நாலாவது தூண்! புதுசு கண்ணா! புதுசு!




நாலாவது தூண்!

 இந்த மாதத்தின் முதல் பதிவு இது! பொதுவாக புத்தக விமரிசனம் எழுத இதுவரை முயற்சித்ததில்லை. எனக்குப் பிடித்த புத்தகங்களை, கவிதைகளை, செய்திகளை நண்பர்களோடு ஆவேசமாக விவாதித்திருக்கிறேன். நிறையத் திறனாய்வு, பட்டறைகளைப் பார்த்த பிறகு பேசாமல் இருப்பதே எவ்வளவு பெரிய வரம் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறேன்.


நல்ல புத்தகங்கள், ஒரு மனிதனைச் செதுக்குவதில் முக்கியமான கருவிகளாக இருக்கின்றன. அதற்கு முன்னால், எது நல்ல புத்தகம் என்பதை எப்படி, யார், எவருக்காக  வரையறை செய்வது? குறைந்தபட்சம் இதெல்லாம் மோசமான புத்தகங்கள் என்ற வரையறையாக எங்கேனும் ரெடிமேடாகக் கிடைக்கிறதா?


இன்னொருவர் சொல்வது அவர்வரைக்கும் வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர, உங்களுக்கும் பொருந்துவதாக வரையறையோ, வர்ணனையோ இங்கே எதுவுமே இல்லை.இந்தக் கேள்வியுமே கூட கிட்டத்தட்ட, கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது மாதிரித்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!


நீங்களே தான் உங்களுடைய சொந்த அனுபவங்களில் இருந்து, உணர்ந்து  உருவாக்கிக் கொண்டாக வேண்டும். அதுவரை எல்லாம் வெறும் ஊகங்களே என்பதால் தான், அதை மறுத்தோ, வெறுத்தோ கூடப் பேசமுடிகிறது, நம்மூர் நாத்திகர்களைப்போல! அதில் நான் காணும் ஒரே குறை, மறுத்துப் பேசுவதில்  காட்டும் ஆர்வத்தை, ஒரு மாற்றுக்கருத்தை முன்வைப்பதிலோ, அல்லது தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தோ சொல்ல முயற்சிப்பதில்லை என்பது தான்.


ஆக, சுயமுயற்சியே இல்லாத சோம்பேறித்தனம்  தான், மனிதனை கடவுள் நம்பிக்கை  என்பது தான் கேட்கிறஎல்லாவற்றையும் கொடுக்கிற அலாவுதீனின் அற்புத விளக்கு என்ற மாதிரி நம்பவைத்துக் கடைசியில் தன்னுடைய குடுமியை எவர் கையிலோ கொடுத்து ஆட்ட முடிகிற வரை பிடித்து ஆட்டும் ஆண்டவரே என்று ஜெபகோபுரங்களில் காணிக்கை செலுத்தி ஏமாற வைத்துக் கொண்டிருக்கிறது.


இதே சோம்பேறித்தனம் தான் இன்னொருபுறத்தில், கடவுள் இல்லவே இல்லை என்று கூவிக் கொண்டு, தன்னை மூட நம்பிக்கைகளில் இருந்து மீட்க வந்த புதிய மீட்பர்களாகவும், சமுதாயத்தைக் காக்க வந்த ரட்சகர்களாகவும் காட்டிக்கொண்டு நாத்திகம் பேசுவதுமே ஒரு  நிறுவனப்படுத்தப்பட்ட மோசடியாக ஆக்கிக் கொண்டிருப்பவர்களிடம் ஏமாற வைத்துக்  கொண்டிருக்கிறது. 


இந்த இரண்டு முரண்பட்ட நிலைகளுக்குமிடையில், இப்படி இருந்தால்.....என்ற கற்பனை கூட சுவாரசியமாகத் தான் இருக்கிறது! கற்பனைகள் கூட சமயங்களில் நிஜமாகி விடுவதுமுண்டு!

வெண்பூ said...
November 1, 2009 1:54 PM
நான் அவருடைய துளசி தளம் படித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த சஸ்பென்ஸ் த்ரில்லர்களில் முதல் சில இடங்களில் இருக்கும் நாவல் அது.. மற்ற கதைகள் படித்ததில்லை.


ஆனா நீங்க முழுக்கதையையும் முக்கியமா நாலாவது தூண் என்ன அப்படின்றத சொல்லியிருக்க வேணாம்னு படுது.. கதை படிக்கிறப்ப சஸ்பென்ஸே இல்லாமல் போயிடும். :(
பதிவர் வெண்பூ, இப்படி வருத்தப்பட்டுச் சொல்லியிருந்தார்.


கதைபடிக்கும்போது சஸ்பென்ஸ் போய்விடுமே என்பது அவருடைய கவலை! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, கதையின் சஸ்பென்ஸ் அது மட்டுமல்ல, என்று ஒடிசா ஃபைல் கதையின் முடிச்சு எப்படி ஒரு சின்ன விஷயம் என்பதையும் பதிலாகச் சொல்லியிருந்தேன். என்னுடைய பதிலைப் படித்தாரா, வருத்தம் தீர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை.


கோவையில் இருந்து முனைவர் கந்தசாமி, இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால், வாங்கிப் படிக்க ஏதுவாக இருக்கும் என்று பின்னூட்டம் எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பை, 1989 அக்டோபரில் சென்னை திருமகள் நிலையம் வெளியிட்டிருந்தது.

இருபது வருடங்களுக்கு முன்னால், திருப்பூர் குவியல் நிறுவனம் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கடை போட்டிருந்தபோது வாங்கின கதைப் புத்தகம் அது. பதிவை எழுதும் போது கதையை நினைவில் இருந்தே எழுதினேன், புத்தகம் எங்கிருந்தது என்று கூடத்தெரியவில்லை! இன்றைக்கு, நாலாவது தூணையும், இன்னும் ஐந்தாறு புத்தகங்களையும் தேடித் பிடித்துக் கொஞ்சம் படிக்க ஆரம்பித்த போது இன்னும் கொஞ்சம் சுவாரசியம் கூடியதே தவிர, குறையவில்லை.

பதிவர் வெண்பூ நினைப்பது போல, கதையின் ஒரு பகுதியை சொல்வதால் மட்டுமே எண்டமூரியின் கதைகள், அடுத்து படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு சுவை குறைந்து விடுவதில்லை.

கதை எழுத ஆரம்பிக்கும் போதே, ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது மூன்று திருப்பங்களையாவது வைத்துவிடுகிறார். கதையின் பிளாட் என்ன என்பதை நடுவிலேயே இந்தக் கதையில் மொத்தமாகவே சொல்லி விடுகிறார். வித்தியாசமான பாத்திரங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கதைக்களங்கள், என்று தேர்ந்த நெசவாளி சின்னச் சின்ன இழையாகப் பின்னிப் பின்னி ஒரு பட்டுப் புடவையை நெய்வதுபோல, கதையை கண்முன்னால் நிகழ்கிறமாதிரிக் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்.

அடுத்தடுத்து, எண்டமூரியின் கதைகளை மட்டுமே வாசித்தால், எங்கேயோ ஒரே மாதிரி  பொதுவான அடித்தளம் இருப்பதைப் புரிந்து முடியும்! ஒன்றிரண்டு கதைகளைத் தவிர, அனேகமாக அவர் எழுதி நான் படித்த அத்தனை கதைகளுமே ஆக்ஷன் கதைகள்தான்! படமாக எடுப்பதற்கென்றே கதைக் களத்தைத் தயாரிக்கிறமாதிரியான எழுத்து! அந்த நேரத்தில் பரபரப்பாக இருக்கும் செய்தி ஒன்றைப் பின்னணியில் (சுவராக) வைத்துக் கொண்டு சித்திரம் தீட்ட ஆரம்பித்து விடுகிறார்!

ஒரு அருமையான கதைசொல்லியாக எண்டமூரி இருப்பதைப் புரிந்துகொள்வதற்காக, நாலாவது தூண் புத்தகத்தில் இருந்து, ஒரு சில பத்திகள் மட்டும்! நிச்சயமாக கதையை முன்கூட்டியே சொல்லி, படிக்க நினைப்பவர்களுடைய ருசியைக் கெடுக்கிற spoiler இல்லை இது என்பதை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள்!
oooOooo

நாலாவது தூண் கதையின் அத்தியாயம் 11 பக்கம் 171-172
மேடையின் மேல் சுவாமியும் படியின் மேல் ஆதரவில்லாமல் விழுந்துகிடந்த பல்லவியும் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவள் பாதி நினைவிலும், பாதி மயங்கியும் விழுந்து கிடந்தாள்.

சுவாமிகள் கிட்டே வந்தார்.

அவர் நிழல் அவள் மேல் வந்து விழுந்தது. வெளியே ஜனங்களின் சந்தடி லீலையாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. அதை எதிரொலித்தாற்போலவே சிரிப்புச் சத்தம் காற்றில் தவழ்ந்து வந்தது.

"நான் சொல்லலையா பல்லவி! காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் பரவியிருக்கும் வீடு என்னுடையதுன்னு! அதன் நிழலில் தஞ்சம் புகுந்துக்கச் சொன்னேனா இல்லையா?.நீ கேட்கலை. என் முதல் தூணான அரசியல்-சூரியநாராயணன்-நீ ஹோம் மினிஸ்டருக்கு போன் பண்ணினபோது, அங்கேதான் இருந்தான். நிமிஷத்தில் விஷயம் எங்களுக்குத் தெரிந்துடுத்து. என் இரண்டாம் தூணான புத்திசாலித்தனமான லாயர் சதாசிவம் டில்லியிலிருந்து என்ன பண்ணனும்னு சொன்னான். என் மூன்றாவது தூண் தேவிதயாள்-எஞ்சிய ஏற்பாடுகளைக் கவனித்துண்டான். பலன்...? இதான்--இப்ப, இப்ப நீ இருக்கிற நிலைமைதான்!"


அவர் சிரிப்பு திரும்பவும் அவ்வெல்லை முழுவதும் அலையலையாகப் பரவிற்று.

"சென்ட்ரல் ப்யூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் டிப்டி டைரக்டரைக் கூடத் தன் காலுக்கடியில் வந்து விழச் செய்து விடுவான் இந்தப் பரமானந்த சுவாமி. இப்பச் சொல்லு பெண்ணே! இந்த நாட்டின் தலைவனாவதற்கு அவகாசமோ, அருகதையோ இருக்குங்கிறாயா, இல்லையா?"

அவள் கண்களைத் திறக்க முயன்றாள். கண்ணுக்குக் கீழே அடிபட்டிருந்ததால் பார்வை சரியாகத் தெரியவில்லை. ஒரு ஒளி மட்டும் கண்ணுக்குள் வந்து தாக்கிக் கொண்டிருந்தது. எழுந்து நிற்கக் கூடச் சக்தியில்லை. முகத்திற்கு முன்னால் வந்து, இன்னும் உயரமாய் ஒரு விக்கிரகத்தைப்போல நின்று கொண்டிருந்தார் சுவாமி.

"இப்பச் சொல்றேன் கேளு பல்லவி! என் நாலாம் தூண் எதுன்னு தெரிஞ்சுக்க இவ்வளவு நாளைக் கஷ்டப்பட்டாயோனோ?.அதென்னன்னு சொல்றேன், கேளு

என் நாலாம் தூண்--ஜனங்களின் முட்டாள்தனம்.
அந்தக் கடைசித் தூணை இப்போ உனக்கு பிரத்தியட்சமாய் காட்டினேன். பார்த்தாயோனோ என் விஸ்வரூபத்தை? இனி என்னை எதுதான் தடுத்து நிறுத்திவிடும்? வர்ற விஜயதசமி அன்னைக்கு விஜய சங்கை ஸ்தாபிக்கப்போறேன். ஜனங்களை பயந்து பீதியடையும்படி செய்வேன். செக்யூலரிசத்திலிருந்து மதத்தின் பக்கமாய்ப் போகச் செய்வேன். பாதுகாப்பு உணர்ச்சி போய்விட்ட ஜனங்கள்--அரசாங்கத்தை நம்பமாட்டாங்க. இதர மதத்தாரையும் நம்ப மாட்டாங்க.அதான் எனக்கு வேண்டியது.அரசாங்கம் இதர மதங்களைக் காப்பாற்றுவதில் ஆழ்ந்திருக்கும்போது, மக்களுக்கு இன்னும் அதிகமாய் மதத் தத்துவத்தைப் புகட்டுவேன். ஐ யாம் தி காட்! ஐ யாம் தி சுப்ரீம்! என் ஜனங்களைக் காப்பாற்றுவதற்காகவே அவதரித்திருக்கும் கடவுளின் அவதாரம் நான்......ஹா...ஹா...ஹா...ஹா!"

சாடிசமும் சாமர்த்தியமும் சேர்ந்து விட்டால் ஆபத்து. அப்படிப்பட்ட மனித உருவெடுத்த அரக்கனுக்கு முன்னால் ஆதரவின்றி விழுந்து கிடந்தாள் அவள்.

சி பி ஐ, சி ஐ டி போலீஸ், சட்டம், ராணுவம் --எதுவுமே தனக்கு முன்னால் நிற்க முடியாது என்பது போன்ற மிடுக்குடன் அங்கிருந்து அகன்றார் அவர்.
oooOooo


ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கும் நாலாவது தூண் என்று பத்திரிகைகள் தான் சொல்லிக் கொள்கின்றன.அரசியல் என்பது வெறும் பணபலத்தாலும், அடியாள் பலத்தாலுமே தீர்மானிக்கப் படும்போது, பண நாயகத்தைத் தாங்கிப் பிடிக்கப் பத்திரிகைகளுடைய தயவு அங்கு நிஜமாகவே தேவைப் படுவதில்லை.இருந்தாலும் தங்களால் எதையும் விலைகொடுத்து வாங்கிவிட முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவோ, அல்லது இதெல்லாம் தேவை இல்லை என்று தெரியாததாலோ பத்திரிகைகளோடு சமரசம் செய்து கொள்கிறார்கள், விலைகொடுத்து வாங்குகிறார்கள்!

பண நாயகத்தின் நான்காவது தூணாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது--ஜனங்களுடைய முட்டாள்தனம் தான்!

திடீரெனத் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்பவன், மலங்க மலங்க விழிப்பதைப் போல, ஹிந்து பத்திரிகைக்கு, காசுக்கு ஏற்றமாதிரி செய்திகளைப் பண்டமாற்றம் செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியாக இருக்கிற மாதிரி போன மாதக் கடைசியில் இருந்து செய்திக் கட்டுரைகளும், தலையங்கமும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. நேற்று (சனிக்கிழமை) கூட, திரு பி. சாய் நாத் எழுதிய விரிவான செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. என்ன பிரயோஜனம்?

தமிழ் நாடு அரசு இன்னும் நாற்பத்தாறு லட்சம் இலவசத் தொலைக் காட்சிப் பெட்டிகளை வழங்கப்போகிறதாம்! மின்வெட்டு இப்போது இருப்பதை விட இன்னும் ஒருமணி நேரமோ, இரண்டு மணி நேரமோ கூடினால் என்ன? எப்படியும் மாலையில் மானாட மயிலாட என்று எதையாவது பார்க்கும்போது மின்சாரம் இருக்கும் இல்லையா? இவைகளைப் பார்த்தாலே ஜன்மம் சாபல்யம் அடைந்துவிடாதா என்ன?

எதற்கு என்று இன்னமும் புரியவில்லை என்றால், பேசாமல் நமீதா என்று கூகுளில் தேடிப் படம் பார்த்து சாபல்யம் அடைந்துகொள்ளலாம்! இந்தப் பக்கங்களில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டாமே!
oooOooo
இங்கே கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உன்னைப்போல் ஒருவன் படத்தை வைத்துக் கமலை கிழி கிழி என்று பதிவர்கள் கிழித்துக் கொண்டிருந்தார்கள். பதிவில் எழுதிக் கிழித்து விட்டால் மட்டும் ....இந்த நினைப்புத்தானே நிறையப்பேருடைய பிழைப்பைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது?அது ஒழிக இது ஒழிக என்று கத்திக் கொண்டே இருப்பவன் தான் இங்கே முதலில் ஒழிந்துபோகிறான் என்ற அடிப்படை கூட ஏன் எவருக்கும் தெரிவதே இல்லை?


இங்கே நாலாவது தூண் கதையிலுமே கூட அந்த சாதாரண மனிதனைப் பற்றிய ஒரு திருப்பம் மிக சுவாரசியமாக இருக்கிறது. A WEDNESDAY திரைப்படத்தில் நஸ்ருதீன் ஷா சொல்கிற மாதிரி " a stupid common man" மாதிரி இல்லை.பாவம் கமல், உன்னைப்போல் ஒருவனை இதில் விட்டு விடுவோம்! எண்டமூரி கதாபாத்திரங்கள் எல்லோருமே ஒருவரை ஒருவர் மிஞ்சுகிறவர்கள், எவருமே ஏப்பை சாப்பை இல்லை.


அடுத்த அத்தியாயத்திலேயே கதாநாயகனும் வில்லனும் தங்களுடைய பலத்தை ஒருவருக்கொருவர் நிரூபித்துக் கொள்ளும் சுவாரசியமான திருப்பம், கதை அங்கேயே முடிந்து விடுவதில்லை அதற்கப்புறமும் இருநூற்றைம்பது பக்கங்கள், திருப்பம், திருப்பத்திற்குத் திருப்பம், திடீர்த் திருப்பம், அதிரடித் திருப்பம் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அந்த ஒரு சுவாரசியத்தை, படிக்க வருகிறவர்களைக் கட்டிப்போடுகிற ஜாலத்தை எண்டமூரியின் அத்தனை கதைகளிலுமே பார்க்கலாம்.எண்டமூரி சுவாரசியத்திற்கு நான் காரண்டீ! போதுமா!


இப்போது அத்தியாயம்12 பக்கம் 197-199 கொஞ்சம் ருசித்துப்பார்க்கலாம்:


அந்த ஹிட்லரைப்போல சினிக்கைக் கண் கொட்டாமல் பார்த்தான் ஆதித்யன். அவர் கார் புறப்படப்போனபோது, ஏதோ நினைவுக்கு வரவே, இறங்கி ஓட்டமாய் ஓடிப்போய்,"உங்களோடு இன்னும் இரண்டு நிமிஷம் பேசலாமா சுவாமி?" என்று கேட்டான் துணிவோடு. சுவாமியின் சைகையைப்பார்த்து டிரைவர் இறங்கி விட்டான். ஆதிதித்யன் காரை ஓட்டத் தொடங்கினான். ஆதித்யனின் காரைப் பின்னாடியே ஒட்டி வந்து கொண்டிருந்தான் . ஆனால் அந்த ஸ்பீடைப் பிடிக்க முடியாமல் விட்டு விட்டான்.


"என்ன சொல்லு?"


"நீங்க இவ்வளவு பெரிய மனுஷனா எப்படி ஆனீங்க?"


"அரசியல், பலம, கெட்டிக்காரத்தனம்--எல்லாம் என் சொத்துத் தான்." சிரித்தார்.


"ஆனால், நியாயம், சட்டம் எல்லாம் கூட இருக்கே சுவாமி?"


"இதெல்லாம் எதுக்குக் கேட்கிறாய்?"


"நான் உங்களோடு சேர்ந்தால் எந்த விதத்தில் பாதுகாப்புக் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கத்தான்."


"பைத்தியக்காரா--அப்புறம் பாதுகாப்பைப்பற்றிய பேச்சே கிடையாதே!"


"ஆனால் சட்டம்..?"


"சாட்சி இல்லாவிட்டால் சட்டம் இல்லை"


ஆதித்யனின் கையிலிருந்த காரின் வேகம் இன்னும் அதிகரித்தது. நூறு கிலோமீட்டர்களைத் தாண்டிவிட்டது. "உங்களோடு சேர்ந்துட்டால் பாதுகாப்புக்குத் தேவையே இராதுன்னு சொன்னீங்க. இப்போ உங்களுக்கே எந்தப்பாதுகாப்புமில்லையே!"


"என்ன..நீ என்ன சொல்கிறாய்?"


"நீங்க சொல்றது நிஜந்தான்! அரசாங்கமே உங்க கையில் இருக்கு. அரசியல் தலைவர்கள் உங்கள் பக்தர்கள். ஆனால், அரசியல் அதிகாரிங்களுக்கு பிரமோஷன் தாகம், தலைவர்களுக்குப் பதவிப் பாதுகாப்பு முக்கியம்.அவங்க சில நிபந்தனைகளுக்குட்பட்டுக் காரியம் பண்ணனும். உதாரணத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீங்க ஒரு பெண்ணின் காரில் ஏறினீங்க. அவளால் உங்களை ஒன்றுமே பண்ண முடியலை., காரணம்? அவள் அரசாங்க அதிகாரியானதால! நான் அப்படியில்லை, நான் என்ன வேணுமானாலும் பண்ணுவேன்."


"அப்படீன்னால்? என்ன பண்ணுவாய்?" சந்தேகத்தோடு கேட்டார்.


"அன்பு--இரக்கம் --தயாதாட்சண்யம் --இப்படிப்பட்ட எதுவுமே என்னிடம் இல்லை. இப்போது நீங்க புதிதாய்ச் சொன்ன பாடப்படி சாட்சி இல்லாவிட்டால் கேசும் இல்லை. அதையே உங்கள் மேல் பயன்படுத்தலாம்னு இருக்கேன்."


"என்னைக் கொல்லுவாயா?"


"கொல்ல  மாட்டேன், உன்னைப்போன்ற அற்பப்பிராணி எதிரியாயிருந்தால் போராமிட்டம் ரொம்ப ஜோராயிருக்கும். எனக்கு அது பொழுதுபோக்கு! உங்களுக்கு உயிருக்கும் சாவுக்குமிடையே போராட்டம்!"


"நீ யாரோட பேசராய்னு தெரியுமா?"


"இந்த நாட்டின் மிக குரூரமான ஆளோடு. விரைவில் இந்த நாட்டின் தலைவனாகிவிட வேண்டும் என்று தவிக்கும் ஒரு மனிதனோடு. தற்போது எனக்கு முன்னால் உயிரை உள்ளங்கையில் ஏந்திண்டு வந்துண்டிருக்கிற ஆளோடு! பரமானந்த சுவாமி! வீணாய்  என்னோடு தர்க்கத்துக்கு வந்துருக்கீங்க. பலனை அனுபவித்துத் தீருவீங்க." என்று காரை நிறுத்தினான். 

திரும்பித் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சுவாமியின் தலைமேல் பலமாய் ஒரு குத்து விட்டு, "கூட்டத்தில் என்னை அவமானப்படுத்தியதுக்கு இது! இதுக்கு சாட்சி இல்லை." என்றான். சிறிய குன்றின் மேலே இருந்தது கார். கீழே நகரத்து வெளிச்சம் நன்றாகத் தெரிந்தது.


சுவாமியின் முகம் சிவந்தது. அந்தப்பக்கமாய் இறங்கப்போனார். இம்முறை அந்தப்பக்கமாய் வந்து கன்னம் அதிரும்படி அறைந்தான்."இது சின்னப் பையனைக் கொன்றதற்கு. இதுக்கும் சாட்சியில்லை."


சுவாமி சீட்டில் மல்லாந்து விழுந்தார். ஆதித்யன் காரின் கதவை மூடிவிட்டான்.


"உங்க நாலாவது தூண் யாரு? சாதாரண மனுஷனா? இந்த நாட்டு சாதாரண மனுஷன் அவ்வளவு முட்டாளில்லை சுவாமி! அவ்வளவு கோழையுமில்லை, அதை உங்க முன்னாடியே நிரூபித்துவிட்டேன் இப்போது.  

சரி, தெய்வமாவதற்காக நீங்க ஜீவ இம்சை பண்ண மாட்டீங்க இல்லையா? இந்த நாட்டுக் குடிமகன், மனுஷனாய் வாழறதுக்காக உங்களைப்போலக் கயவர்களைப் பொறுமையாய்த் தாங்கிக் கொள்கிறான் பாவம்! வெடித்து விட்டால்....இதோ பார், இப்படி ஆயிடும் உங்க நிலைமை" என்று காரைக் கொஞ்சம் முன்னுக்குத் தள்ளினான். கார் பள்ளத்தாக்கில் இறங்கத் தொடங்கிற்று, சுவாமி உள்ளேயிருந்து கத்திக் கொண்டிருந்தார். கார் கற்களில் மோதித் திரும்பி நழுவி விழுந்துகொண்டே இருந்தது.


"பத்துக் கார் ஃபாக்டரிங்களை வைப்பீங்க இல்லையா சுவாமி? பிழைத்திருந்தால், புதுக் கார் வாங்கிக்குங்க. பெஸ்ட் ஆஃப் லக்."
oooOooo


இந்தப்பகுதியை மறுபடி மறுபடி படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு எழுந்த ஏக்கம் இது ஒன்று தான்! கதையில் வருகிற ஆதித்யனை மாதிரி, ஸ்டண்ட் வேலை, டகால்டிக்கு டகால்டி காட்டுகிற வித்தை கூடத் தெரிந்திருக்க வேண்டாம்.


ஸ்டுபிட் காமன் மேன் அல்லது அறிவுஜீவித்தனமான காமன் மேன் எல்லாம் கிடக்கட்டும்! கண்முன்னாலேயே இலவசங்களைக் காட்டிவிட்டு ஆயிரக் கணக்கான கோடிகளில் புரள்கிறவர்கள் நம்மூர் அரசியல் வாதிகள் என்பது தெரிந்துமே தேர்தலுக்குத் தேர்தல் ஏமாந்து கொண்டே இருப்பது மாற்றவே முடியாத தலை விதியா என்ன?


எப்போது விழித்துக்கொள்ளப்போகிறோம்?

8 comments:

  1. //நம்மூர் நாத்திகர்களைப்போல! அதில் நான் காணும் ஒரே குறை, மறுத்துப் பேசுவதில் காட்டும் ஆர்வத்தை, ஒரு மாற்றுக்கருத்தை முன்வைப்பதிலோ, அல்லது தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தோ சொல்ல முயற்சிப்பதில்லை என்பது தான்.//

    முரண்படுகிறேன்!

    ஆன்மீகத்தில் உங்களது அல்லது ஆன்மிகவாதிகளீன் அனுபவம் அனைத்தும் ஒருவித மயக்கதன்மை மட்டுமே!,ஆன்மீகவாதிகளின் அனுபவங்களை புனைவாக மட்டுமே பார்க்கமுடியும்!

    அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம், கஞ்சாவின் போதையும், சரக்கின் போதையும் சிவனையும், பெருமாளையும் காட்டும் என்றால் நீங்க நம்பவா போறிங்க, இல்ல அடிச்சி தான் பார்க்கப்போறிங்களா!?

    அது எப்படி சார் கடவுளை பார்க்க தியானம், புண்ணாக்கு பொடுசெல்லாம், கடவுள்னா கூப்பிட்டா வர வேண்டியது தானே, நாம அப்படியே உடம்பை வருத்தி கூப்பிடனுமாக்கும், சின்னபுள்ளதனமாவுள்ள இருக்கு!

    ReplyDelete
  2. //சுயமுயற்சியே இல்லாத சோம்பேறித்தனம் தான், //

    தேங்காய்குள் முத்து தேடிப்பாருங்களேன்!
    அதுவும் முயற்சி தானே!

    ReplyDelete
  3. //இதே சோம்பேறித்தனம் தான் இன்னொருபுறத்தில், கடவுள் இல்லவே இல்லை என்று கூவிக் கொண்டு, தன்னை மூட நம்பிக்கைகளில் இருந்து மீட்க வந்த புதிய மீட்பர்களாகவும், சமுதாயத்தைக் காக்க வந்த ரட்சகர்களாகவும் காட்டிக்கொண்டு நாத்திகம் பேசுவதுமே ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட மோசடியாக ஆக்கிக் கொண்டிருப்பவர்களிடம் ஏமாற வைத்துக் கொண்டிருக்கிறது. //

    இதையும் வியாபாரம் ஆக்கும் பட்சத்தில் அதையும் நான் எதிர்க்கிறேன்!
    குறிப்பாக இப்போதிருக்கும் தி.க.

    உலகமகா டுபாக்கூர் அமைப்பு அது!

    ReplyDelete
  4. //பண நாயகத்தின் நான்காவது தூணாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது--ஜனங்களுடைய முட்டாள்தனம் தான்!//


    :) :)

    ReplyDelete
  5. 1. மறுபடி படித்து விட்டு அப்புறம் சொல்லுங்கள்! அதற்குள் ஏன் அவசரம்?
    ஆத்திகர்கள் சொல்வது சரியில்லை என்ற உங்கள் வாதத்தை ஒருபக்கம் வைத்து விட்டு, நாத்திகர்கள் என்ன மாற்று சொல்லவருகிறீர்கள் என்று தானே கேட்டேன்! மாற்றுக் கருத்து என்ன சொல்லியிருக்கிறீர்கள்? அல்லது உங்களுடைய சொந்த அனுபவத்தில் இருந்து தான் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்ற கேள்வி அப்படியே இருக்கிறதே!

    2. களவும் கற்று மறந்தவனிடம் அடிச்சுப்பார்ப்பதற்கும் துவைத்துப்பார்ப்பதற்கும் என்ன மிச்சம் இருக்கும் என்று நம்புகிறீர்கள்?

    3. கவிஞர் வாலி, இப்போதிருக்கிற மாதிரி இல்லை, கொஞ்சம் தெளிவாகவே இருந்த அந்த நாட்களில் கதைவசனம் எழுதி, தேங்காய் சீனிவாசன் நடித்து கலியுகக் கண்ணன் என்று ஒரு படம் வந்தது, உங்களை மாதிரிக் கேள்வி கேட்பவர்களுக்கு எல்லாம் கொஞ்சம் உறைக்கிற மாதிரிக் கூட சில காட்சிகள் இருந்த நினைவு. முடிந்தால் சிடி கிடைக்கிறதா என்று பாருங்கள்! இந்தப் பக்கங்களிலேயே, கண்ணன் வந்தான் என்ற குறியீட்டை வைத்துத் தேடினால், ஏற்கெனெவே சொன்ன பதில் இருக்கும்.

    /தேங்காய்குள் முத்து தேடிப்பாருங்களேன்!/
    முங்குவானேன், முத்தெடுப்பானேன் என்று இருந்தால் மாங்காய்க்குள் கூடத் தேடலாம்!

    ReplyDelete
  6. /உலகமகா டுபாக்கூர் அமைப்பு அது/

    இந்த மாதிரி இரண்டு தரப்பிலுமே இருக்கிறது என்று கொஞ்சம் முந்தின வரிகளிலேயே சொல்லியிருக்கிறேனே!

    ReplyDelete
  7. //முங்குவானேன், முத்தெடுப்பானேன் என்று இருந்தால் மாங்காய்க்குள் கூடத் தேடலாம்! //

    இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு!


    நான் படிக்க படிக்க பின்னூட்டம் இடுவேன்!
    பின்னால பாருங்க இருக்குன்னா, பின் படித்த பின் பின்னூட்டம் இட எதுவுமே இருக்காது!

    ஏன்னா, எல்லாத்தையும் தான் நீங்களே சொல்லிவிடுகிறீர்களே!

    நான் என்ன சொல்ல!?

    ReplyDelete
  8. வால்ஸ்,

    நீங்கள் பின்னூட்டமிடுகிற பாட்டர்ன் என்னவென்று நன்றாகவே கவனித்திருக்கிறேன்!அதனால் தான் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமா என்ற எண்ணம் கூட வந்தது!

    சரி, நான் இனிமேல் எதுவும் சொல்லவில்லை! போதுமா?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!