Sunday, July 19, 2009

இன்னும், இன்னும்...!


ஒரு அழகிய கனவு கலைகிறது என்று என்னுடைய வருத்தங்களை, சில நாட்களுக்கு முன் பகிர்ந்து கொண்டிருந்தேனே, நினைவிருக்கிறதா? யாரோ, அதை யாகூவுக்குச் சொல்லியிருக்கிறார்கள் போல! இன்னும் கொஞ்ச நாள், வேறு ஒரு தளத்திற்கு மாற்றிக் கொள்வதற்கு, அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். நன்றி யாகூ!

யாஹூ!360 பக்கங்களில், எனது பழைய பதிவு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு சின்னக் கதைதான்! கதைகளில் தான், எத்தனை விஷயங்களை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது?! கதையை முதலில் பார்ப்போம், அப்புறம் அது என்ன சொல்ல வருகிறது என்பதை யோசிப்போம்.

குரு, சீடர்கள், காலிப்பாத்திரம்!


அந்தநாட்களில் குருகுல வாசம் என்று, மாணவர்கள், குருவுடைய இடத்திலேயே தங்கிக் கற்ற நாட்களில், கற்றதை முறையாகப் பெற்றார்களா என்பதை சோதித்துப் பார்க்கிற முறை ஒன்று இருந்தது. அன்றைய கல்வி என்பது, வெறும் ஏட்டுப்படிப்பு, மனப்பாடம் அல்லது பிட் அடித்து அப்படியே வாந்தி எடுப்பது என்ற பின் நவீனத்துவம் எல்லாம் இல்லாத, குழப்பம் இல்லாத கல்வி முறை. கற்றது, வாழ்க்கைக்குப் பயன்படுகிறதா என்பதை, ஒவ்வொரு கட்டத்திலும் பிரயோகிக்கவும், உன்னதமான ஒழுக்கத்தோடு வாழ்வதே கல்வியின் பயன் என்றும் இருந்த நாட்கள்.

அந்தப்படிக்கே, ஒரு குரு, தன்னிடம் கல்வி பெற வந்திருந்த மூன்று மாணாக்கர்களை, அவர்கள் புரிந்து கொண்டது எந்த அளவுக்கு இருக்கிறதென்பதைப் பரீட்சை செய்வதற்காக அழைத்தார். ஒவ்வொருவரிடமும், ஒரு குடத்தைக் கொடுத்தார். குடத்தில் இருக்கிற காற்றை, முழுதுமாக எடுத்து விட வேண்டும்-இது தான் அவர்களுக்கு வைத்த முதல் தேர்வு.

நானாக இருந்தால் "போடா ஜாட்டான்" என்று பரீட்சையை விட்டு ஓடி வந்திருப்பேனோ, என்னவோ!
[
நன்றி:டோண்டு ராகவன். அவர் இந்த வார்த்தையை, ஜெகசிற்பியன் என்ற சமீப காலத்திய எழுத்தாளர், 1960 களில் அவர் எழுதிய கதையில் இருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்]

ஆனால்,அந்தநாட்களில் அப்படியெல்லாம், முன்-பின் நவீனத்துவமாகச் சிந்திப்பது, ஆசிரியர்களுக்கோ, மாணவர்களுக்கோ கிடையாதாகையால், அந்த மூன்று மாணவர்களும் உண்மையாகவே, பூரண விசுவாசத்துடன், குரு சொன்ன வேலையைச் செய்ய முனைந்தார்கள்.

முதல் சீடன், பாத்திரத்தின் வாயிலிருந்து காற்றைக் கஷ்டப்பட்டு வெளியேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான். இரண்டாமவனோ, பாத்திரத்துக்குள், கல், மணல் இவற்றை நிரப்பி, காற்றை வெளியேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான். இந்த இருவருமே, தங்களுடைய முயற்சி பலனில்லாமல் போனதை, எப்படியோ காற்று கொஞ்சமாவது பாத்திரத்துக்குள் இருப்பதை உணர்ந்தார்கள்.

