Showing posts with label ஜெயகாந்தன். Show all posts
Showing posts with label ஜெயகாந்தன். Show all posts

இன்னொரு மூணு! வலம்புரி ஜான்! ஜெயகாந்தன்! துக்ளக் சோ!

சதா அக்கப்போர் அரசியலையே கவனித்துக் கொண்டு இருப்பதில் ஏற்படுகிற அலுப்பை சிலரது பேச்சு மாற்றி விடும் என்பதற்கு அவ்வப்போது நான் தேடிப் பார்க்கும் வலம்புரி ஜான் அவர்களுடைய   தமிழ் உரை வீச்சு ஒரு சரியான உதாரணம். வீடியோ 75 நிமிடம்.

  
2001வீடியோ. தரம் அவ்வளவு சரியில்லை என்றாலும் ஆடியோ நன்றாக இருக்கிறது. கொஞ்சம் அனுபவித்துக் கேளுங்கள்! வார்த்தைச் சித்தர், எழுத்துச் சித்தர் என்று கொண்டாடக் கூடிய தமிழ், விஷய ஞானம் இத்தனையும் கூடியிருந்த வலம்புரி ஜான் இந்த மண்ணில் வாழ்ந்ததென்னவோ வெறும் 59 ஆண்டுகள் தான்! இந்த உரை சிங்கப்பூரில் நிகழ்த்தப்பட்டது என்பதைத் தவிர வேறு விவரங்கள் இல்லை .

எழுத்தாளர் ஜெயகாந்தனைப் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். அவருடைய எழுத்தை இன்றைக்கும் ரசிப்பவன் என்றாலும் கூட அவரிடம் இருந்த முரண் பாடுகளைக் கவனிக்கவும் தவறியதில்லை. கலைஞனின் உடல்மொழி என்று ரவி சுப்ரமணியம் தயாரித்திருக்கிற இந்த ஆவணப்படத்துக்கு புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் உட்பட  நிறையப்பேர் தகவல்கள் தந்து உதவியிருக்கிறார்கள், இளையராஜா இசையமைத்து இருக்கிறார் என்பது டைட்டில் கார்ட் பார்க்கும்போது வியப்பாக இருக்கும்.


மிகப்பெரிய ஆளுமைகளைக் கூட ஜெயகாந்தன் எப்படி சர்வசாதாரணமாகக்  கடந்துபோனார் என்பதை இந்தப் பதினான்கு நிமிட ஒளித்துண்டில் காணலாம். இதன் கடைசிப்பகுதி இங்கே     


துக்ளக் இதழ் வருகிற தைப்பொங்கல் இதழுடன் 50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இன்றும் கூட வேறெந்த பத்திரிகையும் செய்யாத விதமாக, வாசகர்களை அழைத்துக் கேள்விகேட்கச் செய்து ஆசிரியர் பதில் சொல்வது என்ற வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் சோ. 2013 ஆம் ஆண்டு துக்ளக் 43வது ஆண்டுவிழா நிகழ்ச்சி வீடியோ 103 நிமிடம். சோ என்கிற ஆளுமையை அனுபவிக்க முடிகிற தருணம். கொஞ்சம் நேரம் ஒதுக்கிப்பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.     .    

சில நேரங்களில் ஜெயகாந்தன்........!



மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் திருமதி சீதாலட்சுமி சுப்பிரமணியம், ஜெயகாந்தனைப் பற்றிய தனது கருத்துக்களை, ஜேகே என்ற ஆளுமையைக்  கண்டு பிரமித்த தருணங்களைத் தொடராக முப்பத்தாறு மடல்கள் எழுதி முடித்து விட்டார்.   திண்ணை இதழில் அவர் எழுதியதை, மின்தமிழிலும் பகிர்ந்து கொண்டு வந்த அனுபவத் தொடரின் கடைசிப் பகுதி ஜெயகாந்தனுடைய சுந்தர காண்டம் நூலைப் பற்றிய ஒரு அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது!

இங்கே அதைப் படிக்க

ஜெயகாந்தன் என்ற பெயருக்கும், சர்ச்சைகளுக்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து வந்திருப்பதை, சுதந்திரமான அடிமைகள் என்று அவர் ஒரு கூட்டத்தில் பேசப் போக, இங்கேயிருக்கும் பெண்ணீய வாதிகள் எல்லாம் மல்லுக் கட்ட ஆரம்பித்ததையும் இந்தப் பக்கங்களில் பேசியிருக்கிறேன்.

மின்தமிழில் திருமதி சீதாலட்சுமி எழுதி முடித்ததும், ஜெயகாந்தனை இந்த இழையில் எப்படிப் பிளந்து கட்டுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்! இதில் எழுதிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நான் பெரிதும் மதிப்பவர்கள்! விஷயம் தெரிந்தவர்கள்! சிலர் நல்ல எழுத்தாளர்களும் கூட! நிலவைப் போல தேய்வதும் வளர்வதுமான இரு பக்கங்கள் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளருக்கும் இருப்பதை, அல்லது சில நேரங்களில் சில மனிதர்கள் என்று தலைப்பிட்டு அவரே கதை எழுதிய மாதிரி, சில நேரங்களில் ஜெயகாந்தன் மிகப் பெரிய ஆளுமை! சில நேரங்களில் எக்சென்ட்ரிக்! 


இப்படி முரண்பட்ட மனிதராக அவரை விமரிசிக்கும் போது, அவர் எழுத்தை நேசிக்கும் வாசகன் என்ற வகையில் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது!
 


இத்தனை கரடுமுரடான விஷயங்களையும் மீறி ஜெயகாந்தனுடைய எழுத்துக்கள், இன்னமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! அக்னிப் பிரவேசம் என்ற சிறுகதையை விரித்து சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற புதினத்தைப் படைத்தார். எல்லோரும் கொண்டாடினார்கள்! அதையே கங்கை எங்கே போகிறாள் என்று அதன் அடுத்த பகுதியாக அவர் எழுதியதை ஜீரணிக்க முடியாத வாசகர்கள் இங்கே ஏராளம்!

ஜெய ஜெய சங்கர என்று அவர் எழுதியபோது கொஞ்சம் எதிர்ப்பு வந்தது. ஹர ஹர சங்கர என்று ஜெயேந்திரர் விவகாரத்தைத்  தொடர்ந்து எழுதிய போது ஜெயகாந்தனை நிறையப் பேர் கண்டு கொள்ளவே தயாராக இல்லை.. நான் திரும்ப எழுத வரும் வரை என் சிம்மாசனம் காலியாகவே இருக்கும் என்று அவர் சொன்னதை, வீண் ஜம்பம் என்றோ தற்பெருமை, கர்வம் என்றோ ஒதுக்கிவிட்டுப் போக முடியவில்லை!

இது எழுத்தாளர் "கடலோடி" திரு. K R A நரசய்யா சொன்னது:

சில நேரங்களில் நமக்குப் புரிவதில்லை. ஆம். ஜெயகாந்தன் மற்றவர்களைச் சாதாரணமாகப்  புண்படுத்தக் கூடியவர் தான் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவருடன் என்னுடைய அனுபவங்கள் நன்றாகவே இருந்தன. ராஜராஜன் விருது முதல் முதலாக  வழங்கப்பட்டது திரு சுத்தானந்த பாரதிக்கு!.

அப்போது நான் சென்னை சென்றிருந்தேன் ஜெயகாந்தன் குடிலில் அவரைச் ச்ந்தித்தேன். “சுத்தானந்த பாரதிக்கு விருது தந்திருக்கிறார்கள்” என்றேன் “இவர்கள் சுப்பிரமணிய பாரதிக்கே கொடுப்பார்களே” என்றார்! பக்கலிலிருந்த கம்யூனிஸ்ட் அனுதாபி ஒருவர் என்னைப் பார்த்து “இவர் யார்?” என்றார். (ஜெயகாந்தன்) தனது குரலை உயர்த்தி வாயால் சொல்ல முடியாத ஒரு கெட்ட வார்த்தையால் அவரை விளித்து, “கடலோடி நரசய்யாவை யார் என்று கேட்கிறாயா?” என்றார்! நான் அதிர்ந்து விட்டேன்.


ஞானபீட விருது அறிவிக்கப்பட்டவுடன் அவரிடம் நான் பேசியபோது சிட்டியைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். என்னுடன் வருவதாகச் சொன்னார். அடுத்து, டாக்டர் சுப்பிரமணியனுடன் எங்கள் வீட்டிற்கு வந்து என்னுடன் சிட்டியைப் பார்த்தார். அவரது நெகிழ்வு, சிட்டியின் மீது அவர் வைத்திருந்த மரியாதை இவை என்னை ஆச்சரியப்பட வைத்தன!

