Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! கொஞ்சம் கவிதை நிறைய யோசனை!

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை 
எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை 


கண்ணதாசன் மாதிரி ஊக்கமாய்ச்சொல்ல வார்த்தைகள் இல்லைதான்! ஆனாலும் உணர்வுகள் பீறிட்டெழும்போது அழுகையும் வரும், கொஞ்சம்  கவிதையும் வரும். அப்படி வந்த ஒரு தருணத்தையும் இங்கே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்.

வலிகளை மறக்கக் கவிதையில் வடித்து எழுதிப்பார்த்ததும் ஒரு காலம்
வலிகளைக் கூட்டின கவிதை வரிகளை மறந்துமிருந்தது ஒரு காலம்!
எனக்கு மட்டுமே இப்படி ஏன் என ஏங்கித் தவித்ததும் ஒரு காலம்
தனக்கு மட்டுமே தாயின் பரிவு முழுதாய் வேண்டின சவலைப் பிள்ளையாய்
அழுதால் உன்னைப்பெறலாமே என யாரோ சொன்னதை நம்பினபோதில்
அழுதுபுரண்டு கதறின நேரம் அவள் வரவில்லைஒரு பதில் தரவில்லை!


சவலையழுததுதிவலையளவும் வினையணுகாமல் காத்திடவேண்டும்!
கேட்டது எல்லாம் தந்திட வேண்டும்என்னைத் தனியன் ஆக்கிவிடாமல்
கூடவே இருந்தென்னைப் பார்த்திட வேண்டும்கேட்டதனைத்தும் அதிகம் தான்!
விடையாய்க் கிடைத்ததோ பொருள் பொதிந்தவோர் மௌனம்தான்!
பாராமுகமாய் இருந்தாள் எனப்பெரும் கோபமும் வந்தது வீம்பு வளர்ந்தது.
தாயேநீ இல்லைநீ வெறும் பொய் தான்அழுகை வெடித்தது ஆத்திரம் வந்தது!


இப்படியெல்லாம் வார்த்தைகளில் ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்ததனால் மட்டுமே விடை கிடைத்து விடுமா? பதில் கிடைத்துக் கொண்டே தான் இருந்தது.ஆனால், அதைப் புரிந்துகொள்கிற பக்குவமும் நேரமும் தான் வாய்க்கவில்லை. 

ராஜாங்கம் தான் அப்படிக் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுக்  கேட்டது என்று நினைக்கிறேன்!

"நீங்க ரெண்டு பெரும் உண்மையிலேயே பகையாளிங்களா, இல்லே பங்காளிங்களா? இப்படி அடிச்சுக்கறீங்க, ஆனா உங்களைப் பத்தி யாராவது தப்பாப் பேசினா அவரு அவங்களோட மல்லுக் கட்ட ஆரம்பிச்சிடறாரு!"

எனக்கே அந்த சந்தேகம் அவ்வப்போது வரும்! நாங்கள் இருவரும் நண்பர்களா? அல்லது சண்டைக்காரர்களா? அவனிடமே ஒருதரம் கேட்டபோது சிலிர்த்துக் கொண்டே சொன்னான், "நாயே! இன்னும் இது கூடத் தெரியலை! நீ சண்டைக்கரானாக இருக்கவும் லாயக்கில்லை! சிநேகிதக்காரனாகவும் இருக்க லாயக்கில்லை!" 

உடனே அங்கே வார்த்தைகளில் அக்கப்போர் ஆரம்பித்து விடும்! 

இன்றைக்கு அவன் பிறந்தநாள். ஆனால் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல முடியாது பதிமூன்று வருடங்களுக்கு முன்னமே அவன் இறந்துவிட்டான். சாகிற வயது இல்லைதான்! ஆனால் தானே தேடிக்கொள்ளும் ஆசைகள், கோபதாபங்கள், ஏமாற்றங்கள் அதிலெழும் குரோதங்கள் என்று ஏதோ ஒரு வடிவத்தில் நாமே இடம் கொடுத்துவிடும் மரணத்தை யார்தான் தடுத்துவிட முடியும்?    


நான் யார்? இந்தக் கேள்விக்கு ஷ்ரத்தாலு ரானடே  மிக அழகாக பதில் சொல்கிறார். ரமண மகரிஷியின் நான் யார் விசாரம் மிகக் கடினமானது. ஆனால் அந்தக் கேள்விக்கு விடைதேடுவதில் தான் வாழ்க்கையின் சாரமே .அடங்கியிருக்கிறது.

 

ராபர்ட்  ஃப்ராஸ்ட்  ஒரு அமெரிக்கக் கவிஞன்! அவர் எழுதிய  Mending Wall  என்றொரு கவிதை!   ஃப்ராஸ்ட் இங்கிலாந்துக்குப் போயிருந்தபோது, க்ரஹாம் கிரீன் என்ற எழுத்தாளர் அவரிடம் கேட்டாராம்!

"மீபகாலத்திய இலக்கியங்களில், நீங்கள் எழுதிய இந்தக் கவிதையில் " நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்குகின்றன"  என்று சொல்லியிருப்பதை மாதிரிப் புரிந்து கொள்ளக் கடினமான வேறு ஒன்று இல்லையே!"

ஃப்ராஸ்ட் சொன்ன பதில், " என்னுடைய உதவி இல்லாமலேயே அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்  என்று தான் விரும்புகிறேன்."

விஞரும், எழுத்தாளரும் சிரித்தபடியே அந்த விவாதத்தை அப்படியே விட்டு விடுகிறார்கள். அமெரிக்க இலக்கியத்தில்  ஃப்ராஸ்டின் இந்தக் கவிதை மாதிரி அக்குவேறு ஆணிவேராக அலசப்பட்ட கவிதை எதுவும் கிடையாது என்று விமரிசகர்கள் சொல்கிறார்கள். நிறையவே தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதையும் இதுவாகத் தான் இருக்கும்! 



ப்பாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையிலும் கூட, ஒரு அழகான கேள்வியை, இந்தக் கவிதைஇன்னமும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டு தான்  இருக்கிறது!

 
Something there is that doesn't love a wall, 
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

ன்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்கும்!  


Before I built a wall I'd ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offense.
Something there is that doesn't love a wall,
That wants it down.'

விஞருடைய  வாதம் எல்லாம் இது தான்! 
 
