மதுரை மீனாக்ஷிக்கு இன்று பட்டாபிஷேகம்!



மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்றைய விசேஷம் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்! மதுரை அரசாளும்  மீனாக்ஷியாக இன்றைக்கு முடிசூட்டிக் கொள்கிறவள் நாளை திக்விஜயமாக ஒவ்வொரு உலகமாக வெற்றி கண்டு வருகையி ல் சோமசுந்தரனிடம்  சண்டையிட முடியாமல் அவனையே மணவாளனாகக் கைத்தலம் பற்றுகிற கோலாகலம் நாளை மறுநாள்!

முன்பெல்லாம் சித்திரைத்திருநாள்  என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல் நலம் கொஞ்சம் மக்கர் செய்ய ஆரம்பித்த பிறகு இயலாமலேயே போனது . கேபிள் டிவி,செய்தித்தாட்களில் பார்த்தே பழைய நினைவுகளைக் கொஞ்சம் அசைபோட்டு அவளை வணங்குவது ஒன்றுதான் இப்போதைக்குக் கொடுப்பினை!  
  
மலையத்துவசன் என்று ஒரு பாண்டிய ராஜா!

நீண்ட நாட்களாகப் பிள்ளை இல்லை. தவமிருந்து, அப்புறம் ஒரு பெண் பிள்ளை பிறந்தது..பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்களோடு பிறந்த பெண்பிள்ளையைப் பார்த்து, ஐயோ,இப்படி இருக்கிறதே என்று பாண்டியன் கலங்கினானாம்! இந்தப் பெண்பிள்ளை வளர்ந்து பெரியவளானால் யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கவலை வாட்ட ஆரம்பித்தது. அசரீரியாக, "வருந்தாதே! அவளுக்குத் திருமண நேரம் வரும்போது, அவளைத் தேடி மணாளன் வருவான். அவனைப் பார்த்ததுமே, மூன்றாவதாக இருக்கும் ஸ்தனம் மறைந்துவிடும்!" என்று ஆறுதல் சொல்லியுமே கூட, மன்னனுக்குத் துயரம் தாங்கவில்லை. அந்தக் கவலையுடனேயே மரணமடைந்தான்.

கண் ஊஞ்சல் ஆட்டினாள் காஞ்சனமாலை என்று தாலாட்டுப் பாட்டெல்லாம் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை
 , மீனாக்ஷி பெரிய ராவடியாகவே இருந்தாள் என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது. இப்படித் தாலாட்டுப் பாடியே, அவளை ராவடியாக்கி விட்டார்களோ?! 

ஒவ்வொருத்தரிடமாகப் போய்
, 
என்னுடன் சண்டைக்கு வருகிறாயா என்று கூப்பிட்டுக் கூப்பிட்டுச் சண்டை செய்வதற்காகவே திக்விஜயம் செய்ய  ஆரம்பித்தாள். பூலோகம், மேலோகம் என்று இவளது ராவடியை கண்டு அத்தனை பேருமே அரண்டு போய்த் தோல்வியை ஒப்புக் கொண்டார்களாம்!தனி ஆவர்த்தனமாகவே போய்க் கொண்டிருந்த போது, இவளை விடப் பெரிய ராவடியாகஅந்தப் பரமேஸ்வரனே சோம சுந்தரனாக மதுரைக்கு வந்தானாம்! அப்படி  வந்தவனைக் கண்டவுடன், ராவடி, சண்டை போடுவதை எல்லாம் மறந்து மீனாக்ஷி  வெட்கம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டாளாம்!மூன்றாவது ஸ்தனமும், ஏற்கெனெவே அசரீரி சொல்லியிருந்ததைப் போல, மறைந்தது.

மூன்றாவது ஸ்தனம் மறைந்ததைக் கண்டு
, காஞ்சனமாலை மாப்பிள்ளை ஒருத்தன் வசமாக மாட்டிக் கொண்டான் என்று தெரிந்துகொண்டு, முப்பத்து முக்கோடி தேவர்களோடு சேர்ந்து பெண்ணுக்குத் திருமண ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தாள். 


மதுரையில் மீனாட்சிக்குக் கல்யாணம்! 

ஊரெல்லாம் கொண்டாட்டம்!


கல்யாணமும் ஆகி, சாப்பாட்டுப் பந்தியெல்லாம் முடிந்தபிறகு, சமைத்ததெல்லாம் நிறைய மீந்து போனது! முப்பத்து முக்கோடி தேவர்களும் சாப்பிட்டும் மீந்துபோனால் எப்படி! சமைத்து வைத்த உணவெல்லாம் மீந்து போய்விட்டது, உம்முடைய உறவினர்கள் எண்ணிக்கை அவ்வளவுதானா என்று கொஞ்சம் நக்கலாகக்  கேட்கிறாள் மதுரைக்கு அரசி, முத்து மீனாக்ஷி! 

அதுவரை அடக்க ஒடுக்கமாக இருந்த மாப்பிள்ளை சோமசுந்தரன், தன்னுடைய ராவடியை ஆரம்பித்தானாம்! 

இரு! ஒரே ஒரு குட்டிப் பூதத்தை அனுப்புகிறேன்
, அவன் சாப்பிட்ட பிறகு மிச்சம் மீதி ஏதாவது இருந்தால், அப்புறம் மற்றவர்களைக் கூப்பிடுவதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு குண்டோதரன் என்ற ஒரு பூதத்தை அனுப்பி வைத்தானாம்.  


குண்டோதரனும் சமைத்து வைத்திருந்த அத்தனை உணவையும் சாப்பிட்டு, பசி, இன்னும் வேண்டும், பசி, இன்னும் வேண்டும் என்று அரிசி, காய்கறி இப்படி சமைப்பதற்கு வைத்திருந்த அத்தனையையும் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்து மீனாட்சியே பயந்து போனாளாம்! போதும் போதுமென்று வீட்டுக்காரனிடம் கெஞ்சுகிறாள் மீனாக்ஷி!

ராவடி மன்னனான சுந்தரேசப் பெருமானும் குண்டோதரனின் பசி அடக்கித் தாகத்தை உண்டு பண்ணினானாம்! தண்ணீர், தண்ணீர் என்று அலைந்த குண்டோதரனிடம் இதோ வை கை என்று சொல்ல, வைகை நதி உண்டாயிற்றாம்! இது திருவிளையாடல்  புராணத்தில் வருகிற கதை!



வையை என்னும் பொய்யாக் குலக்கொடி என்று மகிழ்ந்து கொள்கிறது திரு விளையாடற் புராணம்! வை கை என்று சொன்னதினாலோ என்னவோ கை நனைக்கிற அளவுக்குக் கூடவைகையில், பெரும்பாலான தருணங்களில் தண்ணீர் இருப்பதில்லை! சிறு கூடற்பட்டியில் பிறந்த எங்கள் கவிஞன் கண்ணதாசன் ஒரு திரைப் படப் பாடலில் சொன்னபடி,

மலைமேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயுமுன்னே வந்த வெள்ளம் போனது ராசா!


இப்படி, அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும், வைகையின் கதை மட்டுமல்ல, பாண்டிய நாட்டின் கதையே அப்படித்தான் இருக்கிறது!
அம்மையும் அப்பனுமே ராவடி பண்ணிக் கொண்டிருந்தால் எப்படி? 
அடிப்பொடிகளோடு அட்டகாசம் பண்ணஅடுத்து ஒரு அ'னா வர வேண்டாமா!

ராவடி பண்ணிய  மீனாட்சியும், ராவடி மன்னன் சுந்தரேசனுமே  
அ' றங்காவலர் குழு செய்வது தான் சரி என்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்! மதுரைக்கு அரசி மீனாக்ஷி என்பதெல்லாம் முப்பதாண்டுகளுக்கு முந்தைய பழைய நம்பிக்கை!  என்னை மாதிரிப் பழைய நினைவுகளைக் கொஞ்சம் சுமந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே,  இன்னமும் அப்படி நம்பிக் கொண்டிருக்கிறோம்!




