பதினைந்து, இருபது நாட்களாகவே மனதிற்குள் ஒரு பாரம்! ஒரு இனம் புரியாத சோகம்!

போதாக் குறைக்கு, கொஞ்சம் சீரியசான விஷயம் ஒன்றை எடுத்துக் கொண்டு, The God Delusion புத்தகத்திற்கு விமரிசனமாக மெய்ப்பொருள் காண்பதறிவு என்று தொடர் பதிவுகளாக எழுதிக் கொண்டிருந்ததும், அது தொடர்பான விஷயங்களை, புத்தகங்களை, வலைப் பக்கங்களைப் படித்துக் கொண்டு ஒழிச்சலே இல்லாமல் இருந்த போதிலும் கூட, ஒரு ஓரத்தில், இன்னும் சில நாட்களில் பிரிந்து விடப் போகிற, இனித் திரும்பியே பார்க்க முடியாத ஒரு அனுபவம், கனத்துக் கொண்டே தான் இருந்தது. அதைப் பற்றியே நினைக்க வேண்டாம் என்று இருந்த போதிலும், கனவாய்ப் பழங்கதையாய்ப் போகப் போகிற ஒன்று தானே என்று இருந்து விட முடியவில்லை!

காரணம், அங்கே கண்ட அன்பு!

நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறைகள் தெரியாது என்று தன்னுடைய வலைபக்கத்தின் முகப்பில் எழுதியிருப்பார் முனைவர் திரு.நா.கண்ணன்! அப்படியெல்லாம், எழுதி வைக்காமலேயே, பரிமாறிக் கொண்ட ஒவ்வொரு வார்த்தையிலும், நேசத்தைச் சொன்ன தளம் ஒன்று ஜூலை 13 ஆம் தேதியோடு காணாமல் போகப் போகிறது!

ஆமாம், Yahoo!360 வலைப்பதிவுகளின் தளத்தை நிரந்தரமாக மூடிவிடப் போவதாக, யாகூ நிர்வாகம் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது. வேறு ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்பு, இன்னும் இத்தனை நாள் இத்தனை மணி இத்தனை நிமிடம் என்ற கடிகார அறிவித்தலோடு, மூன்று வாரங்களுக்கு முன்னால் வந்தபோது, நெஞ்சம் கனக்கத் தான் செய்தது. அதை மறந்து விட்டு, வேறு இயல்பான வேலைகளில் கவனம் செலுத்துவோம் என முயன்றாலும், சில நினைவுகள், நினைவுகளுக்குப் பின்னால் மனிதர்கள், அவர்களிடமிருந்து கிடைத்த நல்ல எண்ணம், எதையுமே எதிர்பார்க்காமல், எதிர்பாராமல் கிடைத்த புதையல் போலக் கிடைத்த அன்பைப் பொழிந்த மனிதர்கள் என்று மனம் அசைபோடத் தொடங்கியதை, தடுக்க முடியவில்லை.

ஜூலை மூன்றாம் தேதி, அங்கே எனது உணர்வுகளை, பதிவு செய்து விட்டு, கொஞ்சம் மறந்து போன மாதிரி இருந்தேன்.உண்மையில் அப்படி இருக்க முடியவில்லை என்பது, ஜூலை 13 நெருங்க நெருங்க, ஒருவிதமான சோகம் அப்பிக் கொள்ளும் போது தான் புரிகிறது.

வலைப் பதிவுகளைப் பற்றிய கேள்வி ஞானம் முன்னமே ஓரளவு இருந்தாலும், ஐந்தாண்டுகளுக்கு முன்னால், யாஹூ! 360 தான், அதை மிக எளிமையாக, நேரடி அனுபவமாகத் தந்தது. சிக்கல் இல்லாத வகையில், பதிவுகளை இட முடிந்தது, யாகூவை விட மற்ற தளங்களில் வசதிகள், நுட்பங்கள் அதிகமாக இருந்தபோது கூட யாஹூ! 360 தளத்தை விட இன்னமும் மனமில்லாதவர்கள் நிறையப்பேர் இருக்கிறோம். வெவ்வேறு தளங்களில் கணக்கை ஆரம்பித்து வைத்திருந்தாலும், என்னவோ, யாஹூ!360 ரொம்பவுமே பிடித்துப் போனது, எனக்கு மட்டும் என்றில்லை, அங்கே நான் சந்தித்த நிறைய நண்பர்களுக்கும் அப்படித்தான் இருந்தது.


இரண்டுவருடங்களுக்கு முன்னாலேயே யாஹூ!360 தளம் மூடப் போவதாக வதந்திகள், கேள்விகள், கோபக்கணைகள் கிளம்பி, இப்போது கடைசியில், இன்னமும் இத்தனை நாட்கள் தான், மூடப் போகிறோம் என்ற அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வந்தாயிற்று. வலைப்பதிவுகளைக் காத்துக் கொள்வதற்கு, இன்னொரு தளத்திற்கு மாற்றிக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று உதவிக் குறிப்புக்களும் வந்தாயிற்று.