தோ ஒன்று, குறுக்குச் சுவர் ஒன்று இருப்பதை விரும்புவதில்லை. வேலியைக் கீழே தள்ளவே அது விரும்புகிறது! கவிஞருடைய வாதங்களை எல்லாம் அண்டைவீட்டுக்காரன் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், கடைசியாக மறுபடியும்,'Good fences make good neighbors' என்று சொல்வதோடு கவிதை முடிகிறது.
ற்கெனெவே இந்தக் கவிதையை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!இரண்டு எதிரெதிரான  மன நிலைகள் இங்கே உருவகிக்கப் படுவதைப் பேசியிருக்கிறோம்!

அதைக் குறித்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி இந்த உருவகத்தில் தொக்கி நிற்கிறது.
 அதுதான் முக்கியம்!

   

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்....!

கண்ணன் பிறந்தான்! எங்கள் கண்ணன் பிறந்தான்!!

புதுக் கவிதைகள் பிறந்ததம்மா!

மன்னன் பிறந்தான்! எங்கள் மன்னன் பிறந்தான்!!

மனக் கவலைகள் மறந்ததம்மா!

கவியரசர் கண்ணதாசனுடைய பாடல் வரிகளில்,இப்படி கண்ணன் பிறந்ததைக்கொண்டாடும் திருநாள் இன்று!


குழந்தைக் கண்ணனாக அவன் செய்த விஷமங்களைக் கேட்கையிலே, உள்ளம் மலரும்! கண்ணன் கதை கேட்பதென்றால் அதைவிட சந்தோஷமான அனுபவம் வேறென்ன இருக்க முடியும்!

ஆயர்பாடியில்,மாடு மேய்க்கப் போகிறேன் என்று கிளம்புகிறானாம் கண்ணன்! செல்லக் குழந்தை கஷ்டப் படுவானே என்று யசோதையின் தாயுள்ளம் கலங்குகிறது. மாடு மேய்க்கப் போக வேண்டாம் என்று குழந்தையைக் கெஞ்சுகிறாள்.

இந்த அதிசயக் குழந்தை, தாய்க்குத் தைரியம் சொல்கிறது! மா ஸுச: கவலைப்படாதே! உனக்குத் தெரிந்த எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு, என்னையே பற்றிக்கொள், உன்னை எல்லாத் தளைகளில் இருந்தும் விடுவிக்கிறேன் என்று அர்ஜுனனுக்கு உபதேசம் செய்கிற சாக்கில், கீதையைச் சொல்லப் போகிற குழந்தை, இங்கே அம்மாவுக்குச் சமாதானம் சொல்கிற அழகே அழகு. 'போக வேண்டும் தாயே ..தடை சொல்லாதே நீயே" என்கிறது.

தாயுள்ளம், எப்படியெல்லாம் குழந்தையிடம் கெஞ்சுகிறது என்பதைப் பாருங்கள்!குழந்தை எவ்வளவு பக்குவமாகத் தாய்க்குப் பதில் சொல்கிறது என்பதையும் பாருங்கள்!

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

யசோதை:
காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)
கண்ணன்:
காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

யசோதை:
யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கண்ணன்:
கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

யசோதை:
கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)
கண்ணன்:
காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

யசோதை:
பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கண்ணன்:
பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)


படிக்கும் போதே என்ன சுகமாக இருக்கிறது! அருணா சாயிராம் போன்ற திறமையான இசைக் கலைஞர் அனுபவித்துப் பாடும்போது, பரமசுகம்!!

பார்க்கலாம்! கேட்டு ரசிக்கலாம்! கண்ணனை நினைக்கலாம்!

'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே'
நாரணன் எம்மான் பாரணங்காளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே.

சென்ற வருடம் கிருஷ்ணா ஜெயந்தியன்று எழுதிய பதிவின் மீள் பிரசுரம் தான் இது! கண்ணன் கழலிணை  நினைந்து அவனிடம் அவனையே வேண்டிப் பெறுவோமாக!


நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால்....!

போராட வேண்டிய விஷயங்களுக்கு நிச்சயமாகப் போராடத் தான் வேண்டும்! தவறு இல்லை!

 சுதந்திரமான அடிமைகள் என்று ஜெயகாந்தன் பேசியதைத் தொட்டு, சில பெண்கள் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதாக சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் 11 இழையில் படித்தேன் என்று சொல்லியிருந்தேன்  இல்லையா?

போர்க்கோடி  தூக்குகிற அளவுக்குத் தவறாக என்ன சொல்லி விட்டார் என்பது எனக்கு இன்னமும் தெரியவில்லை. திருமதி சீதாலட்சுமியின் இழையில் முதல் நான்கு வரிகளும், கடைசியாக ஜேகே சொன்னதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு, சொல்கிறேன் என்றும் முடித்திருந்ததையும் சொல்லி இருந்தேன். சீதம்மா எழுதிய நான்கு வரிகளுக்கு  அதிகமாக இன்னும் ஒரு பத்துப் பன்னிரண்டு வரிகள், இணையத்தில் தேட இன்று தான் தெனாலிடாட்காம் என்ற தளத்தில், இது பற்றி வெளியாகியிருந்த செய்தி,
கிடைத்தது. நன்றியுடன் மீள் பதிவு செய்யப் படுகிறது


பொருள், போகம்,புகழுக்கு அடிமையாகும் பெண்கள்: எழுத்தாளர் ஜெயகாந்தன்

செவ்வாய்க்கிழமை, 29, டிசம்பர் 2009 (11:29 IST)


சென்னை:

''முன்பு பெண்கள் கணவனுக்கு அடிமையாக இருந்தார்கள்  ஆனால் தற்போது சுதந்திரம்பெற்று பொருள், போகம், புகழ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டார்கள். சுத்திரமான அடிமையாக ஆகிவிட்ட பெண்களுக்கு விடுதலையே கிடையாது"என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சென்னையில் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இலக்கிய- ஆன்மிக சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்றது. இதில் பேசிய எழுந்தாளர் ஜெயகாந்தன் மேலும் கூறியது...'' பாரதியார்  கடவுளிடம் வேண்டும்போது சுதந்திரம் வேண்டும் என்றார் அவருக்காக அல்ல இந்த தேசத்துக்காக சுதந்திரம் வேண்டும் என்றார். 

