Showing posts with label ஊழலும் இந்திய அரசியலும். Show all posts
Showing posts with label ஊழலும் இந்திய அரசியலும். Show all posts

போகும் திசை மறந்து போச்சு! இங்கே பொய்யே வேதமுன்னு ஆச்சு!


மும்பை மீது பாகிஸ்தான் தீவீரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் மூன்றாவது ஆண்டு நினைவுதினம் இன்று! ஜனங்களுடைய கோபத்தை சாந்தப்படுத்துவதற்காக, முதலாண்டு முடிவில் நினைவு ஊர்வலத்தை நடத்தி மகாராஷ்டிரா அரசு தன்னுடைய பொறுப்பைக் கைகழுவிக் கொண்டது.

கசாபுக்குப் பெரும் செலவில் தீனி போட்டு, அரசே பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அப்சல்குருவோ, கசாபோ அல்லது வேறு கொடூரமான கொலையாளிகளோ எவரானாலும் தூக்கு தண்டனையை நிறைவேற்றத் துணிவில்லாத ஒரு கூட்டம், அரசு, ஆட்சி என்ற பெயரில், சாதாரண ஜனங்களை மட்டும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

சரத் பவாருக்கு அடி விழுந்தது குறித்து நாடாளுமன்றம்கவலை தெரிவித்திருக்கிறது. வி ஐபிக்களுக்குப் பாதுகாப்பை அரசு அதிகப்படுத்தி இருக்கிறது. மீடியாக்கள் கவனம் தன மீது விழுந்திருப்பதில், பெருச்சாளி மாதிரியே பதுங்கிக் கொண்டிருந்த சரத் பவார், தைரியமாக, முதல் தடவையாக அண்ணா ஹசாரே பெயரைக் குறிப்பிடாமல் தாக்கியிருக்கிறார்.

ஊழல் பெருச்சாளிகள் அடிவாங்கியதற்குக் கவலைப்படும் அரசியல் புள்ளிகள் எவரும்,அடி மேல் அடிவாங்கிக் கொண்டிருக்கும் அப்பாவிப் பொதுமக்களைப் பற்றிக் கவலைபடுவதே இல்லை.  விவசாயத்துறை அமைச்சர் பவார், விவசாயிகள் தற்கொலை குறித்தோ, அவர்கள் நலன் குறித்தோ ஒருநாளும் கவலைப்பட்டவருமில்லை.அமைச்சராகப் பணியாற்றியதுமில்லை!

கையாலாகாத ஐமு கூட்டணிக் குழப்பத்தை இன்னும் விட்டு வைத்திருந்தால், சரத் பவாருக்கு அறை கொடுத்த நாளுக்கு வருடாவருடம் நினைவு தினமாகக் கொண்டாடுவார்கள்.

அறை வாங்கிய தியாகி என்று பட்டமும் கொடுத்து, பந்த் நடத்துவார்கள். வெட்கம் கெட்ட டம்மிப் பீஸ்பிரதமர், வழக்கம் போல இதற்கும் வந்து அஞ்சலி செய்வார். கசாப் வகையில், கையாலாகாத அரசின் செலவு இப்போது வரை அறுபது கோடி ஆகியிருக்கலாம், அறுநூறு கோடி செலவு ஆனபின்னாலும் சொகுசாக, சிறைக்குப்பின்னால் இவர்களை ஏளனம் செய்து கொண்டிருக்கலாம்.

இந்தியர்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்களாக இருக்கலாம்! எங்கோ மழை பெய்கிறது என்றிருக்கும் எருமை மாடுகள் மாதிரி ஆகி விடக் கூடாது இல்லையா?


26/11 attacks: Still waiting for Pak to bring the guilty to book, says Krishna

 காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களைத்  தவிர வேறு எவர் இப்படிப் "பொறுப்போடு" பேச முடியும்?

இதை எழுதிக் கூட இரண்டு ஆண்டுகள் நிறைந்துவிட்டது.
மும்பை நகரத்தில் பாகிஸ்தானியத் தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் நடந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.

இதைத் தீவீரவாதிகளின் வெற்றி என்று சொல்வதை விட, பலவீனமான அரசியல் தலைவர்கள், எதற்கெடுத்தாலும் அடித்துக் கொள்வது என்பதைத் தவிர வேறு அஜெண்டா இல்லாத அரசியல் கட்சிகள், ஊழல்மயமான அரசு இயந்திரம், செயல் திறனற்றுப்போன உளவுத்துறை, செயல் பட முடியாத காவல்துறை, இப்படி, நம்மிடம் இருக்கும் பலவீனத்தையே மறுபடி மறுபடி வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிற மாதிரி இருப்பதை எவரும் இங்கு உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏற்கெனெவே, இந்தப் பக்கங்களில், தலைமைப் பண்பு, சீனப் பெருமிதம், விமரிசனம் என்ற தலைப்புக்களில், நேரு, சாஸ்திரி இருவரது முடிவெடுக்கும் திறனைப் பற்றிக் கொஞ்சம் பேசியிருக்கிறோம்.

வெளியே எல்லாத் திசைகளிலும், இந்தியாவுடன் பகைமை பாராட்டும் நாடுகள், ஒவ்வொரு நாட்டிடமிருந்தும் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள் என்று ஒருபக்கம், உறுதியான அரசியல் முடிவுகளை எடுக்கத் தைரியமில்லாத, ஆண்மையற்ற அரசியல் தலைவர்கள், ஊழல் மயமாக இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும், முன்னெச்சரிக்கை என்றால் என்ன என்று கேட்கும் அரசு நிர்வாகம், காவல்துறை இத்தியாதிகள் இதெல்லாம் ஒருபுறம் என்றால், ஜனங்களுடைய அலட்சிய மனோபாவம், கையறுநிலை, அல்லது தட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கேட்பதும், குட்ட வேண்டிய நேரத்தில் குட்டுவதும் நம் கைகளிலேயே இருக்கிறது என்பதை உணராத பொறுப்பற்ற தன்மையும் சேர்ந்து, இந்த மாபெரும் தேசத்தைத் தலை குனிய வைத்துக் கொண்டிருக்கிறது.

நம்முடைய முன்னுரிமைகள், அல்லது பிரதானமான கவனமெல்லாம் எங்கே இருக்கிறது?

இந்த ஒரு கேள்விக்கு, சரியான பதிலைக் கண்டு கொள்ள முடிந்தாலே, பிரச்சினை என்ன என்பதையும், அதற்குத் தீர்வு என்ன என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?

ஆங்கில ஊடகங்களில் 26/11-மும்பை மீதான போர்! ஓராண்டு நிறைவு என்று கூவிக் கூவிப் பழைய செய்திகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூத்துக்களைப் பார்த்துத் தொலைய வேண்டியிருக்குமே என்பதற்காக, வழக்கமாகப் பார்க்கும் செய்தி சானல்களைக் கூட இன்றைக்குப் பார்க்க வேண்டாம் என்றே இருந்தேன்.

வெட்கம் கெட்ட மும்பை அரசும், அரசியல்வாதிகளும், மும்பை மீதான தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செய்வதாக, வீதிகளில் அணிவகுப்பை நடத்தி, தங்களைப் புனிதர்களாக ஆக்கிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் ஆதாயம் ரொம்ப என்றால் ரத யாத்திரையும், கம்மி என்றால் அறிக்கைப் போரும், கேள்விகள் எழுப்புவது மட்டுமே என்று வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கும் அத்வானி பாராளுமன்றத்தில் மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடும், நிவாரணமும் வழங்குவதில் அரசு மெத்தனமாக இருப்பதாகக் கவலை தெரிவித்திருக்கிறார்.

பழைய ஞாபகத்தில் ரத யாத்திரை என்றெல்லாம் கிளம்பிவிடாமல் ஏதோ கேள்வியோடு கவலையை முடித்துக் கொண்டாரே என்பதைப் பாராட்டக் கூட நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மனசு வரவில்லை. பதிலுக்குக் கோபத்தில் கடித்துக் குதறியிருக்கிறார்!

மும்பைத் தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் மரணம் என்றால் மூன்றுலட்சம், வெறும் காயமென்றால் ஐம்பதாயிரம் தான்! இந்த அற்பத் தொகையுமே கூடப் பெரும்பாலானவர்களுக்கு, தாக்குதல்கள் நடந்து ஓராண்டாகியுமே கூட  வழங்கப் படவில்லை என்பது எப்போதும் போல் நடக்கிற கூத்துத் தான்!  

அதே நேரம், தாஜ் ஹோட்டலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக, இன்ஷ்யூரன்ஸ் தொகை ரூ.167 கோடி வழங்கப்பட்டு விட்டது என்ற செய்தியோடு சேர்த்துப் பார்த்தால் தான், பிரச்சினையைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும்.

இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியில் உள்ள நிவாரணம் வேண்டி வந்த மனுக்கள் எண்ணிக்கைக்கும், எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அதே செய்தியை வெளியிட்டதில் வந்திருக்கும் எண்ணிக்கைக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது.

பாராளுமன்றத்திற்கு வெளியே பிஜேபி கட்சியைச் சேர்ந்த அலுவாலியா, ஐந்து நட்சத்திர ஹோட்டல் தாக்கப் பட்டதினாலேயே, இந்தத் தீவீர வாதிகளுடைய தாக்குதல் பற்றிய செய்தி, மீடியாக்களினால் பரபரப்புச் செய்தியாக்கப் பட்டதாக வருத்தப் பட்டிருக்கிறார்.

பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "காஷ்மீர், சாட்டிஸ்கார், ஆந்திரா, ஒரிசா என்று நிறைய இடங்களில் இந்த மாதிரித் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.ஆனால், மும்பையில் நடந்ததை மட்டும் நீங்கள் பெரிதுபடுத்திப் போடுகிறீர்கள்! காரணம் அது ஐந்துநட்சத்திர ஹோட்டல் தாஜ் மீது நடந்தது என்பதால் தானே?"

அலுவாலியா உண்மையைத் தான் பேசியிருக்கிறார்! தாஜ் ஹோட்டல் மீது அல்லாமல், அன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினலில் (ரயில் நிலையம்) மட்டுமே தாக்குதல் நடந்திருந்தால், பத்திரிகையாளர்களும், தொலைக் காட்சி ஊடகங்களும் இவ்வளவு பெரிதாக, கோரசாக, ஊது ஊதென்று ஊதியிருப்பார்களா என்பது சந்தேகம் தான்!

மும்பையில், ஐபிஎன் அலுவலகம் தாக்கப் பட்டதற்கு ஹிந்து என் ராம் கொதித்தெழுந்தார்!  உள்ளூரில், வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் தாக்கப்பட்ட போதோ அல்லது வேறு அராஜகங்கள் நடந்தபோதோ இதே  கனவான் எல்லாவற்றையும் பொத்திக் கொண்டு  வேறு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்!

என் ராமைக் குறை சொல்லிக் கொண்டு, ஹிந்துவை வாங்காதே, தினமலரை வாங்காதே என்று பானர் தயாரித்துப் போட்டுக்  கொண்டு பதிவுகளில் கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருக்கும் தமிழ் வலைப் பதிவர்களாவது .......ம்ம்ஹூம்!


தாஜ் ஹோட்டல் மாதிரி ஐந்து நட்சத்திரம் கூட வேண்டாம்! நட்சத்திரம் என்று வெறுமே சொன்னால் போதும்! அவர் ரேட் என்ன என்று புவனேஸ்வரி- பெயர் சொல்லி ரேட் நிலவரம் சொல்கிறார்  என்று தலைப்பும்,சும்மா  ஒரு படமும் போட்டால் போதுமே, மொய்த்துவிட மாட்டார்களா!

