"கை" கொடுக்குமா? கழுத்தறுக்குமா? தேர்தல் வினோதங்கள்!

***இந்தப்பதிவை வெளியிட்டபிறகு, இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தை நடத்த அறிவாலயம் சென்ற காங்கிரஸ் ஐவர் குழு, திமுக தலைவரைச் சந்திக்காமலேயே திரும்பிவிட்டதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் மறுபடி பேசவிருப்பதாகவும் தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.




இது தினமணியில் இன்றைக்கு  வெளியாகி இருக்கும் ஒரு செய்திக் கட்டுரை. இந்தக் கட்டுரையில், முதுகெலும்பே இல்லாத காங்கிரசுக்குக் கூட, சீட்டுப்
பேரம் பேசுவதில் வந்திருக்கும் தைரியம், முன்னேற்பாடு பற்றிக் கொஞ்சம் சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன. 

அதைவிட, பாமகவுக்கு ஒதுக்கியிருக்கும் சீட் எண்ணிக்கையை வைத்து, அதற்குக் குறைந்தபட்சம் பன்னிரண்டு சதவீத வாக்குவங்கியாவது இருக்க வேண்டுமே, இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது பாருங்கள்! அதுதான் முக்கியம்!
----------------------------------------------------
கோபத்தில் காங்கிரஸ்; தயக்கத்தில் திமுக!

அஜாதசத்ரு

First Published : 25 Feb 2011 03:22:39 AM IST

காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் கூட்டணி குறித்துத் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுக தரப்பினருடன்
முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்ட நிலையில், பரஸ்பரம் உற்சாகமும், நம்பிக்கையும் அதிகரிப்பதற்குப் பதிலாகச் சந்தேகமும்,
வெறுப்பும் ஏற்பட்டிருப்பதுதான் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றது முதலே
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை திமுக தலைமை எதிர்கொள்வதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
. முதலில், ஐவர் குழுவின் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி. தங்கபாலு, காங்கிரஸ் பத்திரிகைத்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகிய மூவர் மட்டும்தான் முதல்கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த திமுகவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும், மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனும் பேச்சுவார்த்தைக்கு வந்தது முதலாவது அதிர்ச்சியாக இருந்தது.

பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த ப. சிதம்பரம் தனது கையில் பேசவேண்டிய விஷயங்கள் பற்றிய குறிப்புடன் வந்திருந்தது திமுக அணி சார்பில்
வந்திருந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்ட அமைச்சர் துரை முருகன், அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி.

பேச்சுவார்த்தைக்குப் புறப்படுவதற்கு முன்பே சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியது ஐவர் குழு. 

பெருவாரியான தொண்டர்களின் மனோநிலை இந்த முறை கூட்டணி ஆட்சிக்கான உத்தரவாதம் இல்லாமல் காங்கிரஸ் தேர்தல் களத்தில் இறங்கக்கூடாது என்பதுதான்.

""நாங்கள் ஏற்கெனவே கூட்டணியில் இருக்கிறோம். அன்னை சோனியா காந்தியே "எதிரிகளை மன்னிக்கலாம், ஆனால் துரோகிகளை மன்னிக்கக் கூடாது' என்று தன்னிடம் கூறியதாகக் கூறிய முதல்வர் கருணாநிதி, காங்கிரஸூடனான கூட்டணியை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகுதானே பாமக-வைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்க வேண்டும்?'' என்பது காங்கிரஸ் தரப்பில் பரவலாக எழுப்பப்படும் கேள்வி.

"31 இடங்களை ஒதுக்குவது என்றால், அது ஏறத்தாழ 12% வாக்குகளுக்குச் சமம். பாட்டாளி மக்கள் கட்சிக்கு அவ்வளவு வாக்குகள் இருக்கிறதா?'' என்பது
இன்னொரு தொண்டரின் ஆவேசக் கேள்வி. இந்த மனக்குறைகளை உள்ளடக்கிய நிலையில்தான் ஐவர் குழு, திமுக தரப்பை சந்தித்துத் தனது கோரிக்கைகளைப் பட்டியலிட்டது.

234 தொகுதிகளில் திமுக குறைந்தது 140 தொகுதிகளிலாவது போட்டியிடுவது என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. மீதமுள்ள 94 இடங்களில் பாமகவுக்கு 31 இடங்களையும் ஒதுக்கிவிட்ட நிலையில், இருப்பது வெறும் 63 இடங்கள்தான். கடந்த முறை அதிமுக கூட்டணியில் 9 இடங்களைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்கும் 15 இடங்கள் இல்லாவிட்டாலும் குறைந்தது 10 இடங்களை ஒதுக்கினாலும் மீதமிருப்பது 53 இடங்கள் மட்டுமே. கடந்தமுறை 48 இடங்களில் போட்டியிட்டு 34 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதலாக 5 இடங்களை அளித்து 53 இடங்களில் போட்டியிடச் செய்வதுதான் திமுகவின் திட்டம் என்று, திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 31 தொகுதிகள் என்பது 5 மக்களவைத் தொகுதிக்குச் சமம். கடந்த மக்களவைத் தேர்தலின் அடிப்படையில் பார்த்தால், 15 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸூக்கு 90 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறார்கள். கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கைப்படி, ""ஒரு மக்களவைத் தொகுதிக்கு 2 இடங்கள் என்று பெற்றுக்கொண்டாலும், காங்கிரஸூக்கு 78 இடங்கள் தரப்பட வேண்டும் என்பதுதானே நியாயம்?''

கடந்த தேர்தலில் இருந்த நிலையில் திமுக இப்போது இல்லை. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் ஆளும்கட்சியின் ஒரே கவசம் காங்கிரஸ் மட்டும்தான். ""இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும், நாங்கள் கூட்டணிக் கட்சி என்பதால் "கை' கொடுக்கும்போது, அதற்குத் தகுந்தாற்போல இடங்களையும் திமுக தரத்தானே வேண்டும்?'' என்கிற காங்கிரஸின் கோரிக்கை திமுக தலைமையை எரிச்சலூட்டாமல் என்ன செய்யும்?

"ஒவ்வொரு முறையும் ஆட்சியைக் கைப்பற்றவும், குறைந்தபட்சம் ஆட்சியில் பங்கு பெற்று அதன் மூலம் கட்சியைத் தமிழகத்தில் மீண்டும் பலப்படுத்தவும்
கிடைத்த வாய்ப்புகளை, எங்கள் தலைமை நழுவவிட்டு விட்டது. இந்த முறையும் எங்களது முதுகில் ஏறி அவர்கள் வெற்றிக்கனியை எட்டிப் பிடித்து விட்டு, எங்களைத் தோளில் சவாரி செய்கிறோம் என்று நையாண்டி பேச விடுவதாக இல்லை'' என்பது காங்கிரஸ் தொண்டர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. தாங்கள் அதிக இடங்களில் போட்டியிடுவதும், திமுக முன்பை விடக் குறைந்த இடங்களில் போட்டியிடுவதும்தான் கூட்டணி ஆட்சிக்கு வழிகோலும் என்கிற காங்கிரஸின் கணக்கு, திமுகவிடம் வைத்திருக்கும் கோரிக்கையில் தெரிகிறது.

"வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்று அறிவிப்பு. மூன்றில் ஒரு பங்கு, அதாவது 78 இடங்கள். வெற்றிபெற்று அமைச்சரவை அமைத்தால் அதிலும் மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள். குறைந்தபட்ச செயல்திட்டம். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு என்று பல நிபந்தனைகளைக் காங்கிரஸ் திமுகவுக்கு விதிப்பதாகவும், இதைக் கேட்டு திமுக தரப்பு விதிர்விதிர்த்துப்போய் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

முதல்வர் கருணாநிதி தில்லி சென்று, சோனியா காந்தியைச் சந்திக்கச் சில மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதுதான் வெளியில் வந்த செய்தி. கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்த ராகுல் காந்தியும் தங்களது சந்திப்பின்போது இருக்க வேண்டும் என்று சோனியா விரும்பியதுதான் இந்தக்
காத்திருப்புக்குக் காரணம் என்பது பலருக்கும் தெரியாது. மேலும், காங்கிரஸின் கோரிக்கைகள் அனைத்துமே ராகுல் காந்தியின் ஒப்புதலுடன்தான்
வைக்கப் படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

"திமுக தரப்பு எங்களது கோரிக்கையை நிராகரிப்பதால் நஷ்டம் திமுகவுக்குத்தான். எங்களுக்கு இப்போதும் பதவி இல்லை. தனியாகப் போட்டியிட்டாலும் பதவி இல்லை, அவ்வளவுதானே. 1977-ல் நாங்கள் தனித்துப் போட்டியிட்டபோது 27 இடங்களிலும், 1989-ல் தனித்துப் போட்டியிட்டபோது 26 இடங்களிலும் வெற்றி பெற்றோம். 2001-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது தமாகாவும் காங்கிரஸூமாக 30 இடங்களிலும், 2006-ல் திமுக கூட்டணியில் போட்டியிட்டபோது 34 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.  இந்த முறை மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட்டாலும் ஏறத்தாழ அதே இடங்களில் வெற்றிபெற முடியும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர் ஒருவர்.

ஒருவேளை திமுக தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் தயங்காது என்று தில்லியிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளும் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமானால், அதிமுகவுடன் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் தேமுதிகவேகூட அந்த அணிக்கு வரக்கூடும். ஏன், அதிமுகவே, காங்கிரஸூடன் கூட்டணி ஆட்சிக்குப் பச்சைக்கொடி காட்டக்கூடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டனர்.

"காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும் சரி, அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் சரி, பரஸ்பரம் இருக்கும் நட்புறவும் தோழமையும், திமுகவுக்கும்
காங்கிரஸூக்கும் கிடையாது.  தலைவர்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் வேண்டாவெறுப்பாகத் கைகோத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மனத்தளவில் தொண்டர்கள் அதிமுக - காங்கிரஸ் உறவைத்தான் விரும்புகிறார்கள்'' என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஐந்து ஆண்டுகள் "மைனாரிட்டி' ஆட்சி நடத்திய திமுக, காங்கிரஸூக்கு அதிக இடங்களைத் தராமல் இருக்க "சதி' செய்கிறது என்கிற குமுறலும் கோபமும் காங்கிரஸôர் மத்தியில் பரவலாகவே காணப்படுகிறது. காங்கிரஸ் தலைமையும் திமுகவிடம் பல பிரச்னைகளில் கோபமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், திமுக வகுக்கும் வியூகம்தான் என்ன?

நாளை: திமுகவின் தயக்கம்!

--------------------------------



நங்கவள்ளி: தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழாவில், தி.மு.க., அமைச்சர், பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையிலேயே, அவர்களது கட்சி நடவடிக்கையை, "புட்டு புட்டு' வைத்தார். இது, மேடையில் இருந்த சேலம் மாவட்ட பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

இங்கே



கூட்டணி தர்மம் எல்லாம் காங்கிரசோடு மட்டும் தான் போல இருக்கிறது! பாமக வேறுவழி, போக்கிடம் இல்லாமல் சகித்துக் கொள்ள வேண்டியதுதான் போல!!

இதுவரை இருந்த இது இங்கே அது எங்கே என்ற கேள்விகளுக்கு  முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் காங்கிரசோடு திமுக இரண்டாவது கட்ட சீட் பேரத்தை இன்றிரவு நடத்துகிறது. ரொம்பவுமே சிலுப்பிக் கொண்டிருந்த தேதிமுக, அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது. மூன்றாவது அணி அல்லது ஒரு மாற்று ஏற்பாடுக்கு, ரிஸ்க் எடுக்க எவருமே தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

தேர்தல் களம் ரெடியாகிறது!

என்ன செய்யப்போகிறீர்கள்? இன்னும் இலவசங்களில், வெற்று வாக்குறுதிகளிலேயே ஏமாந்து கொண்டிருக்கப் போகிறீர்களா?

விழித்துக் கொள்ளப் போகிறீர்களா? கொஞ்சம் உரக்கச்சொல்லுங்களேன்!!



அன்னை பிறந்தாள்! எங்கள் அன்னை பிறந்தாள்!

அன்னை பிறந்தாள்! எங்கள் அன்னை பிறந்தாள்!

The Mother's Birthday - 21st February 2011
 
நாளை, 21 ஆம் தேதி புதுவை ஆசிரமத்திற்கு நேரில் செல்ல முடிகிறவர்களுக்கு வழங்கப்படும் தரிசன நாள் செய்தி! இதனுடன்,  பூக்களும் பிரசாதமாகக் கிடைக்கும்! சமாதியைச் சுற்றி அமர்ந்து கூட்டுத் தியானம் செய்கிற நல்ல வரமும், அன்னையின் அறைக்குச் சென்று, அன்னையின் அருளே இன்றைக்கும் சூக்குமமாகச் செயல்படுவதைப் புரிந்துகொள்கிற உன்னதமான அனுபவமும் கிடைக்கும்.

 
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.

எனது கரணங்கள், மனம் ஜீவன் அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்.

ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் உனது ஒளியையே வேண்டி நிற்கிறேன்.

ஒவ்வாத எண்ணங்களோடும் செயல்களோடும் இருக்க நேரிடும் போது கூட
அன்னை என்னோடு இருக்கிறாள்! அவள் என்னைப்பார்த்துக் கொள்வாள் !
இந்த ஒரு நம்பிக்கையே என்னைச் சரிந்து விடாமல் காப்பாற்றி வருகிறது.
எண்ணமும் எழுத்தும் உன்னதே என்று இருக்கும் பரம சுகநிலை அருள்வாய்!
புதுவையிலோ, உனது இருப்பிடத்திற்கு அருகிலோ இருக்கும் வாய்ப்பு இல்லை.

ஆனாலும் உனது அருளும்  ஒளியும்  இங்கேயும் நிறைந்திருப்பதைஅறிகிறேன் அம்மா!

அருளுக்கும் ஒளிக்கும் தூரம் ஏது? உனக்கும் எனக்கும் தடைச் சுவர்கள் தானேது?

நாளைக் காலையில் உன்னுடைய தரிசனம் வேண்டி வரிசையில்  நிற்கும் அடியவர் பலருடன், என்னுடைய இந்தப் பிரார்த்தனை மலர்களும் சேர்ந்து நிற்கும்!

என்னையும் உனது அன்பிற்குத் தகுதியான குழந்தையாக ஏற்றுக்கொள்வாய் அம்மா!
 
இதுவே இன்றைக்கும் நாளைக்கும், அப்புறம் என்றைக்கும் நான் வேண்டும் வரம்!



ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி , சத்யமயி பரமே !






 

தீர்ப்புகளும் தீர்வுகளும் ....!தினமணி தலையங்கம்

தினமணி தலையங்கம்: தீர்ப்பு அல்ல தீர்வு!

First Published : 19 Feb 2011 12:47:56 AM IST


"டந்த சில நாள்களாக எகிப்து புரட்சி, ஆன்டிரிக்ஸ்-தேவாஸ் எஸ்-பாண்டு ஸ்பெக்ட்ரம் ஒப்பந்தம், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் கூட்டணிப் பேச்சுகள், தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது என பல்வேறு பிரச்னைகளின் தீவிரத்தில், கவனம் பெறாமல் போன சம்பவங்களில் ஒன்று - கர்நாடக மாநிலத்தில் 5 சுயேச்சை எம்எல்ஏ-க்களின் தகுதிநீக்கம் செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. 

ர்நாடக மாநிலத்தில், பாஜக ஆட்சிக்கு எதிராக சில ஆளும்கட்சி எம்எல்ஏ-க்கள் புறப்பட்டபோது, அவர்களுடன் சேர்ந்து கொண்ட 5 சுயேச்சை எம்எல் ஏ-க்களும் பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கர்நாடக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். அக்டோபர் 10-ம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும் சிலநிமிடங்களுக்கு முன்பாக, தங்களுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ-க்களை பதவியிலிருந்து நீக்குவதாக சட்டப்பேரவைத் தலைவர் கே.ஜி. போப்பையா அறிவித்து, அவர்களை வெளியேற்றிய பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தப்பிப் பிழைத்தது. 

பாஜக எம்எல்ஏ-க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நீக்கம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், சுயேச்சை எம்எல்ஏ-க்களை எப்படிக் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்ய முடியும் என்பதே பெரிய கேள்வியாக இருந்தது. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, கர்நாடக நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இவர்கள் 5 பேரையும் பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்த உத்தரவு செல்லும் என்று உறுதிப்படுத்தி இருக்கிறது. இன்றைய அரசியல் சூழலில் சுயேச்சை மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு குறித்த மாற்றுச் சிந்தனையை உறுதி செய்துள்ளது என்பதால் இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை. 

டியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு தந்த 5 எம்எல்ஏ-க்களும் பாஜக கட்சியின் அங்கத்தினராக இல்லை என்றாலும்கூட, அரசின் முக்கிய பொறுப்புகளை வகித்ததோடு, பாஜக கட்சிக் கொறடாவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டதாலும், சட்டப்பேரவை பாஜக உறுப்பினர்களின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாலும், இவர்களைக் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்தது சரியே என்று கூறப்பட்டுள்ள இத்தீர்ப்பு, இனி எந்தவொரு சுயேச்சை எம்எல்ஏ-வும் அரசுக்கு ஆதரவு தந்துவிட்டு, ஆட்சியில் லாபமும் பெற்ற பிறகு, மேலும் ஒரு கூடுதல் ஆதாயத்துக்காக விலைபோகவும் ஆட்சிக்கு எதிராகத் திரும்பவும் முடியாது என்பதைச் சூடுபோட்டதுபோல மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டது. 

நிபந்தனையற்ற ஆதரவு என்று தெரிவித்த பின்னர் அந்த ஆட்சிக் காலம் முழுவதற்கும் உடன் நிற்கவும், அதன் தவறுகளுக்குப் பொறுப்பேற்கவும் வேண்டும் அல்லது ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன், ஆனால் அதன் தவறுகளுக்குப் பொறுப்பேற்க மாட்டேன் என்று அறிவித்து விலகி நிற்கவாகிலும் வேண்டும். இதைச் செய்யாமல், எதிர்க்கட்சியின் மகிழ்ச்சிக்காக சோரம் போவது, மக்களாட்சித் தத்துவத்தையே கேலிக்கு உள்ளாக்குகிறது என்பது உண்மையே. 

ந்தத் தீர்ப்பு சுயேச்சை எம்எல்ஏ-க்கள் குறித்தது என்றாலும்கூட, இதனை இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தினை ஆன்ம உணர்வுடன் பார்க்கும்போது, கூட்டணிக் கட்சிகளுக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. சுயேச்சைகள் தேர்தலுக்குப் பிறகுதான் ஒரு அரசுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால், கூட்டணிக் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே மக்களிடம் நாங்கள் ஓர் அணி என்று காட்டிக் கொள்கின்றன. இந்தக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தனித்து போட்டியிட்டால், ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாது என்பது திண்ணம். ஆனால், அந்தக் கட்சிக்கு மற்ற கட்சிகளின் ஆதரவாளர்களும் வாக்களிக்கின்றனர் என்பதும், அதனால்தான் இவர்களால் வெற்றியே பெற முடிந்தது என்பதையும் கணக்கில் கொண்டால், அந்தக் கூட்டணி ஆட்சியில் அமரும்போது அதனுடன் கடைசி வரையிலும் இவர்கள் இருந்தே ஆக வேண்டும் என்பதுதான் நியாயம். 

ருவேளை அந்தச் சிறிய கட்சிக்கு, ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் மக்கள் விரோதமாகச் செயல்படுவதாகத் தோன்றினால், ஆட்சிப் பொறுப்பு, அமைச்சர் பொறுப்புகளைத் துறந்துவிட்டு விலகி நிற்கலாமே தவிர, கூட்டணியைவிட்டு வெளியேறி, இன்னொரு அரசுக்கு கட்சி என்ற அளவில் ஆதரவு தெரிவிப்பது சரியாக இருக்க முடியாது. ஆகையால், இது ஒரு நம்பிக்கைத் துரோகம், கட்சித் தாவல் என்றும் சொல்ல இடம் இருக்கிறது. 

ட்சித் தாவல் தடுப்புச் சட்டம் பற்றிய மறுசிந்தனை நிச்சயமாகத் தேவைப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், மக்கள் பிரதிநிதிகளைப் பற்றித்தான் பேசுகிறதே தவிர, கட்சிகளைப் பற்றிப் பேசவில்லை. கட்சியின் சின்னத்தில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவரின் முதல் கடமை தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதியின் வாக்காளர்களுக்குச் சேவை செய்வதுதானே தவிர, கட்சிக்கு விசுவாசமாக இருப்பது என்பது முரண்.

வெகுஜன விரோத அரசு அல்லது செயல்பாடுகளைக் கட்சித் தாவல் தடை சட்டம் பாதுகாக்கிறது என்கிற குறைபாட்டையும் மறுப்பதற்கில்லை. 

வறான நபர்களைத் தங்களது வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்காத அளவுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை 64 ஆண்டுகளாகியும் நாம் ஏற்படுத்தாமல் இருப்பதுதான் மிகப்பெரிய குறை. கட்சித் தாவல் தடை சட்டம் பற்றிய மறுபரிசீலனையும், மக்களாட்சித் தத்துவம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படாத நிலையில், இந்தத் தீர்ப்பு ஏற்புடையது. ஆனால், நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்படியும், சட்டத்தின் பயமுறுத்தலினாலும் மக்களாட்சியை நிலைநிறுத்திவிட முடியாது.

டையறாத விழிப்புணர்வு மட்டும்தான் மக்களாட்சியின் மிகப்பெரிய பாதுகாப்பாக இருக்க முடியும்"

தொலைக்காட்சிகள் வந்த பிறகு, அச்சு ஊடகங்கள், குறிப்பாக நாளிதழ்களில் தலையங்கம் வெளியாவது, அது வாசகருக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது கவனத்தை ஈர்ப்பதாகவும், எது சரியாக இருக்கும் என்பதைப் பயிற்றுவிக்கும் தளமாகவும் இருந்ததெல்லாம் கதையாய்ப் பழங்கனவாய்ப் போய்விட்டது. இன்றைக்கு நாளிதழ்களில் தலையங்கங்கள் அவ்வளவாக வெளியாவதில்லை, வாசகர்களும் அப்படி ஒன்று  இருந்ததே, இப்போது காணோமே என்று தேடுவதில்லை.உண்மையைச் சொல்லப்போனால், தன்னை வெகுவாகப் பாதிக்கிற ஒரு அரசியல் நிகழ்வு அல்லது ஊழல் பற்றிய செய்திகளில் கூட, ஒரு பொழுதுபோக்கும் அம்சத்தை, டீக்கடைகளில் வெறும் பேச்சாகப் பேசிவிட்டு அப்புறம் மறந்து போய்விடுகிற ஒன்றாகத் தான்,நாம் தொடர்ந்து மூளைச்சலவை செய்யப்பட்டு மழுங்க அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மிழில் வெளியாகும் நாளிதழ்களில் தினமணி ஒன்று தான் இன்றைக்கும் கொஞ்சம் பொறுப்பான விதத்தில் செய்திகளையும், பொறுப்புள்ள தலையங்கங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. சர்குலேஷன் அடிப்படையை வைத்துப் பார்த்தால், தினமணிக்கு இன்றைய நிலவரப்படி, குறிப்பிட்டுச்சொல்கிற இடத்தை தமிழக மக்கள் அளிக்கவில்லை என்றுதான் சொல்லத் தோன்றும். 


னால், புறக்கணித்துவிட முடியாதபடி வீரியத்துடனும், நேர்மையுடனும் தினமணி நாளிதழின் தலையங்கங்கள் இருப்பதால் தான், அவ்வப்போது இந்தப்பக்கங்களில் வெளிவருகின்றன.

வீரியத்தைத் தாங்க முடியாததனால் தான், சில அரசியல் தலைகள், எழுத்தில் இருக்கும் விஷயங்களை விட்டு விட்டு, எழுதியவரின் ஜாதியைத் தொட்டுப் பேசி,சொல்லப் பட்டவைகளில் இருந்து திசைதிருப்பும் வேலைகளைச்  செய்து கொண்டிருப்பது, சராசரி மனிதனுக்குப் புரிந்துமே கூட அதைக் குறித்து ஒன்றும் செய்ய முடியாதவனாக இருப்பது,ஒரு சமுதாயத்துக்கு நல்லது அல்ல.

