Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

ஜனவரியில் ஒரு அரசியல் நவராத்திரி! ஒவ்வொரு நாளுமே அதிர்வேட்டுத்தான்!



வருகிற இந்த ஒன்பது நாட்கள்! ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு, கூட்டணிக் கட்சிகளின் விரிசலில் அழுகிச் சிதையுமா அல்லது நீதிமன்றத்தீர்ப்புக்களில் கருகுமா என்ற கேள்விக்கு விடை தெரிய வரலாம் என்ற  பரபரப்புத் தொற்றிக் கொள்ள வைத்திருக்கும் நவ ராத்திரியாக, வருகிற ஒன்பது நாட்களும் இருக்கும்!

திருட்டுப் பூனைகளுக்கே ஒன்பது உயிர்கள் என்பார்கள்!
அப்படியானால், திருட்டு அரசியல் வியாதிகளுக்கு அதைவிடக் கூடத் தானே இருக்க வேண்டும்? அரசியல்வியாதிகள் மற்றவர்களை மாட்டி விட்டுத் தாங்கள் தப்பித்துக் கொள்கிற கலையைக் கற்றுத் தேர்ந்தவர்கள் என்று அர்த்தமில்லை! இங்கே மற்றத் துறைகள், அவர்களை மாட்டி விடுகிற அளவுக்கு நேர்மையானதாகவும், வலிமை, துணிச்சலோடு இருந்ததில்லை என்பது மட்டுமே இத்தனை நாட்கள் அவர்கள் தப்பித்துக் கொள்வதற்குக் காரணமாக இருந்து வந்திருக்கிறது.

கே ஜி பால கிருஷ்ணன் மாதிரி அரசுக்கு எல்லாவிதத்திலும் வளைந்து கொடுக்கிற மாதிரியான ஒரு தலைமை நீதிபதி இருந்திருந்தால், இன்றைக்கு, உச்சநீதிமன்றத்தில் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று வரிசையாக ஊழல் மந்திரிகள் என்று சிலரை மட்டும் தனிமைப்படுத்தி திஹாருக்குப் பெயரளவுக்கு அனுப்பி வைத்து மற்றவர்கள் எல்லாம் கறைபடாத கைகளுக்குச் சொந்தக் காரர்கள் என்று நாடகமாட வேண்டிய அவசியமே இருந்திருக்காது!

கூட்டணி தர்மம் என்றால் பெட்டிகளை மட்டும் பங்கு போட்டுக் கொள்வதல்ல! மாட்டிக் கொண்டால் , சிறைக்குப் போவதிலும் கூட்டாளியாக வேண்டுமே என்பது கூடத் தெரியாத மண்ணாந்தைகள் தான் நம்மை ஆள்கிற பொறுப்பில் இருக்கிறார்கள்!ஆ. ராசா, தெனாவெட்டாக, நான் என்ன குற்றம் செய்தேன்? பிரதமருக்கும், அன்றைய நிதியமைச்சருக்கும் தெரிந்தே தானே செய்தேன்? வேண்டுமானால், அவர்களையும்சாட்சிகளாக இந்த வழக்கில் விசாரித்துப் பார்க்கலாமே என்று சொல்கிற அளவுக்கு இந்தக் கூட்டணிக் குழப்பம் பப்பரப்பா என்று பல்லை இளித்துக் கொண்டு அம்மணமாக இருக்கிறது.

ஊழல் இருப்பது எல்லோருக்கும் தெரிகிறது, ஆனால் அதை சட்ட ரீதியாக நிரூபிப்பது, அப்புறம் அதற்குத் தகுந்த மாதிரி தண்டனை அளிப்பது என்பது சாத்தியமே இல்லாத அளவுக்கு நம்முடைய நிர்வாகம், நீதித்துறை, அரசியல், ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று தங்களைப் பற்றி பீற்றிக் கொள்ளும் ஊடகங்கள் எல்லாமே சீரழிக்கப் பட்டிருக்கின்றன.  எமெர்ஜென்சி தருணத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி திரு எச் ஆர் கண்ணா ஒருவரைத் தவிர அரசுக்கு எதிராகக் குரல் எழுப்ப அன்றைய நீதிபதிகளில் வேறு எவருமே இல்லை.

ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமப்பத்திரிகைகள், ஒன்றிரண்டு, ஜனசங்கப் பத்திரிகைகள், இங்கே தமிழ்நாட்டில் துக்ளக் தவிர்த்து ஊடகங்கள் எதுவுமே எமெர்ஜென்சி காலக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தவை அல்ல!


அரசு அதிகாரிகள் எவருக்குமே முதுகெலும்பு இருந்து, அமைச்சர் பெரு மக்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் தைரியம் இருந்ததில்லை என்பது மட்டுமில்லை, அதை விட அவர்கள் தான் ஊழல் செய்வது எப்படி என்பதை பல அமைச்சர்களுக்கும் கற்றுக் கொடுத்ததே என்பதும், ஊழலின் கூட்டாளிகளாகப் பல அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்! மீதமுள்ளவர்களில் பெரும்பாலோனோர், கோழைகளாகத் தலைவணங்கித் தவறு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நேரடியாகவோ மறை முகமாகவோ உடைந்தையாக இருந்தார்கள் என்பதை இங்கே அழுத்தமாகச் சொல்லித்தான் ஆக வேண்டும்!

இங்கே தமிழகத்தில் திமுக, அரசு இயந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிற கலையில் வேறெவரையும் விடத் தேர்ச்சி பெற்றிருந்தது கூட எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்!ஆனால், அந்த சாமர்த்தியம் ஒன்று தான் கருணாநிதியை மிகப்பெரிய அரசியல் சாக்கியராகவும், வித்தகராகவும் காட்டிக் கொண்டிருக்கிறது, கட்சித் தொண்டர்களின் வலுவும் கட்டமைப்பும் எப்போதோ காணாமல் போய் விட்டது என்றால் ஒத்துக் கொள்வதற்குச் சங்கடமாகத்தான் இருக்கும்! ஆனால் அது தானே உண்மை!



