சின்ன வயது. பத்து வயது தான். எல்லாவற்றையும் பார்வையிலேயே ஏன், எதற்கு என்று கேட்கிற பள்ளிச் சிறு வயது. ஒவ்வொரு நாளும், பள்ளிக்குச் செல்வதற்கு, மதுரை சுப்ரமணியபுரம் பாலத்தைக் கடந்து தான் போகவேண்டும், திரும்ப வேண்டும். பாலம் என்றால் இப்போது இருக்கிற மேம்பாலம் இல்லை. ரயில் பாதைக்கு மேல் இருந்த சிறுபாலம். ஒட்டியே கிருதமால் நதி, சாக்கடைத் தண்ணீர் கலந்து ஓடும். மதுரையை அறியாதவர்களுக்காக, கிருதமால் என்ற முனிவர் பெருமாளைக் குறித்துத் தவம் இருந்த போது, கிருதமாலை என்று நதியாக உருவெடுத்து, கூடல் அழகர் கோவிலை ஒட்டி, ஓடியதாகக் கதை சொல்வார்கள். ஆறிரண்டும் காவேரி, அதன் நடுவே ஸ்ரீ ரங்கம் என்று அங்கே பாடுவது போல, இங்கேயும் இரண்டாற்றுக்கு நடுவே இருந்த பெருமாள் என்று கூடல் அழகரைச் சொல்வதுண்டு. வைகைக்கும் கிருதமாலைக்கும் நடுவே இருந்த பெருமாளாம்!
காலப்போக்கில், கிருதமாலை நதியாக ஓடவில்லை. கிருதமால் நதி என்பது சாக்கடை நீர் கலந்து ஓடுகிற சிற்றாறாகவே ஆகிப் போனது. ஒரு மினி கூவம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்!
தெருக்கூட்டி, சுத்தம் செய்யும் தோட்டிகள், தங்களுடைய வேலை முடிந்ததும், கிருதமால் நதியில், கை, கால் கழுவி சுத்தம் செய்து கொள்வதை ஆச்சரியத்தோடு அந்தப்பள்ளிச் சிறுவன் பார்த்துக் கொண்டே வருவான். சமயங்களில், ஓடுகிற சாக்கடை நீரையே இரண்டு கைகளிலும் அள்ளிக் குடிப்பதைப் பார்க்கும் போது மூச்சே நின்று போகும். உவ்வே..எப்படி இந்த சாக்கடைத் தண்ணீரைக் குடிக்கிறார்கள்?
கேள்வி? யாரிடம் போய்க் கேட்பது?யார் பதில் சொல்வார்கள்?
ஒருநாள், இப்படிச் சாக்கடைத் தண்ணீரை அள்ளிக் குடித்துக் கொண்டிருப்பதை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனை, அந்த வயதான தோட்டி, கூப்பிட்டார்.
போகலாமா......வேண்டாமா, கொஞ்சம் தயக்கம். சிறுவன் கொஞ்சம் பக்கத்தில் போனான்.
"என்ன தம்பி பாக்கறே ? எப்படிச் சாக்கடைத் தண்ணியைக் குடிக்கறான்னா? இங்க பாரு, ஓடற தண்ணி, கொஞ்சம் கூட அழுக்கு இல்லாம, வாசம் இல்லாம, சுத்தமா இருக்குன்னு!நீ வேணா ரெண்டு மடக்குக் குடிச்சுப் பாக்கறியா?"
சிறுவன் கொஞ்சம் தயக்கத்தோடு பின்வாங்குவதைப் பார்த்த அந்தத் தோட்டி சொன்னார்.
"ஓடற தண்ணிஎப்பவுமே சுத்தமாத் தான் இருக்கும், அழுக்கு வாடை எல்லாம் ஓடற ஓட்டத்துல காணாமப் போகும்."
நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னாள் நடந்தது இது. அந்தச் சிறுவன் நான் தான் என்று சொல்ல வேண்டியது இல்லை. ஒரு வாழ்க்கை உண்மையைச் சொல்லிக் கொடுத்த அந்தத் தோட்டி யார், எவர் என்பது தெரியாது, அவசியமும் இல்லை. பின்னாட்களில் செயல்பட வேகப் படுத்திய போது, வேகமாகச் செயல்பட்டபோது, இவனுக்கு அனுபவ சத்தியமாகக் கிடைத்த உபதேசம் இது:
"துணிந்து செயல்பட ஆரம்பி, தவறு வரும் என்று பயந்து, தயங்கி, அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று வெட்டியாக யோசனை செய்து கொண்டே இருப்பதை விட, தவறு வந்தாலும் அதைப் போகிற போக்கிலேயே, செயல்படுகிற வேகத்திலேயே சரி செய்துகொள்ளலாம்!"
ஓரஞ்சு அஞ்சு ஈரஞ்சு பத்துன்னு எண்ணவும், எழுதவும் படிக்கக் கற்றுக் கொடுக்கிறவர்களும் ஆசிரியர்கள் தான். வாழ்க்கையின் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறவர்களும் ஆசிரியர்கள் தான். நீங்கள் எந்த ஆசிரியரைக் கொண்டாடுவீர்களோ, அது எனக்குத் தெரியாது, நான் ஆசிரியராகக் கொண்டாடுவது, வாழ்க்கையை நேசிக்கவும், துணிவோடு வாழ்ந்து காட்டவும் சொல்லிக் கொடுப்பவர்களைத் தான்!
குரு என்ற வார்த்தைக்கு, அறியாமையாகிற இருட்டைப் போக்குகிறவன் என்று தான், சாத்திரம் சொல்கிறது. அறியாமையை போக்க வல்லவன் எவனோ அவனே வணங்கத் தக்கவன், அவனே ஆசிரியன்!
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று படிப்புச் சொல்லிக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் இல்லையா என்று கேட்டால், ஆசிரியராக வேலை செய்கிற அத்தனை பேருமே ஆசிரியர் என்று வணங்கப் படும் தகுதி உள்ளவர்கள் இல்லை என்று ஆணித்தரமாகவே சொல்லுவேன்.
அந்தநாட்களில் குருகுல வாசம் என்று, மாணவர்கள், குருவுடைய இடத்திலேயே தங்கிக் கற்ற நாட்களில், கற்றதை முறையாகப் பெற்றார்களா என்பதை சோதித்துப் பார்க்கிற முறை ஒன்று இருந்தது. அன்றைய கல்வி என்பது, வெறும் ஏட்டுப்படிப்பு, மனப்பாடம் அல்லது பிட் அடித்து அப்படியே வாந்தி எடுப்பது என்ற பின் நவீனத்துவம் எல்லாம் இல்லாத, குழப்பம் இல்லாத கல்வி முறை. கற்றது, வாழ்க்கைக்குப் பயன்படுகிறதா என்பதை, ஒவ்வொரு கட்டத்திலும் பிரயோகிக்கவும், உன்னதமான ஒழுக்கத்தோடு வாழ்வதே கல்வியின் பயன் என்றும் இருந்த நாட்கள். இதைப்பற்றி இங்கே எழுதியிருப்பதைப் படிக்க
வாழ்க்கைக்கு உதவாத கல்வியை, நோட்ஸ் எழுதிப் போட்டு விட்டு, நீ என்ன ஆனாலும் எனக்கு ஒரு பொறுப்பும் இல்லை என்று போய்க்கொண்டே இருக்கும் ஆசிரியர்கள் மத்தியில், அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில விதி விலக்குகள், வைகை பெருகி வருமோ-குறை தீருமோ என்று ஏங்கிக் கிடப்பவர்கள் சிலரும், இருக்கத் தான் செய்கிறார்கள்.
“அறிவுச் சந்தையில் விலை போய்விடும் அக்கிரமங்கள், அன்றாட நிகழ்வுகளாகப் பல பல்கலைக் கழகங்களிலும், தன்னட்சிக் கல்லூரிகளிலும் நடந்தேறி வருவதைக் காணும் நடுநிலையாளர்கள் அறச் சீற்றம் கொண்டு குமுறாமல் இருக்க முடியாது.
"படிச்சவன் சூதும், வாதும் பண்ணினல் போவான், போவான் ஐயோவென்று போவான்'' என்று தன் புதிய கோணங்கி'யில் அன்றே சுட்டிக் காட்டினன் பாரதி! அவனது வழித் தோன்றலாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் இன்றைய நவீன முனைவர்களின் (Ph.D. பட்டம் பெற்றவர்கள்) சூதுவாதுகள் சொல்லில் அடங்காதவை. “
இப்படி ஆதங்கப் படுபவரும் ஒரு ஆசிரியர் தான், கல்வித் துறையில் பெருகி வரும் சீர்கேட்டைத் தாங்க முடியாமல் மனம் வெதும்பி எழுதிய வார்த்தைகள். ஆசிரியர் என்று பணி செய்த ஒரு காரணத்தாலேயே புனிதராகி விட்டதாகக் கருதிக் கொள்ளாமல், "நான் ஆசிரியன்! மண்டியிடு! இது புனிதப் பணி" என்று தங்களுக்குத் தாங்களே புனிதர் பட்டம் வழங்கிக் கொள்ளாமல், சுயசிந்தனையும் சுய விமரிசனமும் மேற்கொள்ளும் மனவலிமையும் பெற்ற ஆசிரியர் ஒருவரின் அறச் சீற்றம் இது.
சம்பளப் பட்டியலைக் கருவூலத்தில் கொடுத்துக் காசைவாங்கி, ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் இடத்திலேயே, ஏலச்சீட்டு, வட்டி வசூல் நடத்திவிட்டு, மப்போடு திரியும் ஆசியர்களையும் பார்த்தாயிற்று. கல்விக்கூடங்கள் தான் வியாபாரமாகிவிட்டது என்று வருத்தப் படுபவரா நீங்கள்? நிறைய ஆசிரியர்கள் ட்யூஷன் வியாபாரம் ஆரம்பித்துக் கல்லாக் கட்டுவது, வாத்தித் தொழிலை ஒரு சைடு பிசினசாகச் செய்கிறவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?
மறைந்த திரு. கா.காளிமுத்து, ஒரு அரசியல் வாதியைப் பார்த்துச் சொன்ன இந்த வார்த்தை மிகப் பிரபலம், இந்த நேரம் பார்த்து நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
"சிலரைப் பார்த்தால் கும்பிடத் தோன்றும்! சிலரைப் பார்த்துக் கூப்பிடத் தோன்றும்!"
இதெல்லாம் இப்பொழுது எதற்கு?
நாளை ஆசிரியர் தினம்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை இந்திய அரசு, ஆசிரியர் தினமாக ஒரு அர்த்தமில்லாத சாங்கியமாகக் கொண்டாடி வரும் தினம் செப்டெம்பர் ஐந்தாம் தேதி! தமிழ்நாடு அரசும் தன் பங்கு சாங்கியமாகக் கொஞ்சம் பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்குகிற தினம் அவ்வளவு தானே, இதற்கு ஏன் 'வோல்கா முதல் கங்கை வரை' மாதிரி, கிருதமால் நதியில் ஆரம்பித்து, நல்லாசிரியர் விருது வரை பேச வேண்டும் என்கிறீர்களா?
இந்தப் புதிரா--புனிதமா என்ற கேள்விக்கு நீங்கள் தான் விடை தேடியாக வேண்டும்!
தத்தாத்ரேயனிடம் உன்னுடைய குரு யார் என்று கேட்ட போது, எனக்கு இருபத்துநான்கு குருமார்கள், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையைப் போதித்தார்கள் எனப் பதில் வந்ததாம். வாழ்க்கையை நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொடுப்பவனே குரு! ஆசிரியன்! வெறுமே நான் வாத்தியார் வேலையில் இருக்கிறேன், சம்பளம் வாங்குகிறேன், எனக்குப் புனிதர் கும்பிடு போடு என்றால் வேலைக்கு ஆகாது!
கற்றுக்கொள்வதும் கற்பித்தலின் ஒரு பகுதியே! ஈரல் முதல் எல்லாம் சீரழிந்து கிடக்கும் கல்வித்துறையில் மாற்றங்களைக் குறித்த சிந்தனையும், விவாதங்களும், மாற்றத்திற்கான முயற்சியும் ஆசிரியர்களிடமிருந்து தான் வர வேண்டும்!
சுய சிந்தனையோடு மாற்றத்திற்கான விதையாகவும் இருக்கும் ஆசிரியர்களை வணங்குகிறேன்! ஆசிரியர் தினமாக, இந்த ஒருநாள் மட்டும் அல்ல, உங்களிடமிருந்து பெற்ற உந்து விசையோடு வாழ்நாள் முழுவதுமே, ஆசிரியரைக் கொண்டாடும் நாளாக மாற வாழ்த்துக்கள்!
அறிவித்த எழுத்து எங்கள் வாழ்க்கைக்கும் உதவுகிறதா எனப்பார்த்து எழுத்தறிவித்தவன் எவனோ, அவனே நல்லாசிரியன்! நாங்கள் வணங்கும் ஆசிரியன்!
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
ReplyDeleteதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
Good.
ReplyDeleteகூடலூரில் இருந்து டிஷ்நெட் சேவை ஐ பி எண் 58.68.94.183 வழியாகத் தொடர்ந்து,உலவுடாட்காம் திரட்டியில் இணைத்துக் கொள்ளச் சொல்லும் நண்பருக்கு வணக்கம்.
ReplyDeleteமூன்று சிறிதுமல்லாத, பெரிதுமல்லாத திரட்டிகளில் இந்தப் பதிவு திரட்டப் படுகிறது. ஒன்றே ஒன்றில் இருந்து மட்டும் தான், வாசகர்கள் தேடி வருகிறார்கள். இப்படி இணைத்திருப்பதும் கூட திரட்டிகளின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதற்காக மட்டுமே.தேவையான விவரங்கள் இவைகளில் இருந்தே கிடைத்து விடுவதால், உங்களுடைய அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாததற்காக வருந்துகிறேன்.
தமிழ் வலைப் பதிவுகளைத் திரட்டுவது மட்டும் தான் உங்களது நோக்கம் என்றால், நீங்களே திரட்டி கொள்ளலாமே!பிற திரட்டிகளில் கொஞ்சம் வாக்கு வாங்கும் பதிவுகளாகப் பார்த்து பார்த்து இணைத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்கிறீர்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. ஏன் என்று உங்களை நான் கேட்கப் போவது இல்லை.
புதிதாக எந்த ஒரு திரட்டியிலும், இணைத்து கொள்ள எனக்கு ஆர்வமில்லை. படிக்க வருகிறவர்கள் ஒன்றிரண்டு பேரே ஆனாலும், அவர்கள் வழியாக புது நண்பர்கள், வாசகர்கள் கிடைத்தால் போதும்! இல்லை என்றாலும், எனக்கு வருத்தமில்லை!
//நான் ஆசிரியராகக் கொண்டாடுவது, வாழ்க்கையை நேசிக்கவும், துணிவோடு வாழ்ந்து காட்டவும் சொல்லிக் கொடுப்பவர்களைத் தான்! /
ReplyDeleteநானும் அப்படித்தான் நினைக்கிறேன்!
செய்கிறேன்!
நல்லதொரு கட்டுரை.
ReplyDeleteமன்னிக்க வேண்டும் ஐயா.
வாழ்க்கையில் கற்றுக்கொடுப்பவர்கள் எல்லாம் ஆசிரியர்கள் ஆகிவிடமுடியாது. பள்ளியிலும், கல்லூரிகளிலும் என வேலைப் பார்ப்பவர்களே ஆசிரியர்கள். ஒன்றைச் சொல்லித்தர வேண்டுமெனச் சொல்லித் தருபவர்கள். பாடத்திட்டத்தைச் சொல்லித் தருவதோடு வாழ்க்கைத் தரத்தையும் சொல்லித் தரும் ஆசிரியர்கள் உண்டு.
நீங்கள் குறிப்பிட்டதுபோல சிலரால் சில விசயங்கள் சொல்லப்படும், அதிலிருந்து அந்த விசயங்களை நாம் கற்றுக்கொள்வோம். அங்கே அவர் நமக்கு ஒரு ஆசிரியராகத் தெரியலாம், ஆனால் அவர் தொழில்ரீதியாக ஆசிரியர் இல்லை. குருகுலத்தில் இருந்து சொல்லித் தந்தவர்களே குருமார் ஆனார்கள்.
டியூசன் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள், மாணவர்கள் நிர்பந்தப்படுத்தப்பட்டு டியூசன் எடுக்கப்பட்டால் பிரச்சினை என கருதலாம். மாணவர்களே விருப்பப்பட்டு டியூசன் எடுத்துக்கொள்ள ஆசிரியரை நிர்பந்தப்படுத்தினால் எப்படித் தவறாகும்?
கல்வி சொல்லித் தருவதற்குச் சம்பளமும் தரப்படுகிறது, ஆசிரியர் பணி என்பது ஒரு தொழில் தான். இதில் மட்டுமே நியாயமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம்?
ஆசிரியர்கள் எல்லாம் சாதாரண மனிதர்களே, விருப்பும், வெறுப்பும் உடையவர்களே. ஆசிரியர்கள் என்றாலே புனிதத்துடன் இருக்க வேண்டும் என எண்ணும் நாம், மனிதர்கள் என்றாலே புனிதத்துடன் இருக்கவேண்டும் என ஏன் எவருமே எதிர்பார்ப்பதில்லை? இன்றைய கல்விமுறை விவாதத்துக்குரியதுதான், மறுக்கவில்லை. கல்வி கற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கட்டும் மக்கள், பார்க்கலாம்.
ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஆசிரியர்கள் மாற்றத்தைக் கொண்டு வர முன்வரட்டும்! பாராட்டுகிறேன்.
ஒருவர் நம்மைக் காப்பாற்றினார் என்பதற்காக காவல் அதிகாரி அவர் ஆகிவிடமுடியாது, ஏன் கடவுள் என அவரை நாம் கொண்டாடவும் கூடாது என்பதே எனது பணிவான கருத்து. தவறிழைத்திருப்பின் மன்னிக்கவும்.
வணக்கம் திரு.ராதாகிருஷ்ணன்,
ReplyDeleteஉங்கள் கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள்.
இந்தப் பதிவு தொடங்கி, தொடர்ந்து மூன்று இடுகைகளில், பதில் சொல்லத் தெரியலேனா கிருஷ்ணா ராமான்னு எங்களை மாதிரி ஓரங்கட்டி ஒக்காருன்னு ஒரு வாத்தியார், வேறொருவர் பதிவில் எனக்குச் சொன்னதையும், அங்கேயே இன்னொரு வாத்தியார் அவருக்குத் தொடுப்பாக, ஆசிரியர் பணி எவ்வளவு புனிதமானது தெரியுமான்னு கீட்டதையும் ஒரு ஆரம்பப் புள்ளியா மட்டுமே வச்சு, எழுத ஆரம்பித்த இடுகைகள் இவை.
கல்வித்துறையில் பெருகிவரும் சீரழிவைக் கண்டு மனம் நொந்து, தன்னுடைய வேதனையைப் பகிர்ந்து கொண்ட இன்னொரு ஆசிரியருடைய தரப்பையும் எடுத்துக் கொண்டு, [அங்கேயே அவருடைய இரண்டு பதிவுகளுக்கு ஹைபர்லிங்க் இருந்ததே கவனிக்கவில்லையா]
/கற்றுக்கொள்வதும் கற்பித்தலின் ஒரு பகுதியே! ஈரல் முதல் எல்லாம் சீரழிந்து கிடக்கும் கல்வித்துறையில் மாற்றங்களைக் குறித்த சிந்தனையும், விவாதங்களும், மாற்றத்திற்கான முயற்சியும் ஆசிரியர்களிடமிருந்து தான் வர வேண்டும்!/
இப்படி முடிகிறது இந்த முதல் பகுதி! என்னை விமரிசனம் செய்ததற்குப் பதில் இல்லை இது. தவிர, இங்கே தமிழ்நாட்டில் கல்வித்தரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து உங்களுடைய புரிதல் என்ன என்பது தெரியாமல், உங்களுக்கு முழுமையான பதில் இங்கேயே என்னால் தர முடியவில்லை.
'பதில் சொல்லத் தெரியலைன்னா, கிருஷ்ணா ராமான்னு எங்களை மாதிரி வாயைப் பொத்தி ஒக்காரு'ன்னு சொல்றவங்க எல்லாம் வாத்தியாரா இருக்காங்களே, இவங்க கிட்ட பாடம் படிக்கும் புள்ளைங்க எப்படி இருக்கும்னு யோசனை வருமா வராதா?
"அறிவித்த எழுத்து எங்கள் வாழ்க்கைக்கும் உதவுகிறதா எனப்பார்த்து எழுத்தறிவித்தவன் எவனோ, அவனே நல்லாசிரியன்! நாங்கள் வணங்கும் ஆசிரியன்!"
இப்படி எழுதினதுல உறுதியாத் தான் இருக்கிறேன்!