Showing posts with label ஆசிரியர் தினம். Show all posts
Showing posts with label ஆசிரியர் தினம். Show all posts

"எலே வாத்திச்சி! இதான் அ'னா,,,!


திரைப் படத்துக்கு மட்டும் தான் ட்ரைலர் இருக்க வேண்டுமா? பதிவுக்கும் கூட ட்ரைலர் ஓட்டிப் பார்க்கலாமே!

கிழம்பூ என்று ஒரு படம்! AVM ராஜன், புஷ்பலதா நடித்த படம் என்ற நினைவு. அதில் சோ ஒரு படிக்காத பண்ணையாராக வருவார். புஷ்பலதா, படிக்காத முட்டாள் என்று அவரைத் திட்டி விடுவார். பண்ணையாருக்கு ரோஷம் வந்து, பாடம் படிக்கக் கிளம்புவார். வாத்திச்சியாக ஆச்சி மனோரமா! ஆனா ஆவன்னா சொல்லிக்  கொடுக்க ஆரம்பிப்பார். கரும் பலகையில் ஆனா என்று எழுதிக் காண்பிப்பார். சோவும் தன் முட்டைக் கண்களை உருட்டி விழித்து  அ'னா என்று சொல்லிக் கொண்டே  எதையோ கிறுக்குவார். வாத்தியாரம்மா பதறி, அப்படியில்லீங்க அ'னா, இப்படி எழுதணும் என்று அ'னா எழுதிக் காண்பிப்பார்! சோ தன் முட்டைக் கண்களை இன்னமும் அகல உருட்டி மறுபடியும் எதையோ கிறுக்கி அ'னா என்பார். நாலைந்து தரம் இப்படி வாத்திச்சி திருத்தவும், பண்ணையார் முழிகளை உருட்டி மிரட்டவும், கடைசியாக "எலே வாத்திச்சி! இதான் அ'னா என்பார். வாத்திச்சியும் நடுநடுங்கி, ஆமாங்க இது தான்  அ'னா என்று ஒத்துப் பாடுவார்!


செப்டம்பர் 5-ம் தேதிதான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் என்றாலும், துரதிருஷ்டவசமாக, அந்த நாள் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டதால், இந்தியாவில் பெரும் பாலான பள்ளிகளில் ஒருநாள் முன்னதாகவே கொண்டாடி முடித்து விட்டனர். தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சிகூட பிரதமரால் சனிக்கிழமையே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

டாக்டர் இராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரியில்கூட (ஒரு சிலர் மட்டும்) அவரது படத்துக்கு சனிக்கிழமையே மலர் தூவி வணங்கி விட்டார்கள். முறைப்படியான விழா, கல்லூரி வேலைநாளில் நடைபெற உள்ளதாம்.


ஆசிரியர் தினம் மட்டுமன்றி, தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி, தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஆகியனவும்கூட, சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துவிடுமேயானால், வெள்ளிக் கிழமையே உறுதிமொழி ஏற்று, கடமையை சீக்கிரமே முடித்துக் கொள்கிற வழக்கம் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுவிட்டது.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தைத் திட்டாத அரசு ஊழியர்களோ ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லி விடலாம். சுதந்திர தினம் என்ன ஆயுத பூஜையா, முதல்நாளே அலுவல்நேரத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில், பொரிகடலை வைத்து சாமி கும்பிடுவதைப் போல, முதல்நாளே கொடியேற்றிவிட! 
கொடியேற்ற ஆசிரியர் வரவில்லை என்பதற்காக பள்ளிக்குப் பூட்டுப் போட்ட கிராமங்களையும் இந்த ஆண்டு பார்க்க நேர்ந்தது.

இப்படிச் சிணுங்கிக் கொண்டே கொண்டாடுவதைக் காட்டிலும் அந்த விழாவையே ரத்து செய்துவிடலாமே! எதற்காக இப்படி முன்னதாகவே கொண்டாடுவதும், அரைகுறையாக நடத்துவதும்!  
தனியார் நிறுவனங்களிலும் சாலையோரத்திலும் ஓய்வுநாள் என்பதே இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருப்போர் ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஞாயிற்றுக் கிழமையைத் தியாகம் செய்யக்கூட இவர்களுக்கு மனம் வருவதில்லையே, இவர்களைப் பொதுநல ஊழியர்கள் என்று அழைப்பதே கூடத் தவறல்லவா?

இதுபற்றிக் கேட்டால், "நாங்கள் மனிதர்கள் இல்லையா? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் குடும்பத்தோடு இருக்க வேண்டாமா?' என்பார்கள். இவர்கள் எத்தனை மணி நேரத்தைக் குடும்பத்துக்காகச் செலவிடுகிறார்கள் என்று கணக்கிட்டால், மற்ற வாரக் கிழமைகளைவிட குறைவாகத்தான் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும், மாலையில் ஓட்டலுக்குப் போக வேண்டும், விழாக்களில் பங்குகொள்ள வேண்டும், காலை முதல் மாலை வரை டிவி அல்லது டிவிடி பார்க்க வேண்டும், சிக்கன், மட்டன், மீன் என்று ஏதாவது ஒரு அசைவ உணவு உண்டே ஆக வேண்டும், மது அருந்த வேண்டும், இதுதான் ஜாலி என்பதாகக் கருதப்படும் நிலைமை உருவாகிவிட்டது. இது எந்த அளவுக்குப் போகிறதென்றால், நூலகத்துக்கும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை வேண்டும் என்று கேட்கிற அளவுக்குப் போயுள்ளது. ஆண்டு முழுவதும் தீபாவளி, பொங்கலிலும்கூட செயல் பட்டால்தானே அது அறிவாலயம் (நூலகம்)!

ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும் என்கிற மனநிலை இளைஞர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வர வேண்டும்; வேறொரு நாளில் வாரவிடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும்கூட, "ஃபிரண்ட்சை  மிஸ் பண்ணிடுவேனே' என்று அந்த வேலையைத் தவிர்க்கிற மனநிலை இளைஞர்களிடம் உருவாகியிருக்கிறது என்றால், ஞாயிற்றுக்கிழமையிலும் உழைக்கின்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே நினைவுக்கு வராமல் மனது மரத்துப்போகும் என்றால், இதை ஞாயிறு நோய் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல!