பண்டிகை என்ற மட்டுக்கு சித்திரைத் திருவிழாவின் போது  மீனாக்ஷி கையிலும் ஆவணி மாதத்தில் சோமசுந்தரர் கையிலும் மதுரையின் ஆட்சி இருப்பதாக ஒரு கற்பனை மட்டும் பண்ணிக் கொண்டு, செங்கோல் கொடுக்கிற படலம் ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறது!
 
ஆக, மதுரை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மூணு!  
அப்புறம் ராவடி! ஒரு ராவடியை அடக்க, அதற்குக் கொஞ்சம் அதிகமான ராவடி என்று அராத்தாக, ராவடியாக இப்படித் தொடர்ந்து இருப்பதே மதுரையின் கதையாக, புராணமாக இருக்கிறது!

தடி எடுத்தவனெல்லாம்  தண்டல்காரனா என்று கேட்கிற மாதிரி  ராவடி செய்யத் தெரிந்தவனை எல்லாம் பாண்டியனாக ஆக்கிப் பார்ப்பதே மதுரைக்கு உள்ள தனிச் சிறுமை! கலக்டராக இருந்த ஒரு ஆங்கிலேயன், மீனாட்சிக்கு ஆபரணம் செய்து போட்டானாம்! அவனையும் பீட்டர் பாண்டியன் என்பார்கள்! பெரிய மருது, சின்ன மருது என்று இரு சகோதரர்கள்! அவர்களையும் பாண்டியன் என்பார்கள்! பிற்கால பாண்டிய வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் பாண்டியன் என்று எவர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்! என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்!

திருநெல்வேலி தாண்டி தெற்கே, பாண்டியன் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டுப் பாருங்கள்!

மதுரைக்கு அரசி நீயல்லவோ என்று அவளிடத்தில் கேட்க ஆசைதான்! 

அவள் என்றைக்கடா வாயைத் திறந்து பேசினாள் என்ற  வசனம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது!

ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவின் மீள்பதிவுதான்! இன்றைய  நிலவரங்களோடு கொஞ்சம் திருத்தங்களுடன் 

கண்ணன் வந்தான்! கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!


தேடலின் முந்தையபகுதி இங்கே 

இந்தச் சின்னப் பையன் என்ன என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டே போகிறானே,இத்தனை வயதாகியும் எனக்கு இதெல்லாம் ஒன்று கூடப் புரியவில்லையே என்று எண்ணிக் கொண்டே ஹரி மோகனுக்குக் கண்ணன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.கண்ணனையே ஆர்வம் ததும்பியவனாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"இதைப் புரிந்துகொள் ஹரி மோகன். எந்த ஒரு செயலையும் மேலோட்டமாகவே பார்த்தால் அதன் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. நல்ல செயல்கள், நல்ல பழக்கங்கள் என்று செய்து வந்திருக்கிறாய், அதனால் புண்ணியம் கிட்டும் என்கிற நம்பிக்கை-ஆனால், அதை ஒரு வரட்டுத்தன்மையோடு கூடிய பழக்கமாகவே செய்து வந்ததால்,உண்மையை விலக்கி விட்டு வெறும் சடங்கு என்ற அளவோடு நிறுத்திக் கொள்வதால் வரும் பின் விளைவு இது.உயிரில்லாத சடங்கு என்ன தரும்? உனக்கு மகிழ்ச்சி இல்லை. உன்னுடைய செயல்களினால் விளையும் உணர்ச்சிகளின் சக்தியைத் தடுக்க உன்னால் முடியவில்லை. உன்னுடைய இந்த சிறிய அகங்காரத்தைக் கூட உன்னால் வெற்றி கொள்ள முடியவில்லை."

"அதே மாதிரி இந்த செல்வரங்கமும் கூட எந்த தீய செய்கைகளால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று செய்தானோ,அவைகளாலும் சந்தோஷமடையவில்லை. மாறாக, பழக்கங்களின் அடிமையாகவே இருப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல், இந்த வாழ்க்கையிலேயே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்"

"இது தான் நல்வினை, தீவினை என்கிற இருவிதமான தளைகள். அறியாமையோடு கூடிய எண்ணப் பதிவுகளே இப்படிப் பந்த பாசம் ஆகிய விலங்குகளாக ஒருவனைக் கட்டிப் போட்டு வைக்கிறது. வேதனைப் பட வைக்கிறது.ஆனால் இதுவும் வேண்டியதே. செல்வரங்கத்தைப் பார். இந்த பயங்கரமான வேதனை தான், எது உண்மையான உறவு, எது நிலையானது, உண்மையானது என்பதைத் தேடச் சொல்லிக் கொடுக்கும். இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதையும் ஒரு நேரம் வரும் போது சொல்லிக் கொடுக்கும்."

ஹரிமோகன் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்: "கண்ணா, நீ அழகாகத்தான் பேசுகிறாய். கேட்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும், உன்னை நிஜமாக நம்ப முடியவில்லை. சுகமும் துக்கமும், மனதின் ஒருவிதமான நிலைதான் என்கிறாய். இருக்கலாம், ஆனால் வெளிச் சூழ்நிலைகள் தானே அதற்குக் காரணமாய் இருக்கிறது? பட்டினியோடு இருப்பவன் மனது எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? நோயாலும், வலியாலும் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவனால் எப்படி, அதை மறந்து, உன்னைத்தான் நினைக்க முடியுமா? "

"முடியும் ஹரிமோகன், முடியும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உனக்குக் காட்டுவதற்காகத்தானே இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இங்கே பார்" என்றான் கண்ணன்.ஹரிமோகனுடைய கண் முன்னால் காட்சி மாறியது. செல்வரங்கத்தின் வீட்டில் அவன் இப்போது இல்லை. ஒரு அடர்ந்த கானகத்தில் ஒரு யோகி ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பதைப் பார்த்தான். அவருடைய காலடியில், ஒரு பெரிய புலி அமைதியாகக் காவலுக்கிருப்பதைப் போல, காத்திருப்பதையும் பார்த்தவுடன், ஹரிமோகனுடைய உடல் நடுங்க ஆரம்பித்தது. புலியைப் பார்த்தவுடன், யோகியைப் பற்றியோ, பின்னணியில் தெரிந்த அழக்கான மலைச் சிகரம்,சுகமான தென்றல் வீசும் இனிய சூழல் எதுவும் ஹரிமோகனுக்குப் புலப்படவில்லை. திரும்பி ஓடி விடலாம் என்று திமிறியவனை, கண்ணன் சிரித்துக் கொண்டே யோகியின் அருகாமையில் இழுத்துச் சென்றான்.

சின்னக் கண்ணனுக்கு இத்தனை பலமா?

சிறுவனின் பலத்தை வியந்து கொண்டே, அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்த ஹரிமோகனுக்கு சிலீரென்று ஒரு புதிய அனுபவம்..அந்த யோகியின் மனம் ஒரு புத்தகம் போலத் தன் முன் விரிவதைக் கண்டான். எங்கு பார்த்தாலும் கிருஷ்ணா, கோவிந்தா, ஹே மாதவா என்று நாம ஜபமாகவே இருக்கக் கண்டான். ஒரு பரபரப்புமில்லாமல், அன்புமயமான சூழலில் கண்ணனையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனுபவம்,தனக்குள்ளும் ஊடுருவுவதைக் கண்டான். இத்தனைக்கும், அந்த யோகி பல நாட்களாகப் பட்டினி கிடப்பதாகத் தெரிந்தது. உடல் வெளுத்துச் சோர்வாகத் தென்பட்டாலும், யோகியின் மனதில் எந்த அலுப்பும் குறையும் இல்லாமல் இருப்பதையும் கண்டான்.