அவர்கள் வரிசையாக வருவார்கள்! தாக்குதல் நடத்துவார்கள், நாம் இங்கே ஆண்டு விழா மட்டும் கொண்டாடிக் கொண்டிருப்போம். அப்படித்தானே!
சிவசேனாக்காரர்கள் சீரியஸாக ஜோக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்!  

மும்பைத் தாக்குதலின் ஓராண்டு நிறைவை ஒட்டி, அஜ்மல் அமீர் கசாபைத் தூக்கில் போட வேண்டுமென்று  ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறார்கள்! ஏற்கெனவே கசாப் என்ற அந்த பிடிபட்ட தீவீரவாதி, நம்முடைய நீதித் துறையில் உள்ள ஓட்டைகளை வைத்து செம காமெடி பண்ணிக் கொண்டிருந்தது போதாதென்று,இப்போது இந்தக் கோமாளிகளும்....!

சாமீ! புண்ணியவான்களே! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்! உங்களுக்காவது ஏதாவது திக்கு திசை புரிகிறதா?

2G ஸ்பெக்ட்ரம் ஊழல்! வழக்கு விசாரணை அப்டேட்ஸ்!




டந்த வெள்ளிக் கிழமையன்று தொடங்கிய 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் முதல்நாள் இருந்த பரபரப்பு கூட்டம் மாதிரி, நேற்றும் இன்றும் இல்லை! என்னமோ சூப்பர் டூப்பர் ஸ்டார் நடிகர்  நடித்த பட ரிலீஸ் மாதிரி முதல்நாளன்று அலை மோதிய கூட்டம், இன்றைக்கும் நேற்றைக்கும் காணாமலேயே போனது.

முதல் நாள் மிகப் பரபரப்பாக இயங்கிய டிவிட்டரும், ஊடகங்களும் சுவாரசியத்தை இழந்துவிட்டனவா?

ப்படி எல்லாம் இல்லை!
                                               
திர்பார்த்ததுபோலவே, சாட்சியங்கள் மழுப்பியிருக்கிறார்கள்! 

ப்படியே அந்தர்பல்டி அடிக்கவில்லை என்பதைத் தவிர ஊடகங்களுக்குத் தேவையான பரபரப்பு, சென்சஷன் எதுவும் சாட்சியங்களில் இல்லை.பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தமுதல் சாட்சி ரிலையன்ஸ் காபிடல் ஆனந்த் சுப்பிரமணியம், அடுத்து விசாரிக்கப் பட்ட ரிலையன்ஸ் சேதுராமன்  இருவருமே பாம்பும் நோகாமல் தடியும் நோகாமல் சாட்சியமளித்ததாக கிடைக்கிற செய்திகள் சொல்கின்றன. சிபிஐ வழக்கறிஞர் என்ன செய்தார் என்ற தகவல் தெரியவில்லை.

ஆ.ராசாவோ  சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். நேற்றைக்கு நீதிமன்ற வளாகத்திலேயே நன்றாகத் தூங்கி வழிந்ததாக ட்விட்டர் செய்தி ஒன்று சொன்னது. இன்றைக்கும் தூங்க விட்டார்களா என்று இன்னமும் தகவல் இல்லை.

சிபிஐ  தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் லலித், உச்சநீதிமன்றத்தில் அவருக்கிருந்த மற்ற வழக்குகளில் இருந்து விலகி, இந்த வழக்கில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறார்.

தனிப்பட்ட முறையில் பேசும்போது திமுகவினர் காங்கிரசை அவ்வளவு கேவலமாகத் திட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் ஒரு புதுடில்லி செய்தியாளர். கனிமொழி ஜாமீன் மீது டில்லி உயர்நீதிமன்றம் இன்னமும் தன் முடிவைச் சொல்லவில்லை என்றாலும் கூட, இனிமேல் ஜாமீன் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான் என்பதைத் திமுகவினரே உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான், வெட்டிக் கூட்டம் போட வேண்டாமே என்று திமுகவினர் நீதிமன்றத்தில் திரளாக அணிதிரளவில்லையாம்!அதுவே தலீவருக்கு மிகப்பெரிய குறையாக இருந்ததாம்! குமுதம் ரிபோர்டர் மட்டும் தகவல் தெரிந்து சொல்கிறார்!

நேற்றைக்கு பாடியாலா நீதிமன்றத்தில் நடந்த இரண்டாம் நாள் விசாரணையை விட, பாராளுமன்றக் கூட்டுக் குழு முன் சிஏஜி அலுவலக
திகாரி திரு சிங் ஆஜராகித் தன்னை மிரட்டி அறிக்கையில் கைநாட்டு வாங்கியதாகச் சொன்னதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.அதோடு கதை முடிந்ததா?ஜேபிசி காங்கிரஸ் கட்சி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால்,எதிர்க்கட்சித் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்குக் குழு, சிதம்பரம், பிரதமர் இருவரும் தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்குக் காரணம் என்று தனது இரண்டாவது அறிக்கையை இன்று கசிய விட்டிருக்கிறது.

முதல் அறிக்கையை நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஊற்றி மூடிவிட்டார்! இரண்டாவது அறிக்கைக்கும் அதே கதிதான் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கேட்டிருந்த கோப்பை தருவதில் சிபிஐ சுணக்கம்!

இன்று மதியம் மூன்று மணிக்கு மேல் நீதிமன்றத்தில், ஒரு வார காலமாகியும் கூட சிபிஐ நீதிமன்ற உத்தரவுப்படி சுவாமியிடம் தர வேண்டிய கோப்பைத் தரவில்லை என்று புகார் அளிக்க இருப்பதாக சுவாமி தனது ட்விட்டர் செய்தியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சிறிது நேரத்துக்கெல்லாம் சிபிஐ இன்னும் இரண்டு நாள் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கிறது. நீதிமன்றமும்  இரண்டு நாட்களுக்குள் தர வேண்டும் என்று கடுமையாக எச்சரித்து
அதை ஏற்றுக்கொண்டிருப்பதாக, அப்படித் தரவில்லையானால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப் போவதாக சுவாமி டிவிட்டியிருக்கிறார்.

Chidambaram: Caught by courts, bowled by Swamy?

Rediff தளம் சரியாகத் தான் தலைப்பிட்டிருக்கிறது!!

ஆக, சிபி ஐ, பானாசீனா, சோனி(யா) காங்கிரஸ் என்று இப்படி சுவாமி பயம் ஒருத்தர் விடாமல் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது!

@ வசந்தி ஸ்டேன்லி!

சுவாமி பயம் நீங்க, வழக்கறுத்தீசுவரர் கோவில் பரிகாரம் பண்ணிய மாதிரி எந்தக் கோவிலில் பரிகாரம் பண்ணினால் சரியாக இருக்கும்?

பகுத்தறிவுப் பாசறையில் தயாரான உங்களுக்குத் தானே, ஆத்திகர்களை விட இந்த மாதிரியான விவரங்கள் அத்துப்படி!

கூட்டணி தர்மத்தில் காங்கிரஸ் கட்சியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளட்டுமே!!

சிதம்பரத்தில் ஒரு மல்லிகா! திகாரில் கனிமொழி! என்ன பெரிய வித்தியாசம்?


இது இன்றைய தினமணியில் வெளியாகி இருக்கும் செய்தி!
 
பத்தோடு பதினொன்றாக  இதை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, குஷ்பூ என்ன கலர் சேலை ஜாக்கெட் அணிந்து கனி மொழிக்கு என்னமாதிரி ஆறுதல் கூற நேற்றைக்கு டில்லி நீதி மன்றத்துக்கு வந்திருந்தார் என்பதில்தானே நம்முடைய கவனம் போகிறது?

தவிர, கைது செய்யப்பட்டவரும் கூட ஒரு பெண் தான் என்றாலும், நாலுகோடி ரூபாய் செலவு செய்து, ராம் ஜேத்மலானி மாதிரியான காஸ்ட்லியான வக்கீலை அழைத்து வந்து,நானும் ஒரு பெண் என்று வாதாட வைக்கவில்லையே! ஜூனியர் விகடன்கள் ஆறுதலான, ஆதரவான செய்திக் கட்டுரையாகப் போட்டு,சிறைக்குள் கருகும் மல்லிகை என்று உருகி உருகி அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லையே!
எல்லாவற்றுக்கும் மேலாக, லஞ்சமாக வாங்கினது பிச்சாத்து ஆயிரம் ரூபாய்தானே! ஆ.ராசா மாதிரி,176  இற்குப் பின்னால் எத்தனை சைபர்கள் என்று நீதிபதிகளையே மலைக்க வைக்க முடியவில்லையே!லஞ்சமாக வாங்கின பணத்தில் தொலைக் காட்சி ஆரம்பித்து விட்டு, விசாரிக்கப் போகிறார்கள் என்று ஆனவுடன், அவசர அவசரமாக பணம் பெற்றது கடனாகத்தான், அதையும் கூட வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விட்டோம் என்று பின் தேதியிட்டு ஆவணங்களைத் தயார் செய்து நாடகமாட முடியவில்லையே!

மனம் விட்டுப் பேச நிறைய இருக்கிறது என்று மகளும், சிறைக்கு சென்ற தருணங்களில் கட்சியைக் காட்டிக் கொடுத்ததில்லை என்று தந்தையும் பரஸ்பர எச்சரிக்கை செய்து கொண்டது இல்லையே! 
 
இருபதுக்கே சிறைவாசம் என்றால் அறுபதை மட்டும் விடுவேனா என்று ராசாத்தி கணக்காய்ப் பேச முடியவில்லையே! கூட்டணி தர்மத்தில் இந்த மல்லிகா கைது விவகாரம் பேசப்படுகிற அளவுக்குப் பெரிதாக இல்லையே! லஞ்சப் பணத்தைப் பரிமாற்றம் செய்தவர் சொத்தை அட்டாச் செய்யத் தெரிந்த சிபிஐக்கு, வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் சொத்தைப் பறிமுதல் செய்யத் துணிவு இல்லையே!

ரூ.1000 லஞ்சம்:
சிதம்பரம் அருகே சமூகநலத்துறை அலுவலர் கைது!!

 
சிதம்பரம், நவ. 3: தமிழக அரசின் திருமண உதவித்தொகை பெற்றுத்தர விவசாய கூலித்தொழிலாளியிடம் ரூ.ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை ஊர்நலஅலுவலர் மல்லிகாவை (52) கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரத்தை அடுத்த அம்மாப்பேட்டையைச் சேர்ந்த கலியபெருமாள் (65), கூலித்தொழிலாளியான இவர் 24-8-2001 அன்று திருமண நடந்த தனது மகள் மாரியம்மாளுக்கு தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் கோரி குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

இம்மனு மீது விசாரணை நடத்திய சமூகநலத்துறை ஊர்நல அலுவலர் மல்லிகா, மனுதாரர் கலியபெருமாளிடம் ரூ.ஆயிரம் பணம் கொடுத்தால் மனுவை பரிந்துரை செய்வேன் எனக் கூறியுள்ளார்.

கூலித் தொழிலாளியான கலியபெருமாள் பணம் தன்னால் கொடுக்க இயலாது எனக் கூறியும், அண்மையில் மனு மீதான விசாரணை என்ற பெயரில் வீடு தேடிச் சென்று பணம் கேட்டுள்ளார். இதனையடுத்து கலியபெருமாள் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமாலிடம் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையில் போலீசார் வியாழக்கிழமை குமராட்சி ஊராட்சி அலுவலகத்துக்கு சாதாரண உடையில் சென்று கலியபெருமாளிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை அளித்து மல்லிகாவிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர். அதன்படி கலியபெருமாள், ஊர்நல அலுவலர் மல்லிகாவிடம் ரூ.ஆயிரம் நோட்டை கொடுத்தபோது மறைவிலிருந்த போலீசார் மல்லிகாவை கைது செய்து, அவர் பெற்ற லஞ்சப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி  தலையங்கம்: வழிமொழிகிறோம்!

First Published : 03 Nov 2011 03:55:10 AM IST


கவலைக்கிடமான நிலையில் ஒரு தலைவரோ, கலைஞரோ இருந்தால் நாடே கவலைப்படுகிறது. ஆனால் கவலைக்கிடமாக ஒரு நாடே இருந்தால் கவலைப்பட வேண்டியது யார்?

அப்படி கவலைக்கிடமாக இருப்பதுகூட பரவாயில்லை, அப்படி இருக்கிறோம் என்கிற உணர்வுகூட அந்த நாட்டை வழிநடத்தும் தலைவர்களுக்கு இல்லாமல் இருந்தால் எப்படி?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானபோது மிகவும் அக மகிழ்ந்தோம். மிகச் சிறந்த நிர்வாகி, நேர்மையாளர், நடுநிலையாளர், அரசியல் கறை படாதவர் என்றெல்லாம் ஆலவட்டம் சுழற்றினோம். ஆட்சி நிர்வாகத்தை அவரும் கட்சி நிர்வாகத்தை சோனியாவும் பார்த்துக் கொள்ள இந்தியா வல்லரசாகிவிடும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து எல்லோரும் கூடிக் குலவையிட்டோம்.

இன்றைக்கு நிலவரம் என்ன? காய்கறி, அரிசி, பருப்பு போன்ற அன்றாட உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் நடுத்தர, அடித்தட்டு மக்களின் விழி பிதுங்குகிறது. விலைவாசி கழுத்தை நெரிக்கிறது. சமையல் கேஸ், டீசல், பெட்ரோல் விலையை மத்திய அரசு கூட அல்ல, பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயிக்கும் நிலைமை.

வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்கிற நிலைமை மாறி, மாதா மாதம் பெட்ரோல் விலை உயர்கிறது. இப்படியே போனால், பங்குச் சந்தையைப் போல, தங்கம், வெள்ளி விலை நிலவரம்போல பத்திரிகைகளில் பெட்ரோல், டீசலின் அன்றாட விலையைப் போட வேண்டிய துர்பாக்கியம் கூட ஏற்படலாம்.

அருணாசலப் பிரதேசம் எங்களுடையதுதான் என்று வாரத்துக்கு ஒரு முறை அறிவித்துக்கொண்டிருக்கும் சீனா நம்முடைய காஷ்மீர மாநிலத்துக்கு உள்ளேயே வந்து நம்முடைய ராணுவத்தினர் பயன் படுத்தி குளிர்காலம் என்பதால் விட்டுவிட்டு வந்த பதுங்கு குழிகளையே அழித்துவிட்டுப் போகிறது.

வான் எல்லை மீறி எங்கள் நாட்டுக்குள் வந்துவிட்டீர்கள் என்று கூறி நம்முடைய தரைப்படை வீரர்கள் சென்ற ஹெலிகாப்டரை பாகிஸ்தான் வான்படை வழிமறித்து அழைத்துச் செல்கிறது. இதைப்பற்றி எல்லாம் மத்திய அரசு கவலைப்பட்டு சுறுசுறுப்பாக ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

ஊழல் அதிகரித்து வருவது குறித்து அண்ணா ஹசாரே போன்றோர் கவலைப்படுகின்றனர். விலைவாசி உயர்வு குறித்து நடுத்தர மக்களும் இல்லத்தரசிகளும் கவலைப்படுகின்றனர். சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து நாட்டுப் பற்றாளர்களும் மூத்த குடிமக்களும் கவலைப்படுகின்றனர்.

தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, நிரந்தர வேலைவாய்ப்பு முறை மறைந்து ஒப்பந்தத் தொழிலாளர் முறை நிலைபெற்று வருகிறதே, வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கவலைப்படுகின்றனர்.

கிராமப்பகுதிகளில் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் விவசாய வேலைக்குப் பண்ணையாள் கிடைப்பதில்லையே என்று விவசாயிகள் கவலைப்படுகின்றனர். அணைகள் கட்டுதல், பாசன வாய்க்கால்கள் அமைத்தல் போன்ற பணிகளை அரசு குறைத்துக் கொண்டுவிட்டதே, குடிமராமத்தே நின்றுபோய் வெறும் கணக்கெழுதி அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் சாப்பிடும் நிலைமை வழக்கமாகி விட்டதே என்று வேளாண் குடிகள் கவலைப்படுகின்றனர்.

ரூபாயின் மாற்று மதிப்பு குறைந்து வருவதால் சீனா போன்ற நாடுகள் சர்வதேசச் சந்தையில் குறைந்த விலையில் பொருள்களைக் குவிப்பதால் நம்மால் அவர்களுடன் போட்டியிட முடியவில்லையே என்று ஏற்றுமதியாளர்கள் கவலைப்படுகின்றனர்.

நம்முடைய சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அடகு வைக்கும் வகையில் அணுமின் சக்தி திட்டங்களுக்காக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமை சாசனம் எழுதித்தர வேண்டுமா என்று சுயராஜ்ய சிந்தனை உள்ளவர்கள் கவலைப்படுகின்றனர்.

மின்னுற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகிறது, நிலக்கரி கையிருப்பும் குறைந்து வருகிறது, அணு மின்சக்தி திட்டத்தின் பின்விளைவுகள் பற்றிய அச்சத்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் இல்லையே என்று தொழில் முனைவோர் கவலைப்படுகின்றனர்.

கல்வி நிலையங்களின் தரம் குறைந்து வருகிறது, உயர் கல்வி பெற விரும்பும் அனைவருக்கும் வாய்ப்பு தர முடியாமல் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே என்று கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர்.

சுகாதார வசதியில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்; அரசு மருத்துவ மனைகளில் போதிய மருந்துகள், பணியாளர்கள், டாக்டர்கள் இல்லாமல் பிறந்த குழந்தைகள்கூட உயிரிழக்கும் ஆபத்து நேரிட்டுவிட்டதே என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர்.

வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உலக பணக்காரர்களில் இடம் பெற்றுள்ள இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஊழல் செய்தும் வரி ஏய்ப்பு செய்தும்தான் இதில் இடம் பெற்றனர் என்ற அவமானம் என்று எத்தனையோ விஷயங்கள் கவலைக்கிடமாக இருக்கின்றன.

இந்த நிலையில் குப்பம்பட்டி வார்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா, யார் வேட்பாளர் என்று கேட்டால் கூட மத்தியக் கட்சித் தலைமையின் முடிவுக்கே விடும் காங்கிரஸ் தலைவர்களுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதால்--

இந்த நிலைமை எப்போது மாறும் என்கிற கவலை நம்மைத் தொற்றிக் கொள்கிறது.


இந்த நாட்டின் தலைமை சரியில்லை, முடிவெடுக்க முடியாமல் திணறும் போக்கு நல்லதல்ல என்று விப்ரோ நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் அசீம் பிரேம்ஜி கவலை தெரிவித்திருப்பது நூறு சதவீதம் நியாயமே என்று வழிமொழியத்தானே தோன்றுகிறது!!.