இதெல்லாம் போகட்டும். இந்த ஞாயிறு மனநோய் சேவைப் பிரிவு ஊழியர்களையும் பீடித்துக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை மின்வாரியம், தொலைத் தொடர்பு ஊழியர்களைப் பிடிப்பது முயல் கொம்புதான். மேலிடத்தில் செல்வாக்கு இருந்தால்  மட்டுமே சராசரி இந்தியக் குடிமகனுக்கு ஞாயிறு சேவை வாய்க்கும்.

இதெல்லாம்கூடத் தொலையட்டும். மருத்துவமனை மருத்துவர்களையும் இந்த நோய் பீடித்திருக்கிறது என்பதுதான்  வேதனையிலும் வேதனை. ஞாயிற்றுக்கிழமையன்று திடீர் உடல்நலக் குறைவு அல்லது விபத்தில் காயம் என்பதற்காக எந்த மருத்துவமனைக்குப் போனாலும், டாக்டர்கள் இருப்பதில்லை.  சாதாரண கிளீனிக்குகள் மூடப்பட்டிருக்கும். 24 மணி நேர சேவை மருத்துவமனை என்று அறிவிப்பு இருந்தாலும் செவிலியர் மட்டுமே இருப்பார்.கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும்கூட பயிற்சிமருத்துவர்கள் ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் தாற்காலிகமான சிகிச்சையைத்தான் தருவார்கள். அரசு மருத்துவமனை என்றால் டீன் தயவு இருந்தால்தான் முடியும். அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மோதல், டாக்டர் மீது தாக்குதல் என்கிற செய்திகள் எந்தக் கிழமையில் நடைபெறுகிறது என்பதைக் கணக்கிட்டால் 99 விழுக்காடு ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்கும்.

ஞாயிற்றுக் கிழமை மட்டும் தமிழகம் முழுக்க, ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்பட, ஒரு நாள் மதுவிலக்கு அமல்படுத்தினாலும்கூட போதும், இந்த ஞாயிறுநோய் பாதி குணமடைந்துவிடும்! இந்தக் கருத்தை நாம் முன்வைத்தால், அண்டை மாநிலங்களும் இதைப் பின்பற்றுமா என்கிற அசட்டுத்தனமான கேள்வி கேட்கப்படும்.

நமக்குத் தெரிந்து இரவு பகல், நாள் கிழமை என்று பாராமல் இயங்கும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப்பாடமான உழைப்பை மட்டும் நம்மில் யாரும் பின்பற்றத் தயாராக இல்லையே என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஓய்வு தேவையில்லை என்பதல்ல நமது வாதம்..

ஓய்வு என்கிற பெயரில் பொழுது வீணடிக்கப்படுவதும், ஞாயிறு என்கிற காரணத்தால் கடமை மறப்பதும் தவறு என்பதுதான் நாம் வலியுறுத்த விரும்பும் கருத்து!


இது இன்றைய தினமணி நாளிதழின் தலையங்கம்! அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம், காதலர் தினம், ஆட்டுக் குட்டி தினம், இப்படி ஏதேதோ தினங்களை அன்றைக்கு ஒரு நாள் மட்டும் நினைத்துப் பார்த்தால் மட்டும் போதுமா? வெறும் சாங்கியமாக, மூடத் தனமாக மாறிவிடாதா என்ற ஆதங்கத்தைத் தான் ஆசிரியர் தினப் பதிவில் கொட்டி இருந்தேன்.

ஆசிரியனை வணங்குவதென்பது, அந்த ஒரு நாளில் மட்டும் தானா? இந்தக் கேள்வி ஒரு புறம்! ஆசிரியன் என்று சொல்லிக் கொள்வதனால் மட்டுமே ஒருவர் ஆசிரியனாகி விட முடியுமா? வணங்கப் படும் தகுதி தானே வந்து விடுமா? அப்படி வணங்கப் பெறும் நிலைக்கும் ஒரு வரையறை, தகுதி வேண்டாமா என்ற கேள்வியிலேயே, இன்றைய ஆசிரியர்கள் பெரும்பாலானோர், தங்கள் பணிக்குத் தகுதியானவர்களாக இல்லை என்பதும், தகுதி உள்ள சிலரும், பணியில் சாதி, அரசியல் குறுக்கீடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், ஆசிரியப் பணியில் இருந்து விலகி வேறு துறைக்குச் செல்லவே விரும்புகிறார்கள் என்று சமீபத்தில் படித்த ஒரு புள்ளி விவரமும் வெளிப்படுத்துகிற பதில் இருக்கிறதே!

ஆசிரியர்கள், நாளைய குடிமகன்களை உருவாக்கும் உன்னதமான பணியைச் செய்பவர்கள் என்ற வேலைவிவரணம் எல்லாம் சரிதான்!  கேள்வி அந்த விவரணத்தைப் பற்றியதல்ல, எத்தனை பேர் அந்த வேலையை ஒழுங்காகச் செய்கிறார்கள் என்பது தான்!

இன்றைக்கு எத்தனை ஆசிரியர்கள் ட்ரைலரில் பார்த்தோமே, அதில்  வரும் வாத்திச்சி மாதிரி இல்லாமல், சுய சிந்தனையுடன், நேர்மையுடன், நெஞ்சில் உரத்துடன் தங்கள் தொழிலை செய்து வருகிறார்கள்? கல்வி அறத்தினால் சோபிக்கிறது என்பதைக் கற்றுணர்ந்தது மட்டுமல்ல செயலிலும் காட்டிய மண் இது! அதை அறிந்து வைத்திருக்கும் ஆசிரியர்கள் எத்தனை பேர்?

இப்போது சொல்லுங்கள் இப்போதைய கல்வி அறத்தினால் சோபிக்கிறதா? அல்லது எல்லா மட்டங்களிலும் "காசே தான் கடவுளடா" என்றிருக்கிறதா?  


"ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் .. இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை அடையும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது."