மூன்றாவது சீடன் என்ன செய்கிறான் என்பதை குருவும், முதல் இரண்டு சீடர்களும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தபோதே, அவன் குருவிடம் வந்து பணிவுடன் சொன்னான்: "நீங்கள் சொன்னபடி செய்துவிட்டேன்"

குரு கேட்டார்: "எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்?"

"
குருவே, பாத்திரம் வழிய வழிய நீரால் நிரப்பி விட்டேன். ஒரு குமிழியளவு கூடக் காற்று இல்லாதபடிக்குப் பாத்திரத்தை, நிரப்பி விட்டபடியால், நீங்கள் சொன்னபடியே, பாத்திரத்தில் இருந்த காற்று முழுதையும் வெளியேற்றி விட்டேன்."

சின்னக் கதை தான், இந்தக் கதை, இரண்டு உன்னதமான வாழ்வியல் அனுபவத்தையும், ஆன்மீக வெளிச்சத்தையும் அறியத் தருகிறது.

முதலாவதாக, இங்கே பிரபஞ்சத்தில், பரிணாமத்தில் வெற்றிடமாக எதுவுமே இருக்க முடியாது, ஏனென்றால், இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது, நிராகரிக்கிறது. அதனால் தான், ஒரு விஷயத்தை காலி செய்வது என்பது, இன்னொரு விஷயத்தை நிரப்புவதாகத் தான் இருக்கிறது. இயற்கையின் இந்த சூட்சுமத்தை அறிந்ததனால் தான், நம்முடைய முன்னோர்கள், "சேரிடம் அறிந்து சேர்" என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். இதையே கொச்சையாக, வழக்குத் தமிழில், பன்றியோடு சேர்ந்த கன்றும் எதையோ தின்னப் போகும் என்று தெரிந்தும் வைத்திருக்கிறோம்.

நடைமுறைக்கு வராத தெரிதல், என்ன செய்யும்? திரிந்து, உருமாறி, அர்த்தமில்லாத வெறும் சடங்காக மட்டுமே நிற்கும். நமக்குத் தெரியவில்லை, அல்லது பிடிவாதமாக நாம் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம் என்பதனாலேயே மூத்தோருடைய அனுபவங்கள், அவர்கள் சொல்லி வைத்தவை எல்லாம் 'மூட நம்பிக்கை' என்று ஒதுக்கி வைத்து விட முடியாது! மூடத்தனம் வந்ததெல்லாம் புரிந்து கொண்டதில் வந்த தவறுகளே!

நடைமுறை வாழ்க்கையில், பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதான, 'பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியாக' ஆகி விடாமல் இருப்பதற்கு, கொஞ்சம் சிரமப் பட்டுத் தான், வெளியே வர வேண்டியிருக்கிறது. இந்த முயற்சி கூட இல்லை என்றால், 'பகுத்தறிவு' என்ற சொல் எப்படி இன்றைக்கு, அதன் உண்மையான பொருளில் இல்லாமல், வேறு விதமான அசட்டுத்தனமாக இருக்கிறதோ, அது மாதிரி ஆகி விடும்! நடைமுறை வாழ்க்கையில், இப்படி ஒன்றை எதிர்ப்பது என்பது ஏன் என்று தெரியாமலேயே அதன் பின்னால் கூட்டமாக ஓடுவது, சேரிடம் அறியாமலேயே சேர்ந்து, அதிலேயே சிக்கிக் கொள்வதுதான். ஒரு சிக்கலில் இருந்து விடுபடுகிறேன் என்று இன்னொரு புதைகுழிக்குள் விழுந்து விடுவது மாதிரித்தான்.

அடுத்து, கற்றல் என்பது தொடர்ந்து நிகழ்வது, ஒரு தடவை குடத்தை நிரப்பியதும் முடிந்து போவதில்லை.நெருப்பு இன்னும் இன்னும் என்று கேட்பது போல, சாப்பிட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மறுபடியும் பசி எடுப்பது போல தொடர்ந்து கொண்டே இருப்பது. உயிர்மையின் ஒரு அடையாளமே, இந்த 'இன்னும், இன்னும்' தான்!

புதியது கற்க வேண்டுமானால், புதிய அனுபவத்திற்கும் வளர்ச்சிக்கும் தயாராக வேண்டுமானால்,ஏற்கெனெவே கற்றதைக் கழற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். Emptying the cup என்று ஜென் கதைகளில் சொல்வது இதுவே. ஏற்கெனெவே நிரம்பிய கோப்பையில், புதிதாக எதையும் நிரப்ப முடியாது, அதனால், கோப்பையை காலி செய், பிறகு நிரப்பு என்பது இது தான்.

குடத்தில் இருக்கும் பழைய நீரைக் கொட்டி விட்டு, சுத்தம் செய்து புதிதாய்த் தண்ணீர் நிரப்பி வைப்பது போல, ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து நிகழ்கிற அற்புதம். இந்த அற்புதம், நம்முடைய சம்மதம் கேட்டு நிகழ்வதில்லை, சம்மதப் பட்டுத் தெரிந்து நடந்தால் அது ஒரு விதமாகவும், முரண்டு பிடித்து மறுத்து நடந்தால், அது இன்னொருவிதமாகவும், பரிணாமச் சக்கரத்தில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.


முழுமை அல்லது பூர்த்தி என்று நாம் கருதுவதில், நல்லது, நல்லது அல்லது என்பன அளவிலும், பண்பிலும் மாறிக் கொண்டே இருக்கும். மனிதனிடத்தில், இரண்டு விதமான முரண்பாடுகள், எப்போதும் மோதிக்கொண்டே இருக்கும். முதலாவது, தனித்துவமானது, தன்முனைப்பாக வெளிப்படும்; இன்னொன்று குழு மனப்பான்மை. இந்த இரண்டு முரண்பாடுகளின் மோதலைத் தீர்ப்பதற்கு, இந்த இரண்டையும் விட உயர்ந்ததான மூன்றாவதுகுறிக்கோள் உருவாகும். இது, முந்தைய இரண்டையும் சமன் பெறச் செய்து அல்லது அவைகளை மீறி ஒரு தீர்வாக அமையும்.

ஆனாலும், முரண்பாடுகளும், மோதல்களும் ஓய்ந்து விடுவதில்லை. மாறாக, மென்மேலும் வளர்ந்து கொண்டிருப்பதாகத் தான் தோற்றும். பழைய சம்ப்ரதாயங்கள், நடைமுறைக்கு உதவாமல் போகும். இவை மேலோட்டமான பொய்த்தோற்றமே!

இதன் பின்னால் எல்லையற்ற மெய்யுணர்வு தடைகளைத் தகர்த்து வெளிப்படும். இந்த எல்லையற்ற மெய்யுணர்வு தான், நம்முடைய உன்னதமான தெய்வீக நிலை. இது தான், நமக்கும் , இந்தப் பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத உறவை வெளிப்படுத்தும்.

"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது; பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது"


மெய்ப்பொருள் காண்பது என்பது அப்படித்தான், உங்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, உங்களுடைய சம்மதத்தை வேண்டாமலேயே, உங்களை அனுபவங்கள் என்கிற படிக்கட்டுக்கள் வழியாக உயர்த்திக் கொண்டே இருப்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.


எப்படி என்பதை, இந்தப் பழைய பதிவில் மறுபடி நினைவு படுத்திக் கொள்ளலாம்.


“Our human knowledge is a candle burnt
On a dim altar to a sun-vast Truth”


ஸ்ரீ அரவிந்தர்,சாவித்ரியில் அருளியது

Savitri Bk. II, C. XII, P. 280

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails