படித்ததும் பிடித்ததும் - பகுதி 3



தருமியின் வலைப்பக்கங்களில் கண்ட கடவுள் என்றொரு மாயை என்ற பதிவுக்குப் பதில் சொல்வதற்காக மட்டும் அல்ல, ஒரு விஷயத்தை ஆழ்ந்து சிந்திப்பதற்கு முரண்பாடுகள் இருந்தாலுமே கூட, இப்படிப் பட்ட பதிவுகள் எப்படி உதவுகின்றன என்பதையும் சேர்த்துச் சொல்வதற்காகவும் தான்!

படித்ததும் பிடித்ததும், இந்த வரிசையில் முதலாவது பதிவு.
படித்ததும் பிடித்ததும் - பகுதி 2

அதில் இருந்து,
"அதென்னவோ அறிவியல் பதிவுகள் என்றாலே, இறைமறுப்பு என்பது அதன் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்க வேண்டும் என்கிற மாதிரி ஒரு கட்டாயம் இருக்கிறது போல."

"
மின்னிசோட்டா பல்கலைக் கழகத்தில் , தாவர இயல் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் திரு P Z மெயெர்ஸ் எழுதியிருக்கும் இந்தப் பதிவு கண்ணில் பட்டது.நமக்குத் தெரிந்த கதையில், நான்கு குருடர்கள், யானையைத் தடவிப் பார்த்து, யானை இப்படித்தான் இருக்கும், இல்லை இல்லை இப்படித்தான் என்று தங்களுக்குள்ளேயே விவாதித்துக் கொண்டிருப்பார்கள் இல்லையா?

இங்கே,மெயெர்ஸ் கதையில், நான்கு ஆராய்ச்சியாளர்கள், யானைக்குச் சிறகுகள் இருக்கிறது என்று ஒருத்தர் சொல்ல, கதையை தன்னுடைய கருத்தோட்டத்திற்கு இசையச் சொல்லியிருக்கும் அழகுக்காகவே இதை ஒருதரம் படிக்கலாம்."

இந்தியத் தத்துவ மரபில் கதை சொல்லி ஒரு விஷயத்தை விளக்குவது ஒரு முறை. இந்தக் கதை கூட, நமக்கு ஏற்கெனெவே தெரிந்தது தான், இல்லையா? இந்தக் கதையைச் சொல்லி விளக்கும், உண்மை கூட நினைவுக்கு வருகிறது இல்லையா!

பரிணாம உயிரியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் மெயெர்ஸ், தன்னுடைய நாத்திக மேதாவித் தனத்தை, இறைநம்பிக்கை உடையவர்கள் இவரது பதிவில் ஏதாவது கேட்டால், "idiots," "morons," "loony" or "imbecilic" என்ற மிகக் கண்ணியமான வார்த்தைகளில், பதிவு தவறாமல் அர்ச்சித்துக் கொண்டிருந்த செய்தியும், The Great Desecration என்ற பதிவில் மிகக் கீழ்த்தரமாக மத நம்பிக்கைகளைச் சாட, பல்கலைக் கழகம் இவரது பதிவுடன் கொடுத்திருந்த லிங்கை சென்ற ஜூலையிலிருந்து துண்டித்துக் கொண்டது என்ற செய்தியையும் பிறகு தான் அறிந்தேன்.

இங்கே இவர் மட்டுமல்ல, உலகமெங்குமே நாத்திகம் பேசுகிறவர்கள் மெயெர்ஸ் மாதிரிப் பொறுமை இழந்தவர்களாகத் தான் உண்மையில் இருக்கிறார்கள். மதநம்பிக்கைகளில் உள்ள சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ஊதி ஊதிப் பெரிது படுத்துவதைத் தவிர, உருப்படியான ஒரு மாற்று அம்சத்தை முன்வைக்க இவர்களால் முடிவதில்லை.

இந்த வரிகளை எழுதிப பதிவிட்ட பிறகு, எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தில் படித்த "வெறுப்புடன் உரையாடுதல்" என்ற பதிவு இதை எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறது என்பதையும் நினைத்துப் பார்த்தேன். ஜெயமோகன் சொல்கிறார்:

"வெறுப்பு எரியும் மனங்களைப்பொறுத்தவரை உண்மையில் அவர்களுக்கென கோட்பாடோ, கொள்கையோ, ஏன் இலட்சியமோ கூட ஏதுமில்லை. அவற்றின் தன்னியல்பால் அவை வெறுப்பைக் கக்குகின்றன. அவ்வெறுப்பைக் கக்குவதற்கான ஒரு காரணமாக ஏதேனும் அரசியலை சமூகநோக்கத்தைக் கண்டுகொள்கின்றன. அந்த நோக்கத்தை உச்சகட்ட அறம் சார்ந்ததாக,சமூகக் கோபம் சார்ந்ததாக முன்வைக்கின்றன.அந்தநோக்கத்தைக் கொண்டு தங்கள் அதிகார வெறியை, மானுடவெறுப்பை நியாயப்படுத்துகின்றன. ஆனால் உள்ளூர உள்ள சக்தி என்பது அப்பட்டமான வெறுப்பு மட்டுமே

இதற்கான ஆதாரம் ஒன்றே ஒன்றுதான். எந்த இலட்சியத்துக்காக இவர்கள் அவ்வெறுப்பைக் கக்குவதாகச் சொல்கிறார்களோ அந்த லட்சியங்களையே தங்கள் வெறுப்பின் பொருட்டு காலில்போட்டு மிதிப்பார்கள். மக்களுக்காக ஆயுதமேந்துபவர்கள் மக்களையே கொன்றுகுவிப்பார்கள். உதாரணமாக, முன்பு மாவோ அதை சீனத்தில் செய்தார் என்பது நாற்பது வருடம் மறுக்கப்பட்டு இன்று அவர்களாலேயே ஒத்துக்கொள்ளப்பட்ட வரலாறு. நேற்று ஆந்திராவிலும் இன்று வடஇந்தியக் கிராமங்களிலும் மாவோயிஸ்டுகள் அதையே இப்போது செய்கிறார்கள்."
The Emotional Matrix பட உதவி விபின் மேத்தாவின் வலைத்தளம்

இப்படி வெறுப்புடன் உரையாடுவதை, நாத்திகர்கள் மட்டுமல்ல, மதங்களின் குறுகிய எல்லைக்குள் நின்று பேசுகிற மத அடிப்படைவாதிகளும் கூட, வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயத்தில் இந்த இரு தரப்பினருமே ஒத்துப் போகிற விசித்திரம் உண்டு. உன்வழி என்வழி இல்லையானால், நீ எனக்கு எதிரி! So simple!

ஒரு மதம் என்பது திடீரென முளைத்து விடுவதில்லை.
யாரோ ஒருவர், நல்ல எண்ணத்துடன் சில தேடல்களுக்கு விடை காண்கிறார் அல்லது
விடை கண்டுவிட்டதாக நம்புகிறார். அதனால் மட்டுமே ஒரு மதம் உருவாகி விடுவதில்லை. அவரைப் பல பேர் நம்ப ஆரம்பிக்கிறார்கள். ஒரு குழுவாக ஆரம்பித்துப் பெரிய மந்தையாக வளரும் போது அவர்களிடம் இருக்கும் பொது நம்பிக்கை, அதைப் பற்றிய சிந்தனை இவைகளே மதத்திற்குத் தோற்றுவாயாக இருக்கின்றன.

இங்கே தமிழ்ச்செல்வன் மிக அருமையாக இந்த விஷயங்களைப் பற்றிய அடிப்படையான கேள்விகளுக்குப் பதில் சொல்கிற மாதிரிப் பதிவிட்டிருக்கிறார். புரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையிலேயே நினைப்பவர்களுக்கு இவை உதவும் என்றே நினைக்கிறேன்.

மனிதனும் மதமும் - பகுதி ஒன்று
மனிதனும் மதமும் - பகுதி இரண்டு
மனிதனும் மதமும் - பகுதி மூன்று



இதே மாதிரி ஜடாயு என்ற புனைபெயரில் பதிவிடும் இந்த நண்பர் வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள் என்ற தலைப்பில் ஒரு நல்ல பதிவை எழுதியிருக்கிறார். வேதங்களும், உபநிஷதங்களும் என்னவோ சாதாரண ஜனங்களுக்கு மறுக்கப் பட்டே வந்திருப்பதாகவும், எட்டாக் கனியாக இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகவே புனைந்துரைக்கப் பட்டதாகவும், இங்கே உள்ள நாத்திகர்கள், அறிவுஜீவிகள் தொடர்ந்து ஊதிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஜடாயுவின் இந்தக் கட்டுரையைக் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள், ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்முடைய முன்னோர் தேடிவைத்த ஞானக் கடலை இவர்களால் எப்படி இவ்வளவு கொச்சைப் படுத்த முடிகிறது?!

காலத்திற்குத் தகுந்த மாற்றங்களைச் சேர்த்துக் கொண்டு, நம்முடைய முன்னோர்களுடைய அறிவுக் களஞ்சியத்தைப் பயன்படுத்த என்ன தடை?

ஒரு கதையைப் பார்ப்போமா? கதையிலேயே, கொஞ்சம் காரணத்தையும் தேட முடிகிறதா என்று பார்ப்போம்.

இரண்டு பேர் சந்தித்துக் கொண்டார்கள். நாட்டு நடப்பு, அது இது என்று பேசிக்கடைசியில், அவரவர் வீட்டுக் கிணற்றைப் பற்றிப் பேச்சு வந்தது.

ஒருத்தன் சொன்னான்,
"எனக்கு என் அப்பனைப் பிடிக்காது, அவன் வெட்டிய கிணறு, தண்ணீர் என்னவோ நன்றாகத் தான் இருக்கிறது, ஆனாலும் என் அப்பனைப் பிடிக்காததால், அவன் வெட்டிய கிணற்றுத் தண்ணீரை நான் ஒரு நாளும் குடிக்க மாட்டேன்."

அடுத்தவன், பெருமூச்சு விட்டுக் கொண்டே சொன்னானாம்,
"எனக்கு என் அப்பனை ரொம்பப் பிடிக்கும், வீட்டில் அவன் வெட்டிய கிணறு, தூர் வாராமலும், ஊற்று இல்லாததாலும் உப்பாக இருக்கிறது, கலங்கலாகத் தான் கிடைக்கிறது. ஆனாலும், எனக்கு என் அப்பனை ரொம்பப் பிடிக்கும் என்பதால், அந்த கலங்கின உப்புத் தண்ணீரைத் தான் குடிக்கிறேன்"


முதலில் பார்த்த ரொம்ப புத்திசாலி, அப்பனைப் பிடிக்காது அதனால் அவன் வெட்டின கிணற்றுத் தண்ணீர் நல்ல தண்ணீராக இருந்தாலும் குடிக்க மாட்டேன் என்று சொல்லி, இருக்கும் நல்ல விஷயங்களைக்கூட தோற்று நிற்கிற, பிரேக் இல்லாத வண்டி, தான் சேதப் பட்டோ, அடுத்தவரையும் சேர்த்து சேதப் படுத்தி விட்டோ தான் ஓயும்!

அடுத்துப் பார்த்தோமே, அதி புத்திசாலி. மதத்தில், சடங்குகளில் நிறைய நம்பிக்கை, பிரியம்,அப்பனைப் பிடிக்கும், அதனால் அவன் வெட்டின கிணற்றுத் தண்ணீர் கலங்கிப்போன, உப்புத் தண்ணீராக இருந்தாலும், அதை மட்டும் தான் குடிப்பேன் என்று பிடிவாதமாக இருப்பவர்கள், என்ன செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்கிற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாத, சக்கரம் கழன்று போன வண்டி.


ஊர்போய்ச் சேர முடியாது!


இப்படி நாத்திகம பேசுகிறவர்களும், அரையும் குறையுமாக ஆத்திகம் பேசுகிறவர்களும் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்களிடம் இருக்கிற ஓட்டைகளை அடைத்துக் கொள்ள முயற்சிசெய்தால் மட்டுமே, உருப்படியாக ஏதாவது நடக்கும்!

படித்ததும் பிடித்ததும் தலைப்பிற்குப் பொருத்தமான இந்தப் பதிவில் இருந்து:

"அறிவியலின் அடிப்படையாக இருப்பது தேடல். தேடல் மானுடத்தின் முக்கிய வேட்கைகளில் ஒன்று. உணவை, பொன்னை, பொருளை, இணையைத் தேடி ஓடும் மானுடம் தன்னையும் தேடுகிறது. தன் தோற்றத்தை, தன்னைக் கொண்டிருக்கும் பூமியின் தோற்றத்தை, பூமியின் மேல் கவியும் ஆகாயத்தின் தன்மையை அது தேடுகிறது. அத்தேடல் புறத்தும் அகத்தும் நடக்கிறது. அகக்கருவிகளால் புற உலகினை புரிந்து கொள்ள முயல்கிறது மானுடம். பின் தன் அகத்துள்ளும் தேடுகிறது. அற்புத உணர்ச்சியையும் இயலாமையையும் கலவையாய்க் கொண்ட ஓர் உணர்வினால் உந்தப்பட்டு அதன் அகம் விம்முகிறது. அந்த அகப்புலத்திலிருந்து பீறிட்டெழும் ஆவேசக் கவிதைகளில் இறைவர்களும், இறைவிகளும் பிரபஞ்சத்தின் ஆழ்ந்த இரகசியங்களுக்குள் சஞ்சரிக்கின்றனர். அவர்களின் போரும், புணர்ச்சியும், ஆனந்தமும், ஆத்திரங்களும் இயற்கையின் நிகழ்வுகளாக மாறுகின்றன. ஆனால் இந்த தெய்வ வடிவங்களுக்குப் பின்னும் ஒரு பிரபஞ்ச ஒழுங்கியக்கம் உள்ளது. கட்டுமரப் படகுகளைத் தூக்கியடிக்கும் இராட்சத அலை மானுடக் கற்பனையின் வார்ப்புக்களைத் தூக்கியடிக்கும் பிரம்மாண்ட ஒழுங்கியக்கம் அது. மானுட தெய்வங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவற்றைக் கிஞ்சித்து சட்டை செய்யாத அந்த ஒழுங்கியக்கத்தின் முன்னால் மானுடத்தால் மண்டியிட மட்டுமே இயலும். அதனை அறிய முயற்சிப்பதே, அதன் இருப்பை மிக நுண்ணிய பின்னமாகவேனும் உணர்வதே அந்த பிரபஞ்ச ஒழுங்கியக்கத்துக்கு மானுடத்தால் செய்ய முடியும் ஒரே வணக்கம். அதனை ரிக் வேத ரிஷிகள் உணர்ந்தனர். பெயரிடமுடியாத அப்பேரியக்கத்தின் தொடக்கத்தை இருமைகளுக்கு அப்பால் சென்று உணர்ந்திட தலைப்பட்டனர். அவ்வுணர்தலின் அற்புதப் பேருணர்ச்சியை கவிதாவேசத்துடன் வடித்தனர். அந்தப் பெயரிடமுடியாத ஏதோ ஒன்று தம்முள் எழுப்பிய அதே அதிர்வுகளை தன்னுளும் மிகப்பிரம்மாண்டமாகக் கொண்டிருக்க வேண்டுமென உணர்ந்தனர்."

நன்றி, திரு. அரவிந்தன் நீலகண்டன்,

படித்ததும் பிடித்ததுமாக இங்கே இணைப்பில் காணும் பதிவுகளை எழுதிய அனைவருக்குமே எனது நன்றி! வாசிப்பு அனுபவம் என்பது வெறும் அரட்டை என்ற அளவோடு நின்று விடாமல், அதையும் தாண்டி ஒரு சிந்தனை இழையைத் தொடர்ந்து தருவதற்காகவும்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!