Showing posts with label டுபாக்கூர். Show all posts
Showing posts with label டுபாக்கூர். Show all posts

காந்தியா காண்டியா? மோடி வெர்சஸ் WHO?

இங்கே ஊடகங்கள் தினசரி கிளப்புகிற அக்கப்போரில் யாரேனும் தவறிப்போய்  உண்மையைச் சொன்னால் கூட சர்ச்சையாகி விடுவதைக் கவனிக்க முடிகிறதா? கர்நாடகாவிலிருந்து மத்திய அமைச்சரவையில் MoS ஆக இருக்கும் அனந்தகுமார் ஹெக்டே இரண்டு நாள் முன்பு பேசியதை, சர்ச்சையாக்கியிருக்கிறார்கள்.

இந்திரா புருசன் Feroz Jehangir Ghandy 

: Union Minister Ananth Hegde says on Rahul Gandhi, "They want proof of surgical strikes even when whole world acknowledged it. This Muslim who calls himself a 'janeudhari Hindu', son of a Muslim father & a Christian mother, does he have proof that he is a Hindu"? (10.3.19)
0:51
109K views
4:46 PM - 11 Mar 2019

தன்னை காஷ்மீரி கவுல் பிராமணன் என்று ராவுல் பாபா சொல்லிக் கொள்வதற்கு யாராவது ஆதாரம் கேட்டார்களா? பாட்டி இந்திரா இஸ்லாத்துக்கு மாறி பெரோஸ் ஜஹாங்கீர் காண்டி (ghandy)  என்ற பார்சி முஸ்லிமைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதில் பிறந்த ராஜீவ் காண்டி, பிறப்பால் ஒரு முஸ்லீம், அவர் திருமணம் செய்துகொண்டதோ ஒரு இத்தாலிய கிறித்தவப் பெண்ணை என்கிறபோது, ராவுல் பாபா மட்டும் எப்படி ஓர் காஷ்மீரி கவுல் பிராமணனாக இருக்க முடியும்? காண்டி என்பதை காந்தி என்று வைத்துக் கொண்டதில் இவர்கள் டுபாக்கூர் காந்திகளே தவிர ஒரிஜினல் மகாத்மா காந்திக்கு எந்தவகையிலும், சம்பந்தம் இல்லாதவர்கள்  என்பதைச் சொன்னால் அது தவறா? சர்ச்சையா?

 

பேசாப்பொருள் பேசு! இது காவேரி நியூஸ் சேனலில் நேற்றைய விவாதம்! அனாவசியக் கூச்சல்களோ, நெறியாளர் விவாதத்தின் நடுவே அடிக்கடி புகுந்து மறிப்பதோ இல்லாத நிகழ்ச்சி! அதிசயம்தான்!ஒரு உருப்படியான விஷயத்தை விவாதிக்கிறார்கள். என்றாலும்     நாடாளுமன்றத் தேர்தல்களை ஒவ்வொரு மாநில மக்களும் அணுகும் விதமே வேறு! நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் தானென்றாலும் 29 விதமான முடிவுகளைச் சொல்வதாகவே இருக்கும் என எங்கோ படித்த ஒரு கமெண்ட் நினைவுக்கு வருகிறது.


தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கப்போகும் இளைஞர்களுக்கு மாரிதாஸ் எந்த அடிப்படையில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு சரியான முறையில் வழிகாட்டுகிறார். புதிய வாக்காளர்களுக்கு மட்டுமே அல்லாமல், ஏற்கெனெவே வாக்களித்து ஏமாந்தவர்களுக்குமே பயன்படக்கூடிய காணொளி. 


முகநூலில் நண்பர் சரவணகுமார் அவர்களின் பதிவு என்று ராஜசங்கர் பகிரந்திருக்கிறார் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு..
நண்பர்களே ...நேற்று இந்த பொள்ளாச்சி சம்பவம் குறித்து நக்கீரன் வலைத்தளத்தில் நிலையான வீடியோக்களை அடுத்து சமூகவலைதளங்களில் எழுந்த கடுமையான எதிர்வினைகளை எல்லோரும் எதிரொலித்துக் கொண்டிருந்த போது என்னைப் போன்ற ஒரு சிலர் மட்டும், நக்கீரனை நாங்கள் நம்ப தயாராக இல்லை ...இந்த விஷயம் அரசியலாக்கப் படுகிறது என்று எழுதி வந்தோம் ...
இதற்கு காரணம், இந்தப் பிரச்சனை உங்களுக்கு புதிதாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு இது கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே அறிமுகமாகி விட்ட பிரச்சினை... சொல்லப்போனால் பொள்ளாச்சிக்காரர்கள் இப்போது இதைப் பற்றி பேசுவதேயில்லை...
காரணம் இந்த பிரச்சனை மூன்று வாரங்களுக்கு முன்பாகவே பரபரப்பாக பேசப்பட்டு , சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யப்பட்டு , அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன...இவ்வளவு நாள் கழித்து இப்போது ஏன் பிரச்சனை எழுகிறது என்றால் காரணம் திமுக தான் ...
இந்த பிரச்சனையில் எப்படியாவது அதிமுகவை உள்ளே இழுத்து விட்டு கொங்கு மண்டலத்தில் தற்போது அதிமுகவுக்கு இருக்கும் இமேஜை அடித்து நொறுக்க வேண்டும் என்ற ஏற்பாட்டோடு இந்த வேலைகள் செய்யப்படுகின்றன ....இதை முன்னின்று நடத்துபவன் ஊடக வேசி நக்கீரன் கோபால் ....இந்த மாதிரி மொள்ளமாரி வேலைகளை செய்வதில் அவனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது ....அவனுடைய யோக்கியதை உலகம் அறிந்தது ....
சுதந்திர பாரதத்தில் இதுவரை எத்தனையோ அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.. ஆனால் மேம்பால ஊழல் வழக்கில் அதிமுக ஆட்சி காலத்தின் போது கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அதை திமுக தன்னுடைய ஊடக பலத்தின் மூலம் எவ்வளவு பெரிய பிரச்சனை ஆக்கியது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்....
நித்தியானந்தா விவகாரத்தில் இதே நக்கீரன்கோபால் எப்படி நடந்து கொண்டான் என்பது உலகத்துக்கே தெரியும் ...அப்படி இருக்க அவன் ஒரு வீடியோ வெளியிடுகிறான் என்றால் , அதன் உண்மைத்தன்மையை கொஞ்சம்கூட சந்தேகிக்காமல் அதை அப்படியே நம்பி எதிரொலிப்பது எந்த வகையில் நியாயம் நண்பர்களே?
250 பெண்கள் என்கிறார்கள் 1100 வீடியோ என்கிறார்கள் இதெல்லாம் சாத்தியமா என்று கூட யோசிக்க வேண்டாமா ? பொள்ளாச்சி ஒரு சிறு நகரம் ...சொல்லப்போனால் அது ஒரு வளர்ந்த கிராமம் அவ்வளவுதான்... அங்கே இருப்பவர்கள் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் அந்த சிறு நகரத்தில் இப்படி 1200 வீடியோவை எடுத்துக்கொண்டு 250 பெண்களை காதலித்து ஏமாற்றுவதெல்லாம் சாத்தியமே இல்லை ....
சரி அப்படியே இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தானாக முன் வந்து புகார் கொடுக்காமல் அரசு என்ன செய்ய முடியும் ? இதோ ஒரு பெண் புகார் கொடுத்திருக்கிறார் ...அதன் அடிப்படையில் போலீஸ் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்கிறது ...வழக்கு நடக்க இருக்கிறது...
இப்போது போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் யாரை எதிர்த்து போராட்டம்? அந்த பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் உள்ளவர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கிறார்களா? இல்லை யாராவது தப்பி விட்டார்களா? அப்படி இருக்க எதை நோக்கி இந்த போராட்டம் ?
இதைத்தான் பாதிக்கப்பட்ட பெண்ணும் , அவருடைய அண்ணன் கேட்கிறார்கள்... இதோ இப்போது அந்தப் பெண்ணுடைய வழக்கறிஞரும், அந்தப் பெண்ணுக்கு முதன்முதலாக உதவி செய்த மலுமிச்சம்பட்டி பழனிச்சாமியும் கேட்கிறார்கள் ...இது இப்போது ஊடகங்கள் மூலமாக உறுதியாகிவிட்டது இதைத்தான் நான் நேற்று எழுதினேன் எந்த ஒரு விஷயம் வந்தாலும் அதை சொல்பவர்கள் யார் என்பதை பாருங்கள்... அதன் பிறகு உங்கள் கருத்தை பதிவுசெய்யுங்கள்... அவசரப்படாதீர்கள்....
தேர்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படுகிறது .திங்கட்கிழமை நக்கீரன் இந்த வீடியோவை வெளியிடுகிறது .உடனே ஸ்டாலின் கண்டன அறிக்கை விடுகிறார் ..இதோ இன்று கனிமொழி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் ...இதற்குள் ஏதோ ஒரு சதி இருப்பது உங்களுக்கு புரியவில்லையா நண்பர்களே?
இது முழுக்க முழுக்க திமுகவால் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம்... கைது செய்யப்பட்ட அந்த நால்வரும் குற்றவாளிகள் ...அவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை உடனடியாக தூக்கில் தொங்க விட்டாலும் சரி .. அல்லது கோவையில் நடந்தது போல என்கவுண்டர் செய்யப்பட்டாலும் நான் அதை முழுமனதாக வரவேற்பேன்...
ஆனால் , இதையே காரணமாக வைத்து திமுக அரசியல் ஆதாயம் தேட முற்படுவதை ஏற்கவே முடியாது ..காரணம் திமுக கொங்கு மண்டலத்தின் மீது அந்த அளவு வெறுப்பில் இருக்கிறது .ஏதாவது செய்து மீண்டும் எங்கு காலூன்றி விட முடியாதா என்று துடிக்கிறது
திமுகவை சேர்ந்த, 200 ரூபாய்க்கு பதிவிடும் யுவகிருஷ்ணா டான் அசோக் போன்ற அல்லக்கைகள் கடந்த சில வருடங்களாகவே கொங்கு மண்டலத்தை குறித்து விஷத்தைக் கக்கி வருவதை கவனித்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும் ..அவர்களைப் பொறுத்தவரை ஒன்று இந்த விஷயத்தை ஒரு கருவியாக வைத்து அரசியல் ஆதாயம் பெற வேண்டும் அதாவது வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் . அல்லது குறைந்தபட்சம் கொங்குமண்டல மக்களை அசிங்கப்படுத்த வேண்டும் இதுதான் அவர்களுடைய திட்டம் ....
250 பெண்கள் அதுவும் கல்லூரிப் பெண்கள் என்கிறார்களே இது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்? பொள்ளாச்சி போன்ற ஒரு சிறு நகரத்தில் படிக்கும் கல்லூரி பெண்களை பற்றி இப்படி அவதூறு பரப்பினால் நாளை அந்த பகுதியில் பெண் எடுக்க யாரும் யோசிப்பார்களா மாட்டார்களா? இது அவர்களுக்கு தெரியாதா ? 250 பெண்கள் , 1100 வீடியோக்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?
அப்படி அவர்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் அதை காவல் துறையிடம் கொடுக்கலாம் .அல்லது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு திரும்பத்திரும்ப மேற்படி குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கிறது நடவடிக்கை எடுக்க மாட்டேன் மாட்டேன் என்கிறது என்று மீடியாவில் பிரச்சாரம் செய்வது எந்த வகையில் நியாயம்?
திமுகவின் நோக்கம் இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் அடைவது தான்.. அதைப் புரிந்து கொள்ளுங்கள்.தங்களின் ஊடக பலத்தைக் கொண்டு அவர்கள் செய்யும் பொய் பிரச்சாரத்திற்கு பலியாகி விடாதீர்கள்....
    

ஊடகப்பொய்களில் ஏமாந்து திசைமாறிவிடாமல் இருக்கப் பழகுவோம்! மெய்ப்பொருள் காண்பதறிவு!  

           

மண்டேன்னா ஒண்ணே போதும்! சசி தரூர் பாகம் 2

 
 சுனந்தா ஒரு கிறிஸ்த்மஸ் பார்டியில்  ..!

நியாயமாக இதற்கு சுனந்தா புஷ்கர் என்று தான் தலைப்புக்  கொடுத்திருக்க வேண்டும்! ஆனால் தலைக்கே தலைப்புக் கொடுத்த விஷயம் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று ஊகிக்க முடியாததால், இது சசி தரூர் பாகம் இரண்டு!
புனிதப் பசுக்களோடு ஒற்றுமையாக..! இப்போது தான் அர்த்தம் என்னவென்று புரிகிறது!
 
ஐபிஎல் கொச்சி அணியை உருவாக்குவதற்கு சசிதரூர் ரொம்பவுமே மெனக்கெட்டார்! கொச்சி அணியின் mentor என்று அவரை சொல்கிறார்கள்! ஏன் என்று இப்போது வெளி வரும் செய்திகளைப் பார்த்த பிறகு தான் தெரிகிறது. 

கொச்சி ஐபிஎல் அணி பிரான்சைஸ் பெறுவதற்கு 1533 கோடி ரூபாய்கள் கொட்டப் பட்டிருக்கிறது!  என்றைக்குமில்லாத திருநாளாக ட்விட்டர் பக்கம் போய்ப் பார்த்தபோது, லலித் மோடிக்கு  கொச்சி ஐபில் அணி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது என்ற தகவலை சற்று நேரத்துக்கு முன் தான் படித்துத் தெரிந்து கொண்டேன்!

ஏனாம்?

கொச்சி ஐபிஎல் அணியின் உரிமையாளர் விவரத்தை லலித் மோடி வெளியிட்டு விட்டாராம்! கொச்சி ஐபிஎல் அணி பிரான்சைஸ் எடுத்ததில்   இருபத்தைந்து சதவீத உரிமையை வைத்திருக்கும் Rendezvous என்ற நிறுவனத்தில் சுனந்தா புஷ்கர் என்றகாஷ்மீரிப் பெண்மணிக்குப் பதினெட்டு சதவீதப் பங்குகள் இருக்கிறது.

இருந்து விட்டுப் போகட்டுமே என்கிறீர்களா?

இந்த சுனந்தா புஷ்கர் என்ற பெண்மணியைப் பற்றி எந்த விவரமும் தோண்டித் துருவி விசாரிக்க வேண்டாம் என்று ஒரு மத்திய அமைச்சரிடம் இருந்து  ஐபிஎல் நிறுவனத்தை நடத்தும் அதிகாரிக்குத் தொலைபேசியில் சொல்லப் பட்டிருக்கிறது!  அப்புறம் இந்தப் பெண்மணி மத்திய அமைச்சர் சசிதரூருக்கு "வேணுங்கப் பட்டவங்க" என்றும் சொல்லப் பட்டதாம்!





“I was told not to get into who owns Rendezvous, specially Sunanda Pushkar. Why?” wondered IPL chairman Lalit Modi on Twitter. The request has been minuted in the records of the meeting. 

சென்ற சனிக்கிழமை பெங்களூரில், பிரான்சைஸ் ஒப்பந்தம் கையெழுத்தான தருணத்தில் தான் இத்தனையும் நடந்திருப்பதாக இந்த செய்தி கொஞ்சம் விவரமாகவே சொல்கிறது. சுனந்தா புஷ்கர் என்ற இந்தப் பெண்மணி, ஏற்கெனெவே திருமணமானவர், அவரது கணவர் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தை நடத்துகிறார். அழகுக் கலையில் பட்டயப் படிப்பை முடித்திருக்கும் சுனந்தா, சொந்தமாக ஸ்பா- ஒரு அழகு நிலையம் நடத்தி வருவதாகவும் துபாயில் இருந்ததாகவும் இந்த செய்தி மேலும் சொல்கிறது. இந்தப் பெண்மணியை சசிதரூர், மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக, செய்திகள் கசிந்து கொண்டிருப்பதை நேற்றுத் தான் பார்த்தோம் இல்லையா!

Media reports have said that Tharoor proposed to marry Sunanda Pushkar, a Kashmiri girl. Trained as a beautician, she runs a spa and has lived in Dubai.

இந்தச் செய்தி  Rendezvous நிறுவனத்தின் கூட்டாளிகள் யார் யார், பிரான்சைஸ் உரிமையாளர்கள் யார்   என்பதை லலித் மோடி டிவிட்டரில் சொன்னதை இப்படிப் பட்டியல் இடுகிறது!

Sunanda Pushkar, a friend of union minister Sashi Tharoor holds 18% free equity in Rendezvous Sport Limited, Narendra Modi Tweeted “I was told not to get into who owns Rendezvous, specially Sunanda Pushkar. Why?” IPL chairman Lalit Modi had tweeted on Twitter reports DNA

Lalit modi has named the stake holders in Kerala IPL team.

The complete list of partners of IPL Kerala team as per reports are Rendezvous (25% free), Rendezvous (1% purchased), Anchor (27%), Parinee (26%), Film Waves (12%), Anand Shyam (8%) and Vivek Venugopal (1%). Rendezvous free equity is held by Kisan, Shailender and Pushpa Gaikwad, Sunanda Pushkar, Puja Gulathi, Jayant Kotalwar, Vishnu Prasad, Sundip Agarwal.


 

வாயைப் பிளந்து நல்லா வேடிக்கை பாருங்க! கட்டியிருக்கும் துணியும் கூடக்  காணாமப் போகும்!
 
கிரிக்கெட் என்பது இருபத்திரண்டு முட்டாள்கள் விளையாடுவதை இருபத்திரண்டாயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்ப்பது என்பதாகச் சொல்வார்! இங்கே கிரிக்கெட் என்பது சூதாடிகளின் சொர்கமாக இருப்பது நாளுக்கு நாள் மெருகேறி வருவதையே இந்த மாதிரிச் செய்திகள் ஊர்ஜிதம் செய்கின்றன!

கிரிக்கெட் சூதாடிகளுக்குப் பின்னால், துபாயும் இருப்பது தெரிந்தது தானே!


இந்தச் செய்தியின் தற்போதைய நிலை! அப்டேட்! 13/04/2010 12.15PM

இங்கே சசி தரூருக்குக் கிளம்பியிருக்கும் புதுத் தலைவலியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்!

சசி தரூர், எல்லா அரசியல்வாதிகளையும் போல, தன் மீது சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களையும் மறுத்து இன்றைக்கு ஒரு அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.  
இங்கே பார்க்கலாம்!

இதிலும் கூட முக்கியமாக இரண்டு விஷயங்கள், அந்த அறிக்கையின் வார்த்தைகளுக்கு நடுவே தெளிவாக வெளிப்படுகிறது.


Rendezvous Sports World என்ற அமைப்பு, ஐபிஎல் கொச்சி அணியின் பிரான்சைஸ் உரிமையாளர்களில் ஒன்று! 1533 கோடி ரூபாய் முதலீடு செய்து பிரான்சைஸ் உரிமைய வாங்கியவர்களில் இருபத்தைந்து சதவீதப் பங்கை வைத்திருக்கும் ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனம்! அதில் பதினெட்டு சதவீதம் பங்கு, சுனந்தாவுக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டதாம்!

ஒன்று சுனந்தா புஷ்கருடனான உறவு குறித்து. அதைத் தன் சொந்த விஷயம் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார். இரண்டு தனி நபர்களுக்கிடையேயான உறவு சொந்த விஷயம் தான்! யாரும் மறுக்கவில்லை. அதே நேரம், அந்த நபர்களில் ஒருவர் மத்திய அமைச்சராகவும், இன்னொருவர் ஒரு வணிக பேரத்தில் சம்பந்தப் பட்டவராகவும் இருக்கும்போது, அமைச்சர் அந்த பேரத்தில் காட்டிய அதீத அக்கறை! அதைத் தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு, பொது வாழ்வில் இருக்கும் ஒருவருக்குத் தார்மீகமான கடமையாகவும் இருக்கிறது.

இரண்டாவதாக, லலித் மோடியுடன் சனிக்கிழமை பேசியதை அமைச்சரால் மறுக்க முடியவில்லை. அதற்கு வேறு மாதிரியான சப்பைக் கட்டு கட்ட முயற்சித்திருக்கிறார் என்றே கருத இடம் இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இங்கே இந்திய அரசின் ராணுவ ரகசியங்கள் சீன ஹாக்கர்களால் களவாடப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி வெளி நாட்டு நிறுவனங்களால் வெளியிடப்பட்டு இங்கேயும் செய்திகளாக வந்தது தான். 
கொச்சி ஐபிஎல் அணி பிரான்சைஸ் பெறுவதற்கு  1533 கோடி ரூபாய் கொடுக்கப் பட்டிருக்கிறது என்ற நிலையில், அதன் உரிமையாளர்கள் யார் எவர் என்று தகவலை வெளியிட்டதற்காக, லலித் மோடிக்கு வக்கீல் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிறதே, அது ஏன்?

ராணுவ ரகசியத்தை விட, ஒரு வியாபாரத்தின் உரிமையாளர்  பற்றிய தகவல் அவ்வளவு பெரிய ரகசியமா?

இந்த விவகாரத்தை டிவிட்டரில் லலித் மோடி சொன்னபோது அவருக்கு அங்கே வந்து பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ஒருத்தர், இதே மாதிரி, ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்கள் யார் எவர் என்பதையும் வெளியிடுவாரா என்று கேட்டிருக்கிறாரே, அதுவும் ஏன்?

கிரிக்கெட் சூதாடிகளின் கைகளில் சிக்கி இருக்கிறதென்பதற்கு இதை விட வேறென்ன prima facie வேண்டும்?





 

கோழிமுட்டைப் பொருளாதாரம்! ஒரு நர்சரிப் பாடம் (ல்)



 லூயிஸ் கரால் என்றொரு எழுத்தாளர்!  அற்புத உலகில் ஆலிஸ், கண்ணாடி வழியே என்ற இரு கதைகளை எழுதினார். மேலோட்டமாக, சிறுவர்களுக்கான கதை மாதிரி இருந்தாலும், கொஞ்சம் அங்கங்கே, அன்றைய அறிவியல் ஆராய்ச்சியை, அரசியலை நக்கலடிக்கிற மாதிரி, கதை போகும்.

ஆலிஸ் என்ற ஒரு சிறுமி, ஒரு பூனை ரொம்ப கம்பீரமாக உடையணிந்து தன்னுடைய கோட்டுப் பையில் இருந்து கடிகாரத்தை எடுத்து, மணி பார்ப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு,  அந்தப் பூனையைப் பின் தொடர்கிறாள். ஒரு விசித்திரமான உலகில், விசித்திரமான அனுபவங்களைச் சந்திக்கிறாள்.

அதிலே கோழிமுட்டை மாதிரி ஒரு ஆசாமி! ஹம்ப்டி டம்ப்டி என்று பெயர்! ஒரு சுவற்றின் மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள்! ஐயோ, கீழே விழுந்துவிடப் போகிறீர்கள் என்று ஆலிஸ் சொல்லும் போது, அந்த ஆசாமி அப்படியெல்லாம் ஆகாது, அப்படியே ஆனாலும் ராஜா தன்னுடைய குதிரைகள், ஆட்கள் எல்லோரையும் அனுப்பி உதவுவதாக வாக்களித்திருப்பதாகச் சொல்லுகிறார். பேசிக் கொண்டிருக்கும்போதே ஹப்டிடம்ப்டி தலைகுப்புற விழுகிறார்! அரசனுடைய குதிரைகளும், படைவீரர்களும் ஓடிவந்து ஹம்ப்டி தம்பதியைக் காப்பாற்ற முனைகிறார்கள்! என்ன ஆகிறது என்பதைச் சிறு குழந்தைகளிடம் கேட்டால் கூட, ஒரு பாட்டாகப் பாடிப் பதில் சொல்லி விடுவார்கள்!

என்னவென்று தெரியவில்லையா? இந்த வீடியோவைப் பாருங்கள்!



இந்த மாதிரித் தான், வங்கி, நிதித்துறைகளும்! மிகவும் வலிமையோடு இருப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள்! அப்புறம் குப்புற விழுந்து எழ முடியாமல் தவிக்கும்போது தான்,. அவர்களுடைய வலிமை,வாய்ச் சவடால் எல்லாம் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதே புரியும்.

சில நாட்களுக்கு முன்னால் துபாய் உலகம் சந்தித்த சரிவைத் தொட்டு  எழுதியிருந்தேன். உலகத்திலேயே அதி உயரமான கட்டடம் திறக்கப் பட்டது மாதிரி செய்திகள் துபாய் பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டதாகத் தோற்றம் அளித்தாலும், உண்மையில் நிலவரம் இன்னும் மோசமாக இருக்கிறது என்று தான் பொருளாதார, நிதித் துறையை ஆராய்ந்துவரும் செய்திகள் சொல்கின்றன.


818 மீட்டர் உயரமான கட்டடத்தைக் கடந்த நான்காம் தேதி திறந்து வைத்து, துபாய் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதைக் காட்டிக் கொண்டதாக இருந்தாலும், துபாய் அரசின் நிதி நிர்வாகத் திறமையைப் பற்றி மட்டுமல்ல,  தாக்குப் பிடித்து மீண்டு வருவதைப் பற்றிக் கூட, மிக மோசமான மதிப்பீடுகள் தான் இருக்கின்றன. துபாய் உலகத்தின் கடனுக்கு, அது அரசு நிறுவனமாக இருந்த போதிலுமே கூட, அரசு பொறுப்பேற்றுக் கொள்ளாது என்று அறிவித்தவுடனேயே, துபாய் அரசின் கடன் பத்திரங்களோடு, அதன் பொருளாதாரத்தைப்  பற்றிய மதிப்புமே குப்பையாகிப் போனது தான் மிச்சம். எதிர்பார்த்தபடியே, அபுதாபி, பத்து பில்லியன் டாலர்களைக் கடனுதவியாக அறிவித்திருக்கிறது. அப்படி அறிவிக்கப் பட்ட பிறக்குமே கூட, துபாய் உலகத்தின் கடன்கள் முதலில் அறுபத்தொன்பது அப்புறம்  எண்பது பில்லியன் டாலர்கள் என்று சொல்லப் பட்டது, இப்போது நூறு பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இன்னமும் உண்மையான விவரங்கள், வெளிப்படையான கணக்கிடும் முறையில் வெளிவரவில்லை.

துபாயில் மட்டுமல்ல, சவுதியிலுமே கூட  சாத் குழுமம் மற்றும் அஹமத் ஹமாத் அல்கோசைபி   சகோதரர்கள்  என்ற இரண்டு மிகப் பெரிய குடும்ப  நிறுவனங்கள், போன ஆகஸ்ட் மாதம் பல பில்லியன் டாலர்கள் கடனைத் திருப்புவதில் தவறிய செய்தியோடு சேர்த்துப் பார்க்கும்போது, முக்கியமாக  நிறைய நிழலான விஷயங்கள் இருப்பது, கணக்கிடும் முறையோ, வங்கி அல்லது பொருளாதாரத்தைப் பற்றிக் கொஞ்சம் கூடத் தெரியாதவர்களும் புரிந்துகொள்ளக் கூடியது தான்!

அமெரிக்க வங்கிகளைப் பற்றி பேசும்போது, பேராசையால், ஆதாயத்தை மட்டுமே குறியாக வைத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் காற்றில் பறக்க விடும்  அடிப்படைத் தவறே மீண்டும் மீண்டும் செய்யப் படுவதும், அதன் விளைவுகளை, அமெரிக்கா மட்டுமல்லாமல், உலக நாடுகளும் சேர்ந்து  அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையைப் பற்றியும் முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.

வரிகளில் இருந்து தப்புவிக்கும் சுவர்க்கங்கள்! கொள்ளையடிக்கப் பட்ட, சுரண்டப்பட்ட, அடிமை உழைப்பில் உருவான செல்வங்களைப் பதுக்க, பாதுகாக்க, இந்த மாதிரி வங்கி, நிதித்துறைப் பிணம் தின்னிக் கழுகுகளால் உருவாக்கப் படுபவை!

ஒரு தனி எமிரேட்டாக, எண்ணெய் ஏற்றுமதி வருமானம் மிகக் குறைவுதான், அப்படியிருந்தும் முப்பத்தெட்டே ஆண்டுகளில் துபாய் எப்படி இத்தனை பெரிய வர்த்தக மையமாக, இவ்வளவு உயரமாக வளர முடிந்தது?

ஐந்துலட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் ஆசிய நாடுகளில் இருந்து அடிமைச் சேவகம் செய்யத் தொழிலாளர்கள், உல்லாசம் தருவதற்கு உஸ்பெஸ்கிஸ்தான் அழகிகள், வரியில்லாத சந்தை, கேளிக்கை மையங்கள் என்று, மூலதனம் துபாய் என்ற சின்னஞ்சிறிய இடத்தில் குவிந்ததற்கு, வரி ஏய்ப்புச் செய்பவர்களின் சொர்க்க பூமியாக மட்டுமல்ல, தாவூத் இப்ராஹீம் மாதிரிக் குற்றங்களில் கோடிகள் ஈட்டும் புள்ளிகளுக்கும் ரத்தினக் கம்பளம் விரிக்கப் பட்டது தான்.

வரலாற்றில் ரோம சாம்ராஜ்யத்தை அடிமைகள் சாம்ராஜ்யம் என்று சொல்வதுண்டு. அதே மாதிரி, தாங்கள் சுகவாசிகளாக இருந்து கொண்டு இன்னுமொரு  அடிமை சாம்ராஜ்யத்தை உருவாக்க, சமீப கால வரலாற்றில், அவ்வப்போது முயற்சிகள் நடப்பதும், தங்களுடைய சுகவாசத்தாலேயே சரிந்து விழுவதும், துபாயை வைத்து, வளைகுடா நாடுகளில் ஆரம்பித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பெட்ரோல் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு, அகலக்கால் விரிக்கிற பொருளாதாரம் எத்தனை நாள் நிற்கும்? டாலர் மதிப்பு ஏறி இறங்குவதில், வாரமொன்றுக்கு சராசரியாக இருநூற்றைம்பது மில்லியன் டாலர்களை அமெரிக்கப் பொருளாதாரம் ஆதாயமாக, (அதாவது கடன் குறைவதில்) பெறுவதாக, ஒரு புள்ளி விவரம்  சொல்கிறது.

துபாய்ப் பொருளாதாரம், நீர்க்குமிழி மாதிரிப் பெரிதாக இப்போது தோன்றுவது, இருப்பது உண்மையே ஆனாலும், வெடித்து ஒன்றுமே இல்லாமல் போவதற்கான நேரம் எப்போது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிகழலாம் எண்பது தான் கசப்பானஉண்மை.

பேராசை கொண்டவனும் கெட்டான்! கெட்டவனைத் தொட்டவனும் கேட்டான் என்ற கதையாக, இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, பெட்ரோ-டாலர்கள் என்று சொல்லப் படும், கச்சா எண்ணெய்  விற்பது, விற்றதை முதலீடு செய்வது எல்லாமே அமெரிக்க டாலர்களில் தான் என்ற நிலையை உண்டாக்கிக் கொண்டது. புலிவாலைப் பிடித்த நாயர் கதையாக, வாலை விடமுடியாமல் நாயரும், நாயரைக் காலி செய்ய முடியாமல் புலியும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவதாக, இன்னொருத்தரும் ஆட்டத்தில் குதிக்கிறார்!

சீனா! அடுத்த பொருளாதாரச் சண்டியராகக் களத்தில், கோதாவில் குதித்தாயிற்று!

சீனா,பொருளாதார வளர்ச்சியில் இந்த ஆண்டு,  மூன்றாவது இடத்திற்கு ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாமிடத்தில் ஜோராக வந்து அமரும் என்று கணக்கிட்டுச் சொல்கிறார்கள். அமெரிக்கா, இப்போதிருக்கும் முதலிடத்தை எட்டிப் பிடிப்பது, முதலில் இன்னும் முப்பத்தொரு ஆண்டுகள் ஆகலாம் என்று சொன்னவர்கள், இப்போது இன்னும் பதினேழே ஆண்டுகளில் தாண்டி வந்துவிடுமென்றும் சொல்கிறார்கள்..

தொடர்ந்து பேசுவோம்!


தொடர்ந்து பேசுவதற்கு முன்னால், இது தொடர்பான இந்தப் பழைய பதிவுகளைப் படித்து விடுவது, குறைந்தபட்சம் அங்கே இருக்கும் வீடியோக்களைப் பார்த்துவிடுவது, பொருளாதார நெருக்கடி,  அமெரிக்க வங்கி நிதித்துறைகள் சந்தித்த சரிவு, துபாய்ப் பொருளாதாரம், அதனுடைய தொடர் விளைவுகள் இவற்றைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் உதவியாக இருக்கும்!

துபாய்! டுபாக்கூர்! பொருளாதாரம்!வட கொரியா!

உலகம் போகும் போக்கை முடிவு செய்யும் காரணங்கள்!

வாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்!


அறிவை வளர்த்துக் கொள்ளுவதும், அறிந்ததைப் பகிர்ந்து கொள்வதும் தான் நான் ஓதுகின்ற ஒரே வேதம்! இது ஒரு கலக்கமான மனநிலையில், துபாய்க் காசுக்காக அங்கே என்ன சூழ்நிலையில் இருக்கிறாரோ தெரியாது, மிரட்டிப் பின்னூட்டமிட்ட வருக்கு நான் சொல்லும் ஆறுதலானவார்த்தை! 





புள்ளிராசா வங்கிக்குப் புள்ளி வருமா ?ஒரு புத்தக விமரிசனம்!

முந்தைய சில பதிவுகளில், வங்கித் துறையைப் பற்றிய சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட தருணங்களில், நான் வாசகர்களுக்குப் படிக்க வேண்டிய ஒன்றாக ஆர்தர் ஹைலி எழுதிய ஒரு புதினத்தைச் சொல்லியிருக்கிறேன். நினைவிருக்கிறதா? இப்போது நாம் அடிக்கடி செய்திகளில் படிக்கிற பொருளாதாரச் சரிவுகள், துபாய்க் காசுக்காக ஏங்கிக் காணுகிற கனவுகள் எல்லாம் கானல் நீராகிப் போய்விடுமோ என்ற கலக்கம், இவைகளுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள இந்தக் கதைப் புத்தகம்  உதவியாக இருக்கும் என்பதையும் மறுபடி நினைவு படுத்துவதற்காகச் சொல்கிறேன்.  ஒரு புத்தக விமரிசனமாகவும்!

வங்கித்துறையைப் பற்றிய ஒரு அருமையான கதைப் புத்தகம்! ஆர்தர் ஹைலி எழுதிய The Moneychangers!  

சிபாரிசு செய்தகையோடு   புத்தகத்தைத் தேடிப் பிடித்து, மறுபடி ஒருமுறை வாசித்தாயிற்று! இந்தப் புத்தகம் வெளிவந்து முப்பத்துநான்கு ஆண்டுகளாகி விட்டது. ஆறரை மணிநேரத் தொலைக்காட்சித் திரைப்படமாக எடுத்து அதை நான்கு பகுதிகளாக CBS டெலிவிஷன் ஒளிபரப்பியபோதும் நல்ல வரவேற்பு இருந்தது என்று தெரிகிறது.



ஆர்தர் ஹைலி! ஐந்து வருடங்களுக்கு முன்னால் தன்னுடைய 84 ஆம்  வயதில், மறைந்த மிகச் சிறந்த எழுத்தாளர். பிரிட்டனில் பிறந்து, கனடாவுக்குப் போய்க் குடியேறி, அமெரிக்காவும், கனடாவும் எழுதிச் சம்பாதித்த அத்தனையையுமே வரியாகக் கேட்டதனால், அங்கிருந்தும் வெளியேறியவர்.

"அடே! அப்பன் பெயர் தெரியாத பையா!" என்று தமிழில் ரா.கி ரங்கராஜன் மொழி
பெயர்ப்பில் அழுத்தம் திருத்தமாகத் திட்டும் ஒரு விமான காப்டன்! திட்டு வாங்கும் ஒரு விமான நிலைய நிர்வாகி ! ஏர்போர்ட் என்ற அவரது நாவலைக் குமுதத்தில் தொடராக வெளியிட்டார்கள்! அடுத்து ஹோட்டல் என்று அவர் எழுதிய நாவலும் குமுதத்தில் வந்தது என்ற நினைவு! குமுதம் அவ்வப்போது, கொஞ்சம் உருப்படியான கிறுக்குத்தனம் பண்ணிக் கொண்டு இந்த மாதிரி மொழிபெயர்ப்பு நாவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.

ஆர்தர் ஹைலி எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக என் மனதில் இன்றைக்கும்  இடம் பிடித்திருப்பது The Moneychangers! வங்கித் தொழிலைப் பற்றிய புதினம் அது!

ஏர்போர்ட் நாவலில், ஒரு விமான நிலையத்தைக் கதைக் களமாக வைத்து, அதைச் சுற்றியே கதாபாத்திரங்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ட்ராக், அத்தனையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து சேர்த்து, ஒரு பிரச்சினையை சுவாரசியமாக சொல்ல ஆரம்பித்துக் கடைசியில், கதாநாயகன் எப்படி அவற்றைச் சமாளிக்கிறான் என்று விறுவிறுப்பாகச் சொல்லியிருப்பார்.

அதே மாதிரி, ஹோட்டல் என்று, விடுதிகளை மையமாக வைத்து ஒரு கதை, வீல்ஸ் என்று கார் உற்பத்தித் தொழிற்சாலைகளை களமாக வைத்து ஒரு கதை. இப்படி ஒவ்வொரு தொழில், அல்லது துறையைக் களமாக வைத்து எழுதுவதில் ஆர்தர் ஹைலி ஸ்பெஷலிஸ்ட். எல்லாக் கதையுமே  மேலோட்டமாகப் பார்க்கும் போது, ஒரே மாதிரி இருப்பது போலத் தோன்றினாலும்,  ஒவ்வொரு துறையையும் தொட்டு எழுதுவதற்கு முன்னால், அதைப் பற்றிக் குறைந்தது ஒருவருடமாவது கவனமாக எல்லாத் தகவல்களையும் சேகரித்து, அந்தத் தகவல்களோடு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கோர்த்து, ஒரு பிரச்சினை பூகம்பமாய் உருவாகிறமாதிரிக் கொண்டு வந்து, கடைசியில் அதைத் தீர்த்துவைக்கிற லாவகம் இருக்கிறதே, அது ஆர்தர் ஹைலியின் ஸ்பெஷல் டச்! தனி முத்திரை!

ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன்! ஒரு நடுத்தரமான வங்கி! அதன் தலைமை நிர்வாகி, தன்னுடைய உடல்நலம் நலிந்துகொண்டே இருப்பதை, பொறுப்பை வேறொருவர் விரைவில் ஏற்க வேண்டிவரும் என்று  அறிவிக்கிற தருணத்தில் இருந்து கதை தொடங்குகிறது. அடுத்து, அந்தப் பொறுப்புக்குத் தகுதியான இரண்டுபேர்கள் இருக்கிறார்கள். வங்கித் தொழிலில் காண முடிகிற  நேரெதிரான குணாதிசயம், இந்த இரண்டு பாத்திரங்கள் வழியாக வெளிப்படுத்தப் படுகிறது. அலெக்ஸ் வண்டர்வூர்ட்,ரோஸ்கோ  ஹேவர்ட்!  இந்த இருவரில் ஒருவர் தான், அடுத்துத் தலைமைப் பொறுப்பிற்கு வர முடியும் என்ற நிலையில், பதவியைப் பிடிப்பதற்கான ஆட்டமாகக் கதை விரிகிறது.

அலெக்ஸ்,  வங்கித் தொழிலுக்குண்டான மரபுகளை மீறாத,  செல்வாக்கைத் தேடுவது எப்படி, எதைக் கொடுத்து எதைப் பெறுவது என்ற நுணுக்கமான ஆதரவு திரட்டும் கலை அறியாதவராக! வங்கித் தொழிலை எப்படிக் கண்ணியத்துடனும், கவுரவத்துடனும் நடத்துவது என்பதை அறிந்தவராக, ஒரு நல்ல வங்கியாளராக ஒவ்வொரு கட்டத்திலும் கதை முழுவதும் அறிமுகமாகிறார்.

ரோஸ்கோ, வங்கியின் இயக்குநர்களுடைய ஆதரவைத் திரட்டுவது எப்படி என்ற கலையை அறிந்தவராக, உச்சிக்குப் போகவேண்டும் என்ற நிறைய ஆசை!  அதற்காக சமரசங்கள் செய்துகொள்ளத் தயாராக இருப்பவராக, என்ன ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கத்  தயாராக இருப்பவராக கதை விரிகிறது. வங்கியின் ஆதாயத்தைக் குறுகியகாலத்திலேயே பெருக்கிக் காட்டுவது, இயக்குநர்களுடைய நம்பிக்கையைப் பெறுவது, பெரிய கார்பரேட்களின் கணக்கை கொண்டு வருவது, தானும் பெரிய ஆளாவது என்று ரோஸ்கோவுடைய கனவுகள் வளர்ந்துகொண்டு போகின்றன.

ஒரு பக்கம்,நாணயமான, நிதானமான வங்கியாளர்! இன்னொரு பக்கம் பேராசை பிடித்த வங்கியாளர்!

இரண்டு விதமான போக்குகளைத்  தெரிவு செய்தாயிற்று! போட்டி என்று வரும்போது, இந்த இரண்டு நேரெதிரான தன்மைகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ சம்பவங்கள் நிகழவேண்டுமே! வரிசையாக ஆரம்பிக்கின்றன!

இங்கே நம்மூர் வங்கிகளில் பார்ப்பது போல 'வாங்க வேண்டுமானால்'  பத்துப் பெர்சென்ட்  'கொடுக்கவேண்டும்' என்ற மாதிரி வெகு சீப்பான கற்பனைக்கெல்லாம் போய்விடாதீர்கள்! அமெரிக்க வங்கிகள் இயங்கும் விதமே வேறு! அங்கே பேராசை, முதலீட்டாளர்களுக்கு நிறைய ஆதாயம் தேடித் தருவது என்ற போர்வையில் ஆரம்பிக்கிறது. ஆதாயம் தேடித் தருகிறேன் என்ற சாக்கில் தங்களும் ஆதாயம் அடைந்துகொள்ளும் நபர்களால், ஏற்பட்ட சரிவை, முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்னால் எழுதினது தான், ஆனால், இன்றைக்கும் பொருந்தி வருகிற உண்மைகளாக ஆர்தர் ஹைலி கதையை முன்னெடுத்துச் செல்கிறார்.

ராஜா ராணி கதையாக இருந்தால், கத்திச் சண்டை போட நம்பியார், வீரப்பா மாதிரி வில்லன்களை எதிர்பார்க்கலாம். இதுவோ வங்கித்துறையைப் பற்றியதாயிற்றே! வில்லன் எப்படி இருப்பான்?

கார்பரேட், மெகா கார்பரேட் வடிவத்தைத் தவிர வேறு பொருத்தமான வில்லன் எது? சுனாட்கோ என்ற வடிவத்தில் ஒரு கார்பரேட் வில்லன் கதையில் நுழைகிறது! ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கியின் இயக்குனர்களில் ஒருவர், சுனாட்கோ நிறுவனத் தலைவரை அறிமுகம் செய்து வைக்கிறேன், சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் வளமான எதிர்காலம் கிடைக்கும் என்று ரோஸ்கோவுக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவிப்பதோடு, சேர்த்துச் சொல்கிறார். 

சொன்னபடியே அந்த இயக்குனரும், ரோஸ்கோவும், சுனாட்கோ நிறுவனத் தலைவரை அவரது சொகுசு விமானத்தில் சந்திக்கிறார்கள். பலமான உபசாரம் நடக்கிறது. அமெரிக்க செனேட்டர்  ஒருவரும் (நம்மூர் எம் பி மாதிரி) விமானத்தில் இருக்கிறார்.  ரோஸ்கோ  பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்கு முன்னரே, ஐந்து கோடி டாலர் கடன் வசதி செய்ய ஏற்பாடு செய்ய ரோஸ்கோவுக்கு  அதிகாரம் இருக்கிறதா, இல்லையென்றால் கூட  பரவாயில்லை என்ற கொக்கி விழுகிறது.

சுனாட்கோ நாடறிந்த  மிகப் பெரிய நிறுவனம்! அதனுடன் வியாபாரத் தொடர்பு என்பது, லோகல் வங்கியாக மட்டுமே அறியப்பட்டிருக்கும் ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கி, நாடறிந்த வங்கிகள் வரிசைக்கு வந்து விடும்! கடன் மீது பெறும் வட்டி,  வங்கிக்குப் பேராதாயமாக இருக்கும் என்ற கணக்குகளை ரோஸ்கோ மனதிலேயே போட்டுப் பார்த்துவிட்டு, தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கும் சந்தர்ப்பம் இது தான் என்று முடிவு செய்கிறார். இயக்குனர் குழுவில், பேசிவிட்டு, முடிவைச் சொல்வதாக அந்த உல்லாசப் பயணம் அடுத்த திருப்பத்திற்குத் தயாராகிறது!.


உல்லாசப் பயணத்திற்கு நினைவுப் பரிசாக, அழகான பெண்களும், சுனாட்கோ நிறுவனத்தின் பங்குப் பத்திரங்களும் ரோஸ்கோவுக்கு அளிக்கப் படுகின்றன. ரோஸ்கோவுக்கு, கொஞ்சம் குற்ற உணர்வு தலைதூக்கினாலும், மிக அருமையான வாய்ப்பைத் தனது வங்கிக்காக சாதித்திருப்பதாகப் பெருமிதமும்,  தலைமைப் பொறுப்புக்குத் தன்னைத் தவிர வேறு போட்டியே இல்லாத உச்சத்திற்கு, இந்த டீலிங் கொண்டுபோய்விடும் என்ற சந்தோஷமும் மறைத்து விடுகின்றன.


இயக்குனர்  குழுவின் முன் இந்தக் கடன் விண்ணப்பத்தை ரோஸ்கோ  எடுத்து வைத்து, அது வரை சிறிய அளவில் மட்டுமே அறியப் பட்டிருக்கும் ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கி எப்படி பெரிய வங்கிகளுக்குச்சமமாக வந்துவிடும், எவ்வளவு பெரிய ஆதாயம் கிடைக்கும் என்று எடுத்துச் சொல்லும் போது, அலெக்ஸ் ஒருவர் மட்டுமே, அதை எதிர்த்துக் கருத்துச் சொல்லுகிறார்.

இந்த இடத்தில், ஒரு நேர்மையான, திறமையான வங்கியாளன் எப்படியிருக்கவேண்டும் என்பதை அலெக்ஸ் பாத்திரத்தின் வழியாகக் கதாசிரியர் சொல்கிறார். அடிப்படைக் கோட்பாடுகளை மறந்து விடாமல், போதுமான எச்சரிக்கையோடு, மரபுவழியிலான வங்கித் தொழிலைச்  செய்து வந்தாலே ஆதாயம் தானே வரும், கொஞ்சம் காத்திருக்கவும் தெரிய வேண்டும் என்ற  ethical banker வெளிப்படும் தருணம் இது.

ரோஸ்கோவுக்கு,  எல்லாமே இன்ஸ்டன்ட்- இப்போதே தான்! வங்கித் தொழிலின் மரபுகள், அனுபவப் பாடங்கள் எல்லாவற்றையும் தூரத் தள்ளி வைத்து விட்டு, கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுத்தால் மட்டுமே அதிக ஆதாயத்தைப் பெற முடியும்!  உச்சிக்கு வரத் துடிக்கும் ஒருவன், அதற்காக, எல்லாக் கோட்பாடுகளையும் இழந்துவிடத் தயாராக இருக்கும் நிலை மிக நுணுக்கமாக வெளிப்படும் தருணமாகவும் இருக்கிறது. இயக்குனர் குழு, இருவருடைய கருத்தையும் கேட்டுக் கொண்டு, பேராசையால் உந்தப் படும் ஒரு கூட்டம் எப்படி முடிவு செய்யும் என்பதும் அங்கேயே  தீர்மானிக்கப் பட்டும் விடுகிறது.
கார்பரேட் நிறுவனத்திற்குக் கடன் கொடுப்பதென்று முடிவாகி விட்டது, சரி! எங்கே இருந்து? அங்கே தான் கதையின், இன்னொரு சுவாரசியமான பக்கம் இருக்கிறது. ஏற்கெனெவே, சிறிய நடுத்தர வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க ஒப்புக் கொண்ட தொகையில் கை வைப்பதில் இருந்து தானே ஆரம்பிக்கும்! அந்த சிறிய நகரத்தின் ஜனங்களுக்குத் துணையாக இருந்த வங்கி, திடீரென்று, அவர்களைக் கைகழுவி விடுகிறது. அந்த மக்கள், வங்கி நிர்வாகத்திற்குத் தங்களது எதிர்ப்பை, மிக அமைதியாகத் தெரிவிக்கிறார்கள்.

இந்தப் பகுதியைப் படிக்கும் போது, இதே மாதிரி  ஒரு அனுபவத்தை  இங்கே ஒரு பொதுத்துறை வங்கி 1980 களில் சந்தித்தது. ஆனை அம்பானைக்குக்  கடன் கொடுக்க ஆரம்பித்த அந்த வங்கி, தன்னுடைய மற்ற வாடிக்கையாளர்களுக்குக் கடன்  கொடுக்க முடியாமல், கிட்டத் தட்ட ஐந்தாண்டுகள் credit freeze செய்து வைத்திருந்ததும், மற்ற வங்கிகளிடமிருந்து கொள்ளை வட்டிக்குக் கடன் வாங்கி (call  rates were very high, then), அம்பானைக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்த வேடிக்கையும், ஒரு கட்டத்தில் இந்த ஒரு வங்கி கொடுத்த ஊட்டச் சத்துப் போதவில்லை என்று, அம்பானை ஏழெட்டு வங்கிகளுக்குப் போய் அங்கேயும் கரும்புத் தோட்டத்தில் யானை புகுந்த கதையாக ஆனதும், நேற்றைய வரலாறு!

இப்படி, ஒவ்வொரு கதாபாத்திரமும், ஒவ்வொரு கட்டத்திலும், ஒரு திருப்புமுனை, கதைக்குள் விரியும் இன்னொரு கதை என்று அழகாகப் பின்னப்பட்டிருக்கும் போதே, வங்கிகளைப் பற்றிய ஏராளமான தகவல்கள், அமெரிக்க டாலர் உருவானவிதம், கள்ள நோட்டுக்கள், அவற்றைக் கண்டுபிடிக்கவும் தயார் செய்யவும்  உதவும் புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள், தங்கத்திற்கும் டாலருக்குமான உறவு, கீனிஷியன் எகனாமிக்ஸ்(Keynesian economics) என்று வங்கிகள் தொடர்பான தகவல் சுரங்கமாகவும் இருக்கிறது. அரசியலும் வங்கித்துறையும் எப்படி ஒன்றோடொன்று "லட்சிய"  உறவு கொண்டிருக்கிறது என்பதையும்  சொல்கிறது.

வங்கிகளில், அதன் செயல்பாடுகளில்  நிறையக் குறைகள் சொல்லிக் கொண்டே போகலாம் தான்! ஆனாலும் வளர்ச்சியடைந்த சமுதாயத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதை இந்தக் கதை, அனாயாசமாகச் சொல்லிக் கொண்டே போகிறது.

எல்லாவற்றையும் விட, மிக முக்கியமானது, டாலரில் முதலீடு செய்வதை விடத் தங்கத்தில் முதலீடு செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதையும் சொல்வது தான்! சொன்னது முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

சதாம் ஹுசேனை அமெரிக்கா விரட்டி விரட்டிக் கடைசியில் தூக்கு மாட்டித் தங்க விட்டது, சதாம் ஏதோ பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தார் என்பதனால் அல்ல! ரசாயன ஆயுதங்களை வைத்திருந்தார் என்பது கூட அமெரிக்க அண்டப் புளுகுகளில் ஒன்றாக இருக்கலாம். எல்லாவற்றையும் விட, பெட்ரோல் விற்பனையை  டாலரை வைத்து நடத்தாமல், வேறு செலாவணிக்குத் தயாரானார், மற்றவர்களையும் மாறும்படி தூண்டிக் கொண்டிருந்தார் என்பதே ஈராக் மீது அமெரிக்கா நடத்திய யுத்தத்தின் காரணம்.

ஆர்தர் ஹைலி இந்தக் கதையில், ஒரு சிறிய நகரத்தின் வங்கி, அந்த நகரத்து மக்களின் சேமிப்பையும், நம்பிக்கையையும் பெற்ற வங்கியாகக் களத்தைத் தேர்ந்தெடுத்து, கதாபாத்திரங்களின் வழியாக, வங்கிகளின் பேராசை, கார்பரேட் அரசியல்கள் ஒன்று சேரும் போது  எப்படி அழிவின் கருவிகளாக மாறிவிடுகின்றன என்பதைச் சொல்கிறார்.

கதைதான்! முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் எழுதினது தான்! இன்றைக்கும் அமெரிக்க வங்கிகள், நிதித்துறையில் பிரதிபலிக்கும் பேராசை, தானும் கெட்டு, ஊரையும் கெடுப்பது என்ற அம்சங்களை வெளிப்படுத்துவதாக இருப்பது தான் இந்தக் கதையின் பெரும்வலிமை!

The Moneychangers! அடிப்படைகளைப் புரிந்துகொள்ள விரும்புகிற எவருக்குமே, அவசியமாக நான் சிபாரிசு செய்யும் புத்தகங்களுள் ஒன்று!