பொம்மை அசைவதே விந்தையாகத் திரைப்படங்கள் இருந்த காலத்தில் அடுத்த கட்டமாக, திரையில் பொம்மைகள் வசனம் பேசியது மிகப் பெரிய விந்தையாக இருந்ததில் ஆச்சரியமில்லை!அதை விட அர்த்தமிருக்கிறதோ இல்லையோ, அடுக்கு மொழி வசனங்கள், உவமானங்கள் என்று நிறைய அள்ளித் தெளித்துக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடைசியில் ஒன்றுமே இல்லாத ஒன்றை வசனஜாலமாகக் காட்டி வெற்றி பெற்றவர் கருணாநிதி! அன்றைக்கு பொம்மைகள் பேசுவதே விந்தை என்றிருந்த காலத்து டெக்னிக் இன்றைக்கு எடுபடுமா? பெண்சிங்கம், இளைஞன், பொன்னர் சங்கர், உளியின் ஓசை என்று அடுத்தவன் காசைக் கரைத்து எடுக்கப்பட்ட படங்களில் பெருத்த ஓசை எழுப்பிக் கொண்டிருந்த உளி எந்த அளவுக்குத் துருப்பிடித்துக் காணாமலேயே போய்விட்டது என்பதைச் சொல்லுமே!

நவராத்திரி! அடுத்து வரும் இந்த ஒன்பது நாட்களுக்கும், எமெர்ஜென்சி, கருணாநிதி, உளியின் ஓசை, துருப்பிடித்துத் தேய்ந்து போன திராவிட இயக்கம் இவைகளுக்கெல்லாம் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கிறது!
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு போன்ற மிக முக்கியமான வழக்குகளைக் கண்காணித்து வரும் உச்சநீதிமன்ற பெஞ்சில் இருக்கும் இரண்டு நீதிபதிகளில் திரு. சிங்வியும், திரு அசோக் குமார் கங்குலியும் இடம் பெற்றிருக்கிறார்கள். நீதிபதி கங்குலி, வருகிற பிப்ரவரி இரண்டாம் தேதி ஒய்வு பெறுகிறார். அவர் ஒய்வு பெறுவதற்கு முன்னதாக, இந்த பெஞ்சின் முன்னர் இருக்கும் சில முக்கியமான வழக்குகளில் ஏற்கெனெவே தீர்ப்பு ரிசர்வ் செய்யப்பட்டு விட்டதை வருகிற ஒன்பது நாளைக்குள்  எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பது இப்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமாக, ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப. சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்கவேண்டும் என்ற டாக்டர் சுப்ரமணிய சுவாமியின் மனு மீதான தீர்ப்பும் ஒன்று! இதே வழக்கு, சிபி ஐ சிறப்பு நீதிமன்றத்திலும் பாரலலாக நடந்து அதன் மீது தீர்ப்பு வருகிற நாலாம் தேதி சொல்லப் படுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.   

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடாக வழங்கப்பட்ட 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுமா என்பதும் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் முக்கியமான பரபரப்பில் ஒன்று 

இதுபோக பிரசாந்த்பூஷன், தொடுத்திருக்கும் சில மனுக்களின் மீதும் தீர்ப்பு தயாராக இருக்கிறது. இந்த தீர்ப்புக்கள் சாதாரமானவை அல்ல! குறிப்பிட்ட சிலமந்திரிகளுக்குப் பெரிய சிக்கலைக் கொடுக்கக் கூடியவை என்பதோடு, ஆளும் ஐ மு கூட்டணிக் குழப்பத்தையே தலைகீழாகக் கவிழ்த்துவிடக் கூடியவை! அதனால் தான் திரு கங்குலி ஒய்வு பெறுவதற்கு முன்னால் வழங்க இருக்கும் தீர்ப்பு விவரங்களைக் குறித்தான முக்கியத்துவம் பரபரப்பாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது.

சில தளங்களில், கங்குலி ஒய்வு பெற்ற பிறகு ஸ்பெக்ட்ரம் வழக்கைக் கண்காணிக்கும் பெஞ்சில் யார் இடம் பெறுவார்கள் என்பதை பற்றி மட்டுமே முக்கியமாக சொல்லிக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.

சுமார் ஆறுமாதங்களுக்கு முன்னால், உச்சநீதிமன்ற நீதிபதி திரு கங்குலி, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்; பேசியதில் இருந்து ஒன்றிரண்டு வரிகளைச் சொன்னால் இந்தப்பதிவில் முந்தைய பாராக்களில் சம்பந்தமில்லாத பழைய கதைகளைத்தொட்டுப் பேசிக் கொண்டிருந்தது ஏன் என்பது புரியும்!

"லஞ்சம் ஊழல் என்பது வெகு ஆழமாக வேரோடியிருக்கிறது.நம்முடைய சமூக அமைப்பில் துரதிர்ஷ்ட வசமாக ஊழல் செய்பவருக்குத்தான் வெற்றிகரமான வாழ்க்கை அந்தஸ்து கிடைத்து வருகிறது. இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வோம்.ஊழல் செய்பவர் சமுதாயத்துக்கு வெளியே இருந்து வருபவர் அல்ல. பெரும்பாலான தருணங்களில், அவர் ஒரு தலைவராகவோ, ஹீரோ மாதிரிக் கொண்டாடப்படுகிறவராகவோ இருக்கலாம். ஊழல் தடுப்புச் சட்டம் என்று இருக்கிறது. ஒரு நீதிபதியாக இருந்து அல்ல, என் மனதில் படுவதைச் சொல்கிறேன். அது ஊழலைப் பாதுகாக்கிற சட்டமாகவே இருக்கிறது. இந்த ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது, அதாவது ஊழல் குற்றச் சாட்டைஒருவர் மீது சுமத்த முன் அனுமதி பெறவேண்டும்!யார் இந்த முன் அனுமதியைத் தருவது? இப்படி ஒரு பாதுகாப்பு, தடுப்புச் சுவர் இல்லையானால், ஒன்றுமில்லாத குற்றச்சாட்டுக்களாக நீதிமன்றத்தில் குவியும் என்று ஒரு சாக்காகச் சொல்லப்படுகிறது. ஆக, ஊழலை அறவே அகற்றுவதில்  நாம் உண்மையானவர்களாக இல்லை."

பழைய நடப்பு, இப்போது நடந்துகொண்டிருப்பது இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொஞ்சம் என்னதான் நடக்கும் என்று கொஞ்சம் ஊகிக்க முடியுமா? கொஞ்சம் முயன்று தான் பார்ப்போமே!
2010 ஆம் வருடம்,வரிசையாக மெகா ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருகிற வருடமாக இருந்தது என்றால் 2011 ஆம் ஆண்டோ, அந்த மெகா ஊழல்களுக்குப் பொறுப்பானவர்கள்  யார் என்பதை அடையாளம் காட்டியே ஆகவேண்டிய அவசியத்தை உண்டாக்கியது. வழக்கமாகப் பூசி மெழுகிவிட முடியாதபடி, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றமே  தன்னுடைய நேரடிக் கண்காணிப்பில் எடுத்துக் கொண்டது.

அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பின் அடையாளமாகத் தொடங்கிய இயக்கம், சிறுபொறி பெரு நெருப்பாகிவிடும் என்று ஆளும் கட்சி பயந்தது. போராட்டத்தை திசைதிருப்ப, களங்கப் படுத்த எல்லாவகையிலும் முயன்றது. ஒரு லோக்பால் மசோதாக் கூட நாற்பத்துமூன்று ஆண்டுகளாக வெறுமே பேசிக் கொண்டே இருந்து, நிறைவேற்றமுடியாத கபடம் வெளிப்பட்டது.

ஊழலுக்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், அதோ அவன், இல்லை இல்லை இதோ இவன் என்று எங்கெங்கோ கையைக் கட்டிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது என்று, கூட்டணி தர்மத்தில் கையை வைக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது பாருங்கள், இங்கே தான், பழைய நினைப்புடா பேராண்டி என்று பராசக்தி வசனத்தை வைத்து மட்டுமே சிறந்த கதை வசனகர்த்தா வாகக் காலம் பூராவும் ஓட்ட முடியாது என்று ஆகியிருக்கிற யதார்த்தம் கண் முன்னே நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.

ஒய்வு பெறப்போகும் நீதிபதி கங்குலி என்ன தீர்ப்பு எழுதுவார், அவரிடத்தில் வேறு யார் வருவார், அப்புறம் அந்த பெஞ்ச் முன்னால் உள்ள வழக்குகள் என்னவாகும் என்பதில் எல்லாம் விஷயமே இல்லை!
மண்ணுமோகன் சிங்  மரியாதை இழந்து, ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வரட்டுமே அது வரை பொறுத்திருக்கலாம் என்று நினைத்தால் கூடக் காலம் அனுமதிக்காது போலத்தான் ஒரு வெளிச்சக் கீற்று 2012 இன் துவக்கத்திலேயே தெரிகிறது!

சதிவேலை சந்தேகங்களும்...... தமிழ்நாடு அரசியலும்!



ஒரு சமுதாயப் பொறுப்புள்ள  ஊடகம், நாளிதழ்களில் வெளியாகும் தலையங்கம், செய்திகள்  மிகவும் கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டியவை. அந்த வகையில் இன்று தமிழில் வெளிவரும் நாளிதழ்களில் தினமணி ஒன்று தான் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து தலையங்கம், செய்திகளை வெளியிட்டு வருகிறது.மற்றவை வெறும் பரபரப்பு அல்லது வதந்திகளை  மட்டுமே செய்தியாக்குகிற திருவிளையாடல்களில் மட்டுமே குறியாக இருக்கின்றன.


முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பாராட்டப்படவேண்டிய விஷயம் ஒன்று உண்டு! அது செய்தித்தாட்களில், வார இதழ்களில் வெளி வந்திருக்கும் முக்கியமான செய்திகளைப் படித்துப் பார்ப்பது!தினமணி தலையங்கம் அவரது ஆட்சிக்காலத்தில் இப்படி வெளிவந்திருக்குமேயானால், உடனடியாக இரண்டு விஷயங்கள் நடந்திருக்கும்! முதலாவதாக, தினமணி ஆசிரியரின் ஜாதி என்ன என்று பார்த்து அதற்குத் தகுந்த மாதிரி சாயம் பூசுவது! அடுத்தது, தன்னுடைய ஆட்சிக்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாகச் சொல்லி அவதூறு வழக்குத் தொடரப்போவதாக மிரட்டுவது!அதையும் தாண்டி, ஊடகங்களில் வெளியாகிற செய்திகள், தலையங்கம் மீது வேறு என்ன உருப்படியான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருப்பார் என்பதில் எனக்கு வேறுபட்ட கருத்து இருந்தாலுமே, கருணாநிதியிடம் பிடித்த அம்சமாக, செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்கிற இயல்பைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!


இப்போதைய முதல்வர் அப்படி செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்கிற வழக்கம் உள்ளவரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. செய்திகளைத் தானே உடனுக்குடன் தெரிந்துகொள்கிற வழக்கம் உள்ளவராக இருந்திருந்தால், இந்த எட்டு மாதங்களில்,தன்னுடைய ஆட்சியில் ஏற்பட்ட சறுக்கல்களைக் கொஞ்சமாவது திருத்திக் கொள்ள முனைந்திருப்பாரோ என்னவோ! அதுவும் எனக்குத் தெரியாது.


அரசு ஊழியர்களைக் குளிர்விக்கிற மாதிரி சில விஷயங்களை முதல்வர் அறிவித்துக் கொண்டிருப்பது இருக்கட்டும்! துருப்பிடித்துப் போன அரசு இயந்திரம் இயங்குகிற முறையைக் கொஞ்சம் அல்ல- நிறையவே சரிசெய்தாகவேண்டும் என்பதை இன்றைய தினமணி தலையங்கம் அழுத்தமாகச் சொல்கிறது.
 
தினமணி தலையங்கம்: சதியா இல்லை விதியா?


சென்னை சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் உள்ள 150 ஆண்டுகள் பழைமையான கல்சா மகால் தீப்பிடித்து எரிந்த சம்பவம் இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒன்று, இதன் பின்னணியில் சதிவேலைகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதும், இரண்டு, தீயணைப்புத் துறை இன்னமும் நவீனப்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதும்தான் அவை. 
 "ஸ்டவ் வெடித்துப் பெண் மரணம்" என்று எடுத்த எடுப்பில் சொல்வதைப் போல, இந்தியாவில் நேரிடும் எல்லாத் தீவிபத்துகளுக்கும் சொல்லப் படும் காரணம் - மின்கசிவு. இந்தத் தீ விபத்திலும்கூட, மின்கசிவுதான் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.   

