Friday, November 06, 2009

பத்து இல்லைன்னா பத்தாதாமே!
என்ன இது? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!


இப்படி வடிவேலு டயலாக்ல எதுனாச்சும் எடுத்துவுடாதவங்கல்லாம் பதிவுலகத்தில் பிரபலம் ஆகவே முடியாதாமே, நெசந்தான் போல இருக்கு!


இன்னைக்குக் காலையில தான் பரிசல்காரன் பதிவுல, இப்படி ஒரு பின்னூட்டம் எழுதினேன்:"பத்து இல்லைன்னா பத்தாதுன்னு ஏதோ டூத்பேஸ்ட் விளம்பரத்துல வர சின்னப்பையன் மாதிரி, எங்க பாத்தாலும் பத்து'மயமாகிடப்போகுது! "


ஊழ்வினைவந்து உறுத்தூட்டும்னு சிலப்பதிகாரத்துல இளங்கோ அடிகள் அனுபவிச்சுத் தான் சொல்லியிருக்கார்னு இப்பத்தான் தெரிஞ்சது.தீராத பக்கங்களில் பிடித்ததும் பிடிக்காததும் ஏழு என்று , மாதவராஜ் அவரை ஒரு சங்கிலிப் பதிவில் கோர்த்து விட்டதற்கு உடன்பட்டு எழுதிய பிடித்தவர், மிகவும் பிடித்தவர் என்று பதிவில், என்னையும் கோர்த்துவிட்டிருக்கிறார்!


ரொம்பவும் முன்னெச்சரிக்கையாக, "இப்ப நான் எனது நண்பர்களை இதில் சிக்க வைக்க வேண்டும், தலைப்பை மாற்றி விட்டதால் சிரமம் இல்லாமல் எழுதுவார்கள் என நம்புகிறேன்" என்றும் சொல்லிவிட்டு


4.கிருஷ்ணமூர்த்தி ஐயா(அவரே தான்) என்று இட ஒதுக்கீடும் செய்திருக்கிறார்!


பிடிச்சது, ரொம்பப் பிடிச்சது, பிடிக்காதது, சுத்தமாகவே பிடிக்கதுன்றதெல்லாம் என்னங்க? மாறிக் கொண்டே இருக்கும் அளவுகள், அபிப்பிராயங்கள் தானே! சிறுவயதில் பிடித்த விஷயங்கள், மீசை அரும்பும் பருவத்தில் மாறிப்போகும். தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக நினைத்துக் கொளும்போதோ, அதுவரை பிடித்ததெல்லாம் பிடிக்காமல் மாறிவிடக் கூடும், இல்லையா?


எனக்குப் பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா என்ற கேள்வியே அடிப்படையில் தவறு என்ற நிலையை அனுபவம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும், அது எந்த அளவுக்கு சரியாக இருக்கும், சாத்தியமானதாக இருக்கும், மாற்றத்திற்கு நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம் என்ற அம்சங்களே தீர்மானிக்கின்றன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.


பத்து இல்லைன்னா பத்தாதாமே!


வாங்க, அது என்னென்னன்னுதான் கொஞ்சம் ஒரு கை என்ன ரெண்டு கைவிரலையும் நீட்டி எண்ணிப் பாத்துடலாம்!


1.அரசியலில் ---


எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நாட்களில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனாவை அடுத்து ஆனா, கானாவை அடுத்துக் கானா என்று அடுக்குமொழி, எதுகை மோனை, அதையும் மூக்கினால் கரகரத்த குரலில் புரியாதபடி பேசுகிற தனித்தமிழ்வாணர்கள், செய்தித்தாளைப் புரட்டினால் கன்னித்தீவு கார்டூன் கதையைப் படிக்காமல் எப்படி இருக்க முடியாதோ, அந்த மாதிரித் தவிர்க்க முடியாதவர்களாகிப் போனார்கள்! அத்தனை உணர்ச்சி வெள்ளம்! முதிர்ச்சி இல்லாத இளம்பருவத்தில் பிடித்த அவஸ்தைகள் அவை!


எந்த வெள்ளமாக இருந்தால் தான் என்ன? வடிந்துதானே ஆக வேண்டும்?


வெள்ளிமூக்கு முளைத்தபிறகு, இது குதிரையல்ல, கழுதைதான் என்று தெரிந்து கொள்கிற நேரம் அவர்கள் ஆட்சிக் கட்டிலில் ஏறிய இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே வந்தபோது பிடிக்காமல் போனதும் இயற்கைதானே!


