விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்! குறட்டை விட்டோரெல்லாம்....?



இன்றைய ஜூனியர் விகடனில், வைகோவை ஒரு மாற்று அரசியல் சக்தியாக அடையாளம்காட்டி, தமிழருவி மணியன் நடத்திய ஒரு கூட்டத்தைப் பற்றிய செய்திக்கட்டுரை வெளியாகி இருக்கிறது.மாற்று அரசியல் தீர்வாக வைகோ தமிழக முதல்வராவது ஒன்று தான் வழி என்று தமிழருவி மணியன் முழங்கியிருக்கிறார். கூட்டத்தில், மதிமுக தவிர இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும்  கலந்து கொண்டிருக்கிறார்கள்

ஜெயலலிதாவிடம் கெஞ்சிப் பார்த்து கேட்ட சீட் கிடைக்கவில்லை என்றதும் விசயகாந்திடம் ஓடிப்போய்  மூன்றாவது அணி அமைக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பி  தமிழருவி மணியன் எந்த தைரியத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தினார், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு ஒப்புக் கொண்டனவா என்பது கூட கட்டுரையாளருக்குத் தெரியவில்லை. ஏற்கெனெவே மதிமுகவிடம் கூட்டணி வைத்திருந்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்பதும் மார்க்சிஸ்டுகளின் அரசியல் கணக்கே வேறு என்பதும் கட்டுரையாளருக்குக் கொஞ்சமும் தெரியவில்லை. போகட்டும்!

வைகோ மீது ஒரு தனிமனிதராக, ஒருதிறமையான நாடாளுமன்றவாதியாக, எனக்கு மட்டுமல்ல, இங்கே நிறையப்பேருக்கு  மரியாதையும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால், ஒரு இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்துவதில் வைகோவுக்கு சாமர்த்தியமில்லை! குறிப்பாக தனக்கு அடுத்த படியாக ஒரு நம்பிக்கையான ஆதரவாளர்களை இரண்டாவது மட்டத் தலைவர்களாக உருவாக்குவதில் கூட வெற்றி பெற முடியாதவர் அவர்.. அதுவும் கருணாநிதி விரிக்கும் வலைக்குள் சிக்குகிறவர்களாகவே அவரைச் சுற்றி ள்ளவர்கள் இருப்பது வைகோவின் தலைமை எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு அடையாளம்.

ஆளை மாற்றினால் அரசியல் சூழலும் மாறிவிடுமா? தனி ஒரு நபரால் இத்தனை சீரழிவையும் மாற்றி விட முடியுமா?தமிழருவி மணியன் சொல்கிற தீர்வு உண்மையிலேயே, சரியான தீர்வு தானா? நடைமுறை சாத்தியம் தானா? முதலில் அந்த செய்திக் கட்டுரையைப் படித்து விடுவோம்.

''கருணாநிதி, ஜெயலலிதாவை விட்டால் வழியே இல்லையா?

தகதகக்கும் தமிழருவி மணியன்


மிழக அரசியல் வெளியில் தமிழருவி மணியனால் புதிய காற்றழுத்தம் ஒன்று உருவாகி இருக்கிறது. 'மாற்று அரசியல்’ எனும் மேடையில் வேறு பட்ட அரசியல் தலைவர்கள் சிலரை ஒருசேர நிறுத்தி நெடிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறார்!

தமிழருவி மணியனின் 'காந்திய மக்கள் இயக்கம்’ கடந்த 7-ம் தேதியன்று தனது இரண்டாவது ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம். மேடையில்... ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை அழைத்து வந்து மணியன் அமர்த்த, மக்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் ப்ளஸ் ஆச்சரியங்கள். '

'இது காந்தியச் சிந்தனைகளை விளக்குவதற்கான மேடை மட்டும் அல்ல. இது ஒரு போராட்டக் களம். நம்மை ஆள வேண்டியோரைத் தேர்ந்தெடுப்பது மட்டும் அல்ல ஜனநாயகம். அவர்கள் தவறிழைக்கும் போது அதை எதிர்த்துப் போராடுவதும்தான் ஜனநாயகம்...'' என்று ஒரு பொறியைப் பற்றவைத்து விட்டு அமர்ந்தார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெரியவர் லட்சுமிகாந்தன் பாரதி.

