ஒரு சமுதாயப் பொறுப்புள்ள ஊடகம், நாளிதழ்களில் வெளியாகும் தலையங்கம், செய்திகள் மிகவும் கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டியவை. அந்த வகையில் இன்று தமிழில் வெளிவரும் நாளிதழ்களில் தினமணி ஒன்று தான் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து தலையங்கம், செய்திகளை வெளியிட்டு வருகிறது.மற்றவை வெறும் பரபரப்பு அல்லது வதந்திகளை மட்டுமே செய்தியாக்குகிற திருவிளையாடல்களில் மட்டுமே குறியாக இருக்கின்றன.
முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பாராட்டப்படவேண்டிய விஷயம் ஒன்று உண்டு! அது செய்தித்தாட்களில், வார இதழ்களில் வெளி வந்திருக்கும் முக்கியமான செய்திகளைப் படித்துப் பார்ப்பது!தினமணி தலையங்கம் அவரது ஆட்சிக்காலத்தில் இப்படி வெளிவந்திருக்குமேயானால், உடனடியாக இரண்டு விஷயங்கள் நடந்திருக்கும்! முதலாவதாக, தினமணி ஆசிரியரின் ஜாதி என்ன என்று பார்த்து அதற்குத் தகுந்த மாதிரி சாயம் பூசுவது! அடுத்தது, தன்னுடைய ஆட்சிக்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாகச் சொல்லி அவதூறு வழக்குத் தொடரப்போவதாக மிரட்டுவது!அதையும் தாண்டி, ஊடகங்களில் வெளியாகிற செய்திகள், தலையங்கம் மீது வேறு என்ன உருப்படியான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருப்பார் என்பதில் எனக்கு வேறுபட்ட கருத்து இருந்தாலுமே, கருணாநிதியிடம் பிடித்த அம்சமாக, செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்கிற இயல்பைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
இப்போதைய முதல்வர் அப்படி செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்கிற வழக்கம் உள்ளவரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. செய்திகளைத் தானே உடனுக்குடன் தெரிந்துகொள்கிற வழக்கம் உள்ளவராக இருந்திருந்தால், இந்த எட்டு மாதங்களில்,தன்னுடைய ஆட்சியில் ஏற்பட்ட சறுக்கல்களைக் கொஞ்சமாவது திருத்திக் கொள்ள முனைந்திருப்பாரோ என்னவோ! அதுவும் எனக்குத் தெரியாது.
அரசு ஊழியர்களைக் குளிர்விக்கிற மாதிரி சில விஷயங்களை முதல்வர் அறிவித்துக் கொண்டிருப்பது இருக்கட்டும்! துருப்பிடித்துப் போன அரசு இயந்திரம் இயங்குகிற முறையைக் கொஞ்சம் அல்ல- நிறையவே சரிசெய்தாகவேண்டும் என்பதை இன்றைய தினமணி தலையங்கம் அழுத்தமாகச் சொல்கிறது.
தினமணி தலையங்கம்: சதியா இல்லை விதியா?
சென்னை சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் உள்ள 150 ஆண்டுகள் பழைமையான கல்சா
மகால் தீப்பிடித்து எரிந்த சம்பவம் இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒன்று, இதன்
பின்னணியில் சதிவேலைகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதும், இரண்டு, தீயணைப்புத் துறை
இன்னமும் நவீனப்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதும்தான் அவை.
"ஸ்டவ் வெடித்துப் பெண் மரணம்" என்று எடுத்த எடுப்பில் சொல்வதைப் போல,
இந்தியாவில் நேரிடும் எல்லாத் தீவிபத்துகளுக்கும் சொல்லப் படும் காரணம் - மின்கசிவு.
இந்தத் தீ விபத்திலும்கூட, மின்கசிவுதான் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தில் தொழில் வணிகத் துறை மற்றும் சமூக நலத்துறை இயக்ககங்கள்
செயல்பட்டு வந்தன. சமூக நலத்துறை செலவழிக்கும் துறை. இதற்கு அரசு நிதி ஒதுக்கீடு
மிக அதிகம். தொழில் மற்றும் வணிகத் துறை அரசுக்கு வருவாய் சேர்க்கும் துறை. அரசு
செலவழித்தாலும், வருவாயை ஈட்டினாலும் அங்கே அதிகார ஊழலுக்கு நிறையவே இடம் இருக்கும்
என்பது பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தத் தீவிபத்தில் இத்துறை சார்ந்த
முக்கிய ஆவணங்கள் சாம்பலாகியுள்ளன.
தமிழ்நாடு தேர்வாணையக் குழுவில் நடந்த ஊழல்களில் உறுப்பினர்கள் வீடுகள்
மட்டுமன்றி, வேலையில் சேர்ந்த சில நபர்களின் வீடுகளிலும்கூட அண்மைக் காலமாக
நடைபெற்ற அதிரடி சோதனைகளை எண்ணிப் பார்க்கும்போது, முக்கிய ஆவணங்களைத்
தீக்கிரையாக்கிவிட்டு, குழப்பம் விளைவிக்கவும், இந்தத் துறைகள் சார்ந்த ஏதோ ஊழலை
மறைக்கவுமான சதித்திட்டம் இருப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன.
கல்சா மகால் சென்னையில் இருக்கும் மிகச் சில அரிய கட்டடங்களில் ஒன்று என்பதால்
இந்தக் கட்டடத்தை அப்படியே பழைமையுடன் காத்து வந்தனர். இப்போது தீயினால் இடிந்து
உருக்குலைந்துவிட்ட இந்தக் கட்டடத்தை முற்றிலுமாக அப்புறப்படுத்துவதைத் தவிர, வேறு
வழியில்லை. மூர் மார்க்கெட், ஸ்பென்ஸர் ஆகியன தீவிபத்தில் எரிந்த பிறகு அங்கே
தோன்றிய நேரு ஸ்டேடியம், ஸ்பென்சர் பிளாசா போல வேறொரு பிரம்மாண்டமான கட்டடம்
இங்கேயும் வருமோ என்று சந்தேகிக்க இடமேயில்லை. ஏற்கெனவே உள்ள எழிலகத்தையும்
இடித்துவிட்டுத்தான் கட்ட முடியும். அது சாத்தியமில்லை.
மேலும், ஆழிப்பேரலைத் தாக்குதலுக்குப் பின் மெரீனா பகுதியும் கடலோர
ஒழுங்காற்று மண்டல வரையறைக்குள் வந்துவிட்டது. மெரீனாவுக்கு எதிரே மிகப்பெரிய
கட்டடங்கள் புதிதாகக் கட்டுவதற்கு அனுமதி கிடைப்பது கடினம்.
ஆகவே, இந்தத் தீ
விபத்துக்கு ஆவணங்களை எரிக்கும் உள் நோக்கத்தைத் தவிர, வேறு நோக்கம் இருப்பதாகத்
தெரியவில்லை. அப்படி உள்நோக்கம் இல்லாமல் போனால் இது ஓர் எதிர்பாராத விபத்தாக
மட்டுமே இருக்க முடியும்.
இரண்டாவதாக, தீயணைப்புத் துறை நவீனமயமாகவில்லை என்பதற்கு இந்தத் தீவிபத்து ஓர்
எடுத்துக்காட்டு.
ஒரு தீவிபத்து நடக்கும்போது அதை வெளியிலிருந்து கட்டுப்படுத்தும் அனைத்துக்
கருவிகளும் இருந்தும் அவை உடனடியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதும், சில வீரர்கள்
தீ எரியும் பகுதிக்குள் சென்று தீயை அணைக்க முற்பட்டபோது, மேல்தளம் தீயினால் இடிந்து
விழுந்து ஒருவரது உயிரை பலிகொண்டதும் தீயணைப்புத் துறை நவீன உத்திகளைக்
கடைப்பிடிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
சுமார் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு கட்டடத்தின் தூலம் இரும்பினால்
இருக்காது என்பதையும், மரங்கள்தான் தூலமாக இருக்கும் என்பதையும் உணர்ந்து
செயல்பட்டிருக்க வேண்டிய தீயணைப்புத் துறை, ஏதோ கான்கிரீட் பில்டிங்கில் நுழைவதுபோல
நுழைந்திருப்பதும், அவர்களை அவ்வாறு நுழையச் செய்திருப்பதும், உயர் அதிகாரிகளின்
அனுபவம் இன்மையைத்தான் காட்டுகிறது.
நமது தீயணைப்புத் துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சிகள் யாவும் எத்தகைய
தீயை எதிர்கொள்வது, எப்படி அணைப்பது என்பதுதானே தவிர, எந்தெந்த கட்டடங்களில்
தீப்பிடித்தால் அவற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்பதில் பயிற்சி இல்லை, அல்லது
அத்தகைய பயிற்சி இருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்பதைத் தான் இந்நிகழ்வு
காட்டுகின்றது.
கூகுள் மேப் இணையதளம் உதவியுடன் சாதாரண மனிதர்களும்கூட எந்தவொரு நகரையும் அதன்
சாலை, தெரு, வீடுகள் என பார்க்க முடிகின்ற இன்றைய கணினியுகத்தில், தீயணைப்புத்
துறையினர் தங்கள் பகுதிக்கு உள்பட்ட கட்டடங்களின் முப்பரிமாண வரைகலைப் படங்களைக்
கணினியில் வைத்திருக்க வேண்டாமா?
