Showing posts with label உயிர்மை. Show all posts
Showing posts with label உயிர்மை. Show all posts

அந்தப் பத்து இல்லை! இது வேறு பத்து!



"நமக்கு பத்து போடுவது பிடிக்கும் என்பதால் ஏழைப் பத்தாக்குகிறேன்.”
என்று  ஒரு சங்கிலித் தொடராக ஆரம்பித்தார் பதிவர்  ஆதிமூல கிருஷ்ணன்
உடனே மகேஷிடமிருந்து இப்படிப் பின்னூட்டம் வந்தது.


"ஆரம்பிச்சாச்சா அடுத்தது? நீங்க பத்து போடுங்க.. .நாங்க தலவலிக்கு பத்து போட்டுக்கறோம் :)))) "


இந்தப் பத்து அல்லது பித்து தமிழ் வலைப்பதிவர்களை ஒரு ஆட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.இதில் எல்லாம் அவ்வளவு நாட்டம் இல்லாத நானுமே கூட வால்பையன் அருண் அழைப்பைத் தட்ட முடியாமல் என் பங்குக்கு பத்து இல்லைன்னா பத்தாதாமே   என்று  ஒரு பதிவு போடுகிற அளவுக்கு, பத்து வரிசை இன்னமும் வலம் வந்து கொண்டிருக்கிறது.


பித்துப் பிடிக்க வைக்கிற பிடித்த பத்து பிடிக்காத பத்து சுரத்தில் இருந்து விடுபட்டு இன்னொரு உபயோகமான பத்து வரிசையைப் பார்ப்போமா? தோல்விகள்!  
தோற்றுப்போவது என்பதை  நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் சந்தித்துக் கொண்டுதானே இருக்கிறோம்?



எல்லோருக்குமே ஜெயிக்க வேண்டும், ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், ஆசைகள் எல்லாம் குதிரைகளானால் ஆண்டி கூட அரசன் தான் என்று சொல்கிறபடி, ஆசைப்படுவதால் மட்டுமே இங்கே யாரும் ஜெயித்து விட முடிவதில்லை.


ஏன் தோற்கிறோம்? எதனால் தோற்கிறோம்? எப்படித் தோற்கிறோம்?


தோல்வியைக் கண்டு துவண்டு விடுகிற அளவுக்கு, அதைக்கண்டு பயப்படுகிற அளவுக்கு, தோல்விக்கான காரணங்களைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா என்று பார்த்தால்,பெரும்பாலான தருணங்களில் நாம் அப்படிச் செய்வதே இல்லை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?


தோல்வியோ, வெற்றியோ எதுவானாலும் அவை நம்முடைய செயல்களின், அதன் மீது கொள்ளப்படும் அணுகுமுறையின் விளைவுகள் தானே தவிர எதுவுமே முன்கூட்டியே முடிவெடுக்கப்பட்டு நம் மீது திணிக்கப்படுபவை அல்ல.



வலைப்பக்கங்களில் தேடிப் படிக்கிற சில விஷயங்கள், நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும், வழிகாட்டுவதாகவுமே ஆகிவிடுவதுண்டு. மொக்கை போடுவதற்கும், பின்னூட்டங்களில் கும்மியடிப்பதாகவுமே வெறும் பொழுதுபோக்குக் கருவியாக நாம் பயன்படுத்தும் இணையம், கற்றுக் கொள்வதற்கான எளிமையான சாதனமாகவும் இருக்கிறது! தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கிறித்தவ வேதாகமம் சொல்வது இணையத்தில் மட்டுமே நூறு சதவிகிதம் சாத்தியம்! ஆம்! நீங்கள், எதைத் தேடுகிறீர்களோ, எதைத் தட்டுகிறீர்களோ அது நிச்சயமாகக் கிடைக்கும் இடம் இந்த இணையம் தான்!


தலைமைப்பண்புகள், நிர்வாகவியல், மார்கெடிங் துறைகளில் சில வலைப்பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதுண்டு. அப்படி ஒரு வலைப்பதிவு வழியாக,டோனி மார்கனுடைய இந்த வலைப் பக்கங்களைப் படிக்கும் வாய்ப்பு சென்ற வாரம் கிடைத்தது. தோல்வி எதனால் ஏற்படுகிறது, என்பதைக் கொஞ்சம் நன்றாகவே ஒரு பத்து அம்சமாக யோசித்திருக்கிறார். தான் யோசித்ததை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அதன் மீது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்த்து ஒரு பத்து விஷயங்களாகச் சொல்கிறார்.


என்னவென்று பார்ப்போமா?


முதலாவதாக, செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உண்மையானதாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில், சச்சின் டெண்டுல்கருடைய பேட்டி ஒன்று, அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருபது ஆண்டுகள் நிறைவு ஆனதை ஒட்டி ஒளிபரப்பானது. வெறும் விளையாட்டு, கொஞ்சம் அதிகமான ஆர்வம் என்பதையும் மீறி, அதுவே அவரது தவமுமாகிப் போனதை அந்தப் பேட்டி மிகவும் அழகாகச் சொன்னது. அதன் ஒருபகுதியைக் கீழே பார்க்கலாம்.

இரண்டாவதாக, ஒரு தெளிவான திட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். என்னவாக வேண்டும் என்பதைக் குறித்து ஒரு கனவு, அந்தக் கனவு மெய்ப்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த தெளிவான பார்வை. நிதியாதாரங்கள் திரட்டுவதும் அதன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.


மூன்றாவதாக, எல்லாவகையிலும் அது முழுமையானதாக இருக்கவேண்டும் என்று காத்திருக்காமல்,சோதனை ஓட்டத்திற்குத் தயாராக வேண்டும். சோதனை முயற்சிகளில் கிடைக்கும் படிப்பினைகளில் இருந்தே உங்களுடைய ஒரிஜினல் ஐடியாவைச் சரி செய்து கொள்ள முடியும். முதல் நாளில் இருந்தே அது முழுமையானதாக, சரியானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கடைசியில் ஒன்றுமே செய்யாமல் நின்று விடுவதான செயலாற்ற தன்மைக்குக் கொண்டு விட்டு விடும்.



நான்காவதாக, கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். கட்டுப்பாடுடனும், பொறுமையுடனும் செயல்படுவது நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது நல்லது.


ஐந்தாவதாக, வளர வேண்டும் என்ற விருப்பமிருந்தால் கற்றுக்கொள்வதை நிறுத்தி விடாதீர்கள். கற்றுக்கொள்வது நிற்கும்போது, வளர்ச்சியும் தேக்கமடைந்து போய் விடுகிறது. முக்கியமாக, தலைமைப் பண்புடன் கூடியவர்களைக் கொண்ட ஒரு குழுவை நிறுவ முயற்சி செய்யுங்கள். குழுவாக செயல்படும்போது, உங்களிடமில்லாத திறமைகளும் சேர்ந்து வெளிப்படும்.


ஆறாவதாக, நேற்றைய வெற்றிகளில், சாதனைகளில் தேக்கமடைந்து நின்று விடாதீர்கள்.

அப்படித் தேக்கமடைந்துவிடுவதில், காலம் செல்லச் செல்ல, வேகமும் குறைந்து விடும். அப்படி ஒரு நிலை வருமானால், பழையதை விட முடியாமலும், புதியதற்குத் தயாராக முடியாமலும் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஆளாக நேரிடலாம்.


ஏழாவதாக, ஏதோ ஒன்றைச் செய்யாமல் இருப்பது உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கிறதென்றால் அதைக் கவனியுங்கள். உதாரணத்துக்கு, சிகரெட், மது, பெண்பித்து, பேராசை, நாணயக் குறைவு, எதிலும் காலதாமதம் இது போன்ற பலவீனங்கள், கவனத்தைத் திசை திருப்புபவைகளாக, இப்படி எது உங்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது? அப்படித் தடையாக இருப்பதை மாற்றிக்  கொள்வதில் என்ன தயக்கம் என்பதைக் கவனியுங்கள். படுமுடிச்சுக்கு மேல் படுமுடிச்சாகப் போட்டுக் கொண்டிருப்பது எளிது. முடிச்சுக்களே இல்லாமல், எளிமையாக இருப்பதற்கு, ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் அவசியம். எளிமையாக, ஒழுங்கோடு இருப்பவைகளே வெற்றிக்கு அஸ்திவாரம்.


எட்டாவதாக, நீங்கள் உருவாக்கும் குழுவில் இருப்பவர்கள், உங்களுடைய நண்பர்களாக ஏற்கெனெவே இருப்பவர்களாகவோ, அல்லது நண்பர்களாக ஆகப் போகிறவர்களாகவோ இருக்கட்டும்! வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், உங்களுடைய வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்து கொள்பவர்களாகவும், காலப்போக்கில், மிகச் சிறந்த உறவுகளாகவும் நண்பர்கள் தான் இருக்க முடியும்! வேலைக்காரர்கள் அல்ல.


சுருக்கமாக, குழுவை உருவாக்குங்கள், ! குழுவில் இருப்பவர்களை உங்களுடைய நல்ல நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்!


ஒன்பதாக, உற்றார் உறைக்கச் சொல்வார்கள் ஊரார் சிரிக்கச் சொல்வார்கள் என்ற சொலவடையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சோதனையான தருணங்களில், கடுமையாகப் பேசினாலும், சோதனைகளில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் இருக்கும் ஒருவர் அல்லது பலருடைய துணையைக் கைக்கொள்ளுங்கள்.


பத்தாவதாக, "அச்சமே கீழ்களது ஆச்சாரம்" என்று சமுதாய வீதி நாவலில் எழுத்தாளர் நா.பார்த்த சாரதி சொல்வது போல, தோல்வியைக் குறித்த பயமே, அடுத்தடுத்த முட்டாள்தனங்களுக்கு அடிகோலுவதாக இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான எண்ணங்கள் எதிர்மறையான விளைவுகளைத் தான் தரும்.நமக்குத் தெரிந்த அளவோடு நிறுத்திக் கொண்டாலோ, சராசரியாக அல்லது அதற்கும் கீழே இருந்து விடுவதில் ஒரு சௌகரியத்தைக் கற்பித்துக் கொள்வதிலோ நின்றுவிடாமல் எவ்வளவுக்கு எவ்வளவு தோல்விகளை எதிர்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு வெற்றியையும் நம்மால் பெற முடியும்!


உண்மையாக!!


இப்படி, கொஞ்சம் குறிப்பிட்டும், பொதுமைப் படுத்தியும் சில கருத்துக்களை டோனி மார்கன் முன்வைத்திருக்கிறார்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுடைய அனுபவங்களில் இருந்து நீங்கள் இவற்றில் எவை எவை பொருத்தமாக இருக்கும், அல்லது பொருந்தாது என்றோ, மாற்றுக் கருத்தாக எதை முன்வைக்கிறீர்கள் என்பது தான்!


உங்களுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே!


அழிவு என்பது உருமாற்றமே தவிர வேறில்லை!

தேநீர்க் கோப்பையில் வந்த சுனாமி, முந்தாநாளே போய்விட்டது! அறிவியலின் அழகான தேடல்கள், இந்தப் பிரபஞ்ச வெளியின் அற்புதத்தை படம் பிடித்துக் காட்டுவதைப் பாருங்கள்!

கிரகணம் என்பது என்ன? மேலே பார்க்கிறீர்களே, படத்தில், சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வரும் போது ஏற்படுகிற தற்காலிகமான இருட்டுத்தான். சுழற்சிப்பாதையில், பூமியும், சந்திரனும் இயங்கும்போது, கிரகணத்தின் பாதையும், நேரமும் மாறுபடுகிறது!
திடீரென இருட்டுக் கவ்வும்போது, அச்சம் உண்டாவது இயற்கை. ஆதிகாலத்தில், மனிதனும், இப்படித்தான், கிரகண இருட்டைக் கண்டு பயந்தது உண்மை. அதற்கு சமாதானம் சொல்ல நிறைய புனைகதைகளும் வந்தது உண்மை.அதற்காக....? வெறும் கதை கேட்பதிலேயே நின்று விட முடியுமா என்ன? கேள்விகள் ...கேள்விகள்..கேள்விகள்..தொடர்ந்து எழுந்தன. கேள்விகளே, தேடலின் தொடக்கம்! தேடலே, உயிர்மையின் இயக்கம்!

போன பதிவில், அறிவியல் பார்வையோடு பார்ப்பதற்காகக் கொடுத்திருந்த இந்தச் சுட்டியை, நிறையப்பேர் பாத்திருக்கீங்கன்னு புள்ளிவிவரம் சொல்லுது, நன்றி

பாருங்கள், இந்தச் சிறுவர்கள், எவ்வளவு ஆர்வத்தோடு கிரகணத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று!

அறிவியல் உண்மைகளைப் புரிய வைக்கவோ, மூட நம்பிக்கைகளைச் சீர் திருத்துவதற்கோ "உண்ணும் விரதமிருப்பது" பயன்படுமா? இதுக்குப்பேர்தானா, நீங்கள் பேசும் பகுத்தறிவு?
மேலே உள்ள படத்தில், இன்றைக்கு நிகழ்ந்த கிரகணத்தின் பாதையைப் பார்க்கலாம். சமீப காலத்தில் நிகழ்ந்த கிரகணந்களிலேயே , இது தான் மிக நீண்ட நேரம் நீடித்த கிரகணம் என்று சொல்கிறார்கள். அடுத்து இதே போல ஒரு நீண்ட கிரகனத்திற்காக இன்னம் 123 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்!
ஒளியை மறைத்த தடை நீங்கும்போது சில அதிசயங்களைக் காண முடியும்! இங்கேயும் கூட, அப்படித்தான்! அறிவை மயக்கும் சில புனைவுகளும் நீங்கும்போது மனிதன் தனக்குள்ளும் சில அழகான அதிசயங்களைக் கண்டுகொள்ள முடியுமே!
தடுத்து மறைத்தது நடுவில் நின்றாலும், ஒளி அதையும் மீறிப் புறப்படுமே!
ஒவ்வொரு இருட்டுக்குப் பின்னாலும், ஒரு பகல் உண்டு! மறைத்து வைக்கவும், மறந்து போகவும் மனிதன் எவ்வளவு முயன்றாலும், மெய்ப்பொருளாய் அது வெளிப்படுமே!
கிரகணத்தின் அதியற்புதக் காட்சி என்று, இதைத்தான் சொல்வார்கள். வைர மோதிரம் என்று வர்ணிக்கப்படும் காட்சி இது!

கவிஞர்-பதிவர் ரிஷான் ஷெரீப் அவர்களே! இருபத்திரண்டாம் திகதி சூரிய கிரகணம், நீங்கள் அஞ்சியது போல எந்தப் பேரழிவையும் கொண்டுவரவில்லை. பிரபஞ்சத்தில் அழிவு என்பது உருமாற்றமே தவிர வேறில்லை!

"It is the darkest nights that prepare the greatest dawns - and it is so because it is into the deepest in conscience of material life that we have to bring, not an intermediate glimmer, but the full play of the Divine Light."
-Sri Aurobindo

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! நலமே சூழ்க!
சற்றே
அசைபோட
அருள்செல்வன் கந்தஸ்வாமி அவர்களின் பழைய பதிவு ஒன்று !

இன்னும், இன்னும்...!


ஒரு அழகிய கனவு கலைகிறது என்று என்னுடைய வருத்தங்களை, சில நாட்களுக்கு முன் பகிர்ந்து கொண்டிருந்தேனே, நினைவிருக்கிறதா? யாரோ, அதை யாகூவுக்குச் சொல்லியிருக்கிறார்கள் போல! இன்னும் கொஞ்ச நாள், வேறு ஒரு தளத்திற்கு மாற்றிக் கொள்வதற்கு, அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். நன்றி யாகூ!

யாஹூ!360 பக்கங்களில், எனது பழைய பதிவு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு சின்னக் கதைதான்! கதைகளில் தான், எத்தனை விஷயங்களை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது?! கதையை முதலில் பார்ப்போம், அப்புறம் அது என்ன சொல்ல வருகிறது என்பதை யோசிப்போம்.

குரு, சீடர்கள், காலிப்பாத்திரம்!


அந்தநாட்களில் குருகுல வாசம் என்று, மாணவர்கள், குருவுடைய இடத்திலேயே தங்கிக் கற்ற நாட்களில், கற்றதை முறையாகப் பெற்றார்களா என்பதை சோதித்துப் பார்க்கிற முறை ஒன்று இருந்தது. அன்றைய கல்வி என்பது, வெறும் ஏட்டுப்படிப்பு, மனப்பாடம் அல்லது பிட் அடித்து அப்படியே வாந்தி எடுப்பது என்ற பின் நவீனத்துவம் எல்லாம் இல்லாத, குழப்பம் இல்லாத கல்வி முறை. கற்றது, வாழ்க்கைக்குப் பயன்படுகிறதா என்பதை, ஒவ்வொரு கட்டத்திலும் பிரயோகிக்கவும், உன்னதமான ஒழுக்கத்தோடு வாழ்வதே கல்வியின் பயன் என்றும் இருந்த நாட்கள்.

அந்தப்படிக்கே, ஒரு குரு, தன்னிடம் கல்வி பெற வந்திருந்த மூன்று மாணாக்கர்களை, அவர்கள் புரிந்து கொண்டது எந்த அளவுக்கு இருக்கிறதென்பதைப் பரீட்சை செய்வதற்காக அழைத்தார். ஒவ்வொருவரிடமும், ஒரு குடத்தைக் கொடுத்தார். குடத்தில் இருக்கிற காற்றை, முழுதுமாக எடுத்து விட வேண்டும்-இது தான் அவர்களுக்கு வைத்த முதல் தேர்வு.

நானாக இருந்தால் "போடா ஜாட்டான்" என்று பரீட்சையை விட்டு ஓடி வந்திருப்பேனோ, என்னவோ!
[
நன்றி:டோண்டு ராகவன். அவர் இந்த வார்த்தையை, ஜெகசிற்பியன் என்ற சமீப காலத்திய எழுத்தாளர், 1960 களில் அவர் எழுதிய கதையில் இருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்]

ஆனால்,அந்தநாட்களில் அப்படியெல்லாம், முன்-பின் நவீனத்துவமாகச் சிந்திப்பது, ஆசிரியர்களுக்கோ, மாணவர்களுக்கோ கிடையாதாகையால், அந்த மூன்று மாணவர்களும் உண்மையாகவே, பூரண விசுவாசத்துடன், குரு சொன்ன வேலையைச் செய்ய முனைந்தார்கள்.

முதல் சீடன், பாத்திரத்தின் வாயிலிருந்து காற்றைக் கஷ்டப்பட்டு வெளியேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான். இரண்டாமவனோ, பாத்திரத்துக்குள், கல், மணல் இவற்றை நிரப்பி, காற்றை வெளியேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான். இந்த இருவருமே, தங்களுடைய முயற்சி பலனில்லாமல் போனதை, எப்படியோ காற்று கொஞ்சமாவது பாத்திரத்துக்குள் இருப்பதை உணர்ந்தார்கள்.

மூன்றாவது சீடன் என்ன செய்கிறான் என்பதை குருவும், முதல் இரண்டு சீடர்களும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தபோதே, அவன் குருவிடம் வந்து பணிவுடன் சொன்னான்: "நீங்கள் சொன்னபடி செய்துவிட்டேன்"

குரு கேட்டார்: "எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்?"

"
குருவே, பாத்திரம் வழிய வழிய நீரால் நிரப்பி விட்டேன். ஒரு குமிழியளவு கூடக் காற்று இல்லாதபடிக்குப் பாத்திரத்தை, நிரப்பி விட்டபடியால், நீங்கள் சொன்னபடியே, பாத்திரத்தில் இருந்த காற்று முழுதையும் வெளியேற்றி விட்டேன்."

சின்னக் கதை தான், இந்தக் கதை, இரண்டு உன்னதமான வாழ்வியல் அனுபவத்தையும், ஆன்மீக வெளிச்சத்தையும் அறியத் தருகிறது.

முதலாவதாக, இங்கே பிரபஞ்சத்தில், பரிணாமத்தில் வெற்றிடமாக எதுவுமே இருக்க முடியாது, ஏனென்றால், இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது, நிராகரிக்கிறது. அதனால் தான், ஒரு விஷயத்தை காலி செய்வது என்பது, இன்னொரு விஷயத்தை நிரப்புவதாகத் தான் இருக்கிறது. இயற்கையின் இந்த சூட்சுமத்தை அறிந்ததனால் தான், நம்முடைய முன்னோர்கள், "சேரிடம் அறிந்து சேர்" என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். இதையே கொச்சையாக, வழக்குத் தமிழில், பன்றியோடு சேர்ந்த கன்றும் எதையோ தின்னப் போகும் என்று தெரிந்தும் வைத்திருக்கிறோம்.

நடைமுறைக்கு வராத தெரிதல், என்ன செய்யும்? திரிந்து, உருமாறி, அர்த்தமில்லாத வெறும் சடங்காக மட்டுமே நிற்கும். நமக்குத் தெரியவில்லை, அல்லது பிடிவாதமாக நாம் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம் என்பதனாலேயே மூத்தோருடைய அனுபவங்கள், அவர்கள் சொல்லி வைத்தவை எல்லாம் 'மூட நம்பிக்கை' என்று ஒதுக்கி வைத்து விட முடியாது! மூடத்தனம் வந்ததெல்லாம் புரிந்து கொண்டதில் வந்த தவறுகளே!

நடைமுறை வாழ்க்கையில், பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதான, 'பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியாக' ஆகி விடாமல் இருப்பதற்கு, கொஞ்சம் சிரமப் பட்டுத் தான், வெளியே வர வேண்டியிருக்கிறது. இந்த முயற்சி கூட இல்லை என்றால், 'பகுத்தறிவு' என்ற சொல் எப்படி இன்றைக்கு, அதன் உண்மையான பொருளில் இல்லாமல், வேறு விதமான அசட்டுத்தனமாக இருக்கிறதோ, அது மாதிரி ஆகி விடும்! நடைமுறை வாழ்க்கையில், இப்படி ஒன்றை எதிர்ப்பது என்பது ஏன் என்று தெரியாமலேயே அதன் பின்னால் கூட்டமாக ஓடுவது, சேரிடம் அறியாமலேயே சேர்ந்து, அதிலேயே சிக்கிக் கொள்வதுதான். ஒரு சிக்கலில் இருந்து விடுபடுகிறேன் என்று இன்னொரு புதைகுழிக்குள் விழுந்து விடுவது மாதிரித்தான்.

அடுத்து, கற்றல் என்பது தொடர்ந்து நிகழ்வது, ஒரு தடவை குடத்தை நிரப்பியதும் முடிந்து போவதில்லை.நெருப்பு இன்னும் இன்னும் என்று கேட்பது போல, சாப்பிட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மறுபடியும் பசி எடுப்பது போல தொடர்ந்து கொண்டே இருப்பது. உயிர்மையின் ஒரு அடையாளமே, இந்த 'இன்னும், இன்னும்' தான்!

புதியது கற்க வேண்டுமானால், புதிய அனுபவத்திற்கும் வளர்ச்சிக்கும் தயாராக வேண்டுமானால்,ஏற்கெனெவே கற்றதைக் கழற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். Emptying the cup என்று ஜென் கதைகளில் சொல்வது இதுவே. ஏற்கெனெவே நிரம்பிய கோப்பையில், புதிதாக எதையும் நிரப்ப முடியாது, அதனால், கோப்பையை காலி செய், பிறகு நிரப்பு என்பது இது தான்.

குடத்தில் இருக்கும் பழைய நீரைக் கொட்டி விட்டு, சுத்தம் செய்து புதிதாய்த் தண்ணீர் நிரப்பி வைப்பது போல, ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து நிகழ்கிற அற்புதம். இந்த அற்புதம், நம்முடைய சம்மதம் கேட்டு நிகழ்வதில்லை, சம்மதப் பட்டுத் தெரிந்து நடந்தால் அது ஒரு விதமாகவும், முரண்டு பிடித்து மறுத்து நடந்தால், அது இன்னொருவிதமாகவும், பரிணாமச் சக்கரத்தில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.


முழுமை அல்லது பூர்த்தி என்று நாம் கருதுவதில், நல்லது, நல்லது அல்லது என்பன அளவிலும், பண்பிலும் மாறிக் கொண்டே இருக்கும். மனிதனிடத்தில், இரண்டு விதமான முரண்பாடுகள், எப்போதும் மோதிக்கொண்டே இருக்கும். முதலாவது, தனித்துவமானது, தன்முனைப்பாக வெளிப்படும்; இன்னொன்று குழு மனப்பான்மை. இந்த இரண்டு முரண்பாடுகளின் மோதலைத் தீர்ப்பதற்கு, இந்த இரண்டையும் விட உயர்ந்ததான மூன்றாவதுகுறிக்கோள் உருவாகும். இது, முந்தைய இரண்டையும் சமன் பெறச் செய்து அல்லது அவைகளை மீறி ஒரு தீர்வாக அமையும்.

ஆனாலும், முரண்பாடுகளும், மோதல்களும் ஓய்ந்து விடுவதில்லை. மாறாக, மென்மேலும் வளர்ந்து கொண்டிருப்பதாகத் தான் தோற்றும். பழைய சம்ப்ரதாயங்கள், நடைமுறைக்கு உதவாமல் போகும். இவை மேலோட்டமான பொய்த்தோற்றமே!

இதன் பின்னால் எல்லையற்ற மெய்யுணர்வு தடைகளைத் தகர்த்து வெளிப்படும். இந்த எல்லையற்ற மெய்யுணர்வு தான், நம்முடைய உன்னதமான தெய்வீக நிலை. இது தான், நமக்கும் , இந்தப் பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத உறவை வெளிப்படுத்தும்.

"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது; பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது"


மெய்ப்பொருள் காண்பது என்பது அப்படித்தான், உங்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, உங்களுடைய சம்மதத்தை வேண்டாமலேயே, உங்களை அனுபவங்கள் என்கிற படிக்கட்டுக்கள் வழியாக உயர்த்திக் கொண்டே இருப்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.


எப்படி என்பதை, இந்தப் பழைய பதிவில் மறுபடி நினைவு படுத்திக் கொள்ளலாம்.


“Our human knowledge is a candle burnt
On a dim altar to a sun-vast Truth”


ஸ்ரீ அரவிந்தர்,சாவித்ரியில் அருளியது

Savitri Bk. II, C. XII, P. 280