Showing posts with label February 21. Show all posts
Showing posts with label February 21. Show all posts

அன்னை பிறந்தாள்! எங்கள் அன்னை பிறந்தாள்!

பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குப் போய்வந்த அனுபவம் உண்டா? அப்படிப் போய் வந்தவர்களுடைய அனுபவம், இனம் புரியாத அமைதியும் பரவசமும் நிறைந்ததாகவே இருந்தது என்பதை யார் யாரோ சொல்லக் கேட்டதுண்டா?

  
இது ஸ்ரீ அரவிந்தாசிரமத்தின் நுழைவாயில்! தெற்குப் பார்த்த வாசல்! உள்ளே நுழைந்து வலப்பக்கம் பார்த்தால் Service Tree என்றழைக்கப்படுகிற மரத்தின் நிழலில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னை இருவரும் மகா சமாதியில் எழுந்தருளியிருப்பதைத் தரிசிக்க முடியும். தரிசன நாட்களில் சமாதி அருகே அமர்ந்து கூட்டு தியானம் காலைவேளையில் நடக்கும். ஸ்ரீ அரவிந்தர் மோனத்தவம் செய்த மாடி அறைக்குப்போய் தரிசனம் செய்யமுடியும்! வருடத்தில் இரண்டே நாட்கள் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அறைக்குப்போய் தரிசனம் செய்கிற வாய்ப்பும் கிடைக்கும். அவ்வளவுதானா? வெறும் பிக்னிக் போய் வருகிற மாதிரி பத்தோடு பதினொன்றாகப் போகிறவர்களுக்கு மட்டும் அப்படியிருக்குமோ, எனக்குத் தெரியாது.ஆனால் ஒரு தாயைத் தேடிப்போகிற குழந்தைமாதிரி நினைத்துக் கொண்டு போகிறவர்களுடைய அனுபவமே வேறுதான்! 

தரிசன நாள் என்பதென்ன? அன்னை புதுச்சேரிக்கு வந்தபிறகு எல்லாப் பொறுப்புக்களையும் அவரிடம் கொடுத்து விட்டு ஸ்ரீ அரவிந்தர் தனியாக மோனத்தவம் இருக்க ஆரம்பித்தார். ஆசிரமத்துக்குள்ளேயே தங்கி இருந்த சாதகர்கள் கூட அவரைச் சந்திக்க முடியாது.தங்களுக்கெழும் சந்தேகங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி அன்னையிடம் கொடுக்க, அவரும் ஸ்ரீ அரவிந்தரிடம் காட்டி, பதில்களை வாங்கித் தருவார். வருடத்தின் சிலநாட்களில் மட்டும் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் சாதகர்களுக்கு மட்டுமன்றி, வெளியூரில் இருந்து வரும் அன்பர்களை சந்திக்கிற வாய்ப்பாக உருவானதே தரிசன நாட்கள் என்றழைக்கப்படுகிறது. இன்றைய தரிசன நாள் செய்தியாக

      
இன்று பிப்ரவரி 21 ஸ்ரீ அரவிந்த அன்னை 
பிறந்தநாள் தரிசனநாள் செய்தி முகப்பு 

 தரிசனநாள் செய்தி 
படத்தைப் பெரிதாக்கி வாசிக்கலாம் 
   
இங்கே வாசிக்க சௌகரியமாக இருக்கிறதா?

ஸ்ரீ அரவிந்த அன்னை என்று கொண்டாடப்படும் Mirra Alfassa பாரிஸ் நகரில் 21 பிப்ரவரி 1878 இல் அவதரித்தார். 1914 இல் முதல்முறையாக புதுச்சேரிக்கு ஸ்ரீ அரவிந்தரை தரிசிப்பதற்காக வந்தார். 11 மாதங்கள் புதுச்சேரியில் இருந்து விட்டு, முதல் உலகப்போர் மூண்ட தருணம், பிரான்சுக்கே திரும்பினார். அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்று 4 வருடங்கள் இருந்தார். 1920 ஏப்ரல் 24 அன்று புதுச்சேரிக்குத் திரும்பிய அன்னை, இங்கேயே நிலையாகத் தங்கினார். 