இந்தக் கட்டடத்தில் தொழில் வணிகத் துறை மற்றும் சமூக நலத்துறை இயக்ககங்கள் செயல்பட்டு வந்தன. சமூக நலத்துறை செலவழிக்கும் துறை. இதற்கு அரசு நிதி ஒதுக்கீடு மிக அதிகம். தொழில் மற்றும் வணிகத் துறை அரசுக்கு வருவாய் சேர்க்கும் துறை. அரசு செலவழித்தாலும், வருவாயை ஈட்டினாலும் அங்கே அதிகார ஊழலுக்கு நிறையவே இடம் இருக்கும் என்பது பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தத் தீவிபத்தில் இத்துறை சார்ந்த முக்கிய ஆவணங்கள் சாம்பலாகியுள்ளன.  தமிழ்நாடு தேர்வாணையக் குழுவில் நடந்த ஊழல்களில் உறுப்பினர்கள் வீடுகள் மட்டுமன்றி, வேலையில் சேர்ந்த சில நபர்களின் வீடுகளிலும்கூட அண்மைக் காலமாக நடைபெற்ற அதிரடி சோதனைகளை எண்ணிப் பார்க்கும்போது, முக்கிய ஆவணங்களைத் தீக்கிரையாக்கிவிட்டு, குழப்பம் விளைவிக்கவும், இந்தத் துறைகள் சார்ந்த ஏதோ ஊழலை மறைக்கவுமான சதித்திட்டம் இருப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன.  
கல்சா மகால் சென்னையில் இருக்கும் மிகச் சில அரிய கட்டடங்களில் ஒன்று என்பதால் இந்தக் கட்டடத்தை அப்படியே பழைமையுடன் காத்து வந்தனர். இப்போது தீயினால் இடிந்து உருக்குலைந்துவிட்ட இந்தக் கட்டடத்தை முற்றிலுமாக அப்புறப்படுத்துவதைத் தவிர, வேறு வழியில்லை. மூர் மார்க்கெட், ஸ்பென்ஸர் ஆகியன தீவிபத்தில் எரிந்த பிறகு அங்கே தோன்றிய நேரு ஸ்டேடியம், ஸ்பென்சர் பிளாசா போல வேறொரு பிரம்மாண்டமான கட்டடம் இங்கேயும் வருமோ என்று சந்தேகிக்க இடமேயில்லை. ஏற்கெனவே உள்ள எழிலகத்தையும் இடித்துவிட்டுத்தான் கட்ட முடியும். அது சாத்தியமில்லை.  மேலும், ஆழிப்பேரலைத் தாக்குதலுக்குப் பின் மெரீனா பகுதியும் கடலோர ஒழுங்காற்று மண்டல வரையறைக்குள் வந்துவிட்டது. மெரீனாவுக்கு எதிரே மிகப்பெரிய கட்டடங்கள் புதிதாகக் கட்டுவதற்கு அனுமதி கிடைப்பது கடினம். 

ஆகவே, இந்தத் தீ விபத்துக்கு ஆவணங்களை எரிக்கும் உள் நோக்கத்தைத் தவிர, வேறு நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி உள்நோக்கம் இல்லாமல் போனால் இது ஓர் எதிர்பாராத விபத்தாக மட்டுமே இருக்க முடியும்.  

இரண்டாவதாக, தீயணைப்புத் துறை நவீனமயமாகவில்லை என்பதற்கு இந்தத் தீவிபத்து ஓர் எடுத்துக்காட்டு.  ஒரு தீவிபத்து நடக்கும்போது அதை வெளியிலிருந்து கட்டுப்படுத்தும் அனைத்துக் கருவிகளும் இருந்தும் அவை உடனடியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதும், சில வீரர்கள் தீ எரியும் பகுதிக்குள் சென்று தீயை அணைக்க முற்பட்டபோது, மேல்தளம் தீயினால் இடிந்து விழுந்து ஒருவரது உயிரை பலிகொண்டதும் தீயணைப்புத் துறை நவீன உத்திகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.  

சுமார் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு கட்டடத்தின் தூலம் இரும்பினால் இருக்காது என்பதையும், மரங்கள்தான் தூலமாக இருக்கும் என்பதையும் உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டிய தீயணைப்புத் துறை, ஏதோ கான்கிரீட் பில்டிங்கில் நுழைவதுபோல நுழைந்திருப்பதும், அவர்களை அவ்வாறு நுழையச் செய்திருப்பதும், உயர் அதிகாரிகளின் அனுபவம் ன்மையைத்தான் காட்டுகிறது.  நமது தீயணைப்புத் துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சிகள் யாவும் எத்தகைய தீயை எதிர்கொள்வது, எப்படி அணைப்பது என்பதுதானே தவிர, எந்தெந்த கட்டடங்களில் தீப்பிடித்தால் அவற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்பதில் பயிற்சி இல்லை, அல்லது அத்தகைய பயிற்சி இருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்பதைத் தான் இந்நிகழ்வு காட்டுகின்றது.  

கூகுள் மேப் இணையதளம் உதவியுடன் சாதாரண மனிதர்களும்கூட எந்தவொரு நகரையும் அதன் சாலை, தெரு, வீடுகள் என பார்க்க முடிகின்ற இன்றைய கணினியுகத்தில், தீயணைப்புத் துறையினர் தங்கள் பகுதிக்கு உள்பட்ட கட்டடங்களின் முப்பரிமாண வரைகலைப் படங்களைக் கணினியில் வைத்திருக்க வேண்டாமா?  ஒரு கட்டடத்தின் அனைத்து உள்ளமைப்பு விவரங்களையும் - அதன் பயன்பாடு, அளவு, பயன்படுத்தப் பட்டுள்ள கட்டுமானப்பொருள், தோராயமாக புழங்குவோர் எண்ணிக்கை, ஒவ்வொரு கட்டடத்திலும் உள்ள அவசர வழிகள், கட்டடங்களுக்குக் கீழாக பாதாளச் சாக்கடை உள்ளதா அல்லது மெட்ரோ ரயில் செல்கிறதா என எல்லா தரவுகளையும் பதிவு செய்தால், தீ விபத்தில் மட்டுமன்றி, நிலநடுக்கம், ஆழிப் பேரலை, மழைவெள்ளம் போன்ற பேரிடர் காலத்திலும் அவர்களுக்கு உதவியாக இருக்காதா? 

தகவல்தொழில் நுட்பம் விரிக்கும் இத்தகைய நவீன வாய்ப்புகளை இன்னமும் கூட பயன்படுத்தாமல் இருக்கின்றது தீயணைப்புத் துறை.  இதன் விளைவு தான் வலுவற்ற மரச்சட்டங்கள் எரியும் இடத்துக்குச்சென்று தீயை அணைக்க, சாதாரண மக்களைப் போல முயன்றிருப்பதும், இதில் ஒருவரின் உயிரிழப்பும்! 

கட்டடத்தின் தன்மை என்ன என்பது தெரிந்திருந்தால், எச்சரிக்கையுடன் செயல்பட்டிருப்பார்கள். உயிரிழப்பு நேரிட்டிருக்காது.  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை என்பதால் பேரிடர் காலங்களிலும் இவர்கள்தான் மக்களையும் உடைமைகளையும் காப்பாற்றியாக வேண்டும். அதற்கேற்ப இத்துறையை தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்றாற்போலத் தரம் உயர்த்த வேண்டும்.  

