ஆசிரியர் தினம் என்ற அர்த்தம் இழந்த சாங்கியம்....!


 ஹேப்பியாகக் கொண்டாடும்படிதான் ஆசிரியர்கள், கல்வித்தந்தைகள் நடந்து கொள்கிறார்களா?

எம்ஜியார் ஆட்சிக் காலத்தில் ஆசிரியர் அரசு அலுவலர்கள் கூட்டுக்  குழு, சில கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களைத் தீவிரப் படுத்திக் கொண்டிருந்த நேரம். ஜேக்டீ கூட்டுக் குழுவில், ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஒரு பிரசாரக் கூட்டத்தை முடித்த பிறகு,அரசு கல்லூரி ஆசிரியர் சங்க உள்ளூர் கிளை செயலாளரும் நானும், இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போனோம்.

திரையரங்கில், இடையே,
ஆசிரியர் எழுந்து யாருக்கோ விஷ் பண்ணினார். நான் யார் என்று கேட்பதற்கு முன்னாலேயே, தன்னிடம் படிக்கும் பையன் என்று சொன்னார். எனக்குள் எழுந்த அருவருப்பை ஊகித்தாரோ என்னவோ, 'என்ன பண்ணறது? அவன் தயவுல அவனும் இன்னும் ஐந்தாறுபேர் சேர்ந்து ட்யூஷனுக்கு வருகிறார்கள்.' சற்று ஈனஸ்வரமாகச் சொன்னார். நடந்த சம்பவம் இது.

சம்பளப் பட்டியலைக் கருவூலத்தில் கொடுத்துக் காசை வாங்கி, ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் இடத்திலேயே, ஏலச்சீட்டு, வட்டி வசூல் நடத்தி விட்டு, மப்போடு திரியும் ஆசியர்களையும் பார்த்தாயிற்று. 


கல்விக்கூடங்கள் தான் வியாபாரமாகிவிட்டது என்று வருத்தப் படுபவரா நீங்கள்? நிறைய ஆசிரியர்கள் ட்யூஷன் வியாபாரம் ஆரம்பித்துக் கல்லாக் கட்டுவது, வாத்தித் தொழிலை ஒரு சைடு பிசினசாக மட்டுமே செய்கிறவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்! எந்தக் காலத்திலோ சொன்னது, இன்றைக்கு, ஆசிரியர்களை ஆண்டவன் இடத்தில் வைத்துப் பார்க்க முடிகிறதா? அதற்குத் தகுதி உள்ளவர்களாகத் தான் ஆசிரியர் தொழிலில் இருக்கிற பெரும்பான்மையினரும் இருக்கிறார்களா?

மறைந்த திரு. கா.காளிமுத்து, ஒரு அரசியல் வாதியைப் பார்த்துச் சொன்ன இந்த வார்த்தை மிகப் பிரபலம், இந்த நேரம் பார்த்து நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

"சிலரைப் பார்த்தால் கும்பிடத் தோன்றும்! சிலரைப் பார்த்துக் கூப்பிடத் தோன்றும்!"


இதெல்லாம் இப்பொழுது எதற்கு?

இன்று  ஆசிரியர் தினம்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை இந்திய அரசு, ஆசிரியர் தினமாக ஒரு அர்த்தமில்லாத சாங்கியமாகக் கொண்டாடி வரும் தினம் செப்டெம்பர் ஐந்தாம் தேதி! தமிழ்நாடு அரசும் தன் பங்கு சாங்கியமாகக் கொஞ்சம் பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்குகிற தினம் அவ்வளவு தானே, இதற்கு ஏன் 'வோல்கா முதல் கங்கை வரை' மாதிரி, கிருதமால் நதியில் ஆரம்பித்து, நல்லாசிரியர் விருது வரை பேச வேண்டும் என்கிறீர்களா? நல்லாசிரியர் விருது,
லைமாமணி விருது, அப்பழுக்கற்ற அரசு ஊழியர் விருது, உத்தமர் காந்தி விருது பெறுகிறவர்கள் யோக்கியதையைப் பார்க்கும் எவராவது "புனிதம்" இருப்பதாகச் சொல்லிக் கொள்ள முடியுமா?

இந்தப் புதிரா--புனிதமா என்ற கேள்விக்கு நீங்கள் தான் விடை தேடியாக வேண்டும்!

தத்தாத்ரேயனிடம் உன்னுடைய குரு யார்  என்று கேட்ட போது, எனக்கு இருபத்துநான்கு குருமார்கள், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையைப் போதித்தார்கள் எனப் பதில் வந்ததாம். வாழ்க்கையை நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொடுப்பவனே குரு! ஆசிரியன்! வெறுமே நான் வாத்தியார் வேலையில் இருக்கிறேன், சம்பளம் வாங்குகிறேன், எனக்குப் புனிதர் கும்பிடு போடு என்றால் வேலைக்கு ஆகாது! 

