பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
- கண்ணதாசன்
வாழ்க்கையை அனுபவித்தே உயர்ந்த எங்கள் சிறுகூடற்பட்டியில் விளைந்த நன்முத்து கண்ணதாசன் பிறந்த தினம்இன்று! கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் என்று கொண்டாடிய மாதிரியே கண்ணனுக்கு தாசனாக, கவியரசராக, தமிழைப் பாமரனும் ரசிக்கும் வண்ணம் இலக்கியமாக்கத் தெரிந்தவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கலை அறியாதவர், கவிஞரின் பிறந்த நாளை மகிழ்வோடு இந்தப் பதிவில் கொண்டாடுவோம்!
எந்த நிலையிலும் எனக்கொரு மரணமில்லை
24/06/1927 ஆம் ஆண்டு பிறந்து, எட்டாம் வகுப்பு வரையே பள்ளிப் படிப்பு இருந்தாலும், மெத்தப் படித்தவர் கூட எட்டாத உயரத்திற்குத் தன் தகுதியை உயர்த்திக் கொண்டவர், வெறும் ஏட்டுப் படிப்பை மட்டும் படித்து விட்டு, சுய சிந்தனையைத் தொலைத்தவரல்ல.
சட்டி சுடும் போது கை தானாகவே விட்டுவிடும் என்பதைத் தன் சொந்த அனுபவத்திலேயே கண்டு கொண்டவர். எங்கெங்கோ சுற்றித் திரிந்தாலும் கவியரசரின் ஒவ்வொரு கவிதையும், ஒவ்வொரு எழுத்தும், அனுபவம் பழுத்து ஞானமாக முதிர்ந்ததைச் சொல்லும்.
நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!
நாலாபுறமும் நற்கரம் விரித்து
மேலும் கீழும் விண்ணையும் மண்ணையும்
ஆழ அளந்து அள்ளித் தெளித்து
ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!
எங்கெங்கோ அலைந்து திரிந்தாலும், இருக்குமிடத்தைக் கண்டுகொண்டு, மெயப்பொருள் காண்பதறிவு என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த எங்கள் கவியரசர் என்றென்றும் வாழ்க! வாழ்க!!
இங்கேயிருந்து கண்ணதாசனை நினைவு கூர்ந்த பகுதி:
நான் யார்?
நான் யார்? நான் ஏன் பிறந்தேன்?
நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.அது எனக்குப் புரியவில்லை. தவிர,ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை. ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு லட்சியத்துக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே!
தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருட்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.
அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும் பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காக்கையின் பிறப்புக்குக்கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?
- கவியரசு கண்ணதாசன்
அய்யா!!
ReplyDeleteவாழ்க உங்கள் பணி..