சென்ற வருடம் வெளியான பதிவுதான்! ஆனாலும், இப்போதும் உரத்த சிந்தனையாக, நல்லாசிரியரை எதிர்பார்த்து எழுதப்பட்ட நல்ல பதிவாக நான் நினைப்பது இந்தப் பதிவைத் தான்!


 

 

அவர் அல்லவோ ஆசிரியர்! வணங்கத் தக்கவரும் கூட!





 வித்யா தர்மே ஷோபதே 
கல்வி அறத்தினால் பிரகாசிக்கிறது!


"நீங்கள் குறிப்பிட்ட சில ஆசிரியர்களை, பெயர் குறிப்பிட்டு எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். நானோ, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும், ஒரு முக்கியமான செய்தியைப் பாடமாகச் சொல்லிக் கொடுத்தவர்களை, எண்ணக் கூட மறந்து விட்டது, நினைத்து வணங்கிக் கொண்டிருக்கிறேன்.

தத்தாத்ரேயனிடம் உன்னுடைய குரு யார் என்று கேட்ட போது, எனக்கு இருபத்துநான்கு குருமார்கள், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையைப் போதித்தார்கள் எனப் பதில் வந்ததாம். வாழ்க்கையை நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொடுப்பவனே குரு! ஆசிரியன்! வெறுமே நான் வாத்தியார் வேலையில் இருக்கிறேன், சம்பளம் வாங்குகிறேன், எனக்குப் புனிதர் கும்பிடு போடு என்றால் வேலைக்கு ஆகாது!

அவ்வளவுதான்!"

ஆசிரியர் தினத்தை ஒட்டி இப்படி அதீதக் கனவுகள் என்ற பதிவில்

 
பின்னூட்டமிட்டு ஒரு வருடமாகி விட்டது. இப்போது கூட முந்தைய பதிவில் அதைத் தான் சொல்லி இருந்தேன். எங்கள் ப்ளாக்
 
கௌதமன் சார் அதை "வழக்கமான கிருஷ்ண மூர்த்தி (ரகப்) பதிவு! உங்க ஆசிரியர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார், ஏன் என்று எழுதியிருக்கலாம். அதை விட்டு ......" என்று ஒற்றை வரிப் பின்னூட்டத்தில் தள்ளி விட்டார்!

வணங்கத் தகுந்த ஆசிரியர் என்றால், அது அவர் தான்....!

இது நடந்து ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டது.

தேவகோட்டையில் இருந்து தகப்பனும் மகனுமாக, மதுரையில் ஒரு கல்லூரியில் பி யு சி சேர்வதற்காக வந்திருந்தார்கள். அவர்கள் வந்த நேரம், சேர்க்கை முடிந்துவிட்டது. கிராம சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் என்பதால், விண்ணப்பங்கள் பெறுவது, அதை உரிய காலத்துக்குள் சமர்ப்பிப்பது போன்ற விவரங்களை அறிந்திருக்கவில்லை.  சரியான தகவல், வழிகாட்டக் கூடியவர்களும் இல்லை.

பதினைந்து வயதே நிரம்பிய அந்த இளைஞனுக்கு மேலே படிக்க வேண்டும் என்ற ஆர்வம்! வறுமையின் பிடியில் இருந்தபோதிலும். அவனைப் படிக்க வைக்கவேண்டும் என்ற கனவும், தவமுமாகக் கொண்ட குடும்பம். ஒருவர் யோசனை சொன்னார். கல்லூரி முதல்வர் தினசரி காலை, மதுரை கூடல் அழகர் கோவிலுக்கு வந்து சேவிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். அவரைச் சந்தியுங்கள், அவரால் முடிந்ததை செய்வார் என்று நம்பிக்கையும் அளித்தார்.

தகப்பனும், மகனுமாக, அவரைச் சந்திப்பதற்காகக் கூடல் அழகர் கோவிலில் காத்திருந்தார்கள். சந்தித்தார்கள். அந்த இளைஞன், எப்படியாவது கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற தன் கனவைச் சொன்னான். மாநில அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்த அவனுடைய எஸ் எஸ் எல் சி மதிப்பெண்களைப் பார்த்து விட்ட, அந்தக் கல்லூரி முதல்வர் சொன்னார். "இப்படிப் படிப்பில் ஆர்வம் உள்ள பையன்களுக்கு இடம் கொடுக்காமல் எதற்காகக் கல்லூரி நடத்த வேண்டும்? தான் ஏன் கல்லூரி முதல்வராக இருக்க வேண்டும்? நாளைக் காலை கல்லூரிக்கு வா! வரும்போது கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தத் தயாராகவும் வா!"

ஆசிரியனாக இருப்பது, படிக்க விரும்பும் மாணவனுக்கு உதவியாக இருப்பதே என்று சொல்லாமல் சொன்னது மட்டுமல்ல, அதை செயலிலும் காட்டிய  அந்தக் கல்லூரி முதல்வரின் பெயர் திரு.டி  தோத்தாத்ரி ஐயங்கார்! அவர் முதல்வராக இருந்த கல்லூரி, மதுரைக் கல்லூரி! 
 
அப்படி அவர் கருணையோடு படிக்க இடம் கொடுத்த அந்த மாணவன், அந்த ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தின் கணிதத்திற்கான ஃபிஷர் தங்க மெடலை வென்று, தனக்கு இடம் கொடுத்த கல்லூரிக்கும், நேரமறிந்து உதவிய கருணையுள்ளத்திற்கும் பெருமை சேர்த்தான் என்பது தனிக் கதை!
 


அவர் ஆசிரியர்! இன்றைக்கும் வணங்கத் தக்கவர்!

மதுரைக் கல்லூரியின் குறிக்கோள் வாசகமாக "வித்யா தர்மே
ஷோபதே" கல்வி அறத்தினால் பிரகாசிக்கிறது என்று இன்றைக்கும் முகப்புச் சுவற்றிலும், கோட் ஆப் ஆர்ம்ஸ் என்று சொல்வார்களே அந்தக் கல்லூரிச் சின்னத்திலும் இருக்கிறது. அந்தக் கல்வியை அறத்தினால் பிரகாசிக்கச் செய்த சிறந்த ஆசிரியர் திரு தோத்தாத்ரி ஐயங்கார்!
மதுரைக் கல்லூரியின் முதல்வராக 1953 இல் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னால், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் கணிதத்துறைப் பேராசிரியராக முப்பத்திரண்டு ஆண்டுகள் பணியாற்றிருக்கிறார். உடன் பணியாற்றிய ஆசிரியர்களை எல்லாம் கிறித்தவம் தனக்குள் மதமாற்றம் செய்துகொண்ட நிலையிலும் கூட, தன்னுடைய தனித் தன்மையையோ, மத நம்பிக்கைகளையோ விட்டுக் கொடுக்காமல், அதே நேரம், எல்லோராலும் மதிக்கப் பட்ட கணிதப் பேராசிரியராக இருந்திருக்கிறார்.

தன்னுடைய அக்கினிச் சிறகுகள் புத்தகத்தில் டாக்டர்  அப்துல் கலாம், தோத்தாத்ரி ஐயங்காரின் விரிவுரை ஒன்றை 1952 இல் கேட்டதை நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார். மதுரைக் கல்லூரியில் இருந்து பணியில் ஒய்வு பெற்ற பிறகு, சென்னையில் டிடிஜிடி  வைஷ்ணவ் கல்லூரியின் முதல் பிரின்சிபாலாக, 1964 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி
ருக்கிறார்.

அவரைப் பற்றி இங்கே
 
மற்றும் இங்கே இன்னும் கொஞ்சம் விவரம் தெரிந்து கொள்ளலாம்! என்னென்ன நல்ல பண்புகளை இன்றைய ஆசிரியர்களிடம் காண முடியவில்லை என்ற என் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் கதை கேட்க வேண்டுமா? இங்கே




 

ஆசிரியர் தினம் என்ற அர்த்தம் இழந்த சாங்கியம்....!


 ஹேப்பியாகக் கொண்டாடும்படிதான் ஆசிரியர்கள், கல்வித்தந்தைகள் நடந்து கொள்கிறார்களா?

எம்ஜியார் ஆட்சிக் காலத்தில் ஆசிரியர் அரசு அலுவலர்கள் கூட்டுக்  குழு, சில கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களைத் தீவிரப் படுத்திக் கொண்டிருந்த நேரம். ஜேக்டீ கூட்டுக் குழுவில், ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஒரு பிரசாரக் கூட்டத்தை முடித்த பிறகு,அரசு கல்லூரி ஆசிரியர் சங்க உள்ளூர் கிளை செயலாளரும் நானும், இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போனோம்.

திரையரங்கில், இடையே,
ஆசிரியர் எழுந்து யாருக்கோ விஷ் பண்ணினார். நான் யார் என்று கேட்பதற்கு முன்னாலேயே, தன்னிடம் படிக்கும் பையன் என்று சொன்னார். எனக்குள் எழுந்த அருவருப்பை ஊகித்தாரோ என்னவோ, 'என்ன பண்ணறது? அவன் தயவுல அவனும் இன்னும் ஐந்தாறுபேர் சேர்ந்து ட்யூஷனுக்கு வருகிறார்கள்.' சற்று ஈனஸ்வரமாகச் சொன்னார். நடந்த சம்பவம் இது.

சம்பளப் பட்டியலைக் கருவூலத்தில் கொடுத்துக் காசை வாங்கி, ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் இடத்திலேயே, ஏலச்சீட்டு, வட்டி வசூல் நடத்தி விட்டு, மப்போடு திரியும் ஆசியர்களையும் பார்த்தாயிற்று. 


கல்விக்கூடங்கள் தான் வியாபாரமாகிவிட்டது என்று வருத்தப் படுபவரா நீங்கள்? நிறைய ஆசிரியர்கள் ட்யூஷன் வியாபாரம் ஆரம்பித்துக் கல்லாக் கட்டுவது, வாத்தித் தொழிலை ஒரு சைடு பிசினசாக மட்டுமே செய்கிறவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்! எந்தக் காலத்திலோ சொன்னது, இன்றைக்கு, ஆசிரியர்களை ஆண்டவன் இடத்தில் வைத்துப் பார்க்க முடிகிறதா? அதற்குத் தகுதி உள்ளவர்களாகத் தான் ஆசிரியர் தொழிலில் இருக்கிற பெரும்பான்மையினரும் இருக்கிறார்களா?

மறைந்த திரு. கா.காளிமுத்து, ஒரு அரசியல் வாதியைப் பார்த்துச் சொன்ன இந்த வார்த்தை மிகப் பிரபலம், இந்த நேரம் பார்த்து நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

"சிலரைப் பார்த்தால் கும்பிடத் தோன்றும்! சிலரைப் பார்த்துக் கூப்பிடத் தோன்றும்!"


இதெல்லாம் இப்பொழுது எதற்கு?

இன்று  ஆசிரியர் தினம்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை இந்திய அரசு, ஆசிரியர் தினமாக ஒரு அர்த்தமில்லாத சாங்கியமாகக் கொண்டாடி வரும் தினம் செப்டெம்பர் ஐந்தாம் தேதி! தமிழ்நாடு அரசும் தன் பங்கு சாங்கியமாகக் கொஞ்சம் பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்குகிற தினம் அவ்வளவு தானே, இதற்கு ஏன் 'வோல்கா முதல் கங்கை வரை' மாதிரி, கிருதமால் நதியில் ஆரம்பித்து, நல்லாசிரியர் விருது வரை பேச வேண்டும் என்கிறீர்களா? நல்லாசிரியர் விருது,
லைமாமணி விருது, அப்பழுக்கற்ற அரசு ஊழியர் விருது, உத்தமர் காந்தி விருது பெறுகிறவர்கள் யோக்கியதையைப் பார்க்கும் எவராவது "புனிதம்" இருப்பதாகச் சொல்லிக் கொள்ள முடியுமா?

இந்தப் புதிரா--புனிதமா என்ற கேள்விக்கு நீங்கள் தான் விடை தேடியாக வேண்டும்!