கடவுள் உண்டா இல்லையா என்பது பிரசனையில்லை. கடவுள் வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் முக்கியம்.  ஆத்மா மனிதநாக பிறந்த அனைவருக்கும் உண்டு நாத்திகனுக்கும் உண்டு, நானும் நாத்திகனே.

நான் கோவிலுக்கு செல்வதில்லை, சடங்குகள் எல்லாம் எனக்கு பிடிக்காது. ஆனால் எதைச்செய்தாலும் விநாயகரை நினைக்காமல் தொடங்குவதில்லை.  அந்தக்காலத்தில் படித்தவர்கள்தான் அடிமைகளாக இருந்தனர்.  பெண்கள் தங்களின் கணவருக்கு அடிமைகளாக இருந்தார்கள்.

ஆனால் கணவர்களோ வேறு பல விஷயங்களுக்கு அடிமைகளாக இருந்தனர்.   இப்போது பெண்கள் சுதந்திரம் பெற்று கணவர்களைபோன்றே அதற்கெல்லாம் அடிமைகளாக மாறிவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையாக இல்லை. 

பெண்கள் பொருள், போகம், புகழ் என பல்வேறு விஷயங்களுக்கு அடிமைகளாகிவிட்டனர்.  அதுவும் சுதந்திரமான அடிமைகளாக மாறுவதுதான கொடுமை, அவர்களுக்கு அதிலிருந்து விடுதலையே கிடையாது"என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன். 


இதைப் படித்த பிறகும் கூட அப்படி என்ன தவறாகச் சொல்லிவிட்டார், என்ன புள்ளி விவரத்துடன் நிரூபிக்கவேண்டும் என்று கேட்கிறார்கள் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை. புள்ளிவிவரத்தோடு பேச முனைந்தாலே முதலில் வருவது குழப்பமும், அடிதடியும் தான்!

மின்தமிழில் திருமதி சீதாலட்சுமி  எழுதிய முந்தைய பகுதிகளைப் படிக்க, தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விக்கி பக்கங்களில் பார்க்கலாம்!

தமிழ் எழுத்துலகம் சாரு-- ஜெமோ மாதிரியானவர்களிடம் சிக்கிக் கொண்டு ஒரு புறம், திறனாய்வு செய்கிறேன், விமரிசனம் செய்கிறேன் என்று கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிற இடிமன்னர்கள்
ஒரு புறமுமாக, இப்படி தமிழ் எழுத்துலகமும் வாசகர்களும் பிரிந்து கிடக்கிறார்கள். நல்ல வாசகனை உருவாக்கத் தெரியாதவர்கள் எல்லாம்  தங்கள் காலரை உயர்த்தி விட்டுக் கொண்டு,  எழுத்தாளுமை நிறைந்த படைப்பாளியை குறை கூறுவதிலேயே, தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் கேவலமான காலம்  இது என்று தான் சொல்ல வேண்டும்!

இவர்கள் வழியாக நல்ல எழுத்தை, அடையாளம் கண்டு கொள்ள முடியாது! வாசகன் தானே, தனது வாசிக்கும் தளத்தை விரிவுபடுத்திக் கொண்டு தானே தான் எது நல்ல எழுத்து என்பதைத் தீர்மானித்தாக வேண்டும்! தன சுயபுராணத்தை பொடியே சொரிந்து கொண்டிருப்பபவர்களிடமிருந்து அல்ல!

கனிமொழியோடு, ஜெயகாந்தனின் எழுத்தாளுமை என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டதற்காக ஒரு விமரிசனம்!
கனிமொழியின் அரசியல் சார்பு வேண்டுமானால், ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கலாம், அதற்காக, இலக்கிய  ரசனையே இல்லாதவர், பாராட்டுவதற்குக் கூடத் தகுதியற்றவர் என்று எப்படி இவர்கள் ஒரு அவசர முடிவுக்கு வருகிறார்கள்?

உடல் நலம் சரியில்லாத தருணத்தில், கலைஞருடைய உதவியை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்று வாதாடுகிறார்கள்! அங்கே ஜேகே பிரதானமான காரணம் இல்லை, கருணாநிதி மீதான வெறுப்பு மட்டுமே!

ஆக,நல்ல எழுத்தை அங்கீகரிக்கப் பழகுகிற  வாசிப்புத் தளம் இன்னமும் விரிவடைய வேண்டும் என்று தான் தோன்றுகிறது!

இலக்கியம் என்பது வெறும் வார்த்தை அலங்காரத்தில் இல்லை, முனைவர் நா.கண்ணன் தனது பதிவில் சொல்கிற மாதிரி நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறைகள் தெரியாது! நெஞ்சம் நிறைய நேசம் வைத்துப் படிக்க வருபவருக்கும் இதமாகப் பரிமாறத் தெரிந்தவனே நல்ல எழுத்தாளன்!

அவன் எழுதுவது மட்டும் தான் எழுத்து!
கூழாங்கல்லை ஒதுக்கி விட்டு மாணிக்கத்தை மட்டும் தேடுகிற தேடல் உருவானால், வெட்டிக் கூளங்கள் தானே ஒழிந்து போகும்!

இருள் விலகி ஒளி பிறக்கட்டும்!


 


சரியாப் பத்த வைக்கக் கூடத் தெரியலையே, பரட்டை! புது வருடத் தீர்மானங்க‌ள் பத்து!





சரியாப் பத்த வைக்கக் கூடத்  தெரியலையே, பரட்டை! புது வருடத் தீர்மானங்க‌ள் பத்து!


முதல்  மூணும் பாத்தாச்சு  இல்லையா! இப்ப மிச்சமிருப்பது என்னன்னு பாக்கலாம்!


புதுவருடத் தீர்மானம் நம்பர் நான்கு!


இனிமேல் தமிழில் வலைப்பதிவர் யாரையும் வாலைத் தொட்டு, தலையைத் தொட்டு எழுதுவதில்லை! இங்கே கற்றுக் கொள்ள வருபவர்களைவிட, க‌ற்றுக்கொடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்பதும், நானும் அதில் சேர்ந்து ஒரு எண்ணிக்கையைக் கூட்டுவானேன் என்பது  மட்டுமே காரணம்.அல்ல.  


இணையம் என்பது மனிதர்களை, மனங்களை இணைக்கிற கருவியாக இருக்கும்போது, கற்றுக்கொள்ள உதவும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர, வெறுப்பை, அருவருப்பை வளர்க்கிற போக்குகளுக்குத் துணையாக ஆகிவிடக் கூடாது என்பதாலும் தான்!






நல்லதை நானும் கேட்பேன், என்னுடைய நண்பர்களும் கேட்பார்கள், இந்த நாடுமே கேட்கும் என்ற நிலையை உருவாக்கக் கூடிய நல்ல எண்ணங்களாக, நல்ல செயல்களாக ஆரம்பித்து வைப்பது நம்மிடம் இருந்தே தொடங்குகிறது!





புதுவருடத்தீர்மானம் நம்பர் ஐந்து !

சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வு! ஏற்கெனெவே ஒரு பதிவில் சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்கக் கூடிய பாலித்தீன் பைகளைத் தவிர்ப்பது, நமக்குத் தெரிந்த நண்பர்களிடமும் எடுத்துச் சொல்வது, தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களையும் பொம்மைகளையும் தவிர்ப்பது, அக்கம் பக்கத்தில் குப்பையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் தீ வைத்துக் கொளுத்துவதைத் தவிர்ப்பதும் முடிந்தவரை தடுப்பதும் பற்றிப்  பேசியிருக்கிறோம்.

அதே மாதிரிக் கொசுத் தொல்லை
! இங்கே அரசும் அரசியல்வாதிகளும் வெறுமே பேசிக்கொண்டு மட்டுமே இருப்பார்கள். அரசு மருத்துவ மனைகளில் சிக்குன்குனியா, மலேரியா என்று விதவிதமாய்ப் பரவிக் கொண்டிருந்தபோது அரசு அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருந்தது. அரசு மருத்துவர்கள் எப்போதும் போலப் பொறுப்பில்லாமலேயே நடந்து கொண்டார்கள். தேவையான மருந்துகள் இல்லை.

சுற்றுப்புறத்தை வியாதிகளைப் பரப்பும் கிடங்காக மாற்றிவிடாமல் இருப்பதில் விழிப்புணர்வைக் கொஞ்சமாவது ஏற்படுத்த முனைவது
. நமக்கு நாமே என்பது வெற்றுவார்த்தை தான்  என்ற அனுபவமிருப்பதால், தன்கையே தனக்குதவி என்பதை உணர்ந்து செயல் படுவது.

புதுவருடத் தீர்மானம் நம்பர் ஆறு!





ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று தீர்மானங்களை, இந்த ஆறோடு  முடித்துக் கொள்ள முடிந்தாலே  நல்லது தான்! நீளம் குறையும்! ஆனாக்க, பத்து இல்லைன்னாப் பத்தாதாமேன்னு தலைப்பே புது வருடத் தீர்மானங்கள் பத்து என்று என்றிருக்கும்போது, இன்னும் கொஞ்சம் சொல்லத் தானேவேண்டியிருக்கிறது!

இந்தத் தொடரும் பதிவைத் தொடங்கிய போதே
, சென்ற டிசம்பர் மாதம், ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியீடாக மாதம் தோறும் வெளிவரும் மின் இதழ் 





அதன் தலையங்கத்தைத் தொட்டுத் தான் ஆரம்பித்திருந்தேன்!

As the year draws to a close, we at Next Future wonder at what our personal achievements have been. Our main objective is to share some powerful thoughts with our readers. We constantly aspire that the views expressed in the magazine may inspire and motivate others to move closer and closer towards the light. And it is almost an ardent prayer on our part to use the magazine as a platform through which we can offer our best and highest, not just to those who share the moment with us, but to the One who is the source of all our effort and our inspiration.”



இப்படி அந்தத் தலையங்கத்தை எழுதிய குழு, இது வரை என்ன செய்திருக்கிறோம், இன்னும் செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பற்றிய சுய அலசலாக, விமரிசனமாக எழுதியிருந்ததைப் படித்தபோது, அதே மாதிரி சிந்தனையோட்டம் எனக்குள்ளும் ஓட ஆரம்பித்தது.


What I am doing here? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்? சிந்தனையின் மையப்புள்ளியாக இந்த ஒரு கேள்வி தான் இருக்கிறது.
7. ஒரு வங்கியில், வியாபாரத்தில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஐந்தொகை எனப்படும் லாப நஷ்டக்கணக்கைப் பார்ப்பது போலவே, வாழ்க்கையின் சில தருணங்களில் நாம் யார், இங்கு எதற்காகப் பிறந்தோம், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாகவே கேட்டுக் கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது

8. வாழ்க்கையில் எதுவுமே நஷ்டக்கணக்காகவோ, மீள முடியாத திவால் நிலையாகவோ இருந்துவிடுவதில்லை, ஒவ்வொரு அனுபவமுமே, அது மிகக் கசப்பானதாக இருந்த போதிலுமே கூட, அடுத்தபடிக்கு உயர்த்தும் உன்னதமான தருணமாகவும் அனுபவமாகவும் இருக்க முடியும்

9. இதை வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கும் போதேஇதன் அனுபவங்களையும் ஒரு கட்டத்தில் அலசிப்பார்த்தாக வேண்டியிருக்கிறது

10. ஒன்றோ இரண்டோ, அல்லது பத்தோ, உண்மையான சாரம் என்னுடைய தீர்மானங்களில் மட்டும் இல்லை, வெறும்  எண்ணிக்கையில் மட்டும் இல்லைஒவ்வொரு அனுபவத்திலும் நான் என்ன கற்றுக்கொண்டு வருகிறேன் என்பதே ஒரே மையக் கருத்து

இதை வைத்து மட்டுமே என்னுடைய தீர்மானங்களும், தொடர்ந்து வரும் செயல்களும், விளைவுகளும் இருக்கும்! அதில் இருந்து அடுத்து வேறொன்றில் மையம் கொண்டு இதே தேடல்தொடரும்!



