Showing posts with label இந்தியக் கனவு. Show all posts
Showing posts with label இந்தியக் கனவு. Show all posts

மண்ணுமோகனுக்கு வந்த கவலை! கரிசனம்!




நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உலகில்உள்ள மூன்று  குழந்தைகளில் ஒரு குழந்தை இந்திய குழந்தையாக உள்ளது என்றும், இது இந்திய தேசத்திற்கு அவமானமாக இருக்கிறது என்றும் பிரதமர் இன்று கவலையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ள்ளாராம்! ஆச்சரியம் தான்! தன்னுடைய அமைச்சரவை சகா ஒவ்வொருவருக்கும் உத்தமர் சர்டிபிகேட் கொடுத்தது போக நேரமிருந்தால்,கொஞ்சம் அரசு வேலைகளையும் பார்க்கும் ஒருவருக்கு நாட்டைப்பற்றிக் கூட கவலைப்பட நேரம் இருந்திருக்கிறது என்றால் அது அதிசயத்திலும் பெரிய அதிசயம் தான்! 
                                                                        
தேர்தல் சமயமாயிற்றே, கவலைப்படாமல் இருக்க முடியுமா என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்! ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் விவசாய அமைச்சராக ஒருவர் இருக்கிறார்! சரத் பவார்! விவசாயிகள், மற்ற எது எப்படி எக்கேடு கேட்டுப் போனாலும் பரவாயில்லை, கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பை மட்டும் விட மாட்டார்! ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாக்கள் வந்து உலக சாதனை செய்கிற வரை ஊழல் பெருச்சாளிகளில் அவர் தான் நம்பர் ஒன்! இந்தாலிய மம்மிகளை விடவுமே என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்!

இப்படி ஒரு விவசாய அமைச்சரபை வைத்துக் கொண்டு, பெட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிற மந்திரிகளை வைத்துக் கொண்டு மண்ணு மோஹன்சிங் தேசத்தைப் பற்றியும் கவலைப் படுகிறாராம்! 


எத்தனையோ பொய்களை நம்பிய நாம், இதை மட்டும் நம்ப மறுப்போமா என்ன!  

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் இந்திய விவசாயிகளின் நிலைமை , கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளில், அதாவது அரசு ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்ற நாளில் இருந்தே, மிகவும் பரிதாபத்துக்கு ஆளாகி வருகிறது.

இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்த செய்தி கட்டுரையைப் படித்துப் பாருங்கள்! அதில் சொல்லப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களின் பின்னே லட்சக்கணக்கான தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கண்ணீர் இருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒரு அரசியல் கொடுமை இருக்கிறது!


மானியங்கள், கடன்கள் எல்லாமே இருப்பவர்களுக்குத் தான்! தேவைப்படுகிறவர்களுக்கு அல்ல! அரசு அறிவிக்கும் திட்டங்களில் உண்மையிலேயே பயன் அடைபவர்கள் யார்?  கேள்வியை உரக்கக் கேட்கவேண்டிய தருணம் இது!

தடம் மாறும் கிராமிய வங்கிகள்!

பி.எஸ்.எம். ராவ்,இன்றைய தினமணியில் எழுதி வெளியாகி இருக்கும் கட்டுரை

ஒரு குழாய் மூலமாக பத்து மணி நேரத்தில் ஒரு தொட்டியை நீரால் நிரப்ப முடியும் என்று வைத்துக் கொள்வோம். மற்றொரு குழாயைத் திறந்துவிட்டால் ஒரு மணி நேரத்தில் தொட்டி காலியாகிவிடும் என்றால்,  இரு குழாய்களும் திறந்திருக்கும்போது எவ்வளவு நேரத்தில் தொட்டி முழுமையாக நிரம்பும்?

 பள்ளிக்கூடத்தில் நாம் படித்த இந்தக் கணக்குக்கு விடை ஒரு காலத்திலும் முடியாது என்பதுதான்.

ஆனால், கிராமியக் கடன்கள் விஷயத்தில் அரசு இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதுதான் நமது அரசின் கவர்ச்சிகரமான கோஷம். இதைக் கூறித்தான் இப்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. பொருளாதார வளர்ச்சியின் பலன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இதன் பொருள். அரசியல் பொதுக் கூட்டமானாலும் சரி, தேர்தல் பிரசாரமானாலும் சரி, நாடாளுமன்ற அவைகளில் நடக்கும் விவாதங்களானாலும் சரி எல்லாவற்றிலும் இந்த மயக்கும் வாக்கியத்தைக் கூறுவதற்கு நமது ஆட்சியாளர்கள் தயங்குவதேயில்லை!.

ஆனால், இதெல்லாம் வெற்றுப் பேச்சுதானே தவிர, நிஜத்தில் அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கு நேரெதிர்தான். எந்த அளவுக்கு அனைவரையும் வளர்ச்சியில் உள்ளடக்குவதற்கான முயற்சி நடக்கிறதோ, அதைவிடப் பல மடங்கு வேகமாக வெளியேற்றும் பணி நடப்பது தெளிவாகத் தெரிகிறது. எல்லாவிதமான திட்டங்களிலும், நடவடிக்கைகளிலும் இதே கொள்கையைத்தான் நமது அரசு கடைப் பிடித்து வருகிறது. சொல்லில் ஒன்றும் செயலில் ஒன்றுமாக அரசின் பணி இதே ரீதியில் தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது சாத்தியமாகப் போவதில்லை.

 இது அரசியல்வாதிகளுக்கும் தெரியும். ஆனாலும், தங்களது கோஷங்களை அவர்கள் நிறுத்துவதாக இல்லை. மக்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள் என்பதை எண்ணிக்கூட வெட்கப்படாமல், ஏழைகளை முன்னேற்றுவதற்காக அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று புள்ளிவிவரங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் கொல்கத்தாவில் நமது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாத காலத்துக்கான விவசாய வங்கிக்கடன் இலக்கு எட்டப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அதாவது நிதியாண்டுக்கு ரூ. 4.75 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. அதில், மார்ச் முதல் செப்டம்பர் 2011 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்பது பிரணாப் தரும் புள்ளி விவரம். இதன்படி இந்த நிதியாண்டின் முழுமையான இலக்கும் எட்டப்பட்டுவிடும்.

இதற்குச் சில நாள்களுக்கு முன்பு பிரணாப் இன்னும் உற்சாகமாக இருந்தார். நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகக் கடன்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். நபார்டு வங்கியின் தலைவரும் பிரணாபை ஆமோதித்தார். அவர் சொன்ன தொகை ரூ.5.2 லட்சம் கோடி!

இவர்களது கணிப்பு சரிதான். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தக் கணிப்பு பொய்த்துப் போவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. வங்கிகள் மூலம் வழங்கப்படும் விவசாயக் கடன்களை 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க வேண்டும் என்று 2004-ம் ஆண்டில் அரசு முடிவு செய்தது. ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் இரண்டே ஆண்டில் இந்த இலக்கு எட்டப்பட்டது. அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் இலக்கு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. சொல்லிவைத்தாற்போல ஒவ்வொரு ஆண்டிலும் இலக்கைத் தாண்டி கடன்கள் வழங்கப் பட்டதுதான் சுவாரசியமான விஷயம்.

2008-09 முதல் 2010-11 வரை ஒவ்வொரு நிதியாண்டிலும் முறையே ரூ.2.8 லட்சம் கோடி, ரூ.3.25 லட்சம் கோடி, ரூ.3.75 லட்சம் கோடி என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், முறையே ரூ.2.87 லட்சம் கோடி, ரூ.3.85 லட்சம் கோடி, ரூ.4.47 லட்சம் கோடி இலக்குகளைக் கடந்து கடன்கள் வழங்கப்பட்டன.

 வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமான இலக்குகள் நிர்ணயிக்கப் படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயத்துறைக்கு ரூ. 40 லட்சம் கோடி தேவை என்று நபார்டு வங்கியின் செயல் இயக்குநர் எஸ்.கே.மித்ரா கூறியிருக்கிறார்.

இந்தப் புள்ளிவிவரங்களைப் படிப்பவர்களுக்கு சில நியாயமான சந்தேகங்கள் எழக்கூடும். அரசுதான் இவ்வளவு கடன்களை வழங்குகிறதே, பிறகும் ஏன் விவசாயிகள் தனியார் நிறுவனங்களை நாடுகிறார்கள், கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஏன் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள் என்று கேட்கலாம்.

தேசிய குற்றப் பதிவு அமைப்பின் ஆவணங்களின்படி 1995 முதல் 2010 வரை 2,56,913 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது சர்ச்சைக்குரிய எண்ணிக்கைதான். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தற்கொலைகள் குறைந்திருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள்.

2011-ம் ஆண்டில் வெறும் 800 பேர்தான் தற்கொலை செய்து கொண்டதாக வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் பிரத்யேகமாக ஒரு புள்ளி விவரத்தைத் தருகிறார்.

எது எப்படியிருந்தாலும், கடன்தொல்லை காரணமாக அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அரசு என்னதான் விவசாயிகளுக்கு கடன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிக் கொண்டிருந்தாலும், இலக்குகளைத் தாண்டியும் கடன்கள் வழங்கப்படுவதாகப் புள்ளிவிவரங்களை அடுக்கினாலும், தேவைப் படுவோருக்கு அந்தக் கடன்கள் சென்றடையவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அரசு கூறுவது வெறும் வாய்ஜாலம் என்பதை தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை உணர்த்திக் கொண்டிருக்கிறது. கடன் வழங்கும் முறையில் குறைபாடு இருப்பதற்கு இதுவே ஆதாரம்.

விவசாயம் செய்வோரில் 80 சதவிகிதம் பேர் சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள். இவர்களுக்குக் கடன் வழங்குவதே விவசாயத்தை பாதுகாப்பதற்கும், வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்குமான வழி முறை. ஆனால், இவர்களுக்குக் கடன்கள் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை நிலை. இது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சாரங்கி குழு, விளிம்பு நிலை விவசாயிகளில் வெறும் 14 சதவிகிதம் பேருக்கு மட்டும் வங்கிக் கடன் போன்ற அமைப்பு சார்ந்த கடன்கள் கிடைப்பதாகக் கூறியிருக்கிறது.

 இந்தியாவில் 87 சதவிகித விளிம்புநிலை விவசாயிகளுக்கும் 70 சதவிகித சிறு விவசாயிகளுக்கும் வங்கிக்கடன் கிடைப்பதில்லை என்று உலக வங்கியே தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களை

இன்னும் உன்னிப்பாகக் கவனித்தால் விவசாயிகளில் 51 சதவிகிதம் பேருக்கு எந்தவிதமான கடனோ, பிற வங்கிச் சேவைகளோ கிடைப்பதில்லை என்கிற உண்மை புலனாகும்.

ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கையின்படி வெறும் 27 சதவிகித விவசாயிகளுக்கே அமைப்பு சார்ந்த கடன்கள் கிடைக்கின்றன. இதிலும் மூன்றில் ஒரு பகுதியினர் தனியார் அமைப்புகளின் மூலம் கடன் பெறுபவர்கள். அதாவது 18 சதவிகித விவசாயிகளுக்கு மட்டுமே வங்கிக் கடன்கள் கிடைக்கின்றன. அந்த 18 சதவிகித அதிருஷ்டக்காரர்களில் பெரும்பகுதியினர் பணக்கார, பெரு விவசாயிகள் அல்லது அதிகாரம் படைத்தவர்கள்.
இது ஒன்றும் அறியாமலோ தெரியாமலோ நேர்ந்துவிட்டது கிடையாது. 1990-களில் அரசு கொண்டு வந்த புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுதான் இது. அரசு வங்கிகள் அனைத்தும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்க வேண்டும், கிராமப்புற ஏழைகளிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும் என்பவையெல்லாம் அந்தக் கொள்கை மூலமாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

ஒருபுறம் கிராமப்புற ஏழைகளுக்கு எளிதாகக் கடன்கள் கிடைக்க வேண்டும் என்பதே லட்சியம் என்று வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருக்கும் வங்கிகள், இன்னொருபுறம் கிராமங்களில் தங்களது கிளைகளைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன.

ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களின்படி 1991-ம் ஆண்டில் கிராமங்களில் 35,206 வங்கிக் கிளைகள் இருந்தன. 2011-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 33,602-ஆகக் குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் நகரங்களில் தெருவுக்குத் தெரு வங்கிகள் திறக்கப் பட்டிருக்கின்றன.
 1991-ல் வங்கிகளின் 58.46 சதவிகித கிளைகள் கிராமப்புறங்களில் இருந்தன. இப்போது அது 36.10 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

அதேபோல், கிராமப்புறக் கடன்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகள் போன்றவையும் தங்களது நோக்கத்தை மறந்து வேறு வகைக் கடன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கிவிட்டன. 1993-94-ம் நிதியாண்டில் 62 சதவிகிதம் அளவுக்கு விவசாயக் கடன்கள் வழங்கிக் கொண்டிருந்த கூட்டுறவு வங்கிகள் 2009-ம் ஆண்டில் வழங்கிய விவசாயக் கடன்களின் அளவு வெறும் 12 சதவிகிதம் மட்டுமே!

பிராந்தியக் கிராமிய வங்கிகளுக்கும் இதே நிலைதான். கிராமப் புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கிகள், இப்போது வழக்கமான வர்த்தக வங்கிகளைப் போலச் செயல்பட்டு வருகின்றன. கிராமங்களையும் ஏழ்மையையும் மறந்து, பண ஆதாயம் தேடும் வழிகளை மட்டுமே அந்த வங்கிகள் கடைப்பிடித்து வருகின்றன. கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன. அரசு இதைப்பற்றி வாய்திறப்பதேயில்லை.