மேலே ஸ்ரீ அரவிந்த அன்னையின் சின்னம் இருந்தது அல்லவா! அதில் மைய வட்டத்தைச் சுற்றி நான்கு இதழ்கள்! அதைச் சுற்றிப் பன்னிரண்டு இதழ்கள்! அவை சொல்வதென்ன? தமிழிலேயே இருப்பதைப் படிக்க முடிகிறதா?


ஆரம்ப காலங்களில், தரிசன நாள் செய்தியாக இதுமாதிரி கார்டும், மலர்ப்பிரசாதங்களும் வழங்கப் பட்டதில் அன்னையே அந்தந்த தருணத்துக்கேற்ற மாதிரி செய்தியை தன் கைப்படவே எழுதி அளித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ அரவிந்த அன்னை 1973 இல் மகாசமாதி ஆன பிறகு இப்போதுள்ள வடிவத்தில் அச்சிடப்பட்ட கார்டுடன், சமாதிமீது வைக்கப்பட்ட மலர் இதழ்களை உலரவைத்து ஒரு சிறு பாக்கெட்டாக வழங்குகிறார்கள். தரிசனநாள் செய்தி ஆங்கிலத்திலும்  பிரெஞ்சிலும் இருக்கும். இங்கே ஆங்கிலச் செய்தி மட்டும். 

அன்னை என்னும் அற்புதப் பேரொளி இன்றும் தம்முடன் இருப்பதை உணர முடிகிற அன்பர்கள் கூடி வழிபடுகிற சிறப்பான நாள் இன்று பிப்ரவரி 21 

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே 

அன்னை பிறந்தாள்! எங்கள் அன்னை பிறந்தாள்!


ஆரோவில் மாத்ரி மந்திர் உள் அறை 


பிப்ரவரி மாதம் பிறந்தாலே, ஒரு இனம்புரியாத பரவசம் வந்து சேர்ந்து விடுகிறது!
வெளியே எத்தனையோ விஷயங்களில் மனம் அலை பாய்ந்தாலுமே கூட, மனம் ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள் பிப்ரவரி 21 ஆம் தேதி வருவதை ஒட்டி, தரிசன நாள் செய்திக்காகக் காத்துக் கிடக்கிற தவம் கூடவே தொடங்கி விடுகிறது. பல்வேறு காரணங்களால், புதுச்சேரி ஆசிரமத்திற்குச் சென்று நேரில் தரிசன நாள் சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள நேரம் கைகூடாமல் இருந்தபோதிலுமே கூட, மனம் அங்கே தான் மையம் கொள்ள விரும்புகிறது. அவளே எல்லாம் என்று இருந்துவிடத் தவிப்பு  இப்போதுதான் பற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

 
பிரபலமாக இருப்பது எப்படி இருக்கும் என்பதையும் பார்த்தாயிற்று! போலித்தனமான தலைவரே என்ற அழைப்பில், கூடியிருந்த கூட்டங்கள் எதிலுமே மயக்கம் அதிகமிருந்ததில்லை என்றாலும் அதிலேயே உழன்ற வாழ்க்கையில் இருந்து வெளியே வந்தாயிற்று! நண்பர்களே பகையாகி, உடல்நலமும் கெட்டு, மன நிலையும் ஒத்துழைக்காமல் இருந்த நரகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. 

 
அனுபவங்கள் ஒவ்வொன்றும், ஒரு காரணத்திற்காகவே நமக்கு அருளப் படுகின்றன. ஒவ்வொரு அனுபவமும் நம்மை உயர்த்துவதற்காகவே! நம்மைப் பக்குவப்படுத்துவதற்காகவே! 

அவரவர்க்கு வேண்டிய விதத்தில், வேண்டுகிற நேரத்தில் கிடைப்பதை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்து வியந்திருக்கிறேன். வெற்றிகளாக நான் எண்ணிய எதுவும் நிலைக்கவில்லை என்பதோடு வெற்றிகளே என்னுடைய சுமையாகவும் ஆகிப்போனதாய் அறியவும் ஒரு நேரம் வந்தது. உலக அளவீடுகளின்படி நான் வெற்றி பெற்ற மனிதனில்லை! புத்திசாலியுமில்லை!

தோல்விகள், அவமானங்கள் என்னைச் சுருட்டி முடக்கி வைத்து விடவில்லை! ஒவ்வொரு தோல்விக்குப் பின்னாலும், நான் எங்கே தவறு செய்தேன் என்பதைத் தெளிவாகக் காட்டி, நான் போக வேண்டிய பாதை எது என்பதை வழிநடத்தும் வெளிச்சமாக இருப்பதையும்  அறிகிற நேரமும் வந்தது. பூஜ்யத்தைச் சின்னதாக வரைந்தால் என்ன, பெரிதாக வரைந்தால் என்ன? வட்டம் மா'வட்டமாகி விடுமா? அப்போதும் அது பூஜ்யம் தானே!

Consent to be nothing and none என்று  ஸ்ரீ  அரவிந்தர் சாவித்திரி மகாகாவியத்தில் சொல்கிற நிலையை வேண்டிக் காத்திருக்கிறேன் தாயே!


 
மேலே காண்பது  நாளை, 21 ஆம் தேதி புதுவை ஆசிரமத்திற்கு நேரில் செல்ல முடிகிறவர்களுக்கு வழங்கப்படும் தரிசன நாள் செய்தி! இதனுடன்,  பூக்களும் பிரசாதமாகக் கிடைக்கும்! சமாதியைச் சுற்றி அமர்ந்து கூட்டுத் தியானம் செய்கிற நல்ல வரமும், அன்னையின் அறைக்குச் சென்று, அன்னையின் அருளே இன்றைக்கும் சூக்குமமாகச் செயல்படுவதைப் புரிந்துகொள்கிற உன்னதமான அனுபவமும் கிடைக்கும். ஏதோ ஒரு முறை அப்படியொரு நல்வாய்ப்புக் கிடைத்த தருணத்தை நன்றியோடு இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஸ்ரீஅரவிந்த அன்னையின் மலர்ப்பதங்களில் சரணடைகிறேன். 

பிரச்சினைகள் சூழும்போது..!


1971 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்ஒரு நாள், ஸ்ரீ அரவிந்த அன்னை, உதார் பின்டோ என்கிற அடியவரிடம் சொல்கிறார்: "இந்தியாவைக் கருமேகங்கள் சூழ்வதைக் காண்கிறேன்" ஸ்ரீ உதார் பின்டோ அன்னையிடம், அவர் அதைக் குறித்து ஏதாவது செய்ய முடியாதா என்று கேட்க, ஸ்ரீ அன்னை, அதற்கான காலம் கடந்து விட்டதாகக் கூறுகிறார். ஸ்ரீ உதார் பின்டோ: "அப்படியானால், நாங்கள் பிரார்த்தனை செய்வதற்கு ஒரு மந்திரத்தை அருளுங்கள்" அன்னை சிறிது நேரம் சமாதி நிலையில் இருந்த பிறகு அருளிய இந்தப் பிரார்த்தனை, இன்றைக்கும் நம்மை பிரச்சினைகள் சூழும்போது, அவற்றை எதிர்கொள்ளும் வலிமையைத் தருவதாக இருக்கிறது.

இந்த உரையாடல் நடந்த சில மாதங்களிலேயே, பங்களாதேஷ் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது, இந்திய-பாகிஸ்தான் யுத்தமாகவும் உருமாறியது.

என்ன செய்வது என்பதைத் தெளிவாக அறிய முடியாத சூழ்நிலையில், இந்தப் பிரார்த்தனை எவ்வளவு வலிமையைத் தந்திருக்கிறது என்பதை, பிரார்த்தனைகளை நம்புகிறவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
“Supreme Lord, eternal Truth, let us obey Thee alone and live according to Truth.”

இப்போது நான் சந்தித்துக் கொண்டிருக்கும் சில தனிப்பட்டபிரச்சினைகள் ஏகப்பட்ட வலி, வேதனைகளைத் தருவதாக, மறுபடியும் தனித்து விடப்பட்டதாக உணர்கிற அளவுக்கு முற்றிக்கொண்டு வருகிறது. இப்படிச் சோர்ந்து விழுகிற தருணங்களில் எல்லாம் ஸ்ரீ அரவிந்த அன்னை என்னோடு துணையாக இருப்பதை வழிநடத்திச் செல்வதை அறிந்தே இருக்கிறேன். நான் தனியன் இல்லை எனக்கொரு அன்னை இருக்கிறாள் அவளே எல்லாமுமாக இருந்து என்னை வழி நடத்துகிறாள் என்கிற நம்பிக்கையே என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.   
   

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே 

அன்னை என்னும் அற்புதப் பேரொளி

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன் திருவடிகளை  சரணடைகிறேன்.உனது பிரியத்துக்குத் தகுதியானவனாக, உனது கருணையால் நிறைவிக்கப்படுகிறவனாக வரம் அருள்வாய்.

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அனுபவம். ஒவ்வொன்றையும் உனது அருட்திறத்தை உணர்ந்து அனுபவிக்கும் பக்குவம் வருவதும் உனது சித்தப்படியே ஆகட்டும் என்ற சரணாகதி கைகூடுவதும்  உனதருளே.

என் செயலாவதொன்றில்லை.

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே 



“This world is her long journey through the night,
The suns and planets lamps to light her road,
Our reason is the confidante of her thoughts,
Our senses are her vibrant witnesses.
There drawing her signs from things half true, half false,
She labours to replace by realised dreams
The memory of her lost eternity.”

--Sri Aurobindo






ஸ்ரீ அன்னையின் தரிசன நாள் செய்தி


ஸ்ரீ அரவிந்த அன்னையின் 131 வது அவதார தினம் பெப்ருவரி 21
ஸ்ரீ அன்னையின் தரிசன நாள் செய்தி இதோ:

"Live always as if you were under
the very eye of the Supreme and of
the Divine Mother. Do nothing, try to
think and feel nothing that would be
unworthy of the Divine Presence."

--Sri Aurobindo


உனது சித்தத்தின் படியே நடந்து
உனக்குப் பிரியமான குழந்தையாகத்
தகுதியை அருள்வாய்.
ஸ்ரீ அரவிந்த அன்னையே!
உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
உன்னுடைய ஒளியினால் நிறைவிப்பாய்.

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி, சத்யமயி பரமே!

எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது?…


பெப்ருவரி பிறந்தவுடனேயே, இனம் புரியாத ஒரு பரபரபப்பும், எதிர்பார்ப்பும் தொடங்கி விடுகிறது.

சிறுவயதில் தீபாவளி எப்பொழுது வரும் என்று பட்டாசு வெடிக்கும் கனவுகளோடு காத்திருப்பதைப் போல, பிறந்த நாள் எப்பொழுது வரும், புது ஆடைகள், பரிசுகள் வாழ்த்துக்கள் என்கிற கனவுகளோடு காத்திருப்பதைப் போல, ஸ்ரீ அரவிந்த அன்னை அவதரித்த பெப்ருவரி மாதம் பிறந்தவுடனேயே, ஸ்ரீஅன்னையின் பிறந்த நாளுக்காக, ஸ்ரீ அன்னையின் ஆசீர்வாதச் செய்திக்காக காத்திருப்பது, இப்போதெல்லாம் ஒரு தவமாகி விட்டது.

கொடுப்பினை உள்ளவர்கள் புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்று, வரிசையில் காத்திருந்து, கூட்டுத் தியானத்திலும், பின்னர் ஸ்ரீ அன்னையின் அறைக்குச் சென்று மானசீகமாக, ஸ்ரீ அன்னையிடம் வாழ்த்துச் செய்தியைப் பிரசாதமாகப் பெறும் பேற்றினைப் பெறுகிறார்கள்.

புதுவை செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள தியான மையத்திற்கோ, தங்கள் இல்லத்திலோ, ஸ்ரீ அரவிந்த அன்னையை அவருடைய உருவப் படத்தை வைத்து வணங்கி, அதே அருளை, சந்தோஷத்தை அடைகிறார்கள்.

நாம் மதித்து, வணங்கும் பெரியோர்களை, மகான்களை, அவர்களை மலர் தூவி வணங்குவதோடு மட்டும்,நம்முடைய பொறுப்பும் கடமையும் முடிந்து விடுவதில்லை.அவர்களுக்குச் செய்கிற உண்மையான மரியாதை, வழிபாடு என்பது, அவர்கள் எந்த செய்தியைச் சொல்வதற்காக இந்த பூமிக்கு வந்தார்களோ, அதன்படி நடந்து காட்டுவதில் தான் இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் மேற்கொண்ட முயற்சியினால், மாதவத்தால், ஐம்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், அருட்பெரும் ஜோதியாக, அதிமானசப் பொன்னொளி இந்த மண்ணில் இறங்கியதும் இதே பெப்ருவரி மாதத்தில் தான்.

