சண்டேன்னா மூணு! தினமலர், இட்லி வடைக்குப் போட்டியாக இல்லை!

நம்பினால் நம்புங்கள்!



இங்கே இவ்வளவு விஷயம்  இருக்கிறது என்று வெவ்வேறு தலைப்புக்களைத் தொட்டு, குறியீட்டுச் சொற்களைக் குவியலாகப் பக்கத்திலேயே போட்டு வைத்திருந்தாலும், இங்கே படிக்க வந்தவர்களில் ஆறில் ஒருவர், புவனேஸ்வரியைத் தேடித்தான் வந்திருக்கிறார். இன்றைக்கும்கூடக்  குறைந்தது நான்கு அல்லது ஐந்து வருகைகள், புவனேஸ்வரிக்காகத்  தான்! திரட்டிகளின் பதிவுப்பட்டியலில் எண்பதாம் பக்கம், இருநூறாம் பக்கம் எங்கிருந்தாலும் தேடிக் கரெக்டாக வந்து விடுகிறார்கள்.

"இதில்.என்னை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்த ஒரு விஷயம் என்னவென்றால், நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்வதை விட, தன்னுடைய குடும்பம், தன்னுடைய பொருளாதாரச் சூழல் இவை எல்லாவற்றையும் விட நடிகைகளின் அந்தரங்கம் தான் தமிழக வாசகர்களுக்கு மிகவும் முக்கியமாக இருந்ததென்று, இரண்டாவது பதிவுக்கு ஒரே நாளில் சராசரி வருகையை விட பத்துப் பனிரண்டு மடங்கு வாசகர்களுடைய வருகை சொல்லாமல் சொன்னது. ரொம்ப சைவமாகவே தேர்ந்தெடுத்து, ஒன்றிரண்டு படங்களைப் போட்டபோதிலுமே கூட, அதையும் டவுன்லோட் செய்த மக்களைப் பார்த்தபோது "விதியே!விதியே! தமிழச் சாதியை என்செய நினைத்தாய்?" என்று பாரதி மறுகின மாதிரி, மறுகி நிற்கவைத்த தருணங்கள்!"

இப்படி யதார்த்தத்தைப் புட்டு வைத்த பதிவில் கூட, பெண்ணீயம் பேசிக் கொண்டு ஒருவர், "நான் பெண்ணிய வாதி என்பதில்  பெருமை கொள்கிறேன்.அதனாலேயே COMMERCIAL SEX WORK ஐ சட்டபூர்வமாக்க  வேண்டுமென்பேன்"  என்று பின்னூட்டம் எழுதினார். சீதா என்பது அவர் தனக்கு வைத்துக் கொண்ட ப்ரொஃபைல் நேம்! என்ன ஒரு நகை முரண்!

"புவனேஸ்வரி என்று பதிவு போட்டால் ஹிட்ஸ் கூடக் கிடைக்கிறது. இதற்கு நான் நன்றி சொல்ல வேண்டுமா அல்லது என் தலைவிதியை நொந்துகொள்ள வேண்டுமா?"

என்று பின்னூட்டத்தில் பதில் எழுதிய அப்போதிலிருந்து  நான் என்னையே கேட்டுக் கொண்டிருக்கிற  கேள்விக்கு இன்னமும் விடை கிடைத்தபாடில்லை.!  திரு.கௌதமன், ஒருவர் மட்டும் தான் மிக வெளிப்படையாக இந்த வலைப்பக்கத்தின் தரம் இறங்கி விட்டதாக வருத்தப்பட்டிருந்தார். அதற்கு முன்னால், வழக்கமாக ரீடரில் படித்துக் கொண்டிருந்த  ஐந்தாறு சாத்வீகமான நண்பர்களை நான் இழந்து விட்டது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால், வலைப்பக்கத்துக்கு வருபவர்கள், புதிய வாசகர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது என்பதும் அப்படி வருகிறவர்களில் ஆறு, சமயங்களில் எட்டுக்கு ஒருவர் தான் திரும்ப இந்தப்பக்கங்களைப் படிக்க வருகிறார் என்பதுமே புள்ளிவிவரங்கள் சொல்பவை.

இந்தப்பக்கங்கள் எவை குறித்தவையாக இருக்க வேண்டும் என்பதில் இன்னமும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவில்லை. காரணம், என்ன வகையிலான விருப்பத் தேர்வுகளுடன் இருப்பவர்கள் இந்தப்பக்கங்களைப் படிக்கிறார்கள் என்பதில் சரியான புரிதல் இன்னமும் கிடைக்கவில்லை.
இது ஒரு பெரிய காரணம் இல்லை.

என்ன மாதிரியான வாசகர்கள் எனக்கு வேண்டும் என்பதைக் குறி வைத்து நான் எழுத ஆரம்பிக்கவில்லை, என்பதே முக்கியமான காரணமாக எனக்குப் படுகிறது. அடுத்து, பதிவுகளின் நீளம்!உண்மைத் தமிழனோடு போட்டி போட்டுக் கொண்டு மிகவும் நீளமான பதிவுகளை எழுதுவதாக ஏற்கெனெவே வால் பையனும், டம்பி மேவீயும் பின்னூட்டப்பெட்டியையே புகார்ப்பெட்டியாகவும் மாற்றி விட்டார்கள்!

படிக்க வருகிறவர்கள், தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிற தருணங்களில் இது மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவதில்லை. ஃபாலொயெர்ஸ் என்று இங்கே ஒரு நட்பு வட்டம் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. அவர்களுடைய எண்ண ஓட்டங்களைக் கூட அறிந்து கொள்ள முடிவதில்லை. அவர்களுடைய பதிவுகளிலுமே கூட அதற்குச் சரியான க்ளூ கிடைக்கவில்லை!

நான்கு மாதங்களுக்கு முன்னால், ஒரு பதிவின் கடைசிப்பகுதி இந்த வார்த்தைகளோடு முடிந்திருந்தது: "அப்புறம், என்னை ஒரு ஒளிவட்டத்தோடு ஆன்மிகம் பற்றி எழுதுகிற ஆன்மீகப் பதிவராகக் கற்பனை செய்து கொண்டிருந்த ஒன்றிரண்டு பேருக்கு, முந்தைய நான்கு பதிவுகள், ஏமாற்றத்தை, அதிர்ச்சியை அளித்திருக்கலாம். அப்படி ஒரு ஒளிவட்டத்தோடு இருப்பவனாகக் கருதும் விதத்தில், ஒருமுத்திரை, branding, அற்புதங்களை விற்பவனாகத் தவறான ஒரு சித்திரத்தை ஏற்படுத்தியிருந்தால், மன்னித்து விடுங்கள்!

எனக்கென்று எந்த ஒரு அடையாளமும் இல்லை! Simply, I consent to be.....nothing!"

 

மறுபடியும் உங்களைக் கேட்பதெல்லாம், நீங்கள் எண்ண நினைக்கிறீர்கள் என்பதைக் கொஞ்சம் மனம் விட்டுத் தான் சொல்லுங்களேன்! அனானி, அதர் ஆப்ஷன் கிடையாது. கூகிள் ஐடியில் வந்து தான் சொல்ல முடியும்.


oooOooo


இந்தியத் தொலைக் காட்சிகளில், முதன்முறையாக......

திரைக்கு வந்த சில மாதங்களே ஆன/சில மணி நேரங்களே  ஆன  புத்தம் புதுத் திரைப்படம்!

நமது XXX தொலைக் காட்சியில்! காணத் தவறாதீர்கள்!

இந்தக் கிரீச்சிடும் விளம்பரக் குரலை கேட்காதவர்கள் தமிழராகவே இருக்க முடியாது!அப்படி இருந்தாலும்,  நாங்க ஒத்துக்க மாட்டோம்!! அட்லீஸ்ட் தமிழ்நாட்டில் வசிப்பவராக, ஏன் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகளைப் பார்ப்பவராகக் கூட இருக்க முடியாது! ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் முன்னூறு தரமாவது கேட்டுக் கேட்டு நமக்கே சலித்துப்போய் இருக்கும்!

அதே மாதிரி, கடவுள் என்றொரு மாயை The God Delusion என்ற புத்தகத்தை எழுதிப் பரபரப்பாகப் பேசப்பட்ட ரிச்சர்ட் டாகின்ஸ் தனது பழைய வாதங்களையே புதிதாய்ச் சொல்கிற பிரச்சாரப் பீரங்கியோடு,  The Greatest Show On Earth   என்று இன்னொரு புதுப் புத்தகத்தையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். புத்தக வெளி வந்து அடுத்த வாரம் முடிந்தால் இரண்டு மாதம் ஆகிறது. புவனேஸ்வரி  விவகாரம் தீப்பற்றிக்கொண்டு எரிந்ததால்,  இங்கே அதைப் பற்றிய விமரிசனப்   பதிவை ரிலீஸ் செய்வது தான் கொஞ்சம் லேட்! புத்தகம் இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை. சீக்கிரமே அனுப்பிவிடுவதாக நண்பர் ஒருவர் உறுதி அளித்திருக்கிறார்.


விரைவில் வந்து விடும். அதற்கு முன்னாள், டாகின்ஸ் தன்னுடைய புதிய புத்தகத்தைப் பற்றி எண்ண சொல்லிக் கொள்கிறார் என்பதை ஒரு மூன்று நிமிட முன்னோட்டமாக இங்கே பார்க்கலாம்!



புத்தகத் தலைப்பாவது புதிதா அல்லது ஒரிஜினலா  என்று பார்த்தால், அதுவும்  கூட ரொம்ப ரொம்பப் பழசு தான்! 1952 இல் செசில் பி டிமிலி என்ற இயக்குனர் ஒரு சர்க்கஸின் பின்னணியில் இதே தலைப்பில் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார். சர்கஸ் வசூலை அதிகரிப்பதற்காக, அதன் நிர்வாகி, சர்கஸ் கலைஞர்களுடைய உயிருக்கே உலை வைக்கிற மாதிரி சில வேலைகளைச் செய்கிறார். ட்ரபீஸ் கலைஞர்கள், கோமாளிகளை மையமாக வைத்துப் பல திருப்பங்களுடன் எடுக்கப்பட்ட படமாக இருந்தது என்று ஒரு குறிப்பு சொல்கிறது.

இந்த இயக்குனரைப்பற்றிய இன்னொரு சுவாரசியமான தகவல். பைபிள், பத்துக் கட்டளைகள் என்று பிரம்மாண்டமான மத சம்பந்தமான படங்களையே எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே ஏன் என்று ஒருவர் கேட்டாராம்!

" இந்த விஷயம் இரண்டாயிரம் வருடங்களாக மார்க்கெட்டில் நிலைத்து நிற்கிறதே! அந்த ஒரு காரணம் போதாதா?" என்றாராம், செசில்  பி டிமிலி!

டாகின்ஸ் மாதிரி நாத்திகம் பேசுகிற நாத்திகர்கள் கூட அப்படித்தான்! ஏற்கெனவே சொல்லப்பட்டதை மறுத்து, அல்லது இழிவுபடுத்திப் பரபரப்பை உண்டாக்கும் அளவுக்குப் புதிதாக ஒரு நல்ல மாற்று எதையுமே கண்டு பிடித்துச் சொல்லிவிடுவதில்லை!  
 
மார்கெட்டில் எது அதிகமாக விலை போகிறதோ அதனுடன் மட்டும் போட்டி! இங்கே பிரபல பதிவர்கள் பதிவில் பின்னூட்டம் போட அலைந்து கொண்டிருந்தவர்கள் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! அப்போது தானே, சீக்கிரமாகப் பரபரப்புச் செய்தியாகவும், பிரபலமாகவும் ஆகிவிட முடியும்!



டாகின்ஸ், மெய்ப்பொருள் காண்பதறிவு, The God Delusion என்ற குறியீட்டுச் சொற்களை வைத்துத் தேடிப்பாருங்கள்! ஏற்கெனெவே இது பற்றி எழுதிய பதிவுகளைப் படிக்கலாம்!

oooOooo

படமே கதை சொல்லுமே! கூடவே கொஞ்சம் வரலாறு!


நேற்று நேருவின் பிறந்தநாள். காங்கிரஸில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு கே.நட்வர்சிங் நேருவுக்கு ஒரு வித்தியாசமான அஞ்சலி செலுத்தியிருக்கிறார்!

நேரு மறைந்து நாற்பத்தைந்து ஆண்டுகளாகியுமே கூட வரலாறு அவருக்கு நீதி வழங்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் கூடப் பரவாயில்லை! நேருவின் சாதனைகளுக்கு மதிப்பெண்களும் வழங்கியிருக்கிறார். பிரதமாராக நூற்றுக்குத் தொண்ணூறு மார்க்! வெளியுறவுத் துறையையும் நேரு தன் வசமே வைத்திருந்தார். வெளியுறவுத்துறை அமைச்சராக நூற்றுக்கு அறுபது மார்க்காம்!

நேருவின் மிகப்பெரிய தோல்வியே, இந்த மாதிரி ஆசாமிகளெல்லாம் மார்க் போடுகிற அளவுக்கு இருந்தது  தான்! போதாக்குறைக்கு எம் ஒ மத்தாய்  என்று ஒரு மலையாளி, நேருவின் அந்தரங்க உதவியாளராக இருந்தார். 1978 இல் விகாஸ் பப்ளிகேஷன்ஸ், தில்லி வெளியீடாக ஒரு புத்தகத்தில் நேருவுடன் கூட இருந்த அனுபவங்களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். புத்தகத்தில் எழுதியிருக்கிற அத்தனையையும் உண்மை என்று நம்ப முடியாது தான்!



இந்தப் படத்தைப் பாருங்கள்!  ஒரு படமே, சரித்திரத்தின் ஒரு அழுகிப்போன பக்கத்தைச் சொல்லி விடுகிறதே!


 இந்தப் படத்தின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கிப் படியுங்கள். நேருவிடம் கென்னெடி எரிச்சல் கொண்ட ஒரு  தருணமும் சொல்லப்பட்டிருக்கிறது.

இது வரலாறு அல்ல. வரலாற்றின் பக்கங்களைக் கரையான் அரித்துச் சிதிலமாக்கின தனி நபர் பலவீனங்கள்!

எவ்வளவு பெரிய கப்பலாக இருந்தால் தான் என்ன, சிறிய ஓட்டை கூட, கவனிக்காமல் போனால் கப்பலையே மூழ்கடித்துவிடும்! காங்கிரஸ் தன்னுடைய ஓட்டைகளைக் கவனிப்பதிலோ, சரி செய்து கொள்வதிலோ எப்போதுமே அக்கறை எடுத்துக் கொண்டதோ, அதற்கான சாமர்த்தியத்துடனோ இருந்ததே இல்லை!

காங்கிரஸ் மூழ்கிப்போவதில் எவருக்கும் அக்கறை இல்லை. காங்கிரசோடு, இந்த தேசமும் மூழ்கிப் போய்விட அனுமதிக்கப் போகிறோமா என்ன?


8 comments:

  1. வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப பக்கங்கள் எழுத முடியாது. பிறகு நீங்கள் வருத்தப் பட்டிருப்பது போல புவனேஸ்வரிகளைத்தான் தேட வேண்டும்.
    நீளமான பதிவுகள் அலுப்பைத் தருவது உண்மை. அதனாலேயே 'எங்கள்', முடிந்தவரை சுருக்கப் பதிவுகளைத் தருகிறது. மேலும் நீளப் பதிவுகளை வருபவர்கள் படிக்கிறார்களா என்பதும் சந்தேகமே...சில கீ வார்த்தைகளை வைத்து ஓரிரு பின்னூட்டத்தைப் பதித்துப் போய்விடுவதாகவே தோன்றுகிறது.
    நான் இங்கு புவனேஸ்வரியைப் பார்க்க வரவில்லை...நல்லவேளையாக இதற்கு முந்தையப் பதிவுக்கே பின்னூட்டம் போட்டு விட்டதால் அதுவே சாட்சியும் கூட!!
    கடவுள் என்கிற சித்தாந்தத்தை மறுப்பதே ஒரு நாகரீகமாக உள்ள இடத்தில் அந்தப் பதிவுகள் வந்த இடத்தில் நீங்கள் வந்து உங்கள் என்னத்தைச் சொன்னதைப் பார்த்து விட்டே நான் இங்கு வந்தேன்.
    படங சரித்திரத்தின் அழுகிப் போன பக்கத்தை சொல்லி விடுவதோடு, கீழே உள்ள ஆங்கில வரிகளும் கிளிக்கிப் பார்த்தால் கூட சின்னதாகவே தெரிவது அது சின்னத் தனமான விஷயம் என்பதால்தானோ?
    பதிவுகள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சொன்ன நான் பின்னூட்டத்தை நீளமாகப் போட்டதற்கு மன்னிக்க...

    ReplyDelete
  2. நீங்கள் சொல்லியிருக்கும் முதல் விஷயத்தை ஒரு ப்ரீ லான்சராக இருந்த கல்லூரி நாட்களில் இருந்தே அறிந்திருக்கிறேன். வாசகர் விருப்பம், நேயர் விருப்பம் எங்கே கொண்டுபோய் விடும் என்பதும் தெரிந்தது தான்!
    http://consenttobenothing.blogspot.com/2009/08/2_07.html
    இந்தப்பதிவிலேயே, அதைப் பதிவும் செய்திருக்கிறேன்!

    பிரச்சினை பதிவின் நீளம் மட்டும் அல்ல, பொழுதுபோக்கு அம்சம், சினிமாச் செய்திகள் மட்டுமே தமிழ் வலைப்பதிவுகளை இன்னமும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

    புவனேஸ்வரியைப் பார்க்க வந்ததால் தப்பு, பயம் ஒன்றும் இல்லை. நடிகர் சங்கத்தினர் உங்கள் வலைப்பக்கங்களுக்கு வந்து கண்டனக்கூட்டம் எல்லாம் நடத்த மாட்டார்கள்! விக்கிரமாதித்தன் கதையில் வரும் தாசி அபரஞ்சி போல, படத்தைப் பார்த்ததற்கே அந்தம்மா காசு கேட்கமாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்:-))

    இமேஜ் மீது மவுசை வைத்து கண்ட்ரோல் ப்ளஸ் மவுசின் சென்டர் பட்டனை முன்னும் பின்னும் உருட்டி, சிறிதாகவோ, பெரிதாகவோ பார்க்கலாமே!

    ReplyDelete
  3. //பிரச்சினை பதிவின் நீளம் மட்டும் அல்ல, பொழுதுபோக்கு அம்சம், சினிமாச் செய்திகள் மட்டுமே தமிழ் வலைப்பதிவுகளை இன்னமும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.//

    மறுக்க முடியாத உண்மை. :-( என்று மாறுமோ தெரியவில்லை. பார்ப்போம் தலைவா.

    ReplyDelete
  4. உங்களுக்கு வயசாகி போச்சு, அதனால தான் புவிகுட்டிய ரசிக்க முடியல!

    ReplyDelete
  5. சண்டேன்னா மூணு பதிவு கூட போடுங்க!
    ஒரே பதிவா போடாதிங்க!

    ReplyDelete
  6. அன்பின் வால்ஸ்,
    புவிகுட்டி ஒருபக்கம் இருக்கட்டும்! குட்டிக் குட்டி பதிவுகளாக நிறையப் படித்து என்ன கண்டீர்கள்? எதோ ஒரு இடத்திலாவது கொஞ்சம் விஷயங்களைத் தெரிந்து கொள்வோமே!

    ஒரே விஷயத்தைத் தொடர்ந்து படிக்க மூச்சு முட்டுவதாக ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்ததாலேயே இந்தப் பதிவில் மூன்று விஷயங்கள்! ஏதோ ஒன்றை மட்டும் படித்து விட்டு, அப்புறம் சௌகரியப்படும்போது அடுத்ததைப் படிக்க ஆரம்பிக்கலாம். முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறதே என்று நீங்கள் சொன்னதற்காகத் தான் இப்படி!

    எனக்கு வயசாகிவிட்டது உண்மைதான்! இந்த வயதில் 'அலைந்தால்' நன்றாக இருக்காது!

    ReplyDelete
  7. அப்புறம், நேயர் விருப்பம் ஒன்றே குறிக்கோள் என்றிருந்தால் எங்கே கொண்டுபோய் விடும் என்பதை முதல் பின்னூட்டம் அதற்கான பதிலிலேயே இருக்கிறதே!

    ReplyDelete
  8. ப்ளாக் எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் சமூக அக்கறையினாலோ, தொலைநோக்கு பார்வை இருப்பாதாலோ அல்லது நல்ல கருத்துக்களை மட்டும் பகிர்ந்துகொள்ளவேண்டுமென்று உயர்ந்த எண்ணத்திலோ ஆரம்பிப்பதில்லை.

    ஹிட்ஸ் பார்த்து, போட்டோ பார்த்து படிக்கவருபவர்கள்தான் அதிகம். இதற்காகவே என்ன தலைப்பு வைத்தால் படிக்க வருவார்கள் என்ற சூட்சுமம்கூட அறியவேண்டும்.

    ஒரு சிலரே தங்களின் திறமையை வெளிக்கொணர, வளர்த்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

    நானெல்லாம் நெட் ஆஃபிஸ்ல இருக்கென்ற ஒரெ காரணத்திற்காக ப்ளாக் ஆரம்பிச்ச ஆள் கிருஷ்ணா. இதனால் எனக்கு ஒருசில நல்ல நண்பர்கள் கிடைத்ததுதான் பாக்கியம்.

    (தலைப்புக்கும், சொன்ன விஷயத்துக்கும் சம்மந்தமில்லாம பேசுறேனோ!!)

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!