எப்படி  இவர்களைப் புரிந்து கொள்வது?

ஆஸ்கார் ஒயில்ட் ஒரு தடவை ஒரு நண்பரால் வினவப்பட்டார். 

“பெர்னார்ட் ஷாவைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?”

ஆஸ்கர் ஒயில்ட் சொன்னார் “பெர்னார்ட் ஷாவுக்கு விரோதிகள் கிடையாது!’

நண்பர் “ஆஹா!” என்றார்

ஆஸ்கர் ஒயில்ட்தொடர்ந்தார்: “ஆனால் அவர்கள் நண்பர்கள் தாம் அவரை வெறுக்கிறார்கள்!”
இது எப்படி இருக்கு? 


இது திரு ஹரி கிருஷ்ணன் எழுதியது:

சில தினங்களுக்கு முன்னால் தொலைபேசி உரையாடலில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன் :


ஜெயகாந்தனை அவருடைய கருத்துத் தெளிவுக்காகவும், நடுவு
நிலைக்காகவும், உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உண்மையாகப் பேசும் வெளிப் படையான தைரியத்துக்காகவும் பிரமிததுப் பிரேமித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களெல்லோரும் அவருடைய தற்போதைய போக்குகளைப் பிரமித்துப் பிரேமிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். 

இன்றைய நிலையில் ஜெயகாந்தனுடைய எல்லாச் சொற்களையும், எல்லாச் செயல்களையும் ஏற்றுக் கொள்வது என்பது, ஒரு காலத்தில் ஜெயகாந்தன் அனுசரித்த நேர்மைக்கே எதிரானது.  (கவனிக்கவும்.  எல்லா என்ற சொல்.  Not all does include, but some.  எல்லாத்தையும் ஏத்துக்க முடியவில்லை என்றால், சிலதுக்கு விலக்கு இருக்கிறது என்றல்லவா பொருள்.)
இன்றைக்குக் கருத்து மாறுபாடு கொள்வதனால், ஒட்டு மொத்த ஜெயகாந்தனுமே தப்பு என்று பொருளில்லை.  அவருடைய எழுத்தையும் அன்றைய கம்பீரத்தையும் மறுக்கவே முடியாது.  அவரை விட்டுவிட்டுத் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாறு எழுதவே முடியாது.  இவற்றையெல்லாம் முன்னரேயே சொல்லியிருக்கிறேன்.  இப்போதும் சொல்கிறேன்.

இது முனைவர் நா.கண்ணன் எழுதியது:

அமெரிக்கன் கல்லூரியில் நாங்கள் இப்படித்தான் வாங்கிக் கட்டிக் கொண்டோம். “சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் வருக’ என்பது போஸ்டர். ஐயா வந்தவுடன் மேடையில் கேட்டார், ‘எவன் என்னை சிறுகதை மன்னன் என்று எழுதியது (திருவிளையாடல் சிவாஜியை கற்பனை செய்து கொள்க). எல்லாப் பேராசிரியர்களும், பிரின்சிபாலும் ஆடிப்போய்விட்டனர்! (பாவம் அவர் இயற்பியல் பேராசிரியர். ஏதோ தப்பு நடந்து விட்டது என்று பதறி விட்டார்).

மெதுவாக ஜெயகாந்தன் சொல்கிறார், “நான் சிறுகதை சக்கிரவர்த்தி’ என்று.


அப்பாடா! என்று இருந்தது. இது அவரின் நகை உணர்வா? இல்லை கர்வமா?