என்னவோ எதிர்பார்த்து, எப்படியோ முடித்திருப்பதில் ஒன்றிரண்டு நண்பர்களுக்குக் கொஞ்சம் சுவாரசியமே இல்லாமல் போய்விட்டதாகத் தோன்றலாம். கொஞ்சம் சொந்த அனுபவங்களைக் கவனிக்கப் பழகுங்கள்! வாழ்க்கை மிக அற்புதமானது 

முடிவே இல்லாததுபோல ஒரு பக்கம்,என்ன என்று கேட்பதற்குள் முடிந்து போய்விடுகிற இன்னொரு பக்கம் ஆக இரண்டு நிலைகளுக்கும் இடையில், அனுபவங்களே கடந்துபோகிற பாலங்களாக, கூடவே வருகிற துணையாக, சகபயணிகளை நேசிக்கும் இயல்பாக, நம்முடைய மனப்பக்குவத்திற்கு ஏற்றபடிமாறிமாறி வந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும்!

'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

கவிஞர் கண்ணதாசனுடைய இந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பது, அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே நன்றாகப் புரியும்!



நான் பேச நினைப்பதெல்லாம்........!


வால்பையனோட படம்! கருத்து தளத்துல இருந்து சுட்டது!

தேடுபொறிகள், வாசகர்களைக் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டுவந்து உங்களுடைய பக்கங்களுக்குக் கொண்டுவர வேண்டுமானால்,


காமம், காதல், கடவுள், நாத்திகம், பெரியார்,நம்புகிறவன் முட்டாள், கவிதை, கவுஜை, எதிர் கவுஜ, கானா பாட்டு, ஈழம், பொழுதுபோக்கு நாத்திகம், நமீதா, நயன்தாரா, பிரபுதேவா, ரஜினிகாந்த்,குஷ்பூ, சீமான், போலி டோண்டு, பிரபலப் பதிவர், நடேசன் பூங்கா, பதிவர் வட்டம்,மொக்கை, மொட்டைமாடி, மொட்டை மாடிக் கூட்டம், கிழக்கு, இம்சை, பா.ராகவன், சாரு நிவேதிதா, ஜெய மோகன், லக்கிலூக்,செக்ஸ் சாமியார், புதுசு கண்ணா புதுசு, குச்சிக்காரி..........................



மேலே குறிப்பிட்ட வார்த்தைகளில் எது ஒன்றை எடுத்துக் கொண்டு பதிவு எழுதினாலும், ஹிட்ஸ் குவிவது நிச்சயம்!நீங்கள் எழுதியதற்காக இல்லை! அப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளாதீர்கள்! பின்னூட்டத்தில் கும்முவதற்காகவே, இங்கே என்னை மாதிரி நிறையப்பேர் இருக்கிறோம்! ஒரு எல்லைக்கு மேல் படிப்பவர்கள் ரத்தக் கொதிப்பு அளவு எகிறுவதும் சர்வ நிச்சயம்!


இந்த வார்த்தைகள் பட்டியலில் இன்னும் ஒன்றைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்!

வால்பையன்!


நம்ம வால்ஸ் சிறுகதைப் பட்டறைக்குப் போன ஞாயிற்றுக்கிழமை சென்னைக்குப் போய்விட்டு வந்தார். யுத்தம் சரணம் கச்சாமி, சுகம் ப்ரம்மாஸ்மி இப்படி என்னவோ அந்த நேரத்தில் தோன்றுகிற வார்த்தைகளை வைத்துக் கொண்டே, பதிவுகள், புத்தகங்கள் எழுதிக் குவிக்கிற பா.ராகவன் கூட இவருடைய வம்புத்தனமான பின்னூட்டங்களைப் பார்த்துக் கொஞ்ச அதிகமாகவே மிரண்டு போனார் போல இருக்கிறது!

பால் வடியும் முகத்தோட படத்துல பச்சப்புள்ள மாதிரி இருக்கற இவரா வால்ஸ்?
நம்ப முடியலையே என்று நினைப்பவர்களுக்காக, மேலே ஆரம்பத்தில் கருத்து தளத்தில் இருந்து சுட்ட படம்.  

சிறுகதை எழுதுவது எப்படி என்பதை, அதைப் பத்திரிகைகளில் படித்துப்பார்க்கிற உதவி ஆசிரியரின் கண்ணோட்டத்தில் இருந்துபேசிவிட்டு வந்த அனுபவத்தைத் தன் பதிவில் எழுதும் போது, வம்புப்பின்னூட்டங்களில் மிரண்டு போய், இவரிடம் தான் எவ்வளவு விஷயம் இருக்கிறது அன்று ஆச்சரியப்பட்டுப்போய் [அல்லது அரண்டுபோய்?] எழுதி இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!


சரி, வால்ஸ் சிறுகதைப் பட்டறைக்குப் போய் வந்தார், ஏதோ ஒரு சிறுகதை அல்லது வெறும் கதையாவது எழுவார் என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள் வெறும் பச்சைப்புள்ளை, ரத்தம் கொப்பளிக்கிற யுத்த பூமியாக இருக்கும் சூடான தமிழ் வலைப்பதிவுகள் பக்கம் வந்தறியாதவர் என்றும், அப்படியே அபீட்டாயிக்கறது தான் நல்லதுன்னும் அர்த்தம்!


அதையும் மீறி வந்தவர்கள் என்றால், என்னை மாதிரி வால்பையன் ரசிகர் மன்றம், அல்லது வால்பையன் நற்பணி இயக்கத்து ஆளாகத் தான் இருக்க வேண்டும்! அட, மெய்யாலுமேங்க!

நற்பணி மன்றத்துக்காரங்க எல்லாரும் கூடி, சீக்கிரமே ஒரு நற்பணி ஆரம்பிக்கப் போறோங்க!




ஐம்பத்தைந்தே வரி, எட்டுப்பத்தியாகப் பிரித்து, நடுவில் சும்மா உள உளாக்காட்டிக்கு இரண்டு படம். தலைப்பு வைப்பதிலும் திறமையான தில்லாலங்கடி வேலையைக் காட்டி இருக்கிறார்! சென்ற பதினாறாம் தேதி போட்ட பதிவு. எப்பவும் போல, பட்டாசுச் சரத்தைக் கொளுத்திப் போட்டுவிட்டு, ஓரத்தில நின்னு வேடிக்கை பார்க்கிற வால்பையன், ஒன்னு ரெண்டு பின்னூட்டங்களில் கொஞ்சம் வீராவேசமாகப் பதில் எழுதியிருக்கிறார்.