கற்றுக்கொள்வதும் கற்பித்தலின் ஒரு பகுதியே!  ஈரல் முதல் எல்லாம் சீரழிந்து கிடக்கும் கல்வித்துறையில் மாற்றங்களைக் குறித்த சிந்தனையும், விவாதங்களும், மாற்றத்திற்கான முயற்சியும் ஆசிரியர்களிடமிருந்து தான் வர வேண்டும்! அதற்குத் தயாராக, வெளிப்படையாக விவாதிக்க, ஒரு பொதுக் கருத்தை உருவாக்க எத்தனை ஆசிரியர்கள் தயார்? எத்தனை பேரிடம் அப்படி ஒன்றை எடுத்துச் செய்வதற்கான தகுதி, சிந்தனை, தைரியம், இருக்கிறது?


சுய சிந்தனையோடு  மாற்றத்திற்கான விதையாகவும் இருக்கும் ஆசிரியர்களை வணங்குகிறேன்! ஆசிரியர் தினமாக, இந்த ஒருநாள் மட்டும் அல்ல, உங்களிடமிருந்து பெற்ற உந்து விசையோடு வாழ்நாள் முழுவதுமே, ஆசிரியரைக் கொண்டாடும் நாளாக மாற வாழ்த்துக்கள்!

அறிவித்த எழுத்து எங்கள் வாழ்க்கைக்கும் உதவுகிறதா எனப்பார்த்து எழுத்தறிவித்தவன் எவனோ, அவனே நல்லாசிரியன்! நாங்கள் வணங்கும் ஆசிரியன்!
அப்படியானால், நாட்டில் நல்ல ஆசிரியர்களே இல்லையா? ஒரு கூடைச் செங்கல்லும் பிடாரி என்று பேசுவது சரியாக இருக்குமா? எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது நியாயம் தானா? இப்படியெல்லாம் எதிர்க் கேள்விகள் வரும், வர வேண்டும்!

கல்வித் துறையைப் பற்றி, கல்வித் தரத்தைப் பற்றித் தொடர்ந்து வரும் பதிவுகளில் பேசுவோம்!
 


3 comments:

  1. நல்ல பதிவு
    இப்போதைய நிலையில் மானவர்களை மனப்பாடம் செய்யும் கருவியாக மாற்றுவதே ஆசிரியர் என ஆகி போச்சு

    ReplyDelete
  2. வழக்கமான கிருஷ்ணமூர்த்தி பதிவு. உங்க ஆசிரியர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார், ஏன் என்று எழுதியிருக்கலாம். அதை விட்டு ......

    ReplyDelete
  3. வாருங்கள் கௌதமன் சார்!

    ஆசிரியர் தினம், ஆசிரியரல்லாதவர் தினம்,மாணவர் தினம், கோனார் நோட்ஸ் போட்டு விற்பவர்கள் தினம் என்று ஏதோ ஒரு தினமாக சாங்கியம் கொண்டாடி, நாலு வார்த்தை சம்பிரதாயமாக ........தின வாழ்த்துக்கள் என்று எழுதுவது ஒரு வகை. அந்த சம்பிரதாய பஜனையில் நான் எப்போதுமே கலந்து கொண்டதில்லை. அதைத் தான் வழக்கமான கிருஷ்ணமூர்த்தி ரகப் பதிவு என்று சொல்கிறீர்கள் என்றால் ஒகே.

    என்னுடைய ஆசிரியர்களில் என்னைக் கவர்ந்தவர்கள் என்று எவரையோ, சம்பிரதாயமாகக் கைகாட்டிவிட்டுப் போய்விடுவது மிகவும் எளிது.அதனால் இந்தப் பதிவைப் படிப்பவர்களுக்கு என்ன உபயோகம் இருந்துவிடப்போகிறது என்று நினைக்கிறீர்கள்? ஒரு தொழிற்சங்கவாதியாக, ஆசிரியர்களுடன், ஆசிரியர் இயக்கங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. என்னுடைய ஆசிரியர்களாக என்று இல்லாமல், ஆசிரியர்களாக இவர்கள் மாணவர்களை எப்படி நடத்துகிறார்கள், இவர்களால் கல்வித் தரம் எப்படிப் பட்ட நிலைக்கு வந்திருக்கிறது என்பதை இப்போதுமே கூடக் கூர்ந்து கவனித்தே வருகிறேன்.

    ஒரு மாற்றுச் சிந்தனைக்கான தருணமாக, கல்வித் துறையின் சீரழிவை எடுத்துச் சொல்கிற ஆதங்கத்தின் குரலாக ஏன் இதை உங்களால் பார்க்க முடியவில்லை?

    வாருங்கள் பிரபு!

    இந்த மனப்பாடம் செய்கிற ஜந்துக்களாக மாணவர்களை குறுக்கி வைத்த புண்ணியம், பிரிட்டிஷ்காரர்கள் நம் மீது திணித்து விட்டுப் போன மெக்காலே கல்வித் திட்டத்தால் வந்தது. விடுதலைக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் செய்த குளறுபடிகள் இன்னமும் தொடர்கின்றன என்பதோடு கல்வித் துறையில், இடதுசாரிகள் செய்திருக்கும் சீரழிவும் சேர்த்துப் பேசப் படவேண்டும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!