ங்கே போகிறோம்? ன்ன செய்யப் போகிறோம்?


 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் "அறிவும் நம்பிக்கையும்"!



இணையத்திலேயே ஆர்டர் செய்கிற வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்த பிறகு,சமீபகாலமாக புத்தக் கடைகளுக்குச் சென்ற புத்தகம் வாங்குகிற வழக்கம், அநேகமாகக் காணாமலேயே போய்விட்டது. 

என்னதான் இணையத்தில் சுளுவாக வாங்க முடிந்தாலும், நேரடியாகப் புத்தகக் கடைக்குச் சென்று, நூலை கொஞ்சம் புரட்டிப் பார்த்து புத்தம்புதிய காகித மணம், அச்சு நேர்த்தி, உள்ளடக்கம் இவற்றை அவதானித்து வாங்குகிற சுகத்துக்கு இணையாகுமா?

இணையத்தில் தமிழ்ப் புத்தகங்களை வாங்குவதில் உள்ள பெரிய சிக்கல். நாம் ஒரு நல்ல புத்தகத்தை வாங்குகிறோமா, அல்லது குப்பையையா என்று தெரிந்து கொள்ள முடியாது.புத்தகத்தைப் பற்றி, புத்தக ஆசிரியரைப் பற்றிப் பதிப்பகத்தாரும் சரியான தகவல்களைத்தருவதில்லை. புத்தக விமரிசனங்கள் என்பது தமிழைப் பொறுத்தவரை இன்னமும் சரியாக வளராத ஒரு துறைதான்.ஆக, இங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் விமரிசனங்களை வைத்து மட்டும் ஒரு புத்தகத்தைப் பற்றி எடைபோட முடியாது என்பது தான்!

அந்தவகையில் புத்தகக் கடையில் நேரே சென்று, புத்தகங்களைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்து, அதை எழுதியவரின் நடை, சொல்லப்படுகிற விஷயம், சொல்லப்படும் விதம் எல்லாவற்றையும் அவதானிப்பது மிகவும் அவசியமாகிறது.

சமீபத்தில் மதுரை, சர்வோதய இலக்கியப் பண்ணைக்குச் சென்று, ஒரு சிறிய போராட்டத்தை  நடத்திய பிறகு வாங்கிய நூல்களில் ஸ்ரீரங்கம் வி மோகன ரங்கன் எழுதிய இந்தப் புத்தகமும் ஒன்று! இந்தப்பக்கங்களில் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் மோகனத்தமிழை பலமுறை மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்துக்கு நன்றி சொல்லியும், பலமுறை சொல்லாமலும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

இப்போது தமிழ்வாசல் கூகிள் வலைக் குழுமத்துக்கு நன்றியுடன்! 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதிய இந்தப் புத்தகத்துக்கு விமரிசனமாகத் திருமதி பவளசங்கரி அவர்கள் ஓர் இழையில் எழுதியதை, விருந்தினர் இடுகையாக அளிப்பதில் சந்தோஷம் கொள்கிறேன். இப்போதும் கூட, தமிழ் வாசல் குழுமத்திடமோ, திருமதி பவளசங்கரியிடமோ அனுமதி கேட்கவில்லை. அவர்கள் இதைப் பகிர்ந்துகொள்வதில் எந்த ஆட்சேபமும் தெரிவிக்க மாட்டார்கள் என்கிற தைரியம் தான்!!

தவிர ஏற்கெனெவே நீண்ட நாட்களுக்கு  முன்னால், விருந்தினர் இடுகையாக எவரேனும் எழுத முன்வந்தால் சந்தோஷத்தோடு பகிர்ந்து கொள்ளத்தயாராக இருப்பதை ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். 

இப்படி சுட்டுப் போட்டாலாவது, எவரேனும் விருந்தினர் இடுகை எழுத முன் வருகிறார்களா என்ற நப்பாசைதான்!




அறிவும் நம்பிக்கையும்:

பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன்

- ஆசிரியர் திரு ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் அவர்கள்.


திரு இராஜகோபாலாச்சாரி அவர்கள் கூறிய, இந்து மதத்தையும், இந்தியாவையும் காப்பாற்றியவரே சுவாமி விவேகானந்தர்தான் என்பதையும், சுவாமிஜியின், சிகாகோ பயணச் சொற்பொழிவுகளின் மாபெரும் வெற்றியையும், உலகெங்கும் சுற்றியலைந்து, தாய்த்திரு நாட்டிற்குத் திரும்பியபோது, இந்தியாவின் ஆன்மாவே திரும்பி வந்துவிட்டதாக புளங்காகிதமடைந்த இந்திய மக்களின் மன நிலையையும், நடு நிசி நேரம் தன்னுயிர் பிரியும் வேளையில், [ஆகஸ்ட் 16, 1886]  தன் ஆன்ம சக்திகள் அனைத்தையும் தன்னுடைய மிக நெருக்கமான சீடரான நரேந்திரருக்குத் தாரை வார்த்துக் கொடுத்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வள்ளல் வரை பல விசயங்கள் நமக்குப் பரிச்சயமானதாக இருப்பினும், ஆசிரியரின் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அனைத்தையும் பார்க்கும் போது, பல்வேறு சிந்தனைகள் நம் மனதிலும் விரிவதையும் தடுக்க இயலவில்லை. ஒரு நல்ல நூலின் இலக்கணம் ஒரு வாசகனை கண்மூடித் தனமாக நம்பச் செய்வதை விட, சுயமாக சிந்திக்கத் தூண்டச் செய்வதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்நூல் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

சுந்தரத் தமிழ் துள்ளி விளையாடும் படைப்பு! 
“இரவும், பகலும் முடைந்து நெய்யப்பட்ட ஆடையாய்ச் செல்கின்றன நாட்கள் .............. அறிவும், அறியாமையுமாய்ச் செல்கிறது மனிதனின் முன்னேற்றப் பாதை” ................. இப்படி முன்னுரையின் முதல் வரியிலேயே வார்த்தை ஜாலங்கள் கொண்டு, வாசகர்களை சுண்டியிழுக்கும் நுண்கலை கற்றவர் என்று நிரூபிக்கிறார் ஆசிரியர்.

பறக்க எத்தனிக்கும் தன் குஞ்சுகளைக் காக்கும் பொருட்டு, பெற்ற காக்கைகளின் பரிதவிப்பை, ஒரு கவிதையாக மாற்றியமைத்த பாங்கு, கையில் எடுத்த நூலை கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டுகிறது.

பதஞ்சலி யோக ஸூத்திரம் தொடங்கி, ஆதாம் ஏவாள் வரை மனம் படுத்திய பாட்டினால், சபிக்கப்பட்ட மனிதனின் நிலையை அழகு கவிதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர். ‘தான்’ என்ற அகங்காரம் தொலைந்தால்தான் மெய்ஞ்ஞானம் சித்திக்கும் என்பதனை விவரித்திருக்கும் விதம் தெளிந்த நீரோடை..

“அந்த அனுபவங்களின் விஷத்தையெல்லாம் குடித்துக் கழுத்தில் தேக்கியபடி இந்து சமுதாயத்தின் உன்னதத்தையும், இந்து மதத்தின் ஆக்கப்பூர்வமான உயிர்வடிவத்தையும் தம் உணர்வுக் கண்னால் கண்டு, உள்ளம் கசிந்து காதலாகி வந்துற்ற தீங்கிற்கு நெஞ்சம் விதிர்த்துக் கண்ணீர் மல்கி, உயர்வையே எடுத்துரைத்த நரேந்திரனின் பக்குவம் வியத்தற்குரியது”, என்று ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

ஆசிரியர் உள்ளம் உருக, அத்துணை உணர்வுகளையும் சொல்லால் வடித்து, வாசகரை மெய்சிலிர்க்கச் செய்திருப்பதும் நிதர்சனம்.

ஆலகாலத்தை கண்டத்தில் தாங்கிய சிவபெருமானை முன்னிறுத்தியிருக்கும் பாங்கு அவர்தம் ஆன்மீக உணர்வையும் பிரதிபலிக்கிறது.

ஒரு சில இடங்களில் ‘ பரிவ்ராஜக வாழ்க்கை’ போன்று வடமொழிப் பயன்பாடு இருந்தாலும், அதற்கான தமிழாக்கமும் வாசகருக்குப் புரியும் வண்ணம் எளிய நடையில் வழங்கியிருப்பதும் சிறப்பு.