தத்தாத்ரேயனிடம் உன்னுடைய குரு யார்  என்று கேட்ட போது, எனக்கு இருபத்துநான்கு குருமார்கள், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையைப் போதித்தார்கள் எனப் பதில் வந்ததாம். வாழ்க்கையை நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொடுப்பவனே குரு! ஆசிரியன்! வெறுமே நான் வாத்தியார் வேலையில் இருக்கிறேன், சம்பளம் வாங்குகிறேன், எனக்குப் புனிதர் கும்பிடு போடு என்றால் வேலைக்கு ஆகாது! 

கற்றுக்கொள்வதும் கற்பித்தலின் ஒரு பகுதியே!  ஈரல் முதல் எல்லாம் சீரழிந்து கிடக்கும் கல்வித்துறையில் மாற்றங்களைக் குறித்த சிந்தனையும், விவாதங்களும், மாற்றத்திற்கான முயற்சியும் ஆசிரியர்களிடமிருந்து தான் வர வேண்டும்! அதற்குத் தயாராக, வெளிப்படையாக விவாதிக்க, ஒரு பொதுக் கருத்தை உருவாக்க எத்தனை ஆசிரியர்கள் தயார்? எத்தனை பேரிடம் அப்படி ஒன்றை எடுத்துச் செய்வதற்கான தகுதி, சிந்தனை, தைரியம், இருக்கிறது?


சுய சிந்தனையோடு  மாற்றத்திற்கான விதையாகவும் இருக்கும் ஆசிரியர்களை வணங்குகிறேன்! ஆசிரியர் தினமாக, இந்த ஒருநாள் மட்டும் அல்ல, உங்களிடமிருந்து பெற்ற உந்து விசையோடு வாழ்நாள் முழுவதுமே, ஆசிரியரைக் கொண்டாடும் நாளாக மாற வாழ்த்துக்கள்!

அறிவித்த எழுத்து எங்கள் வாழ்க்கைக்கும் உதவுகிறதா எனப்பார்த்து எழுத்தறிவித்தவன் எவனோ, அவனே நல்லாசிரியன்! நாங்கள் வணங்கும் ஆசிரியன்!
அப்படியானால், நாட்டில் நல்ல ஆசிரியர்களே இல்லையா? ஒரு கூடைச் செங்கல்லும் பிடாரி என்று பேசுவது சரியாக இருக்குமா? எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது நியாயம் தானா? இப்படியெல்லாம் எதிர்க் கேள்விகள் வரும், வர வேண்டும்!

கல்வித் துறையைப் பற்றி, கல்வித் தரத்தைப் பற்றித் தொடர்ந்து வரும் பதிவுகளில் பேசுவோம்!
 


அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா!


சுவாமிமலையில் தகப்பன் சாமியாக ஒரு சின்னக் குழந்தை, தகப்பனுக்கே 'தன்னை' அறிந்துகொள்ளும் உபதேசத்தைச் சொல்லிக் கொடுத்தது. மோன குருவாக இருந்தவனை, மௌனத்திலேயே எல்லாம் கற்பித்தவனாகச் சொல்லப்படுபவனுக்குமே மௌனம் கலைய வைத்து, பிரணவத்தின் பொருள் எதுவென்று தெளிந்து கொள்ளச் சிறு குழந்தையிடம் 'உனக்குத் தெரியுமோ, தெரிந்தால் சொல்' என்று கேட்க வைத்தது.

"இப்படிக் கேட்டால் எப்படி? கேட்கிற முறையில் கேட்டால் சொல்லுவேன்!" என்றதாம் சிறு குழந்தை! தந்தை, தான் பெரியவன், தனக்கே உபதேசமா, அதுவும் நேற்று முளைத்த இந்த சிறு குழந்தையா என்றெல்லாம் யோசிக்கவில்லை. பணிவோடு, ஒரு குருவிடம் சீடன் எப்படி, உண்மையான பணிவோடு, அக்கறையோடு கேட்கவேண்டுமோ, அப்படிப் பாடம் கேட்டானாம். அந்த வினயமும், அக்கறையும் வந்தபோது தெரிய வேண்டியதும் தெரிந்தது, சொல்லப்பட்டது என்கிறது கதை!

கந்தா கடம்பா கதிர்வேலா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு திருநீற்றை மட்டும் பூசிக் கொள்வதோடு நின்று விடுகிறவர்களுக்குக் கதையாக மட்டும் தான் இது நிற்கும். இவர்களுக்குத் தகப்பன் சாமியாக வந்த அந்த சுவாமிநாதனே வந்து சொன்னாலும் ஏறாது என்பதால், சென்ற பதிவில் ஆசிரியர் பனி புதிரா புனிதமா என்ற கேள்வியை எழுப்பி விட்டு, ஒன்றிரண்டு அனுபவங்களை மட்டும் சொல்லியிருந்தேன்.

"உங்களால அவங்க கேக்குற கேள்விக்குப் பதில் சொல்ல முடியலையா? பேசாம விட்டுட்டு எங்கள மாதிரி கிருஷ்ணா ராமான்னு இருந்துடுங்க" என்று எனக்கு உபதேசம் செய்திருந்ததை ஓரிடத்தில் படித்த பிறகு தான், யார் ஆசிரியன்,எவன் வந்தனைக்கு உரியவன் என்ற சிந்தனையே வந்தது. என்னுடைய பதிவுகள் முழுவதுமே தனிமனிதத் தாக்குதல்கள் தான் என்பது அவர் "புரிந்து" கொண்டதாக நினைத்துக் கொண்டு எழுதியிருக்கிறார். வாத்தியார், நீங்க, இன்னும் கொஞ்சம் கவனமாப் படிக்கணும்! இந்த மாதிரியே, முழுசாப் படிக்காமலேயே அப்டேட் செய்துகொண்டு பாடம் நடத்தினா......... உங்க கிட்டப் படிக்க வர்ற புள்ளைங்கபாவம் இல்லீங்களா
 
வாத்தியார்னா எல்லாத்தையும் படிச்சுப் பாத்துட்டு அப்புறம் தான் மார்க் போடணும்னு ஏதாச்சும் சட்டம் இருக்குதா என்ன? கட்டுரை எழுதச் சொன்னாள் விரக்கடையால் அளந்து பாத்து மார்க் போடும் ஒரு வாத்தியாரைப் பத்தி, இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே எழுதின தடம் கூட இன்னமும் மறையலே! படிச்சுப் பாக்காமலேயே, தெரிஞ்சுக்காமலேயே, இவரு நாங்க வாத்தியார் வேலைய சைடாத் தாங்க செய்யறோம்னு சொல்லாமயே சொன்னாரு!