"அரசு இயந்திரம் செயல்படுவதுபோல" என்று சொல்வார்கள். ஏதோ மின்சார ரயில் தாம்பரத்திலிருந்து கடற்கரை, கடற்கரையிலிருந்து தாம்பரம் என்று ஓடிக்கொண்டிருப்பதுபோல குறிக்கோளில்லாமல் நமது அரசு இயந்திரம் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாக வேண்டும்!

தொடர்புடைய பதிவொன்று:

கோளாறுகள், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது ...!

சண்டேன்னா மூணு! ஊழலுக்கெதிரான இந்தியாவும் சால்வை அழகரும்!



சென்னையில் அண்ணா ஹசாரே கூட்டத்துக்குத் திரளாக வந்திருந்த கூட்டம் இது. புகைப்படத்துக்கு நன்றி: ஹிந்து நாளிதழ் 


உறுதியான லோக்பால் அமைப்பு இருக்குமேயானால் சிதம்பரம் ஜெயிலுக்குள் இருந்திருப்பார் என்றார் அண்ணா.

 ஊழலுக்கெதிரான இந்தியா! 

இது அண்ணா ஹசாரே, அவரைப் பின்பற்றுகிறவர்களுடைய முழக்கம்
நம்மால் என்ன செய்ய முடியும் என்று சோம்பிக் கிடக்கிறவர்கள் மத்தியில் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று அண்ணா ஹசாரே போன்றவர்கள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்கி போராட்டங்களை நடத்தி வரும் அன்னா ஹசாரே, சென்னைக்கு வந்த போது, பெரியார் தி.க., மே 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று காலை பெங்களுருவிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவருக்கு எதிரிப்பு தெரிவித்து பெரியார் தி.க., மே 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தன. ஜனநாயகத்திற்கு எதிராக, சர்வாதிகாரி போல செயல்படும் அன்னாவும் ஒரு பயங்கரவாதி என்றும், இந்தி வெறியரான அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்று பெரியார் தி.க.வினர் குற்றம்சாட்டினர்.

அர்த்தமிழந்து போன  வார்த்தைகள் வெற்றுக் கோஷங்களிலேயே இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த மாதிரியான அமைப்புக்கள், ஆசாமிகள்  கிளம்பிக் கொண்டிருப்பார்கள்?

எனக்கு மலையாளம் தெரியாது!இந்தப் படம் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மலையாளம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உண்டோ!
 
சால்வை அழகர் பானா சீனா விவகாரம் நாளொரு பூதம் பொழுதொரு வதந்திகளால் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்துக் கிளம்பியபோது,  ராசா மட்டுமே இவ்வளவு பெரிய ஊழலைத் தனியொரு ஆளாகச் செய்திருக்க முடியுமா என்று கருணாநிதி ஆரம்ப நாட்களில் ஒரு கேள்வியை எழுப்பினார். அதை இப்போது அவரே மறந்திருப்பார்!! ஆனால் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஆராசாவும் சிதம்பரமும் கூட்டாகத்தான் இந்த விவகாரங்களில் ஈடு பட்டிருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறார். நிதித்துறையில் இருந்து ஒருவர், சிபிஐ அதிகாரி ஒருவர் ஆக இருவரை சாட்சிகளாக அழைக்கக் கூடும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், வழக்கறிஞராக தன்னுடைய கட்சிக்காரர் ஒருவர் மீது உள்துறை மந்திரியாகவும் இருந்து அதீதக் கரிசனம் காட்டியதாக ஒரு தகவல் கசிந்து நாடாளுமன்றத்தில் ஏகத்துக்கும் அமளி. வேடிக்கை என்னவென்றால், இந்த விவகாரத்தில், இதைக் கசிய விட்டதே சிதம்பரத்தின் மீது அதீதமான அன்பு கொண்ட இன்னொரு அமைச்சர் சகா தான் என்றும் தகவல்கள் சொல்கின்றன.


தேக்குமரம் வளர்ப்பு, பாக்குமரம் வளர்ப்பு என்று அனுபவம் மிக்க நடேசன்கள் ஜனங்களிடமிருந்து பணத்தை சுருட்டி, சவுக்கு குச்சி மாதிரி இருந்த மீனாள் உண்டியலில் கொட்டிய தருணத்திலும்  கூட, அனுபவத்தை பானா சீனா தான் காப்பாற்றியதாக ஒரு தகவல், நினைவு!

தன்னுடைய செல்வாக்கு குறைந்துவிடவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக, வருகிற 26 ஆம் தேதி சென்னைவருகிற பிரதமரை, அன்று மாலையே காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்ள ஏற்பாடும் செய்திருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொட்டவர்கள் ஒவ்வொருவரையும் படா
பாடு படுத்திக் கொண்டிருக்கிறது.அவ்வளவு ராசியான ஊழல்!

கேடி பிரதர்ஸ் மட்டும் தான் இது வரை திருட்டுப் பூனைகள் மாதிரி, எந்த செய்தியும் வெளிவராதபடி, கமுக்கமாகக் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுவும் கூட ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றே தோன்றுகிறது.பானா சீனா உள்ளே போக வேண்டுமென்றால் முதலில் போகவேண்டியது தயாநிதி! 


போகிற போக்கைப் பார்த்தால், அப்படி ஒன்றும் அவசியமில்லாத படிக்கு, சால்வை அழகர் தானே முந்திக் கொள்வார் போல இருக்கிறதே!


 

மானாட மயிலாட மகளுக்கு வரவேற்பு! தளபதீக்கு........?

ரைமிங் இருந்தாப் போதாதே! டைமிங் கொஞ்சம் சரியா இல்லையே!
"எனது மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமா கம்பெனிக்காக வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்த வீட்டை எடுத்துள்ளார். அந்த வீட்டில் எனது மகளும், மருமகனும் குடியிருக்கிறார்கள். இதுதவிர வேறு எதுவும் இல்லை. இதுதான் உண்மை. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு மிரட்டியோ, அச்சுறுத்தியோ காவல்துறையை பயன்படுத்தி தவறான புகாரை பெற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார்கள். எப்.ஐ.ஆர். பதிவு செய்தால் கைது செய்ய வேண்டாமா? ஆனால் இதுவரை கைது செய்யவில்லை. என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்பதற்காகத்தான் வந்தேன். அதை கேட்டதும் கூடுதல் டி.ஜி.பி.யால் பதில் சொல்ல முடியவில்லை""

என்னதான் கூட்டத்தோடு இருப்பதால் இப்படி தைரியமாகப் பதில் சொல்வது போல இருந்தாலும் "தளபதீ" ஸ்டாலினுக்குக் கவலைகள் நிறையவே உள்ளூர இருக்கத்தான் செய்கிறதென்பது வெளிப்படை யாகவே தெரிந்தது.மதுரையில் ஆட்டம் போட்ட அஞ்சா நெஞ்சை வெறும் கோழிக் குஞ்சாக ஒரே அமுக்காக அமுக்கி வைத்திருப்பது போலத் தானும் ஆகிவிடுவோமோ, இத்தனை காலமாக அரசியலில் இருந்தும் தந்தைக்கு அப்புறம் அரசியலில் வாரிசாக ஆக முடியாமலேயே போய்விடுமோ என்று ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்பது என்னமோ உண்மை.