படிப்பறிவற்ற வாழ்க்கையை ‘ஊருண்கேணி’ என்று உவமைப்படுத்திய விதம் அற்புதம்.

” அறிவு என்பது முதலில் நம்பிக்கைகளின் தளைகளை அவிழ்க்கும், சிறைப்படுத்தும் வழக்க நெறிகளினின்றும் மனிதனை புறத்தனாக்கும் “ - என்ற ஆசிரியரின் கூற்று, Bertrand Russellன் "Useless Knowledge ", என்ற கட்டுரையை நினைவு கூறும் விதமாக அமைந்துள்ளது.

நரேந்திரர், விவேகாநந்தராக மாறிய சந்தர்ப்பத்தை நயம்பட எடுத்து உரைத்திருக்கின்றார்.

நரேந்திரர் மதக்கல்வியை கையாண்ட விதம் பற்றிய ஆசிரியரின் பார்வை வாசகரையும் சிந்திக்க வைக்கக் கூடியதாகவே உள்ளது.

வேதாந்தம் அமைப்பியல் குறித்த ஆசிரியரின் ஆழ்ந்த ஞானம் வியப்பில் ஆழ்த்துகிறது. " வேதத்திலேயே வந்திருந்தாலும் அறிவுக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே ஏற்கத் தகுந்தது’, என்ற ஆசிரியரின் தீர்ப்பு பாரபட்சமற்றது.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கல்வியின் விடியலில் மகிழ்ந்து அறிவியக்கக் கதிர்களில் குளித்த நெஞ்சங்களின் சூழலை, மனோத்தத்துவ முறையில் ஆய்ந்தறிந்து விளக்கமளித்துள்ளது வரவேற்கத்தகுந்தது.
ஆண்டவன் மீது பக்தர்கள் கொள்ளும் பக்தியை காதலன், காதலி மீது கொள்ளும் தீராக் காதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன வேதாந்தப் போக்கும் காணப்  பெறுகிறது.கடவுளின் அருகில் எளிதாகச் சென்றடையும் மார்கத்தை மேலும் எளிதாக்க முயற்சித்திருக்கிறார் ஆசிரியர்.
பிரம்மம் சத்யம், உலகம் மாயை, ஜீவன் பிரம்மமே என்ற அத்வைதத்திற்கு ஆசிரியரின் வியாக்கியானம் தேர்ந்த ஞானமுள்ளதாகவும் பல இடங்களில் ஓஷோவின் தத்துவங்களோடு ஒத்துப் போவதாகவுமே உள்ளது.

விசிஷ்டாத்வைதத்தையும் விட்டுவைக்கவில்லை இந்த வித்தகர். ஸ்ரீநாத முனிகள் அருளிய மறைந்து போன ‘யோக ரகஸ்யம்’, நூல் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சங்கப் புலவர்களின் பார்வையில் காதல் மற்றும் காமத்தின் விளைவுகள், அன்பின் ஐந்திணை என்ற குறியீட்டால் அடி முதல் நுனி வரை அலசி ஆய்ந்திருக்கிறார்.

விவேகாநந்தரின் உபதேசங்களை ஊடுறுவி அதனைத் தெளிவுற தம் பாணியில் விளக்கியுள்ளார். ஒரு வேறுபட்ட கோணத்தில், ஹெர்மன் ஹெஸ்லேயின் ‘சித்தார்த்தாவில்’, சித்தார்த்தனின் தனிமையை வெகு நேர்த்தியாக விவேகாநந்தரின் தனிமையுடன் ஒப்பிட்டு , அதன் ரணம் குறித்தும் விவரித்திருக்கிறார்.

உணர்ச்சிச் சூழல்களும், அறிவுச் சுடர்களும் மாறி மாறி வரும் ஒரு பின்னிப் பிணைந்த ஆளுமையாக நம்மில் பதிவு பெறுகிறவர் விவேகாநந்தர் என்ற ஆசிரியரின் கூற்று ஏற்புடையதாகவே உள்ளது.

விவேகாநந்தரையும், நரேந்திரரையும் இரு வேறு உயிர்களாக உருவகப்படுத்தி, இருவரையும் ஒப்புமைப்படுத்தி, இரண்டிற்குமான பிணக்கத்தையும் துல்லியமாக எடுத்துக் காட்டியிருப்பதிலும் வெற்றி கண்டுள்ளார் என்றே கூறலாம்.

மேலை நாட்டு மத நம்பிக்கைகள், அராபிய தத்துவ அறிஞர் அவர்ரோஸ், கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில், அக்லினாஸ் இப்படி அனைவரின் தத்துவங்களையும் அலசி ஆயத் தவறவில்லை இந்த தத்துவ ஞானி.

சுருங்கச் சொன்னால், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள் மட்டுமன்றி உலகின் பெரும்பாலான மதங்களையும்,  தத்துவ ஞானிகளையும் கலந்தாய்ந்து தம் கருத்துக்களையும் உள்ளிருத்தி ஒரு அரிய படைப்பாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

‘பிற்றை நிலையில் சிந்திக்கும் பொழுது’, என்ற அழகிய தலைப்புடைய இறுதி அத்தியாயம், இம்முழு நூலின் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறதென்றால் அது
மிகையாகாது.மஜீம்தாரின் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய கட்டுரையை , அதன் உணர்வலைகளில் ஏதும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்ற உந்துதலினாலோ என்னவோ அதனை அப்படியே ஆங்கிலத்திலேயே அளித்துள்ளார்.

குறிப்புதவி நூல்கள் என்று 67 பெயர்கள் கொண்ட ஒரு பெரும் பட்டியலையே குறிப்பிட்டும், மனம் நிறைவடையாத ஆசிரியர், “இப்படியா அப்படியா என்று தீர்ந்துவிடாத இத்தகைய தொல்லை இன்பமான அவஸ்தையில் இருந்து கொண்டு தான் இந்த நூலாக்கம் வெளிவருகிறது”, என்று முடித்திருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு, திரும்பவும் முதல் பக்கம் நோக்கி பார்வையைத் திருப்பவும் வைக்கிறது....................

இந்த நூல் உண்மையிலேயே மனித குலத்தின் மிகப் பெரிய சமன்பாடுகளில் ஒன்றின் தீர்வு என்பதிலும் மிகையில்லை !!

88 பக்கங்கள் கொண்ட, தமிழினி வெளியிட்டுள்ள இந்நூலின் விலை ரூ.55.

இதை எழுதிய திருமதி.பவள சங்கரிக்கு நன்றியுடன்!

இந்த இழையில் திருமதி பவளசங்கரியின் விமரிசனத்துக்குத் திரு ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஒரு பதில் எழுதியிருந்தார். விமரிசகரின் பார்வைக்குத் தப்பிய சில விஷயங்களைத் தெளிவு படுத்தியதாக இருந்த அந்தப் பதிலையும் காணலாம்!

1)  பதஞ்சலி யோக ஸூத்திரம் தொடங்கி, ஆதாம் ஏவாள் வரை மனம் படுத்திய பாட்டினால், சபிக்கப்பட்ட மனிதனின் நிலையை அழகு கவிதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர். ‘தான்’ என்ற அகங்காரம் தொலைந்தால்தான் மெய்ஞ்ஞானம் சித்திக்கும் என்பதனை விவரித்திருக்கும் விதம் தெளிந்த நீரோடை..


2)படிப்பறிவற்ற வாழ்க்கையை ‘ஊருண்கேணி’ என்று உவமைப்படுத்திய விதம் அற்புதம்.


--- இங்கு வெறும் படிப்பறிவற்ற வாழ்க்கையௌக் குறிக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையைக் குறித்தது.


3)‘ வேதத்திலேயே வந்திருந்தாலும் அறிவுக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே ஏற்கத் தகுந்தது’, என்ற ஆசிரியரின் தீர்ப்பு பாரபட்சமற்றது.