'இன உணர்வாளர்’ என்ற முறையில் இந்தக் கூட்டத்துக்கு  அழைக்கப்பட்டு இருந்தார் இயக்கு நர் தங்கர்பச்சான். ''தயவுசெஞ்சு என்னோட பேச்சுக்கு யாரும் கை தட்டாதீங்க. கை தட்டி, விசிலடிச்சே நாசமாப் போயிட்டிருக்கோம் நாம...'' என்று ஆவேசப்பட்டவர், ''இந்த மேடையில் அச்சப்படாமல் பேசலாம். காரணம், இங்கு அமர்ந்திருப்பவர்கள் நேர்மையானவர்களே தவிர, அரசியல் பிழைப்புவாதிகள் அல்ல. சுதந்திரத்துக்கு பின் 50 ஆண்டு காலமாக ஒரே குடும்பம் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறது. இதை ஜனநாயகம் என்கிறோம். மக்களாட்சி என்கிறோம். கேடு கெட்ட விஷயம் இதுதான். ஓட்டுப் போடுற மக்கள் பிச்சைக்கார மனநிலையில் இருப்பதுதான் அரசியலைப் பிழைப்புக்குப் பயன்படுத்தும் பேர் வழிகளுக்கு வசதி யாகிவிட்டது. கொடுக்கின்ற இலவசத்தை வாங்கி இனி அவன் மூஞ்சியிலே விட்டெறியுங்கள். அதன் பிறகு கதை வேறு விதத்தில் பயணிக்கும்'' என்றார் குரல் உயர்த்தி.

மைக்கைப் பற்றிய தமிழருவி மணியன் ரௌத் திரமும், ஆதங்கமும் ஒரு சேர வீசிய பேச்சு தமிழக அரசியல் மேடைகளுக்கு விதிவிலக்கு.

''இந்த நிகழ்ச்சியை 'மூன்றாவது அணி’ அமைப்புக்கான வேலை என்று சிலர் மிகத்தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள். இல்லை... இது, 'மாற்று அரசியல்’ அமைவுக்கான தளம். மேடையில் இருக்கும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இன்னும் எத்தனை நாட்கள்தான் கருணாநிதிக்குப் பின்னும், ஜெயலலிதாவுக்குப்  பின்னும் மறைந்தே அரசியலை நடத்துவது? தேர்தல் முடியும் வரை உங்களைப் பயன் படுத்திவிட்டு, பிறகு தூக்கி எறியப்படும் நிலை எத்தனை நாளைக்கு வேண்டும்? எங்களுக்குத் தேவை ஊழலின் நிழல் படாத அரசியல். 

நேர்மையான அரசியலைத் தேடி நான் அறிவாலயமா செல்ல முடியும்?
போயஸ் தோட்டம்தான் செல்ல முடியுமா? 

ஊழலைப் பொதுப்புத்தி ஆக்கிவிட்டார் கருணாநிதி. அரசு அதிகாரிகளை சசிகலா கூட்டம் ஆட்டுவித்தபோது ஆத்திரப்படாத ஜெயலலிதா, பொதுப் பணத்தை அந்த மன்னார்குடி குடும்பம் வாரிச் சுருட்டியபோது ஆத்திரப் படாத ஜெயலலிதா, எப்போது ஆத்திரப்பட்டார்? பெங்களூருவில் இருந்தபடி தனக்கு எதிராக அவர்கள் சதியாலோசனை நடத்துகிறார்கள் என்று தெரிந்ததும்தானே? இந்த ஜெயலலிதாவிடம் எப்படிப் பொது நலனை எதிர்பார்க்க முடியும்? 

காங்கிரஸும் ஊழலுக்கு விதிவிலக்கு இல்லை. அதனால் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு பொது நலனுக்காக உருகும் நீங்கள் கைகோக்க வேண்டும். நீங்கள் மாற்று அரசியலைக் காண்பித்தால், மக்கள் உங்களை விரும்புவார்கள். அதில் எனக்குத் தெரிந்த மாற்று வழி, வைகோ முதல்வர் ஆவதுதான். அதற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மாற்றத்தை உருவாக்க நாங்கள் தயார். மற்றபடி உங்கள் விருப்பம்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

எதிர்பார்ப்புகளுக்கிடையில் தன் உரையைத் துவங்கிய வைகோ, ''தமிழகம் கட்டுக்கடங்காத பிரச்னைகளை சந்தித்துக்கொண்டு இருக்கும் வேளை யில் இப்படி ஒரு தளத்தில் கூடியிருக்கிறோம். தமிழருவி... நீங்கள் உங்கள் விருப்பத்தை வெளியிட் டிருக்கிறீர்கள். தியாக இயக்கமாம் ம.தி.மு.க. தேர்தல் அரசியலில் இயங்குவதுதான். நாங்கள் சில கால கட்டங்களில் சிலரோடு கூட்டணி வைத்திருந் தோம் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் என்றுமே தமிழர்நலன் என்ற கொள்கையை விட்டுக்கொடுத்ததும் இல்லை, சுயமரியாதைக்குப் பங்கம் வரும்போது பொறுத்துக்கொண்டதும் இல்லை. அதனால் பதவி, அதிகாரம் இதை எல்லாம் நாங்கள் என்றுமே எதிர்பார்த்ததும் இல்லை. நாங்கள் அண்ணாவின் வார்ப்புகள். விஷச் சூழலில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் கனன்று கொண்டேதான் இருக்கிறது. எரிமலை, அறிவித்துவிட்டு வெடிப்பது இல்லை, புயல் சொல்லிக்கொண்டு அடிப்பது இல்லை. அது போல் மக்கள் புரட்சி வரும்... கூடவே மாற்றமும் வரும்'' என்று ஒரு புள்ளி வைத்தார்.


