செய்திகள்....பின்னணி விமரிசனத்துடன்! சில வரிகளில்!

பேசு இந்தியா பேசு! அலுப்புடன் எதிரி அவனாகவே ஓடிப்போகும் வரை ....!


காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க ஒரு எட்டு அம்சத் திட்டம், பாது காப்புக்கான அமைச்சரவைக்  குழுவினால் முன்வைக்கப் பட்டுருக்கிறது. முப்பதே நிமிடங்கள் நடந்த இந்தக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடந்தது.பானா சீனா இதைத் தெரிவித்துப் பேசுகையில், இது விஷயமாக எல்லாத் தரப்புடனும்  அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். கல் எறிந்ததற்காக அல்லது அதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டதற்காகக்  கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்!சால்வை அழகர் பானா சீனா தலைமை ஏற்றுப்போன குழுவால் என்ன செய்ய முடியும் என்று நேற்றைய  பதிவில் வெள்ளிக் கிழமைக் கேள்வியாக இருந்தது அல்லவா! இதற்கு பதிலாக,  பேசத் தான் முடியும், தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்போம் என்று இந்த அமைச்சர் சிகாமணி சொல்வதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

சால்வை அழகர் சொல்ல விட்டுப் போனதும் ஒன்று இருக்கிறது! தடையை மீறி, ராணுவத்தின் மீது கல் எறிந்தது, வன்முறையில் ஈடு பட்டவர்களை விடுவித்ததோடு, அடுத்த முறை அவர்கள் இதே மாதிரி செயல்களில் ஈடுபடும்போது அரசு செலவிலேயே கல் முதலானவைகள்  வழங்கப்படுமா இல்லையா என்பது தான் அது!

**********

ராணி மகா ராணி! ஊதாரி ராஜ்ஜியத்தின் ராணி!


பிரிட்டிஷ் ராணி எலிசபெத், அரச குடும்பத்தினர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது வாடிக்கையாகி விட்டது. இங்கே திராவிட முன்னேற்றக் கழகம் மாநில ஆளுநர் பதவி எதற்கு என்பதை ஆட்டுக்குத் தாடி தேவையா என்று அந்த நாட்களில் கேட்டதைப் போல அல்லாமல் (இப்போது கேட்பார்களா என்ன ?!), பிரிட்டிஷ் மக்களில் பெரும்பாலானோர், பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு வழங்கப்படும் சலுகைகள்,  பெயரளவிற்கே என்றாலும் கூட அரசின் தலைமைப் பொறுப்பு  எல்லாவற்றையும் ஒழித்து விட வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால், பழம்பெருமை பேசுவதிலேயே ஊறித் திளைத்த  பிரிட்டிஷ் மட்டைகள்  மாற்றத்திற்குத் தயாரா இல்லையா என்ற கட்டத்திற்கு இன்னமும் வரவில்லை.

பத்து லட்சம் பிரிட்டிஷ் பவுன்டுகளுக்கு மேல் மின்சாரக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில், அரசி தரப்பில் இருந்து , ஏழைகளுக்கு உதவுவதற்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து கொஞ்சம் "நிதி ஒதுக்கீடு"  செய்ய முடியுமா ன்று கேட்கப்பட்ட செய்தி வெளியாகி இருக்கிறது. பிரிட்டிஷ் ராணி அவ்வளவு ஏழையாம்!

அதுபோக பிரிட்டிஷ் ராணிக்கு அரசு அளிக்கும் மானியமான மூன்று கோடியே எண்பத்திரண்டு லட்சம் பவுண்டுகளை எப்படி நிர்வகிப்பது என்பதைக் கிட்டத்தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட ஷரத்துக்களைக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தில் ராணி எலிசபெத் கைச்சாத்திட்டு ஒப்புக்கொள்ள  வேண்டி வந்து விட்டதாம்! அரசியும் அரண்மனையும் எந்த அளவுக்கு வரிப்பணத்தை அனுபவிக்கின்றனர் என்பதைக் கூடப்  பொது ஜனங்கள் எவரும் தெரிந்து கொண்டுவிடக் கூடாது என்று எவரோ மிகக் கவனமாக இந்த விஷயத்தை மூடி மறைக்க முயன்றிருக்கிறார்கள். நம்மூர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மாதிரி ஒன்றினால் விவகாரம் இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது!நம்மூர் என்றால், தகவல்தேர்தல் கமிஷன் மாதிரி  அறியும் சட்டத்தையே மூன்று கமிஷனர்கள் போட்டு ஒன்றுமில்லாததாக ஆக்கி வைத்திருப்பார்கள்(இப்போது மூன்று கமிஷனர்கள் என்று இல்லாமலேயே அப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது)

இங்கே அதைப் பார்க்க:  Page 1


| Page 2
| Page 3

முதலாம் சார்லஸ் என்ற பிரிட்டிஷ் அரசன் சொன்னானாம்! "அரசர்கள் கடவுளைத் தவிர எவருக்கும்  பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல!"

ஜனங்களுடைய குரலுக்கு செவி சாய்க்காமல் பொறுப்பில்லாமல் இப்படிப் பதில் சொன்னதும் ஜனங்களுடைய கோபம் பொங்கி எழுந்ததில் அவனுடைய தலையே போய் விட்டது என்பதை பிரிட்டிஷ் சரித்திரம் சொல்கிறது.

இந்த செய்திக்குப் பின்னூட்டமாக போனி ப்ளைர் என்ற பெயரில் வந்திருப்பது இப்படிச் சொல்கிறது!

"Conduct a referendum on the monarchy. Those that want the monarchy pay for them.

Other options are:

 
Romanov them i.e. dispose of them as the Russians did.
 

Sell them on e-bay, then they will probably be bought back by their cousins in Germany or some rich American.

Whatever happens we need to reclaim our money from these thieves. "


அங்கே பிரிட்டிஷ் ராணி! இங்கே இந்தியாவிலும் அதே மாதிரி ஊதாரித் தனமாக செலவு செய்யும் அமைப்பும் ஒன்று இருக்கிறது!
************

வெள்ளை யானைக்கும், ராணுவ ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்?


மியான்மரில் இரண்டு நாட்களுக்கு முன்னால் வெள்ளை யானை ஒன்று பிடிபட்டிருக்கிறது! இது இந்தப் பத்தாண்டுகளில்  இப்படி பிடிபட்ட வெள்ளை யானைகளில் ஐந்தாவது ! வடக்கு மூங்டா பிரதேசத்தில் பிடிபட்ட இந்தப் பெண்யானை, தற்போது யாங்கோனில் (ரங்கூன்) உள்ள  விசேஷமான பூங்காவில் வைக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் பத்தாண்டுகளில் தொடர்ந்து ஐந்து வெள்ளை யானைகள் பிடிபட்டிருப்பது நாட்டில் நிலையான அரசு, அமைதி, வளம் நிலவும் என்ற தொண்டு தொட்டு இருந்து வரும் நம்பிக்கையை, மியான்மரில் காட்டாட்சி நடத்தி வரும் ராணுவக் குழு பரப்பி வருகிறது. ஆயிரம் யானைகளில் அதிசயமாக ஒரு யானை முழுக்க முழுக்க வெள்ளையாக இருக்கும். இப்படி வெள்ளையானை இருப்பது நாட்டில் அமைதி, ஸ்திரத் தன்மை, செல்வம் கொழிப்பதற்கு காரணமாக இருக்கும் என்ற நம்பிக்கை, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் முதலான ஆசிய நாடுகளில் பரவலாக இருக்கிறது. இந்த மாதிரி அபூர்வ ரக வெள்ளையானைகளை அரச குடும்பமே பராமரித்து வளர்ப்பதும் உண்டு.

மியான்மர் ராணுவ ஜண்டா கூட இந்த பழைய நம்பிக்கையில் இருந்து விடுபடவில்லை! வருகிற நவம்பரில், தேர்தல் நடத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும், வெற்றி பெறக் கூடிய ஆங் சுயி கட்சியை தடை செய்து விட்டு, தாங்கள் நிறுத்துகிற டம்மிகளைத் தேர்தலில் ஜெயிக்க வைக்கிற வித்தையை ஒத்தி பார்த்த பிறகும் கூட,மியன்மார்  ராணுவ ஜண்டாவுக்கு இந்த வெள்ளையானை ஒரு புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது என்று  வேண்டுமானால் சொல்லலாமா!