அவர்கள் தங்களுடைய தவநிலையில் கண்ட, ஸ்ருஷ்டியில் மனிதனுக்கு அடுத்த பரிணாமத் தோற்றம் முழுமையாக வெளிப்பட, உண்மையோடு ஒருங்கிணைந்து அன்னையின் குழந்தைகளாகத் தங்களைக் கருதும் ஒவ்வொருவரும் செயலில் அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.

எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது?
ஸ்ரீ அரவிந்தர் "அன்னை" என்ற தலைப்பில், ஒரு சாதகருக்கு எழுதிய கடிதங்களில், மூன்றாவது கடிதத்தில் இதைப் பற்றி விளக்குகிறார்.

“To sit down in inert passivity and say, "If I am to have faith I shall have it, the Divine will give it to me", is an attitude of laziness, of unconsciousness and almost of bad-will.

For the inner flame to burn, one must feed it; one must watch over the fire, throw into it the fuel of all the errors one wants to get rid of, all that delays the progress, all that darkens the path.

If one doesn't feed the fire, it smoulders under the ashes of one's unconsciousness and inertia, and then, not years but lives, centuries will pass before one reaches the goal.

One must watch over one's faith as one watches over the birth of something infinitely precious, and protect it very carefully from everything that can impair it.

In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer.

The Mother

Collected Works Vol.9 pp352

நமக்குள்ளே இருக்கிற உள்ளொளியைக் காண வேண்டும் என்கிற வேட்கைத் தீ அணைந்து விடாமல், ஆர்வத்தால் கொழுந்து விட்டெரியச் செய்ய வேண்டும்,"எல்லாம் தானாகவே நடக்கும்" என்கிற சோம்பேறித்தனமான மனோபாவத்தை விட்டொழித்து,

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று!

முதலாழ்வார்களில் முதல்வராகக் கொண்டாடப் படும் பொய்கை ஆழ்வார் சொல்கிற இந்தப் பாசுரம் வழியை அழகாகச் சொல்கிறது.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச் சுடர்விளக் கேற்றினேன்! நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்

அதையொட்டி விளைந்த, முதலாழ்வார்களில் இரண்டாமவர், பூதத்தாழ்வார் சொல்லும் இந்தத் தமிழ்ப் பாசுரம் அடுத்த அடியைச் சொல்கிறது.

முதல் பாசுரம் புற ஒழுக்கத்தால் தூய்மை பேண, தெய்வீகம் தானே இறங்கி வர வழி கிடைக்கும் என்பதைச் சொல்கிறது. இரண்டாம் பாசுரமோ, அக ஒழுக்கத்தால், தெய்வீக அன்பு மலர்ந்து நெய் விளக்கேற்றி ஞானச் சுடரைப் பரந்தாமனுக்கு ஏற்றுகிறது.

அறியாமையும், இருளும் கூடின தொடக்கத்தில், பூரணமான நம்பிக்கையே தெய்வீக சக்தியின் நேரடி வடிவமாக, அறியாமையையும் இருளையும் எதிர்த்து வெல்லும் துணையாக நமக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.

எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

உனது ஒளியினால் அனைத்தையும் நிறைவு செய்வாய். உனது ஒளியின் கீழ வர முரண்டு பிடிக்கும், பழக்கங்களின் அடிமையாகவே இருக்க முயலும் பகுதிகளையும், நீ அறிய சமர்ப்பிக்கிறேன்.

நான் செய்கிறேன், எனது விருப்பப்படி, என்கிற கீழ்நிலையிலிருந்து விடுபட வரம் அருள்வாய்.

எனது விருப்பப்படியல்ல, உனது சித்தத்தின்படியே எல்லாம் நடந்தேறட்டும்

என்பது உள்ளார்ந்த பிரார்த்தனையாக இருக்க வரம் அருள்வாய்.

ஒளியை நோக்கி உயருகிற திருவுரு மாற்றத்திற்குத் தகுதி உள்ளவனாகச் செய்வாய் தாயே! எல்லா நிலைகளிலும், உனது பிரியத்திற்குத் தகுதியானவனாக, உனது குழந்தையாக இருக்கும் பேற்றினை வரமாக அருள்வாய்..

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி,சத்யமயி பரமே!