ஒரு நல்ல மாற்றாக உருவாகும் என்று நம்பி இணைந்த இடது சாரி இயக்கங்களுமே கூட, இந்த நச்சுச் சூழலில் நீர்த்துப் போனதையும் ஒரு ஓரத்தில் முனகலாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.


2.எழுத்தாளர்களில்---


என்னிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம், இது தான் என்று எல்லைகட்டிக் கொண்டு படிக்காமல், என் கைக்குக் கிடைக்கிற அத்தனை தலைப்புக்களிலும், எழுத்துக்களையும் படிப்பது ஒன்றுதான்! இருக்கிற ஒரே ஒரு நல்ல விஷயத்தையும், இப்படி சமயம் கிடைக்கும்போது தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி?


தமிழில் ஒவ்வொரு எழுத்தாளருமே, அவரவர்க்குக் கிடைத்த தளங்களில் முடிந்த வரை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்று ஒருவர் ஆங்கிலத்தில் துப்பறியும் சாகசங்கள் மாதிரித் தமிழிலும், தமிழர்கள் படித்து உய்ய வேண்டும் என்பதற்காகவே அந்த நாட்களில், லோகலைஸ் பண்ணி, உல்டா அடித்துக் கதைகள் எழுதியிருக்கிறார். லோகல் லைப்ரரியில் அவருடைய புத்தகங்களையுமே, கிடைத்தவரை படித்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா?


கல்கி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஆர்வி, பிவிஆர், பி எஸ் ராமையா, என்று என்னுடைய விருப்பப் பட்டியலில் அனேகமாக அத்தனை எழுத்தாளர்களுமே இருக்கிறார்கள்! சுஜாதாவை விட்டு விட முடியுமா? பாலகுமாரன், சீக்கிரமே அலுத்துப்போனார் என்றாலும் பட்டியலில் இருப்பவர் தான்!


பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட என்னை அதிகமாக மிரட்டிய ஒரே எழுத்தாளர் ராபின் குக் தான். நண்பர் டாக்டர் சுந்தரவடிவேல் இதைப் படியுங்கள் சார் என்று சிபாரிசு செய்த புத்தகம், தி ஃபீவர், இப்போது நினைத்தால் கூட சுரம் வந்து விடும்! அயன் ராண்ட் முதல், லியோன் யூரிஸ், இப்படி எத்தனையோ எழுத்தாளர்களை சகித்துக் கொள்ள முடிந்தவனை வெறுப்பேற்றுகிற புத்தகம் அது!


3.கவிதைகள், கவிஞர்கள்--


1980 ஆம் வருடங்களில் எங்களுக்குப் புதுவிதமான பைத்தியம் ஒன்று பிடித்திருந்தது. புதுக்கவிதை! மு.மேத்தா, வைரமுத்து, மீரா, இன்னும் நிறையப்பேர், புதிது புதிதாக புதிய வடிவங்களில் கவிதையாக கருத்தை எழுதிக்கொண்டிருந்தார்கள்! கணையாழி மாதிரி சிற்றிதழ்களுக்கு வாசகனாக்கி  வைத்த வேகம் கொண்ட மோகம் அது!தவமிருந்து படித்த பொற்காலங்கள் அவை! புதுக்கவிதைகளின் தோற்றமும் வரலாறும் என்று வல்லிக்கண்ணன் எழுதிய புத்தகத்தை எத்தனை முறை படித்து, நாங்களும் எப்படிப் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தோம் என்று இப்போது வர்ணிப்பது கொஞ்சம் ஓவர்!


ஒரு வாக்கியத்தில் இருக்கும் எட்டு அல்லது பத்து சொற்களை ஐந்து அல்லது ஏழு வரிகளில் உடைத்துப் போடுவதுதான் கவிதை என்றாகிப்போன பிறகு, இன்னமும் பிடித்திருக்கிறது என்று சொன்னால், பிடித்திருப்பது கவிதை அல்ல-பைத்தியம்!


4.பிடித்த நடிகர், நடிகை--


என்னிடம் இருக்கும் இன்னொரு நல்ல பழக்கம்,ஒரு திரைப்படம் பிடித்திருக்கிறது என்று தோன்றினால், அதை இரண்டாவது, மூன்றாவது தடவை பார்ப்பது மட்டும் தான்! சினிமா நடிகன், நடிகைக்கு எல்லாம் இதயத்திலோ, தெரு ஓரத்திலோ கோவில் கட்டுகிற அளவுக்குப் போய் விடுவதில்லை. அப்படிப்பட்ட முற்றிப்போன கேஸ்களைப் பக்கத்திலேயே அண்ட விடுவதில்லை.


தொழில் மட்டுமே நடிப்பு, நிஜ வாழ்க்கையிலும் அல்ல என்றிருப்பவர்களைப் பிடிக்கும்.. அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?!


5.செய்தித்தாட்கள், வார இதழ்கள்--


ஹிந்து, இன்றைக்கு என் பார்வையில் நம்பகத்தன்மை மிகவுமே குறைந்து போனாலும், பழக்கமாகி விட்ட படியால், சிறுவயதில் இருந்தே தொடர்ந்து படித்து வரும் நாளிதழ். தினமணியும், இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழ்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்த காலம் இருந்தது. இப்போது இல்லை.எகனாமிக் டைம்ஸ், தொழில் ரீதியாகப் படிக்க ஆரம்பித்து இன்றைக்கும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் நாளிதழ்.


அபத்தக் களஞ்சியம் ஆனாலும் சிறு வயதில் இருந்தே வீடுகளில் தவறாமல் வாசிக்கப்படும் பத்திரிகையான குமுதம் ஒருகாலத்தில் நான் விரும்பிப்படித்த பத்திரிகையாக இருந்தது, படிப்பதை நிறுத்திப் பல வருடங்கள் ஆகி விட்டன. அதே மாதிரி, ஆனந்த விகடன், கல்கி ஜூவி, என்று ஏராளமான இதழ்கள், இப்போது எதுவுமே என்னுடைய வாசிக்கும் பட்டியலில் இல்லை. நிம்மதியாக இருக்கிறது!


6.இசையமைப்பாளர்


இளைய ராஜா தான்! ரஹ்மான், ஹாரிஸ் என்று எவரெவரோ வந்தாலும் ராஜா ராஜா தான்! அவருக்கு முன்னால் ஜி.ராமநாதனைப் பிடிக்கும், எம் எஸ் விஸ்வநாதனைப் பிடிக்கும், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார் வேதா அவரையும் பிடிக்கும் !


7.திரைப்படப்பாடகர், பாடகி--


டி எம் எஸ் சுசீலா, பி பி ஸ்ரீநிவாஸ், ஜானகி, சந்திரபாபு, அனுராதா ஸ்ரீராம், ஹரிஹரன், முஹம்மத் ரஃபி, கிஷோர் குமார், முகேஷ் என்று அன்றும் இன்றுமாக இன்னும் நீளமான பட்டியல் இருக்கிறது. எஸ் பி பாலசுப்ரமணியம் இவர்களில் தனித்து உயரமான இடத்தில் இருக்கிறார்!


8.தலைவர்கள்---


சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக மகாத்மா காந்தி இருந்தார். வல்லபாய் படேல், லால் பஹதூர் சாஸ்திரி என்று உறுதியோடு செயல்படத் தெரிந்த தலைவர்கள் ஒரு பக்கம், இருபத்துநான்கு காரட் தங்கம் என்று இவர்களைச் சொல்ல முடிந்தால், இருபத்திரண்டு, இருபது, பதினெட்டு, பதினான்கு எனக் கொஞ்சம் கம்மியான தங்கங்களாக வேறு பலரும் இருந்தார்கள்.


இப்போதோ காக்கைப் பொன்னே எவ்வளவு பீற்றிக் கொள்கிறது!?


9.வலைக்குழுமங்கள்--


கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வலைக் குழுமங்களில் நான் இருந்திருக்கிறேன். வலைக் குழுமங்களில் ஒரு நல்ல கருத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஒரு வலைக் குழுமம் மின்தமிழ். தமிழ் மரபு அறக்கட்டளையின் அங்கமாக வெளிவரும் இந்தக் குழுமத்தைப் பற்றி என்னுடைய பல பதிவுகளில் தொட்டுப் பேசியிருக்கிறேன்,


ஒரு தனி வலைப்பதிவராக, நம்மால் ஒரு எல்லைக்குட்பட்டுத் தான் செயல்பட முடியும், அதுவே ஒரு குழுவாக என்றால், நிஜமாகவே பல நல்ல விஷயங்களை நடத்திக் காட்ட முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக மின்தமிழ் வலைக்குழுமம் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழிலும், ஆங்கிலத்திலும் இரண்டு வலைக் குழுமங்கள், இடது பக்கம் கூகிள் க்ரூப்ஸ் என்று இருக்கும் பகுதியிலேயே தொடர்புக்கான சுட்டி இருக்கிறது.
10..பதிவர்கள், பதிவுகள்--


தமிழில் கிட்டத்தட்ட நூறுக்கும் மேலான பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் கொஞ்சம் கம்மி தான், முப்பது! இது தவிர சில வலைக் குழுமங்கள், வலைத்தளங்கள் என்று ஒரு பரந்த வாசிப்பு இருக்கும் ஒரு வாசகனாக மட்டுமே என்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.


இதில் பிடித்த, அல்லது பிடிக்காதவை என்பது சொல்லப்படும் உள்ளடக்கத்தை வைத்து மட்டுமே வைத்து முடிவு செய்கிறேன். முனைவர் நா.கண்ணன் சொல்வது போல இங்கே நீங்களும் நானும் உரையாடிக் கொண்டிருப்பது ஒரு மின் வெளியில், மின்னெழுத்துக்களால் ஆன ஒரு உண்மைபோலத் தோன்றும் ஒரு மாயக் கண்ணாடி முன்னால் என்பதை நினைவு வைத்துக் கொண்டோமேயானால், இங்கே வெளிப்படுவது நம்முடைய சொந்த மன விகாரங்கள் தான் என்பது தெரியும்.


இதையும் கடந்து போக வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.


வால்பையன் திரு அருண் அழைப்புக்கு இது என்னுடைய பதில்! ஆர்வத்தோடு விவாதக்களங்களில் பங்கு கொள்ளும் துடிப்பான இளைஞருக்கு நான் செய்ய வேண்டிய மரியாதை!


வேறு எவரையும் சங்கிலியில் பிணைப்பதற்கு எனக்குத் தோன்றவில்லை!


8 comments:

 1. /பிடிச்சது, ரொம்பப் பிடிச்சது, பிடிக்காதது, சுத்தமாகவே பிடிக்கதுன்றதெல்லாம் என்னங்க? மாறிக் கொண்டே இருக்கும் அளவுகள், அபிப்பிராயங்கள் தானே!//

  ரொம்பச்சரியா சொன்னிங்க!

  மாற்றம் என்பது தானே உலகில் மாறாதது!

  ReplyDelete
 2. //ஒரு வாக்கியத்தில் இருக்கும் எட்டு அல்லது பத்து சொற்களை ஐந்து அல்லது ஏழு வரிகளில் உடைத்துப் போடுவதுதான் கவிதை என்றாகிப்போன பிறகு, இன்னமும் பிடித்திருக்கிறது என்று சொன்னால், பிடித்திருப்பது கவிதை அல்ல-பைத்தியம்! //

  கவிஞர்கள்லாம் சேர்ந்து உங்க வீட்டு முன்னாடி தர்னா பண்ணப்போறாங்க!

  ReplyDelete
 3. //வால்பையன் திரு அருண் அழைப்புக்கு இது என்னுடைய பதில்! ஆர்வத்தோடு விவாதக்களங்களில் பங்கு கொள்ளும் துடிப்பான இளைஞருக்கு நான் செய்ய வேண்டிய மரியாதை! //

  தன்யனானேன்!

  ReplyDelete
 4. :) nice. i enjoyed. how are you? long time no see..

  ReplyDelete
 5. //பிடித்திருப்பது கவிதை அல்ல-பைத்தியம்!///
  எனக்குப் பிடிச்சிருக்கு LOL :))

  ReplyDelete
 6. @வால்பையன்
  /மாற்றம் என்பது தானே உலகில் மாறாதது?/
  கொஞ்சம் மாற்றி யோசித்துப் பார்த்தால், இந்த மாற்றம் என்பதே எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது மாதிரியும் தெரிகிறதே!
  /கவிஞர்கள்லாம் சேர்ந்து உங்க வீட்டு முன்னாடி தர்னா பண்ணப்போறாங்க/
  பண்ணட்டுமே! கொஞ்சம் கவிதை, புதுக் கவிதை பற்றி வரலாறும் சொல்லிக் கொடுத்தால் போச்சு!

  ReplyDelete
 7. @ விதூஷ்!

  /எனக்குப் பிடிச்சிருக்கு/

  எது? கவிதையா? பைத்தியமா அல்லது இந்தப் பதிவா?

  ReplyDelete
 8. நல்ல பதிவு. இதன் சம்பந்தமாக (சம்பந்தம் உண்டு என்று எண்ணுகிறேன்) என்னுடைய பதிவைப் பார்க்க வேண்டுகிறேன்.

  http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_06.html

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails