Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

சண்டேன்னா மூணு! படித்ததும் பிடித்ததும்!ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்!


" இத்தனை எழுதித்தள்ளிவிட்டோமே என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் வேறு வழியில்லை. எழுதாவிட்டால் அத்தனை நூல்களையும் நான் உள்ளே அல்லவா வைத்திருக்க வேண்டும்!"

ஒருஎழுத்தாளர் குப்பை கொட்டுவதைப் பற்றி இப்படிப் பெருமிதமாகச் சொன்ன வார்த்தைகளைப்  படித்துவிட்டு, குப்பை  சுமக்கிறவர்கள் மேல் பரிதாபம் மேலிட்டு கவிதை மாதிரி ஒன்றைக் கிறுக்கித் தள்ளிய பழைய பதிவு இது!

இங்கே குப்பை கொட்டாதீர் என்று ஒவ்வொருவரும் கதறிக் கொண்டே, அடுத்தவரிடத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம்!அடுத்தவர் போடுவது குப்பை என்று உறைக்கிற அளவுக்கு, தான் போடுவதும் அதுதான் என்பது இங்கே எவருக்கும் புரிவதே இல்லை!

குப்பைகளைப் பற்றி, குப்பை கொட்டுவதைப் பற்றி ஸ்ரீரங்கம் வி.மோகன ரங்கன் தமிழ்வாசல் கூகிள் வலைக் குழுமத்தில் எழுதியிருந்த கவிதை ஒன்று இன்றைக்குக் கண்ணில் பட்டது! மனிதனைக் குப்பை கொட்டும் பிராணி என்றே உருவகப்படுத்தியிருந்தவிதம் நெற்றியில் அறைகிற மாதிரி...! 


முழுக் கவிதையும் இங்கே!


ரோடு பொறுக்குபவனின் ஸாலிலக்கி 

அப்பப்பா! எவ்வளவு குப்பைகள்! 
ஜனங்கள் சர்வ சாதாரணமாகக் 
குப்பை போடுகின்றனர். 

வேண்டாமா தூர எறி. 
விழுந்துடுத்தா விட்டுத்தள்ளு. 

என்ன வேகம்! என்ன அவசரம்! 

கண்ணாடி வளையல் கைக்குட்டை 
பொம்மை பர்ஸ் உதட்டுச் சாயம் 
அட்டைப் பெட்டி ப்ளாஸ்டிக் கூடை 
மருதாணி பாக்கட்டு மண்ணடைந்த ஊதல் 
கால் கொலுசு கலர் பென்சில் 
செய்தித்தாள் எண்ணைக் குப்பி 

காலில் மிதிபட 
கால்களுக்கிடையில் உருள்பட 
நாய் மோந்து நக்கிக் கால்தூக்கி 
கல்லடியில் நாய் குதிக்க 
உருண்டு, காலில் மிதிபட்டு, உதைபட்டு.. 

பொருள்:..பொருள்..பொருள்.. 
உருக்குலைந்து உருமாறி உருவிழந்து 

உரு இன்னும் இருந்து 
உலக நடை நெடுக மக்களைப் போலவே .. 

மூட்டை கனக்கிறது. 

மீண்டும் ஒருமுறை வரவேண்டும் 

பென்சில் பால்பாயிண்ட் பேனா 
கைகடியாரம் விழுந்தது கூட தெரியாம ஓட்டம்  

காலில் மிதிபட்டு உருள்பட்டு நசுங்கி 
அப்பப்பா! 
மனுசன் ஒரு குப்பை போடும் பிராணி 

அடடா! இது என்ன டிபன் மூட்டை 
யார் சாப்பிடப் போகிறார்கள்? 
காலில் மிதிபட்டு... 

ராத்திரி பிடித்த எலியை அடித்து 
தெருவில் தூக்கி எறிந்ததை 
காக்கை அவசரத்தில் கொத்தியது போக 
நாய் மோந்து பூனை பார்த்து 
காலில் மிதிபட்டு நசுங்கி..... 

மனிதன் ஒரு குப்பை போடும் பிராணி. 

அட! இது என்ன? அதிசயமாய் இருக்கிறது! 
இதுவரையில் காணாத பொருள்! 
யார் இதை இங்கே போட்டது? 
என்ன வினோதம்! 
யார் காலிலும் மிதிபடாமல் 
நாய் மோக்காமல், காக்கை கொத்தாமல் 
உரு மாறாமல் மழுங்காமல் 
என்ன இது? அப்பா! யாருடையது? 

உங்களுதா?..... இல்ல 
உங்களுதா...... இல்லப்பா ஆளைவிடு. 

சார்..நீங்கள்....நகருய்யா...வழியில 
நின்னுகிட்டு 

ஐயா இது உங்களுடையதா? 


ஏனய்யா கிண்டலா 

சரி வாங்க அவன்கிட்ட என்ன பேச்சு? 

யாருதும் இல்லயா? சரி நமக்கென்ன? 
தூக்கி எறிவோம்..ஏன்? மூட்டையில போடுவோம் ...வேணாம் .. 
வினோதமா இருக்கே! 

