மின்தமிழாக வரும் மோகனத் தமிழ்!


மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் அவர்கள் பொங்கிவரும் காவேரியாக, எது பக்தி என்ற இழையில் எழுதிக் கொண்டிருக்கிறார். அங்கே நெல்லுக்குப்பாயும், காவிரி, இங்கே இந்தப் புல்லுக்கும் கொஞ்சம் பொசிகிற மாதிரி, ஏற்கெனெவே இரண்டு பகுதிகளை, இங்கே மற்றும் இங்கே பார்த்திருக்கிறோம்.

நரசி மேத்தா என்ற ஆன்மீகக் கவிஞனின் வைஷ்ணவன் என்பவன் எவன் என்ற அடையாளங்களைக் குறிப்பதாக, "வைஷ்ணவ ஜனதோ" பாடலைக் கேட்டிருக்கிறோம்.

வைணவம், என்பது ஒரு மதம் என்ற எல்லையோடு குறுகி நின்றதில்லை. அது ஒரு வாழும் வழியாகவும், உன்னத நெறியாகவும் பல மகான்களால் வாழ்ந்து காட்டப் பட்டிருக்கிறது. இந்தியத் தத்துவ மரபில், விடுதலை-மோட்சம் என்பது அடிக்கடி கையாளப் படுகிற ஒரு வார்த்தை. கால ஓட்டத்தில், எப்படி எப்படியெல்லாமோ அர்த்தம் கொள்ளப் பட்ட வார்த்தை!

அவரவர் புரிந்துகொண்ட எல்லைக்குள் இந்த வார்த்தையைக் குறுக்கிக் கொண்டே போக, மோக்ஷம் என்ற வார்த்தை அதன் உண்மையான பொருளில் அறியப்படாமலேயே போனது. திருவருட்ப்ரகாச வள்ளலார், அருட்பெருஞ்சோதி அகவலில் சொல்வது இது:

முத்தி என்பது நிலைமுன்னுறு சாதனம்
சித்தி என்பது நிலைசேர்ந்த அனுபவம் 
 
முக்தி, விடுதலை, மோக்ஷம் என்பது பொதுவாகவே, இந்தத் தொல்லைதரும் பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு, ஹாய்யாக இருப்பதைச் சுட்டுவது. செயல் ஒன்றுமில்லாத, பலன் எதையும் வேண்டாத, செயல்களும் அதைத் தொடரும் விளைவுகளும் கட்டுப்படுத்தாத ஒரு விதமான சுதந்திர நிலை! அப்படி ஒரு சுதந்திரமான நிலை, எப்போதோ, எங்கேயோ நிகழ்வது இல்லை, இங்கேயே இப்போதே நிகழக்கூடியதுதான்!

எப்படி என்பதைக் கொஞ்சம் இந்த மோகனத்தமிழைப் படித்துவிட்டு, யோசித்துத் தான் பாருங்களேன்!

மின்தமிழில் தொடர்ந்து வரும் மோகனத்தமிழ்! --எது பக்தி -3 

கடந்த நாலு நாட்களாக பிஸியில் ஆபரேடிங் சிஸ்டம் அவுட். பூட் ஆகவில்லை. போகட்டும் தானாக எப்பொழுது கூடி அமைகிறதோ அப்பொழுது மீண்டும் வந்து எழுதலாம் என்று இருந்துவிட்டேன். என்ன மிஞ்சிப்போனால் தேவ் வருத்தப்பட்டிருப்பார். கண்ணன் ஒழிந்தானய்யா ஒருவழியாக என்று மற்ற இழைகளில் கவனம் செலுத்தியிருப்பார்.

இதுவும் ஒருவித மரணம்தானோ? புனரபி ஜனனம் புனரபி மரணம் என்றதின் ஒருவேர் இந்த வழியாகவும் ஓடுகிறதோ?

ஆபரேடிங் சிஸ்டம் அவுட்டு என்றால் உள்ளே நுழைய முடியாது. வெளியிலிருந்து நான் என்ன கத்தினாலும் உங்கள் காதில் விழப்போவதில்லை. இங்கு உங்களோடு தொடர்பு கொள்ளும் அமைப்பில், வடிவில், முறையில் தொடர்பு கொண்டால்தான் மகிழ்வோர் மகிழவும், மற்றோர் காணவும் முடிகிறது.

மின்தமிழைப் பொறுத்த வரையில் இப்பொழுதுதான் நான் " உளனானேன்". ஆனால் முன்னாலும் நான் இருந்தேன். 'அர்ஜுனா! நீயும் நானும் அக்காலத்தும் இருந்தோம். இவர்களும் இருந்தார்கள். இனியும் எக்காலத்தும் நீயும் நானும் இவர்களும் இல்லாமல் இருக்கப்போவதில்லை.' 'இந்த ஜீவன் கர்மங்கள் தீர்ந்த இந்த உடலை பழஞ்சட்டையைக் கழட்டி எறிவதுபோல் எறிந்துவிட்டு, புத்துடல்
தேடி புறப்படும் மரணத்தில்.' 'வருவதற்கோ போவதற்கோ கலங்கான்
பண்டிதன்'. 
கூட்டிக்கழித்துப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் வருகிறது. ஜீவனுக்கான ஆபரேடிங் சிஸ்டம்தான் கரண களேபரம் என்னும் சதுர்விம்சதி தத்துவங்களால் ஆன உலகு - உடல் - உயிர் போலும். கர்மமும், காலமும் வினை மடுப்பானும், மடுக்கும் வாயும் போலும். சரி இதில் ஆத்மா என்ன செய்கிறது?

சாட்சி என்கிறது வேதாந்தம்!

"பொய்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் இந்நின்ற
நீர்மை இனி யாமுறாமை" வேண்டுகிறது குருகூர் நம்பியின் குறுகாத
பக்தி!

சரி வேண்டுவது யார்? அவர் இருபத்தி நான்கு தத்துவக் கட்டில்
சேர்ந்தவரா? அல்லது தனியா? இல்லை கணக்குப் பாடத்தில் போல
அப்படி என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா? கடைசியில் கழித்துக்கட்ட.!

பூர்வாசாரியர்களிடத்தில் மிக ஜாக்கிரதையாக கேள்வி கேட்க வேண்டும்.

ஒருவர், பாவம் என்னைப் போன்றவர். மோட்சம் பெற வழி என்ன என்று கேட்டுவிட்டார்.

"மோட்சம் என்றால் என்ன? "

"இந்த ஆத்மா கடைத்தேற"

"எதிலிருந்து இது கடைத்தேற வேண்டும்?"

"என்னது. இந்த ஸம்ஸாரத்தில், உடல் தளையில் மாட்டிக்கொண்டு பாடாய்ப் படுகிறது".

"அவரவர் பொருளுக்கு அவரவர் கவலைப் படும் பொழுது நீ ஏன் நடுவில்
கிடந்து அல்லாடுகிறாய்?"

"'என்னது?! மோட்சம் எனக்குன்னா?"

"இந்த ஆத்மா பகவத் அதீனம். எனவே அதில் உனக்கு அதிகாரம் இல்லை.
பேசாமல் இரு. இந்த உடல் கர்ம அதீனம். அதிலும் உனக்கு அதிகாரம்
இல்லை. இதில் நடுவில் கிடந்து அல்லாடுகிறாயே நீ யார்?"

"என்னது?! நான்... நான்.... நான்!"

"இதைத்தான் ஊழிதோறூழி சொல்லிக் கொண்டே
இருக்கிறாய். என்ன திக்குவாயோ! யாரென்று சொல்லி முடித்தபாடில்லை!".

"யானாய் என்னில் நிறைந்தானை" என்கிறது ஆழ்வாரின் பக்திக்குள் நிறைந்த ஞானம்!. "அஹம் பிரம்மாஸ்மி” என்கிறது உபநிஷத ஞானத்திற்குள் நிரம்பி வெளிப்பொசியும் பக்தி!.

இப்படி ஆளுக்கு ஆள் அஞ்ஞானத்தையும், அரைகுறை ஞானத்தையும் விரட்டினால் அது எங்கே போகும், பாவம்!

எனக்குள் வந்து ஒண்டிக்கொண்டு 'தயவு செய்து என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே' என்று கெஞ்சுகிறது!!

இந்தப்பகுதியை படித்தபோது, நெஞ்சு விம்ம, சில அற்புதமான சிந்தனைகள் மனதில் விரிந்தன. வைணவம் வளர்த்த தமிழும், வைணவம் வளர்த்த அறநெறியும் மனக் கண் முன் விரிந்து மெய்ப்பொருள் காணும் வகையெது, வழியெது என்பதைச் சொன்னதையும் கண்டேன்.

நான் எனது என்கிற தன்மையை மாற்றிக் கொள்வதற்காக, நான் அந்தப் பரம்பொருளுக்கே அடிமை, தொண்டு செய்யப் பிறந்தவன் என்கிற பாவம், அந்தப் பரம்பொருளோ, அடியார்களுக்கு அடிமை, அதனால் அவனுக்குத் தொண்டு செய்வதென்பது அடியார்களோடு கூடியிருந்து அவர்களுக்குத் தொண்டு செய்வதே பாகவத தர்மம், அதுவே பரமனுக்கும் உகந்த வழி என்று மனித நேயமும், ஆன்ம ஒருமைப் பாடும் ஒருங்கே கூடிய வாழ்வுநெறியாக, பக்தி நெறியாக வைணவம் தலை நிமிர்ந்து நின்றது!

எல்லாமே மாயை என்று நிராகரிப்பதற்குப் பதிலாக, எல்லாவற்றையுமே ஏற்றுக் கொண்டு, எல்லாமே அவன் செயல், அவனே எல்லாமுமாகி எம்முள் நிறைந்தான் என்று கொண்டாடுகிறது.
இன்றைக்கு ஆளுக்கு ஆள் என்னவோ சீர்திருத்தம், சீர்திருத்தம், சமத்துவம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசிக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் பேச்சில் மட்டும் இருக்கும் சீர்திருத்தங்களை, சமத்துவத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஒரு சந்நியாசி, சர்வசாதாரணமாகச் சாதித்து விட்டார்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று மேடையில் முழங்கிவிட்டுத் தன்வீட்டுப் பிள்ளைகளைத் தமிழ் வாடைகூட அடிக்காத கான்வெண்டாகப் பார்த்துப் பார்த்துச் சேர்க்கிறவர்களை நமக்குத் தெரியும்!

ஐயோ, வடமொழிக் கலப்பா? வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது என்று வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்காமல், உடையவர் என்றும் எம்பெருமானார் என்றும் கொண்டாடப்படும் அந்த சந்நியாசி துவங்கி வைத்த ஏற்பாட்டின் படி, இன்றைக்கும் கூட பெருமாள் வீதி உலா வரும் போது தமிழ் அங்கே முன்னால் வரும்!

ஆழ்வார்கள் அருளிச் செய்த தமிழ் வேதத்தை ஓதியபடி முன்னே வர, அதைத் தொடர்ந்து பெருமாள் வர. பெருமாளுக்குப் பின்னால் தான் வடமொழி வேதம் ஓதுகிற அடியவர்களும் வருவார்கள்!

அதுதான் மோகனத் தமிழ்! மோகனரங்கன் பேசும், கேட்கும் தமிழ்!!

3 comments:

  1. @வால்ஸ்,

    இது ரைட்டு சரி! அப்ப எது ரைட்டு இல்ல?

    இப்பல்லாம், பதிவுகளில் உங்க பின்னூட்டம், வெறும் ரைட்டு, அல்லது நடக்கட்டும் நடக்கட்டும் என்ற அளவோடு நின்று விடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    ஆணி அதிகமாகி விட்டதா அல்லது வால்தனம் குறைந்து விட்டதா என்று சந்தேகம் ....:-))

    ReplyDelete
  2. நீங்கள் இந்த இடுகையைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ஐயா. படிக்கவில்லை எனில் இதோ சுட்டி.

    http://koodal1.blogspot.com/2006/01/134.html

    நானும் தொடர்ந்து திரு. மோகனரங்கனின் தொடரைப் படித்து வருகிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!