Showing posts with label கொஞ்சம் லொள்ளு. Show all posts
Showing posts with label கொஞ்சம் லொள்ளு. Show all posts

ஒரு மாறுதலுக்காக கொஞ்சம் பாட்டு! கொஞ்சம் பதிவு!

எப்போது பார்த்தாலும் அரசியல்தானா? எழுதுவதற்கு  வேறு விஷயங்களே இல்லையா என்று சமயங்களில் எனக்கும் கூட சலிப்பு வரும்! நம்பமுடிந்தால் நம்புங்கள்! இன்றைக்கு அரசியல் கலக்காமல் ஒரு பதிவை எழுத வேண்டும் என்பதற்காக இத்தனை நேரம் பொறுமையாகக் கையைக் கட்டிக் கொண்டிருந்தேன்! பின்னணியில் இந்தப் பாடலை  யூட்யூபில் கேட்டதும் ஏன் இதுமாதிரிப் பாடல்கள், படம் பற்றிப் பேசக்கூடாது என்கிற எண்ணம் வந்துவிட்டது! ஆறோடும் மண்ணில் என்று தொடங்குகிற இந்த அருமையான பாடலைக் கொஞ்சம் கேளுங்கள்!   


சிவாஜி கணேசனுடைய பல படங்களில் அரசியலையும் சேர்த்தே நடித்திருக்கிறார்! கப்பலோட்டிய தமிழன் வ உ சி ஆக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, ஒரே தேசம் என்பதை வலியுறுத்தும் பாரதவிலாஸ் நாயகனாக, நடித்திருக்கிறார் என்பது தெரிந்த செய்தியாக இருக்கலாம்!ஆனால்   சர்வோதய இயக்கம் நிறுவிய ஆசார்ய வினோபா பாவேவின் பூதான இயக்கத்தை வலியுறுத்துகிற ஒரு படத்திலும் கூட சிவாஜி நடித்திருக்கிறார் என்று சொன்னால் என்ன படம் என்று புருவத்தை நெறித்து யோசிக்கிற மாதிரி ஆகிவிடும் என்பதால் நானே அந்தப் படத்தின் பெயர் பழனி அதில் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக விவசாயம் செய்து வருவதில் மேலே பார்த்த பாடலும் இருக்கிறது என்று சொன்னால், எத்தனைபேர் யூட்யூப் லிங்க் தராமலேயே தேடிப்பிடித்து பார்க்க மனது வைப்பீர்கள்? பிகிலு திகிலு என்றில்லாமல் கொஞ்சம் நல்ல கதைக்களம், அருமையான பாடல்கள் அதுபோக சலிப்புத் தட்டாமல் பார்க்கக் கூடிய படம் என்றால், அது பழசாய் இருந்தால் தான்  என்ன?

   
இந்தப்படத்தை சிறுவனாக 1964 இல் ராமநாதபுரம் சண்முகா தியேட்டரில் பார்த்தேன்! மெல்லிசை மன்னர்களுடைய இசையில் என்றும் ரசிக்கக் கூடிய பாட்டு! நாகேஷ் சச்சு இருவருடைய நடனமும் இன்றும் ரசிக்கிறமாதிரித்தான் இருக்கிறது!


சின்னப் பெண்ணான போதிலே! இந்தப்பாடலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்று ஒலிபரப்பிக் கொண்டிருந்த நாட்களில் பலரும் கேட்டிருக்கலாம்! ஆரவல்லி! இந்தப் படத்தை 1979 இல் திருச்சி கீழப்புலிவார் ரோட்டில் முருகன் தியேட்டரில் பார்த்தேன்!


Que Sera Sera, Whatever will be will be, The future's not ours to see, Que Sera Sera, What will be will be இதன்  ட்யூனை  மட்டுமல்ல இந்தப்பாடல்  வரிகளையும்  அந்த நாட்களிலேயே அப்பட்டமாகக் காப்பி அடித்திருக்கிறார்கள்! ஆனாலுமென்ன? கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது!  


இந்தப் பாட்டும் கூட கே சரா சரா என்று தான் ஆரம்பிக்கிறது! மேலே பார்த்த பழைய பாடல் மாதிரி இல்லையென்றாலும்   பிரபு தேவாவும் மாதுரி தீட்சித்தும் ஆடுவதாலேயே இது பிரபலமாகிவிட்டது போல!


கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாடன் சாமி! 

மீண்டும் சந்திப்போம்.  

சண்டேன்னா மூணு! கொஞ்சம் அரசியல்! கொஞ்சம் கொதிக்க! ச்சும்மா டமாஷு!

சண்டேன்னா மூணுதானா கொஞ்சம் எக்ஸ்ட்ராவெல்லாம் கிடையாதா என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என்று நன்றாகவே தெரியும்! இந்த சண்டே அப்படி சாதாரணமாக விட்டுப் போய்விடக் கூடியதா என்ன?!


ஒளியை நோக்கி உயர்வது உயிரின் இயற்கை. இதை இந்தப்படம் எவ்வளவு அழகாக, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது! மாற்றங்களுக்குத் தயாராகும் ஒவ்வொரு மனிதனும்   இதே மாதிரிக் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே இப்படி உயர்வை, மாற்றத்தை அடைய முடிகிறது. இது தொடர்பாக இந்தப் பக்கங்களில் Creature of habits    என்ற தலைப்பிலும்  Change Management  என்று இன்னொரு வலைப்பூவிலும் கொஞ்சம் விரிவாகவே பேசியிருக்கிறோம். சண்டேன்னா  மூணு என்பது வெற்று அரட்டை என்றாகி விடாமல் நண்பர்கள் தங்களுடைய கருத்தையும் பகிர்ந்து கொண்டால்  ஒரு பயனுள்ள விவாதக்களமாக இந்த வலைப்பக்கங்களும் நல்லதொரு மாற்றத்திற்கு உயரும். என்னுடைய விருப்பமும் அதுவே.  இது முன்னோட்டம்  


1977 இல் இந்திரா காந்தியைத் தோற்கடித்த காங்கிரசுக்கு ஒரு நல்ல மாற்றாக உருவாகும் என்று நம்பப்பட்ட ஜனதாதளம் பரிசோதனை அளவிலேயே தோற்றுப்போனதேன் என்பதைக் குறித்து நிறைய ஆய்வுகள், கருத்துகள்,புத்தகங்கள் வெளிவந்து அந்த மட்டோடு ஓய்ந்தும் போன பழைய கதைகளை, சுவடுகளைத் தேடிக் கொண்டிருந்த சமயம், இணையத்திலேயே நிறையத் தரவுகள் கிடைப்பதைத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைய தலைமுறைக்கு பழைய வரலாற்றைத் தேடித் படிப்பதில் எந்தவிதமான ஆர்வமும் இல்லை என்றாலும் கூட, வரலாற்றிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளாத வரை வரலாறு  நம்மை விடாது . என்பதையாவது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே!

2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பைத் தந்தன. வாஜ்பாய் அல்லது வேறெந்தக் காங்கிரஸ் அல்லாத கட்சிக்கும் கிடைக்காத அளவுக்கு லோக்சபாவில் தனிப்பெரும்பான்மையை அளித்து நரேந்திர மோடி என்ற மனிதர் மீதான தங்களுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவே 2014 தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் ஆனாலும் இந்தத்தேசத்துக்கு காங்கிரசிடம் இருந்து ழுமையாக விமோசனம் கிடைத்தது என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிற அளவுக்கு பிஜேபியின் செயல்பாடுகள் இருக்கிறதா?

டில்லி சட்டசபைத் தேர்தல்களை ஒட்டி வெளியான இந்த இரண்டு செய்திகளைக் கொஞ்சம் பாருங்களேன்! ஒன்று ஆம் ஆத்மி கட்சிக்கே வெற்றி வாய்ப்பு என்று கூவும் செய்தி. காங்கிரஸ் கட்சி சளைத்து விழுந்தாலும் அவர்கள் இத்தனை நாள் தூக்கிப் பிடித்த சிக்குலர்வியாதியை விட்மாட்டோமென்று தி இந்து தமிழ் நாளிதழில் வந்திருக்கும் கூவல்.

நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் என்ன மோடியைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை மிக அக்கறையாகத் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டிருக்கும் விந்தை.காங்கிரசுக்கு மாற்று என்றுமார்தட்டிக் கொண்டு கிளம்பிய பிஜேபிக்கு நாங்கள் தான் மாற்று என்று மழைக்காலக் கொசு மாதிரி அரசியலில் புதிதாகக்  கிளம்பியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய புஜபல பராக்கிரமத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் கூத்து, மோடி அலைஓய்ந்துவிட்டது இனி எடுபடாது என்று தெரிந்தே கிரண் பேடியை பலிகடாவாகக் களத்தில்  பிஜேபி இறக்கியிருக்கிறது என்று இப்போது சில ஊடகங்கள் பரபரப்புச்செய்தியாக்கிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

டில்லித்  தேர்தல் முடிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தாலும் கூட பதவியேற்ற நாட்களில் இருந்து இன்று வரை பிஜேபி என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்குமே கூடக் கொஞ்சம் குழப்பமான விடைதான் கிடைக்கிறது. ஒருசரியான அரசியல் மாற்றாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதில் கூட பிஜேபி இதுவரை ஜெயித்திருக்கிற மாதிரித் தெரியவில்லை. இதுவரை வெறும் சவுண்டு விடுகிற கட்சியாகவே தொடர்ந்து சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதான தோற்றத்தை சரி செய்ய எந்த முயற்சிகளையும் பிஜேபி மற்றும் சங்க பரிவார் மேற்கொள்ளவில்லை. ஒரு முழுமையான சித்திரம் கிடைக்க இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.   

******
ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல்  முன்பு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை சொத்துவரி பாக்கியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 2 திருநங்கைகளை அழைத்துவந்து  நடனமாட வைத்துள்ளனர். இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர், 33 லட்ச ரூபாய் வரிபாக்கியை ஒரே செக்கில் அளித்துள்ளனர்.


வரிபாக்கியை அரசு அதிகாரிகளே ஆடி வசூலிக்க வேண்டியதுதானே..? - கொந்தளிக்கும் ரோஸ்  இன்னும் கொஞ்சம் விரிவாக 
******
நண்பனாக இரு அல்லது காதலனாக இரு! ரெண்டு ரோலும் ஓர் ஆள் செய்ய முடியாது என்று ஒரு விசித்திரமான சர்வே முடிவு  இங்கே!

 

சர்வே சொல்வதற்கும் இந்த வால்போஸ்டருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை! ச்சும்மா  டமாஷு!


.. 

.....வூட்டுல எலி....வெளியில புலி! கொஞ்சம் லொள்ளு! கொஞ்சம் பொருளாதாரம்!



 .......வூட்டுல எலி....வெளியில புலி?
 படத்துக்கு நன்றி: விகடன் 

 சிபிஐ என்ன செய்யும்? சிறைச்சாலை என்ன செய்யும்?
தெனாவெட்டாக கோர்ட்டுக்கு வரும் சினியுக் கரீம் மொரானி!
கலைஞர் டீவீக்குப் பணம் கைமாற்றியதில் கமிஷன் ஆறு கோடியாம்!

தினமணி தலையங்கம்: கட்டுப்படுமா விலைவாசி?

First Published : 27 May 2011 02:32:34 AM IST

விலைவாசி உயரும்போதெல்லாம் நடுத்தர வர்க்கத்தைவிட, ஏழைகளை விட அதிகம் கவலைப்படுவது நிதி அமைச்சக அதிகாரிகளும் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளும்தான். அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் அவ்வளவுதானா என்று வியப்படைய வேண்டாம், அவர்களுடைய கவலை எல்லாம் அரசின் நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, வங்கிகளின் லாப விகிதம், வசூலாக வேண்டிய கடன் நிலுவை ஆகியவையும் பாதிக்கப்படுமே அதற்கு என்ன செய்வது என்பதுதான்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்த அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்துமே பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் என்று சொல்லிவிடலாம். இப்படிப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தியும் விலைவாசி குறையவில்லையே என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் அவர்களோ விடாமல் விலைவாசியைக் கட்டுப்படுத்த இந்த ஒரே ஒரு வழிதான் இருப்பதுபோல, இதே நடவடிக்கையைத் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். தப்பித்தவறி இந்த உத்தி பலித்துவிடாதா என்கிற எதிர்பார்ப்போ என்னவோ?

அப்படி குறைந்துவிடும் என்று அவர்களே கூட நம்புவதாகவும் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்த, அவர்களால் எடுக்க முடிந்த ஒரே நடவடிக்கை அதுதான் என்பதுதான் உண்மை. மாற்று வழிகளை யோசிக்க அவர்களுக்கு நேரம் இல்லை அல்லது மனம் இல்லை - அவ்வளவுதான்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடன் மீதும், வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி பெறும் கடன் மீதும் தரப்படும் வட்டி வீதம் அரை சதவீதம் உயர்த்தப் பட்டிருக்கிறது. இதனால் எந்தப் பொருளின் விலையும் குறையாது. ஆனால் வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடன், மோட்டார் வாகனக் கடன், கைச் செலவுகளுக்கான கடன், இதர வகைக் கடன் ஆகியவற்றின் மீதான வட்டி வீதம் இதே அளவுக்கு உயரும்.
நடப்பு  நிதியாண்டில் மொத்தவிலை குறியீட்டெண் உயர்ந்த போதெல்லாம் வட்டிவீதமும் இப்படி 9 முறை உயர்த்தப் பட்டிருக்கிறது. இதை ரிசர்வ் வங்கியின் சாதனை என்றே கூறலாம்!

சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை உயர்ந்த போதெல்லாம் அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டம் அடைந்து திவாலாகிவிடும் என்பதைப்போன்ற பிரமையை ஊட்டி விற்பனை விலையை இரவோடு இரவாக உயர்த்த உதவுகிறது அரசு. கடைசியாக லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியது.

இதனால் பஸ், ரயில், போக்குவரத்துக் கட்டணங்கள் லாரி வாடகை, சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்கள் அதே வேகத்தில் உயரும் என்பது மத்திய அரசுக்குத் தெரியாததல்ல. இந்தச் சுமையை மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற முடிவுக்கு அது என்றைக்கோ வந்துவிட்டது.

கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், சிறு தானியம், சர்க்கரை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. தானியங்களைப் பொறுத்தவரையில் விளைச்சல் குறைவு ஒரு காரணம் என்றாலும் அரசு தன்னுடைய திறந்தவெளிக் கிடங்கிலும் மூடிய கிடங்குகளிலும் உள்ள கையிருப்பை உரிய நேரத்தில் பொது விநியோகத்துக்குத் திறந்துவிடாததும் விலைவாசி உயர முக்கியக் காரணம்.

கடந்த சில ஆண்டுகளாகவே அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை முன்பேர வர்த்தகம் மூலம் விற்பதால் அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. உள்நாட்டில் அரிசி, கோதுமை எவ்வளவு தேவைப்படுகிறது, எவ்வளவு விளைந்திருக்கிறது,  எவ்வளவு கையிருப்பில் இருக்கிறது, பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறதா என்றெல்லாம் கணக்குப் பார்க்க முடியாதபடி இந்த முன்பேர வர்த்தகம் தடுத்துவிடுகிறது. எனவே செயற்கையாகவே விலை ஏற்றப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி (கலால்) வரி, மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி, செஸ், சாலை மேம்பாட்டு வரி போன்றவற்றை விலக்கினால் இப்போதுள்ள நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.33 முதல் ரூ.34 வரையில்தான் ஆகும் என்று பொருளாதார நிபுணர் கே.கே. ஜெயின் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் மக்கள் இதைப்போல இரு மடங்கு விலையைத் தந்து வாங்குகின்றனர்.

மாநில அரசுகள் தங்களுடைய வருவாயைப் பெருக்கித்தரும் காம தேனுவாக பெட்ரோல், டீசலைக் கருதுவதால் அவற்றின் விலை உயரும் போது ஒப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இவ்விரு பண்டங்கள் மீதான வரித் தொகை அவர்களுக்கு வசூலிக்கும் செலவு கூட இல்லாமல் "மடியில் விழுந்த மாங்கனி'யாக எளிதாகக் கிடைத்து விடுகிறது.

இரு ஆண்டுகளுக்கு முன்னால் உலக அளவில் வங்கிகளில் டெபாசிட்டுகளுக்குக் கிடைக்கும் வட்டி இந்தியாவில் அதிகம் என்பதால் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் குறுகிய காலத்துக்குத் தங்களுடைய நிறுவனங்கள் மூலம் இந்திய வங்கிகளில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

வங்கிகள் கடன்களுக்கான வட்டி வீதத்தை அதிகரித்தால் பணவீக்க விகிதம் மேலும் அதிகரிக்கும் என்பதே உண்மை. 1990-களில் நம் நாட்டிலேயே வங்கிகள் வசூலித்த வட்டி வீதம் 18% முதல் 20% வரையில்கூட இருந்தன. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசு ஆட்சிக் காலத்தில்தான் வீட்டுக்கடன் வட்டி கூட கணிசமாகக் குறைக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு தவணைகளைக் குறைக்கவா, வட்டியைக் குறைக்கவா என்று எல்.ஐ.சி. போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் கடிதம் எழுதி களிப்பில் ஆழ்த்தின. அப்போதுதான் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி பெற்றது.

வட்டிவீதம் 6% முதல் 7% வரை குறைக்கப்பட்டபோது பணவீக்க விகிதமும் அதே அளவுக்குக் குறைந்தது.

அந்தப் பாடங்களை மறந்துவிட்டு வட்டி வீதத்தை மட்டும் அதிகப்படுத்துவதால் பயன் இல்லை என்பதை ரிசர்வ் வங்கி ஆழ்ந்து பரிசீலித்தால் நல்லது.

விலைவாசியைக் கட்டுப்படுத்த தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய புத்திசாலித்தனமான நடவடிக்கைகள்தான் தேவையே தவிர, சுலப வழிகள் எந்தப் பயனும் அளித்துவிடாது. இது நிதியமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தெரியாதா என்ன?

இந்தத் தலையங்கத்தைப் படித்துவிட்டுக் கொஞ்சம் யோசித்து, உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்களேன்! ஒருபக்கம் இப்படிக் கொடுமை என்றால், இது எங்கெங்கே விரையமாக்கப்படுகிறது என்பதை இதன் இரண்டாம் பகுதியாக இன்றைக்கே பார்க்கலாம்!




 

இந்த வருஷம் கொஞ்சம் விசேஷம் தான்...! தகவல் விசித்திரங்கள்!

சின்ன விஷயம் தான்!

இந்த அக்டோபர் மாத காலண்டரைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்!

1,8,15,22,29 என்று ஐந்து வெள்ளிக் கிழமைகள்!

2,9,16,23.30 என்று ஐந்து சனிக் கிழமைகள்!

3,10.17.24,31 என்று ஐந்து ஞாயிற்றுக் கிழமைகள்!

சரி இதிலென்ன பெரிய ஆச்சரியம் இருக்கிறது என்கிறீர்களா?

இந்த வருடம் ஜனவரி மாதம் கூட இதே மாதிரி அடுத்தடுத்து வெள்ளி, சனி ஞாயிறு என்று ஒரே மாதத்தில் ஐந்து தரம் வந்ததை, இப்போது கவனித்திருப்பீர்கள் இல்லையா!  

அப்புறம் மார்ச் மாதம், மே மாதம்,  ஜூலை மாதம்,ஆகஸ்ட் மாதங்களில் கூட இதே மாதிரி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஐந்து தரம் வந்தது.
 
இந்த வருடம் டிசம்பர் மாதம் கூட இதே மாதிரி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஐந்துதரம் வரப்போகிறது!

சரி, எதற்கு இந்தக் கதை இப்போது என்கிறீர்களா?

வெள்ளி, சனி, ஞாயிறு இப்படி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஒரே மாதத்தில் மறுபடி வர 823 வருடங்கள் ஆகுமாம்!

ஆனால், அப்போது கூட இங்கே உள்ள காங்கிரஸ் காரனுக்கு சொந்தபுத்தி வரவே வராது!








செவ்வாய்க் கிழமைக் கலாய்த்தல்கள்....!



"எப்பவுமே சீரியசாவே பேசிக்கிட்டிருந்தா எப்பூடி? கொஞ்சம் லைட்டாவும் பேசோணும் , மன இறுக்கம் இல்லாமயும் பாத்துக்கோணும்  இல்லையா?" என்றபடியே புள்ளிராசா வங்கி தந்த புள்ளிவிவர சிங்கம், எங்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அண்ணாச்சி உள்ளே வந்தார். சரிதான், இன்னைக்கு அண்ணாச்சிபுதுசா எதையோ கிளப்பி விட்டுறப் போறாரு என்ற பீதியுடனேயே நான் "வாங்க அண்ணாச்சி! என்ன  இந்தப் பக்கம் ரொம்ப நாளாவே காணோம்?" என்றேன்.

அண்ணாச்சி என்னுடைய வரவேற்பையோ, அதில் தொனித்த பயத்தையோ கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மனிதர், ஒரு நாற்காலியில் சௌகரியமாக சாய்ந்து கொண்டபடியே, தன்னுடைய லேப்டாப்பைத் திறந்து "புள்ளி விவரம் பேசுவதற்கு" தயாராகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.  'இன்னைக்கு கிளிஞ்சது கிருஷ்ணகிரி மட்டுமில்லே...நானுந்தேன்' என்று மனதுக்குள் முனகிக் கொண்டு, "அண்ணாச்சி! என்ன சாப்பிடறீங்க? காபி? டீ ?" என்று உபசாரம் செய்தேன்.

அண்ணாச்சி என் உபசாரங்களுக்கெல்லாம்  அசருகிற ஆளாக இல்லை! "நீயும் தான் ஒரு பேங்குல வேலை பாத்தே! பேங்கைப் பத்தி எதுனாச்சும் புதுசா எழுதுனியா?" என்றார். சுமார் முப்பது வருஷம் எனக்கு வாழ்க்கையாகவும், சோறு போடுவதாகவும் இருந்த தொழிலை மறந்துவிட்டேனென்று குற்றம் சாட்டுகிற தொனி அதில் இருந்ததைக் கவனித்தும் கவனியாத மாதிரி அமைதியாக இருந்தேன். நான் என்னதான்  சொன்னாலும் அண்ணாச்சி தான் சொல்ல வந்ததை "நச்சென்று புள்ளிவிவரங்களுடன்" என் தலையில் குட்டிச் சொல்லாமல்  இன்றைக்கு விடப்போவதில்லை! அப்புறம் எதற்காக நான் வேறு வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்?

வங்கிகளைப் பற்றிப் பேச்சு ஆரம்பித்து சமீபத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு  டயர் டூ காபிடலாக, அடுத்து வரும் வருடங்களில் இந்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய இருக்கும் செய்தி, பேஸ் ரேட்  என்று ஒவ்வொரு வங்கியும் தான் நிர்ணயிக்கும்  அடிப்படை வட்டி விகிதத்தைப் பற்றி,  நடந்து முடிந்த ஊதிய ஒப்பந்தம், அனைவருக்கும் பென்ஷன் இப்படிப் போய்க் கொண்டே இருந்தது. இதை விலாவரியாகச் சொல்வது கொஞ்சம் போரடிக்கும்! அண்ணாச்சி கூட வரும்போதே கொஞ்சம் லைட்டாகச் சொல்ல வேண்டும் என்று ஆரம்பித்துக் கொண்டு தான் வந்தாரில்லையா? விலாவாரியாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு பால பாடமாகத் தெரிந்து கொள்ள மட்டும் இங்கே!
 
முடிந்தால் கட்டுரையின் கீழே கொடுத்திருக்கும் வேறு பதிவுகளுக்கும் போய்ப் பார்க்கலாம்!



கொஞ்சம் சுருக்கமாக ஆனால் அடிப்படையை புரிந்து கொள்வதற்கு, அரசாங்கங்களும் வங்கிகளும் எப்படி உன்னாலே உன்னாலே நான் கெட்டேன், என்னாலே என்னாலே எப்படி நீ கெட்டாய் என்று ஒன்றை ஒன்று தாங்குவதாக நினைத்துக் கொண்டு செய்கிற வேலையை இந்தப் படம் ஒன்றே அநேகமாகச் சொல்லி விடும்! சொன்னது புரியவில்லை என்றால், பின்னூட்டத்தில் வரலாம், கேட்கலாம்!
  
******


"வடகொரியாவுக்குப் போகவேணாம்! அது ஆபத்தான பயணம்னு" சொல்றதோட நிறுத்தியிருந்தாப் பரவாயில்லே! எங்களிடம் முன்னாள் அதிபர்கள், (அதாவது வேலை வெட்டி இல்லாதவர்கள்) எண்ணிக்கை கம்மியாத்தான் இருக்கிறார்கள் என்று டிவிட்டியிருக்கிறார் இந்தப் புண்ணியவான்!

இவர் மெய்யாலுமே, அமெரிக்க ராஜாங்கத் துறையில், ஸ்டேட் டிபார்ட்மெண்டில் வேலை செய்யறவராம்! இதைப் பாத்தவுடனேயே ஒரு யோசனை வந்தது!


"தினமணி ஆசிரியர் திரு. ஏ.என். சிவராமன் அவர்கள், எமெர்ஜென்சி காலத்தை ஒட்டி, கணக்கன் என்ற‌ புனைபெயரில் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி, ஜனநாயக முறையில் வெவ்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப் படும் தேர்தல் முறைகள், அதில் உள்ள‌ சாதக,பாதக‌ங்களைப் பற்றி, தொடர் கட்டுரைகளாக எழுதிவந்தது, பின்னால் தினமணி கதிர்வெளீயீடாகப் புத்தக வடிவிலும் வந்தது, இன்றைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாகவும், அவசியமாகவும் இருப்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

வெஸ்ட்மின்ஸ்டெர் மெதட் எனப்படும் பிரிடிஷ் பாராளுமன்ற தேர்தல் அமைப்பில் இருக்கும் மிகப் பெரிய குறையே, ஜெயித்தவன் தோற்றவனுடையதையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறான் என்பது தான்.

இந்த முறையை மாற்றி, கட்சிகள் தனித் தனியாக வாங்குகிற வாக்குகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் எண்ணிக்கையை முடிவு செய்வது என்று வந்தாலொழிய, தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு வயது உச்சவரம்பு, அறுபது அல்லது அறுபத்தைந்து தான் அதிகபட்சம் என்று வைத்துக் கொள்ளலாமே, ஒரே நபர் இரண்டு தடவைக்குமேல், மந்திரியாகவோ, அதற்கு உயர்ந்த பதவியிலோ இருக்க முடியாது என்று மாற்றிப் பார்த்தாலே, அரசியல் வியாதிகளை முழுவதுமாகத் தடுக்க முடியாது தான், தொற்றுநோயாகப் பெருகுவதையாவது தவிர்க்க முடியும்!

கல்லறைக்குள் போவது வரை இந்திய அரசியல்வாதிகள் ஒய்வு பெறுவதில்லைதான்!

அவர்களாக ஒதுங்கவில்லைஎன்றால்,கட்டாய ஒய்வு கொடுத்துப் பார்க்கிற ஒரு முயற்சியைச் செய்து தான் பார்ப்போமே!"

இப்படி இந்தப் பதிவில் சொல்லியிருந்ததை நடைமுறைப் படுத்துவது கொஞ்சம் கடினம் தான்!அமெரிக்காவிலோ, முன்னாள் பஞ்சம்! பேசாமல்  இந்த முன்னாள், முடிந்தால் இந்நாள்களையும் டெபுடேஷனில் அனுப்பி வைத்தால் என்ன! மன்மோகன் சிங் மனசு வச்சா, நடக்காமலேயா போயிடும்?!



****** 


ஆனாலும் இது கொஞ்சம் ஓவர், லொள்ளு தான் என்று பதிவைப் பற்றிச் சொல்பவர்களுக்காக! இது கொஞ்சம் ஒரிஜினல் லொள்ளு!
 
******


வெறும்  பதினாலு சென்ட் கொடுத்தால், இப்படிப் பிராண்டும், கடிக்கும் பூனையை நீங்கள் தடுக்கலாம்! இப்படிச் சொல்கிற இந்தப் படம் கொஞ்சம் வேடிக்கையாக இல்லை?!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், கல்லறைக்குப் போகிற நாள், நேரம் வரும் வரை, ஏமாற்றிக் கொண்டே இருக்கும் இந்திய அரசியல்வாதிகளிடம் இப்படிக் கடிபட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது கூடப் புரியும்!

விடுதலை, சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்வது, நம்முடைய கைகளில் தான் இருக்கிறது!

என்ன செய்யப் போகிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!