யாருக்காக....?

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்று ஒரு வழக்குச் சொல் எல்லோருக்குமே தெரியும்.இந்த வழக்குச் சொல்லின் உண்மையான தாக்கம், அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால்,அரசு ஏற்று நடத்தும் எந்த ஒரு நிறுவனத்தைப் பார்த்தாலும் போதும். ஏதாவது ஒன்றைக் கெடுக்க வேண்டுமானால், பாழடைந்த குட்டிச் சுவராக ஆக்க வேண்டுமானால், அதை அரசே ஏற்று நடத்த ஆரம்பித்தாலே போதுமானது என்ற அளவுக்குத் தான் இந்தியாவில்,அரசும், அரசுத்துறை சார்ந்த துறைகளின் செயல்பாடுகளுமிருந்து வருகின்றன.

சோஷலிசக் கனவுகளோடு, 1921 களில் சோவியத் ரஷ்யாவில் வந்த கூட்டுப்பண்ணை முறை எப்படி புதிய பொருளாதாரக் கொள்கையைக் குழிதோண்டி புதைத்தது என்பதை அடிப்படைப் பொருளாதாரம் படிக்க ஆரம்பிக்கும் எவருக்குமே தெரியும். சோவியத் ஒன்றியம் உடைந்து சிதறிய போது, முதலாளித்துவ வாடையே அடிக்காமல் எழுபது வருஷம், கம்யூனிசக் கடும் பாதுகாப்பில் இருந்த வாலிபப் பெண்கள், ஒரே இரவில்,
ஆடைகளைத் தூக்கிக் காண்பித்து, அமெரிக்க டாலருக்காக, விபசாரத்துக்கு வீதியில் தென்படும் அயல் நாட்டவரைக் கூவிக் கூவி அழைக்க ஆரம்பித்தார்கள்.

உடனே தத்துவம் நிறையத் தெரிந்த புள்ளிகள் பல்லைக் காட்டிக் கொண்டே எனக்கு, "அரசியல் மாற்றம் மட்டுமே போதாது, கலாச்சாரப் புரட்சியையும் ரஷ்யா நடத்தாததால் தான் தோற்றது" என்று சொல்லித்தர வரக்கூடும்.அவர்கள் சொல்ல வருகிற கலாசார மாற்றம் என்ன செய்தது, அதுவும் எப்படித் தோற்றது என்பதை அப்புறம் சாவகாசமாக, தேவை இருந்தால் பார்த்துக் கொள்ளலாம். மாற்றுகிறோம் என்பதைத் தீர்த்துக் கட்டுகிறோம் என்ற பொருளில் புரிந்துகொண்ட திருவிளையாடல் புராணம் அது!

சோஷலிசம் ஆரம்பித்தபோதும் சரி, அது வெறும் கனவாக முடிந்து போன பிறகும் சரி,
மனிதனுக்குள் இருந்த அடிப்படையான சுய நலம், வக்கிரங்கள், பேராசை,இன்னும் இது மாதிரியான வக்கிர குணங்கள் எதுவுமே மாறவில்லை.எழுபது வருஷங்கள், அந்த வாடையே தெரியாமல் பொத்திப் பொத்திப் பாதுகாத்தோமே என்றால், அம்ருதாஞ்சன் விளம்பரத்தில் வருகிற மாதிரி இட்ஸ் கான்..போயே  போயிந்தி கதைதான்! மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை மாற்ற இந்த இசங்கள்எதுவும்  உதவவில்லை என்பதே உண்மை!

தோழர் கே.வரதராஜன், தயிர் வடையை ஆசையாகச் சாப்பிட்டுக் கொண்டே, அடிக்கடி உதிர்க்கும் ஒரு ஆங்கிலச் சொலவடையை ஏற்கெனெவே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், நினைவிருக்கிறதா?

"நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்களில் ஏறியே நரகத்துக்கும் கூடப் போகலாம்!"

இங்கே சோவியத் ரஷ்யாவைப் பற்றியோ, சீனாவைப் பற்றியோ, குறைந்த பட்சம் தயிர்வடையைப் பற்றியோ கூடப் பேசப் போவதில்லை!
இன்றைக்கு ஹிந்து நாளிதழில் ஒரு ஓரத்தில் வெளியாகியிருக்கும் செய்தி, கொச்சியில் இடது கம்யூனிஸ்ட் சார்பான வங்கி ஊழியர் சங்கம் BEFI இன் அகில இந்தியப் பொதுக் குழுக் கூட்டத்தை நேற்று சனிக்கிழமை நடத்தியிருக்கிறது.