ஒரு கட்டடத்தின் அனைத்து உள்ளமைப்பு விவரங்களையும் - அதன் பயன்பாடு, அளவு,
பயன்படுத்தப் பட்டுள்ள கட்டுமானப்பொருள், தோராயமாக புழங்குவோர் எண்ணிக்கை, ஒவ்வொரு
கட்டடத்திலும் உள்ள அவசர வழிகள், கட்டடங்களுக்குக் கீழாக பாதாளச் சாக்கடை உள்ளதா
அல்லது மெட்ரோ ரயில் செல்கிறதா என எல்லா தரவுகளையும் பதிவு செய்தால், தீ விபத்தில்
மட்டுமன்றி, நிலநடுக்கம், ஆழிப் பேரலை, மழைவெள்ளம் போன்ற பேரிடர் காலத்திலும்
அவர்களுக்கு உதவியாக இருக்காதா?
தகவல்தொழில் நுட்பம் விரிக்கும் இத்தகைய நவீன
வாய்ப்புகளை இன்னமும் கூட பயன்படுத்தாமல் இருக்கின்றது தீயணைப்புத் துறை.
இதன் விளைவு தான் வலுவற்ற மரச்சட்டங்கள் எரியும் இடத்துக்குச்சென்று தீயை
அணைக்க, சாதாரண மக்களைப் போல முயன்றிருப்பதும், இதில் ஒருவரின் உயிரிழப்பும்!
கட்டடத்தின் தன்மை என்ன என்பது தெரிந்திருந்தால், எச்சரிக்கையுடன்
செயல்பட்டிருப்பார்கள். உயிரிழப்பு நேரிட்டிருக்காது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை என்பதால் பேரிடர் காலங்களிலும்
இவர்கள்தான் மக்களையும் உடைமைகளையும் காப்பாற்றியாக வேண்டும். அதற்கேற்ப இத்துறையை
தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்றாற்போலத் தரம் உயர்த்த வேண்டும்.
"அரசு இயந்திரம் செயல்படுவதுபோல" என்று சொல்வார்கள். ஏதோ மின்சார ரயில்
தாம்பரத்திலிருந்து கடற்கரை, கடற்கரையிலிருந்து தாம்பரம் என்று
ஓடிக்கொண்டிருப்பதுபோல குறிக்கோளில்லாமல் நமது அரசு இயந்திரம் செயல்பட்டுக்
கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாக வேண்டும்!
தொடர்புடைய பதிவொன்று:
இதற்கும் தினமணியின் பொறுப்புணர்ச்சிக்கும் என்ன தொடர்பு? 'வாய்ப்புகள் உள்ளன' 'இருப்பதாகத் தெரியவில்லை' என்ற ரீதியில் தலையங்கம் எழுதுவது speculative மட்டுமில்லாது misinformation ஆகுமே? தினமணிக்குப் பொறுப்புணர்ச்சி இருந்தால் தன்னுடைய சந்தேகத்தின் பின்னே கொஞ்சம் investigation சேர்த்திருக்க வேண்டாமோ? (தினமணி என்றில்லை, பொதுவாகவே speculative reporting தான் அதிகம் பார்க்கிறேன். வணிக நிர்ப்பந்தமும் ஊடக தர்மமும் don't balance well. :)
ReplyDeleteஇங்கே தடையங்களை விட்டு வைப்பதை விட, ஒரேயடியாக இல்லாமலேயே செய்துவிடுகிற போக்கு நிறைய வளர்ந்துகொண்டிருக்கிறது அப்பாதுரை சார்! ஒரு பத்திரிக்கை என்னதான் தன்னுடைய சக்தியைக் கொண்டு விவரங்களைத் திரட்டினாலும், அப்படியே குரல்வளையை நெரித்து விடுகிற அளவுக்கு இங்கே அரசு இயந்திரங்கள் சுறுசுறுப்பாக இருக்கின்றன.விமரிசனங்களை சகித்துக் கொள்கிற இயல்பு அவைகளிடத்தில் இல்லை.
ReplyDeleteசிலவிஷயங்கள் இங்கே ஆரோக்கியமானதாக இல்லை. பொறுப்புணர்வு என்று சொல்லும்போது அது ஒரு ஒப்பீடு மட்டும் தான் சார்! வேறு எந்தப் பத்திரிகையும், தினமணி அளவுக்கு,அதில் நூறில் ஒரு பங்கு அளவு கூட நேர்மையாகவும், உள்ளது உள்ளபடி செய்திகள், தலையங்கம் எழுதுவது இல்லை. தினமணிக்கு இன்று சர்குலேஷன் குறைந்து போன நிலையிலும் கூட,அவர்கள் இந்த அளவுக்காவது எழுதுகிறார்களே என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டுதான், தினமணி தலையங்கங்கள், செய்திக் கட்டுரைகளில் சிலவற்றை இந்தப்பக்கத்தில் வாசிக்க வரும் நண்பர்களுடைய சிந்தனைக்காக எடுத்துப் போடுகிறேன்.
வெற்று ஊகங்கள் நிச்சயமாக இல்லை! ஆனால்,தகவல்களை ஒரு உள்நோக்கத்துடன் திருத்திச் சொல்வது தினமணிக்கு இன்னமும் கைவராத கலை என்று உறுதியாகச் சொல்வேன் சார்!