ஒரு அழகிய கனவு கலைகிற மாதிரியே இந்த இழப்பை உணர்கிறேன். இந்தக் கனவு கலைந்ததில், மெல்லிய சோகத்தோடு தான் இந்தப் பதிவை எழுத முடிகிறது.

2004
ஆம் ஆண்டு மத்தியில், என்னுடைய பணிச் சூழலில் ஏகப்பட்ட சிக்கல்கள், விரோதங்கள் என்று மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நேரத்தில், அமைதியாகப் பிரார்த்தனையிலேயே, எனது கவனத்தை ஒருமுகப்படுத்த முயன்று கொண்டிருந்த நேரம் அது. என்னுடைய கவலைகளைத் தம்பட்டம் அடித்து, சுய பச்சாதாபத்திலோ, அனுதாபம் தேடுவதிலோ எழுதவில்லை. ஊருக்கு உபதேசம் செய்கிற கருவியாகவும் கருதவில்லை. அப்போது மட்டுமில்லை, இப்போதும் கூட எவருக்கும் உபதேசம் செய்கிற பாணியில் எதையுமே எழுத முற்படவில்லை. அப்படி ஒரு எண்ணமுமில்லை!

யாஹூ!360 இல தொடங்கிய வலைப் பதிவுகள், என்னை நானே ஒரு சாட்சியாக இருந்து பார்க்கத் தொடங்கிய ஒரு அனுபவத்தின் வெளிப்பாடு. ஒவ்வொரு நாளும், ஏதோ ஒரு பிரார்த்தனையைக் கையில் எடுத்துக் கொண்டு யோசிக்கையில், எங்கே தவறு நடந்திருக்கிறது என்பது புத்திக்கு உறைக்க ஆரம்பித்ததையும், இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்ற கேள்விக்கு விடை தேடி எனக்குள்ளேயே ஆராய்ந்து கொண்டிருந்த தேடலையும், வெளிப்படுத்துகிற சிறு குறிப்புக்களாகவே அவை இருந்தன.

பதிவிட ஆரம்பித்ததோடு, பராக்குப் பார்க்கிற புத்தி போகாததால், பிறருடைய பக்கங்களையும் பார்க்கத் தோன்றியது. நாளடைவில் ஒரு நட்பு வட்டம் பெரிதாகவே ஆரம்பித்தது. எத்தனை அழகான நாட்கள் அவை?!

எவ்வளவு அற்புதமான மனிதர்களோடு, முகம் தெரியாமலேயே சிநேகிதமாக இருக்க முடிந்தது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறபோதும், இதயம் மலர்வதை உணர முடிகிறது! மூன்று வருடங்களுக்கு முன்னால் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டபோது, என்னுடைய நெருங்கிய உறவினர்கள் மாதிரியே எனக்காக, ஒரு நட்பு வட்டம் அங்கே பிரார்த்தனை செய்தது, என்னோடு துணையிருந்தது. குறிப்பாக டாக்டர் ஜெயராஜ், தன்னுடைய பதிவில், எழுதிய வார்த்தைகள், பிரார்த்தனை இன்னமும் நினைவில் இருக்கிறது. ஊர் தெரியாது, முகம் தெரியாது, ஆனாலும் அன்பை மழை பொழிவது போலப் பொழிந்த நல்ல இதயங்களைக் கண்டு கொண்ட தருணங்களை 360.yahoo.com எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. யாகூ தளத்திற்கு நன்றி சொல்ல வேண்டிய தருணமிது!

ஏன், எதற்கு என்ற காரணங்கள் இப்போது வேண்டாம், கொஞ்சம் கொஞ்சமாக,நட்புவட்டத்தை சுருக்கிக் கொண்டே வந்தவன், மொத்தமாக அதை உதறும் தருணமும் வந்தது.ஒரு மந்தைத் தனமான இயல்பிலிருந்து மனிதன் விடுபடவில்லை என்பதை, 2006 நவம்பரில் வேறுவிதமான அனுபவம் வழியாகக் காட்டித் தந்ததும் யாஹூ!360 தான்.

