லார்ஸ் வில்க்ஸ் என்ற ஸ்வீடிஷ் கார்டூனிஸ்ட், ஸ்வீடனில் ஒரு பல்கலைக் கழகத்தில் பேசப்போனபோது மிக மோசமான முறையில் தாக்கப் பட்டிருக்கிறார். அவரது வலைத் தளமும் ஹேக் செய்யப் படு, வீட்டிலும் வன்முறைத் தாக்குதல் நடந்திருக்கிறது.
டேவிட் ப்ரம் சி என் என் தளத்தில் இந்த நிகழ்வைப் பற்றி எழுதும்போது, அங்கே கூடியிருந்தவர்கள் வன்முறையில் ஈடு பட்டவர்களோடு ஒப்பிடுகையில் பத்துக்கு ஒன்று என்று பெரும்பான்மையாக இருந்த போதிலும், ஊமைச் சனங்களாகவே வேடிக்கை பார்த்த அவலத்தைத் தொட்டு எழுதுகிறார்.
இப்படி வன்முறை, தவறுகள், ஊழல்கள் நடக்கும்போதெல்லாம் இந்தப் பெரும்பான்மை, ஊமைச் சனங்களாகவே நின்று விடுவதால் தான், தடி எடுத்தவன் எல்லாம் தாண்டவராயனாகி விட முடிகிறது! வாரிசுகள் அஞ்சா நெஞ்சர்களாக முடிகிறது!
இன்றைக்கு இரவுச் செய்திகளில் பாகிஸ்தான் அரசு பேஸ்புக் தளத்தைத் தடை செய்திருக்கிற விஷயத்தைப்பார்க்க முடிந்தது. காரணம், நாளை மே இருபதாம் தேதியை "முகமதை வரையுங்கள்" தினமாக அனுசரிக்கும்படி அதில் ஒருதனித் தளம் இயங்க ஆரம்பித்திருப்பது தான்! இதற்கு முன்னால் யூட்யூப் தளத்தில் இஸ்லாமுக்கு எதிராக நிறைய வீடியோக்கள் இருக்கிறதென்ற காரணத்தைக் காட்டி, யூட்யூப் தளத்தையும் ஓராண்டுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசு தடை செய்து வைத்திருந்தது.
அமெரிக்காவில் சவுத் பார்க் என்ற தொலைக் காட்சி நிகழ்ச்சியில் முகமது நபியை விமரிசித்து வந்த பகுதிக்குக் கடுமையான எதிர்ப்பும், வன்முறையும் தொடரவே, மோலி நோரிஸ் என்ற பெண் கார்டூனிஸ்ட் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் மதத் தீவீர வாதத்தைக் கண்டித்து, முகமது நபியின் உருவத்தை வரையும் இயக்கமாக அனுசரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தவர், விளைவுகள் விபரீதமாகி விடும் என்பதை உணர்ந்து, முகமதை வரைவதற்குப் பதிலாக முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல் கோரே படத்தை வரையும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனாலும், மத அடிப்படைவாதிகளின் போக்கை எதிர்த்துத் தொடங்கப் பட்ட இந்தமுயற்சி கடந்த பத்து நாட்களாக வளர்ந்துகொண்டு தான் இருக்கிறது. செய்தி இங்கே! விக்கி தளத்தில் இதன் முழு விவரமும் தெரிந்துகொள்ள இங்கே!
எந்த ஒரு நம்பிக்கையையும் மத உணர்வுகளையும் சீண்டுகிற போக்கு வரவேற்கத் தக்கது இல்லைதான்! அதற்காக மதவுணர்வுகள் மனிதனை மிருகத்திலும் கீழாக மாற்றிவிடுகிற போக்கும் நிச்சயமாக ஆதரிக்கப் படவேண்டியவை அல்ல.
ஒருவருடைய நம்பிக்கை அவரவர் சொந்த விஷயம்.
அந்த எல்லையோடு நின்றுகொள்வது, நாம் வாழும் சமுதாயத்தின் ஒட்டு மொத்தமான அமைதிக்கு மிகவும் முக்கியம்.
ஸ்ரீ அரவிந்த அன்னை ஒரு தருணத்தில் தெளிவாகவே சொன்னார். மதங்களின் தேவை முடிந்து விட்டது. அதையும் தாண்டிய ஆன்மீகச் சிந்தனை ஒன்று தான், ஆன்ம நேய ஒருமைப்பாடுதான் மனித குலத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்லக் கூடியது.