பார்பனீயத்தின் புதிய தில்லாலங்கடி ! இது தான் தலைப்பு. இது வரைக்கும் நானூற்றுச் சொச்சம் பின்னூட்டங்கள்! ஏற்கெனெவே வால்பையனுடைய ஒரு பதிவில் டம்பி மேவீ ஏதோ பின்னூட்டமிடப்போக, ஈஸ்வரி ஆத்தா 'போடா லூசு' என்று அருள் வாக்குச் சொன்னதில், மனிதர் ரொம்பவுமே எச்சரிக்கையாக, "என் கருத்தை சொல்லி மீண்டும் ஒரு முறை "போடா லூசு" என்று பட்டம் வாங்க நான் தயாராக இல்லை........" என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.


அவர் பதிவு போட்டார். பின்னூட்டக் கும்மிகள் குவிந்தன, சரி இங்கே என்ன சொல்ல வருகிறாய் என்று தானேகேட்கிறீர்கள்?


இங்கே தான், எந்த ஒரு விஷயத்துக்கும் நேரெதிரான இரட்டைத் தன்மை இருக்கிறது என்று, இந்தப்பக்கங்களின் அடிநாதமாக இருக்கும் கருத்தை, மறுபடி உண்மையென நிரூபிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.


"கடளையே நம்பளையாமாம், வேதத்தை என்னாத்துக்கு நம்புறோம்!,

ஏன் எல்லா கடவுளுக்கு ரூல்ஸ் & ரெகுலேஷன் இருக்கு?

அது இல்லாம இருந்தா அது கடவுள் இல்லையா?

என்ன கொடும சார் இது!? “



பின்னூட்டத்திலும் வந்து நம்ம வால்ஸ் கொளுத்திப்போட்ட சரவெடி இது!


கொஞ்சம் கூட அசராமல், அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் வார்த்தைகளை உருவி எடுத்து. பின்னூட்டச் சரவெடிகளாக வால்பையன்வெடிப்பதைப் பார்த்து நம்ம ஜெய் ஹிந்துபுரத்துக்காரர் பீர், தனியாகவே ஒரு பதிவு போட்டார் "யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?" ரொம்பப் பொறுமையாக, இஸ்லாம் மார்கத்தை வால்பையனுக்கு எப்படியாவது புரியும்படி சொல்லியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதினமாதிரி இருந்தது. ஜெய்ஹிந்துபுரத்துக்காரருக்குச் சொன்னேன்:


'வாலுக்கு'பிரத்யேகமான பதிவு என்றாலும், சில விஷயங்கள் பொதுவாகச் சொல்லவேண்டித்தான் இருக்கிறது!


யானைக்கு மதம் பிடிக்கும்! ரொம்ப சரி, அதை விட மனிதனுக்கு 'மதம்' பிடித்துப்போய் விடும் நிலை இருக்கிறதே, அது அதைவிட மோசமானது!


அதைக் கண்டிக்கிறோம் என்று உண்மையிலேயே சீர்திருத்தங்களில் ஆர்வம் இருந்த சில பேர் வந்தார்கள்!அப்புறம் அது நிறையப் பேருக்குப் பொழுதுபோக்காகி விட்டது!


இங்கே பலரும் பேசுகிற நாத்திகம், பொழுதுபோக்கும் நாத்திகம் தான்!அவர்களுக்கு, விடைகளில், ஏன் எப்படி எதனால் என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ளும் பொறுமையும் இல்லை!


அதனால், யானைக்கு மதம் பிடிக்கும்! அப்புறம் வாலுக்கு என்ன பிடிக்கும் என்றால், 'லொள்ளு' தான்! அதுதான் சரியான விடையாகவும் இருக்கும்:-)).


ஒரு படத்தில் வடிவேலு, உளறிக் கொட்டி விட்டு,"அப்ப நானாத்தான் உளறி மாட்டிக்கிட்டனா?" என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொள்வது போல, பொழுதுபோக்கு நாத்திகம் பேசுகிறவர்களுக்கு, 'அவல்' எங்கிருந்து கிடைக்கிறதாம்?


மதங்களை உயர்த்திப் பிடிக்கிறேனென்று தாங்கிப்பிடிப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் வார்த்தையில் இருந்தே தான் கிடைக்கிறது!


ஆமாம், எனக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது!



"The defenders of the truth are often worse than the enemies of the truth."



இந்தப்பதிவிலும் பின்னூட்டங்கள் ஒரு சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலு, விவாதம் முடிந்த பாடில்லை, யாரும் புதிதாக எதையும் தெரிந்துகொண்டதாகவும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், இப்படிப்பட்ட விவாதங்கள் ஒருபோதும் முடிவுக்கு வருவது இல்லை.


சீசன் ஒண்ணு, சீசன் ரெண்டு, சீசன் மூணுன்னு வளந்துகிட்டேபோகும்!


இது ஒருபக்கம் நடந்துட்டேயிருக்கும் அதே சமயம், இன்னொரு பக்கத்துல, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்துல கொஞ்சம் சுவாரசியமான விவாதம், ஏற்கெனெவே ரெண்டு மூணு வாட்டி சொல்லியிருக்கேன், "எது பக்தி" இந்தக் கேள்விக்கு விடைதேடும் விதமாக, ஒரு இழையில் விவாதம் நடந்துட்டிருக்கு!



அங்கே எல்லாமே சைவம் தான்! ரத்தம் சிந்துற, குடிக்குற வேலையெல்லாம் கெடையாது!


ரெகா என்கிற திரு கார்த்திகேசு, ஒரு மலேசியத் தமிழ் எழுத்தாளர், போனமாசம் கலைமகள் மாத இதழில் கூட இவரோட நேர்காணல் வந்திருக்கு, அப்புறம் மோகனத் தமிழ் பேசும் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ரெண்டுபேரும் இழையில்  விவாதத்தை இப்படி நடத்துகிறார்கள்-வால்பையன் ரவுசு கட்டுற நாத்திகத்துலேயோ, நம்ம பீர், அவரோட நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கிறதுலேயோ காண முடியாத ஒரு விஷயம், கிட்டத்தட்ட, இதுதான் விஷயம்னு பிடிபடற அளவுக்கு இங்கே நடக்குது! படிச்சுப் பாருங்க!


"அரங்கனாரே!


நானும் ரவுசு (இதன் மூலம் செங்கிருதமா?) பிடித்தவன்தான்!தெரிந்த விஷயம்தானே!


பக்தி பற்றிப் பேசும் உங்கள் திறந்த மனப்பன்மை எனக்குப் பிடிக்கிறது. பக்தி என்பதை விரல் சுட்டிச் சொல்லிவிட முடியாது என்பது போல்தான் தொனிக்கிறீர்கள். அதுதான் யதார்த்தம் எனப்படுகிறது.


ஆனால் இப்படியே பேசிக்கொண்டே போய், ஒரு கட்டத்தில்,இப்ப்டியெல்லாம் பேசுவதில் பிரயோஜனமில்லை. "பகவத்கீதையில் கண்ணன் ஏற்கனவே சொல்லியிருக்கிறான்"


அல்லது "ஆழ்வார்கள் அப்போதே சொல்லிவிட்டார்கள்" என்று சிவப்பு நாடா கட்டி இந்தக் கோப்பை மூடிவிடுவீர்கள் என்றஅச்சம் எனக்கு இருக்கிறது.


ஏற்கனவே நமது ஆன்மீகப் பாரம்பரியத்துக்குள் எல்லாம் சொல்லப்பட்டுவிட்டது; வேறு இடத்தில் தேடுவானேன் என வாய் அடைக்கப் பட்டிருக்கிறேன்.


எனினும் இந்த விசாரணைப் பாட்டை, அதில் காணுகின்ற தத்துவ நுணுக்கங்கள், மேற்கோள்கள், மனம், மூளை (அந்தர், பஹிர்-உள்ளே, வெளியே) பற்றிய அலசல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கின்றன. நீங்கள் சொல்லும் விதம் மிக அழகு. ஆகவேதான் விடாமல் படிக்கிறேன்.


நான் பயணி.பயணத்தின் இறுதி அடைவு பற்றி எனக்கு அவ்வளவாக அக்கறையில்லை (நம்பிக்கையும் இல்லை). ஆனால் உங்களோடு பயணம் செய்வது சுகானுபவம்,. அறிவைக் கிளறும் அனுபவமும் கூட.


என்னுடைய இரண்டு தம்பிடி ரவுசு இதோடு முடிகிறது.


ரெ.கா.


"வாருங்கள் திரு ரெ கா! இந்த அச்சமே உங்களுக்குத் தேவையில்லை.ஏனெனில் நான் எழுதுவது ஓர் இலக்கிய உத்தி என்ற முறையில் இல்லை. அதுவுமின்றி என்றுமே வெறும் நம்பிக்கையின் கட்சியை எள்ளளவும் மதிக்காதவன் நான்.


இனியும் மதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் எனக்குப் படவில்லை. எனக்கு உள்ளூற மயக்கம் என்பது அரிஸ்டாட்டிலின் கருத்துலகத்தில். பக்தி என்பதும், கடவுள் என்பதும் மிக ஆழமான கருத்து,அனுபவ உலகம் என்பது விடாமல் தோன்றிக் கொண்டிருக்கும் ஐயம்.



பக்தி என்பது எப்படிப் பெரும் அறிவுக்கான உழைப்பை உள்வாங்கத் தக்கதாய் இருக்கிறது எனப்படுகிறதோ அதைப்போலவேதான் அறிவின் பாற்பட்ட மூட நம்பிக்கைகளும் அறிவு போன்ற தோற்றம் கொண்டு சென்றவை வேஷம் கலைகின்றன.


எது எப்பொழுது நடக்கிறது என்பதுதான் நிச்சயம் இல்லாமல் இருக்கிறது.


மற்றபடி எப்படி முடிப்பது, அல்லது எங்கு கொண்டுபோவது, அல்லது முடிவு என்று ஒன்று இயலுமா, அல்லது இப்படி விசாரத்திலேயே இருப்பதுதான் என்தலைவிதியா? எதுவும் எனக்குப் புரிபடவில்லை. 'அறிதொறும் அறியாமை கண்டு, அற்று, ஆல்!' என்ற அர்த்தம் மட்டும் நன்கு புரிகிறது.



வர வர எழுத்தைக்கண்டே பயமாய் இருக்கிறது. மிகவும் தெரிந்துதான் ஒன்றை எழுதுகிறோம். ஜாக்கிரதையாக நன்கு கவனித்துத்தான் ஒரு கருத்தைக் கூறுகிறோம். ஆனால் எழுதி முடித்து அச்சாகி வந்து ஓர் உலா போனபின்பு அதே விஷயத்தில் புதிதாக ஒரு கதவு திறக்கிறது.


அப்பொழுது எழுதியது தவறா? இல்லை, பின் இந்தக் கதவு தெரியாமல் அதை எப்படி எழுதியது முழுமையாகும்? பின் தெரிந்து எழுதாமல், தெரியாமலேயே எழுதித் தொலைத்தோமா?



ஒரு நிலையில் நாம்தான் எழுதுகிறோமா அல்லது அவைதான் நம்மை வைத்து எழுதிக் கொள்கின்றனவா? இந்தப் புதிர் நிலத்தில் கால் வைத்தபடிதான் நான்
எதையுமே சிந்திக்கவோ எழுதவோ வேண்டியிருக்கிறது.


இதைவிட சுத்த அறியாமை நிலை சுகமாக இருந்தது."



--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


இருக்கிறது என்று சொல்பவரும், ஒரு எல்லைக்கு உட்படுத்தித் தான் சொல்ல வருகிறார்.

இல்லை என்று மறுப்பவரும் அந்த எல்லையை மறுப்பதில் மட்டுமே தனிக்கவனம் செலுத்துகிறார். ஆக, கடவுள் உண்டா, இல்லையா என்ற கேள்வி இங்கே ஒருவருக்கு ஒருவர் செய்துகொள்ளும் வரையறைகளை நிராகரிப்பது, மாற்றியமைப்பது என்ற அளவில் மட்டுமே நடந்து கொண்டிருப்பது தெளிவாகப் புலனாகிறது, இல்லையா?


விஷயம் என்னதென்று விளங்கிக்கொள்ளாமலேயே விவாதம் மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறோம்!


அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது!



இது சித்தர்கள் ஞான மரபு. இதே மாதிரி, இன்னொருத்தரும் கிட்டத்தட்ட இதே மாதிரி உருவகத்தில் சொன்னது நினைவு வருகிறதா?



But do not think that the drop alone becomes the ocean.


The ocean, too, becomes the drop.