இன்னொருத்தர், சரக்கு என்ற ஒரே வார்த்தைப் பிரயோகத்தில் என்னுடைய தராதரத்தைக் கணித்து விட்டார்! இங்கே வலைப்பக்கங்களில்,சுப்பையா வாத்தியாரெல்லாம் பனிரெண்டு கட்டங்கள், இருபத்தேழு நட்சத்திரங்கள், இன்னும் என்னென்னமோ விஸ்தாரமாக கணக்குப் போட்டு ஒருத்தர் தலையெழுத்து எப்படியிருக்கும் என்று ஜோசியம் பக்கம் பக்கமாகக் கணித்துக் கொண்டிருக்கிறார்கள். இவரென்னவென்றால், ஒரே வார்த்தையில் கண்டுபிடித்து விட்டாராம்! அய்யோ, தமாசுன்னா ஒரே தமாசுதான் போங்க!

அது வரை ஆசிரியர் தினத்திற்காகப் பதிவு எழுதும் உத்தேசமே இருக்கவில்லை. காதலர் தினம், கல்லறைதினம், கத்தரிக்காய் தினம், அம்மாக்கள் தினம், அப்பாக்கள் தினம், இப்படியே ஆசிரியர் தினம் என்றும், மேல்நாட்டுப் பாணியில் அப்படியே காப்பியடித்துக் கொண்டாடும் சடங்குமயமான விஷயங்களில் எனக்கு எப்போதுமே ஈடுபாடு இருந்ததில்லை.

"மேலும் சில பார்வைகள்" என்று இன்றைய கல்வியைக் குறித்து, ஆசிரியர்களைக் குறித்து இந்திரா பார்த்தசாரதி எழுதியதின் ஒரு பகுதி இது:
தொட்டனைத் தூறு மணற்கேணி
மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு' என்பது குறள்.
ஆனால் இன்றைய கல்வித் திட்டத்தில் காலியாக இருக்கும் அறையைப் பொருள்கள் வைத்து நிரப்புவது போல், ஒரு மாணவனின் மூளையைத் தன்னளவில் செயல்பட வைக்காமல், ஏட்டுக் கல்வியை வைத்துத் திணிக்கிறார்கள்.

இன்று நம் பள்ளிக்கூடங்களோ, அல்லது பல்கலைக் கழகங்களோ அப்படி இயங்குகின்றனவா? வகுப்பறைகள் நாடக அரங்குகளாயிருக்கின்றன. ஆசிரியர் நிகழ்த்தும் கலைஞர். மனனம் செய்தவற்றை வசனமாக ஒப்பிக்கின்றார். மாணவர்கள் பார்வையாளர்கள். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே அறிவு பூர்வமான உரையாடல் ஏதுமில்லை. எல்லாம் ஆசிரியரின் தனிமொழிதான். மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டினால்தானே உரையாடல் சாத்தியம்
 
"பதில் சொல்லத் தெரியலைன்னா, தங்களை மாதிரியே கிருஷ்ணா ராமான்னு ஒதுங்கிக் கிடக்க" ஆலோசனை தந்த ஆசிரியருக்கு, நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அது சுயமாகச் சிந்திக்கத் தெரியாதவர்களுக்கு!பதிலைத் தேட முனையாதவர்களுக்கு!

என்னுடைய நல்ல காலம், உண்மையிலேயே நல்ல ஆசிரியர்களிடம் பாடம் கற்றுக் கொள்கிற புண்ணியம் எனக்கு வாய்த்திருக்கிறது

 

புதிரா? புனிதமா? ஆசிரியர் தினச் சிந்தனைகள்

சின்ன வயது. பத்து வயது தான். எல்லாவற்றையும் பார்வையிலேயே ஏன், எதற்கு என்று கேட்கிற பள்ளிச் சிறு வயது. ஒவ்வொரு நாளும், பள்ளிக்குச் செல்வதற்கு, மதுரை சுப்ரமணியபுரம் பாலத்தைக் கடந்து தான் போகவேண்டும், திரும்ப வேண்டும். பாலம் என்றால் இப்போது இருக்கிற மேம்பாலம் இல்லை. ரயில் பாதைக்கு மேல் இருந்த சிறுபாலம். ஒட்டியே கிருதமால் நதி, சாக்கடைத் தண்ணீர் கலந்து ஓடும். மதுரையை அறியாதவர்களுக்காக, கிருதமால் என்ற முனிவர் பெருமாளைக் குறித்துத் தவம் இருந்த போது, கிருதமாலை என்று நதியாக உருவெடுத்து, கூடல் அழகர் கோவிலை ஒட்டி, ஓடியதாகக் கதை சொல்வார்கள். ஆறிரண்டும் காவேரி, அதன் நடுவே ஸ்ரீ ரங்கம் என்று அங்கே பாடுவது போல, இங்கேயும் இரண்டாற்றுக்கு நடுவே இருந்த பெருமாள் என்று கூடல் அழகரைச் சொல்வதுண்டு. வைகைக்கும் கிருதமாலைக்கும் நடுவே இருந்த பெருமாளாம்!

காலப்போக்கில், கிருதமாலை நதியாக ஓடவில்லை. கிருதமால் நதி என்பது சாக்கடை நீர் கலந்து ஓடுகிற சிற்றாறாகவே ஆகிப் போனது. ஒரு மினி கூவம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்!

தெருக்கூட்டி, சுத்தம் செய்யும் தோட்டிகள், தங்களுடைய வேலை முடிந்ததும், கிருதமால் நதியில், கை, கால் கழுவி சுத்தம் செய்து கொள்வதை ஆச்சரியத்தோடு அந்தப்பள்ளிச் சிறுவன் பார்த்துக் கொண்டே வருவான். சமயங்களில், ஓடுகிற சாக்கடை நீரையே இரண்டு கைகளிலும் அள்ளிக் குடிப்பதைப் பார்க்கும் போது மூச்சே நின்று போகும். உவ்வே..எப்படி இந்த சாக்கடைத் தண்ணீரைக் குடிக்கிறார்கள்?

கேள்வி? யாரிடம் போய்க் கேட்பது?யார் பதில் சொல்வார்கள்?

ஒருநாள், இப்படிச் சாக்கடைத் தண்ணீரை அள்ளிக் குடித்துக் கொண்டிருப்பதை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனை, அந்த வயதான தோட்டி, கூப்பிட்டார்.
போகலாமா......வேண்டாமா, கொஞ்சம் தயக்கம். சிறுவன் கொஞ்சம் பக்கத்தில் போனான்.

"என்ன தம்பி பாக்கறே ? எப்படிச் சாக்கடைத் தண்ணியைக் குடிக்கறான்னா? இங்க பாரு, ஓடற தண்ணி, கொஞ்சம் கூட அழுக்கு இல்லாம, வாசம் இல்லாம, சுத்தமா இருக்குன்னு!நீ வேணா ரெண்டு மடக்குக் குடிச்சுப் பாக்கறியா?"

சிறுவன் கொஞ்சம் தயக்கத்தோடு பின்வாங்குவதைப் பார்த்த அந்தத் தோட்டி சொன்னார்.
"ஓடற தண்ணிஎப்பவுமே சுத்தமாத் தான் இருக்கும், அழுக்கு வாடை எல்லாம் ஓடற ஓட்டத்துல காணாமப் போகும்."

நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னாள் நடந்தது இது. அந்தச் சிறுவன் நான் தான் என்று சொல்ல வேண்டியது இல்லை. ஒரு வாழ்க்கை உண்மையைச் சொல்லிக் கொடுத்த அந்தத் தோட்டி யார், எவர் என்பது தெரியாது, அவசியமும் இல்லை. பின்னாட்களில் செயல்பட வேகப் படுத்திய போது, வேகமாகச் செயல்பட்டபோது, இவனுக்கு அனுபவ சத்தியமாகக் கிடைத்த உபதேசம் இது:

"துணிந்து செயல்பட ஆரம்பி, தவறு வரும் என்று பயந்து, தயங்கி, அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று வெட்டியாக யோசனை செய்து கொண்டே இருப்பதை விட, தவறு வந்தாலும் அதைப் போகிற போக்கிலேயே, செயல்படுகிற வேகத்திலேயே சரி செய்துகொள்ளலாம்!"

ஓரஞ்சு அஞ்சு ஈரஞ்சு பத்துன்னு எண்ணவும், எழுதவும் படிக்கக் கற்றுக் கொடுக்கிறவர்களும் ஆசிரியர்கள் தான். வாழ்க்கையின் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறவர்களும் ஆசிரியர்கள் தான். நீங்கள் எந்த ஆசிரியரைக் கொண்டாடுவீர்களோ, அது எனக்குத் தெரியாது, நான் ஆசிரியராகக் கொண்டாடுவது, வாழ்க்கையை நேசிக்கவும், துணிவோடு வாழ்ந்து காட்டவும் சொல்லிக் கொடுப்பவர்களைத் தான்!

குரு என்ற வார்த்தைக்கு, அறியாமையாகிற இருட்டைப் போக்குகிறவன் என்று தான், சாத்திரம் சொல்கிறது. அறியாமையை போக்க வல்லவன் எவனோ அவனே வணங்கத் தக்கவன், அவனே ஆசிரியன்!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று படிப்புச் சொல்லிக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் இல்லையா என்று கேட்டால், ஆசிரியராக வேலை செய்கிற அத்தனை பேருமே ஆசிரியர் என்று வணங்கப் படும் தகுதி உள்ளவர்கள் இல்லை என்று ஆணித்தரமாகவே சொல்லுவேன்.

அந்தநாட்களில் குருகுல வாசம் என்று, மாணவர்கள், குருவுடைய இடத்திலேயே தங்கிக் கற்ற நாட்களில், கற்றதை முறையாகப் பெற்றார்களா என்பதை சோதித்துப் பார்க்கிற முறை ஒன்று இருந்தது. அன்றைய கல்வி என்பது, வெறும் ஏட்டுப்படிப்பு, மனப்பாடம் அல்லது பிட் அடித்து அப்படியே வாந்தி எடுப்பது என்ற பின் நவீனத்துவம் எல்லாம் இல்லாத, குழப்பம் இல்லாத கல்வி முறை. கற்றது, வாழ்க்கைக்குப் பயன்படுகிறதா என்பதை, ஒவ்வொரு கட்டத்திலும் பிரயோகிக்கவும், உன்னதமான ஒழுக்கத்தோடு வாழ்வதே கல்வியின் பயன் என்றும் இருந்த நாட்கள். இதைப்பற்றி இங்கே எழுதியிருப்பதைப் படிக்க
வாழ்க்கைக்கு உதவாத கல்வியை, நோட்ஸ் எழுதிப் போட்டு விட்டு, நீ என்ன ஆனாலும் எனக்கு ஒரு பொறுப்பும் இல்லை என்று போய்க்கொண்டே இருக்கும் ஆசிரியர்கள் மத்தியில், அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில விதி விலக்குகள், வைகை பெருகி வருமோ-குறை தீருமோ என்று ஏங்கிக் கிடப்பவர்கள் சிலரும், இருக்கத் தான் செய்கிறார்கள்.
அறிவுச் சந்தையில் விலை போய்விடும் அக்கிரமங்கள், அன்றாட நிகழ்வுகளாகப் பல பல்கலைக் கழகங்களிலும், தன்னட்சிக் கல்லூரிகளிலும் நடந்தேறி வருவதைக் காணும் நடுநிலையாளர்கள் அறச் சீற்றம் கொண்டு குமுறாமல் இருக்க முடியாது.