மானாட மயிலாட மகளுக்கு வரவேற்பு! தளபதீக்கு........?
பக்கத்து வீடு... பாய்ந்த வழக்கு!

நில மோசடி வழக்குகளில் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பலர் ஜாமீனில்  வீடு திரும்பி விட்டனர். இந்த நிலையில், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது ஒரு அபகரிப்புப் புகார் கிளம்பி இருக்கவே, டென்ஷனில் துடிக்கிறது தி.மு.க.
 கடந்த 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு  ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 65 வயதான சேஷாத்திரி குமார் என்பவர் வந்து ஒரு புகார் கொடுத்தார்.


ந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இதுதான்.''ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள எங்களது குடும்ப இடத்தில் எனது பங்குக்குக் கிடைத்த இரண்டரை கிரவுண்டில் நான் வீடு கட்டி வசித்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 8-ஏ, சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார்பேட்டை என்ற முகவரியில் உள்ள அந்த வீட்டை தேவி பழனிச்சாமி என்பவருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் என்று பேசி மாத வாடகைக்கு விட்டேன். இது தவிர மீதி உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ஆறு கிரவுண்ட் இடத்தை மு.க.ஸ்டாலின் வாங்கி இருந்தார். அந்த இடத்தில் வீடு கட்டி ஸ்டாலின் குடிவந்ததில் இருந்து, எனது வீட்டையும் வாங்கி தனது வீட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டார். 

அதற்காக என் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரை மிரட்டி, காலி செய்ய வைத்தனர். சுப்பா ரெட்டி, ராஜாசங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் அடியாட்களுடன் வந்து, ஐதராபாத்தைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி என்பவருக்கு, 5.5 கோடி ரூபாய்க்கு என் வீட்டை நான் விற்றதாக, பத்திரப் பதிவு செய்து கொண்டனர். அந்தத் தொகையை டி.டி-யாகக் கொடுத்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு என் வீட்டுக்கு வந்த ஸ்ரீனிவாசன், ஒரு கோடியே 15 லட்சம் பணம் கொடுத்தார். அந்தப் பணமும் கணக்கில் வராத பணம் என்றும், இதை வெளியில் சொன்னால் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் மூலமாக வருமான வரி சோதனை நடத்துவோம் என்றும் மிரட்டினார். அதோடு, எட்டு லட்சம் ரூபாயை தனக்கான கமிஷன் என்றும், அவரே எடுத்துக் கொண்டார். இப்போது அந்த வீடு, மாத வாடகை 20,000 ரூபாய் என்று ஸ்டாலின் மகன் உதயநிதி பெயருக்கு ஒப்பந்தம் செய்யப்​பட்டு, அதில் ஸ்டாலின் மகள் செந்தாமரை குடி இருக்கிறார்.


து தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சிலரிடம் பேசினேன். அந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டதும், என் வீட்டுக்கு வருமான வரி அதிகாரிகளை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் என்​னிடம் வாக்குமூலம் எழுதி வாங்கி உள்ளனர். என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி தனது பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், என் வீட்டுக்கு வந்து கறுப்புப் பணத்தை வலுக்கட்டாயமாக கொடுத்து வருமான வரிச் சோதனை செய்ய வைத்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், சுப்பா ரெட்டி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, என் வீட்டை மீட்டுத் தருமாறும், எனக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு தரும்படியும் மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்''  என்று விளக்கி இருக்கிறார் சேஷாத்திரி குமார். 

ந்தப் புகார் குறித்து, மத்தியக் குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறதா? என்று விசாரிக்க உளவுத்துறையில் உள்ள நம்பிக்கையானஅதிகாரி ஒருவருக்கு தோட்டத்தில் இருந்து உத்தரவு வந்ததாம். புகார் கொடுத்து இருந்த சேஷாத்திரி குமாரை தனது அலுவலத்துக்கு வரவழைத்த அந்த உளவு அதிகாரி, குமாரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரித்து இருக்கிறார். அவர் வைத்து இருந்த ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்து இருக்கிறார். அதன்பிறகுதான்,  1-ம் தேதி காலையில் புகார்தாரர் குமாரை விசாரணைக்கு அழைத்து இருக்கிறது, 

சென்னை மத்தியக் குற்றப் பிரிவு. அன்று காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை குமாரிடம் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். இதனால், எந்த நேரத்திலும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் ஒன்றுக்கு பல முறை, குமார் கொடுத்து இருந்த ஆவணங்களை ஆராய்ந்தனர். அதன் பிறகு, அன்று இரவு 8 மணிக்கு ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி, ராஜா சங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இப்படிப்போகிறது, இன்றைய ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரை!

இந்த நில அபகரிப்பு விஷயமாக ஸ்டாலின் மீது நடவடிக்கை வரலாம் என்று தகவல்கள் ஏற்கெனெவே வெளிவந்ததுதான்! என்ன, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது மட்டும் தான் தாமதம்.அம்மா போலீஸ் இதை எப்படி கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
அரசு இயந்திரத்தின் ஒரு கணிசமான பகுதி அம்மாவின் கட்டுப் பாட்டில் இல்லை என்பதை தா.கிருஷ்ணன் கொலைவழக்கிலேயே பார்க்க முடிந்தது. அதே போல, அ' னாவின் ஆட்கள் குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் உள்ளே போன வேகத்திலேயே வெளியே வந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ஸ்டாலின் ஏடிஜிபி ராஜேந்திரனிடம் வீராவேசமாக வசனம் பேசிவிட்டு வந்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லைதான்!
தளபதீ கவலைப்பட இதை விட வேறு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன! 

தயாநிதி மாறன் திறந்தவாய் மூடாமல் அப்படி என்னத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்?



கட் அவுட், தாரை தப்பட்டை, வரவேற்பு  எல்லாம் போட்டியில் நானும் இருக்கிறேன் என்று சொல்வதற்காகத்தான்!
இன்னிக்கு, இந்த நிமிடத்தில் மட்டும் மகளே நான் உன்னோடு! என்னால முடிஞ்சது அவ்வளவுதான்!

தகவல் அறிவது நமது உரிமை!மு.க.வுக்கும் நீதிமன்றம் குட்டு!


தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி தினமணி நாளிதழில் வெளியாகி இருந்த இரண்டு தலையங்கங்களைத் தொட்டு எழுதியிருந்த பதிவுகள் இவை. ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றின், உருப்படியான சாதனை என்று ஒன்றிரண்டைச் சொல்ல முடியுமானால், அதில் இந்தத்தகவல் அறியும் உரிமைச் சட்டமும் ஒன்று. ஆனால், வெளிப்படையான நிர்வாகம், சரியான விவரங்கள் ஊழல் செய்யும் புள்ளிகளுக்கு இடைஞ்சலாகத் தான் இருக்கும் என்பது புரிய வந்ததுமே, இந்தச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளைக் காங்கிரஸ் செய்ய ஆரம்பித்துவிட்டது.
 


தமிழ்நாட்டில் அன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருந்த கருணாநிதி சட்டத்தை வளைப்பதிலும், தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் , எப்படிப்பட்ட கில்லாடி என்பது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் வெளியாகி இருக்கிறது.ஜெயலலிதா தொடர்ந்து நீதிமன்றங்களில் குட்டு வாங்கிக் கொண்டிருப்பதைப் பறைசாற்ற ஆயிரம் ஊடகங்கள், பதிவுகள் இருக்கின்றன. தாத்தா செய்திருக்கும் சாதனையை அவை கண்டு கொள்வதில்லை என்பதில் எனக்கு ஏகத்துக்குமே வருத்தமுண்டு.எமெர்ஜென்சி காலத்தில் உச்சநீதிமன்றத்தில் எச் ஆர் கண்ணா ஒருவர் தவிர, நீதிபதிகளாக இருந்தவர்களே பயந்து, வளைந்து கொடுத்தார்கள் என்பது பதிவு செய்யப்பட்டிருப்பது போல, தலீவர் கலைஞர் செய்தது பதிவு செய்யப்படவில்லை!

நேர்மையான நீதிபதி என்று வெகுஜன ஊடகங்களால் சித்தரிக்கப் பட்டவர்களுமே கூட, கலைஞர் ஒதுக்கீடு செய்த வீட்டுமனை, வீடுகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் (அதிக விவரங்கள் வேண்டுவோர் http://savukku.net  தளத்தில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம்), மாநிலத்தில் இருந்த நீதி மன்றங்கள் அந்த கால கட்டத்தில் அரசுக்கு எதிராக ஒரு சிறு முணுமுணுப்பைக் கூட  எழுப்ப முனையவில்லை என்பதும் வெளியே தெரிந்தாலும் அதிகம் கவனிக்கப்படாத அல்லது கண்டுகொள்ளப் படாமல் விடப்பட்ட விஷயம் தான்!

ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட நீதிபதி பி டி தினகரன், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் தலைமை நீதிபதி கே ஜி பாலக்ருஷ்ணன்  முதலானோர் அன்றைய அரசின் கனிவான பார்வையைப் பெற்றவர்கள் என்பதும், இந்தநேரம் பார்த்து நினைவுக்கு வந்து தொலைக்கிறது. 

மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்க விவகாரத்தில் ஜெய லலிதா உச்ச நீதிமன்றத்தின் குட்டை நேற்றைக்கு வலுவில் வாங்கி இருக்கிறார். சென்னை நீதிமன்றம் தொடர்ந்து குட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இன்னமும் குட்டும்!அது தம்பட்டம் அடிக்கப் படுகிற அளவுக்குக் கருணாநிதி வாங்கிய குட்டுக்களையும் பார்க்க வேண்டாமோ?

இப்போது கருணாநிதி அல்லது ஜெயலலிதா வாங்கிய குட்டு அல்ல விஷயம்!

இந்த தேசத்தில் ஊழல் செய்கிற அரசியல்வாதிகள், அவர்களுக்குத் துணைபோகிற நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் என்று ஜன நாயகத்தின் தூண்களாகச் சொல்லப் படுகிற ஒவ்வொன்றுமே எப்படி இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்காகவும்!

ஜூனியர் விகடனில் இன்றைக்கு வெளியாகி இருக்குமொரு  செய்திக் கட்டுரை, ஜூவிக்கு நன்றியுடன்!

 
தீர்ப்பில் தள்ளாடும் தகவல் ஆணையம்!

ஆணையத்தின் மீது அடுக்கடுக்காய் வழக்குகள்!

'தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மூன்று தகவல் ஆணையர்கள் நியமனம் செல்லாது’ என்று அதிர்ச்சித் தீர்ப்பு அளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். 

அரசு அலுவலங்களில் ஒளிவுமறைவு இல்லாத செயல்பாடும், லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகமும் நடக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

இந்தச் சட்டத்தின்படி தகவல்கள் கேட்டுக் கிடைக்காமல் போனால், தகவல் ஆணையங்களில் மேல்முறையீடு செய்ய லாம். இதற்காகவே இந்திய அளவில் மத்தியத் தகவல் ஆணையமும் மாநிலத் தகவல் ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன.

தகவல் தரவில்லை என்றால் அதிகபட்சமாக Rs. 25,000 அபராதம் விதிக்கப்படும். இத்தகைய அதிகாரம் கொண்டது தகவல் ஆணையங்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் தகவல் ஆணையத்துக்கு, ஏ.ராமையா, சி.மனோகரன், ஏ.ஆறுமுக நயினார் ஆகிய மூவர் நியமிக்கப்பட்டனர். சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வந்த அன்றுதான் இதற்கான உத்தரவு வெளியானது. இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இந்த நியமனம் செல்லாது’ என்றது.
''தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நாளில், இந்த நியமனம் நடந்துள்ளது. மாநில முதல்வர், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் முதல்வரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒருவர் அடங்கிய குழுதான், மாநிலத் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும். இந்த நியமனத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் கருத்தைக் கேட்காமலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றாமலும் நியமனம் செய்யப்பட்டுள்ளது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


தகவல் அறியும் உரிமை ஆர்வலரான கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். ''தகவல் ஆணையங்கள், தேர்தல் கமிஷனைப் போலவே தன்னாட்சி அதிகாரம்கொண்ட ஓர் அமைப்பு. அறிவியல், சட்டம், இதழியல், சமூக சேவை, நிர்வாகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், இங்கே அரசியல் புகுந்து விளை யாடுகிறது. வெளிப்படையான ஊழல் அற்ற அமைப்பு உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் தகவல் அறியும் சட்டமே கொண்டுவரப் பட்டது. ஆனால், இதன் ஆணையர்கள் நியமனம்கூட வெளிப்படையாக நடைபெறவில்லை. ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். 