நாமே வச்சுக்குவோம் 
வலது கால் சராய் பை ஓட்டை 
இடது பையில போட்டுக்குவோம் 
என்ன இது! ஆச்சரியமா இருக்கு? 


சரி நம்ம வேலை...பொறுக்கு...பொறுக்கு 
பொறுக்கு....போய் போட்டுவிட்டு.. 
இன்னொரு நடை?... 

இல்ல இன்னிக்கு இதோடு போதும் 
காலம் முழுக்க பொறுக்கினாலும் 
அள்ளி முடியாது மனிதன் போட்ற குப்பை 

சாமீ!... 

யாரு? என்னய்யா? யாரைப் பார்த்து 
சாமீங்கற? தள்ளு குப்பையை எடுக்கணும்.. 


ஆஹா முகத்தைப் பாருங்கள்.. 
இப்படி ஒரு முகம் இதுவரையில் கண்டதில்ல 


யோவ்! என்ன கிண்டலா? 
வழியப் பார்த்துக்கிட்டுப் போ 
சும்மா...ரோடு பொறுக்கறவன பார்த்து 
வெட்டிப் பேச்சு வேணாம் 

என்ன தத்துவம்! என்ன உபதேசம்! 

யோவ் இது என்னய்யா வம்பா போச்சு 

யாரைக் கும்பிட்றானுக? 
பின்னால யாராவது வாரானா? 
என்னடா இது எல்லாம் கிறுக்கனுகளா? 
என்னாத்துக்கு இந்தக் கவல? 
நடையைக் கட்டு...குப்பை..குப்பை 
என்ன குப்பை போட்றானுக மனுசனுக! 

அப்பாடி! தூக்கி வை ... 
மூட்டைய அந்த ஓரத்துல... 
ஒரு டீ அடிச்சிட்டு பீடி வலிப்பமா? 
டீ கிடக்கட்டும்...இப்படி..சாய்ஞ்சுக்கினு 

உட்கார்ந்து...ஒரு தம்... 

தோ ஏரோப்ளேன் போறான் 
ஆமா அங்கன போயி 
இவனுக குப்ப போடுவானுகளே 
என்ன பண்ணுவானுக? 

ஏகப்பட்ட நட்சத்திரம்! 
எல்லாம் எவன் போட்ட குப்பையோ? 

பொறுக்காம கெடக்குது... 
மொத்தமா அள்ளிப் ..போடுவானுக 
போல... ஒரு நாளைக்கு 

இந்தப் பொருள் உன்னுதான்னு கேட்டா 
அந்த ஆளு அப்படி கத்துறான்! 
அந்த அம்மாவும் சொல்லுது.... 
அவங்கிட்ட என்ன பேச்சு?.... 

அட மறந்துட்டேன் இன்னும் இருக்கா? 
என்னாப் பொருளு அதிசயம்மா? 

பொறுமையா பிரிச்சா என்னன்னு தெரியுது 

என்னது.... அட....


மன அமைதி 

அதான் அந்த கும்பிடு கும்பிட்டானுகளா? 
இதப்பார்ரா...தங்கிட்ட இருக்கறத குப்பைல போட்டு...மத்தவன்ட்ட இருக்கறத கும்பிட்டுத் திரியுறானுக.... 


மனிசன் குப்ப போடும் பிராணி... !

பீடி இன்னிக்கு நல்லாவே இருக்கு.....!!



ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கனுடைய மோகனத்தமிழைப் பற்றி இந்தப்பக்கங்களில் முன்னமேயே பார்த்திருக்கிறோம். குறிப்பாக, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் அவர் "எது பக்தி" என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்த இழையில் அப்படியே அகம் கரைந்து உருகி நின்ற தருணங்களை இங்கே   பார்த்திருக்கிறோம். இப்போது எது பக்தி புத்தகவடிவிலும் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தத் தலைப்பில் எழுதிய முதல் இருபத்தொரு பத்திகளையும், வாசகர் சந்தேகங்களுக்கு விடையளித்த ஆறேழு பதிவுகளையும் இங்கே வரிசையாகப் படிக்கலாம்.

அதன்பின்னர் வந்த பகுதிகள்  ஒன்று, இரண்டு, மூன்று

 
மோகன ரங்கனும் மின்தமிழ் கண்ணனும் 
நேற்று முன்தினம் வரை வெளியிட்ட பகுதிகள் அத்தனைக்கும் தொடுப்பு இங்கே இருக்கிறது. அடுத்து வெளிவருவதையும் இங்கே பார்க்கலாம். மோகனத்தமிழில் கொஞ்சம் தோய்ந்துதான் பாருங்களேன்! பக்தி என்பதை இத்தனை சுவையாக, தெளிவாக பி ஸ்ரீ அவர்களுக்குப் பிறகு வேறெவரும் எழுதி நான் படித்ததில்லை.

அந்தவகையில், திரு மோகனரங்கனின் மோகனத்தமிழ் படித்ததும் பிடித்ததுமாக!





விழித்தெழு என் தேசமே.............!


ரவீந்திரநாத் தாகூர் - 150 வது பிறந்த நாள் இன்று மே 7! பாரதத்தின் கவிஞனுக்கு அஞ்சலி செய்குவோம்! 

Where The Mind is Without Fear...!

WHERE the mind is without fear and the head is held high

Where knowledge is free

Where the world has not been broken up into fragments

By narrow domestic walls

Where words come out from the depth of truth

Where tireless striving stretches its arms towards perfection

Where the clear stream of reason has not lost its way

Into the dreary desert sand of dead habit

Where the mind is led forward by thee

Into ever-widening thought and action

Into that heaven of freedom, my Father, let my country awake.

-Rabindranath Tagore

விழித்தெழுக என் தேசம்!

கீதாஞ்சலி 35

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
விழித்தெழுக என் தேசம்!
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாச மின்றி
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கப் பணி புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம்!

- ஜெயபாரதன்
(jayabarat@tnt21.com) அவர்களுக்கு நன்றியுடன்!



 

பாட்டுக்கொரு புலவன் பாரதி!




பொய்யான பேர்வழிகளுக்குத் தான் மின்மினிப் பூச்சிகளின் சாட்சியம் வேண்டும்!
பொய் மொழியாய்  நீதான் எங்கள் உதய சூரியன் என்று பாட்டுப் பாடவேண்டும்!
பொய் மொழியைத் தானே நம்புதற்குத் தினந்தோறும் விழா நடத்த வேண்டும்!
சூரியனென்று தன்னைச் சொல்லும் மின்மினி சூரியனாய் எப்போதும் ஆவதில்லை!

சூரியனாய் என்றும் ஒளிவீசும் பாட்டுக்கொரு புலவன் பாரதியடா!




சண்டேன்னா மூணு! படித்ததும் பிடித்ததுமாக!


பொள்ளாச்சி நசன் தம்முடைய வலைப்பக்கங்களில் நாளும் ஒரு நூல் என்று பழைய அரிய  புத்தகங்களை ஸ்கேன் செய்து பிடிஎப் வடிவில் வலையில் ஏற்றி  இருக்கிறார். நா.பார்த்த சாரதி அவர்களின் தீபம் இதழ்கள் பலவற்றை அங்கே இருந்து தரவிறக்கம் செய்து படித்துக் கொண்டிருந்ததில், படித்ததில் பிடித்ததாக முதலில் ஒரு கவிதை!


நினைப்பும் நடப்பும் -- ஜெயகாந்தன்

மூட நினைத்துத் திறந்து விட்டேன் --நிர்
மூடர் உலகம் அதை மறந்து விட்டேன்

தேட நினைத்து இழந்து விட்டேன் -- எதைத்
தேடுகின்றேன் என்றும் மறந்து விட்டேன்

கூட நினைத்துக் குறைந்து விட்டேன் --பெருங்
கூட்ட நெரிசலில் கரைந்து விட்டேன்

பாட நினைத்து உளறி விட்டேன் --மனப்
பாழின் துயர்களைக் கிளறி விட்டேன்

ஓட நினைத்து விழுந்து விட்டேன்--மனம்
ஒன்றி இருக்க எழுந்து விட்டேன்

ஆட நினைத்து அமர்ந்து விட்டேன்--எனை
ஆட்டிய கயிற்றை அறுத்து விட்டேன்.


கவிதை, அல்லது கவிதை மாதிரி எழுதப்பட்ட இந்த  நினைப்பும் நடப்பும் நெஞ்சுக்குள் என்னென்னமோ செய்கிற மாதிரி நான் அனுபவித்ததை உங்களுக்கும்......!

oooOooo

தேவன்


கொஞ்சம் சீரியசான  விஷயங்களையே படித்துக் கொண்டிருந்தால் மண்டை காய்ந்துபோய் விடும் என்பதற்காக, அவ்வப்போது லைட் ரீடிங்காகத் தேர்ந்தெடுத்துப் படிப்பது உண்டு. அப்படி நேற்றைக்குக் கிடைத்த லைட் ரீடிங், தேவன் படைத்த துப்பறியும் சாம்பு!  எழுபத்தைந்து கதைகளாக, அதில் குழந்தை விளையாட்டு என்பதும் ஒன்று.


சாம்புவின் சகலை பிள்ளை பிச்சை சாம்புவின் வீட்டில் வந்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான். சாம்புவைக் கோபப்படுத்தி, அவன் முகம் போகிற போக்கைப் பார்ப்பதில் பொடியனுக்கு அலாதியான ஆனந்தம். ஒரு கல்யாண வீட்டில், மணப்பெண்ணுக்கு இரவலாக வாங்கி அணிவித்திருந்த நகை ஒன்று காணாமல் போய்விடுகிறது. சாம்புவை இன்ஸ்பெக்டர் கோபாலன் வந்து அழைத்துப் போகிறார். கூடவே இந்தப் பொடியனும் தொற்றிக் கொள்கிறான். வழக்கம் போலவே, சாம்புவுக்கு இருந்த அசட்டுத் தனமான அதிர்ஷ்டத்தில் நகை கிடைத்து விடுகிறது! குற்றவாளியும் அகப்பட்டுக் கொள்கிறான். பொடியனோடு வீடு திரும்புகிறான் சாம்பு.

"சித்தி! இந்த சித்தப்பாவை நீ நன்னா அடி, சித்தி! என் கவைக் குச்சியை இது ஓடிச்சு எறிஞ்சுடுத்து, சித்தி! மூஞ்சியைப் பாரு, சித்தப்பா, சொத்தப்பா, வெவ் வெவ் வே !" என்று அழகு காட்டினான் பிச்சை.

குழந்தையை வேம்பு
அணைத்துக் கொண்டு, "ஏன்னா குழந்தையின் சாமானெல்லாம் உடைக்கிறேள்? ஆனாலும் நீங்கள் முசுடு! ஒரு குழந்தையைக் கண்டு இப்படியும் கரிக்கப் படாது! அதுதான் பகவான் ஒரு குழந்தையைக் கொடுக்கல்லை!" என்றால் சாம்புவைப் பார்த்து.

"இவன் சொல்றான்னு நீயும் பேசரிய, வேம்பு! இவன் கவைக் குச்சியை நான் ஒடித்து இவனையும் கீழே விரட்டா விட்டால், இவன் சாக்கடையில் மிதந்த வேறே ஒரு குச்சியைப் பொறுக்கப் போவானா? அதை இவன் பொறுக்காவிட்டா, அந்த நகைதான் அப்படி அகப் பட்டிருக்குமா?" என்றான் சாம்பு.

"அதெச் சொல்ல வந்துட்
யளே பெரிசா!   அந்தக் குழந்தைய அவ்வளவு கட்டாயப்படுத்தி உங்களோடே நான் மட்டும் அனுப்பாட்டா என்ன ஆகியிருக்கப் போறது! அது கிடக்கட்டும்! அந்த ராமனை என்ன பண்ணுவா சொல்லுங்கோ!"

"ராமனைக் காட்டுக்கு அனுப்புவா. பேசாம நீ உன் வேலையைப் பாத்துண்டு போ!" என்றான் சாம்பு.


ராமன் பாடு கஷ்டம் தான்! 

கைகேயி வரம் வாங்கி பதினாலு வருஷம் தான் ராமனைக் காட்டுக்கு அனுப்பினாள். ராமனுக்குக் கோவில் கட்டுகிறேன் என்று கிளம்பிய பேர்வழிகளைத் தொடர்ந்து ஜனங்கள் தேர்தலில் தோற்கடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அத்தனை பட்டுமே கூட, இந்த ஆசாமிகள் ராமனையும் நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என்கிறார்களே என்ற நினைப்பும் இதைப் படித்தபோது எட்டிப் பார்த்தது.
oooOooo

(சு)வாசிக்கப் போறேங்க தளத்தில் கொத்தமங்கலம் சுப்பு படைத்த தில்லானா மோகனாம்பாளையும், நா.பார்த்தசாரதி படைத்த ஆத்மாவின் ராகங்கள் கதையையும் ஒரு சிறு விமரிசனக் குறிப்பாக எழுதிய பிறகு, படித்த வேறு சில விஷயங்களைப் பற்றி யோசனை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தது.


யாருடைய மனங்கள் நிதிவழி நேயம் நீட்டும் பொதுமனம் என்று பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாடி வைத்துப் பழி சுமத்தப் பட்டிருக்கிறதோ அவர்களிடம் மனமே ஒரு பெரிய அன்பு நிதியாக இருப்பதை அவன் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தான். 



நா.பார்த்தசாரதி எழுதிய இந்த வரிகள் தான் சிந்தனையோட்டத்தைத் தூண்டிவிட்டிருக்க வேண்டும். பதியிலார் என்றும் தேவரடியார்கள் என்றும் ராஜ ராஜ சோழன் காலத்தில் இருந்து இறைவனுக்கே தங்கள் ஆடல், பாடல் கலைகளை அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு கூட்டத்தைக் கொத்தமங்கலம் சுப்பு, தில்லானா மோகனாம்பாள் என்ற கதாபாத்திரத்தின் வழியாக ஒருவிதமாகச் சொல்லிவைத்தார் என்றால், நா.பார்த்தசாரதி இதே தாசி குலத்தில் பிறந்த பெண்களைக் கதையின் நாயகியாக வைத்து ஒன்றல்ல, இரண்டு கதைகள் எழுதியிருக்கிறார்.

பொன் விலங்கு புதினத்தில் வரும் அந்த மோகினி கதாபாத்திரத்தை வாசித்த யார் தான் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியும்? ஆத்மாவின் ராகங்களில் வருகிற நாயகி மதுரம், தேச விடுதலைப் போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ராஜாராமனிடம் தன்னையே கொடுக்கிறாள். இந்த இரண்டு கதைகளிலும் வருகிற பாத்திரங்கள், உடல் சார்ந்த அன்பை வெளிப்படுத்துகிறவர்கள் அல்லர். மனம், மனதையும் தாண்டி ஆன்மாவின் ராகங்களாகவே உருவாகும் விதத்தை, நா.பாவின் கைவண்ணத்தில் கண்டு மெய் சிலிர்த்து நின்றேன்.

கதையில் வரும் பாத்திரங்களை எழுத்தாளன் தன் இலட்சியங்கள், ஆவேசம், கற்பனைக்குத் தகுந்த மாதிரிப் படைத்து விடலாம்! யதார்த்த நிலையில் அது அவ்வளவு எளிதாக இருந்ததில்லை என்பதை இசைப் பேரரசியாக வாழ்ந்து மறைந்த எம் எஸ் சுப்புலட்சுமி, கொடுமுடி கான கோகிலாமாக வாழ்ந்து மறைந்த கே பி  சுந்தராம்பாள் இருவருடைய வாழ்க்கையும் நினைவுக்கு வந்து சொல்லிப் போயின.

எங்கே பிராமணன் என்ற சோவின் தொலைக்காட்சித் தொடரைப் பற்றி டோண்டு ராகவன் பதிவுகளில் தொடர்ந்து எழுதிய தருணங்களில் காட்டத்தோடு பின்னூட்டங்கள், எதிர்ப்பதிவுகள், வசைப் பதிவுகள் என்று தொடர்ந்ததையும் பார்த்திருக்கிறேன். வர்ண ரீதியாக பிராமணன் இருக்க முடியுமோ, முடியாதோ எனக்குத் தெரியாது! 


ஆனால், தன்னுடைய விடா முயற்சியால், சூழ்நிலைகளை எதிர் கொண்ட விதத்தில், எம் எஸ் சுப்புலட்சுமி  பாப்பாத்தியாகப்  பார்ப்பனர்களால், அன்றைக்கு இந்த மாதிரி ஐஎஸ்ஐ முத்திரை குத்துகிற உரிமை அதிகாரத்தை வைத்திருந்த காஞ்சி சங்கர மடத்தாலேயே கூட ஏற்றுக் கொள்ளப் பட்ட கதை கண் முன்னால் வந்து போனது.

ஜெய மோகன் வலைத்தளத்தில் இதைப் பற்றி விரிவாகப் பேசிய ஒரு கட்டுரையை வாசிக்க இங்கே



 



சண்டேன்னா மூணு! கவிதை! வீடியோ! கருத்துப் படம்!

உன்னை ஒரு போதும் விட மாட்டேன்!  

ஒரு கவிதை! ஒவ்வொரு எழுத்தாக உதிர்ந்து பாடும் மனிதனாகப் படம்!



காதலைச் சொல்லுவதாகத் தான் இந்த வரிகளை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை! இரண்டு பேருக்கிடையேயான அன்பு, அது வெளிப்படுகிற விதங்களில் சமயத்தில் தென்படுகிற வலி, அழுகை இப்படி, உணர்வுகளைச் சொல்வதாகக் கூட வைத்துக் கொள்ளலாம்!

னிமேஷனில் இந்தப் பக்கத்தைப் பார்த்தபோது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. கவிதையின் ஒவ்வொரு எழுத்தாக உதிர்ந்து, மனித உருமாறி ஆடுகிற மாதிரி! நன்றாக இருந்தது! கவிதை வரிகளைப் படித்தபோது இன்னமும் நன்றாக இருந்தது!  வரிகளைப் படமாக மேலே! அனிமேஷனில் ஒவ்வொரு எழுத்தாக உதிர்வதைப் பார்க்க இங்கே!

oooOooo 

மிழ் வலைப்பதிவுகளில் எனக்கிருக்கும் ஒரே மனக்குறை, குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டிக் கொண்டிருப்பதே போதும், அதை விட சொர்க்கம் வேறெதுவுமில்லை என்ற அளவில் பதிவுகளும் சரி, பதிவர்களும் சரி தங்களை எல்லை கட்டிக் கொண்டு எழுதுவது தான்!

ம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது, அறிவியல் மாற்றங்கள் என்னென்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, அரசியல் எந்த அளவுக்குச் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பது மாதிரிக் கொஞ்சம் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளைத் தமிழிலும் நிறையப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை நிறைய இருக்கிறது! உலகம் போகிற போக்கைச் சொல்கிற பதிவாக........

கிம் ஜோங்  இல் என்கிற  68 வயதான, மாசேதுங் வழிமுறைகளை அப்படியே கடைப் பிடிக்கும் ஒப்பற்ற ஒரே கம்யூனிஸ்ட் தலைவர், வட கொரிய அதிபரைப் பற்றி ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!

ர்க்கரை, பக்கவாதம், இதயநோய் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு அதே நேரம், ஆட்சியின் மீது தனது பிடியைக் கொஞ்சமும் தளரவிடாமல், இறுக்கிப் பிடித்துக் கொண்டு, தன்னுடைய வாரிசுகளுக்கு மட்டுமே அதிகாரம் என்று சாமர்த்தியமாகச் செயல்படும் ஒரு கம்யூனிஸ்ட் சர்வாதிகாரி!



ந்த வீடியோவைப் பாருங்கள்! 

ந்தக் கிறுக்குப் பிடித்த அரசியல் தலைவரிடம் சிக்கிக் கொண்டு வட கொரிய மக்கள் மட்டுமல்ல, அண்டை நாடுகளான தென் கொரியாவும், ஜப்பானும் அலறிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கிறுக்குப் பிடித்த மூர்க்கன்  எந்த நேரத்தில் என்ன செய்து, இன்னுமொரு வேண்டாத யுத்தகளத்தில் இழுத்து விடுவார்  என்பதை எவராலுமே கணித்துச் சொல்ல முடியவில்லை. பார்ப்பதற்குத் தான் கிறுக்குத் தனமாகத் தெரிகிறதே தவிர, கிம் ஜோங் இல் எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்கிற மாதிரித் தான் இருக்கிறது.

ம்மூர்த் தலை ஒன்று தன்னை எல்லோரும் எப்போதும் பாராட்டு விழா நடத்திக் குளிரவைத்துக் கூத்தாடிக் கொண்டிருக்கவேண்டும் என்று நடத்திக் கொண்டிருக்கிற கதை தான் அங்கேயும்! இங்கே நடக்கிற மாதிரிதான், அங்கேயும் தலைவரின் இரண்டு பெண்டாட்டிகளின் வாரிசுகளில் எவர்  அடுத்துத் தலைமைப் பீடத்திற்கு வருவது என்ற போட்டாபோட்டி ஒரு புறம்!

னங்களுக்குப் பிழைப்புக்கு வழியில்லை! தொழில் வளர்ச்சியும் இல்லை! அதனால் என்ன? ஜனங்களுடைய
அதிருப்தி, கோபத்தைத் திசை திருப்புகிற மாதிரி, கடந்த மார்ச் மாதம் இருபத்தாறாம் தேதி தென்கொரியாவின் சிறிய கடற்படைக் கப்பலை மூழ்கடித்தது. 

விஷயம் வெளியே வந்ததும், தென் கொரியா ராஜீய, வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்டது. வட கொரியா, மறுபடியும் யுத்தம் வரும் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. 

ரே கல்லில் இரண்டு மாங்காய்! உள்ளூரில் ஜனங்களின் கவனத்தைத் திசை திருப்பின மாதிரியும் ஆயிற்று! எதிரிகளை வயிறு கலங்கச் செய்ததுமாயிற்று!



தில் திரைமறைவில் இருந்து கொண்டு சீனா எப்படித் தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை விளக்கி பிரம்ம செலானி எழுதிய கட்டுரை, சீனப் பூச்சாண்டியை புரிந்து கொள்ள அவசியம் படிக்க வேண்டிய ஒன்று!

கொரியாவில் கூட  இனமானத் தலைவர் உண்டு போல இருக்கிறதே என்று ஆச்சரியப் படுபவர்களுக்காகக் கூடுதல் விவரங்களைப் படிக்க

இங்கே         இங்கே        இங்கே       இங்கே 


oooOooo 

கருத்துப் படங்கள்! மூணு!

கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்துகொண்டு கல்லைஎறின்னு அந்த அம்மா தான் சொல்றாங்க! இல்லே!?
 

ஆணி அடிக்கக் கூடாதுன்னு தான் சொன்னேன்! ஆனாக்க, கல் எறியலாம்!


அட! இது கூட நல்லாத் தான் இருக்கு! 
போப்புக்குக் கூட இம்மாம் பெரிய ஆப்பா?


 

சண்டேன்னா மூணு! படங்கள் மூணு...! கவிதை ஒண்ணு!


சீரியஸா என்னத்தையோ யோசிக்கற மாதிரி எல்லாம் இல்லீங்க! ...ச்சும்மா ஒரு ஷோ காட்டத் தான்! செம்மொழி மாநாடு வேற வருது இல்லே?


எதுக்கு தலையை முட்டிட்டு நிக்கறோம்னு கேக்கறீங்களா? முட்டையில் இருந்து கோழியா, கோழியில் இருந்து முட்டையான்ற மாதிரி எங்க கிட்ட வந்து பரிணாமம் எனது புரிதல், படைப்புவாதம் இப்படீன்னெல்லாம் எழுதப்போறேன்னு பயமுறுத்தினாக்க நாங்க  வேற என்ன செய்யறதாம்...?


எங்களுக்கும் ஸ்டன்ட் அடிக்கத் தெரியும்! ஆனா இன்னாத்துக்கு ஸ்டன்ட்  அடிக்கறதுன்னு தெரியாமத் தான் ஒரே குழப்பமா இருந்தது. அதனால ஒரு ஸ்டன்ட் அடிச்சுப் பாப்போமேன்னு தான்......!

இந்தப் படம் எதுக்கு, அதுக்கு கமெண்டுன்னு கீழே கொஞ்சம் எழுதினது எதுக்குன்னு புரியலையா?

வால் பையனை விட்டே  இந்தத் தரம் உரை எழுதச் சொல்லிட்டாப் போச்சு!

அதுவரைக்கும், ரசிப்பதற்காக ரூமியின் கவிதை ஒன்று ! 

காதல் என் காதோடு வந்து சொன்னது:

"வேடனாக இராதே! எதிர்க்கச் சக்தியில்லாதவனாக இரு!
எனக்குப் பிரியமானவனாக ஒரு முட்டாளாகவே இருந்துவிடு!
செந்தழல் இரவியாக வேண்டாமே! ஒரு புள்ளியே கூடப் போதும்.
எனது இல்லத்தில் அண்டியிருந்து  வீடற்றவனாக இரு
எரியும் விளக்காக வேண்டாம், விட்டில் பூச்சியாக இரு! போதும்!
இருந்தால்  வாழ்க்கையை அனுபவித்து சுவைக்க முடியும்
அடங்கிப் பணி செய்வதன் பலம் என்னவென்று அப்போது தெரியும்!"

முகமதுஜலாலுதீன் ரூமி என்ற இந்த பெர்ஷிய  சூஃபி கவிஞருடைய கவிதைகளில் இருந்து அவ்வப்போது ஒரு சில கவிதைகளைப் பார்த்திருக்கிறோம்! அந்த வரிசையில் இன்னுமொன்று!


ரூமி  காதலையும் தொட்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்! ஆன்மநேயம் வெளிப்படும் சூ ஃபி கவிதைவரிகள் அவை! வெறும் உடல்களின் மீதான இச்சை என்பதையும் தாண்டி, கொஞ்சம் பரவசமான நிலையில்! இங்கே இப்படிச் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா?


Lover whispers to my ear,
"Better to be a prey than a hunter.
Make yourself My fool.
Stop trying to be the sun and become a speck!
Dwell at My door and be homeless.
Don't pretend to be a candle, be a moth,
so you may taste the savor of Life
and know the power hidden in serving."




 

லோகோ பின்ன ருசி! அப்படியென்றால்....?


லோகோ பின்ன ருசி என்றால், ஒவ்வொருவருக்கும்  சுவை, ரசனை வித்தியாசமாகத் தான் இருக்கும்! வேற்றுமையிலும் ஒற்றுமை காணத் தெரிந்து கொள்வதே வாழ்க்கை!

ந்தப் பக்கங்களில் சேத் கோடினுடைய பல பதிவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எனக்குப் பயன்படும் ஒரு சிந்தனை, இங்கே படிக்க வருபவர்களுக்கும் பயன்படட்டுமே! சேத் கோடின் சமீபத்தில் எழுதிய இந்தப் பதிவு, என்னுடைய யோசனைகளை விசாலமான ஒரு பார்வைக்கு இட்டுச் சென்றதாகவே உணருகிறேன்!
 

ரு மூன்றே  வயதான குழந்தை!

தைப் போய், இந்தக் குழந்தைக்கு ஒன்று இரண்டு சரியாக எண்ணத் தெரியவில்லை, எழுத்தைக் கூட்டிப் படிக்கத் தெரியவில்லை, நான்கு வரி சேர்ந்தாற்போல ஒரு பத்தி பிரித்து எழுதத் தெரியவில்லை! அதனால் இது ஒன்றுக்குமே ஆகாத முட்டாளாகத் தான் இருக்கும் என்று யாராவது சொல்வோமா? அப்படி யாரேனும் சொன்னால், சொல்பவர் தான் முட்டாளாக இருக்க முடியும்!

னென்றால், அந்தக் குழந்தைக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து விட முடியும், குழந்தையும் கற்றுக் கொண்டு விடும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

தே போல, ஒரு இளைஞன் அல்லது ஒரு யுவதியைக் குறித்து, இந்த நபர் ஒருபோதும் தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளவே முடியாது, பொறுப்பை உணர்ந்து செயல் பட முடியாது, எதையும் ஒழுங்காக நிர்வகிக்க முடியாது, எந்த ஒரு உயிரையும் காப்பாற்ற முடியாது, எவருக்கும் ஆதர்சமாக ஊக்கமூட்டுகிறவராக இருக்க முடியாது, எதையுமே படைக்க முடியாது என்று தீர்மானமாகச் சொல்லி விட முடியுமா?  கற்றுக் கொள்வதும், செயல்படுத்துவதும் எவருக்குமே, எந்த நிலையிலும்  சாத்தியம் என்ற உண்மை உறைக்குமானால், மனிதர்களை அவ்வளவு சட்டென்று இப்படித் தான் என்று தீர்மானமாகச் சொல்லவே மாட்டீர்கள்!

ளந்தாரிகளை விடுங்கள்! இதே  மாதிரி ஐம்பது ப்ளஸ் ஆசாமிகள் இருக்கிறார்களே, அவர்களைத் தான் எதையுமே சாதிக்க முடியாதவர்கள், எதையும் புதிதாகப் படைக்கத் திறனற்றவர்கள் என்று சொல்லி விட முடியுமா? ஒன்றுக்குமே ஆகாததென்று தள்ளி விட முடியுமா?கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

னிதர்களை, அவர்கள் எப்படியிருக்கிறார்கள், எப்படிப்பட்டவர்கள் என்பதான உங்களுடைய முன்கூட்டிய தீர்மானங்களை மறந்து விட்டு, அவர்கள் எப்படிப் பட்டவர்களாக ஆக முடியும், என்னென்ன சாதிக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்! முடிந்தால், அதற்கு நீங்கள் எந்த விதத்தில் உதவியாக இருக்க முடியும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! குறைந்த பட்சமாக, ஒரு முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமலாவது இருக்க முடியுமா என்று பாருங்கள்! 

ப்படி உங்களால் யோசிக்க முடிந்தால், உங்களால் நல்லதொரு  மாற்றத்தை நிகழ்த்த முடியும்! நிறைய சாதிக்க முடியும்! உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு ஆதர்சமாக, நல்ல ஒரு துணையாக, சேர்ந்து செயல்படுகிற ஒரு குழுவிற்குத் தலைவனாக முடியும்! உங்களோடு, உங்களைச் சேர்ந்த்வர்களையும், உயரத்திற்கு இட்டுச் செல்ல முடியும்! 

தை விட்டு, நேற்று வரை ஆளே இல்லாத நிலையில் என்னைத் தானே தலை என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள், இன்றைக்கு வேறு எவரோ அந்த இடத்துக்கு வந்துவிடுவார்களோ என்ற அச்சம், அடுத்தவர்கள் ஏதோ புதிதாக முயற்சித்தால் என்னுடைய இடத்தைப் பறிக்க முயற்சி செய்கிறார்கள் என்ற பயம் வந்தால்.......?

கோளாறு உங்களிடம் தான் இருக்கிறது!



ராபர்ட்  ஃப்ராஸ்ட்  ஒரு அமெரிக்கக் கவிஞன்! அவர் எழுதிய  Mending Wall  என்றொரு கவிதை!   ஃப்ராஸ்ட் இங்கிலாந்துக்குப் போயிருந்தபோது, க்ரஹாம் கிரீன் என்ற எழுத்தாளர் அவரிடம் கேட்டாராம்!

"மீபகாலத்திய இலக்கியங்களில், நீங்கள் எழுதிய இந்தக் கவிதையில் " நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்குகின்றன"  என்று சொல்லியிருப்பதை மாதிரிப் புரிந்து கொள்ளக் கடினமான வேறு ஒன்று இல்லையே!"

ஃப்ராஸ்ட் சொன்ன பதில், " என்னுடைய உதவி இல்லாமலேயே அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்  என்று
தான் விரும்புகிறேன்."

விஞரும், எழுத்தாளரும் சிரித்தபடியே அந்த விவாதத்தை அப்படியே விட்டு விடுகிறார்கள். அமெரிக்க இலக்கியத்தில்  ஃப்ராஸ்டின் இந்தக் கவிதை மாதிரி அக்குவேறு ஆணிவேராக அலசப்பட்ட கவிதை எதுவும் கிடையாது என்று விமரிசகர்கள் சொல்கிறார்கள்.
நிறையவே தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதையும் இதுவாகத் தான் இருக்கும்! 



ப்பாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையிலும் கூட, ஒரு அழகான கேள்வியை, இந்தக் கவிதை இன்னமும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டு தான்  இருக்கிறது!

 

Something there is that doesn't love a wall,
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

ன்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்கும்!  

Before I built a wall I'd ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offense.
Something there is that doesn't love a wall,
That wants it down.'

விஞருடைய  வாதம் எல்லாம் இது தான்! 
 
தோ ஒன்று, குறுக்குச் சுவர் ஒன்று இருப்பதை விரும்புவதில்லை. வேலியைக் கீழே தள்ளவே அது விரும்புகிறது! கவிஞருடைய வாதங்களை எல்லாம் அண்டைவீட்டுக்காரன் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், கடைசியாக மறுபடியும்,'Good fences make good neighbors' என்று சொல்வதோடு கவிதை முடிகிறது.

ற்கெனெவே இந்தக் கவிதையை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!இரண்டு எதிரெதிரான  மன நிலைகள் இங்கே உருவகிக்கப் படுவதைப் பேசியிருக்கிறோம்!

தைக் குறித்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி இந்த உருவகத்தில் தொக்கி நிற்கிறது
.
அதுதான் முக்கியம்!

இதைப் பற்றி  இன்னும் கொஞ்சம் வாசிக்க, கேட்க.

நேரெதிரான மன நிலைகள், வேறுபாடுகள் இருப்பது இயற்கைதான்! முரண்பாடுகளின் மோதல், இயக்கத்தில் தான் இங்கே பழையன கழிந்து புதியன உருவாகின்றன. பழையதே போதும் என்று அதை விடாப்பிடியாகக் கட்டிக் கொண்டு அழுபவர்கள் மீது, கதறக் கதற, மாற்றம் நிகழ்த்தப் படுகிறது. 
 
 
சரி! சரி! லோகோ நன்றாக இருக்கிறது என்பதற்காக மட்டும் தான் இந்தப் படத்தை இங்கே போட்டு, இந்தப் பதிவையும் எழுதினேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்! உங்களுடைய விமரிசனங்கள் எப்போதும் போல வரவேற்கப் படுகின்றன!