இப்படி எல்லா வங்கிகளும் கிராமங்களையும், விவசாயத்தையும் கைவிட்டுவிட்டதால்தான் மக்கள் தனியார்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறுங்கடன் அமைப்புகள் என்கிற பெயரில் கந்து வட்டிக்காரர்கள் பெருகி, மக்களிடமிருந்து வியர்வையையும் ரத்தத்தையும் வட்டியாக உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அரசு, இன்னமும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றிப் வாய்கிழியப் பேசிக் கொண்டிருக்கிறது.

பருவமழை பொய்த்துப் போவது, பிற இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, விதைத்த பணத்தைக் கூட அறுவடை செய்ய முடியாமல் தவித்து வரும் விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுமானால், முதலில் கிராமிய வங்கிகளை வர்த்தக மயமாக்குவதைக் கைவிட வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் கிராமப்புற மக்களின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்பவையாக மீண்டும் மாற வேண்டும். இவைபற்றி அரசு அக்கறை எடுத்துக்கொள்ளாதவரை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது வெற்று வாக்குறுதியாகத்தான் இருக்கும்.
 களவாணி காங்கிரசைத் தூக்கி எறிவதே தேசத்தின் விடிவுகாலம்! 

Bonne Annee! Happy New Year!

Bonne Année 2012
 

 
 
 
கடந்து போன வருடம், ஊழல், செயலற்ற தன்மை, கையாலாகாத் தனம், பொறுப்பற்ற அரசியல், தங்களால் எதுவுமே செய்ய முடியாதென்று சோம்பிக் கிடந்த ஜனங்கள் என்று ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் இந்த தேசத்தை ஒரு போட்டுப் புரட்டி விட்டுப் போயிருக்கிறது.

நானே உன் ரட்சகனும், மீட்பனும் ஏழைப் பங்காளனுமாய்  இருப்பேன் என்று தங்களுடைய கோரமுகத்தை வெற்று வாக்குறுதிகளில், இலவசங்களில் மறைத்துக் கொண்டு சுயநலம், குடும்பநலம் என்றே ஆகிப்போன தலைவர்களும், எவ்வளவு அம்பலப்பட்டுப் போனாலும் இவர்களது புரட்டுக்களில் மயங்கிக் கிந்தாலும் கிடப்பேன், ஆனால் மாற்றத்துக்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட மாட்டேன் என்று சோம்பிக் கிடந்த ஜனங்களும் சூடுபட்டது போல வீறிட்டெழ 1,76,000,00,00,000 என்ற மந்திர எண் வரவேண்டி இருந்தது.

இத்தனை பூஜ்யங்களை பார்த்ததே இல்லை என்று ஆச்சரியப்பட்ட நீதியும் கூட, பூஜ்யங்களைப்பார்த்த மயக்கத்தில் மறுபடி தூங்க ஆரம்பித்து விட்டதோ என்று சந்தேகப்படும்படி, 2011 ஆம் ஆண்டு ஒருவித அலுப்புடன் சஸ்பென்சாக விட்டுப் போயிருக்கிறது.

தூண்டிலில் புழுவை வைப்பது எப்படி மீன்களின் மீதான காருண்யத்தினால் இல்லையோ, அப்படியே இலவசங்களுமே கூட ஒரு மாயைதான் என்பதைப் புரிந்துகொள்ளாத ஜனங்கள் கொஞ்சம் விழித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட ஆரம்பித்த தருணத்திலேயே, இலவசங்கள் கொஞ்சம் ஓவர் டோசாக..! ஜனங்கள் மறுபடி  தூங்கப்போய் விட்டார்களோ? 
 
2011 ஒரு கேள்வியையும் எழுப்பி விட்டுப் போயிருக்கிறது!

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்திருவடிகளைச் சரணடைகிறேன். எனது கரணங்கள்,மனம், ஜீவன் அனைத்தையும் உன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன். உனது கருணைக்குப் பாத்திரமாகும் தகுதியை அருள்வாய்,உனது பிரியத்துக்குத் தகுதியான குழந்தையாக வரமாக அருள்வாய்!

பிறக்கும் இந்தப் புத்தாண்டு,ஒளிமயமானதாக இருக்க வரம் தருவாய். பாரத தேசம் பார்க்கெல்லாம் திலகம். உலகின் ஆன்மீக குருபீடமாக திகழும் புண்ணிய பூமி. தகுதியற்றவர்களிடம் சிக்கித் தலை குனிந்து கொண்டிருக்கும் நிலை இன்னும் தொடரலாமோ?

அம்மா, மகா காளீ! உன்னை வணங்குகிறேன்! சிறுமையை அழித்து, சீர்மையை அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி, சைதன்ய
யி, சத்யமயி பரமே!
 


ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை!

தினமணி தலையங்கம்: "ஏன்' என்ற கேள்வி!

First Published : 12 Feb 2011 02:48:24 AM IST

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வரம். கடந்த  சில ஆண்டுகளாக இச்சட்டத்தின் மூலம் மக்கள் வெளிக்கொணர்ந்த உண்மைகள் பல. இதனால் சிலர் கொலை செய்யப்பட்டார்கள் என்பதும் நாடறிந்த உண்மை. வெறும்  பத்து ரூபாயில் அரசின் எந்த நடவடிக்கையையும் கேள்வி கேட்க முடியும் என்கிற இந்த வாராது வந்த மாமணியை ஒளி இழக்கச் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, அண்மையில் இச்சட்டத்தில் சில திருத்தங்களைப் பரிந்துரைத்து, இதனை அமல்படுத்தும் முன்பாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதன் காரணமாக அவற்றை இணையதளத்தில் கடந்த டிசம்பர்  17 முதல் 27 வரை வெளியிட்டு கருத்துகளைக் கேட்டது.இந்தச் சட்டம் மேலும் பயனுள்ள வகையில் இறுக்கமாக மாற்றப்படுகிறது என்கிற பொய்யுரையுடன் இதனை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது என்பதை இந்தப் பரிந்துரைகளைப் படிக்கும் எவருக்கும் எளிதில் விளங்கும்.

தகவல் அறியும் சட்டம் குறித்து கிராமப்புறங்களில் 8 விழுக்காடு மக்கள் மட்டுமே அறிந்துள்ளனர் என்பதும், நகரங்களிலும்கூட 55 விழுக்காடு மக்கள் மட்டுமே அறிந்துள்ளனர் என்பதும் அதிர்ச்சி அளிக்கும் தகவல். வருமான வரி வரவை அதிகரிக்க அரசு காட்டும் முனைப்பில் பத்து விழுக்காடுகூட அரசின் செயல்பாடு குறித்து மக்கள் தெரிந்துகொள்ள உதவும் தகவல் அறியும் சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைப்புக் காட்டவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.அரசு அலுவலகங்களில் இதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள பொதுத் தகவல் அலுவலர்களில் பாதிப் பேர், இந்த மனுக்களை எப்படிக் கையாளுவது என்பது குறித்து பயிற்சி பெறாதவர்கள் என்பதும், நான்கு மனுக்களில் ஒன்றுக்கு மட்டுமே அரசின் பதில் கிடைக்கிறது என்பதும் இன்னும் ஆச்சரியம் தரும் தகவல்.