"கிருஷ்ணா, இது என்ன, இவர் சாப்பிட்டு பலநாட்கள் ஆகியிருக்கும் போலிருக்கிறதே. இவருக்கு யார் உணவளிப்பார்கள்? இவரோ அதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப் படுவதாகவும் தெரியவில்லையே?"

"ஏன், நானில்லையா? பொறுப்பை என்னிடம் விட்டு விட்டான், அதுதான் கவலையில்லாமல் இருக்கிறான்."

"நன்றாயிருக்கிறது நீ பொறுப்புடன் கவனித்துக் கொள்ளும் விதம். புலிகள், மிருகங்கள் நடமாடும் காட்டில் குடிக்கத் தண்ணீரோ, பசிக்கு உணவோ இல்லாமல் இங்கே ஒருவன் தவித்துக் கொண்டிருக்கிறான். நீயோ சர்வ சாதாரணமாக அந்தப் பொறுப்பு என்னுடையது என்று சொல்கிறாய்..ஆனாலும் ஒன்றுமே செய்யாமலிருக்கிறாய். கிருஷ்ணா, நீ மிகவும் கொடியவன்."

ஹரிமோகன் உணர்ச்சி மேலிடப் பேசுவதைக் குறுஞ்சிரிப்புடன் கேட்ட கிருஷ்ணன், "ஹரிமோகன், இப்போது ஒரு வேடிக்கையைப் பார்க்கிறாயா?" என்றான். அவன் பதில் சொல்வதற்கு முன்னமே, யோகியின் காலடியில் சாதுவாக அமர்ந்திருந்த புலி திடீரென்று எழுந்து தன்னுடைய வாலைச் சுழற்றியதில், பக்கத்தில் இருந்த எறும்புப் புற்று உடைந்து, ஆயிரக்கணக்கில் எறும்புகள், யோகியின் உடல் மீது பரவின. புற்று உடைக்கப் பட்டதில் கிளர்ச்சியடைந்து,அவை யோகியைப் பல இடங்களிலும் கடிக்க ஆரம்பித்தன.

திடீரென்று ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஹரிமோகன் அதிர்ச்சியடைந்தான். ஆனால் அந்த யோகியோ,எறும்புகள் கடிப்பதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், நிஷ்டையில் இருந்தார். "ப்ரியமானவனே, நண்பா" என்று அவர் காதில் விழும் படி அந்த சிறுவன், மென்மையாக அழைத்தான். அந்தக் குரல், பிருந்தாவனத்தில் கோபிகைகளிடம், ராதையிடம் அன்பொழுகப் பேசுவது போலவே யோகியின் மனம் முழுதும் எதிரொலிப்பதை ஹரிமோகன் ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்தான். நிஷ்டை களைந்து, யோகி தன்னுணர்வு பெற்ற போதும் கூட,எறும்புகள் கடிப்பதைப் பற்றியோ, சுரீர் சுரீரென்று வலி உடலில் பரவுவதைப் பற்றியோ கவலைப்படாமல் இப்படி நினைப்பதை ஹரிமோகன் கண்டான்.

"இது என்ன புதிய அனுபவமாக இருக்கிறதே! என்னுடைய கிருஷ்ணன் ப்ரியமானவனே என்றழைப்பதைக் கேட்டேன்.எறும்பு கடித்தால் இப்படிக் கூட ஆனந்தமயமான அனுபவம் கிடைக்குமா என்ன!" யோகியின் நினைவு பரவசமாகி, உடல் ஆனந்த மிகுதியால் துள்ள, உடல் மேல் ஊர்ந்துகொண்டிருந்த எறும்புகள் தூரப் போய் விழுந்தன.
சில வினாடிகளில், அங்கே ஒரு எறும்பு கூட இல்லை. யோகியோ, ஏற்கெனெவே பட்ட ஒவ்வொரு கடியும், ஆனந்த பரவசத்தை ஏற்படுத்தக் கை கொட்டி ஆடுவதையும் சிரிப்பதையும் ஹரிமோகன் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கிருஷ்ணா! என்ன மந்திரம் போட்டாய்? இது என்ன மாயம்?"

ச்யாமசுந்தரனான ஸ்ரீ கிருஷ்ணன் கை கொட்டி சிரித்துக் கொண்டேசொன்னான், "ஆமாம், இது மாயம் தான்.என்னைவிடப் பெரிய மாயக் காரனோ, மந்திரவாதியோ எவருமில்லை.நானே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரே மந்திரவாதி.இது சொன்னால் உனக்குப் புரியாது. இது பரம ரகசியம். பார்த்தாயல்லவா, இந்த யோகியை எறும்புகள் கடித்த வேதனையை உடல் முழுவதும் அனுபவித்த நிலையில் கூட, எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்! ஏதேதோ சொன்னாயே, பசி, தாகம், களைப்பு என்று, அதையெல்லாம் அவர் கொஞ்சம் கூட சட்டை பண்ணவில்லை என்பதையும் நன்றாகப் பார்த்தாயா? இன்னமும் கவனித்துப் பார், என்ன நடக்கிறதென்று."

யோகி மறுபடியும் நிஷ்டையில் அமர்ந்து விட்டார். அவரது உடல், பசி தாகத்தினால் வாடியிருந்தாலும், அவரை அது ஒரு விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை ஹரிமோகன் கண்டான்.

"நண்பா, பிரியமானவனே, இதோ நான் வந்து விட்டேன்." இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஹரிமோகன் தனது பக்கத்தில் அந்த மாயக்காரச் சிறுவன் இருக்கிறானா என்று பார்த்துக் கொண்டான்.சிறுவன் அவனருகிலேயே இருப்பதைக் கண்டான். அவனைப்போலவே, அதே மோகனக் கண்ணன் எதிரே கையில் பெரிய தட்டு, குவளையுடன் வருவதைப் பார்த்தான். யோகியும் கண் விழித்துப் பார்த்து, முகமலர்ச்சியுடன் அவனை வரவேற்பதைக் கண்டான்.

"உன்னை ரொம்ப நேரம் பட்டினி போட்டு விட்டேனா? உனக்கு என மேல் கோபம் ஒன்றும் இல்லையே?'

"உன் மேல் கோபமா? எதற்கு? நீ வரும் போது, உன்னுடைய தரிசனமே எனக்கு உணவு. மற்ற நேரங்களில், உன்னை நினைத்துக் கொண்டிருப்பதே தாகம் தீர்க்கும் சாதனம். பசி தாகம் தீர்க்க நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை?"

"உனக்காக சில விசேஷமான பலகாரங்களைக் கொண்டு வர எண்ணினேன். அதனால் தான் நேரமாகி விட்டது. இங்கே வந்து பார், என்னென்ன கொண்டு வந்திருக்கிறேனென்று?"

"கண்ணா, வா, இருவரும் சேர்ந்தே உண்போம்."

மாயக் கண்ணனும், யோகியும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர். பரிகாசமாய்ப் பல கதைகள் பேசினர்.ஹரிமோகன் இந்தக் கட்சியை மிகுந்த ஆச்சச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். உணவு உண்டு முடித்தவுடன்,அந்த சிறுவன், மறைந்து விட்டான். தன் பக்கத்திலிருந்தவனிடம் ஏதோ கேட்க வாயெடுத்த ஹரிமோகன், பக்கத்தில் சிறுவன் இல்லாததையும், கானகம், மலை, யோகி, புலி எல்லாம் மறைந்து தான் மட்டும் வேறோர் இடத்தில்,வேறோர் காலத்தில் இருப்பதையும் கண்டான்.

