நான் இங்கே, நான் இங்கே, நான் இங்கே உன்னோடு!அழைப்பவர் குரலுக்கு வருவேனென்றான் கீதையிலே கண்ணன்!
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்!


கண்ணதாசனுடைய இந்த வரிகள், சீர்காழி கோவிந்தராஜனின் கணீரென்ற குரலில் காதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது.


இறைவனை, எவர் எந்த நிலையிலும், எப்படி அழைத்தாலும், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர அவன் தயாராகவே இருக்கிறான்! அவன் வருகையை நாம் தான் உணருவதில்லை, அவன் சத்தமே இல்லாமல் தான் வந்த வேலையை நடத்திக் கொண்டே தான் இருக்கிறான்.


இந்த அனுபவம், ஏதோ ஒரு மதம் அல்லது ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது கடவுள் என்று இல்லாமல், இறைவனது அருளைத் தேடும் மனிதர்கள் வாழ்க்கையில் பொதுவானதாகத்தான் இருக்கிறது. இந்த மாதிரி வெளிச்சக் கீற்றுக்களை, எந்த ஒரு ஆன்மீகப் பெரியவர்களுடைய வார்த்தைகள், அனுபவங்களிலுமே நம்மால், பார்க்க முடியும்!


பெர்ஷியாவில் பிறந்த ஜலாலுதீன் மொகமது ரூமி, இந்த ஸுஃபி ஞானியின், கவிதைகள், அவைகளில் கிடைத்த வெளிச்சக் கீற்றுக்கள், எப்படி சூரிய சந்திரர்களுடைய ஒளி, எந்த ஒரு பேதமும் இல்லாமல், எல்லோருக்கும் கிடைக்கிறதோ, அதே மாதிரி, தாகம் தாகம் என்று தவிக்கிறவனுக்குக் கிடைக்கிற அனுபவமாகக் கிடைப்பதை, முந்தைய பதிவு ஒன்றில் பார்த்தோம்
.

இறைவா, நீ எங்கே? என்று கேட்கும் ஒருவனுக்கு நான் இங்கிருக்கிறேன், நான் இங்கிருக்கிறேன் என்று பதில் சொல்கிறானாம் இறைவன். அதையும் எப்படிச் சொல்கிறான் என்பதை, ரூமியின் இந்தக் கவிதைவரிகளைப் படித்துப் பார்க்கும்போது,
அதை நமக்கும் சொன்னதாகவே ஒரு அனுபவச் சிலிர்ப்பு வருகிறதே!


கவிதை எப்படி ஒரு உண்மையைக் கதையாகச் சொல்கிறது என்பதைப் பாருங்கள்!


பகல் கடந்துபோய் இரவு முடிந்த பின்னும்
வாய் வலிக்க ரத்தம் கசிய அவன் அழைத்தான்
"அல்லா, என் ஆண்டவரே!"


சாத்தான் அவனுடன் விளையாட வந்தான்.
"ஏமாந்த சோணகிரி!இரவு முழுவதும் கூவினாயே
ஒரு முறையேனும் அல்லா நான் இங்கிருக்கிறேன்
என்றொரு பதில் சொல்லக் கேட்டாயா?
நம்பி நம்பிக் கூப்பிட்டதற்குப் பதில் என்ன?
நான் சொல்கிறேன், ஒன்றுமில்லை! ஒன்றுமேயில்லை!"


சாத்தான் சொன்ன வார்த்தைகளில் மனிதன்
சஞ்சலம், துயருடன் மண்ணில் விழுந்தானே
வெறுமையும் தனியனுமாய்த் துவண்டான்.
ஆழ்ந்த உறக்கம் அவனைத் தழுவியதே!


"இறைவனைத் தொழுவதில் வருத்தம் ஏன்?"
இப்ராகிம் கனவினில் கேட்கக் கண்டான்.


வருத்தம் தோய மனிதன் சொன்னான்
"அழைத்துப்பார்த்தேன், வரவில்லை!
இதோ இருக்கிறேன் எனவும் சொல்லவில்லை
ஆண்டவர் என்னை மறந்தாரோ?"


இப்ராகிம் கருணைததும்பச் சொன்னார்
"ஆண்டவர் சொன்னதை மறந்தாயோ?
என் பெயர் சொல்வதே பதிலாகும்
ஏங்கி அழைத்ததே செய்தியாகும்
என்னிடம் வர நீ செய்யும் முயற்சி
உண்மையில் நானுன்னை நெருங்கும் அறிகுறி
அன்பும் அச்சமும் எனக்கிடும் சுருக்கு
அல்லாவென்றழைக்கும் ஒவ்வொரு அழைப்பிலும்
சூழ்ந்திடும் மௌனம் ஆயிரம் பதில் சொல்லும்,
நான் இங்கே, நான் இங்கே, நான் இங்கே உன்னோடு!


Here I am!


All night, a man called “Allah”
Until his lips were bleeding.
Then the Devil said, “Hey! Mr Gullible!
How comes you’ve been calling all night
And never once heard Allah say, “Here, I am”?
You call out so earnestly and, in reply, what?
I’ll tell you what. Nothing!”
The man suddenly felt empty and abandoned.
Depressed, he threw himself on the ground
And fell into a deep sleep.
In a dream, he met Abraham, who asked,
“Why are you regretting praising Allah?”
The man said, “ I called and called
But Allah never replied, “Here I am.”
Abraham explained, “Allah has said,
“Your calling my name is My reply.
Your longing for Me is My message to you.
All your attempts to reach Me
Are in reality My attempts to reach you.
Your fear and love are a noose to catch Me.
In the silence surrounding every call of “Allah”
Waits a thousand replies of “Here I am.”
 
“Rumi Wisdom – Daily Teachings from the Great Sufi Master”
by Timothy Freke

ஆங்கிலத்தில்இருந்து தமிழுக்கு  மொழியாக்கம் செய்ததில் குறை இருந்தால் அது என்னுடையதே. ஆங்கில மூலமும், ஒப்புநோக்கிப் பார்ப்பதற்காகவே இங்கே தரப்பட்டிருக்கிறது!

1 comment:

  1. சாத்தான் மட்டும் எப்படி அழைக்காமலேயே வருகிறான்!

    கடவுளை விட அவன் தான் எல்லா இடத்திலும் இருப்பான் போலயே! ஏன் இதை யாரும் கேட்க மறுக்கிறார்கள்!?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!