:-)

இது திரு வெங்கட் சாமிநாதன் என்ற பிரபல விமரிசகர் எழுதுவது:

ஒரு பெரிய பதவியில் இருப்பவரின் அந்தரங்க செ
லாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது எத்தனை பேரின் அனுபவத்தில் அல்லது தகவல் அறிவில் இருக்கிறதோ தெரியாது. அது சாதாரணமாகவே மற்றவர்களைத் துச்சமாக மதிப்பதாக, அப்படி நடத்துவதற்கான இடத்தில் இருப்பதாக, நினைத்துக் கொள்வது இயல்பு. அப்படி இருக்க, கருணாநிதியின் அந்தரங்க செயலாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


அதுவல்ல விஷயம். தான் எப்படி நடந்து கொண்டேன், எப்படி அவர்களையே தூக்கி எறிந்து பேசினேன் என்று ஒரு பொது மேடையில் சொல்லும் ஒருவரைப் பற்றி என்ன சொல்ல? அதைப் பார்த்துப் பெருமைப் படுவது, பாராட்டுவது என்பது நமக்கே உள்ள குணம். இது ஒருபுறம் இருக்க----

அத்தகைய   போர்க்குணம் மிக்க அந்த புரட்சி எழுத்தாளர்,  ‘எந்தக் கொம்பனாயிருந்தால் என்ன?” என்று அடிக்கடி மார் தட்டிக்கொள்ளும் ஒரு சிறு கதை மன்னர், மன்னிக்கவும், சக்கரவர்த்தி,  இன்று என்னவாகியிருக்கிறார் என்பதையும் நினைத்துப் பார்க்கலாம். இன்றைய நிலை எதுவும் பத்திரிகைகளுக்கோ பொது மக்களுக்குமோ  தெரியாத ரகசியமில்லை. 

அன்றைய வீராப்பும் சரி, இன்றைய வீழ்ச்சியும் சரி,  இரண்டுமே ஜெயகாந்தன் தானாக வரவழைத்துக் கொண்டது. இரண்டுமே பெருமைப் படும் விஷயங்கள் இல்லை.

இன்னொன்றும் தனியாக கமலா தேவி அம்மையாருக்குச் சொல்ல வேண்டும் நான். அவர் மிகவும் மன வேதனையோடு எழுதிருக்கிறார். அதற்கு நான் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் நெஞ்சு நோகச் செய்ததற்கு.


சில விஷயங்கள் நம் கண்களுக்குத் தெரியாது, நம் காதுகளுக்குக் கேட்காது இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


காசிக்குப் போகணும், கங்கையில் ஸ்னானம் செய்யவேண்டும் என்பது நம்மவர்களின் ஆயுள் கால லட்சியம். அது மிகவும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் கனவு தான்.


ஆனால் நான் நினைத்துக் கொள்வேன். அந்தக் கனவு அவர்களுக்கு கடைசி வரை கனவாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அது தான் அவர்கள் ஆத்மாவுக்கு சாந்தி தரும். அவர்களுக்கு அந்த கங்கை என்னும் இன்றைய சாககடையைக் காட்டி அந்தக் கனவு சிதைந்து விடக்கூடாது என்று நான் நினைத்துக் கொள்வேன். நம் நினைப்புகளில், கனவுகளில்,தான் கங்கை புனிதமானது. நிஜத்தில் அது சாக்கடை.

கமலா தேவி அம்மையாருக்கு சில விஷயங்கள் தெரியாது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எனக்குப் படுகிறது.


இந்த இழையைப் படித்ததும் "Ignorance is Bliss" என்று எதற்காகச் சொன்னார்கள் என்பது ஒரு மாதிரியாகப் புரிய ஆரம்பித்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன்!

மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்திற்கு மிகவும் நன்றியுடன்! வலைப் பதிவுகளில் வெட்டி அக்கப் போர், கூகிள் பஸ் என்று வந்து பார்த்தால் வெறும் கும்மி, மொக்கை என்றே போய்க் கொண்டிருக்கும் நிலையில், மிக நல்ல விவாதங்களைத் தொடர்ந்து தரும் மின்தமிழ் கூகிள் வலைக் குழும உறுப்பினர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! 




 

நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால்....!

போராட வேண்டிய விஷயங்களுக்கு நிச்சயமாகப் போராடத் தான் வேண்டும்! தவறு இல்லை!

 சுதந்திரமான அடிமைகள் என்று ஜெயகாந்தன் பேசியதைத் தொட்டு, சில பெண்கள் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதாக சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் 11 இழையில் படித்தேன் என்று சொல்லியிருந்தேன்  இல்லையா?

போர்க்கோடி  தூக்குகிற அளவுக்குத் தவறாக என்ன சொல்லி விட்டார் என்பது எனக்கு இன்னமும் தெரியவில்லை. திருமதி சீதாலட்சுமியின் இழையில் முதல் நான்கு வரிகளும், கடைசியாக ஜேகே சொன்னதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு, சொல்கிறேன் என்றும் முடித்திருந்ததையும் சொல்லி இருந்தேன். சீதம்மா எழுதிய நான்கு வரிகளுக்கு  அதிகமாக இன்னும் ஒரு பத்துப் பன்னிரண்டு வரிகள், இணையத்தில் தேட இன்று தான் தெனாலிடாட்காம் என்ற தளத்தில், இது பற்றி வெளியாகியிருந்த செய்தி,
கிடைத்தது. நன்றியுடன் மீள் பதிவு செய்யப் படுகிறது


பொருள், போகம்,புகழுக்கு அடிமையாகும் பெண்கள்: எழுத்தாளர் ஜெயகாந்தன்

செவ்வாய்க்கிழமை, 29, டிசம்பர் 2009 (11:29 IST)


சென்னை:

''முன்பு பெண்கள் கணவனுக்கு அடிமையாக இருந்தார்கள்  ஆனால் தற்போது சுதந்திரம்பெற்று பொருள், போகம், புகழ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டார்கள். சுத்திரமான அடிமையாக ஆகிவிட்ட பெண்களுக்கு விடுதலையே கிடையாது"என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சென்னையில் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இலக்கிய- ஆன்மிக சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்றது. இதில் பேசிய எழுந்தாளர் ஜெயகாந்தன் மேலும் கூறியது...'' பாரதியார்  கடவுளிடம் வேண்டும்போது சுதந்திரம் வேண்டும் என்றார் அவருக்காக அல்ல இந்த தேசத்துக்காக சுதந்திரம் வேண்டும் என்றார். 

கடவுள் உண்டா இல்லையா என்பது பிரசனையில்லை. கடவுள் வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் முக்கியம்.  ஆத்மா மனிதநாக பிறந்த அனைவருக்கும் உண்டு நாத்திகனுக்கும் உண்டு, நானும் நாத்திகனே.

நான் கோவிலுக்கு செல்வதில்லை, சடங்குகள் எல்லாம் எனக்கு பிடிக்காது. ஆனால் எதைச்செய்தாலும் விநாயகரை நினைக்காமல் தொடங்குவதில்லை.  அந்தக்காலத்தில் படித்தவர்கள்தான் அடிமைகளாக இருந்தனர்.  பெண்கள் தங்களின் கணவருக்கு அடிமைகளாக இருந்தார்கள்.

ஆனால் கணவர்களோ வேறு பல விஷயங்களுக்கு அடிமைகளாக இருந்தனர்.   இப்போது பெண்கள் சுதந்திரம் பெற்று கணவர்களைபோன்றே அதற்கெல்லாம் அடிமைகளாக மாறிவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையாக இல்லை. 

பெண்கள் பொருள், போகம், புகழ் என பல்வேறு விஷயங்களுக்கு அடிமைகளாகிவிட்டனர்.  அதுவும் சுதந்திரமான அடிமைகளாக மாறுவதுதான கொடுமை, அவர்களுக்கு அதிலிருந்து விடுதலையே கிடையாது"என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன். 


இதைப் படித்த பிறகும் கூட அப்படி என்ன தவறாகச் சொல்லிவிட்டார், என்ன புள்ளி விவரத்துடன் நிரூபிக்கவேண்டும் என்று கேட்கிறார்கள் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை. புள்ளிவிவரத்தோடு பேச முனைந்தாலே முதலில் வருவது குழப்பமும், அடிதடியும் தான்!

மின்தமிழில் திருமதி சீதாலட்சுமி  எழுதிய முந்தைய பகுதிகளைப் படிக்க, தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விக்கி பக்கங்களில் பார்க்கலாம்!

தமிழ் எழுத்துலகம் சாரு-- ஜெமோ மாதிரியானவர்களிடம் சிக்கிக் கொண்டு ஒரு புறம், திறனாய்வு செய்கிறேன், விமரிசனம் செய்கிறேன் என்று கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிற இடிமன்னர்கள்
ஒரு புறமுமாக, இப்படி தமிழ் எழுத்துலகமும் வாசகர்களும் பிரிந்து கிடக்கிறார்கள். நல்ல வாசகனை உருவாக்கத் தெரியாதவர்கள் எல்லாம்  தங்கள் காலரை உயர்த்தி விட்டுக் கொண்டு,  எழுத்தாளுமை நிறைந்த படைப்பாளியை குறை கூறுவதிலேயே, தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் கேவலமான காலம்  இது என்று தான் சொல்ல வேண்டும்!

இவர்கள் வழியாக நல்ல எழுத்தை, அடையாளம் கண்டு கொள்ள முடியாது! வாசகன் தானே, தனது வாசிக்கும் தளத்தை விரிவுபடுத்திக் கொண்டு தானே தான் எது நல்ல எழுத்து என்பதைத் தீர்மானித்தாக வேண்டும்! தன சுயபுராணத்தை பொடியே சொரிந்து கொண்டிருப்பபவர்களிடமிருந்து அல்ல!

கனிமொழியோடு, ஜெயகாந்தனின் எழுத்தாளுமை என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டதற்காக ஒரு விமரிசனம்!
கனிமொழியின் அரசியல் சார்பு வேண்டுமானால், ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கலாம், அதற்காக, இலக்கிய  ரசனையே இல்லாதவர், பாராட்டுவதற்குக் கூடத் தகுதியற்றவர் என்று எப்படி இவர்கள் ஒரு அவசர முடிவுக்கு வருகிறார்கள்?

உடல் நலம் சரியில்லாத தருணத்தில், கலைஞருடைய உதவியை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்று வாதாடுகிறார்கள்! அங்கே ஜேகே பிரதானமான காரணம் இல்லை, கருணாநிதி மீதான வெறுப்பு மட்டுமே!

ஆக,நல்ல எழுத்தை அங்கீகரிக்கப் பழகுகிற  வாசிப்புத் தளம் இன்னமும் விரிவடைய வேண்டும் என்று தான் தோன்றுகிறது!

இலக்கியம் என்பது வெறும் வார்த்தை அலங்காரத்தில் இல்லை, முனைவர் நா.கண்ணன் தனது பதிவில் சொல்கிற மாதிரி நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறைகள் தெரியாது! நெஞ்சம் நிறைய நேசம் வைத்துப் படிக்க வருபவருக்கும் இதமாகப் பரிமாறத் தெரிந்தவனே நல்ல எழுத்தாளன்!

அவன் எழுதுவது மட்டும் தான் எழுத்து!
கூழாங்கல்லை ஒதுக்கி விட்டு மாணிக்கத்தை மட்டும் தேடுகிற தேடல் உருவானால், வெட்டிக் கூளங்கள் தானே ஒழிந்து போகும்!

இருள் விலகி ஒளி பிறக்கட்டும்!


 


சுதந்திரமான அடிமைகள்! Vs ஜெயகாந்தன்


மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் திருமதி சீதாலட்சுமி அமெரிக்காவில் இருந்து கொண்டு  ஜெயகாந்தனைப் பற்றிய தனது நினைவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறார். 

 திருமதி சீதாலட்சுமி  மின் தமிழில் தன்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகமாக, தான் இந்த நினைவுகளை எழுதிக் கொண்டிருப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் முகமாக எழுதியதைப் படிக்க!

நேற்றைய தினம் சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன் - 11 என்ற தலைப்பில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். ஒன்றும் புதிதில்லை. ஜெயகாந்தன் சமீபத்தில் இன்னொரு சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார், அல்லது சர்ச்சைக்குள் அவரைச் சிக்க வைத்து விட்டதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஜெயகாந்தனை வைத்து சர்ச்சைகள் கிளம்புவதில் பெரிய ஆச்சரியமில்லை. அவரும் இதற்கெல்லாம் அசருகிற மாதிரியும் தெரியவில்லை!

ஜெயகாந்தனுக்கு எதிர்வெடி போடும் பெண்கள், மகளிர் அமைப்பினர்!


சமீபத்தில் சங்கர நேத்ராலயா ஆய்வு  நிறுவனம் நடத்திய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவு ஒன்றை ஜெயகாந்தன் நிகழ்த்தியிருக்கிறார். அங்கே அவர் பேசியதில், “பெண்கள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையில்லை. மாறாக இப்போது பெண்கள் பொருள் , போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “என்ற பகுதி மாதர் சங்கங்கள், பெண் உரிமை இயக்கங்களின் கோபத்தைக் கிளறியிருப்பதாக இந்த இழையைப் படித்த பிறகுதான், தமிழ்நாட்டிலேயே இருக்கும் எனக்குத் தெரிய வந்தது.