இந்தச் சட்டம் குறித்து நாட்டு மக்களுக்கு முழு விழிப்புணர்வு ஏற்படும் முன்பாகவே இந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிதான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசு மாற்றங்கள் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சிகள்.இப்போது இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நபர் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்றிருப்பதை, ஒரு நபர் ஒரு துறை சார்ந்த ஒரு விஷயத்தை மட்டுமே கேட்க வேண்டும், அதையும் 250 சொற்களுக்கு மிகாமல் எழுதுதல் வேண்டும் என்பதுதான் மிகப்பெரும் நாசவேலை என்றே சொல்லிவிடலாம். இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டுவிட்டால், எந்த மனுதாரரும் கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு கேள்விக்கும் இன்னொரு விஷயத்தைத் தொடாமல் கேள்விகளை அடுக்கிச் செல்லவே முடியாது.

உதாரணமாக, ஒரு கிராமப் பள்ளியில் ஆசிரியர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் அவர் பணிக்கு வராமலேயே சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாகவோ அல்லது தனக்குப் பதில் வெறும் ரூ.2,000 சம்பளத்தில் ஒருவரை அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்றோ ரகசியமாக ஒரு தகவல் கிடைத்தால், இதுகுறித்து அந்த கிராமத்தவர் பல கேள்விகள் மூலம் விசாரித்தால்தான் முடியும். அந்தப் பள்ளிக்கு எத்தனை ஆசிரியர்கள் நியமிக்கப் பட வேண்டும்? எத்தனை ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள்? அவர்களின் பெயர் விவரம் என்ன? இந்தப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர் யாராவது நியமிக்கப்பட்டுள்ளாரா? அவருக்கான ஊதியம் என்ன? ....இவ்வாறு தொடர்ச்சியான கேள்விகள் மூலம் அரசின் பதில்களைப் பெறும்போதுதான் அதில் உள்ள முரண்கள் மூலம் முறைகேடுகளை அம்பலப்படுத்த முடியும். மேலும், 250 சொற்களுக்குள் எல்லாவற்றையும் கேட்டறியும் நுட்பம் யாவருக்கும் முடியாத ஒன்று.

அடுத்து, இத்தகைய தகவல்களைப் பெற்றுத்தரும் செலவுகளை மனுதாரரே ஏற்க வேண்டும் என்கிற பரிந்துரை விஷமத்தனமானது. அதற்காக நிர்ணயிக்க இருக்கும் கட்டணம் நடைமுறையில் உள்ளதைக் காட்டிலும் இரு மடங்காக இருக்கிறது. அதாவது ஒரு நகல் எடுக்க ரூ.2 என்பது அதிகம். தனியார் நிறுவனங்கள் ரூ.1 பெறும்போது இவர்கள் கூடுதல் கட்டணம் நிர்ணயிப்பது ஏன்?மேலும், ஆவணங்களைப் பார்க்க வேண்டுமானால் ஒரு மணி நேரம்தான் இலவசம். அதன் பிறகு ஒவ்வொரு மணி நேரத்துக்கு ரூ.5 செலுத்த வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோப்புகளைக் கேட்டால் அரசு அலுவலகங்களில் வெறும் குப்பையைத்தான் காட்டுவார்கள். இல்லாத இடத்தையெல்லாம் தேடி, மனஉறுதியோடு போராடித்தான் உரிய கோப்புகளைக் கண்டடைய நேரிடுகிறது. அப்படியிருக்கையில், இதற்குக் கட்டணம் வேறு செலுத்த வேண்டும் என்கிற பரிந்துரை ஏற்புடையதல்ல.

மனுச் செய்தவர் இறந்துபோனால் அத்துடன் அந்த மனுவை முடிந்ததாகக் கருதி மூடிவிடலாம் என்கிறது இன்னொரு பரிந்துரை. எனக்கு ஏன் இன்னும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்று கேட்டவர் இறந்துபோனால், அத்துடன் அதை முடித்துக்கொள்ள வேண்டியதுதானா? அந்த மனுமீதான விளக்கம் கிடைத்தால்தானே அவரது மனைவி அல்லது வாரிசு மேல்நடவடிக்கை எடுக்க முடியும்?

மாநில அளவிலான மேல் முறையீட்டை, ஓர் அதிகாரி தான் விரும்பும் அதிகாரி அல்லது பிரதிநிதி மூலம் எதிர்கொள்ளலாம் என்கிறது ஒரு பரிந்துரை. தனது பிரதிநிதி என்பதன் பொருள் வழக்குரைஞர் என்கின்றனர் இந்தப் பரிந்துரையை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள். "அதிகாரிகள் தங்களுக்கான வழக்குரைஞரை நியமிப்பார்கள், ஒரு ஏழை மனுதாரர் இந்தச் செலவுக்கு என்ன செய்வார்? மீண்டும் இதை ஒரு நீதிமன்றமாக மாற்றும் முயற்சி இது' என்கின்றனர்.

சட்டம் கிடுக்கிப்பிடியாக இருக்கும் இப்போதே பதில் அளிக்காமல் தட்டிக் கழித்ததால் மேல் முறையீட்டு மனுக்கள் மாநில அளவில் லட்சக்கணக்கில் குவிந்துள்ளன. இன்னும் இந்தப் பரிந்துரைகள் ஏற்கப்பட்டுவிட்டால், இனி இந்திய நாட்டில் ஒருவரும் ஒரு கேள்வியும் கேட்க முடியாது என்ற நிலை
ல்லவா உருவாகும்? இப்படியெல்லாம் மாற்றங்களைச் செய்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்குப் பதில் தகவல் பெறும் உரிமை ஆணையத்தையே இழுத்து மூடிவிடலாமே. தனது தவறுகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்கு அரசு செய்யத் தொடங்கியிருக்கும் தகிடுதத்தங்களில் இதுவும் ஒன்று!


தகவல் அறியும் உரிமை! சட்டமா? மாயையா?

இப்படித்தலைப்பிட்டு தினமணி நாளிதழில் வெளியாகி இருந்த தலையங்கத்தை ஜனவரி இருபத்துமூன்றாம் தேதியன்று இந்தப்பக்கங்களில் ஒரு பதிவைப் படித்த நினைவிருக்கிறதா?

தெரிந்தோ தெரியாமலோ, இந்த நாட்டின் பாவப்பட்ட மக்களுக்கு 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் கொஞ்சம் பயனுள்ளதாக இருந்தது. அரசு அலுவலகங்களில் என்ன நடக்கிறது, தங்களுடைய மனுவின் நிலை என்ன, எங்கே தவறு நடந்தது என்பதைத்தெரிந்துகொள்ள உதவியாக இந்தச் சட்டம் பயன்பட ஆரம்பித்த நிலையில், தங்களுடைய ஊழல், கையாலாகாத்தனத்தை மூடிமறைக்க இந்த சட்டத்தின் குரல்வளையை நெரிக்க ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு முயற்சிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

எங்கேயோ எதன் மீதோ மழை பெய்துகொண்டிருக்கிறது  என்பதைப்போல எங்கே என்ன நடந்தால் எனக்கென்ன என்ற மாதிரி ஜனங்கள் ஊமைச் சனங்களாக இருப்பது தான் இந்தமாதிரித்தவறுகளை ஆளுகிறவர்கள் தைரியத்துடனேயே செய்வதற்கு வசதியாக இருக்கிறது.

டுனீஷியா, ஏமன், அல்ஜீரியா, எகிப்து என்று அடங்கிக் கிடந்த தேசங்களிலேயே மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துகொண்டிருக்கும் தருணம் இது. அங்கே நடப்பது மாதிரி இங்கே கிளர்ந்தெழவேண்டாம்! கலவரங்களில் ஈடுபடவும் வேண்டாம்! கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தாலே புரியும்!

மீன்களுக்குத் தூண்டிலில் புழுவை வைப்பவன் கருணையுடன் தான் வைக்கிறானா?
புழுக்களுக்கு ஆசைப்படும் மீனுடைய கதி என்ன ஆகிறது?

இங்கேயும் அரசியலில், இலவசங்கள், சலுகைகளை சரமாரியாக அறிவிக்கிற அரசியல்வாதிகள் உண்மையிலேயே ஜனங்களுக்கு நல்லது நினைத்துத் தான் செய்கிறார்களா?

இலவசங்களில் ஏமாந்து போகிற ஜனங்களுடைய கதியும் தூண்டில் புழுவை விழுங்கிய மீனின் கதி போலத்தான்  என்பது உறைக்கிறதா?

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறதா? என்ன நடக்கிறதென்பது புரிகிறதா? என்ன செய்யப் போகிறீர்கள்?

ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கையில்லை! இலவசங்களில் ஏமாந்துபோகிறவர்களுக்கும் தான்!

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!

சண்டேன்னா மூணு! கொஞ்சம் ஆவக்காய்! ஆந்திரா! அரசியல்!



சண்டேன்னா மூணு! வரவு எட்டணா! செலவு பத்தணா!




எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலுமே,  அதற்கான தீர்வுகள் பொதுவாக  இந்த நான்கு அடிப்படைகளுக்குள் அடங்கி விடும் என்று சொல்வார்கள்.


1.       உடனடியாகச் செயலில் இறங்குவது!


2.   ஆறப்போட்டு, நிதானமாகச் செயல் படுவது


3.   அலட்சியம் செய்து, ஒதுக்க வேண்டியது.


4.   அனுவவித்தே  தீர்க்க வேண்டியது!.

பிரச்சினையைத் தீர்க்க நாம் செய்யும் தவறான முடிவுகளே பிரச்சினையைக் கொழுந்து விட்டு எரியச் செய்து விடும். பிரச்சினை எதுவானாலும், அதன் உண்மையான தன்மையை அறிந்து, சரியான முடிவுகளை, சரியான நேரத்தில், சரியாகச் செய்வதில் தான் இருக்கிறது. இதில் செய்யும் குளறுபடிகள், பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இன்னமும் வளர்த்து விடும்!



உதாரணமாக, நம்மூர் பானா சீனா, தெலுங்கானா கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக  அறிவித்தார், ஆந்திரா தீப்பற்றி எரிகிறது! தெலுங்கானா கோரிக்கை நியாயம், அல்லது நியாயமில்லை என்பதற்காக இல்லை! சந்தடி சாக்கில் ராஜசேகர ரெட்டி மகன் ஆதரவாளர்கள், தங்களுக்கு "வாழ்வளித்து" வரும் வாரிசை முதல்வராக்க இந்தப் பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டதும்,  செல்வம் கொழிக்கும் (?) ஹைதராபாத் நகரமே தெலுங்கானாவுக்குள் அடங்கி விடுவதால், அதை விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதில் வேறுபலரும் சேர்ந்து கொண்டதும், நீ ஒன்று சொன்னாயா, நான் நாலு சொல்கிறேன் என்று தெலுங்கானா கொடுத்தால், ராயலசீமா கொடு, கம்மம் கொடு என்று விதண்டாவாதம் செய்வதற்கே பிறந்த சிலரும் கும்மிஎடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!   என்னதான் பிரதமர் மன்மோகன் சிங் சமாதானம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தாலும், துண்டு போர்த்திய அரசியல் வித்தகர், நேற்றைய பொருளாதாரமேதை  பானா சீனா கிளப்பி விட்டிருக்கும் பிரச்சினை, இப்போதைக்கு ஓயாது போல இருக்கிறது.
 

மஞ்சள் துண்டு தலைவர் ,நேற்றைய நாட்களில் பானா சீனாவை   "சிவகங்கைச் சின்னப் பையன்!" என்று அனுபவமோ முதிர்ச்சியோ இல்லாதவர் என்பதை நக்கலாகச்  சொன்னது சரியாகத் தான் இருக்கிறது!சால்வை அல்லது துண்டு எல்லாம் போர்த்திக் கொண்டதால் மட்டுமே  மஞ்சள் துண்டு போர்த்திக் கொண்டிருப்பவர்  போல சாமர்த்தியம் வந்து விடுமா என்ன?


இந்தமாதிரி அரசியல் வியாதிகள் எல்லாம், தலைவிதியே என்று அனுபவித்தே தீர வேண்டிய அவசியம் உள்ளவை அல்ல! மாற்றப்படவேண்டியவையே! குப்பையில் தள்ள
வேண்டியவைதான்! தாமதிக்கிற ஒவ்வொரு கணமும் நாட்டைக் குப்பையில் தள்ள இவர்கள் தயங்கமாட்டார்கள்!

மாற்றத்தைச் சாதிக்கும் வலிமை, இங்கே வெறும் ஓட்டுக்களை மட்டுமே சொல்லவில்லை, நம்முடைய கைகளில் தான் இருக்கிறது!

  oooOooo


இந்தப்பக்கங்களில் தலைமைப்பண்பு, ஒரு தெளிவான  திட்டத்தோடும், பார்வையோடும் செயல்படுகிற அரசியல் தலைவன், அப்படிப் பட்ட தலைவனிடம் இருக்க வேண்டிய, அல்லது இருக்கக் கூடாத  குணங்கள் என்று கொஞ்சம் மேலோட்டமாகப் பார்த்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சியை பற்றிய நேற்றைய நாட்களின் இந்தக் கருத்து, அது ஓரளவுக்கு உண்மையானதாகவும் இருந்தது.

"எவ்வளவுதான், காங்கிரஸ் பலவீனப்பட்டுச் சிதைந்துகொண்டிருந்தாலுமே, நாடு முழுமைக்கும் அறியப்பட்ட கட்சியாகவும், எல்லாப் பகுதிகளிலுமே, ஆதரவு சதவீத அளவில் மட்டுமே மாறுபட்டிருந்தாலும், நாடுமுழுக்கவும் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற ஒரே கட்சி."


இப்போது கூடஇந்தக் கருத்து உண்மையானதாக இருக்கிறது என்றாலும், காங்கிரஸ், தனக்கென்று சொந்த லட்சியங்களோ,தேசத்தின் எதிர்காலத்தைக் குறித்த தெளிவான பார்வையோ, உறுதியான தலைமையோ இல்லாமல், சீரழிவின் உச்சகட்டத்திற்கே போய்க் கொண்டிருக்கிறது. பதவி வெறியும் ஊழலும் நிறைந்த மாநிலக் கட்சிகளுக்குக் கொஞ்சம் தீனிபோட்டுக் கொண்டு,  பதவிவெறியும் ஊழலும் நிறைந்த நபர்களால் மட்டுமே ஆனதாக காங்கிரஸ் மாறி எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன. 

1977 இல் உருவானதுபோல, ஒரு மாற்று முயற்சியை, வழி நடத்துவதற்கும் தலைமை தாங்குவதற்கும் ஜெயப்ரகாஷ் நாராயணன் மாதிரித் தலைவர்கள் இல்லாத வெறுமை நன்றாகவே தெரிகிறது. புரையோடிப்போன  புண்ணை ரண சிகிச்சை மட்டுமே காப்பாற்ற முடியும்! காங்கிரஸ் புரையோடிப்போய்  இனி மீளவே மீளாது என்ற அளவுக்கு அழுகிப்போனதாக இருக்கிறது என்பதையே ஆந்திராவில் நடந்து கொண்டிருக்கும் கூத்துக்கள் காண்பித்துக் கொண்டிருக்கின்றன.


"Rosaiah said he had discussed with the high command the issue of Telangana, and had told it that to pass a resolution in the Assembly was difficult.

On Home Secretary G.K. Pillai’s comment that Hyderabad would be the capital of Telangana, Mr. Rosaiah said he thought the Home Secretary had no proper brief."

ஹிந்து நாளிதழில் செய்தி என்றால், இங்கே இப்படி!

The crisis prompted Rosaiah to publicly express “astonishment, surprise and anguish” at the “flutter” over Home Minister P. Chidambaram’s “so-called statement” on Wednesday night announcing the initiation of the process to create Telangana.


அரசியல்! பாழாய்ப்போன ஓட்டுப்பொறுக்கும் அரசியல்! ஜனங்களுடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப் படுவதற்காகவா அரசியலுக்கு இவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள்!

oooOooo

தோழர் பி.சுந்தரய்யா

படிக்கக் கிடைத்தும், படிக்கத் தவறியவை!

திரு.வி.திவாகர்! மின்தமிழ் வலைக் குழுமத்தில் அறிமுகமானவர்! தமிழ்மரபு அறக் கட்டளையால் சென்ற ஆகஸ்ட் மாதம் மரபுச் செல்வர் என்று கௌரவிக்கப்பட்டவர்! எழுத்தாளர்! இதுவரை நான்கு சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார், அடுத்தவீடு என்ற பெயரில் தன்னுடைய வலைப்பதிவில்  "ஆவக்காயையும் ஆந்திராவையும் யாராலும் பிரிக்கமுடியாது. மலரும் மணமும் போல என்று கூட சொல்லலாம். ஆவக்காய் ஊறுகாயும் கோங்குரா பச்சடியும் சுவையும், காரமும் கூடியதுதான். சுவையில் மயங்கி முதலில் அதை உண்ணும் தமிழர்கள் அதன் காரத்தில் பிறகு கண்ணீர் விடுவதை......."என்று ஆரம்பித்து ஆ..உஷ்...காரம்..ரொம்ப ஜாஸ்தி என்ற தலைப்பில் எதிரும்புதிருமான தன்மை கொண்ட ஆந்திர தேசத்து இயல்பைச் சொல்லியிருந்தார். இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருந்த நேரம், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தெலுங்கானா கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் படுவதாக, அறிவித்து, அடுத்து அடுத்து அரசியல் ஸ்டன்ட்கள் அரங்கேற ஆரம்பித்து, இன்னமும் முடியவில்லை.

இருபத்தேழு, இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னால் தோழர் பி.சுந்தரய்யா எழுதிய புத்தகம், 'தெலுங்கானா போராட்டமும் அதன் படிப்பினைகளும்' நண்பர் ஒருவரிடமிருந்து மிகவும் கெஞ்சிக் கூத்தாடிய பின்னர் கிடைத்தது. முழுதும் படித்து, விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு முன்னாலேயே,  இரவல் கொடுத்த நண்பர் திரும்ப வாங்கிக் கொண்டு போய்விட்டார்! படிக்க விரும்பிக் கையிக் கிடைத்தும் படிக்க முடியாமல் போன புத்தகம் அது. இப்போது கிடைத்தால் கூட, அன்றைக்கு என்ன ஆர்வத்தோடு படிக்க நினைத்தேனோ, அதே ஆர்வத்தோடு படிக்க முடியும்!

இன்றைக்குத் தெலுங்கானா கோரிக்கையைப் பற்றிப் படிப்பவர்களுக்குப் பத்தோடு பதினொன்றாக, பிராந்திய உணர்வுகள் மிஞ்சி போனதால் வந்ததாக மட்டுமே தோன்றும்.

இப்போதைய ஆந்திரம் என்பது, மூன்று தனித்தனிப் பகுதிகளாக, ஆந்திரா, ராயலசீமா, தெலுங்கானா என்று இருப்பதைப் படத்திலேயே பார்க்க முடியும்.தெலுங்கானா மக்கள் மிகக் கடுமையான உழைப்பாளிகள், மிக மோசமாக ஏமாற்றப்பட்டவர்களுமே கூட! நிஜாம்  ஆட்சிக் காலத்தில், மிகக் கடுமையான முறையில் சுரண்டப்பட்ட தெலுங்கானா மக்களை, ஒரு ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு, அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைத்தது. போராட்டம் தோற்கடிக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான லட்சிய தாகமும், சுதந்திர வேட்கையும் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களும், மக்களும் கொல்லப்பட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தில் தோளோடு தோள் கொடுத்து நின்ற காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரிகளாகிப் போன தருணம் ஆரம்பித்தது. 1946-1951 காலகட்டம்.

தெலுங்கானா போராட்டத்தின் பின்னணியையும், அது தோற்றதில் கிடைத்த பாடங்களையும் பரிசீலனை செய்வதற்குக் கட்சி இரண்டாக உடைந்த பிறகு தான் அவகாசமே கிடைத்தது. 1972 ஆம் ஆண்டு, தெலுங்கானா போராட்டத்தில்  பங்குகொண்டு முன்னணியில் இருந்த தோழர் பி. சுந்தரய்யா, ஒரு நீண்ட ஆய்வைக் கட்சிக்கு சமர்ப்பித்ததில் இருந்து, வெட்டியும் சுருக்கியும், கட்சி ஆவணமாக, புத்தகமாகவும் வந்தது. தன்னுடைய சொந்தக் கசப்புக்களையும், கருத்துவேறுபாடுகளையும் சகித்துக் கொண்டு, கட்சி எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டவராக வாழ்ந்து மறைந்த தோழர்சுந்தரய்யா இன்றும் மக்கள் நினைவில் வாழுகிறார்.

வெள்ளைத் துரை போன பின்னாடி வந்த லோகல் துரைமாரும், தெலுங்கானா மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவது  தான், இன்னும் கொடுமை!

தெலுங்கானா என்றவுடனேயே தோழர் சுந்தரய்யாவும் நினைவுக்கு வருகிறார்! தெலுங்கானா மக்களின் போராட்டமும் நினைவுக்கு வருகிறது!

எதிரும் புதிருமான குணாதிசயங்களை, ஊறுகாய், லட்டு இனிப்பு என்று சொல்லிவிட்டு, ஆந்திராவின் குணாதிசயத்தைச் சொன்ன பொது, வேறு சில விஷயங்களையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. போதாக்குறைக்கு இப்போது தெலுங்கானா பிரச்சினை வேறு பற்றிக் கொண்டு எரிகிறதா, சூடும் தாங்கவில்லை.

கடுமையான உழைப்பாளிகள், எளிமையானவர்கள், மிக நேர்மையானவர்கள் என்று ஒரு பெரும்பகுதி! எண்டமூரி வீரேந்திரநாத் தன்னுடைய  கதைகளில் அடிக்கடி உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை, மரண ஹோமம்! ஆந்திராவில் இந்த வார்த்தை வெறும் கற்பனையல்ல, அடிக்கடி நடக்கும் நிஜம்!

எளிய மக்கள் தலையில் ஏறிக் காசு மிதிக்கும் கொடூரம், நிஜாம்களுக்கு முன்னாலேயே இருந்ததா, நிஜாம் ஆட்சியில் தான் பெரிதாக வளர்ந்ததா என்பதை அவ்வளவு சுலபமாக எல்லோரும் தெரிந்துகொள்ள முடியாதபடிக் குழப்பிக் கொண்டிருக்கும் ஆந்திர அரசியல் ஆவக்காயைச் சாப்பிடாமலேயே கண்களில் நீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது.


 

நெஞ்சில் உரமும்! நேர்மைத் திறமும்!



வெட்கம் கெட்டவர்கள்! சூடு, சுரணை, பொறுப்பு எதுவுமில்லாதவர்கள்!

முதலில்.......... 

மும்பை நகரில் சென்ற வருடம் நடந்த தாக்குதல்களில் மட்டுமேயில்லை, எதிலுமே கூட நம்முடைய அரசியல் வாதிகள் பாடம் கற்றுக் கொள்வதுமில்லை, இவர்களை நம்புவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை ஒவ்வொரு செயலிலுமே நிரூபித்துக் கொண்டிருந்தும் கூட....

இந்த ஊழல்மயமான, பொறுப்பில்லாத அரசியல் வாதிகளுக்கு ஓட்டுப் போட்டு மறுபடி மறுபடி ஏமாந்து கொண்டிருக்கும் வாக்காளப் பெருமக்கள் என்றுதேர்தல் நேரங்களில் மட்டுமே அழைக்கப் படுகிற இளிச்சவாயர்கள்!

மும்பை நகரில்  குடிநீர் விநியோகம் 15 சதவீதம் குறைக்கப்பட்ட அறிவிப்பைக் கண்டு மும்பைகர்கள் பொங்கி எழுந்தார்களாம்!  அதுவும் நிதிஷ் ரானே என்ற காங்கிரஸ் காரர் தலைமையில்! காங்கிரஸ் என்னவோ மற்ற எல்லா இடங்களிலுமே தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விட்டமாதிரி! போலீஸ் தடியடி! ஒருவர் உயிரிழந்திருக்கிறார்!


விடுதலை அடைந்து அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னாலும் கூட, நாட்டின் எந்த ஒரு பகுதியிலுமே கூட, பாதுகாக்கப் பட்ட குடிநீரை வழங்குவதற்கு துப்பில்லை! தடியடி நடத்த மட்டும் தெரிகிறது! 

மாநிலங்களுக்கு இடையில் நீராதாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள்! சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளவோ, நியாயமான நடைமுறைகளைப் பின்பற்றவோ மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தவறிக் கொண்டிருப்பதோடு,  கலவரம்,  பிரச்சினைகள் நீடிப்பதிலேயே கொண்டிருப்பதிலேயே அரசியல்வாதிகள் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் போக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

சென்ற வருடம் தீவீரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர்கள் உயிரிழந்தார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. கலவரம் நடந்தபோது கையாலாகத்தனத்தை வெளிப் படுத்திய R R படேல் தான் மீண்டும் அதே உள்துறையில்! ஏ ஆர் அந்துலே மாதிரி ஊழல் பெருச்சாளிகள், பிரச்சினையைத் திசைதிருப்புகிற மாதிரிப் பேசினபோதும், நடவடிக்கை எடுக்கத் தயங்கின, காங்கிரஸ்கட்சித்தலைமை!

ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தைப் பிரமாதமாக நடத்தி, அணிவகுப்பு மரியாதை, கலர்பலூன்களைப் பறக்கவிடுவது இந்த மாதிரி, ஜிகினா வேலைகளை மட்டும் தான் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியும் என்று தெரிந்த பின்னாலும் கூட, காங்கிரசை நம்புகிறவர்கள்..இவர்களை என்னவென்று சொல்வது!

நிவாரணம், இழப்பீடு தலா மூன்று லட்சம் என்று அறிவித்துமே கூட, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேரவில்லை. இது வெறும் ஐந்து கோடி! காயமடைந்தவர்களுக்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டும் இதையும் சேர்த்தால் எவ்வளவு வந்து விடும்?  ஜனங்களை முட்டாளடித்து மறுபடி வென்றார்கள். ஆனால், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில்   துப்பாக்கியோடு நிறையப் பேரைச் சுட்டுக் கொன்ற தீவீரவாதி கசாபைப் பாதுகாக்க மட்டும் அரசு இதுவரை முப்பத்தோரு  கோடி ரூபாய் செலவழித்திருக்கிறதாம்!

A Wednesday, உன்னைப்போல் ஒருவன் திரைப்படங்கள் கேட்ட கேள்வி இந்த நகை முரணைப் பற்றித்தான்!

அடேங்கப்பா! உன்னைப்போல் ஒருவன் படம் வந்தபோது தமிழ் வலைப்பதிவுலகம் என்னமாகக் கொதித்தது! கொந்தளித்தது!

******
இந்தியாவில்,ஒவ்வொரு மூன்று  நிமிடங்களுக்கும்  காச நோயால்  பாதிக்கப்  பட்ட  இருவர் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள்.. தினசரி ஐயாயிரம் பேர்களுக்குக் காச நோய்த் தொற்று உண்டாவதாகவும், நாடு முழுவதும் முப்பதெட்டு லட்சம் பேருக்கு மேல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், உலகத்திலேயே இங்கு தான் மிக அதிகமான நோய்த் தொற்று விகிதமாகவும் இருப்பதாகவும் வரும் செய்திகள் கவலை அளிப்பதாக  இருக்கிறது.


இப்போதெல்லாம் ஜனங்களை ஏமாளியாக்கும் வேலைகள், காப்பீட்டுத் திட்டங்கள் என்ற பெயரிலும் கிடைக்கிறது.

எதை எடுத்தாலும் அதில் சம்பாத்தியம் பண்ணத் தெரிந்த புற்றுநோய்க் கிருமிகள் மாதிரி, பெருகிக் கொண்டிருக்கும் அரசியல்வியாதிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளக் காப்பீட்டுத் திட்டம் ஏதாவது இருக்கிறதா?

******
வில்லங்கம், விவகாரங்களைக் கிளப்புவதில், இடதுசாரிகளுக்கு இணையாக வேறு எவரையும் சொல்லிவிட முடியாது என்பதைத் தோழர் பிருந்தா காரத் மறுபடி பாராளுமன்றத்தில் நிரூபித்திருக்கிறார்! பிரச்சினையை கிளப்பினால் மட்டும் போதும், அதற்குத்  தீர்வு சொல்ல வேண்டும் அல்லது ஒத்துழைப்பையாவது தரவேண்டும் என்ற முனைப்பும் அவசியமில்லை, தேவையுமில்லை என்றே இத்தனை நாள் இருந்ததால் தான், மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசு மாட்டிக் கொண்டு முழிக்கிறது. இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்ட அந்தக் கொடுமையான தருணங்களுக்குப் பழி தீர்க்கிற மாதிரி, மன்மோகன் சிங்குமே கூடக் கொஞ்சம் தைரியமாக, முந்திய ஆட்சிக் காலத்தில் இடது சாரிகள் எவ்வளவு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அமெரிக்காவில் சமீபத்தில் கொட்டித் தீர்த்தார்.

ஆனாலும், வில்லங்கம் வீராசாமிகளாகவே  இருந்துவிடுவது என்ற பழக்கத்தில் இருந்து அவ்வளவு சுலபமாக நடந்துவிடுகிற அரசியல் அதிசயமா என்ன! இந்தத் தடவை இடதுசாரிகளிடம்   மாட்டிக் கொண்டது கூகிள்! கூகிள் விளம்பரங்கள் சிலவற்றைக் காட்டி, ஏன் கூகிள்   இந்தியா நிர்வாகியைக் கைது செய்யவில்லை என்று கேட்டிருக்கிறார்! நிறுத்தி நிதானமாக பள்ளிக் கூட வாத்தியார் மாதிரித் துண்டைப் போர்த்திக் கொண்டு கிளாஸ் எடுக்கிற மாதிரிப் பதில் சொல்கிற பானா சீனா கூட அம்மணி எழுப்பிய கேள்விக்குப் பொறுமை இழந்து கோபப்பட்டதும் இதற்கு முந்தையசெய்தி!

******
எதற்கெடுத்தாலும் வெள்ளிவிழா, பொன் விழா என்று காங்கிரஸ் மாதிரி சொரணை, பொறுப்பு எல்லாவற்றையும் உதிர்த்து விட்டுப்  பேச முடியாத விஷயங்கள்! ஒன்றல்ல, மூன்று துயரமான சம்பவங்கள் நடந்து முடிந்து இருபத்தைந்தாண்டுகள் ஓடி முடிந்து விட்டன. பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது  முதலாவது!

அடுத்து,  இந்திரா காந்தி படுகொலைக்குப் பழிதீர்க்க, சீக்கியர்களை விரட்டி விரட்டிப் படுகொலை செய்த சம்பவமும் தொடர்ந்தது. சற்றேறக்குறைய மூவாயிரம் சீக்கியர்கள் டெல்லி வீதிகளில் வேட்டையாடப்பட்டார்கள். முன்னின்று நடத்திய டைட்லர், சஜ்ஜன் குமார் இருவருக்கும் மந்திரிப் பதவிகள் தொடர்ந்தன. அடுத்துப் பதவியேற்ற ராஜீவ் காந்தி, "ஒரு பெரிய மரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும்" என்று இந்தப் படுகொலைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேசியதை, சீக்கிய சமூகம், குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் சீக்கியக் குழுக்கள் இன்னமும் மறக்கவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். வெள்ளைக்காரனின் கொடுமையாகச் சித்தரிக்கப்படும் ஜாலியன்வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சில நூறுகள் தான்!

இதே டிசம்பர் மூன்றாம் தேதி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் போபால் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்தும், இன்னும் பல துயரங்களுக்கு ஆளான துயரமும் நடந்து முடிந்த இருபத்தைந்து ஆண்டு நிறைவாகி இருக்கிறது. ஆண்டுகள் தான் ஓடி நிறைந்தனவே தவிர, இவற்றில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பது பெரும் குறையாகவேஇருக்கிறது.

நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் கூட, முறையான நிவாரணம், உறுதியான சட்ட நடவடிக்கைகள், எதுவுமில்லாமல், போபால் விஷவாயு சம்பவத்தால் மூவாயிரம் பேர்கள் மரணமடைந்தார்கள். இருபதாயிரம் பேருக்குமேல், மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டார்கள். பாதரச நஞ்சு கலந்த தொழிற்சாலைப் பகுதி இன்னமும் சுத்தப் படுத்தப் படாமல், பாதிக்கப் பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்கவில்லை. மன்மோகன் சிங் என்னவோ இந்த வருடம், பாதிக்கப் பட்ட மக்களுக்காக கொஞ்சம் அனுதாபமாகப் பேசியிருக்கிறார்.

பேச்சோடு நின்று விடுமா, இல்லை அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு உருப்படியான உதவிகள் கிடைக்குமா?