Showing posts with label WRV. Show all posts
Showing posts with label WRV. Show all posts

வெட்கம் கெட்டவர்கள்!



வெட்கம் கெட்டவர்கள்! 

பழியைச் சுமத்தி வெளியே போ என
இப்படியும் சொல்வார்களாம்!
செத்துப் போனபின் முக்காடுபோட்டு
ஒப்பாரி வைக்கவும் வருவார்களாம்!
தோழருக்கு அஞ்சலி! மூன்று நாள் துக்கம்!
கொடிகள் அரைக் கம்பத்தில் இறக்கி வை!
வாழ்க்கை முழுவதும் செங் கொடிக்கே என
வாழ்ந்தது எல்லாம் வீண் தானோ?

உழைத்தது எல்லாம் வீண் தானோ? விழலுக்கிறைத்த நீர் தானோ?
உழைப்பவன் முகத்தில் மலர்ச்சியைக் கண்டிடச்
சங்கமும் வேண்டும், அரசியலுக்குச் செங்கொடி வேண்டும்
உழைப்பவர் கைகளில் ஆட்சியும் மாட்சியும் பெறுவதற்கே!
அதுவரை  ஓயுதல் செய்யோம் தளர்ந்து தலை சாயுதல் செய்யோமென
சொந்த நலன்களை  ஒதுக்கிவைத்து ஊருக்குழைக்க முன்வந்தால்........

பழியைச் சுமத்தி வெளியே போ என
இப்படியும் சொல்வார்களாம்!
செத்துப் போனபின் முக்காடுபோட்டு
ஒப்பாரி வைக்கவும் வருவார்களாம்!

கம்யூனிசத்தை தூக்கிப் பிடிக்க களையெடுப்பு, கட்சிக்குள் சீரமைப்பு!
கம்யூனிசமே செத்தாலும், அழித்தல் ஒழித்தல் நிற்காது! இதென்ன
இங்கே தலையெழுத்து? பழியைச் சுமத்திக் குழிக்குள் புதைத்து,
தவற்றைத் திருத்தக் குழியைத் தோண்டிப் பிணமாய்ப் போனபின்  புனிதர் பட்டம்!
உலகம் எங்கிலும்  பொதுவாய்க் காணும்
காம்ரேடுகளின்   திருத்தும் வாதம்! களையெடுப்பு!

யாருக்காக? இங்கே, இத்தனை கருவறுப்பும் எவருக்காக? எதற்காக?

சுதந்திர அடிமைகள் போர் தொடுத்தால் இதுதான்  வருமா? இன்னும் வருமா?
கதைக்குப் பின்னால் காரணங்கள்! அதுவும் மெல்ல வெளி வருமா?
கதையாய்ச்  சொல்லத் தேவையில்லை! சிலப்பதிகாரம் தெரிந்தது தான்!
கோவலன் செய்த தவறுக்கு கண்ணகிகள் அவனை  எரித்ததில்லை!
காவலனோ நீ என  ஊரை எரித்தவள் கதை  தெரியும்! சிலை தெரியும்!

வெட்கம் கெட்டவர்கள்!

சினிமாக் கூத்திலும் பெருங்கூத்தாய்,
ஊர்வலம் நடத்தும், கொடி தாழ்த்தும்!
அஞ்சலி செலுத்துகிறார்களாம்!!

என்னுடைய தோழனுக்கு..........
நான் அஞ்சலி செலுத்தப் போவதில்லை!

அஞ்சலி செலுத்தி அப்புறம் மறக்கப் போவதில்லை!
தோழமை என்பது நேசிப்பதில்.... புரிந்து கொள்வதில்!
விமரிசனம் என்பது திருத்துவதற்காகத் தான்!
ஆளையே  தீர்ப்பதாக ஆனதும்  இந்தக் கட்சியில் மட்டும் தான்!

இதையும் கொஞ்சம் பாருங்க!

பழியும் சொல்வார்கள்.....அப்புறம் இதையும் சொல்வார்கள்!




Many said the Varadarajan episode had showed that the rectification drive, which started towards the end of last year to root out ‘non-Communist’ trends that had crept into the party, should be undertaken with great care. 

“Rectification is becoming elimination. The idea is to point out errors and give comrades a chance to correct themselves. We should be helping them rather than washing our hands of the matter after having taking action,” said a Politburo member.




தோழர் உ.ரா..வரதராஜன்....!


தோழர்.உ ரா வரதராஜன் ! கட்சி வட்டாரங்களில் WRV என்று இனிஷியலை வைத்து மரியாதையோடும், அன்போடும் அழைக்கப்பட்ட  தோழர்!

ரிசர்வ் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த தருணங்களிலேயே, தன்னைத் தொழிற்சங்க, கட்சி வேலைகளுக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தோழராக, தன்னுடன் பணிபுரிந்த சரஸ்வதி என்ற தலித் விதவையை மறுமணம் செய்து கொண்ட நல்லெண்ணம் படைத்த மனிதராக, எனக்கும் இன்னும் பலநூறு தொழிற்சங்க  முன்னணி  ஊழியர்களுக்கு ஆசானாகவும்  இருந்தவர்!

இந்தியத் தொழிற் தகராறுகள் சட்டத்தின் படி, வேலை நிறுத்தம் செய்வது சட்டபூர்வமான உரிமையாக அறிவிக்கப் பட்டிருந்தாலும், அதே சட்டத்தின் பல்வேறு நடைமுறைகள், பிரிவின்படி எந்த ஒரு வேலைநிறுத்தமும் சட்டபூர்வமாகச் செய்ய முடியாது என்பதை அழகாக  விளக்குவதில் ஆகட்டும், தேசாய் அவார்ட்  முதல், வங்கி ஊழியர்கள் சங்கம் வைத்துப் போராடிய வரலாறு, ஊதிய ஒப்பந்தங்களின் வரலாறு, கணக்கு என்று சொல்லிக் கொடுத்ததில் ஆகட்டும், கட்சியைத் தனது உயிருக்கும் மேலாக நேசித்த விதத்திலாகட்டும், எல்லாவிதங்களிலும் எங்களுக்கு ஆசானாக இருந்த தோழர்!

கம்யூனிஸ்ட் இயக்கங்களில் உள்ள மிகப் பெரிய கோளாறு, ஒரு உறுப்பினரைக் காலி செய்வது என்று முடிவு செய்துவிட்டு அதற்கப்புறமாகக் காரணங்களை அடுக்குவது!


சந்தேகநிழலில், லெனினுடன் சேர்ந்து போராடிய ட்ராட்ஸ்கி முதலான பெரிய தலைகளேஉருண்டிருக்கின்றன! அப்போதெல்லாம் தத்துவார்த்த ரீதியில் பிற்போக்குவாத முத்திரை, கருங்காலி முத்திரை குத்தப்படும்!  

இந்தியச் சூழ்நிலைகளில், ஈ எம் எஸ் நம்பூதிரிபாடுக்குப் பிறகு தத்துவார்த்த அடிப்படையில் லேபில்கள் குத்துகிற போக்கு குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்!தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், வேறு பெண்களோடு தொடர்பு, வட்டித் தொழில் செய்கிறார், இப்படி சில்லறைக் காரணங்களிலேயே  கட்டம் கட்டிவிடுவது சாதாரணமாக நடப்பது தான்!

தனக்கும் அப்படி ஒரு நிலை ஒரு நாள் வரும் என்பதை தோழர் வரதராஜனோ, கட்சி உறுப்பினர்களோ கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க முடியாது! 



கட்சி முடிவைத் தாங்கிக் கொள்ள முடியாமலும், பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கத் தெரிந்தவருக்கு, வீட்டில் நடந்த போராட்டம் எவ்வளவு வலியையும்,  வேதனையையும் தந்திருக்கிறது என்பதையும் இரண்டு கடிதங்களில் தோழர் எழுதி வைத்திருக்கிறார் என்றும் தகவல்கள் சொல்கின்றன.

கட்டிய மனைவியே, கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, கட்சியின் மாநிலக் குழுவுக்குப் புகார் செய்கிறார். தொடர்பு வைத்திருந்ததாகச் சொல்லப் படும் பெண்ணும் கூட, தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கட்சியிடம் புகார் தெரிவித்திருக்கிறாராம்!

மாநிலக் குழு விசாரித்துப் பரிந்துரை செய்ததன் பேரில், கட்சி, தோழர் வரதராஜனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எல்லாப் பதவிகளிலும் நீக்கியிருக்கிறது. இதன் பின்னணியில் ஒரு பொலிட்பீரோ உறுப்பினரே இருந்திருக்கிறார் என்றும் செய்திகள் கசிகின்றன.

பதினோரு நாட்களாகக் கணவரைக் காணவில்லை என்று அவரது மனைவி காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். கட்சியும் சென்ற வியாழக் கிழமை, இதே மாதிரிப் புகாரைக் காவல்துறையிடம் கொடுத்திருக்கிறது. இன்றைக்குப் போரூர் ஏரியில் கிடந்த பிணத்தை, தன்னுடைய கணவருடையதுதான் என்று திருமதி சரஸ்வதி அடையாளம் காட்டினாராம். இருந்தாலும் மரபணு சோதனைக்குப் பிறகு, முடிவு
சொல்லவிருப்பதாகக் காவல் துறைசெய்திகள் சொல்கின்றன.

செய்தி ஒன்று! செய்தி இரண்டு! இவைகளில் எனக்கு ஆர்வமில்லை. இதைப் பற்றி எழுதவேண்டாமே என்று தான் இதுவரை இருந்தேன்.

ஆனாலும்,ஒரு நல்ல தோழனை, ஆசிரியனை, இலட்சியவாதியை இழந்து விட்ட சோகத்தில் என் கண்கள் கசிகின்றன.

ஒரு கம்யூனிஸ்டாக இருப்பது என்பது, மனித நேயம் மிகுந்தவனாக இருப்பது என்று தான் எனக்குப் பொதுவுடைமைத் தத்துவத்தைப் போதித்த நல்ல தோழர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.

இப்போதோ....?


Updated 22/02/2010


இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் செய்தி, மார்க்சிஸ்ட் கட்சிக்கோ, அதற்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தோழர் வரதராஜனுக்கோ எந்தவிதத்திலும் பெருமை சேர்ப்பதாக இல்லை.

தொடரும் மர்மம்... இதுதவிர, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸôரும், போரூர் போலீஸôரும் இணைந்து இந்த வழக்கு குறித்து குற்றவியல் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கட்டுக்கோப்பான கட்சியின் மாநில தலைமைப் பொறுப்பில் இருந்த வரதராஜன் திடீரென மாயமானதும், மர்மமான முறையில் அவரது சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதும் கட்சியினரிடையே தேசிய அளவில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலையா?சதியா? அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இந்தச் சம்பவத்தில் ஏதும் சதி உள்ளதா என்பது குறித்தும் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.