இது ஆசிரியரின் தீர்ப்பு அன்று. வேதாந்தத்தின் தீர்ப்பு. அதைத்தான் வியந்து ஆசிரியரும் விளக்கியிருக்கிறார். மிகப் பழஙகாலத்திலேயே இவ்வாறு அறிவின்  கறார்தனங்களை மிகக் கச்சிதமாக வேதாந்தம் அறுதியிட்டு உரைத்துவிட்டது என்பதும் அதை மழுங்க அடித்துப் பல இயக்கங்கள் மீதூர்ந்ததும் ஆசிரியரால் கவனப் படுத்தப் படுகிறது. பரவாயில்லை அடுத்த அடுத்த ரீடிங்குகளில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.


4)ஆண்டவன் மீது பக்தர்கள் கொள்ளும் பக்தியை காதலன், காதலி மீது கொள்ளும் தீராக் காதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன வேதாந்தப் போக்கும்
காணப்பெறுகிறது


இது நவீன வேதாந்தப் போக்கு அன்று. தமிழ் கூறும் நல்லுலகத்துச் சான்றோரும், தமிழ் நாட்டு வேதாந்திகளும் ஆயிரத்தி ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னமேயே கூட்டிணைந்து இயற்றிய பக்தி இயக்கங்களான ஆழ்வார்களின் சங்க அகத்திணைக் காதல் கெழுமிய பக்தி சாதித்த உன்னதம். அதைத்தான் நூல் விளக்க அரும்பாடு படுகிறது.


5)விவேகாநந்தரையும், நரேந்திரரையும் இரு வேறு உயிர்களாக உருவகப்படுத்தி, இருவரையும்..


இருவேறு உயிர்கள் அன்று அம்மா, இரு வேறு ஆளுமைகள் என்பது பொருத்தம்.  எனினும் இது மைனர் பாயிண்ட்.


ஒரு நல்ல சஹ்ருதயரை (ஒத்த உள்ளத்தர்) உங்களுக்குள் காணக் கொடுத்தமைக்கு நன்றி.

என்ன இது! கட் அண்ட்பேஸ்ட் வேலைகளைக் குறித்துப் பல இடங்களில் கிண்டல் செய்த இவனும் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டானா என்று ஆச்சரியப்பட வேண்டாம்! 

கொஞ்சம் ஆழ்ந்து படித்து, சொல்லப்பட்டதைக் கவனமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டிய புத்தகம் இது. வெறும் கதையைப் போல மேலோட்டமாக வாசித்து முடித்துவிடுகிற ரகமல்ல.அதனால் இதைப் பற்றி எழுதுவதற்கே, நான் நிறைய உழைத்தாக வேண்டும்!இப்போது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பார்வையில், இதன்மீதான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கு முன்னால்..........!


அதற்கு முன்னால் இந்த நம்பிக்கை, அறிவு என்று இரண்டு விதமாகச் சொல்லப் படுகிறது இல்லையா, அதில் நம்பிக்கை என்பது என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்!

அறிவு என்பது தேடலில் கிடைப்பது! அதே சமயம் நம்பிக்கையோ தேடலுக்குத் தூண்டுதலாக இருப்பது! தேடியது இதைத்தானா என்பதைத் தெளிவு படுத்தக் கூடியதாகவும் இருப்பதும் நம்பிக்கைதான்!  

"In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer. "


அறியாமையும்
, இருளும் கூடிய தொடக்கத்தில், நம்பிக்கை ஒன்றே மனிதனுக்குத் துணையாக வழங்கப்பட்ட சாதனமாக இருக்கிறது, என்று ஒரு உரையாடலில்  ஸ்ரீ அரவிந்த அன்னை தெளிவுபடச் சொல்கிறார். 

இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாக,
 
“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct.

Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity.

The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”


 -ஸ்ரீ அன்னை 

டிஸ்கி 1: இந்தப்பதிவு இரண்டுமூன்று நாட்களுக்கு முன்னாலேயே வந்திருக்க வேண்டியது! ப்ளாக்கரில் என்ன தகராறு என்று தெரியவில்லை, பப்ளிஷ் ஆனபிறகும் உரலியை அணுக முடியவில்லை. திரட்டிகளில் இணைக்கவும் முடியவில்லை. இரண்டு மூன்று தரம் டெலிட் செய்துபார்த்தும் பயனில்லாமல் போனது . ரீடரில் வாசிப்பவர்களுக்கு மட்டும் மூன்று முறை வந்திருக்கும்! பொறுத்துக் கொள்ளவும்!

டிஸ்கி 2இந்தப் புத்தகம், பதிவர் வால்பையன் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாக சிபாரிசு செய்கிறேன்! போனபதிவிற்கு முந்தைய பதிவில், அவர் சரவெடியாக வெடித்த கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் இன்னொரு பரிமாணத்தில் இருந்து விடை சொல்வதாக இருப்பதால், நண்பர் வால்பையனுக்காக இந்தப் புத்தகம் என்னுடைய பரிசாக ரெடியாக இருக்கிறது!



ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை!

தினமணி தலையங்கம்: "ஏன்' என்ற கேள்வி!

First Published : 12 Feb 2011 02:48:24 AM IST

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வரம். கடந்த  சில ஆண்டுகளாக இச்சட்டத்தின் மூலம் மக்கள் வெளிக்கொணர்ந்த உண்மைகள் பல. இதனால் சிலர் கொலை செய்யப்பட்டார்கள் என்பதும் நாடறிந்த உண்மை. வெறும்  பத்து ரூபாயில் அரசின் எந்த நடவடிக்கையையும் கேள்வி கேட்க முடியும் என்கிற இந்த வாராது வந்த மாமணியை ஒளி இழக்கச் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, அண்மையில் இச்சட்டத்தில் சில திருத்தங்களைப் பரிந்துரைத்து, இதனை அமல்படுத்தும் முன்பாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதன் காரணமாக அவற்றை இணையதளத்தில் கடந்த டிசம்பர்  17 முதல் 27 வரை வெளியிட்டு கருத்துகளைக் கேட்டது.இந்தச் சட்டம் மேலும் பயனுள்ள வகையில் இறுக்கமாக மாற்றப்படுகிறது என்கிற பொய்யுரையுடன் இதனை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது என்பதை இந்தப் பரிந்துரைகளைப் படிக்கும் எவருக்கும் எளிதில் விளங்கும்.

தகவல் அறியும் சட்டம் குறித்து கிராமப்புறங்களில் 8 விழுக்காடு மக்கள் மட்டுமே அறிந்துள்ளனர் என்பதும், நகரங்களிலும்கூட 55 விழுக்காடு மக்கள் மட்டுமே அறிந்துள்ளனர் என்பதும் அதிர்ச்சி அளிக்கும் தகவல். வருமான வரி வரவை அதிகரிக்க அரசு காட்டும் முனைப்பில் பத்து விழுக்காடுகூட அரசின் செயல்பாடு குறித்து மக்கள் தெரிந்துகொள்ள உதவும் தகவல் அறியும் சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைப்புக் காட்டவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.அரசு அலுவலகங்களில் இதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள பொதுத் தகவல் அலுவலர்களில் பாதிப் பேர், இந்த மனுக்களை எப்படிக் கையாளுவது என்பது குறித்து பயிற்சி பெறாதவர்கள் என்பதும், நான்கு மனுக்களில் ஒன்றுக்கு மட்டுமே அரசின் பதில் கிடைக்கிறது என்பதும் இன்னும் ஆச்சரியம் தரும் தகவல்.

இந்தச் சட்டம் குறித்து நாட்டு மக்களுக்கு முழு விழிப்புணர்வு ஏற்படும் முன்பாகவே இந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிதான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசு மாற்றங்கள் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சிகள்.இப்போது இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நபர் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்றிருப்பதை, ஒரு நபர் ஒரு துறை சார்ந்த ஒரு விஷயத்தை மட்டுமே கேட்க வேண்டும், அதையும் 250 சொற்களுக்கு மிகாமல் எழுதுதல் வேண்டும் என்பதுதான் மிகப்பெரும் நாசவேலை என்றே சொல்லிவிடலாம். இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டுவிட்டால், எந்த மனுதாரரும் கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு கேள்விக்கும் இன்னொரு விஷயத்தைத் தொடாமல் கேள்விகளை அடுக்கிச் செல்லவே முடியாது.

உதாரணமாக, ஒரு கிராமப் பள்ளியில் ஆசிரியர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் அவர் பணிக்கு வராமலேயே சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாகவோ அல்லது தனக்குப் பதில் வெறும் ரூ.2,000 சம்பளத்தில் ஒருவரை அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்றோ ரகசியமாக ஒரு தகவல் கிடைத்தால், இதுகுறித்து அந்த கிராமத்தவர் பல கேள்விகள் மூலம் விசாரித்தால்தான் முடியும். அந்தப் பள்ளிக்கு எத்தனை ஆசிரியர்கள் நியமிக்கப் பட வேண்டும்? எத்தனை ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள்? அவர்களின் பெயர் விவரம் என்ன? இந்தப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர் யாராவது நியமிக்கப்பட்டுள்ளாரா? அவருக்கான ஊதியம் என்ன? ....இவ்வாறு தொடர்ச்சியான கேள்விகள் மூலம் அரசின் பதில்களைப் பெறும்போதுதான் அதில் உள்ள முரண்கள் மூலம் முறைகேடுகளை அம்பலப்படுத்த முடியும். மேலும், 250 சொற்களுக்குள் எல்லாவற்றையும் கேட்டறியும் நுட்பம் யாவருக்கும் முடியாத ஒன்று.

அடுத்து, இத்தகைய தகவல்களைப் பெற்றுத்தரும் செலவுகளை மனுதாரரே ஏற்க வேண்டும் என்கிற பரிந்துரை விஷமத்தனமானது. அதற்காக நிர்ணயிக்க இருக்கும் கட்டணம் நடைமுறையில் உள்ளதைக் காட்டிலும் இரு மடங்காக இருக்கிறது. அதாவது ஒரு நகல் எடுக்க ரூ.2 என்பது அதிகம். தனியார் நிறுவனங்கள் ரூ.1 பெறும்போது இவர்கள் கூடுதல் கட்டணம் நிர்ணயிப்பது ஏன்?மேலும், ஆவணங்களைப் பார்க்க வேண்டுமானால் ஒரு மணி நேரம்தான் இலவசம். அதன் பிறகு ஒவ்வொரு மணி நேரத்துக்கு ரூ.5 செலுத்த வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோப்புகளைக் கேட்டால் அரசு அலுவலகங்களில் வெறும் குப்பையைத்தான் காட்டுவார்கள். இல்லாத இடத்தையெல்லாம் தேடி, மனஉறுதியோடு போராடித்தான் உரிய கோப்புகளைக் கண்டடைய நேரிடுகிறது. அப்படியிருக்கையில், இதற்குக் கட்டணம் வேறு செலுத்த வேண்டும் என்கிற பரிந்துரை ஏற்புடையதல்ல.

மனுச் செய்தவர் இறந்துபோனால் அத்துடன் அந்த மனுவை முடிந்ததாகக் கருதி மூடிவிடலாம் என்கிறது இன்னொரு பரிந்துரை. எனக்கு ஏன் இன்னும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்று கேட்டவர் இறந்துபோனால், அத்துடன் அதை முடித்துக்கொள்ள வேண்டியதுதானா? அந்த மனுமீதான விளக்கம் கிடைத்தால்தானே அவரது மனைவி அல்லது வாரிசு மேல்நடவடிக்கை எடுக்க முடியும்?

மாநில அளவிலான மேல் முறையீட்டை, ஓர் அதிகாரி தான் விரும்பும் அதிகாரி அல்லது பிரதிநிதி மூலம் எதிர்கொள்ளலாம் என்கிறது ஒரு பரிந்துரை. தனது பிரதிநிதி என்பதன் பொருள் வழக்குரைஞர் என்கின்றனர் இந்தப் பரிந்துரையை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள். "அதிகாரிகள் தங்களுக்கான வழக்குரைஞரை நியமிப்பார்கள், ஒரு ஏழை மனுதாரர் இந்தச் செலவுக்கு என்ன செய்வார்? மீண்டும் இதை ஒரு நீதிமன்றமாக மாற்றும் முயற்சி இது' என்கின்றனர்.

சட்டம் கிடுக்கிப்பிடியாக இருக்கும் இப்போதே பதில் அளிக்காமல் தட்டிக் கழித்ததால் மேல் முறையீட்டு மனுக்கள் மாநில அளவில் லட்சக்கணக்கில் குவிந்துள்ளன. இன்னும் இந்தப் பரிந்துரைகள் ஏற்கப்பட்டுவிட்டால், இனி இந்திய நாட்டில் ஒருவரும் ஒரு கேள்வியும் கேட்க முடியாது என்ற நிலை
ல்லவா உருவாகும்? இப்படியெல்லாம் மாற்றங்களைச் செய்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்குப் பதில் தகவல் பெறும் உரிமை ஆணையத்தையே இழுத்து மூடிவிடலாமே. தனது தவறுகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்கு அரசு செய்யத் தொடங்கியிருக்கும் தகிடுதத்தங்களில் இதுவும் ஒன்று!


தகவல் அறியும் உரிமை! சட்டமா? மாயையா?

இப்படித்தலைப்பிட்டு தினமணி நாளிதழில் வெளியாகி இருந்த தலையங்கத்தை ஜனவரி இருபத்துமூன்றாம் தேதியன்று இந்தப்பக்கங்களில் ஒரு பதிவைப் படித்த நினைவிருக்கிறதா?

தெரிந்தோ தெரியாமலோ, இந்த நாட்டின் பாவப்பட்ட மக்களுக்கு 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் கொஞ்சம் பயனுள்ளதாக இருந்தது. அரசு அலுவலகங்களில் என்ன நடக்கிறது, தங்களுடைய மனுவின் நிலை என்ன, எங்கே தவறு நடந்தது என்பதைத்தெரிந்துகொள்ள உதவியாக இந்தச் சட்டம் பயன்பட ஆரம்பித்த நிலையில், தங்களுடைய ஊழல், கையாலாகாத்தனத்தை மூடிமறைக்க இந்த சட்டத்தின் குரல்வளையை நெரிக்க ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு முயற்சிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

எங்கேயோ எதன் மீதோ மழை பெய்துகொண்டிருக்கிறது  என்பதைப்போல எங்கே என்ன நடந்தால் எனக்கென்ன என்ற மாதிரி ஜனங்கள் ஊமைச் சனங்களாக இருப்பது தான் இந்தமாதிரித்தவறுகளை ஆளுகிறவர்கள் தைரியத்துடனேயே செய்வதற்கு வசதியாக இருக்கிறது.

டுனீஷியா, ஏமன், அல்ஜீரியா, எகிப்து என்று அடங்கிக் கிடந்த தேசங்களிலேயே மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துகொண்டிருக்கும் தருணம் இது. அங்கே நடப்பது மாதிரி இங்கே கிளர்ந்தெழவேண்டாம்! கலவரங்களில் ஈடுபடவும் வேண்டாம்! கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தாலே புரியும்!

மீன்களுக்குத் தூண்டிலில் புழுவை வைப்பவன் கருணையுடன் தான் வைக்கிறானா?
புழுக்களுக்கு ஆசைப்படும் மீனுடைய கதி என்ன ஆகிறது?

இங்கேயும் அரசியலில், இலவசங்கள், சலுகைகளை சரமாரியாக அறிவிக்கிற அரசியல்வாதிகள் உண்மையிலேயே ஜனங்களுக்கு நல்லது நினைத்துத் தான் செய்கிறார்களா?

இலவசங்களில் ஏமாந்து போகிற ஜனங்களுடைய கதியும் தூண்டில் புழுவை விழுங்கிய மீனின் கதி போலத்தான்  என்பது உறைக்கிறதா?

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறதா? என்ன நடக்கிறதென்பது புரிகிறதா? என்ன செய்யப் போகிறீர்கள்?

ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கையில்லை! இலவசங்களில் ஏமாந்துபோகிறவர்களுக்கும் தான்!

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!

நம்பிக்கையோடு இரு, ...எல்லாம் கை கூடும்!

ஸ்ரீ அன்னை சாரதாமணி தேவியுடன் சகோதரி நிவேதிதை


"
நல்லவர்களுக்கு மட்டும் அல்ல, தீயவர்கள் என்று கருதப் படுகிறவர்களுக்கும், நான் தாயாக இருக்கிறேன்.



உனக்கு ஏதாவது இடைஞ்சல், பிரச்சினை என்று வரும் போது, என் அன்னை இருக்கிறாள், அவள் பார்த்துக் கொள்வாள் என்று நம்பிக்கையோடு இரு."

"I am the mother of the wicked,
as I am the mother of the virtuous.
Whenever you are in distress,
just say to yourself, 'I have a mother'

இருபத்திரண்டு  வருடங்களுக்கு முன்னால், கன்யாகுமரி ஸ்ரீ விவேகானந்தர் நினைவுப் பாறைக்குச் சென்று திரும்புகையில், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அன்னை சாரதாமணி இவர்களுடைய அமுத மொழிகளை மிக நேர்த்தியாக அலுமினியத் தகட்டில் படங்களுடன் பொறித்த சிலவற்றை வாங்கி வைத்திருந்தேன்.  

அதில் மேலே கண்டது ஸ்ரீ அன்னை சாரதாமணியினுடைய அமுத மொழி.

ஸ்ரீ அரவிந்தராலும், பிறகு எல்லோராலும் அன்னை என்று அழைக்கப் பட்ட அற்புதப் பேரொளியைக் கண்டு கொள்கிற தருணம் நம்மில் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் தான், தேடி வருகிற இறையருளை உணராமல் இருக்கிறோம். அறியாமை, ஆர்வமின்மை, நானே எனதே என்று பழக்கங்களின் பிடியில் சிக்கி புலன்களுடைய அடிமையாகவே இருப்பது இப்படி, நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

இறையருள், நம்மை விட்டு விலகுவதே இல்லை; அதே நேரம், நம் மீது நம் விருப்பத்திற்கு மாறாகத் தன்னை திணித்துக் கொள்வதும் இல்லை. நாமாக, விரும்பி அழைப்பதற்காக, ஏற்றுக் கொள்வதற்காகப் பொறுமையோடு காத்திருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் முடிவெடுக்கிற சுதந்திரத்தை நமக்களித்து விட்டு, அந்தந்த முடிவுக்குத் தகுந்த பலனையும் அனுபவத்தையும் தந்து கொண்டே, அதிலிருந்தே, உள்ளார்ந்த ஒரு ஆன்மீக அனுபவத்திற்கான பாதையையும் திறந்து வைக்கிறது. நம்மை அறியாமலேயே, அல்லதே அறிந்தே கூடக் கிணற்றுக்குள் தான் விழுவேன் என்று பிடிவாதமாக விழுந்தாலும் கூட,கிணற்றில் விழுந்த பிறகு அதிலிருந்தே வேறொரு பாதையில் இறையருள் வழிநடத்துகிறது.

நல்லவை என்பன மட்டும் அல்ல, மிகத் தீயவை என்று சொல்லப் படுபவையும், தெய்வ சித்தத்தின் படி இயங்கும் கருவிகளாகவே இருப்பதை அப்போது தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. "வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க" என்று அனுபவித்துப் பாடிய வரிகளின் பொருள் அப்போது தான் அவரவர் பக்குவத்துக்கேற்றபடி புரிகிறது.

இப்படித்தான் 1965-66 களிலேயே ஸ்ரீ அரவிந்த அன்னை, என்னுடைய அன்னையாகவே தோன்றித் தன்னை அறிவித்துக் கொண்டாலும், என் ஈர்ப்பு, கவனமெல்லாம் வேறு எதில் எதிலேயோ இருந்ததால், தேடி வந்த அன்னையை அறியவில்லை. ஸ்ரீ அரவிந்தரோடு அணுக்கமாக இருந்த நண்பர்களே `ஆரம்ப காலங்களில் ஸ்ரீ அரவிந்த அன்னையை 'அன்னையாக' அறிந்திருக்கவில்லை. அவரும் ஏதோ தங்களைப் போலவே, ஸ்ரீ அரவிந்தருடைய இன்னொரு சீடர் என்ற அளவிலே தான் நினைத்திருந்தார்கள்.

ஸ்ரீ அரவிந்தர் ஒரு சாதகருக்கு எழுதிய கடிதங்களில் அன்னையைப் பற்றி, அவருடைய அவதார நோக்கங்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார். 'மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்காதே, அந்த பராசக்தியே தான் இங்கே மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாள்' என்று உறுதியாகச் சொல்கிறார். ஆசிரமத்தில் இருக்கும் இந்த அன்னையைப் பற்றியா சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு 'ஆமாம்' என்று உறுதிபடச் சொல்கிறார்.

"அன்னை" என்ற தலைப்பில் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய கடிதங்களின் [மொத்தம் ஆறு] தொகுப்பு, அதையொட்டி சாதகர்களுக்கு எழுந்த கேள்விகளுக்கு ஸ்ரீ அரவிந்தர் எழுதிய பதில்கள், இவைகளைத் தமிழில் தொடர்ந்து தரவும் விருப்பம். ஸ்ரீ அன்னை திருவுள்ளம் உகந்தால் அதுவும் கை கூடும்.

இருபது, இருபத்திரண்டு வருடங்களுக்குப் பின்னால், வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்கள் தானாகவே, ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் அழைத்துச் செல்வதாக அமைந்தன. அப்போதும் கூட, ஒரு முழுமையான அர்ப்பணிப்புடன் அன்னையிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன் என்று சொல்ல முடியாது.

அப்போது மட்டுமில்லை, இப்போதும் கூடத்தான் என்று உள்ளேயிருந்து ஒரு மூலையில் ஒரு குரல் ஒலிக்கிறது அதைப் பொருட்படுத்தாதே அன்னையிடம் உன்னை முழுமையாக சமர்ப்பணம் செய்து கொள்ளத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இரு, ஆக வேண்டியதை அவளே பார்த்துக் கொள்வாள் என்றும் ஒரு நம்பிக்கைக் கீற்று அவநம்பிக்கையை, என்னை அன்னை ஏற்றுக் கொள்வாளா, எனக்கு அருள் புரிவாளா என்ற சந்தேகங்களை விரட்டி அடித்துக் கொண்டும் இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னை தன்னை ஒரு போதும் ஒரு குருவாக அறிவித்துக் கொண்டதில்லை. மாறாக, தன்னிடம் வருபவர்களுக்குச் சொன்னதெல்லாம், இது தான்:  

"என்னிடம் வரும் போது, அன்னையிடத்திலே தானாகவே ஆர்வத்தோடு ஓடி வருகிற குழந்தையின் மனப்பாங்கோடு வா. அப்படி வருவது, எண்ணற்ற தடைகள், கஷ்டங்களில் இருந்து உன்னைக் காப்பாற்றும்"


"Try to be spontaneous and simple like a child in your relation with me- it will save you from many difficulties.”- The Mother

"Never forget that you are not alone.
The Divine is with you helping and guiding you.
He is the companion who never fails, the friend whose love comforts and strengthens.
The more you feel lonely, the more you are ready to perceive His luminous Presence.
Have faith and He will do everything for you."
-The Mother
27 September 1951

தனித்து விடப்பட்டதாகவோ, கைவிடப்பட்டதாகவோ, ஒருபோதும் எண்ணாதே; ஏனெனில் தெய்வீக அருள் உன்னோடு எப்போதும் பிரியாமல் இருக்கிறது. உன்னை வழி நடத்துகிறது,துணையாக வருகிறது. உன்னை விட்டு ஒருபோதும் பிரியாத துணையாக, உற்ற நண்பனின் இதமான துணையாக, உன்னை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.  

தனித்துவிடப்பட்டதாக, அல்லது தனியாக இருப்பதாக நீ கருதும் நேரம், தெய்வீக அருளின் ஒளியைப் பெறுவதற்குச் சித்தமாய் இருக்கிறாய். நம்பிக்கையோடு இரு, எல்லாம் கை கூடும் என்கிறார் ஸ்ரீ அன்னை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம், ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம். பஞ்சதந்திரக்கதைகளில் வருகிற அந்தணன், கதை சொல்லியே முட்டாள் ராஜ குமாரர்களைப் படிப்பிக்க வைத்தது போலவே, எனக்கும் என்னுடைய சொந்த முட்டாள்தனங்களில் இருந்தே ஸ்ரீ அன்னை பாடம் நடத்திக் கொண்டிருப்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
நன்றியோடு வணங்குகிறேன்.

2009 மார்ச் மாதம் எழுதியதன் மீள்பதிவு, சிறு மாற்றங்களுடன்.