வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! ஒரு இந்தியக் கனவு....!

தேசத் துரோகிகள்! சீறும் தினமணி  தலையங்கம்!

"இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக  புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ  70,000 கோடி விரயமாக்கப் பட்டிருக்கிறது.

இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப் போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா?

தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.

முதலில்  655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள்  11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார்  17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும் பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ  70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம்  961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம்  669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம்  262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம்  149 கோடி என்று ஏறத்தாழ  44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு  85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு  80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.

961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.

விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை. அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்?

விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கின்றன.

இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக் குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.

வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே   வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.  70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று?

இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.


எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப் படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின் கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்?    இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலை
ழுத்தாகி விட்டது!"


தினமணி தலையங்கத்தில் சீறியிருப்பதில் தவறேதும் இல்லை!

நெஞ்சு பொறுக்குதிலையே-நெஞ்சு
பொறுக்குதிலையே-இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்

என்று பாரதி குமுறியதைப் போல நாமும் ஏன் குமுறவில்லை என்பது தான் இன்றைக்கு  வெள்ளிக் கிழமைக் கேள்விகளில், முதலாவது! முக்கியமானது!

ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின், இந்த இரண்டாவது இன்னிங்ஸில், இரண்டாவது வருடத்தில் நாட்டை எந்த நிலைமைக்குக்  கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!


ஜம்மு காஷ்மீரில் நூறு நாட்களையும் தாண்டி சட்டத்தை மதிக்காமல் கல்லெறிவது, வன்முறையைத் தூண்டுவது, ராணுவத்தை வம்புக்கு இழுப்பது, பிரச்சினையைப் பெரிதாக்கிக் கொண்டே போவது என்று போய்க் கொண்டே இருக்கிறது. அறுபத்து இரண்டு ஆண்டுகளாக  அணைக்கப் படாமல் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினையை, சர்வ கட்சிக் குழுவைக் கொண்டு, அதுவும் யார் தலைமையில் என்று நினைக்கிறீர்கள், சால்வை அழகர் பானா சீனா தலைமையிலாம்! 

என்ன முடிவு, என்ன தீர்வு கிடைத்து விடும் என்று நினைக்கிறீர்கள்?

ராஜசேகர ரெட்டி விபத்தில் போய் விட்டார்! மிகவும் தாமதமாக, இந்திரா காண்டி ஃ பார்முலாவைக் கையாள ஆரம்பித்த நேரமும் சரியில்லை! உள்ளூர்த் தலைவர்கள் எவரும் வேர் கொண்டுவிடாமல், மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, செல்வாக்கைக் கரைப்பது, தன்னைக் காப்பற்றிக் கொள்ள
இந்திரா காண்டி கையாண்ட அந்த நாளைய தந்திரம்! சென்னா ரெட்டி முதல் எஸ் எம் கிருஷ்ணா என்று இந்தப் பட்டியலில் கரைந்து போனவர்கள் எண்ணிக்கை ஏராளம்! ரோசையாவை கொண்டு வந்து ஆந்திர முதல் அமைச்சர் க்கினார்கள்! ராசையா நல்லவர், வல்லவர் என்பதற்காக இல்லை! ராஜ சேகர ரெட்டியின் வாரிசுகள், அசைக்க முடியாத சக்தியாக ஆந்திரத்தில் வளர்ந்து விடக் கூடாது என்ற பயத்தில் மட்டுமே என்பது வெளிப்படை.

தெலங்கானா பிரச்சினையில் பானா சீனா தனி மாநில அறிவிப்பை முதலில் செய்து விட்டு, கலாட்டா வந்ததும் ஓடி ஒளிந்து கொண்ட  விளையாட்டில் அது வரை ஆஸ்தானத்தின் அசைக்க முடியாத ஆலோசகராக இருந்த எம் கே நாராயணன்  மேற்கு வங்க கவர்னராகத் தூக்கியடிக்கப் பட்டார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்தத் தலைமைக்கு யார், தெலங்கானா உண்டா இல்லையா என்ற பிரச்சினையில் காங்கிரஸ் செய்த குழப்பத்தில் வீணானது.எம் கே நாராயணன் என்ற பெயராவது எவருக்காவது இப்போது நினைவிருக்கிறதா?


பெயருக்குத் தான் மன்மோகன் சிங் பிரதமர்! பிரதமர் பதவி
வலிய வந்தும் அதை மறுத்த நேரு குடும்பத்துத் தியாக சிகரமான, மேல் நாட்டு மருமகளின் கண்ணசைவுக்கு  ஆடும் வெறும் டம்மிப் பீஸ் தான் என்பது எல்லோருக்குமே தெரியும். அந்த சிதம்பர ரகசியமாவது இந்த நாட்டின் பிரதமருக்குத் தெரிந்திருக்கிறதா?

காங்கிரஸ் தொட்ட ஏதாவது ஒரு விஷயமாவது உருப்பட்டிருக்கிறதா? தேர்தல் கமிஷனில் இருந்து, எந்த ஒரு அமைப்பையும் உருப்படியாகச் செயல்
பட விடாத ஒரு கட்சி, தனக்காகவும் புரிந்து கொண்டு பொறுப்பாகச் செயல்படத் தெரியாத ஒரு கட்சி, அதற்கு ஒரு ஆட்சி, இன்னும் எத்தனை நாட்கள் தான் இந்த தேசத்தின் ஜனங்கள், கைப்புள்ள வடிவேலு மாதிரியே அடிமேல் அடி விழுந்து கொண்டே இருந்தும் வலிக்காத மாதிரி இருக்கப் போகிறார்கள்?

ஊழல் மட்டுமே இங்கே பேசப்பட வேண்டிய விஷயமில்லை! செயல் திறனற்ற, செயல்படாத ஒரு டம்மி ஆட்சி தேவைதானா என்பது தான் இப்போது முக்கியமான கேள்வி!







தொடர்புடைய இன்னொரு பதிவாக ........

கக்கு மாணிக்கம் நேற்றைக்கு இது தொடர்பாக ஒரு பதிவை இங்கே எழுதியிருக்கிறார்!


உங்கள் கருத்தைத் தான் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!



 

6 comments:

  1. உங்கள் கருத்தைத் தான் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!//

    இந்த லிங்க் சென்று வாசித்துப்பாருங்கள்.
    http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/09/blog-post_23.html

    இதற்கே தேச துரோகி பட்டம் தான் கிடைக்கிறது!

    ReplyDelete
  2. உங்கள் பதிவைப்பார்த்தேன் மாணிக்கம்! இங்கே லிங்க் கொடுத்து விட்டேன்!

    ReplyDelete
  3. // proudindian (dallas)
    24/09/2010 at 10:43 pm
    kalamdi, sheela dixit, all the stake holders in CWG suck. These shameless people should be terminated from their positions and never be allowed to hold them again. Heights of corruption, mismanagement, failure, disgust and shame. They have brought such disgrace to the country. I feel sorry for Indian people. These greedy people have blown up the taxpayer's money. I think the bank accounts and assets of these people and their associates should be checked. They have looted the country. God I wish I had the power, i would have taught them a lesson of their lives. i really want to slap these idiots and give them extreme punishment.//

    TIMES OF INDIA வில் இன்று மாலை ஒரு அன்பர் இட்ட கருத்து இது. எப்படி 'போட்டு வாங்கி' இருக்கிறார் பாருங்கள்.
    இப்படி எழுதினால் அது தேச விரோதமாம். கண்றாவி.

    ReplyDelete
  4. http://blogs.timesofindia.indiatimes.com/Main-Street/entry/we-are-a-banana-republic-and-it-s-going-to-the-dogs

    ReplyDelete
  5. கேள்விகள் கேட்க எல்லோரும் ரெடி....பதில் சொல்ல வேண்டியவர்கள் பதில் சொல்கிறார்களா? கல்மாடி இவ்வளவு நாளும் என்ன சொல்லிக் கொண்டிருந்தார்? மக்களும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.

    ReplyDelete
  6. இந்தியன் பிணமாகி பல வருடங்கலாகிவிட்டது. அரசியல்வாதி பிணந்தின்னி கழுகாகவே இருக்கான்.
    இந்த மண்ணுக்கு (சிங்குக்கு கூட தான்) பாகிஸ்தானையும், அமெரிக்காவையும் கையால தெரியல. அது போல சுரேஷ் களவு மாடியையும் கையால தெரியல.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!