ஹரிமோகனுக்கு வியப்பு அடங்கக் கொஞ்ச நேரம் ஆயிற்று. ஏனென்றால், அவன் தன்னுடைய வாழ்க்கையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன், அவனது மனைவி,பிள்ளைகள், உறவினர்கள் நண்பர்களோடு இருந்ததைக் கண்டான். ஒரு இயந்திர கதியில், அவன் சாத்திரங்களில் சொன்னபடி, பூஜை புனஸ்காரங்களைச் செய்து கொண்டிருந்தான். 

தான தர்மங்கள், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியது, உறவினர்களுக்கு, நண்பர்களுக்குச் செய்ய வேண்டியது இப்படி எதிலும் குறைவில்லை. ஆனால், அதில் உண்மையான அன்பு இல்லாதிருப்பதையும், செய்யப் பட்டவை எல்லாமே ஒரு சடங்கு, சம்ப்ரதாயத்திகாகத்தான் என்பதைப் பார்த்தபோது தன்னைப் பார்த்தே அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் உயர்வான ஆன்மிகம் என்று நினைத்திருந்தது, வெறும் இயந்திரத்தனமான சடங்குகளாகக் குறுகிப் போனதையும், உண்மையிலிருந்து விலகி வெகு தூரத்தில் இருந்ததையும் பார்த்த போது ஹரிமோகனுக்கு துக்கம் மேலிட்டது. அந்த இடத்தை விட்டு விலகி இருந்தால் தேவலை என்று தோன்றியது. உடல் மட்டும் கீழே விழ, அவன் வேறு இடங்களில் அலைவதைப் பார்த்தான்.

மிகவும் தாகமெடுப்பது போலத் தோன்றியது. தண்ணீரைத்தேடி வெகுதூரம் அலைந்த பிறகும் தண்ணீர் கிடைத்தபாடில்லை. தண்ணீரை குடிப்பது போல, தாகமெடுக்கும் போதெல்லாம் புழுதியையே உண்டுவந்ததைப் பார்த்தான். தாகம் தீர்வதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டே போனதையும் பார்த்தான். எங்கு பார்த்தாலும், ஒரே புழுதி, புழுதிமயம். அட, ஆண்டவனே குடிக்கத் தண்ணீர் கூடத் தர மாட்டாயா?

அலுப்போடு, அவன் நகரத்தின் வேறொருஇடத்தில் இருப்பதைப் பார்த்தான். ஒரே வாழ்த்துமயமாக அந்த இடம் காட்சி அளித்தது. அட, அங்கே கம்பீரமாக அமர்ந்திருப்பது யார்? செல்வரங்கம், செல்வரங்கமே தான். அவனைச் சுற்றி ஒரு கூட்டமே காத்திருந்தது. ஒவ்வொருவருக்கும், கை நிறையப் பணம் அளிப்பதையும், அவர்கள் அவனை மனதார வாழ்த்திச் செல்வதையும் பார்த்த ஹரிமோகனுக்கு ஒரே வியப்பு! செல்வரங்கம் எப்போதிலிருந்து கொடை வள்ளல் ஆனான்? ஹரிமோகன் வாய் விட்டு, உரக்கச் சிரித்தான். அடக் கடவுளே!

பார்த்துக் கொண்டே இருக்கும் போதே, செல்வரங்கம் மனதில் இருந்த அத்தனையும் ஹரிமோகனுக்குத் தெரிந்தன.புகழுக்காக, நான்கு பேர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காக, காசினாலே நிறையக் காரியம் கை கூடும் என்பதற்காகவே செல்வரங்கம் பணத்தை அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதும், அவன் மனதில் பேராசையும்,வஞ்சகமும் மண்டிக் கிடப்பதையும் ஹரிமோகன் பார்த்தான். ஒவ்வொன்றும் அவனுள்ளே பேயாட்டம் ஆடி, இன்னும் கொடு, எங்களுக்கு திருப்தி இல்லை, எங்களைத் திருப்தி செய் என்று தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதையும் பார்த்தான். பார்த்துக் கொண்டே இருக்கும் போது காட்சி மாறுவதை ஹரி மோகன் உணர்ந்தான்.

வெவ்வேறு நம்பிக்கைகள், அதன் பின்னே செல்லும் மனிதக் கூட்டங்கள், அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தமாதிரி உருவாக்கி வைத்திருந்த நீதி நெறிகள், தண்டனை முறைகள், ஸ்வர்க்கம், நரகம் இப்படிப் பலவிதமாய்ச் சொல்லப் படுவதையும் ஹரி மோகன் பார்த்தான். யார் யாரோ, அவனை இந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றதையும்,ஆனால் இந்த இடங்களைப் பற்றி முடிவாக எதுவும் சொல்லாமல் விட்டதையும் பார்த்துக் கொண்டே வந்த ஹரிமோகன் பழையபடி தன்னுடைய ஒட்டு வீட்டில், அதே அழுக்குப்பாய், தலையணையில் அமர்ந்திருப்பதை உணர்ந்தான். அப்போது, இதுவெல்லாம் உண்மையில்லையா, வெறும் கனவு தானா- இந்த சந்தேகம் பெரிய கேள்வியாக எழ, "சியாமசுந்தரா, நான் பார்த்ததெல்லாம் நிஜமா?" என்றான்.

ஷ்யாமசுந்தரன் கருணையோடு அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னான்,"இப்பொழுதே இரவு அதிக நேரம் ஆகிவிட்டது.இதற்கு மேலும் இங்கே என்னை நிறுத்திக் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தாயானால், அங்கே என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கோள் மூட்டி, என் அன்னையிடம் தண்டனை வாங்கிக் கொடுக்க ஒரு பெரிய பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறது. அனுபவங்களில் தெளிவு தானாகத் தான் வர வேண்டும்.இருந்தாலும், சில உண்மைகளைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். கேட்டுக் கொள்.

நீ பார்த்த ஸ்வர்க்கம், நரகம் எல்லாம் கனவுலகைச் சேர்ந்தவை. ஒரு அனுபவத்திற்கும் அடுத்ததற்கும்இடையில் ஒரு சின்ன இடைவேளை, குட்டித்தூக்கம் அல்லது கனவு மாதிரி.அதைத்தான் ஒரு மனிதன் இறந்தவுடன் ஸ்வர்கத்திற்கோ, அல்லது நரகத்திற்கோ சென்று தன்னுடைய கடந்த ஜன்மத்தின் பலன்களை அனுபவிக்கிறான் என்று சொல்கிறார்கள். உனையே எடுத்துக் கொள், உன்னுடைய முற்பிறவியில் சில அறநெறி உயர்வுகளைப் பெற்றிருந்தாய். ஆனால், உன்னுடைய இதயத்தில் அன்புக்கு இடமில்லாமல் போயிற்று. நீ கடவுளையோ,மனிதனையோ, நேசிக்கவில்லை. அதனால் தான், அந்தப் பிறவி முடிந்ததும், ஒரு இடைவேளை-அதில் உன் மனத்தின் உந்துதல்கள், அதன் விளைவுகளுக்கேற்றவாறு வசித்து வந்தாய். அதுவும் உனக்குப் பிடிக்கவில்லை-எனென்றால் உனது பிராணமய உணர்வு பொறுமையற்றுப் போயிற்று.அடிநாதமான அன்பு எனும் நீருக்காகத் தவித்தாய். புழுதிபடர்ந்த ஒரு நரகத்தில் வசிக்கப் போனாய்.
அதற்கப்புறம், உன்னுடைய புண்ணியங்களை அனுபவித்து முடிந்ததும் மறுபடி பிறந்தாய். அதிலும் கூட, ஒரு வரட்டுத்தனமான ஆசாரக் கோட்பாடுகளையும், கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்கிற சில தர்மங்களையும் செய்ததைத் தவிர, உதவி கேட்டு வந்த எவருக்கும் உள்ளன்போடு எதுவும் செய்யாமல் போனதன் காரணமாகத்தான்,இந்தப் பிறவியில், உனக்கு இவ்வளவு தேவைகள், மனக்குறைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.இத்தனைக்குப் பிறகும், வழக்கமான புண்ணியங்களை தேடும் செயல்களையே தொடர்ந்து செய்ய விழைவாய் எனில், உன்னுடைய புண்ணிய பாவங்களாகிற இருபெரும் தளைகள், முன்னமே சொன்னேனே, அந்தக் கனவுலக அனுபவத்தால் இன்னமும் வேரோடு அற்றுப் போகவில்லை இன்னும் மீதமிருக்கிறது, மறுபடி மறுபடி கனவுக்கும் நிஜத்திற்கும் இடையில் அவஸ்தைப் பட்டேயாக வேண்டும். இந்த உலக வாழ்க்கையிலேயே, கனவுலகில் அல்ல, உன்னுடைய ஆசைகள், ஆர்வத்தின் பலனாலேயே அவை மறைய வேண்டும்.

செல்வரங்கத்தின் கதையைப் பார்- முந்தைய பிறவியில் பெரும் கொடையாளியாக இருந்ததால்,ஏராளமானவர்களுடைய இதயபூர்வமான ஆசியினால், கோடிகளுக்கு அதிபதியாய்ப் பிறந்திருக்கிறான். ஆனாலும்,அவனது மனம் இன்னும் பண் படுத்தப் படவில்லை. பூர்த்தி செய்யப் படாத கொடிய இயல்புகளைத் திருப்தி செய்யவே,கொடிய எண்ணங்களும், கொடிய செயல்களுடனும் பிறந்திருக்கிறான். மண்ணைக் கொத்தி, பக்குவப் படுத்துவது போல, இங்கே கொடுமையாகத் தெரிவது கூடப் பக்குவப் படுத்துகிற சாதனம் தான். மண் பக்குவமாய் இருந்தால் தான், விதை முளைக்கும்.அன்பாகிற தண்ணீர் விட்டு கவனமாகப் பார்த்துக் கொண்டால் தான், செடி வளரும், பூ பூக்கும்.

இப்போது கர்மவினையின் சட்டங்கள் கொஞ்சமாவது புரிகிறதா?

கர்மவினை என்பது-பரிசுகளோ, தண்டனையோ அல்ல.

அவரை விதைத்தால் அவரை தான் விளையும். துவரை விதைத்தால் துவரை தான் விளையும். இந்த இயற்கை விதி புரிகிறதல்லவா-அதைப் போலத்தான், நல்ல செயல்களில் இருந்து நன்மை-கொடிய செயல்களில் இருந்து கொடுமை.அது தான் புண்ணியம்-பாவம். இந்த எளிய ஏற்பாடு எதற்காக என்றால், மனமும் இதயமும் சுத்தமாவதற்கும், கொடிய மிருகத்தன்மை அழிவதற்காகவும் இருக்கிறது. பொய்மையிலிருந்து தான் உண்மையைக் கண்டாக வேண்டும்..இருட்டில் இருப்பவன்தான் வெளிச்சத்தைத் தேடியாக வேண்டும்.. பார்த்தாயா ஹரிமோகன்! எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் இந்த பூமி, எனது படைப்பில் ஒரு சிறு பகுதிதான். ஆனாலும் நீங்கள் எல்லோரும் ஒரு உன்னதமான உண்மையைக் கண்டறிவதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறீர்கள். நன்மை-தீமை, புண்ணிய-பாவம், இப்படி எதிர்மறையான இரட்டைத்தன்மைகளின் பிடியிலிருந்து விடுபடும் போதுதான் கர்மவினை- -அதன் விளைவுகளில் இருந்தும் விடுபட முடியும்.

நீயும் கூட இந்த விடுதலையை நோக்கித்தான் உன்னை அறியாமலேயே நகர்ந்து கொண்டிருக்கிறாய். இந்த முயற்சியில், உனக்கு உறுதுணையாக தெய்வீகம் துணையிருக்கும். இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் தான், நீ என் தோழனாக ஆக முடியும். விளையாட்டிலிருந்து விலகிக் கொள்கிறேன், எனக்கு விடுதலை இப்பொழுதே கொடு என்றெல்லாம் கேட்கக் கூடாது.

என்ன, சம்மதமா?”

ஹரிமோகன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். அவனுக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. எப்படிச் சொல்வது, என்ன சொல்வது என்கிற யோசனையில் கொஞ்ச நேரம் இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணன்,அவனுடைய இனம்புரியாத யோசனையிலிருந்து எழுப்பினான்: "என்ன ஹரிமோகன், ஏதாவது புரிந்ததா?"

"புரியாமல் என்ன, கிருஷ்ணா? நீ ஏதேதோ பேசி என்னை நன்றாக மயக்கி விட்டாய். இப்போது எனக்கு, உன்னை மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டும், என்னிடத்திலும் அன்பிருக்கிறது, அது உனக்காகத்தான் அதை உனக்குக் காண்பிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொரு ஆசை இல்லை." இப்படிச் சொல்லிக் கொண்டே வந்தவன்,திடீரென்று ஒரு யோசனை கிளம்ப, "அடப் பொல்லாத பயலே! மறுபடியும் நீ என்னை ஏமாற்றி விட்டாய்.என்னென்னவெல்லாமோ சொன்னாயே, தீயதை ஏன் படைத்தாய் என்பதற்கு ஒரு காரணமும் சொல்லாமல் விட்டு விட்டாயே?" இப்படிக் கேட்டுக் கொண்டே சிறுவனின் கரங்களை கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.

சிறுவனோ வெகுலாவகமாகத் தன் கைகளை விடுவித்துக் கொண்டு, சற்றே எட்டி நின்று கொண்டான். ஒரு கள்ளச் சிரிப்புடன், "பார்த்தாயா? கொஞ்சம் இறங்கி வந்து உனக்குப் புரிய வைக்க வந்தால், ஒரே மணி நேரத்தில் அத்தனை ரகசியங்களையும் தெரிந்து கொண்டு விடலாம் என்று பார்க்கிறாயே! "

"அப்படி இல்லை கிருஷ்ணா......" ஹரிமோகன் சிறுவனை நோக்கி நகர்ந்து வந்தான்.
சிறுவனது முகத்தில் பொய்க்கோபம், அதையும் மீறிய சிரிப்புடன் சொன்னான்:
" நகர்ந்து போ ஹரி மோகன்! உன்னை எனக்குத் தெரியாதா? கொஞ்ச நேரம் முன்பு வரை, இந்தப் பயல் மட்டும் என் கையில் கிடைக்கட்டும், கட்டி வைத்து உதைக்கிறேன் என்று கருவிக் கொண்டிருந்தவன் தானே நீ! உனக்கே அது மறந்து போய் விட்டதா என்ன? அதற்கு பயந்து கொண்டுதானே, நான் உன்னிடத்திலிருந்து ஒரு நாலடி தள்ளியே நின்று கொண்டிருந்தேன்?"

ஹரிமோகன் இருட்டில் கைகளைத் துழாவியபடி, தேடி வந்துகொண்டிருந்தான். சிறுவனோ இன்னமும் தள்ளியே நின்று கொண்டு சொன்னான்:" இல்லை இல்லை. இந்த திருப்தி, விளையாட்டெல்லாம், உனக்கு அடுத்த பிறவியில் தான்."

இப்படிச்சொல்லிக் கொண்டே, நீண்ட இருட்டில் சிறுவன் ஓடி மறைந்து விட்டான்.
ஹரிமோகனுக்கு நடந்ததெல்லாம் கனவா, நிஜமா என்ற சந்தேகம் எழத் தனக்குத் தானே பேசிக் கொள்ளலானான்.

"அந்த வசீகரமான முகம், புன்சிரிப்பு, இது எதுவுமே கனவில்லை, நிஜம் தான் என்று தோன்றியது. சின்னப் பையனாக இருந்தாலும், என்ன அழகாகச் சொன்னான்? தன் முந்தின பிறவி, ஸ்வர்க்கம்-நரகம் இரட்டையைப் பார்த்தது இது எல்லாம் வெறும் கனவாக இருக்கவே முடியாது.

என்னுடைய ஷ்யாமசுந்தரன் என்னைத் தேடி வந்தான். என்னுடன் பேசினான்.ஐயோ, நான் தான் அவனிடத்தில் மரியாதை இல்லாமல் பேசினேன்...அவனைக் கட்டி வைக்கப் போகிறேன் என்றேன். அடிப்பேன் என்றேன். அவனைப் பொய்யன், பித்தலாட்டக்காரன் என்றெல்லாம் ஏசினேன். அது தெரிந்தும் என் பிரபு என்னைத் தேடி வந்தான்,என்னோடு சமமாகப் பேசினான், சிரித்தான், பொய்க்கோபம் காட்டினான். கேள்விகளைக் கேட்டு முடிப்பதற்குள்ளேயே,என் பிரபு என் கேள்வியிலேயே பதிலாக வந்து விட்டான். கிருஷ்ணா! கிருஷ்ணா!"

ஹரிமோகனுடைய மொத்தமும் ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டுக் கொண்டிருந்தது

" கோவிந்தா! என் பிரபோ, உன்னை மறுபடி காண்பது எப்போது?"

ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியிடும் மாத இதழான அகில இந்திய இதழில், [ஏப்ரல் 2002] ஒரு கனவு என்ற தலைப்பில் டாக்டர் மீரா ஷர்மா தமிழில் மொழிபெயர்த்து வெளியான ஒரு வங்க மொழிக் கதையைத் தழுவியது. ஆசிரியர் விவரம் தெரியவில்லை. எப்போதோ படித்தது..மறுபடி கிடைத்தது, இதில் வரும் ஹரிமோகன் நான் தானோ என்ற சந்தேகம் கூட வந்தது. நானாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கமே கதையை வாசித்து முடித்தபின் வந்தது. இது 2009 இல் எழுதியதன் மீள்பதிவுதான் நான் ஏன் பிறந்தேன் என்ற தேடலில் மறுவாசிப்புக்காக  

*****

கண்ணன் வந்தான்! ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்!



ஹரி மோகனுக்கு, நினைக்க நினைக்க ஆற்றமாட்டாமையும்கோபமும் ஒருசேர எழுந்தன. பின்னே,ஏழை என்ன தான் செய்ய முடியும்? ஒரு ஒட்டு வீட்டில், கிழிந்த பாய், தலையணையில், அமர்ந்து பொருமிக் கொண்டிருந்தான்.

"என்ன நியாயம் இது? நினைவு தெரிந்த நாள் முதல் ஒருவருக்கும் நான் தீங்கு செய்ததில்லை. பிறர் பொருளுக்கு ஆசைப் பட்டவனும் இல்லை. பரம சாதுவாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்-ஆனாலும், கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்களையே அந்த கிருஷ்ணன் கொடுத்துக் கொண்டிருக்கிறான், கேட்டால், இது உன்னுடைய கர்ம வினை, முன் ஜென்மத்தில் நீ செய்த பாவங்களைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் என்று சொல்கிறார்கள்.எனக்கென்னவோ கர்மவினை, புண்ணியம் பாவம் என்று சொல்வது எல்லாம், வெறும் பித்தலாட்டம் என்று தான் படுகிறது. அந்த விஷமக் காரக் கண்ணன், தன் மேல் எவரும் பழி சொல்லாமல் இருப்பதற்காகத் தான் கீதையில் இப்படி ஒரு பொய்யைச் சொல்லி வைத்திருக்கிறான்."

தூரத்தில் தெரிந்த கிருஷ்ணன் கோவிலை ஒரு முறை வெறித்துப் பார்த்து விட்டு மறுபடி தனக்குத் தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தான்:

"அவன் சொல்கிறபடி, முந்தைய பிறவியில் நான் பெரும் பாவங்களைச் செய்திருந்தால், என்னுடைய இன்றைய இழிநிலை அதனால் தான் என்றால், இப்போதும் கூட அந்தத் தீவினைகளின் நிழல், நினைவுகள் என் நெஞ்சில் எழுந்து கொண்டு தான் இருக்கும். அவ்வளவு பெரிய பாவச் சுமை, ஒரு பிறவியோடு போயிருக்காது, மனம் கூட இந்த அளவு களங்கமற்றதாக இருந்திருக்காது...கர்ம வினை, பாவம், புண்ணியம் என்பதெல்லாமே சுத்தப் பொய்."

ஊர்ப் பெரிய தனக்காரன் செல்வரங்கத்தையே எடுத்துக் கொள்ளலாமே..அவனுக்கு இன்றைக்கு இருக்கிற செல்வம்,அந்தஸ்து, ஆள்பலம், செல்வாக்கு இதையெல்லாம் பார்த்தால், முந்தின பிறவியில் அவன் பெரிய ஞானியாகக் கூட இருந்திருக்க வேண்டும்.இப்போது அவனிடத்தில் அப்படி நல்ல விஷயங்கள் இருந்ததற்கான அடையாளம் எதுவுமே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவனைவிட சுயநலக்காரனும், கிராதகனும் எவனுமே இல்லை."

"இந்த கர்மவினை, புண்ணியம் , பாவம் இதெல்லாம் இல்லவே இல்லை. அந்தப் பொல்லாத பயல் கிருஷ்ணனின் பசப்பு வேலை மட்டுமே. என்னை மாதிரி ஒன்றும் அறியாத அப்பாவிகளை மயக்க மட்டுமே ஏற்பட்டது."

"அடேய், பொல்லாத விஷமக்காரப் பயலே! கிருஷ்ணா! நீ பெரிய எத்தன். என் பக்கத்தில் வராத வரைக்கும் நீ பிழைத்தாய். நீ மட்டும் என் கையில் அகப்பட்டால், என்ன செய்வேன் தெரியுமா? உன்னைக் கட்டி வைத்து, என் ஆத்திரம் தீறகிற வரை உதைப்பேன். நீ எப்படிப்பட்ட பொய்யன் என்பதை இந்த ஊரே தெரிந்து கொள்கிற வரை உதைப்பேன், உன்னை விட மாட்டேன்."

"நீ மட்டும் என் கிட்ட வந்து பார்....உன்னை என்ன செய்கிறேன் என்று....."

இப்படி ஹரி மோகன் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கே ஒரு ஒளிவட்டம் தோன்றியது.கருப்புத்தான், ஆனால் எவ்வளவு வசீகரம்! மயிற்பீலி அணிந்த ஒரு சிறுவன் ஹரி மோகன் அருகே நின்றான். இடையில் அவனது புல்லாங்குழல், கால்களை ஒய்யாரமாக வளைத்து நின்ற படியே, "இதோ வந்து விட்டேன்" என்றான்.

ஏனோ,ஹரி மோகனுக்குத் தன்னுடைய நினைப்பின் மீதே வெட்கம் ..இந்த அழகான குழந்தையையா கட்டிப் போட்டு உதைக்க வேண்டும் என்று எண்ணினோம்...தன் மோசமான நினைப்பின் மேல் எழுந்த பச்சாதாபம் ஒருபுறம், இந்த சிறுவன் முன்னால் காட்டிக் கொள்வதா என்கிற வெட்கம் ஒருபுறம்..சிறுவனிடம், "இங்கு எதற்காக வந்தாய்?"என்றான்.