ஜெயகாந்தன் பேசியது ஒன்றும் புதியதுமில்லை! அவருடைய கங்கை எங்கே போகிறாள், கோகிலா என்ன செய்து விட்டாள் கதைகளைப் படித்தவர்களுக்கு,  அவருடைய இந்த கருத்து புதிதாகவோ, அல்லது சர்ச்சைக்குரியதாகவோ தெரிவதில்லை என்பது தான் ஒரு வாசகனாக எனக்குப் படுகிறது.

” சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “ என்ற ஜெயகாந்தனின் சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. மனம்விட்டுப் பேசுவோம்" என்று திருமதி சீதாலட்சுமி அந்த விவாத இழையை முடித்திருக்கிறார்.

எனக்குள்  சில பழைய நினைவுகள் நிழலாடின! சுதந்திரம், சுதந்திரமான அடிமை என்ற வார்த்தைகள் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை  நினைவு படுத்தின. 

பொதுவுடைமை அரசியலில் கைகோர்த்த தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தது அந்தப் பெண் செய்த முதல் பாவம். அம்மா ராஜ்ஜியம் தான்! பெண்ணை, தங்களுடைய இயக்கத்தில் இருந்த ஒரு இளைஞனுடன் பழக அனுமதித்துக் காதல், திருமணத்தில் முடிந்தது. ஒரு பெண் குழந்தை கூட இருந்தது. கணவன் மனைவி இருவருமே மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அரசியலிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

திடீரென்று, மாப்பிள்ளைப் பையனின் நடத்தையில் புகார்கள்! தினமும் குடிக்கிறானாம்! பெண்ணிடம் விசாரித்தால், பெண் கணவனுடைய சார்பாகத் தான் பேசினாள். அழுத்தி அழுத்திக் கேட்டதற்கு, எனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்தாள். உச்சத்தில் இருந்த அப்பனையே ஆட்டிப் படைத்தவள் அம்மாக்காரி!

விவாகரத்து ஒன்று தான் வழி! அம்மாக்காரி முடிவு செய்தாகிவிட்டது. அப்பாவும் தலையாட்டியாகிவிட்டது. பெண்ணோ வேறு வழியில்லாமல், விவாகரத்துக் கோரி வழக்குத் தொடர, விவாகரத்தும் கிடைத்தாயிற்று! அம்மாவின் அடியை ஒற்றி மகளும் அரசியலில்! இப்போது. இன்னொரு திருமணமும் ஆகிவிட்டது.

என்னதான் முற்போக்கு, பெண் விடுதலை, சம உரிமை என்று மேடைகளில் பேசினாலும், அந்தப் பெண்ணின் அடிமனதில் இருந்த சோகத்தைப் பார்த்த
போது  புரிந்து கொள்ள முடிந்தது. 

இப்போதோ காலம் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது! முழுநேரமும், ஏதோ ஒரு சங்கம், எங்கேயோ ஒரு கூட்டம், வழக்கம் போலவே பெண்ணுரிமை குறித்துப் புள்ளிவிவரங்களுடன் உரை நிகழ்த்துவது என்பதே அன்றாடம்நடக்கிறநிகழ்வுகளாகிவிட்டது. ஒரு இயந்திரத்தைப் போல!

அந்தப் பெண்ணைக் கேட்டால், நான் சுதந்திரமானவள் என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளக் கூடும்! ஏராளமான புள்ளிவிவரங்களோடு கூட பேசக் கூடும்! புள்ளிவிவரங்கள் எல்லாம் ஒரு அளவுக்குத் தான், வாழ்க்கையை வழிநடத்துகிற அளவுக்கு வலிமையானதும், அவசியமானதும் அல்ல!


ஜெயகாந்தன் சொன்ன மாதிரி 'சுதந்திரமான அடிமை' என்ற வார்த்தை தான் அந்தப் பெண்ணுக்குப் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றுகிறது!

ஏதோ பழக்கங்களுக்கு அடிமையாகவே இருந்து விடுகிற சுதந்திரம்!