**********
அப்புறம், காமன் வெல்த் கேம்ஸ் பற்றி மணிசங்கர ஐயர் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்!
மணிசங்கர் ஐயர் வெளிப்படையாகவே ஒரு கேள்வியை கேட்கிறார். இந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றியடையுமா என்பது பிரச்சினையே அல்ல! என்ன செலவு இதற்காக செய்திருக்கிறோம், என்ன முக்கியமான விஷயங்களை அப்படியே விட்டு விட்டு, இந்த "வெற்றியை" சம்பாதித்து எதை வைத்து அளக்கப் போகிறோம்? எழுபதாயிரம் கோடி ரூபாய்களை அள்ளி இறைத்து  என்ன பெறப் போகிறோம்?

கல்மாடி பதில் சொல்ல மாட்டார்! கம்முனு இருக்கும் மன்மோகன் சிங்கும் சொல்ல மாட்டார்!

நீங்கள் தான் சொல்லவேண்டும்! காங்கிரஸைத் தூக்கி எறிந்து, சரியான பதிலைச் சொல்ல வேண்டும்!

ஸ்ரீராம் இது உங்களுக்கும் தான்! கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!
7 comments:

 1. இந்த இங்கிலாந்து ராஜா வம்சிகள் அதுவும் இந்த அரசிகள் மகா முட்டாள்கள் என்று ஜியார்ஜி பெர்ந்டாட்ஷா காலத்திலிருந்தே கூவிக்கொண்டிருகிரார்கள். கேட்பவர்கள் அங்கு யாரும் இல்லை. அங்கும் நம்ம ஊர் போலா கூஜா தூக்கில் அதிகம் போலும்.

  ReplyDelete
 2. ராணிகள் முட்டாள்களா!

  இல்லவே இல்லை மாணிக்கம்! இவர்களைக் கும்பிட்டுக் கொண்டிருக்கிற, துதி பாடுகிற கூட்டம் ஒன்று இருக்கிறதே அவர்களை விடவா முட்டாள்கள் இருக்க முடியும்?

  இங்கேயே இதை விட மோசமான ராணி, மகாராணிகள் இருக்கும்போது இந்த பிரிட்டிஷ் ராணியைப் பற்றிய கவலை நமக்கெதற்கு?

  ReplyDelete
 3. //"ஸ்ரீராம் இது உங்களுக்கும் தான்! கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!"//

  என்ன சொல்ல... காங்கிரஸைத் தூக்கி எறிந்து விடலாம்தான்.. மாற்று என்ன என்று யாருக்கும் தெரியவில்லையே... எல்லாம் ஒரே குட்டை ஒரே மட்டை... கல்மாடியை ஒதுக்கி விட்டு இப்போது அவசரக் கூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்... என்ன செய்வார்களோ... சேனல்களுக்கு CWG ஒன்று போதும் இப்போதைக்குப் பொழுது போக...

  ReplyDelete
 4. வாருங்கள் ஸ்ரீராம்!

  மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்!மாற்றங்கள் தானே வந்து சேரும்!

  ReplyDelete
 5. மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்!மாற்றங்கள் தானே வந்து சேரும்!"//

  சென்ற முறையே அப்படிதான் இருந்தேன்...!!

  ReplyDelete
 6. ஸ்ரீராம்!

  மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள் என்று சொன்னது முதற்படி. அதற்கடுத்து ஒவ்வொன்றாகச் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. மாற்றம் வேண்டும் என்பது, ஒரு கழுதைக்குப் பதிலாக இன்னொரு பன்றிக்கு ஓட்டுப் போட்டு விட்டு, சும்மா இருந்து விடுவது அல்ல!

  ReplyDelete
 7. ஆணிய புடுங்க வேணாமுன்னு இருக்கிற நம்ம ஜனங்களுக்கு இது எல்லாம் எங்க புரிய போகுது? ஏந்திரன் பட டிக்கெட் வாங்க queue வுள்ள நிக்க வே நேரம் பத்த மாட்டேன்குது. நீங்க வேற.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!