கருணாநிதியின் செயலாளராக இருந்த டி.ஆர்.ராமசாமி, தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ஸ்ரீபதி போன்றவர்கள் தகவல் ஆணையர்களாக இருக்கிறார்கள். 

2008-ல் தகவல் ஆணையர்களாக சாரதா நம்பி ஆரூரான், டி.சீனிவாசன், டி.ஆர்.ராமசாமி மற்றும் பெருமாள்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்துக்கான கூட்டம் 11.4.2008-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டம் நடப்பதற்கு 10 நாட்களுக்குள்தான் டி.ஆர்.ராமசாமியும் பெருமாள்சாமியும் விண்ணப்பிக்கிறார்கள். டி.சீனிவாசன், சாரதாநம்பி ஆரூரான் ஆகியோர் முதல் நாள்தான் விண்ணப்பித்தார்கள். அவர்களுக்குப் பதவி தர வேண்டும் என்பதற்காகவே, அவசர அவசரமாக விண்ணப்பங்களை அரசு வாங்கியது. ஒரு வழக்கு தொடர்பாக சீனிவாசன் என்னிடம் பேசிய போது, 'தகவல் ஆணையர் பதவிக்காக நான் விண்ணப்பிக்கவே இல்லை. டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்குத்தான் விண்ணப்பித்தேன். அந்த பயோ-டேட்டாவை வைத்து என்னைத் தேர்வு செய்துவிட்டார்கள். பெருமாள் சாமியும், சாரதாநம்பி ஆரூரானும் வேறு பதவிகளுக்குத்தான் விண்ணப்பம் கொடுத்தார்கள்’ என்றும் சொன்னார்.

இப்படிப்பட்டவர்களை தகவல் ஆணையத்தில் நியமித்தால், அங்கே வரும் மேல்முறையீட்டு மனுக்களை எப்படி விசாரிப்பார்கள். இனி மேலாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அறிந்தவர்களையும், சமூக ஆர்வலர்களையும் நியமிக்க வேண்டும்'' என்றார்.  

இந்த வழக்கை, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். 'தகவல் ஆணையர் தேர்வு நடவடிக்கைகள் தொடர்பான கோப்பு ஒரு நாளிலேயே பிரிவு அலுவலர் தொடங்கி முதல்வர் வரை சென்றிருக்கிறது. ஆணையர்கள் தேர்வுக்கான கூட்டம் 1.3.11 அன்று நடந்தது. எதிர்க் கட்சித் தலைவரின் (ஜெயலலிதா) ஆலோசனையைப் பெறவில்லை. கூட்டத்தை வேறு தேதிக்குத் தள்ளிவைக்கும்படி எதிர்க் கட்சித் தலைவர் கருத்துத் தெரிவித்து இருந்தார். ஆனாலும் ஆணையர்கள் நியமனம் செய்து அன்றே அதற்கான ஆணையை வெளியிட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைக் கருத்தில்கொள்ளாமல் அன்றே கவர்னரின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர். இந்தப் பதவிக்கு விண்ணப்பம் செய்யும்போது, ராமையா அரசுப் பதவியில் இருந்தார் என்றும் தேர்வுக் கூட்டம் நடந்த அன்றுதான் அவருக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்றும் மனுதாரர் கூறினார். இப்படி நடந்திருப்பது சட்டப்படி குற்றம். இதனை எல்லாம் பார்க்கும்போது, மூன்று பேர் நியமனத்திலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை எனவே, மூன்று பேரின் நியமன உத்தரவு சட்ட விரோதமாகவும், நடைமுறைக்கு முரணாகவும் உள்ளது’ என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

''தகவல் அறியும் சட்டத்தில் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உள்ள விதி முறைகள்தான் இந்த மூன்று பேர் நியமனத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. நியமனத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, மாறிவிட்ட அரசுகளின் நிலைப்பாட்டைப் பார்க்கக் கூடாது'' என்கிறார்கள் இந்த மூன்று பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்.

தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் தகவல்களைப் பெறுவதைவிட... நல்ல ஆணையர்களைப் பெறுவது கஷ்டமாகி விட்டது!

- எம்.பரக்கத் அலி

ஸ்ரீபதிக்கு சிக்கல் இல்லை!

தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக கடந்த 2010-ல் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'அவருடைய நியமனம் செல்லும்’ என்றது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், 'ஸ்ரீபதி தேர்வுக்காக நடந்த கூட்டத்திற்கு எதிர்க் கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களைக் கூறி அவர் கலந்துகொள்ளவில்லை. எனவே, அவர் இல்லாமல் எடுத்த முடிவை சட்ட விரோதம் என்று குற்றம் சாட்ட முடியாது’ என்றும் சொன்னது.

சரி, முகவுக்கு எங்கே நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது? 

குறைந்தபட்சம், முக பெயராவது இந்தத் தீர்ப்பில் இருக்கிறதா என்று கேட்டாவது பின்னூட்டம் வரும் என்று காத்திருந்தேன்! எவரும் அந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டதாகத் தெரியவில்லை! போகட்டும், இந்தக் கேள்விக்கு விடை வழக்கைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் எஸ் விஜயலட்சுமியின் மனுவில் இருக்கிறது. மனுவின் முழுவிவரம் இந்த செய்திக் கட்டுரையில் சொல்லப்படாவிட்டாலும், அதன் சாராம்சத்தை RTI activist கோபாலக்ருஷ்ணன் விளக்கியிருக்கும் பகுதியிலேயே இருக்கிறது.

இதே மாதிரித்தான், TNPSC குழுத்தலைவர் உறுப்பினர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள், அவர்கள் செய்த முறைகேடுகளை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் நடத்தப்பட்ட சோதனைகளும் காட்டின. ஆனால்,அது வழக்கு நடந்து தீர்ப்பு வரும் வரை, தீர்மானமான முடிவாகச் சொல்ல முடியாது என்பது தான் வித்தியாசம்.

பதிவிடுகிறவர் தான் சொல்ல வந்ததைத் தெளிவாக சொல்லியிருக்கிறாரா என்பதும்,சொன்ன விஷயம் சரிதானா என்பதும் ஒரு ஆரோக்கியமான உரையாடலில் மட்டுமே சாத்தியம்!ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிறேன்.பின்னூட்டப்பெட்டி மேல் இருப்பதையும் படித்து விட்டு அதன் பிறகு பின்னூட்டங்களில் உங்கள் மனதில் படுவதை சொல்லுங்கள்!