சிறுதுளி மட்டுமே கடலாக ஆகிவிடும் என்றெண்ணாதே!
பெருங்கடலும் சிறுதுளியாய் ஆவதைப் பார்!



-ரூமி



நான் இங்கே, நான் இங்கே, நான் இங்கே உன்னோடு!



அழைப்பவர் குரலுக்கு வருவேனென்றான் கீதையிலே கண்ணன்!
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்!


கண்ணதாசனுடைய இந்த வரிகள், சீர்காழி கோவிந்தராஜனின் கணீரென்ற குரலில் காதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது.


இறைவனை, எவர் எந்த நிலையிலும், எப்படி அழைத்தாலும், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர அவன் தயாராகவே இருக்கிறான்! அவன் வருகையை நாம் தான் உணருவதில்லை, அவன் சத்தமே இல்லாமல் தான் வந்த வேலையை நடத்திக் கொண்டே தான் இருக்கிறான்.


இந்த அனுபவம், ஏதோ ஒரு மதம் அல்லது ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது கடவுள் என்று இல்லாமல், இறைவனது அருளைத் தேடும் மனிதர்கள் வாழ்க்கையில் பொதுவானதாகத்தான் இருக்கிறது. இந்த மாதிரி வெளிச்சக் கீற்றுக்களை, எந்த ஒரு ஆன்மீகப் பெரியவர்களுடைய வார்த்தைகள், அனுபவங்களிலுமே நம்மால், பார்க்க முடியும்!


பெர்ஷியாவில் பிறந்த ஜலாலுதீன் மொகமது ரூமி, இந்த ஸுஃபி ஞானியின், கவிதைகள், அவைகளில் கிடைத்த வெளிச்சக் கீற்றுக்கள், எப்படி சூரிய சந்திரர்களுடைய ஒளி, எந்த ஒரு பேதமும் இல்லாமல், எல்லோருக்கும் கிடைக்கிறதோ, அதே மாதிரி, தாகம் தாகம் என்று தவிக்கிறவனுக்குக் கிடைக்கிற அனுபவமாகக் கிடைப்பதை, முந்தைய பதிவு ஒன்றில் பார்த்தோம்
.

இறைவா, நீ எங்கே? என்று கேட்கும் ஒருவனுக்கு நான் இங்கிருக்கிறேன், நான் இங்கிருக்கிறேன் என்று பதில் சொல்கிறானாம் இறைவன். அதையும் எப்படிச் சொல்கிறான் என்பதை, ரூமியின் இந்தக் கவிதைவரிகளைப் படித்துப் பார்க்கும்போது,
அதை நமக்கும் சொன்னதாகவே ஒரு அனுபவச் சிலிர்ப்பு வருகிறதே!


கவிதை எப்படி ஒரு உண்மையைக் கதையாகச் சொல்கிறது என்பதைப் பாருங்கள்!


பகல் கடந்துபோய் இரவு முடிந்த பின்னும்
வாய் வலிக்க ரத்தம் கசிய அவன் அழைத்தான்
"அல்லா, என் ஆண்டவரே!"


சாத்தான் அவனுடன் விளையாட வந்தான்.
"ஏமாந்த சோணகிரி!இரவு முழுவதும் கூவினாயே
ஒரு முறையேனும் அல்லா நான் இங்கிருக்கிறேன்
என்றொரு பதில் சொல்லக் கேட்டாயா?
நம்பி நம்பிக் கூப்பிட்டதற்குப் பதில் என்ன?
நான் சொல்கிறேன், ஒன்றுமில்லை! ஒன்றுமேயில்லை!"


சாத்தான் சொன்ன வார்த்தைகளில் மனிதன்
சஞ்சலம், துயருடன் மண்ணில் விழுந்தானே
வெறுமையும் தனியனுமாய்த் துவண்டான்.
ஆழ்ந்த உறக்கம் அவனைத் தழுவியதே!


"இறைவனைத் தொழுவதில் வருத்தம் ஏன்?"
இப்ராகிம் கனவினில் கேட்கக் கண்டான்.


வருத்தம் தோய மனிதன் சொன்னான்
"அழைத்துப்பார்த்தேன், வரவில்லை!
இதோ இருக்கிறேன் எனவும் சொல்லவில்லை
ஆண்டவர் என்னை மறந்தாரோ?"


இப்ராகிம் கருணைததும்பச் சொன்னார்
"ஆண்டவர் சொன்னதை மறந்தாயோ?
என் பெயர் சொல்வதே பதிலாகும்
ஏங்கி அழைத்ததே செய்தியாகும்
என்னிடம் வர நீ செய்யும் முயற்சி
உண்மையில் நானுன்னை நெருங்கும் அறிகுறி
அன்பும் அச்சமும் எனக்கிடும் சுருக்கு
அல்லாவென்றழைக்கும் ஒவ்வொரு அழைப்பிலும்
சூழ்ந்திடும் மௌனம் ஆயிரம் பதில் சொல்லும்,
நான் இங்கே, நான் இங்கே, நான் இங்கே உன்னோடு!


Here I am!


All night, a man called “Allah”
Until his lips were bleeding.
Then the Devil said, “Hey! Mr Gullible!
How comes you’ve been calling all night
And never once heard Allah say, “Here, I am”?
You call out so earnestly and, in reply, what?
I’ll tell you what. Nothing!”
The man suddenly felt empty and abandoned.
Depressed, he threw himself on the ground
And fell into a deep sleep.
In a dream, he met Abraham, who asked,
“Why are you regretting praising Allah?”
The man said, “ I called and called
But Allah never replied, “Here I am.”
Abraham explained, “Allah has said,
“Your calling my name is My reply.
Your longing for Me is My message to you.
All your attempts to reach Me
Are in reality My attempts to reach you.
Your fear and love are a noose to catch Me.
In the silence surrounding every call of “Allah”
Waits a thousand replies of “Here I am.”
 
“Rumi Wisdom – Daily Teachings from the Great Sufi Master”
by Timothy Freke

ஆங்கிலத்தில்இருந்து தமிழுக்கு  மொழியாக்கம் செய்ததில் குறை இருந்தால் அது என்னுடையதே. ஆங்கில மூலமும், ஒப்புநோக்கிப் பார்ப்பதற்காகவே இங்கே தரப்பட்டிருக்கிறது!