விடை தெரியாத கேள்வியோடு கூட்டம் விடை பெற்றது!

(கட்டுரையாளர் ஒரே ஒரு உண்மையைத் தன்னையறியாமலேயே சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை தான்!) 
 (அதிமுக நாடாளுமன்றத் தேர்தல்களில் மதிமுகவை அரவணைத்துக் கொள்ள தயாராகிவிட்டதாகவே இப்போதைய செய்திகள் சொல்கின்றன).


-------------------------------------------------------------------------------------------------------------

இங்கே அரசியல், நிர்வாகம் நீதித்துறை, ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்கள் என்று எல்லாமே சீரழிக்கப்பட்டு விட்ட நிலையில் மாற்றம் என்பது ஒரு கட்சியை அகற்றி விட்டு இன்னொரு கட்சியைக் கொண்டுவருவதாலோ வராது.

ஒரு நபரைக் குற்றம் சொல்லி அகற்றி விட்டு, வேறொரு நபரை மாற்றுவதால் மட்டுமே இங்கே கோளாறுகளுக்குத் தீர்வாகி விடாது.

மூன்றாவது அணி, மாற்று அணி என்பதெல்லாம் இன்றைய நிலையில் வெறும் கற்பனை தான். தானே உச்சாணிக் கொம்பில்  தலைமை ஏற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மட்டுமே நிறைந்த சூழலில் இவர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

அப்படியானால் தீர்வே இல்லையா? வேறு வழியே இல்லையா?

நிச்சயமாக இருக்கிறது. கொஞ்சம் பொறுமை வேண்டும். விழிப்புடன், ஒருங்கிணைந்து செயல்படும் சக்தியாக மக்களுடைய குரலை எதிரொலிக்கும் இயக்கமாக உருமாற்றம் காண்பதற்கு---

முதலில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தவேண்டும்! இப்போதிருக்கும் வெஸ்ட்மினிஸ்டர்  முறையிலான ஜெயித்தவனே எல்லாற்றையும் சுருட்டிக் கொண்டு போக அனுமதிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் அது வாங்கும் வாக்குகளின் சதவீதத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் என்று தேர்தல் முறை மாற்றப்படவேண்டும்.

ஆபீஸ் பையன் உத்தியோகத்துக்குக் கூட குறைந்தபட்சக் கல்வித்தகுதி கேட்கிற தேசம் அரசியல் வாதிக்குத் தகுதி கேட்கக் கூடாதா? அரசியலில் இறங்குவதற்குக் குறைந்தபட்ச வயது இருக்கிற மாதிரியே, குறைந்தபட்சக் கல்வித் தகுதி தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள்  இயற்றுகிற அதிகாரம் படைத்த சட்ட மன்றம், நாடாளுமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களுக்கு, நம்முடைய அரசியல் சாசன, சட்டம் இயற்றும் முறைகளைப் பற்றிய அடிப்படை ஞானம் இருக்க வேண்டும். அதில் ஒரு பட்டயப்படிப்பாவது பெற்றிருக்க வேண்டும்!

குறைந்த பட்ச வயது இருப்பது போலவே போட்டியிட அதிகபட்ச வயது வரம்பும் வேண்டும். அறுபது வயது என்று வைத்துக் கொள்ளலாம். சரியான உடல் நலம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அறுபத்தைந்து வயது வரை வேண்டுமானால் தளர்த்திக் கொள்ளலாம்.

கேபினெட் அமைச்சர், முதல்வர், பிரதமர்  ஜனாதிபதி பதவிகளுக்கு,ஒரே நபர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்கத் தடை வேண்டும்.

மாநில அரசுகளைக் கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பது போலவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படாத மாநில அரசுகளைக் கலைப்பதற்குப் பரிந்துரை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.அரசியல் சாசனத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பை, மக்களுடைய பிரதிநிதிகள்  பொறுப்பேற்கத் தயாராகவும் தகுதியுள்ளவர்களாகவும் ஆகிற வரை உச்சநீதி மன்றமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்னும் கொம்ஞ்சம் விரிவாகவே பேசலாம்! இதெல்லாம் நடைமுறைக்கு வருகிற சாத்தியம் உண்டா என்று சந்தேகம் எழுகிறதா? தூக்கத்தில் கனவு காண்பது மட்டுமே பிழைப்பு என்றிருப்பவர்களுக்கு எதுவுமே சாத்தியமில்லை.

மாற்றங்களை வேண்டு
ம் மக்கள் குரல் உரத்து ஒலிக்கும் நாளில், எல்லாம் நிறைவேறும்.

5 comments:

  1. காந்தி ,சே , பிடல் ,...இன்னும் சொல்லிகொண்டே போகலாம் வரலாறு நெடுக்க ...தனிமனிதர்களால் நடந்த மாற்றங்களை இந்த தனிமனிதர்களை விமர்சிக்கவும் ஆட்கள் இருந்தார்கள்...என்ன செய்ய ...முடிந்தால் கை கொடுப்போம் இல்லை எனில்.....

    ReplyDelete
  2. இந்த கூட்டத்தை தவற விட்டு விட்டேன். சென்னையில் இருந்த காரணத்தால்.

    ReplyDelete
  3. //காந்தி ,சே , பிடல் ,...இன்னும் சொல்லிகொண்டே போகலாம் வரலாறு நெடுக்க ...தனிமனிதர்களால் நடந்த மாற்றங்களை இந்த தனிமனிதர்களை விமர்சிக்கவும் ஆட்கள் இருந்தார்கள்...என்ன செய்ய ...முடிந்தால் கை கொடுப்போம் இல்லை எனில்.....//

    இப்படி ஒரு பின்னூட்டம் தாமிரபரணி என்பவரிடம் இருந்து, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல், (என்வரையில் இப்படி வருவதே அனானிதான்) வந்திருக்கிறது. கமென்ட் பெட்டி மீது தெளிவாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளத் தயங்குபவர்கள் பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்வது நலம, இத்தகைய பின்னூட்டங்களை ஏற்பதில்லை என்றுசொன்ன பிறகும் கூட!

    இந்தப்பக்கங்களில் எங்கேயுமே தனிமனிதர்களுடைய பங்கைக் குறைத்து மதிப்பிடவில்லை! தனிமனிதர்கள் தான் ஒரு தெளிவான குறிக்கோள், அதை அடையும் வழி யில் தெளிவு கொண்டு தலைவர்களாகிறார்கள் என்பதை இந்தப்பக்கங்களில் பலபதிவுகளில் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். தமிழருவி மணியன் சொன்னதை மறுத்திருப்பதும், வைகோவிடம் தலைமைக்கான பண்பு சிறிதும் இல்லை! மிகப் பலவீனமான தலைவர், ஆனால் நல்ல மனிதர் என்று இங்கே சொல்லியிருப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா?

    ReplyDelete
  4. அரசியலில் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொள்வதும் பிறகு சமாதானம் ஆவதும் சாகசம். ஏதோ பேசவேண்டும் என்பதற்காக மேடையில் இருபபவரை புகழ்ந்து பேசி கைதட்டல்கள் பெறுகிறார்கள். இது ஒன்றும் முக்கியமான ஓன்று அல்ல. மக்களை திசைதிருப்பும் தந்திரம் இது.

    ReplyDelete
  5. திரு நாட்ராயன்! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    தமிழருவி மணியன் வெறும் முகஸ்துதிக்காக இந்தக் கூட்டத்தை நடத்தவில்லை என்பதை அறிவேன்.இப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னாடி இருந்தே அவர் வைகோ தான் தமிழகத்தைக் வழிநடத்தத் தகுதியானவர் என்று சொல்லி வருகிறார். அவர் மட்டும் ஆசைப் பட்டால் போதுமா? அவருடைய ஆசை நிறைவேறக் கூடியது தானா என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு தான் இந்தப்பதிவில், ஒரு மாற்றுச் சிந்தனை, இயக்கத்துக்கான அடிப்படைக் கேள்விகள் தேர்தல் சீர்திருத்தங்களை வேண்டி நடத்தப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.

    இந்தப்பக்கங்களில் அரசியல் பேசுவது ஒரு தற்காலிகமான தீர்வுக்காக ஏங்கி, எதையோ ஆதரிப்பதற்கு இல்லை.ஒரு நல்ல ஆரம்பமாக, இப்போதிருக்கும் தேர்தல் முறையை மாற்றுவது, பிரிடிஷ்காரன் காலத்திய நிர்வாக இயந்திரத்துக்கு ஒரு சரியான மாற்றி உருவாக்குவது,என்று சிந்தனை விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன். அதைக் குறித்து எழுதுங்கள்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!