நிதித் துறையில், அரசு உத்தேசித்திருக்கும் சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்க்கிறார்களாம்!

இதில் என்ன கொடுமையான தமாஷ் என்றால், சென்ற வருடம் அமெரிக்காவைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் வங்கிகள் திவாலானபோது இந்தியாவில் மட்டும் அப்படி ஒரு சரிவு ஏற்படாததற்குக் காரணம், வங்கிகள் பொதுத் துறையில் இருந்தது தான், விசேஷமான கட்டுதிட்டங்களுக்கு உட்பட்டு வங்கிகள் நடப்பதுதான் என்று பொருளாதார மேதை அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரமே சொன்னதை மேற்கோள் காட்டி, பொதுத்துறையை வலுப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பது தான்!

பொதுத்துறை எவ்வளவு மோசமாக நிர்வகிக்கப் படுகிறது என்பதைப் பலமுறை அவர்களே வெளிப்படையாக விமரிசித்திருக்கிறார்கள். எதை வலுப்படுத்த வேண்டும்? மோசமாக நிர்வகிப்பதையா? இவர்களுடைய தயவு இல்லாமலேயே, அது தானே நடந்து கொண்டிருக்கிறது!

இங்கே அரசு, அரசுத்துறை, என்றால் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதிலிருந்தே பிரச்சினை ஆரம்பிக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, அதுவும் அபத்தமாக என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுகூட, அரசும், அரசு செய்ய வேண்டிய வேலைகள் என்ன, செய்யக் கூடாதவை என்ன என்பது அரசு, அதன் உள்ளே இருப்பவர்களுக்கும் சரி, என்னையும் உங்களையும் போல வெளியில் இருப்பவர்களுக்கும் சரி, புரியாது என்றில்லை, புரிந்துகொள்ளத் தொடர்ந்து மறுத்தே வந்திருக்கிறோம்.

முதலில் அரசு என்பது ஒரு நிர்வாகம். எது எது எப்படி இருக்க வேண்டும் என்கிற நெறிமுறைகளை வகுப்பதும், அதை அமல் படுத்துவதும் அதன் முக்கியமான பணி.அதை விட்டு விட்டு, சம்பந்தமில்லாதவைகளையும் சேர்த்துச் செய்வதற்குப்பேர் குழப்பம்!

குழப்பங்களை,இங்கே அரசுத்துறை அல்லது பொதுத்துறை என்றுகூடச் சொல்வதுண்டு!
உதாரணத்துக்கு தமிழ்நாடு அரசு ஏற்று நடத்தும் போக்குவரத்துக் கழகங்களையே எடுத்துக் கொள்வோம்! மோட்டார் வாகனச் சட்டம் என்று ஒன்று, அரசு தான் கொண்டு வந்திருக்கிறது, அதில் சொல்லியிருக்கிறபடி, எந்த ஒரு அரசுப்போக்குவரத்துக் கழகமாவது நடக்கிறதா என்பதைக் கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள்!

ஒவ்வொரு நான்கு பஸ்களுக்கும், ஒரு ஸ்பேர் பஸ் இருக்க வேண்டும். இருக்காது! ஸ்டெப்னி டயர்களே இருக்காது, அதுவும் ரீபட்டன் செய்த டயர்களுடன், ரோட்டில் எப்படி ஓடுகிறது என்பதே பெரும் அதிசயமாக அப்படி ஒரு மெயிண்டனென்ஸ், பாதி வண்டிகளுக்கு பிரேக் பிடிக்காது, ஸ்டீரிங் பிடித்துத் திருப்புவதற்குள் திருவண்ணாமலை கிரிவலம் வந்துவிடலாம்! எவர் மீதாவது மோதி ஏதாவது ஆனால், நஷ்டஈடு கொடுப்பதற்கு எந்த ஒரு வண்டியும் இன்ஷ்யூர் செய்யப் படுவதில்லை, பஸ்கள் ஜப்தி செய்யப்படுவது அடிக்கடி பேப்பரில் வருகிற செய்தி! அரசுக்கோ, போக்குவரத்துக் கழகங்களுக்கோ கொஞ்சமாவது வெட்கம், பொறுப்பு இருக்கிறதா என்று என்னைக் கேட்காதீர்கள்! கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

வெட்கப்படுகிற நேரத்தில் எங்காவதுபுகுந்து சம்பாதித்து விடலாமே என்று, அரசும் சரி, போக்குவரத்து கழகங்களும், வெட்கம், சுரணை, பொறுப்பு எல்லாவற்றையும் உதிர்த்து வெகு காலமாயிற்று!