"எதற்காகவா? நீ என்னைக் கூப்பிடவில்லை? என் கிட்ட வந்து பார் என்று நீ தானே கூப்பிட்டாய்..அதுதான் வந்து விட்டேன், நீ ஆசைப் பட்டபடி, கட்டி வைத்து உதைப்பாயோ, உதைத்தபிறகு கட்டிப் போடுவாயோ, செய்துகொள்."

கொஞ்சம் கூட தயக்கமில்லாமல், சிரித்துக் கொண்டே சிறுவன் சொன்ன வார்த்தையில் ஹரி மோகன் மயங்கி நின்றான். 'என்ன காரியம் செய்து விட்டேன், இந்த மோகனச் சிறுவனை அள்ளி அணைத்துக் கொஞ்ச வேண்டும் என்கிற நினைப்பில்லாமல், கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்று நினைத்தேனே, எவ்வளவு பெரிய தப்பைச் செய்ய இருந்தேன்' அடிமனது அரற்ற, ஹரி மோகன் தலை கவிழ்ந்து நின்றான்.

"இங்கே பார் ஹரி மோகன், நான் தான் ஏற்கெனெவே வாக்குக் கொடுத்திருக்கிறேனே ..'யே யதா மாம் ப்ரபத்யந்தே..எவரெவர் எந்த முறையில் என்னை அணுக முயல்கிறார்களோ அதே முறையில் நான் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவேன்' அதுதான், கோபமேலீட்டால், என்னை அடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டாய்....உன் ஆசைப்படியே நானும் உன்னிடம் அடிபட வந்திருக்கிறேன்......ஆரம்பிக்க வேண்டியது தானே?"

"குட்டிப்பையா! எனக்கு ஒன்றுமே புரியவில்லை"

இதோ பார் ஹரி மோகன்! எதற்காகத் தலை குனிந்து நிற்கிறாய்? என்னைக் கண்டு பயப்படாதவர்களை எனக்குப் பிடிக்கும். என் மேல் தோழமை கொண்டு, என்னைத் திட்டவும் அடிக்கவும் என்னோடு விளையாடவும் வருகிறவர்களை ரொம்பப் பிடிக்கும்.இந்த உலகத்தை எதற்காகப் படைத்தேன் என்று நினைக்கிறாய்? ஒரு விளையாட்டிற்காகத்தான். என்னோடு விளையாடத் தயாராக இருக்கும் தோழர்களையே நான் எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் பார், அப்படிப்பட்ட தோழர்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதில்லை."

"எல்லோருக்கும் கோபம் வந்தால் அதை என்னிடத்தில் தான் கொட்டுகிறார்கள். அவர்கள் வேண்டுவதைஎல்லாம் நான் உடனே அவர்களுக்குக் கொடுத்து விட வேண்டும். செல்வம் வேண்டும், பதவி வேண்டும், நீண்ட ஆயுள் வேண்டும் இப்படி என்னிடத்தில் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சில பேருக்கு, உடனே மோட்சம் வேண்டும் இப்படி அவரவர்கள் வேண்டியதைக் கொடுக்கும் இயந்திரமாகவே என்னை நினைக்கிறார்கள். எனக்காகவே என்னை வேண்டுவார் ஒருவரும் இல்லை. எதையும் எதிர்பாராமல் என்னிடத்தில் அன்பு செலுத்துவார் எவரேனும் உண்டா என்று தேடிக் கொண்டே இருக்கிறேன்....சரி, அது கிடக்கட்டும், உனக்கும் எதோ என்னிடத்தில் வேண்டியிருக்கிறதல்லவா? கோபத்தில் என்னைக் கட்டி வைத்து அடிக்க ஆசைப் பட்டாய். இதோ நான் வந்து விட்டேன்."

ஹரிமோகன் கொஞ்ச நேரம் தயங்கிப் பிறகு சொன்னான்:" கிருஷ்ணா, மிகவும் அழகாகப் பேசுகிறாய். ஆனாலும்,உன்னுடைய நடவடிக்கைகள் எதுவுமே எனக்குப் புரியவே இல்லை."

உனக்குப் புரியும்படி சொல்கிறேன், கேட்பாயா?"

"நீயே சிறுவன், முளைத்து மூன்று இலை கூட விடாத சின்னப்பயல் எதை எனக்குப் புரிய வைக்கப் போகிறாய்? என்ன கற்றுக் கொடுக்கப் போகிறாய்?"

"என்னால் என்ன முடிகிறதென்று பொறுத்திருந்து தான் பாரேன், ?" வசீகரிக்கும் புன்னகையுடன் அந்த சிறுவன் ஹரிமோகனுடைய உச்சந்தலையை லேசாகத் தொட்டான்.

ஹரி மோகனுடைய உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. மூலாதாரத்தில் உறங்கிக் கிடந்த குண்டலினி ஐந்து தலை வெள்ளை நாகம் படமெடுத்து உயர்வது போல, மூண்டெழு கனலாக உச்சிக்கு உயர்ந்தது.தேகமே நான் என்ற நிலை விடுத்துத் தன் இயல்பான சூக்கும சரீரத்தில் இருப்பதைக் கண்டான். பக்கத்திலேயே,கண்ணனும் இருந்தான். இருவரும், ஒரு பெரிய மாளிகைக்குள் இருப்பதை ஹரிமோகன் அறிந்தான்.

என்ன இது, இது ஊர்ப் பெரிய தனக்காரன் செல்வரங்கத்தின் வீடு அல்லவா?
ஒரு கவலையும் இல்லாமல் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகத் தான் நினைத்த அதே செல்வரங்கம், கிழடு தட்டி,விசனத்தோடு, கண்களில் நீர் வழிய வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த போது, ஆட்சி அதிகாரத்தோடு எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்த அதே செல்வரங்கம் தானா இது? ஏன், ஒரு கோழிக் குஞ்சைப்போல நடுங்கிக் கொண்டிருக்கிறான்?

இந்த நிலையிலும் ஹரிமோகனுடைய பயம் போகவில்லை. யாராவது வந்து பிடித்துக் காவலாளிகளிடம் ஒப்படைத்து நையப் புடைத்து விடுவார்களோ?

"கிருஷ்ணா, என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறாயா? செல்வரங்கத்தின் செல்வாக்கு உனக்குத் தெரியாதா? அவனுடைய வேலைக்காரர்கள் நம்மைப் பிடித்து நன்றாக உதைக்கப் போகிறார்கள் பார். நம்மைத் திருடர்கள் என்று சொல்லப் போகிறார்கள்."

சிறுவன் கலகலவென்று சிரித்தான்," சொல்லிவிட்டுப் போகட்டுமே. திருட்டுப் பட்டம் எனக்குப் புதிதா என்ன? அட,நீயேன் இப்படி நடுங்குகிறாய்? காவல்காரர்கள் வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போது நீ செல்வரங்கத்தின் மனத்திற்குள் என்ன ஓடுகிறது, ஏன் அவன் இப்படி இருக்கிறான் என்பதைப் பார்."

"அது எப்படி இன்னொருவர் மனதிற்குள்....." ஹரிமோகன் சந்தேகத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னாலேயே கிருஷ்ணன் விடையைச் சொல்லி விட்டான். "உனக்கு செல்வரங்கத்தின் செல்வாக்கு, ஆள்பலம் இவைதானே தெரியும், கொஞ்சம் என்னுடையதையும் பாரேன்."

செல்வரங்கத்தின் மனதை ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போல, உள்ளிருக்கும் அனைத்தையும் பார்க்க முடிவதை ஹரி மோகன் உணர்ந்தான். செல்வரங்கத்தின் மனதில், பலவிதமான ஆசைகள், கோபங்கள் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். எவ்வளவு பணம் இருந்த போதிலும் போதாது, போதாது என்று கூக்குரலிடும் பேராசை அவனை ஆட்டிப் படைப்பதையும், அவன் பணத்திலேயே குறியாக இருக்கும் உறவு, நட்பு சுற்றத்தாரையும்,அவர்களால் கிலேசத்துடனும், ஆங்காரத்துடனும் செல்வரங்கம் தளர்ந்து போய் இருப்பதையும், அவனது ஆசை மகள் நடத்தை தவறி, ஊர்ப்பழிக்கு அஞ்சி அவளை வீட்டை விட்டு விரட்டி விட்டு, அந்த சோகத்திலேயே அழுதுகுமுறிக் கொண்டிருந்த செல்வரங்கத்தைப்  பார்த்த போது , ஹரிமோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தவறுகளை உணரவோ,அதற்கு வருத்தப் படவோ அவன் தயாராக இல்லை. நான் நான் என்ற மமதை, அவனை இறைவனை அழைப்பதைத் தடுத்துக் கொண்டிருந்தது. இடை இடையே, யம தூதர்கள், செல்வரங்கத்தை வந்து வந்து மிரட்டி விட்டுப் போவதையும், இத்தனைக்குப் பின்னாலும், உயிர் மேல் ஆசையால், செல்வரங்கம் ஒரு கோழிக் குஞ்சு துடிப்பதைப் போல பயத்தில் துடிப்பதையும் பார்த்தான்.

"கண்ணா, இவன் ரொம்ப சந்தோஷமாக, கவலையே இல்லாமல் இருக்கிறான் என்றல்லவா எண்ணி இருந்தேன்?என்ன ஆயிற்று இவனுக்கு?"

கண்ணன் சொன்னான், "என்னவோ செல்வரங்கத்துடைய செல்வாக்கு, ஆள் பலத்தைப் பற்றிப் பேசினாயே,இப்பொழுது என்ன சொல்கிறாய்? இவனுக்கு இருப்பதை விட செல்வாக்கும், பலமும் எனக்கிருப்பதை மறந்து விட்டாயா? நானும் ராஜாவாக, நீதிபதியாக, தண்டிக்கும் காவலனாக இருக்க முடியும். இந்த விளையாட்டு உனக்குப் புரிகிறதா?"

ஹரிமோகன் உரத்துக் கூவினான்," அடக் கடவுளே, இது எனக்குப் பிடிக்கவில்லை. மிகவும் கொடூரமாக அல்லவோ இது இருக்கிறது, இதை ஒரு விளையாட்டு என்று லேசாக உன்னால் எப்படிச் சொல்ல முடிகிறது?"

ஷ்யாமசுந்தரன் உல்லாசமாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்: "எனக்கு எல்லாவிதமான விளையாட்டும் பிடிக்கும்.அடிக்கவும் பிடிக்கும், அடிபடவும் பிடிக்கும். உன்னைப் போல, செல்வரங்கத்தைப் போல எல்லோருமே, எதையும் மேலோட்டமாகவே பார்க்கப் பழகி இருக்கிறீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் அதன் உண்மையான தன்மையில் பார்க்கத் தெரிவதே இல்லை. எதனுள்ளும் இருக்கும் உண்மையை அறியக் கூடிய நுட்பமான பார்வை இல்லை.அதனால் தான், நீ ஒருவன் தான் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகி இருப்பது போலவும், செல்வரங்கம் போன்றவர்கள் கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல், சந்தோஷமாக இருப்பதாகவும் தோன்றுகிறது. ஆண்டவன் கல்நெஞ்சுக்காரன், இரக்கமே இல்லாமல், உயிர்களை இப்படி வதைத்துக் கொண்டிருக்கிறான் என்று கோபப் பட்டு,என்னை அடிப்பதற்காகவே இங்கு அழைத்திருக்கிறாய் இல்லையா?"

"இதோ பார் ஹரி மோகன், நீ கஷ்டப் படுவதாகவும், செல்வரங்கம் சந்தோஷமாக இருப்பதாகவும் நினைத்தாய் அல்லவா? இப்போது செல்வரங்கம் மனதில் எத்தனை வேதனையை தேக்கி வைத்திருக்கிறான் என்பதையும் பார்த்தாய் அல்லவா? உண்மையில், ஆனந்தம், சந்தோஷம் என்பது மனதின் ஒரு நிலைதான். அதே மாதிரித் தான் வேதனை, துயரம் எல்லாம். மனதின் உரு மாற்றங்கள் தான் இந்த மகிழ்ச்சியும், வருத்தமும். உண்மை என்னவென்றால், ஒன்றுமே இல்லாத ஒருவன், துர்வினையே முதலாகக் கொண்ட ஒருவன் கூட,இடைஞ்சல்கள், ஆபத்துகள் மத்தியில், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

உன்னையே எடுத்துக் கொள், வரட்டுத் தனமான நல்வினைகளைச் சேர்ப்பதிலேயே நாட்களைச் செலவழித்து,கஷ்டங்களை நினைத்து வருத்தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறாய். உன்னை மாதிரியே செல்வரங்கமும்,வரட்டுத் தீவினைகளையே செய்து, மகிழ்ச்சியற்றிருப்பதையும் பார். அதனால் தான் நல்வினைகளால் நிலையற்ற கணப்பொழுதில் மறையும் சுகமும், தீவினைகளால் நிலையற்ற எளிதில் மறையும் துக்கமும், இன்னும் சில நல்வினகளால் நிலையற்ற துக்கமும், தீவினைகளால் நிலையற்ற சுகமும் கூட மாறி மாறி வருகின்றன. இப்படிப் பட்ட போராட்டத்தினால், நிலையான, உண்மையான ஆனந்தம் என்பதே கிடையாது, கிடைக்காது.

ஆனந்தமயமான இருப்பு என்னிடத்தில் இருக்கிறது. என்னிடம் வந்து, என் மேல் காதலால் உருகிக் கசிந்து, என்னைத் தேடி, என்னிடம் அன்பு கொண்டு நெருக்கி, என்னை வாட்டவும் துணியும் ஒருவனே என்னிடமிருந்து எல்லையற்ற மகிழ்ச்சியையும் பலவந்தமாகப் பறித்துக் கொள்கிறான். நானும் அவனிடத்தில் சந்தோஷமாகத் தோற்றுப் போகவும் தயாராக இருக்கிறேன்.

ஹரிமோகனுக்குத் தன்னிடத்தில் இருக்கும் குறை இன்னதென்று இன்னமும் புரியவில்லை. ஆனாலும், ஆர்வத்தோடு கண்ணன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்க ஆவலாகக் காத்திருந்தான்.

பதிவு கொஞ்சம் நீ....ண்டு விட்டது, நாமும் கண்ணன் பெயரைச் சொல்லிக் கொண்டே கொஞ்சம் காத்திருப்போமா?


கண்ணன் வந்தான்-மாயக் கண்ணன் வந்தான்
ஏழை கண்ணீரைக் கணடதும் கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்!

நெடுநாட்களுக்கு முன்னால், புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியீடான All India Magazine இல் வெளியான ஒரு வங்க மொழிக் கதை.ஆசிரியர் பெயர் தெரியாது. இதன் தமிழ்ப் பதிப்பு 'அகில இந்திய இதழ்' என்ற பெயரில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2002 இதழில் டாக்டர் மீரா ஷர்மா தமிழில் மொழிபெயர்த்து வெளிவந்ததன் தழுவல்.மீள்பதிவு நான் ஏன் பிறந்தேன் என்ற முந்தைய பதிவு தூண்டிய தேடலில் ஹரிமோகனனுடன் நானும் சேர்ந்து தேடிய பகுதி இனி வரும்!