"
படிச்சவன் சூதும், வாதும் பண்ணினல் போவான், போவான் ஐயோவென்று போவான்'' என்று தன் புதிய கோணங்கி'யில் அன்றே சுட்டிக் காட்டினன் பாரதி! அவனது வழித் தோன்றலாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் இன்றைய நவீன முனைவர்களின் (Ph.D. பட்டம் பெற்றவர்கள்) சூதுவாதுகள் சொல்லில் அடங்காதவை. “
இப்படி ஆதங்கப் படுபவரும் ஒரு ஆசிரியர் தான், கல்வித் துறையில் பெருகி வரும் சீர்கேட்டைத் தாங்க முடியாமல் மனம் வெதும்பி எழுதிய வார்த்தைகள். ஆசிரியர் என்று பணி செய்த ஒரு காரணத்தாலேயே புனிதராகி விட்டதாகக் கருதிக் கொள்ளாமல், "நான் ஆசிரியன்! மண்டியிடு! இது புனிதப் பணி" என்று தங்களுக்குத் தாங்களே புனிதர் பட்டம் வழங்கிக் கொள்ளாமல், சுயசிந்தனையும் சுய விமரிசனமும் மேற்கொள்ளும் மனவலிமையும் பெற்ற ஆசிரியர் ஒருவரின் அறச் சீற்றம் இது

 
எம்ஜியார் ஆட்சிக் காலத்தில் ஆசிரியர் அரசு அலுவலர்கள் கூட்டுக்  குழு, சில கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களைத் தீவிரப் படுத்திக் கொண்டிருந்த நேரம்.ஒரு பிரசாரக் கூட்டத்தை முடித்த பிறகு,அரசு கல்லூரி ஆசிரியர் சங்க உள்ளூர் கிளைசெயலாளரும் நானும், இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போனோம். திரையரங்கில், இடையே, ஆசிரியர் எழுந்து யாருக்கோ விஷ் பண்ணினார். நான் யார் என்று கேட்பதற்கு முன்னாலேயே, தன்னிடம் படிக்கும் பையன் என்று சொன்னார். எனக்குள் எழுந்த அருவருப்பை ஊகித்தாரோ என்னவோ, 'என்ன பண்ணறது? அவன் தயவுல அவனும் இன்னும் ஐந்தாறுபேர் சேர்ந்து ட்யூஷனுக்கு வருகிறார்கள்.' சற்று ஈனஸ்வரமாகச் சொன்னார். நடந்த சம்பவம் இது.

சம்பளப் பட்டியலைக் கருவூலத்தில் கொடுத்துக் காசைவாங்கி, ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் இடத்திலேயே, ஏலச்சீட்டு, வட்டி வசூல் நடத்திவிட்டு, மப்போடு திரியும் ஆசியர்களையும் பார்த்தாயிற்று. கல்விக்கூடங்கள் தான் வியாபாரமாகிவிட்டது என்று வருத்தப் படுபவரா நீங்கள்? நிறைய ஆசிரியர்கள் ட்யூஷன் வியாபாரம் ஆரம்பித்துக் கல்லாக் கட்டுவது, வாத்தித் தொழிலை ஒரு சைடு பிசினசாகச் செய்கிறவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?
 
மறைந்த திரு. கா.காளிமுத்து, ஒரு அரசியல் வாதியைப் பார்த்துச் சொன்ன இந்த வார்த்தை மிகப் பிரபலம், இந்த நேரம் பார்த்து நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

"சிலரைப் பார்த்தால் கும்பிடத் தோன்றும்! சிலரைப் பார்த்துக் கூப்பிடத் தோன்றும்!"

இதெல்லாம் இப்பொழுது எதற்கு?

நாளை ஆசிரியர் தினம்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை இந்திய அரசு, ஆசிரியர் தினமாக ஒரு அர்த்தமில்லாத சாங்கியமாகக் கொண்டாடி வரும் தினம் செப்டெம்பர் ஐந்தாம் தேதி! தமிழ்நாடு அரசும் தன் பங்கு சாங்கியமாகக் கொஞ்சம் பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்குகிற தினம் அவ்வளவு தானே, இதற்கு ஏன் 'வோல்கா முதல் கங்கை வரை' மாதிரி, கிருதமால் நதியில் ஆரம்பித்து, நல்லாசிரியர் விருது வரை பேச வேண்டும் என்கிறீர்களா?

இந்தப் புதிரா--புனிதமா என்ற கேள்விக்கு நீங்கள் தான் விடை தேடியாக வேண்டும்!

தத்தாத்ரேயனிடம் உன்னுடைய குரு யார்  என்று கேட்ட போது, எனக்கு இருபத்துநான்கு குருமார்கள், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையைப் போதித்தார்கள் எனப் பதில் வந்ததாம். வாழ்க்கையை நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொடுப்பவனே குரு! ஆசிரியன்! வெறுமே நான் வாத்தியார் வேலையில் இருக்கிறேன், சம்பளம் வாங்குகிறேன், எனக்குப் புனிதர் கும்பிடு போடு என்றால் வேலைக்கு ஆகாது! 

கற்றுக்கொள்வதும் கற்பித்தலின் ஒரு பகுதியே!  ஈரல் முதல் எல்லாம் சீரழிந்து கிடக்கும் கல்வித்துறையில் மாற்றங்களைக் குறித்த சிந்தனையும், விவாதங்களும், மாற்றத்திற்கான முயற்சியும் ஆசிரியர்களிடமிருந்து தான் வர வேண்டும்!

சுய சிந்தனையோடு  மாற்றத்திற்கான விதையாகவும் இருக்கும் ஆசிரியர்களை வணங்குகிறேன்! ஆசிரியர் தினமாக, இந்த ஒருநாள் மட்டும் அல்ல, உங்களிடமிருந்து பெற்ற உந்து விசையோடு வாழ்நாள் முழுவதுமே, ஆசிரியரைக் கொண்டாடும் நாளாக மாற வாழ்த்துக்கள்!

அறிவித்த எழுத்து எங்கள் வாழ்க்கைக்கும் உதவுகிறதா எனப்பார்த்து எழுத்தறிவித்தவன் எவனோ, அவனே நல்லாசிரியன்! நாங்கள் வணங்கும் ஆசிரியன்!