தமிழ்நாடு மின்சார வாரியம்! ஷாக் அடிக்குமா அடிக்காதா என்றே தெரியாது! ஏனென்றால் எப்போது பவர் இருக்கும் என்றே எவருக்கும் தெரியாது! தொழிற்சாலைகளுக்குத் திருட்டு மின்சாரம், அரசியல் கட்சிக் கூட்டங்களுக்குக் கொக்கி போட்டு மின்சாரம் என்று பல விதத்திலும் திருட்டுக் கொடுத்துவிட்டு,ஒழுங்காகப் பணம் செலுத்துகிற மக்கள் தலையில், எல்லாவற்றையும் கட்டும் ஒரு தண்டல் வாரியம்!
தலை முதல் கால் வரை, பொறுப்பின்மை, ஊழல், திறமையின்மை இவைகளோடு இருப்பதற்குத் தான் பொதுத்துறையா?

 பொதுத்துறை வங்கிகள்!      ஹ்ம்ம் ...என்னத்தைச் சொல்ல?!

இப்படி ஒரு பொதுத்துறை, எதற்காக? யாருக்காக? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

பொதுத்துறையை பலப்படுத்தவேன்டியது இந்தியா போன்ற நாட்டில் ரொம்பவுமே அவசியம் என்பதில் நான் உடன்படுகிறேன். ஆனால் உள்ளிருந்தே அரிக்கும் கரையான்களிடமிருந்து காப்பாற்ற வேண்டியது அதைவிட அவசியம்!

பொதுத்துறையைப் பலப்படுத்த, பொறுப்பை உணர்ந்த ஊழியர்கள், திறமைக்கு முதலிடம் கொடுக்கும் நிர்வாக மேலாண்மை, ஊழலற்ற வெளிப்படையான செயல்பாடு மூன்றும் இணைந்தால் தான் முடியும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கொஞ்சம் யோசித்து, அப்படியே எனக்கும் சொல்லுங்களேன்! திரட்டியில் ஓட்டுப் போட்டுப் பிரபலமாக்கவேண்டும் என்று உங்களைக் கேட்கப் போவதில்லை. படித்தீர்களா, உங்களுடைய கருத்து என்ன என்பதை ஒரு நாலு வார்த்தை சொன்னால், அது போதுமே!

6 comments:

 1. சங்கர் படம் மூலமாகவோ, சுசீ கணேசன் படம் மூலமாகவோ எல்லா பொது துறையும் திருத்தி சீர் பண்ணி , ஒரு படமாக எடுத்து வேண்டுமென்றால் பார்க்கலாம் . மற்ற படி நடை முறையில் எதுவும் பண்ண இயலாது என்பதே என் கருத்து.

  ReplyDelete
 2. திரைப்படத்தில் அல்ல, நிஜமாகவே சீரழிந்த நிலையில் இருந்த ஒரு பொதுத்துறை வங்கி, அதனுடைய தலைமை நிர்வாகி எடுத்த அதிரடி நடவடிக்கைகளில், இரண்டே ஆண்டுகளில் குணமாகி வளரவும் தொடங்கிய ஒரு அதிசயத்தை நான் அறிவேன். அவரைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உள்ளிருந்தே குழி பறிக்கும் வேலைகள் என்னென்ன நடந்தன என்பதும் ஒரு 'த்ரில்லர்' படம் மாதிரித்தான்!

  அவர் செய்த ஒரு அடிப்படையான மாற்றத்தைப்பார்க்கலாம். ஏதாவது கற்றுக்கொள்ள முடிகிறதா என்பதையும் எனக்குச் சொல்லுங்கள்.

  இலக்குகளை நிர்ணயிப்பதோடு நின்று விடுகிற தலைமை அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்தது அதிரடி. பொது மேலாளர்கள், சாவகாசமாகப் பதினோரு மணிக்கு மேல் தங்களுடைய சீட்டுக்கு வருவார்கள், அதிகபட்சம் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணிநேரம் கூட சீட்டில் இருக்க மாட்டார்கள். அப்படியிருக்கிற நேரம் கூடத் தங்களுடைய வசூல், தனக்கு எதிரியாக இருக்கும் இன்னொரு பொது மேலாளருக்கு எதிராக எவரையாவது கொம்புசீவி விடுகிற வேலை, இதற்காகத் தான்!தங்களுடைய நிறுவனத்திற்காக எந்த வேலையும் செய்யாமல், உண்மையைச் சொல்லப்போனால், உள்ளிருந்தே குழி பறித்துக் கொண்டிருந்த பொது மேலாளர்களை அக்கௌண்டபிலிட்டி என்று சொல்வோமில்லையா, அப்படி பொறுப்பாக்கினார். முதல் ஒரு வருஷம் அப்படி த தலைகளைத் தட்டிக் கொண்டிருந்தது வெளியே தெரியவேயில்லை! அதுவரை, எது எப்படிப்போனாலென்ன என்றிருந்தவர்கள், சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தபோது தான் தலையில் குட்டியதன் விளைவு தெரியவே ஆரம்பித்தது.

  கீழ்மட்டத்தைத் தொடவே இல்லை, மேலே தட்ட ஆரம்பித்த தட்டு, கச்சிதமாகக் கீழ்வரைக்கும் தானாகவே வந்தது, வேலை நடந்தது.

  அடுத்து, வெறும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பது மட்டுமே வங்கியின் வேலை என்று நினைத்துக் கொண்டிருந்த வங்கியில், புள்ளி விவரம் என்ன சொல்கிறது, என்ன திசையில் போக வேண்டும் என்று காட்டுகிறது என்பதையும் கற்றுக்கொள்ள ஆரம்பமானது.

  இங்கே நடப்பதைப் பாருங்கள்! கீழ்மட்டத்தில் அவன் ஆயிரம் ரூபாய் வாங்கும் பொது பிடிபட்டான், இவன் லட்சம் வாங்கும்போது பிடிபட்டான் என்று ஷோ காட்டும் வேலை நடக்கிறதே தவிர, தட்ட வேண்டிய இடம் எது என்பது தெரிந்தும் தட்டாமல் இருக்கும் அவலம்!

  மாற்றம் வரும்! ஒரேயடியாக நம்பிக்கை இழந்து விட வேண்டியதுமில்லை!

  ReplyDelete
 3. //பொதுத்துறையைப் பலப்படுத்த, பொறுப்பை உணர்ந்த ஊழியர்கள், திறமைக்கு முதலிடம் கொடுக்கும் நிர்வாக மேலாண்மை, ஊழலற்ற வெளிப்படையான செயல்பாடு மூன்றும் இணைந்தால் தான் முடியும்.
  //

  இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் நிலமைகள் ஒரே நாளில் சீர் அடைவதோ கெடுவதோ கிடையாது. புரட்சி, மாற்றம் எந்த சொல்லைக் கொண்டு பார்த்தாலும் ஒரு 'இசம்' மக்கள் இடையே பரவ அந்த மக்கள் இன்னொரு 'இசத்தால்' பாதிக்கப்பட்டு இருப்பதும் காரணம். காலப் போக்கில் புதிய இசம் முழுமையாக வெற்றி அடையும் முன்னே அதன் தேவைகள் பொய்த்தும், திரிந்தும் போகும். அதன் பிறகு புதிய இசம். அது கம்யூனிசமாக இருந்தாலும் சரி முதலாளித்துவமாக இருந்தாலும் சரி. மக்கள் நெருக்கம், பொருளாதாரத் தேவை இவற்றை சார்ந்தே மக்கள் இடையே சில கொள்கைகள் பிரபலமடைகின்றன, பின்னர் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடுகின்றன.

  இது தான் சரி என்று சமூக வாழ்வில், உலகவாழ்வில் எதையுமே அறுதி இட்டு வழியுறுத்திவிட முடியாது என்பதையே இசங்களின் தோல்விகள் சொல்லும் பாடம்.

  நாம் நினைக்கும் அளவுக்கு ஒரு கையை இழந்தவர்கள் துன்பப்படமாட்டார்கள், நாளடைவில் ஒரு கையை மிகத் திறமையாகப் பயன்படுத்தி தனது குறையை முற்றிலும் நினைக்காவிட்டாலும் ஓரளவுக்கு ஈடு கொடுத்து தான் வாழ்வார்கள். இது கண்களை இழந்தவர்களுக்கும் பொருந்தும். நான் சொல்ல வந்தது மக்கள் எந்த சூழலுக்கும் வாழப் பழகிக் கொள்வார்கள், அவர்கள் வெறுக்கும் ஒன்றை அழிக்க வரும் வேறொரு கொள்கையை ஆதரிப்பார்கள். மன்னர் ஆட்சி முறையை மக்கள் ஆட்சி என்ற பெயரில் ஒழித்தோம், ஆனால் இன்று வாரிசு அரசியல் அறிவிக்கப்படாத மன்னர் ஆட்சியாக பரிணாமம் பெற்று வளர்ந்துவிட்டதே. ஆக ஒன்றை விலக்குதலின் மையம் வேறொரு மையத்தை சார்ந்திருந்தாலும் எதுவுமே பிழைப்பு வாதம் என்னும் மக்களின் வாழ்வியலால் நிலையற்றதாக தொடரும்.

  நீளமான பின்னூட்டம் பொருத்தருள்க !
  :)

  ReplyDelete
 4. வாருங்கள் கோவி.கண்ணன்!

  நீளமான பின்னூட்டங்கள், பிரச்சினை அல்ல. சொல்ல வந்த கருத்து முழுமையாகச் சொல்லப்பட்டதா என்பதையே முக்கியமாகக் கருதுகிறேன்.

  முக்கியமானதும், மையமானதுமான ஒரு விஷயத்தைத் தொட்டுச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த பிரபஞ்சத்தைப்பற்றி சொல்லும்போது, அது விரிவடைந்துகொண்டே, மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதுபோலத் தான் சமுதாய விஞ்ஞானமும்! மாறிக்கொண்டே இருப்பது. அப்படி மாற்றிக்கொண்டே இருப்பது தான் சமுதாய வளர்ச்சியின், பரிணாமத்தின் அடிப்படை இயல்பும் கூட!

  ஓலைக் குடிசையே போதும் என்று இருந்திருந்தால், அங்கே வளர்ச்சி இல்லை. மாறாக, வளர்ச்சி இல்லாத இடம் அழிந்தும் போகும். அதே மாதிரி, இங்கே நாம் பார்க்கிற ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு முயற்சியும், எல்லையற்ற சாத்தியக் கூறுகளை நமக்கு அளிக்கிறது. எப்படி நமக்கு முன்னாள் இருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்பதே நமக்கு முன்னால் இருக்கும் கேள்வி.

  உள்ளூர் அக்கப்போர்களைப் பார்த்துப் படித்துச் சலித்து விட்ட நிலையில், பொருளாதாரத்தைத் தொட்டுப் பேசலாமே என்று ஒரு சின்ன ஆரம்பம்! அவ்வளவுதான்!

  ReplyDelete
 5. சுந்தர் சொல்றா மாதிரி இந்த விசயத்தை வச்சு ஷங்கரை படம் எடுக்க சொன்னா மக்களுக்கு மூணு மணி நேரம் நல்லா பொழுது போகும்!

  ReplyDelete
 6. சங்கர் எடுப்பதை விட, தெலுங்கு சினிமா எதை வேண்டுமானாலும் பாருங்கள்! இதை விட அதிகப் பந்தாடல் ரசிக்கிற மாதிரி இருக்கும்! இங்கே போத்திக் கொண்டு நடிக்கிற நடிகைகள் அங்கே கொஞ்சம் காத்தாடவும் இருப்பார்கள்!

  நிழலை ரசிப்போம், கைதட்டுவோம், போணியாகாத ஹீரோ அரசியலுக்கு வரும்போது அவனையும் தூக்கிச் சுமப்போம், அதுவரை, நிஜத்தில் என்ன நடந்தால் என்ன என்கிறீர்களா?

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!