நேற்றைய வரலாறு! நமக்குத் தான் முந்தின நிமிடத்தில் நடந்தது என்ன என்பதே தெரியவில்லை, இதில் நேற்றைய வரலாறு எதற்கு என்று கேட்கத் தோன்றினால்,  நிச்சயமாக இந்தப் பதிவு உங்களுக்கானது இல்லை!

ஆர்தர் ஹைலியின் பாணியைப் பின்பற்றி தமிழிலும், சில சுவாரசியமான ஆரம்பங்கள் இருந்தன!  பி.வி.ஆர் என்ற எழுத்தாளர் கல்கி வார இதழில் "சென்ட்ரல்" என்ற கதையை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பின்புலமாக வைத்து, ஒரு தொடர்கதையை எழுதினார்.  கங்கை புத்தக வெளியீடாக, புத்தகமாகவும் வந்தது என்று நினைவு!

அது என்னவோ, தமிழில் பரபரப்பாகப் பிராண்டுகிற தலைப்போடு வருகிற புத்தகங்கள் தான், எழுத்தாளர்கள் தான் அதிகம் கவனிக்கப் படுகிறார்கள்! தினத்தந்தி அல்லது தினமலர் படிக்கிற வாசக நிலையிலேயே வைத்திருக்கும் போக்கு என்றைக்கு மாறும்? 
 

 

காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே......காகிதப் பணமும்!




இந்த ஆறு ஆண்டுகளில், தமிழில் பதிவுகள் எழுதுவது அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் நல்ல விஷயம்!


என்ன எழுதுகிறோம், எத்தனை பேருக்குப் பயன்படும் வகையில் எழுதுகிறோம், குறைந்தபட்சமாக, எழுதுகிற நமக்கே ஒரு தெளிவைத் தருவதாக எத்தனை பதிவுகளைச் சொல்ல முடியும் என்பதை அளவிட்டுப்  பார்த்தால், முதல் வரியில் கண்ட உற்சாகம் வைகையில் வெள்ளம் வந்த கதையாக உடனேயே வடிந்தும் போய்  விடும்
 
"மலை மேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயும் முன்னே வந்த வெள்ளம் போனது ராஜா!"

என்று எங்கள் சிறுகூடற்பட்டியில் பிறந்த கவிஞன் கண்ணதாசன்  அழகாகச் சொன்னாரே அப்படி!

பதிவர் கோவி கண்ணன்! ஆயிரம் பதிவுகளைத்  தாண்டினவர்! ஒவ்வொரு பதிவிலும், ஏதோ ஒரு சர்ச்சையைக் கிளப்பி, விவாதத்திற்கு வலுக்கட்டாயமாகக் கூட்டத்தைச் சேர்க்கும் கலை தெரிந்தவர். உடன்பட முடிகிறதோ இல்லையோ, புறக்கணிக்க முடியாத வலைப்பதிவர்களில் ஒருவராக இருக்கிறார்! எனக்குப் பிடித்த பதிவர்கள் வரிசையில், இவருடைய பதிவுகளை நான் பார்த்த விதத்தில்  தனியாக ஒரு பதிவு எழுதலாம் என்று இருந்தவனை, வால்பையனுடைய சீரியஸ் தனம் இல்லாத சீரியஸ் பதிவு ஒன்றும், அதே தலைப்பில் கோவிகண்ணன் எழுதிய இன்னொரு பதிவும் எழுத நினைத்த விஷயங்களின் வரிசையைக் கொஞ்சம் மாற்றி விட்டன!

வால்பையனுடைய சீரியஸ் தனம் இல்லாத சீரியஸ் பதிவு!

அப்படீன்னா என்னங்கண்ணா? தலையிருக்காது, அதாவது முழுசா இருக்காது! ஆனால் வால்தனம்  மட்டும்  இருக்கும்!

"அமெரிக்காவுக்கு முன்னாலேயே காகிதப் பணத்தை ஓவர்டைம் வேலை செய்து அச்சடித்தது இந்தியா தான்னும் , கொஞ்சம் ஒய்வு கொடுக்கற மாதிரி, பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ அப்புறம் உள்ளூர் வெளியூர் வாழ் மக்கள், அரசுக்கு அச்சடித்துக் கை வலிக்கும் என்று ஆதூரத்துடன் என்று தாங்களும் இரு கை கொடுத்துக் கொண்டிருப்பது வால்பையனுக்குத் தான் தெரியாது, வங்கியாளரான உங்களுக்குமா?

Keynesian economics
பற்றி வால் பையனுக்குக் கத்துக் கொடுப்பீங்கன்னு பாத்தா, நீங்க வாலை இன்னமும் முறுக்கி விடறீங்களே! நியாயமா?"

அந்தப் பதிவில் இப்படிப் பின்னூட்டம் எழுதியபோதே, வங்கித்துறையைப் பற்றிக் கொஞ்சம், பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிக் கொஞ்சம் எழுதலாம் என்று முடிவு செய்தாகி விட்டது!

துபாய்! டுபாக்கூர்! பொருளாதாரம்!வட கொரியா!

உலகம் போகும் போக்கை முடிவு செய்யும் காரணங்கள்!

வாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்!

இந்தப்பதிவுகள் ஒவ்வொன்றிலுமே, ஒன்றோடொன்று தொடர்புடைய, அரசியல், பொருளாதாரம், வங்கி, நிதித்துறை மூன்றுமே தனித்தனியாகத் தெரிந்தாலுமே எப்படி ஒன்றையொன்று ஆளுமை செய்துகொண்டிருக்கின்றன என்பதைக் கோடி காட்டத் தான் முடிந்தது!

"
சேத்த பணத்தை சிக்கனமா,செலவு செய்ய பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு செல்லக்கண்ணு
அவங்க..ஆறை..நூறு..ஆக்குவாங்க ..சின்னக்கண்ணு"

மருதகாசியின் இந்தப்பாடலை எடுத்துச் சொன்னது கூட, வால்பையன் நினைக்கிற மாதிரி இடைச்செருகல் இல்லை, பொருளாதாரத்தின் ஒரு அடிப்படை அம்சத்தைச் சொல்வதற்காகத் தான்!

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, உற்பத்தியும், சேமிப்புமே தீர்மானிப்பவைகளாக இருந்த ஆரம்பகாலப் பொருளாதாரம், எப்படிக் கடன், கடனை அடைக்க இன்னொரு  கடன், அதற்கு வட்டி கட்ட இன்னொரு கடன், இப்படியே போய்க் கடைசியில் தவணை கேட்பது, நாணயம் தவறுவது, திவாலாகி விட்டது என்பதைக் கூட ஒப்புக் கொள்ள முடியாமல், "துபாய் உலகத்தின் கடனுக்கு அரசு எந்தவிதத்திலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது, அது கடன் கொடுத்தவர்கள் பொறுப்பு!" என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கிற அளவுக்கு மட்டுமே துபாய் கடன் நெருக்கடி இருக்கிறது!

இதைச் சொல்லும் போதே, இதைவிட விபரீதமான பயங்கரம் அமெரிக்கப் பொருளாதாரத்தில்  இருக்கிறது, எப்படி இதில் நாமும் விரும்பியோ விரும்பாமலோ சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவுகளில் சொல்லலாம் என்று இந்த முயற்சியை ஆரம்பித்தாயிற்று! புலி வாலைப் பிடித்த நாயர் கதைதான்! வால்பையன் என்னதான் வந்து, பின்னூட்டங்களில் தாளித்தாலும், புலி விடாது!

சற்றேறக் குறைய நூறே ஆண்டுகள்! நூறே ஆண்டுகளில், பொருளாதாரம் என்பது வெறும் கருவியாக இருந்தது, கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் பேரழிவைத்தரும் ஆயுதமாகவும் மாறிப்போனது! வரலாறு முக்கியம்! கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு வரலாறு மாதிரி, சிறந்த ஆசிரியன்எவருமில்லை!

பிரிட்டன், சிறிய தீவு! உள்ளூரில் வாய்ப்புக்கள் குறைவு! இயற்கையாகவே கடலோடுவதும், வணிகம் செய்வதும், வணிகம் செய்யப்போன இடத்தில் மோசம் செய்து, ஒட்டகத்தைக் கூடாரத்துக்குள் முதலில் தலை, அப்புறம் கழுத்து, அப்புறம்.......இப்படியே வரிசையாக ஒட்டகம் மொத்தக் கூடாரத்தையுமே ஆக்கிரமித்துக் கொண்டு, கூடாரத்தில் இருந்தவனை வெளியே நிர்க்கதியாய் நிற்க வைத்த கதை நடந்து முடிந்து, அடிமை நாடுகள், புதிய சந்தைகள், இயற்கை வளங்களை ஏகபோகமாகக் கொள்ளையடிக்கக் கிடைத்த வாய்ப்பு, தொழிற்புரட்சியோடு சேர்ந்து பிறந்தது.  


உள்ளூர் மக்களை முதலில் ஒட்டாண்டிகளாகவும், கூலிகளாகவும், கிராமங்களை அழித்து நகர்ப்புறத்துக்கு அகதிகளாகவும் மாற்றின கொடுமையை, சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய "ஆலிவர் ட்விஸ்ட் " கதையின் முதல் அத்தியாயமே, சொற்சித்திரமாகக் கொண்டு வந்து கண் முன்னே நிறுத்துகிறது. தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்களுக்காக மட்டுமே இந்தக் கூடுதல் குறிப்புக்கள்!


தொழிற்புரட்சி, புதிய கண்டுபிடிப்புக்கள் என்பது பிரிட்டனின் ஏகபோகமாக இருக்கவில்லை. குறுகிய காலத்திலேயே ஜெர்மனி முதலான நாடுகள் உற்பத்தி செய்து குவிக்கத் தொடங்கிவிட்டன! எங்கே குவிப்பது? யார் தலையில் கட்டுவது? ஒரு உலகப்போர் மூள்வதற்கான மூலக்கூறுகள் 1870 ஆம் ஆண்டுகளிலேயே ஆரம்பித்து 1914 வரை, அதிகாரப்போட்டி, ஆதிக்கப் போட்டியாக  ஒரு முனை ஜெர்மனியை மையமாக வைத்தும், மறுமுனை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை வைத்தும் வளர்ந்துகொண்டே போயின.  


இதில் சுவாரசியமான தகவல்அமெரிக்கா, முதல் உலகப் போர் முடியப்போகிற தருணம் வரை போரில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. சுருக்கமாக, முதல் உலகப் போர் சந்தைகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பதில் தான் கருக்கொண்டிருந்தது. சந்தைகள், அரசியல் அதிகாரம், ஆதிக்கத்தை அடித்தளமாகக் கொண்டிருந்தன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தால், இந்த காபிடலிசம், கம்யூனிசம்...........அப்படியே கடைசியாக நம்மூர் அண்ணாயிசம் வரை எல்லா இசங்களைப் பற்றிய ஆராய்ச்சி இன்னமும் சுலபமாகிவிடும்!

1914 ஜூன் 28 ஆம் தேதி, ஆஸ்திரிய ஹங்கேரிய அரசுக்கு இளவரசரான ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்டை  செர்பியர்கள்  படுகொலை செய்ததில் இருந்து உலகம் தயாராக இரண்டு அணிகளாகப் பிரிந்து உலக யுத்தம் ஆரம்பித்தது என்று சொல்வார்கள்!முதல் உலக யுத்தம் முடிந்த பின் ஜெயித்தவர்களாக, பிரிட்டிஷ் பேரரசு, ரஷ்யா (1917 வரை) இத்தாலி, பிரான்ஸ், அப்புறம் அமெரிக்கா ( 1917 இற்குப் பிறகு)!

கவனியுங்கள்! போர் என்றால் பிணங்கள் குவியும்! அமெரிக்கக் கழுகும் உள்ளே வந்தாயிற்று!

தோற்ற தரப்பாக, ஜெர்மானியப் பேரரசு, ஆஸ்திரிய-ஹங்கேரி, பல்கேரியா, அப்புறம் ஆட்டோமான் அரசு இருந்தன. பலவீனப்பட்டு உருக ஆரம்பித்தன. சமாளித்து எழுந்தது ஜெர்மனி ஒன்று தான்


தோற்றவர்கள் மட்டுமல்ல, ஜெயித்த தரப்புமே கூட பொருளாதாரத்தில் பலவீனப்பட  ஆரம்பித்த தருணமாக முதல் உலகப் போர் முடிந்தது. அடுத்த போருக்கான தளமாகவும் காரணமாகவுமே ஆகிப்போனது.


இதன் பின்னணியோடு சேர்த்துப் பார்த்தால்தான், காகிதக் கரன்சிகளாக இன்று நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் பணம் மதிப்பிழந்து போய்க் கொண்டிருந்ததும், ஒரு புதிய பிசாசாக உருவெடுத்துக் கொண்டிருந்ததும் புரிய வரும்.அதற்கு முந்தைய காலங்களில் பணத்தின் மதிப்பு, தங்கம் அல்லது வெள்ளியின் மதிப்பினால் மட்டுமே அளவிடப்பட்டது. வங்கி  நோட்டுக்கள்  அல்லது கரன்சி எப்போது வேண்டுமானாலும், அதற்குச் சமமான தங்கத்தையோ, வெள்ளியையோ பெற்றுக் கொள்கிற வசதியோடு இருந்தது. இப்போதும் கூட சில நாடுகளில் இந்த வசதி இருக்கிறது.

1929 களில் அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. Great Depression என்று அழைக்கப் படும் இந்த சரிவில் இருந்து மீண்டு வரப் பத்தாண்டுகளுக்கும் மேலானது. மீண்டு வரப் பெரும் உதவியாக இருந்தவை இரண்டு விஷயங்கள்!

ஒன்று
, Keynesian Theory அடிப்படையில் கடனை அஸ்திவாரமாக வைத்து, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிவைத்து எழுப்பப்படும் சீட்டுக் கட்டுக் கோபுரம்! இதை அமெரிக்க வங்கிகள், நிதித்துறை மிகவும் திறம்படவே சாதித்தன! வாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்!   இந்தப் பதிவில் மூன்றாவது வீடியோ, சுருக்கமாக, எளிமையாகச் சொல்கிறது.

இரண்டாவதாக
, அமெரிக்கத் தொழில்துறை நவீன ஆயுதங்களை  உற்பத்தி செய்து விற்பனை செய்கிற மரண வியாபாரிகளாக மிகப் பெரிய அளவில் உருவாகிக் கொண்டிருந்தது. அடுத்ததாக மருந்துகள் தயாரிப்பு! கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக, நோய்களைப் பரப்பும் சதிகாரர்களாகவுமே மருந்துத் தயாரிப்புத்துறை இருப்பதாக வலுவான சந்தேகங்கள், செய்திகள் அவ்வப்போது வரும்

இரண்டாம் உலகப்போர் முடிவில், எந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்று பெருமையாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார்களோ, அந்தப்பெருமை எல்லாம் போய், பெயரளவுக்குத் தான் சிங்கம் , பல், நகம் எலும்பு எல்லாமே  இழந்து, அமெரிக்காவை அண்டியே வாழ வேண்டிய நிலை உருவாயிற்று.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, உலகம் மூன்று கூறாகப் பிரிந்து நின்றன. போரில் ஜெயித்தவர்கள், தோற்றவர்கள், அடிமை நாடுகளாக இருந்தவர்கள் என்று ஒரு புறம்! அமெரிக்கா ஒரு புறமும், ரஷ்யா ஒரு புறமும், தோற்றவர்களைக் கூறு போட்டுப் பங்கீடு செய்துகொண்டதில் உண்டான மூன்று என்று இன்னொரு
விதமாகவும் கூட!

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால், இரண்டு தரப்பிலுமே வலிமையானவர்களாக, வங்கி நிதித்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்தார்கள். பணம், வெறும் காகிதமாக மட்டுமே மாறிப்போனது!

காகித கரன்சி போதாதென்று, பிளாஸ்டிக் கடன் அட்டைகள் ஆரம்பித்து வைத்திருக்கும் சீரழிவு வேறு! மறுபடி நினைவு படுத்துகிறேன்!

The Money Changers!

ஆர்தர் ஹைலி எழுதிய நாவல்! இரண்டு நேர் எதிரான குணாதிசயங்கள் கொண்ட வங்கி நிர்வாகிகளை வைத்து, வங்கித் துறை எப்படி பேராசையால் இயங்குகிறது, தான் சேதப்படுவதுமல்லாமல், சுற்றி இருப்பவர்களையுமே நாசம் செய்கிறது என்பதை அழகாகச் சொன்ன புதினம்!கிடைத்தால் படித்துப் பாருங்கள்!

அப்படி மாற்றிப்போட்ட தகிடுதத்தத்தில் தானே சிக்கிக் கொண்ட கதையாக, இன்றைக்கு அமெரிக்கா மாட்டிக் கொண்டு முழிக்கிறது!காகித டாலர்களை லட்சக்கணக்கான கோடிஎண்ணிக்கையில்  அடித்து வெளியிட்டுமே கூட, கரை சேர முடியவில்லை! G-7 என்று வளர்ந்த நாடுகளாகச் சொல்லப்படும் நாடுகளில் அமெரிக்காவும், பிரிட்டனும் ஏற்கெனவே மீள முடியாத அளவுக்குத் திவாலாகிப்போய் விட்டன.

அதற்குப் பின்னாலும் எத்தனை மர்மங்கள்........?

இப்போது, கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான செய்தியாக, அடுத்து வரும் பல பத்தாண்டுகளின் போக்கைத் தீர்மானிக்கும் பொருளாதார, ராணுவ சூப்பர் வல்லரசாக சீனா உருவெடுத்திருக்கும் செய்தியின் முக்கியத்துவம் கொஞ்சமாவது புரிய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன்!
 
முந்தைய பதிவுகளை, குறைந்தபட்சம் அந்த மூன்று வீடியோக்களை மட்டுமாவது பார்த்து விடுங்கள். உங்கள் இணைய இணைப்பின் வேகத்தைப் பொறுத்து, வீடியோ லோடாகும் நேரம் இருக்கும். டவுன் லோட் செய்து கூடப் பார்க்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்! என்ன சந்தேகம் என்பதைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள், தொடர்ந்து பேசுவோம்