மாவடு போ டுவமா இப்படி palindrome விளையாட்டைத் தமிழில் நடத்திக் கொண்டிருந்த ஒரு பதிவில் அறிமுகமான திருமதி கீதா நடராசன், வலைப் பதிவிலேயே வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை நடத்திக் காட்டிய திரு கமலசேகரன், எஜ்ஜாட்லி ஒரு ரொம்ப அழகான உடுமலைப்பேட்டை! என்று Profile இல தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு மிகவும் சுட்டித்தனமாகப் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்த சௌமீ, பத்துப் பதினைந்து வரிகளுக்குள்ளேயே ஒரு செய்தியை மையமாக வைத்துப் படிக்கிறவர்களை யோசிக்கவும் வைக்கிற கதைகளாகவும் எழுதும் இத்தீ பிரசாத், ஒரு மயக்க மருந்து நிபுணராக தான் சந்தித்த சில நோயாளிகளை பற்றி, சில அபூர்வமான குணச்சித்திரங்களைச் சொல்லி, அவர்களுக்காகப் பிரார்த்தனையுடன் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்த டாக்டர் ஜெயராஜ், The Smiling Doctor என்று சுய அறிமுகத்துடன் பதிவுகளில் சுவாரசியமாக எழுதிக் கொண்டிருந்த டாக்டர் அக்ஷய், மிகவும் வெள்ளந்தித்தனமாக எல்லோருடைய பதிவிலும் கலக்கிக் கொண்டிருந்த ஈரோட்டுப் பதிவர் ஆசாத், இப்படி எத்தனை எத்தனை பேர்கள்! இங்கே ஒவ்வொருவர் பெயராகச் சொல்லப் போவதில்லை. ஒவ்வொரு பதிவைப் பற்றியும் சொல்லப் போவதில்லை.அதற்கு அவசியமும் இல்லை.

முன்னூறுக்கும் மேற்பட்ட பதிவர்கள், யாஹூ!360இல எனக்கு நினைவில் நிற்கிறார்கள்! அதில் ஒரு சிறு பகுதியைத் தான், அனுபவங்கள் மிக அழகானவை, கூடியிருந்த நாட்கள் ஒரு அழகான கனவு என்பதற்காகச் சொன்னேன். அற்புதமான அனுபவங்களைத் தந்தவர்களுக்கும், கூட இருந்து பங்கெடுத்துக் கொண்டவர்களுக்கும், இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த யாகூ நிறுவனத்திற்கும் எனது மனப் பூர்வமான நன்றியை தெரிவிக்கும் பதிவு இது.

ஒரு அழகான, சுகமான கனவு கலைகிறது! 360.yahoo.com தளம் கலைந்து விடலாம்.கனவின் நினைவுகள், இன்னமும் இருக்கிறதே!

இணையம் உலகத்தை ரொம்பவுமே சின்னதாக்கி விட்டது என்று நம்புகிறவன் நான். அன்பு நண்பர்களே, நிச்சயமாக,மீண்டும் சந்திப்போம்!

5 comments:

 1. உலகில் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும்...
  காலங்கள் எல்லாவற்றையும் மாற்றும், தோழர் கிருஷ்ணமூர்த்தியாரே!!

  ReplyDelete
 2. மாற்றங்கள் இயற்கை தான் என்பதை அறிவு சொன்னாலும், உணர்வு அங்கே கொஞ்சம் ஏக்கத்தோடு திரும்பிப்பார்ப்பதும் இயல்புதானே! இங்கே என்னுடைய வருத்தம், இரண்டு விதம். நன்கு வளர்ந்து கொண்டிருந்த யாகூ நிறுவனம் தொடர்ந்து சறுக்கிக் கொண்டே இருப்பது, இந்த வலைத்தளத்தைக் கூட பீடா நிலையிலேயே கடைசி வரை வைத்திருந்த பலவீனம், பயனர்களுடைய நாடியைக் கணிக்கத் தவறியது, 360.yahoo.com ஐ மூடப் போவதாக இரண்டு வருடங்களுக்கு முன்னாலேயே முடிவைக் கசிய விட்டிருந்த போதிலும், அதைச் செயல்படுத்தாமலும், வேறு விதத்தில் வளர்க்க முயற்சிசெய்யாமலும் இருந்தது.

  அப்புறம், Yahoo! MASH என்று, வேறு ஒரு தளத்தைக் காப்பி அடித்து அதிலும் தோற்று, சென்ற வருடம் செப்டம்பரில் தான் மூடு விழா நடத்தினார்கள்.

  ஆனாலும், வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!

  ReplyDelete
 3. மிக இயல்பாக எழுதியிருக்கீர்கள் சார்.

  ReplyDelete
 4. வருத்தத்தை தூக்கி எறிந்துவிட்டு அடுத்த ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள். உங்கள் வருத்தத்தினால் உங்களைத் தவிர வேறு யாருக்கும் இழப்பில்லை.

  மனதின் பிடியில் வசமாய்ச் சிக்கி இருக்கிறீர்கள். உதறிவிட்டு நிகழ்காலத்திற்கு வாருங்கள்:)

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails