துபாய்! டுபாக்கூர்! பொருளாதாரம்!வட கொரியா!

துபாய்! டுபாக்கூர்! பொருளாதாரம்!வட கொரியா!
ரொம்ப அழகான  நகரமாக வர்ணிக்கப்பட்டது இன்றைக்கு மிகப்பெரிய பயங்கரமாக!

துபாய் அரச குடும்பத்துக்கு முற்றிலும் சொந்தமான துபாய் உலகம் என்ற நிறுவனம், நவம்பர் கடைசியில், துபாய்க் காசு, துபாய் சொர்க்கம் என்று கனவு கண்டு கொண்டிருந்தவர்கள் அடி வயிற்றில் நெருப்பை வாரிக்கொட்டி இருக்கிறது. சென்ற வருடம், செப்டம்பர் மாதம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிக மோசமான சரிவில், அது ஏற்படுத்திய தாக்கங்களில் இருந்து உலக நாடுகள் இப்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் துபாய் உலகம், இன்னொரு விதமான சங்கிலித் தொடர்போல, சீரழிவைத் தொடங்கி வைத்திருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் என்று அழைக்கப்படும் ஏழில் மிகச் சிறியதும், பெட்ரோல் கிணறுகளில் கிடைக்கிற வருமானம் வெறும் ஆறு சதவீதம் மட்டுமே என்று இருந்த துபாய், மத்திய கிழக்கு நாடுகளின் மிக நவீனமான வர்த்தக மையமாக உருவெடுத்து வந்தது.

ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகளில் சொல்லப் படுகிற மாதிரி, கட்டற்ற கேளிக்கை, வரிகள் அற்ற வருமானம், இஸ்லாமிய ஷாரியத் சட்டங்கள், கெடுபிடிகள் எதுவுமில்லாமல், மேற்கத்திய உலகோடு வணிகமும் பேரமும் பேசுகிற இடமாக வளர்ந்து வந்தது. நான் பார்த்துப் பழகியிருக்கிற மலையாளிகளில், எண்பது சதவீதப்பேருக்குக் குறையாமல் துபாய்க் காசு, துபாய் சுரம், துபாய்க் கனவுகள் இருந்தது. மெல்ல மெல்ல, நாட்டின் பல பகுதி மக்களுக்கும் துபாய்க் காசு சுரம் பரவி, அதன் பிரதாபம் "வெற்றிக் கோடி கட்டு" படம் எடுத்தவரை நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.


துபாய்க் காசு மீதான ஆசை, கனவு கேரளாவை ஒரு உலுக்கு உலுக்கியிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன.துபாய்க் கனவு எப்படி ஆரம்பித்தது? எப்படிக் கலைந்தது? அடுத்து என்ன ஆகும்?

தினசரி சன் டிவியில் கேட்டுப் புளித்துப் போன ஒரு டயலாக், அது தான் துபாய்க் கனவு என்பதன் ஒன் லைன் தீம்!

"உலகத்திலேயே மிகப் பிரம்மாண்டமான, உலகத்திலேயே மிக உயரமான, உலகத்திலேயே முதன் முறையாக, நீங்கள் இது வரை பார்த்தே இருக்க முடியாத....இப்படி,அரேபியப் பாலைவனத்தின் கானல் நீராகத் தெரிந்த பிரம்மாண்டமான கனவுகள்!"


இதுதான் துபாய்க் கனவு! மிகப் பெரிய பலூன் மாதிரி ஊதிப் பெருத்து, இப்போது வெறும் மணலால் கட்டப்பட்ட வீடு! மணல் வீடுமாதிரியே, ஒரேயடியாகச் சரிந்து விடுமா இல்லை, மணல் சூறாவளியாகக் கிளம்பி, உலகப் பொருளாதாரத்தை இன்னும் கொஞ்ச நாள் ஆட்டிப்படைக்குமா?


1970 களில் பிரிட்டன், வளைகுடாப்பகுதியில் இருந்து வெளியேறிய பிறகு, அதுவரை பிரிட்டனின் பாதுகாப்பில்(?) இருந்த துபாய், மற்ற அரபுப் பிரதேசங்களோடு சேர்ந்து ஐக்கிய அரபிய எமிரேட் என்று ஒரு கூட்டமைப்பாக மலர்ந்து இந்த இரண்டாம் தேதியோடு, முப்பத்தெட்டு ஆண்டுகள் நிறைந்த வேளையில் தான் மணல் கோட்டையின் பலம், பலவீனம் இரண்டுமே அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது.

பலமாக இருந்தது, வளைகுடாப் பகுதியில் நிலவிய ஸ்திரமற்ற தன்மையைப் பற்றிய அச்சத்தைப் போக்கி, வெறும் பெட்ரோல் வணிகம் என்பதில் இருந்து, சுற்றுலாத் தளம், வர்த்தக மையங்கள், விசேஷ சந்தைகள் என்று, வெளிநாட்டு மூலதனத்தைத் தன்னிடம் வரவழைத்துக் கொண்ட சாமர்த்தியம்.! இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் என்று பல நாடுகளில் இருந்தும் பிழைப்பைத் தேடி வந்தவர்களை வைத்து, ஒரு அடிமைகளின் உழைப்பில் வளர்ந்த பிரம்மாண்டம்!  மொத்தமுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களில் இந்தியர்களுடைய எண்ணிக்கை கிட்டத் தட்ட சரி பாதிக்குக் கொஞ்சம் குறைவு!   43%
செயற்கைத் தீவுகள், வானளாவும் கட்டடங்கள், சொகுசு மாளிகைகள், கேளிக்கை மையங்கள் என்று எல்லாமே ரியல் எஸ்டேட் ஒன்றை அடிப்படையாக வைத்தே எழுந்தன. இதற்கான மூலதனம் எல்லாம் வெளிநாடுகளில் இருந்தே வந்து குவிந்தது. மேற்கத்திய நாடுகளில் கிடைக்காத சொகுசு, உல்லாசங்களைத் தேடி, நிறைய செல்வந்தர்கள் இடங்களை வாங்கிக் குவித்தார்கள். பக்கத்தில் இருக்கும் சவுதியில், மதக் கட்டுப்பாடுகள் அதிகம். உஸ்பெஸ்கிஸ்தான் அழகிகளோடு பொழுது போக்குவதற்காகவே சவுதியில் இருந்து சுகம் தேடி துபாய்க்கு வருபவர் எண்ணிக்கை அதிகம்.

ஆக, துபாய் என்றால், கேளிக்கை, பேராசை, உச்சத்துக்குப் போன ரியல் எஸ்டேட், வணிகம், வரியில்லாத வருமானம், இப்படி எல்லாமே!

சென்ற ஆண்டு அமெரிக்காவில், வங்கிகளின் பேராசையால் விளைந்த பொருளாதாரச் சரிவு, அமெரிக்காவோடு நின்றுவிடவில்லை. ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் சில வங்கிகள் கவிழ்ந்தன. முதலீடு செய்திருந்தவர்கள் நிறையப்பேர் கையைச் சுட்டுக் கொண்டார்கள். சந்தைப் பொருளாதாரத்தில், இது அடுக்கடுக்காகச் சீட்டுக் கட்டுக்கள், ஒன்றின் மேல் ஒன்று விழுந்து கவிழ்ப்பது மாதிரித் தான். அமெரிக்க அரசு, வரிப்பணத்தில் இருந்து, பேராசைக்கார நிறுவனங்களில் சிலவற்றைக் காப்பாற்றியது,வேறு சிலவற்றைக் கவிழ்ந்துபோக விட்டது.

வங்கிகளின் பேராசை! அப்படியென்றால் என்ன அர்த்தம்?

நம்முடைய நாட்டில் இருப்பது மாதிரி, வங்கிகள் வியாபாரம் செய்கிற நிறுவனங்களா அல்லது தர்மச் சத்திரங்களா என்பதே தெளிவாக இல்லாமல், அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்று அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்துகிற மாதிரி வெளி நாடுகளில் இல்லை. மிகப் பழைய, பெரிய வங்கிகள் ஒரு குடும்பத்தின் சொந்த முதலீட்டில் இயங்குபவை. கார்பரேட் நிறுவனங்கள், பங்குச் சந்தையில் மூலதனத்தைத் திரட்டித் தொழிலை நடத்துபவை. அப்படி இருக்கும்போது, லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதை மட்டும் பேராசை என்று இங்கே சொல்லவில்லை.
Sub Prime Lending! ரியல் எஸ்டேட்-. நிலத்தின் மதிப்புக் கூடிக் கொண்டே போகும் என்ற ஒரே ஒரு கணக்கை வைத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் தப்பாகச் செய்து, மொத்தத்தையும் இழந்து நின்றதன் விளைவாக, அமெரிக்க முதலீட்டுத் துறை, வங்கித் துறை பெரிய சரிவைச் சந்தித்தது.
வங்கிகளின் பேராசையில் விளைந்த திட்டத்தை நம்பி, கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி, வருமானம் இல்லாமலேயே வீடுகளை வாங்கின நிறையப் பேர் கதி இப்போது அந்தரத்தில்! வீடுகளை வங்கிகள் ஏலத்திற்குக் கொண்டு வந்து விட்டன. வாங்கின விலையில் பாதி கூட, தேறுமா என்ற அளவுக்கு ரியல் எஸ்டேட் துறையை நம்பிக் கடன் கொடுத்தவர்களும், கடன் வாங்கியவர்களும் பலத்த அடிவாங்கினார்கள்.
சில நிறுவனங்களை அரசு முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்தினாலும், பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் பெருமளவு இழந்தார்கள். அதன் தொடர்ச்சியாக, துபாய்க்கு, அந்நிய முதலீடுகள் வருவது கடந்த ஆண்டில் இருந்தே குறையத் தொடங்கிவிட்டது. இப்போதையபிரச்சினையின் ஆணிவேர் அப்போதே தெரிய ஆரம்பித்தது, ஆனால் சரிசெய்துகொள்ள முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

அபின் அடித்துக் கொண்டு பகல் கனவு காணுகிறவன் நிலை மாதிரிரியல் எஸ்டேட் வானளாவி, அதையும் தாண்டிப் போகும் என்ற ஒரே ஒரு அம்சத்தை வைத்துக் கொண்டு தீட்டிய திட்டங்கள், அஸ்திவாரம், முட்டு இல்லாத சுவர் மாதிரி போன ஆண்டில் இருந்தே மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்தது. துபாய் உலகம் முழுக்க முழுக்க அரச குடும்பத்திற்குச் சொந்தம். வெளி நாட்டில் இருந்து திரட்டிய முதலீடுகளை ஊதாரித்தனமான விஷயங்களில் விரயமாக்கியதும், ரியல் எஸ்டேட் விலை சரிந்தது மட்டுமல்லாமல், வாங்குவாருமில்லாத நிலை உருவானதும் பிரச்சினையை வெளி உலகத்திற்கு, சென்ற நவம்பர் 25 ஆம் தேதி கொண்டு வந்தது. வெறும் ஐந்து பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு, ஆறுமாத அவகாசம் கேட்டது. ஐம்பத்தொன்பது பில்லியன் வெளிநாட்டுக் கடன் என்று முதலில் சொல்லப்பட்டது, இப்போது எண்பது பில்லியன் என்று சொல்லப் படுகிறது.
இன்னொரு தகவல், சொத்து மதிப்பு ஒரு ரூபாய் என்றால், கடன் நிலுவை ஐந்து ரூபாய் அளவுக்கு இருக்கிறது என்று சொல்கிறது. அதாவது திவால்!

இங்கே முதலில் தென்படுகிற குறை, துபாய் உலகம் எவ்வளவு வெளிநாட்டு முதலீட்டைப் பெற்றது, பெற்ற தொகையை என்னென்ன விதத்தில் செலவு செய்து, என்ன வருமானம் ஈட்டியது என்பதில் நம்பகமான தகவல், வெளிப்படையான கணக்கீட்டு முறைகள், எதுவும் இல்லை என்பது. 
நேராய் இல்லாத, நேர்மையில்லாத  எதுவுமே விழுந்துதானே தீர வேண்டும்!
அடுத்து, முழுக்க முழுக்க அரச குடும்பத்தின் சொத்தாக இருந்த போதிலும், துபாய் உலகத்தின் கடன்களுக்கு, துபாய் அரசு எந்தவிதமான பொறுப்பும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற அறிவிப்பு. சட்டரீதியாகச் சரியாக இருக்கலாம். ஒருதரம் நாணயம் கெட்டவன் என்ற பெயர் வாங்கி விட்டால், அதில் இருந்து மீள்வது மிகக் கடினம் மட்டுமல்ல, வேறு எந்த வகையிலும் எழுந்திருக்கவே முடியாது என்பதும்தான்!
அடுத்து, நிலத்தின் மதிப்பைக் கூட்டிக் கொண்டே போகிற சூதாட்டம் ஒன்றை வைத்தே விளையாடியதில், ஒரு நேரம் இல்லாவிட்டால் இன்னொரு நேரம் அடி வாங்கித்தான் ஆக வேண்டும். அடிமைகள் உழைப்பை வைத்து உருவாக்கிய துபாய்க் கனவு, முதலில் காவு கொள்வது அடிமைகளைத் தான்! ஏற்கெனெவே 10500 பேர் வேலை இழந்துவிட்டார்கள். இன்னும் எத்தனை வேலையிழப்பு, அதன் பாதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை, இன்னமும் தெளிவாகக் கணிக்க முடியவில்லை.
துபாய் உலகம் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது! எமிரேட் நாடுகளில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ, முட்டுக் கொடுத்து, பிரச்சினையைத் தீர்த்து விடும். அபுதாபி, தன்னிடம் இருக்கும் ரொக்க இருப்பில் இருந்து, உதவுவதாகச் சொன்ன போதே, நவம்பர் 30 அன்று அபுதாபி பங்குச் சந்தை பெருத்த சரிவைச் சந்தித்தது. தேசிய வங்கியின் பங்கு மட்டும் 9 சதவீதத்துக்குக் கொஞ்சம் அதிகமாக அடி வாங்கியது! ஆனாலும், சில விஷயங்கள், கைமாறாக என்ன கிடைக்கும் என்பது முடிவானதும் உதவியும் கிடைத்து விடும்!

சோழியன் குடுமி மட்டுமல்ல, எமிரேட் குல்லாவில் இருக்கும் குடுமியும் சும்மா ஒன்றும் ஆடாது! இப்போது செய்கிற உதவிக்கு பதிலாக, லாபத்தில் இயங்கும் எமிரேட்ஸ் விமானப்போக்குவரத்துக் கம்பனி, அப்புறம், துபாய்த் துறைமுகங்கள் இப்படி சில விஷயங்கள், இஸ்லாமிய சகோதரத்துவ உதவிக்குக் கைமாறாகக் கொடுக்க வேண்டி வரலாம்! அவ்வளவுதான்!

அடிமைகள் பாடு எப்போதுமே திண்டாட்டம் தான்!


Sub Prime Crisis or Dubai debt crisis இரண்டுக்குமே ஒரு பொதுவான அம்சம் இருக்கிறது. கவனித்தீர்களா?

இரண்டிலுமே, நிலத்தின் விலையைத் தாறுமாறாக உயர்த்திக் கொண்டு, அதுவே தொழிலாகவும் வளர்ச்சியை அளவிடுகிற அளவுகோலாகவும் வைத்துக் கொண்டிருந்த போக்கே பொருளாதாரத்தைச் சரித்தது!.


என்ன தான் முட்டுக் கொடுத்தாலும், மணல் சூறாவளி கிளம்பாமல் விடாது போல் தான்  இருக்கிறது! இது இன்று  மாலை ஆறுமணி நிலவரம்.

இங்கேயும், நம் நாட்டில் தொழில் வளர்ச்சி, உற்பத்தித் திறன், அடிப்படைக் கட்டமைப்பு இவைகளின் பலன்களை ரியல் எஸ்டேட் துறை, சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் போக்கு ஆரோக்கியமானது அல்ல. துபாய்க் கனவு கெட்ட கனவாக இருந்தாலுமே கூட, இந்த ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டால் அது வளர்ச்சிக்கு உதவும் கருவி!


oooOooo


துபாய் வாங்கிய கடனைத் திருப்புவதில் நாணயம் தவறியிருக்கிறது என்றால், இங்கே வட கொரியாவில், (கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு) நாணய மதிப்பைக் குறைத்திருப்பது. பெரும் பீதியைக் கிளப்பியிருக்கிறது. ரஜனியைத் தலைகீழாகத் திருப்பி சொல்லுவது போல இப்போதிருக்கும் வொன் கரன்சி நூறுக்கு ஒன்று என்ற விகிதத்தில் மதிப்புக் குறைக்கப்பட்டிருக்கிறது.


நூறு கொடுத்தா ஒண்ணு! ஆயிரம் கொடுத்தாப் பத்து!

பணவீக்கத்தைக் குறைப்பது என்ற பெயரில் இந்தக் கேலிக் கூத்தை, கம்யூனிசம் பேசும் தோழர்களை விட வேறு யார் தான் சிரிக்காமல், சீரியசாகச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

"The currency reforms are part of(a) campaign to return to the North Korean version of Orthodox Socialism."

Rudiger Frank, North Korea analyst.

சாதாரண மக்கள் பீதியில் உறைந்து போயிருக்கிறார்கள். அரசின் இந்த முடிவு, அவர்களுடைய சேமிப்பை ஒன்றுமில்லாததாக ஆக்கி விட்டது என்று அதிருப்தி கிளம்பியிருக்கிறதுஒரு லட்சம் வொன் மதிப்பிற்கு மேல் வைத்திருந்தாள், வங்கியில் உடனடியாக டெபாசிட் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கிறது. அரசு வங்கிக்குப் போனால், போட்ட பணம் அவ்வளவு தான், திரும்ப வராது என்ற பயம் மக்களிடத்தில் இருக்கிறது. கரன்சியை மாற்றிக் கொள்ளக் கொடுத்திருக்கும் காலக் கெடுவிற்குள், மாற்ற முடிந்த அளவுக்கு சாமான்களை வாங்கிக் குவிப்பதும், இந்த விதிமுறைகள் , கட்டுப்பாடுகள் இல்லாத சீனத் தோழர்கள் வழியாக மாற்றிக் கொள்ளவும் ஆரம்பமாகி இருக்கிறது.

தென் கொரியாவுக்குத் தப்பி ஓடி, அங்கேயாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று ஓட முனைபவர்களைச் சுட்டுத் தள்ள ராணுவத்திற்கு உத்தரவும் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. என்னதான் நடக்கிறதாம்? இரும்புத்திரை போல மூங்கில் திரை நடப்பதை மறைத்துக் கொண்டிருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்திகள் கசிவதைத் தடுக்க முடியவில்லை.

சீனா மாதிரி, ஒரு எல்லைக்குட்பட்டு, வட கொரியச் சந்தைப் பொருளாதாரத்தைத் திறப்பதென்று 2002 இல் தான் முடிவு செய்து, திறந்து விட்டார்கள். இந்த சந்தைப் பொருளாதாரத்தில், மத்தியதர வர்க்கம் ஒன்று வலுவாக உருவாகி வந்ததை சகித்துக் கொள்ள முடியவில்லை. பழையபடியே, முழு அதிகாரத்தையும் அரசு தன்னிடமே வைத்துக் கொள்ளச் செய்யும் முயற்சியின் ஒரு படிதான்! இது. சந்தைப் பொருளாதாரத்தில் உருவான சேமிப்பை ஒழிப்பது தான்!
வைரமுத்து, கவிப்பேரரசாகக் கனவுகண்டு, இருப்பதையும் தொலைப்பதற்கு முன்னால், ஒரு நல்ல கவிஞனாக இருந்த போது எழுதிய வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வருகிறதுசுதந்திரத்தைப் பற்றி அப்படி, அப்போது எழுதினார்.
அவன் --
பட்டு வேட்டி பற்றிய கனாவில் இருந்தான்!
கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது
!


North Korean version of Orthodox Socialism!  
அப்படீன்னா என்னங்கண்ணா? வடகொரியத் தலைவர் சிம்பாலிக்கா சொல்றார் பாருங்க!
வட கொரியத் தலைவர் கிம் ஜோங்


அதுதான் போல!
oooOooo

13 comments:

  1. இதை தானே நானும் சொன்னேன்!

    ரியல் எஸ்டேட் விழுந்தது, அமெரிக்காவும் விழுந்தது! முதல் அடியே அது தானே

    ReplyDelete
  2. வால்ஸ்!
    அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் விழுந்தது சரிவுக்குக் காரணம் அல்ல. கடன் வாங்குபவர், கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு வருமானம் உள்ளவரா இல்லையா என்பதைப் பார்க்காமல், சகட்டுமேனிக்கு கடன்களை அள்ளியிறைத்துக் கொண்டிருந்தார்கள். Subprime கொஞ்சம் விரிவாகப் பேச வேண்டிய விஷயம்.பேசுவோம்!

    ReplyDelete
  3. அருமையான அலசல்.

    பகிர்வுக்கு நன்றி வால்

    ReplyDelete
  4. பொருளாதாரம் பற்றிய தங்கள் தகவல்கள் வியக்க, பயப்பட வைக்கிறது

    ReplyDelete
  5. @திரு.நவாஸுதீன்!

    நான் அவர் (வால்) அல்ல! அலசினதும் அவர் அல்ல!
    முதல் கமென்ட் வால் பையனுடையது என்பதால், எல்லாமே வால் மயமாகத் தெரிகிறது போல:-))

    @திரு.கோவி.கண்ணன்!
    தகவல்கள் என்னுடையவை அல்ல! இணையத்தில் தேடக் கிடைத்தவைகளைத் தொகுத்ததும், ஒரு மையக் கருத்தை முன்வைத்தது மட்டுமே என்னுடைய பணி.

    ReplyDelete
  6. கிருஷ்ணமூர்த்தி said...
    @திரு.நவாஸுதீன்!

    நான் அவர் (வால்) அல்ல! அலசினதும் அவர் அல்ல!
    முதல் கமென்ட் வால் பையனுடையது என்பதால், எல்லாமே வால் மயமாகத் தெரிகிறது போல:-))

    நண்பா

    அருமையான அலசல்னு சொன்னது உங்களுக்கு

    வாலுக்கு நன்றி சொன்னதுக்கு காரணம் இந்த (அருமையான) பதிவை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு.

    குழப்பம் தீர்ந்திருக்குமென்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. குழம்புகிற அல்லது குழப்புகிற இடதுசாரித்தனத்தைக் கடந்து வந்து வெகு நாட்களாகி விட்டபடியால், எனக்குக் குழப்பம் எதுவுமில்லை! இருந்தாலும், மறுபடி திரும்பவந்து பின்னூட்டத்தில் தெளிவுபடுத்திக் கொண்டதற்கு நன்றி!

    ReplyDelete
  8. //எனக்குக் குழப்பம் எதுவுமில்லை! //

    என்கிற பட்சத்தில்

    எனக்கு கொடுத்த முதல் பதில் ஏன் அப்படி? குழப்புறீங்களே பாஸ்(சும்மாதான் கேட்டேன், நத்திங் சீரியஸ்)

    ReplyDelete
  9. /அருமையான அலசல்.
    பகிர்வுக்கு நன்றி வால்/

    இப்படி மொட்டையா இருந்தா, மொதல் வரி பதிவருக்கு,
    ரெண்டாம் வரி பகிர்ந்தவருக்குன்னா தெரியும்?
    இப்படிக் கூட அர்த்தப் படுத்திக் கொள்ளலாம் என்று ரெண்டாம் தடவை வந்து சொன்னப்பதானே தெரிஞ்சது! அதைத்தானே, திரும்பவந்து பின்னூட்டத்தில் தெளிவுபடுத்திக் கொண்டதற்கு நன்றி எல்லாம் சொன்னேன்!

    குழப்பமில்லைன்னு சொன்னது, நான் அலட்டிக்கறதில்லை என்பதைத் தான்!

    மனவிலாசம் இன்னும் கொஞ்சம் தெளிவா இருந்திருக்கலாமோ :-))

    ReplyDelete
  10. korea is not at all considered when we count world economy or for nay database.

    That is very poor and pathetic under developed country.

    ReplyDelete
  11. வட கொரியா, ஏழைநாடு, பொருளாதாரத்தில் ஒன்றுமே இல்லை என்பது வேறு. அரசே வன்முறையைத் தூண்டுகிற ரவுடி ராஜ்ஜியமாக இருப்பது வேறு! கிம்ஜோங் இல் தான் அங்கே எல்லாம்! ஆயுட்காலத் தலைவர்! ஜனங்களுடைய உயிர், உடைமை, கலாசாரம் இவற்றிற்கெல்லாம் அரசு பொறுப்பேற்றுக் கொள்ளாது ஆனால், கிம் சாங் இல் புகழ்பாடும், "நீயில்லாமல் இந்தத் தாய் நாடில்லை" ராணுவ இசைக்குழு உருவாக்கிய இந்தத் துதிப்பாடல் தான் தேசத்தில் 'விரும்பிக் கேட்கப்படும்' பாடல்!

    அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டு, ஒரு கிறுக்கன் கையில் சிக்கித் தவிக்கிற இந்தப் பிரதேசம், எப்போது என்ன செய்யும் என்று தெரியாமல் இருப்பது, உலக அமைதிக்குக் கீழையத் திசையில் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி! இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசியின் கேணத்தனங்களை சினிமாவாகப் பார்த்தபோது, சிரிக்க முடிந்தது. இம்சை அரசன் கிம்ஜோங் இல் அடித்துக் கொண்டிருக்கும் கூத்துக்களைக் கண்டு, எப்போது என்ன நடக்குமோ என்று தென் கொரியாவும், ஜப்பானும் அலறிக் கொண்டிருக்கின்றன. ஜனங்கள் அழுவதற்குக் கூடத் திராணியில்லாமல் இருக்கிறார்கள், இதைச் சுருக்கமாகச் சொல்வதற்கே, கரன்சி மாற்றும் கூத்து பற்றிய சிறுபதிவு!

    இணையத்தில் நிறைய விவரங்கள் கிடைக்கின்றன. கொரியன் ஹெரால்ட் என்ற தென் கொரியப் பத்திரிக்கை. ஆங்கிலத்தில் வெளி வருவது தான், அந்தப் பகுதி நடப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள உதவும். கொஞ்சம் பார்த்து விட்டு வாருங்கள், பேசுவோம்!

    ReplyDelete
  12. இன்னும் என்ன என்ன நடக்க இருக்கிறதோ?

    ReplyDelete
  13. இன்னும்என்ன நடக்கப்போகிறதோ?

    இது வரை நடந்ததை, இப்போது நடப்பதையெல்லாம் தாங்கிக் கொண்டு பழகிவிட்டோம்! நடக்கப் போவதை மட்டும் தாங்கிக் கொள்ள மாட்டோமா என்ன:-))

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!