நாலாவது தூண் ! ஒரு கதை! ஒரு விமரிசனம்!


நாலாவது  தூண்!

இது, என்டமூரி வீரேந்திர நாத் என்ற தெலுங்குக் கதையாசிரியர் எழுதிய புதினம் ஒன்றின் தலைப்பு!

சுசீலா கனக துர்கா என்பவ‌ர் மொழி பெயர்த்து தமிழில் என்டமூரி வீரேந்திர நாத் எழுதிய கதைகள் எழுத்தாளர் சாவி கொடுத்த ஊக்கத்தில் முதலில் சாவி வார இத‌ழிலும், பல புத்தகங்கள் நேரடியாகவே சுடச்சுட வெளிவந்த காலம் ஒன்று உண்டு.

ஆந்திரா வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டே பிரபலமான கதாசிரியராக பரிணமித்தவர் ஒரு கட்டத்தில் வங்கி வேலையை விட்டு விட்டு முழு நேர கதாசிரியராகவும் ஆனார். பல ஆங்கில நாவல்களின் தாக்கதோடு (காப்பியடிப்பது என்பது இன்னொரு பெயர்), உள்ளூர் சமாசாரங்களை மசாலா சேர்த்துத் தாளித்து, கதைகளை, பாத்திரங்களை  உருவாக்கின வேகம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது! இவருடைய கதைகள் தொடர்ந்து திரைப்படமாக எடுக்கப் பட்டன. சிரஞ்சீவி நடித்து பல வெற்றிப்  படங்களும் ஆயின.

இங்கே தமிழில் சுஜாதா ஒருவரைத் தவிர அனேகமாக மற்ற எல்லோருமே ஒரேமாதிரிக் கீற‌ல் விழுந்த ரெகார்ட் மாதிரி எழுதிக் கொண்டிருந்த நேரம் அது. துளசி தளம், மீண்டும் துளசி இந்த இரு கதைகளும் சாவி வார இதழில் தொடராக வந்தபோது, தமிழில் ஒரு புதிய வரவாகவே வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தவர் என்டமூரி என்றால், அது பொய்யில்லை.

வேற்று மொழிக்கதைகள் தமிழுக்குப் புதியது ஒன்றும் இல்லை. வி ச காண்டேகர் முதல் பல மொழிக் கதாசிரியர்களும் தமிழில் வலம் வந்திருக்கிறார்கள். சுத்தானந்த பாரதியார் லெ மிசரபில்ஸ் என்ற விக்டர் ஹ்யூகோவின் கதையைத் தமிழில் ஏழை படும் பாடு என்ற பெயரில் எழுதி, அதே பெயரில் திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

ரா.கி.ரங்க‌ராஜன் மொழி பெயர்த்து சில அருமையான ஆங்கில, ஃஃப்ரெஞ்சுக் கதைகள் குமுதம் பத்திரிகைக்கு எற்ற மாதிரி கிளுகிளுப்பான விஷயங்களைக் கொண்டதாக, இப்படி மொழிபெயர்ப்புக் கதைகள் தமிழில் வெற்றிகரமாக உலாவந்தது ஒருகாலம். எல்லாம் ஒரு சீசன் தான்! எவராவது ஆட்டத்தை ஆரம்பித்து, அதற்கு வரவேற்பு இருக்கிறது என்று தெரிந்தால் மற்றவர்களும் ஒரு ரவுண்ட் ஆட ஆரம்பித்து ஓய்ந்து, மறுபடி ஆரம்பிப்பது தான்!

இப்போதுகூட, தமிழில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன, யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லை! தவிர சொல்லிக் கொள்ளுமபடியாகக் கூடக் காப்பியடிக்கத் தெரியாதவர்கள் இங்கே அதிகம்!



எண்டமூரி வீரேந்திரநாத் கதைகள் சூடாக விலைபோகிற சாக்கை வைத்து, வேறு எழுத்தாளர்கள் தெலுங்கில் எழுதிய கதைகளையும் எண்டமூரி பெயரில் மொழிபெயர்த்துக் காசாக்கி விட்டார் என்று ஒரு பெண் எழுத்தாளர் எண்டமூரி பெயரில் வழக்குத் தொடர்ந்தார் என்ற சேதி கூட உண்டு! தொடர்ந்து வந்த வெற்றிகளின் வெளிச்சத்தில் எண்டமூரி நிறையவே தடுமாறி, தடம் மாறியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இந்த ஆந்திர தேசத்து எழுத்தாளனைப் பற்றி இதற்கு மேல் தெரிந்துகொள்ள எனக்கு விருப்பமிருந்ததில்லை. ஆனால், கதைகளை இன்றைக்கும் விரும்பிப் படிக்கக் கூடியவைகளாகத் தான் உணர்கிறேன்!

எண்டமூரி கதைகளை விரும்பிப் படிக்கும் வெறி பிடித்த வாசகர் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் இருந்த நேர்த்தி, அந்த நேரத்தில் பரபரப்பாக இருந்த செய்திகளை கதைக்களமாகத் தேர்ந்தெடுத்து, நிகழ்வுகளைப் பின்னும் லாவகம் --ஒரு தேர்ந்த திரைக்கதையைக் கண் முன்னால் நிறுத்துகிற மாதிரி லாவகத்தோடு எழுதினால் எவருக்குத் தான் பிடிக்காது?

ஜேம்ஸ் ஹாட்லி  சேஸ் நாவல்கள் கல்லூரி நாட்களில் ரொம்பப் பிடிக்கும். சேஸ் நாவல்களில் என்ன ஒரு கஷ்டமென்றால், கதையை, ரயிலிலோ, பேருந்திலோ பயணம் செய்கிற நேரம் மாதிரித் தேர்ந்தெடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வேண்டும். விட்டு விட்டுப் படிப்பதற்கோ, இரண்டாவது, மூன்றாவது முறை படிப்பதற்கோ ஏற்ற கதைகள் அல்ல என்ற எண்ணம் எனக்கு உண்டு.

எண்டமூரி கதைகளை, கொஞ்ச இடைவெளி விட்டுப் படித்தபோது கூட, அவை சுவாரசியமாகவே இருக்கின்றன. கதை சொல்லும் நேர்த்தி, கதையை விட வேகமாக இருக்கிறது என்பதாலோ என்னவோ,  எண்டமூரி இன்றைக்கும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார். இலக்கியம் படைக்கிற எழுத்துக்கள் அல்ல அவை என்றாலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட, ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தைக் கொண்டவை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, என்னுடைய சேகரிப்பில் இருக்கும் புத்தகங்களைத் தூசிதட்டிப் படிக்க ஆரம்பித்த கதைகளில், எண்டமூரி வீரேந்திர நாத் எழுதிய "நாலாவது தூண்" புதினமும் ஒன்று. தெலுங்கில் சிரஞ்சீவி, விஜயசாந்தி நடித்து வெற்றிகரமாக ஓடி, தமிழிலும் டப் செய்யப்பட்டு அதையும் பார்த்ததாக நினைவு.

நாலாவது தூண்!

ஒரு வழக்கமான முக்கோணக் காதல். கதாநாயகனை நேசிக்கும் பெண் ஒருத்தி, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் அவனுக்குத் தன்னுடைய காதலைச் சொல்கிறாள். கதாநாயகனுக்கோ அது வேறொரு பயந்தாங்குளிப் பெண் சொல்வதாகவே தொடர்ந்து  சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்து விடுகின்றன.பெண்தான் பயந்தாங்குளி. அவள் பாட்டியோ, பேத்தியை எப்படியாவது கதாநாயகனோடு சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று நினைப்பவள். இந்த கதாபாத்திரம் ரொம்ப சுவாரசியமான மாறுபட்ட குணாதிசயத்துடன்,அதாவது வால் பையன்களாகவோ, வால் பெண்களாகவோ இருப்பதற்கு வயது ஒரு தடையாக இருக்காது என்ற ரீதியில் இருப்பது!

இது ஒரு களம்.

ஒரு ஊழல் அரசியல் வாதி, அவனோடு ஊழல் மயமான அரசு இயந்திரம், சாமர்த்தியமுள்ள அடியாள் பலம், சிக்கல்களில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பிக்க உதவும் ஒரு சட்ட நிபுணர்,  இத்தனைக்கும் ஆதார சக்தியாக மூளையுள்ள ஒரு  சாமியார், இவர்களுடைய குற்றக் கூட்டணி இந்திய அரசியலையும் மீறி சர்வதேச அளவில் பரவத்தயாராயிருக்கும்சூழல்,  இதை எதிர்த்துப் போராட முடியாமல் தவிக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி  இவர்களைக் கொண்ட இன்னொரு களம்.

இந்த இரண்டு களங்களையும் ஒன்றிணைத்து, லாவகமாக கதையைப் பின்னியிருக்கும் நேர்த்திக்காகவே என்டமூரிக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்! தீரேந்திர பிரம்மச்சாரிகளும், சந்திரா சுவாமிகளும் இந்திரா காந்தி காலத்தில், ஒரு அதிகார மையங்களாக உருவாகியிருந்த பின்னணியை இவ்வளவு சுவாரசியமான கதையாக மாற்ற முடியும் என்று எவர் தான் ஊகிக்க முடியும்?

அந்தக் கதையில் வரும் சாமியார்,  நான்கு வலுவான தூண்கள் தன்னைத் தாங்கி நிற்பதாகவும், அந்த நான்கு தூண்களைத் தாண்டித் தன்னை எவரும் அசைக்க முடியாது என்று பீற்றிக் கொள்ளும் கட்டங்களில், முதல் மூன்று தூண்கள் இன்னார், இன்னார் என்று சொல்லிவிட்டு, நான்காவது தூண் எதுவென்பதை  கடைசி வரை சஸ்பென்சாகவே வைத்திருப்பதை இந்தக் கதையின் மிக வெற்றிகரமான உத்தியாக இப்போது கூடச் சொல்ல முடியும்!

அதைவிட, அந்த சஸ்பென்ஸ் உடைகிற நேரம், நாலாவது தூண் எது என்பதைக் கதாநாயகனுக்கும், தன்னுடைய விசுவாசமான கூட்டாளிக்கும் பெருமிதத்தோடு உடைத்துச் சொல்வதை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட, அட, ஆமா இல்லே! என்று ஆச்சரியத்தோடு, நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி, அதில் இருக்கும் உண்மையை  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது!

அது என்ன நாலாவது தூண்?

"ஜனங்களுடைய அறியாமை" அது தான் என் பலம்! இவர்களை எளிதில் ஏமாற்றிவிட முடியும், எனக்கெதிராக என்ன செய்ய முனைந்தாலும் அதைத் திசை திருப்பி விட்டு விட முடியும்!அது தான் நான் சொல்லுகிற நாலாவது தூண் என்று கொக்கரிக்கிறான் வில்லன் சாமியார்!

கதாநாயகன், எப்படி வில்லனுடைய ஒவ்வொரு தூணையும் அவனுக்கு எதிராகவே திருப்பி விடுவதில் வெற்றி பெறுகிறான் என்பதும், இந்த "நாலாவது தூணையும்" எப்படி வெல்கிறான் என்பதும் கதை! மங்களம், சுப மங்களம் என்று போட்டு, பதிவையும் முடித்துவிட ஆசைதான்!

ஆனால், நாலாவது தூண் ஜனங்களுடைய அறியாமை தான் என்று என் நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி தெரிந்த உண்மையை சொல்வதற்கு அச்சாரமாக அல்லவோ இந்தக் கதை, விமரிசனம் எல்லாம்!

கடந்த மே மாதம் நடந்த சட்ட சபை, பாராளுமன்றத் தேர்தல்களில் ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி காங்கிரசை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதாகப் புகழாரங்கள், புராணங்கள் ரேஞ்சுக்குப் பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்தன. குறிப்பாக, ஜலயக்ஞம் என்ற பெயரில், நீராதார வசதிகளைப் பெருக்கப் பெரும் திட்டங்களைத் தீட்டி, ஆந்திர விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்ததாக ஒரு கட்டுக் கதையும் தொடர்ந்து பரப்பப் பட்டது. சந்திரபாபு நாயுடு ஹைடெக் வசதிகளை மட்டுமே கவனித்தார், ஏழை விவசாயிகளைக்  கவனிக்கவே இல்லை என்று ஏழைப் பங்காளனாகக் காட்டிக் கொண்ட ரெட்டி ஆந்திர மக்களுக்குத் தங்களைக் காப்பாற்ற வந்த கடவுளாகவே தெரிந்ததிலோ, சந்திரபாபு நாயுடு திரும்பவும் தோற்றுப்போனதிலோ ஆச்சரியம் ஏதும் இல்லை.

நாலாவது தூண்! ஜனங்களுடைய அறியாமை! வலுவாகவே தாங்கிப் பிடித்தது!

ராஜசேகர ரெட்டி ஒரு விபத்தில் செத்தும் போனார். துரதிர்ஷ்டம் தான்! ஆனால் உண்மையான துரதிர்ஷ்டம்என்னவென்றால் , சாதரணமாக அல்லது வியாதி முற்றிச் செத்துப் போனவர்களையுமே  கூட, ராஜசேகர ரெட்டி செத்துப்போன அதிர்ச்சி தாங்காமல் செத்துப்போனவர்களாகத் தொடர்ந்து ஏறின எண்ணிக்கையில் தினம் தினம் பத்திரிகைகள் பட்டியலோடு வெளியிட்டுக் கொண்டிருந்தன!

நாலாவது தூண்! ஜனங்களுடைய அறியாமை! எவன்  செத்தாலும் ராஜசேகர ரெட்டிக்காகத்தான் என்ற எண்ணிக்கைப்  பிரதாபம், இங்கே பிரபல பதிவர்களுடைய ஹிட்ஸ் கவுண்டர் மாதிரி எகிறிக் கொண்டிருந்தது!

மகனை முதல் மந்திரியாக்க வேண்டும் என்ற "ஆதரவாளர்கள்" போராட்டம்! கட்சித் தலைமை கண்டு கொள்ளவில்லை! ஆனாலும் பத்திரிகைகளில் ஆதரவைத் தினந்தினம் பத்தி பத்தியாக எழுதிக் கொண்டுதான் இருந்தன!

இந்த மாத ஆரம்பத்தில், கடுமையான மழை வெள்ளத்தினால், ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் ஏராளமான உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டபோது, இதே அரசியல் வாதிகளோ, ஊடகங்களோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

"குறிப்பாக ஆந்திராவில் இந்த மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட  வெள்ள சேதத்தினால் ஆந்திர கர்நாடக மாநிலங்களில் 250 பேருக்கு மேல் பலி 15 லட்சம் பேர் வீடிழப்பு மற்றும்15000 கோடி அளவிலான பொருட்சேதம் முதலியவற்றிற்குக் காரணம், மழை மற்றும் இயற்கையின் சீற்றம் என்பதை விட  அரசியல்வாதிகளின் பேராசையும் ஆட்சியாளர்களின் அசட்டையும் கவனக் குறைவும் என்று வரும் செய்திகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன." என்று ஆரம்பிக்கிறது  என்றென்றும் அன்புடன், பாலாவின் வலைப்பதிவு ஒன்று. மேலும் இப்படிச் சொல்கிறது.

"ஏன் ஸ்ரீசைலம் அணையைத் திறந்து விட இத்தனை காலதாமதம்? இதற்கு மற்றெல்லாவற்றையும் விட முழு முதல் காரணம் ஆந்திராவின் பாழாய்ப்போன அரசியல்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆந்திராவின் முந்தைய இரண்டு முதலமைச்சர்களான மறைந்த ராஜசேகர ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடுவும் ஆந்திராவின் ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர்கள்.கிருஷ்ணா நதியின் அருகில் இல்லாத இந்த ராயலசீமா பகுதிக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு செல்லவேண்டும் என்ற இவர்களது ஆசைதான்  ஸ்ரீசைலம் அணையில் ஏற்கனவே நீர் ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்டதற்க்கு அதிகமாக நீரைத் தேக்கச் சொல்லும் அரசாணையை வெளியிட வைத்தது என்கிறார்கள். மேலும் குறிப்பாக ராஜசேகர ரெட்டியின் பேராசைக்குக் காரணம்  ராயலசீமா பகுதிக்கு குடிநீர் என்பதற்கும் மேலாக தன் மகன் ஜகன் மோகன் ரெட்டி பினாமி பங்குதாரராக இருக்கும் ப்ராமணி உருக்காலைக்கு தண்ணீர் தரவே இந்த ஏற்பாட்டை செய்தார் என்றும் சொல்கிரார்கள்.( இது ஆந்திர சட்டசபையிலும் பெரும் அமளியை முன்னர் கிளப்பியதை பலரும் அறிந்திருக்கலாம்)

இப்படி அளவுக்கதிகமாக சேமிக்கப் பட்ட நீரால் தளும்பிக் கொண்டிருந்த ஸ்ரீசைலம் அணையில் , வெள்ளப் பெருக்குடன் மோதிய கிருஷ்ணாநதி மேலும் முன் செல்ல முடியாமல் மோதிய வேகத்தில் பின்னோக்கிப் பாய ஆரம்பித்தது.முதலில் 150 கி.மி தள்ளியிருந்த கர்னூலை தாக்கிச் சூழ்ந்தது.கர்னூலில் அருகேதான் கிருஷ்ணா நதியும் துங்கபத்ரா நதியும் சங்கமிக்கின்றன.இப்படி முன்னேர முடியாமல் பின்னடைந்த கிருஷ்ணாவின் வேகத்தைத் தங்காமல் ஏற்கனவே வெள்ளப் பெருக்குடன் ஓடிய துங்கபத்திரையும் முன்னே பாய முடியாமல் தத்தளித்தது.

விளைவு , கிருஷ்ணா நதி கர்னூலை மூழ்கடித்தது."

நாலாவது தூண்! ஜனங்களுடைய அறியாமை! 

என்னால் என்ன செய்ய முடியும் என்ற அச்சமும் அலுப்பும்! மற்ற மூன்று தூண்களுமே கூடத் தேவை இல்லை இந்த ஜனங்களுடைய அறியாமை ஒன்றே போதும், எத்தனை ஊழல் செய்தாலும், எத்தனை கொடுமை செய்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு, தேர்தல் வரும் போது ஓட்டுப் பெட்டிகளையும் நிரப்புவதற்கு! 


நாலாவது தூண் என்று பத்திரிகைகளைத் தானே சொல்வார்கள் என்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

உண்மைதான்! அப்படித் தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.அக்டோபர் முப்பதாம் தேதி ஹிந்து பத்திரிகையின் தலையங்கம் ஒரு எச்சரிக்கைத் தகவலைச் சொன்னதற்கு அப்புறமும்  பத்திரிகைகளை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை!

பண நாயகத்தின்  நான்காவது தூணாக ஜனங்களுடைய அறியாமை இருக்கிற வரையிலும், பத்திரிகைகள்  "கவர்" கலாசாரத்தின் வெளிப்பாடுகளாகத்தான் இருக்க முடியும். ஆந்திராவிலும், மகாராஷ்டிரா மாநிலங்களில் விலை கொடுத்துப் போடப்பட்ட செய்திகள்   இந்த வருடம் நடந்த தேர்தல் சமயங்களில் எல்லை மீறிப்போய் விட்டதாக ஹிந்து பத்திரிக்கை மிகவும்  வருத்தப் பட்டிருக்கிறது.

"The new shame is the extensive and brazen participation of not insignificant sections of the news media, notably large-circulation Indian language newspapers in two of India’s largest States, Maharashtra and Andhra Pradesh, in this genre of corruption -- which a politician speaking at a Hyderabad media seminar memorably characterised as a “Cash Transfer Scheme” from politicians to journalists. Sainath’s article exposes the phenomenon of “coverage packages” exploding across India’s most industrialised State during the recent Assembly election. Candidates paid newspapers different rates for well-differentiated and streamlined packages of news coverage. Those who could not or would not pay for the packages tended to be blacked out. The Andhra Pradesh Union of Working Journalists has, on the basis of a sample survey conducted in West Godavari district, estimated that newspapers across the State netted Rs. 350 crore to Rs. 400 crore through editorial coverage sold to candidates during the 2009 Lok Sabha and Assembly elections. Some candidates even recorded the expenditure incurred in purchasing editorial coverage in their official accounts submitted to the ECI. With some senior journalists drawing its attention to this new-fangled cash transfer scheme in Andhra Pradesh, the Press Council of India has constituted a two-member committee to inquire into the matter. What to do about such a shocking breach of readers’ trust (which is unlikely to be confined to Andhra Pradesh and Maharashtra) by the so-called Fourth Estate will form the subject of a follow-up editorial."
 

ஆந்திராவில்,2009  தேர்தலில், வேட்பாளர்களுக்கு சாதகமாக தலையங்கங்கள் எழுதுவதற்காக மட்டும், முன்னூற்றைம்பது கோடியில் இருந்து நானூறு கோடி ரூபாய்கள் வரை கைமாறியிருப்பதாக, ஆந்திர மாநில உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எடுத்த சாம்பிள் சர்வே சுட்டுவதாகச் சொல்லியிருக்கிறது.

வேடிக்கை என்னவென்றால், இந்த செலவினங்களைப் பகிரங்கமாகப் பல வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவுக் கணக்குகளிலும் கான்பித்திருப்பதும், அதைக் குறித்து தேர்தல் ஆணையம் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் இருப்பதும்  தான்!

ஹிந்து நாளிதழில் இந்த மாதம் இருபத்தாறாம் தேதி வெளியான இன்னொரு கட்டுரையில், தேர்தல்களில் அதிக ஆளுமை செலுத்தும் ( அல்லது பயமுறுத்தும்) பணபலம் குறித்த தகவல்கள்  இன்னமும் கவலை கொள்ளச் செய்கின்றன.

"Your chances of winning an election to the Maharashtra Assembly, if you are worth over Rs.100 million, are 48 times greater than if you were worth just Rs.1 million or less. Far greater still, if that other person is worth only half-a-million rupees or less. Just six out of 288 MLAs in Maharashtra who won their seats declared assets of less than half-a-million rupees. Nor should challenges from garden variety multi-millionaires (those worth between Rs.1 million-10 million) worry you much. Your chances of winning are six times greater than theirs, says the National Election Watch (NEW)."
 
இப்போது சொல்லுங்கள் எது நாலாவது தூண்?

எண்டமூரி கதையில் வருகிற மாதிரி பணபலமும் அடியாள் பலமும் சேர்ந்து பயன்படுத்துகிற "ஜனங்களுடைய அறியாமை"?

அல்லது

ஏதோ எவரோ எப்போதோ சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளான
"பத்திரிகைகளே ஜனநாயகத்தின் நான்காவது தூண்!"?


எது சரி?





21 comments:

  1. //கதை சொல்லும் நேர்த்தி, கதையை விட வேகமாக இருக்கிறது என்பதாலோ என்னவோ, எண்டமூரி இன்றைக்கும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார். //
    எங்களுக்கும்.
    அவர் எழுதியிருக்கும் பணம் என்ற நாவல் மிகவும் பிடிக்கும். அந்தக்கதை சிரஞ்சீவி, சுகாசினி, விஜயசாந்தி, சில்க்ஸ்மிதா நடித்த திரைப்படமாக வந்துள்ளது.

    ReplyDelete
  2. இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்? சொன்னால் வாங்கி படிக்க ஏதுவாக இருக்கும்.
    கந்தசாமி

    ReplyDelete
  3. raittu.... romba periya padivaa irukku sir

    ReplyDelete
  4. படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்

    ReplyDelete
  5. @பாலராஜன் கீதா
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நாலாவது தூண் தமிழில்புத்தகமாகவும், தெலுங்கில் இருந்து சிரஞ்சீவி நடித்த படமாக டப் செய்யப்பட்டு வெளிவந்தே நிறைய வருஷங்களாகிவிட்டது. ஆனாலும் கூட, ஜனநாயகத்துக்கு நாலு தூண்கள் என்று சொல்கிறமாதிரி, அதற்கு எதிர்மாறான பண நாயகத்துக்குமே நாலு தூண்கள் என்று கதாசிரியர் சொல்வது எந்த அளவுக்கு இன்றைய சூழ்நிலையில் பொருந்திப் போகிறது என்பதை வருத்தத்தோடு ஒப்பீடு செய்வது மட்டுமே இந்தப்பதிவில் நான் எடுத்துக் கொண்ட கரு.

    @முனைவர் கந்தசாமி
    பாரதி பதிப்பகம், விசா பதிப்பகம், திருமகள் நிலையம் என்று பல பதிப்பாளர்கள், எண்டமூரியின் நாவல்களைத் தமிழில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். தற்சமயம் எங்கே எவரிடம் கிடைக்கும் என்ற விவரம் என்னிடம் உடனடியாகப் பகிர்ந்து கொள்கிற அளவுக்கு இல்லை. எனி இந்தியன் அல்லது உடுமியி டாட் காம் தளங்களில் முயற்சித்துப் பாருங்கள்!

    @தம்பி மேவீ
    பதிவு நீளமாக உண்மைதான்! விஷயம் இருக்கிறதா என்பதில் மட்டுமே நான் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் சொல்கிற விஷயத்தையும் கவனத்தில் வைத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. @வெண்ணிற இரவுகள்
    படிக்கப் படவேண்டியவர் அந்த எழுத்தாளர் மட்டும் தானா?
    பண நாயகத்தின் நாலாவது தூணாக இருக்கிற "ஜனங்களுடைய அறியாமை" அல்லது ஊர் எப்படிப் போனாலென்ன என்ற அலட்சிய மனோபாவம், அது முக்கியமாகப் படவில்லையா?

    ReplyDelete
  7. நான் அவருடைய துளசி தளம் படித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த சஸ்பென்ஸ் த்ரில்லர்களில் முதல் சில இடங்களில் இருக்கும் நாவல் அது.. மற்ற கதைகள் படித்ததில்லை.

    ஆனா நீங்க முழுக்கதையையும் முக்கியமா நாலாவது தூண் என்ன அப்படின்றத சொல்லியிருக்க வேணாம்னு படுது.. கதை படிக்கிறப்ப சஸ்பென்ஸே இல்லாமல் போயிடும். :(

    ReplyDelete
  8. வாருங்கள் வெண்பூ!

    கதையின் உண்மையான சஸ்பென்ஸ் அந்த நாலாவது தூணில் மட்டும் இல்லை, முள்ளை முள்ளால் எடுக்கிறமாதிரி, கதாநாயகனே....வேண்டாம் அப்புறம் மொத்த சஸ்பென்சும் போய் விடப்போகிறது!

    இந்தப் பதிவின் மெய்யான கருவே ஹிந்து நாளிதழில் அக்டோபர் மாதம் இருபத்தாறாம் தேதியும், முப்பதாம் தேதியும் வெளியான இரண்டு செய்திகளை மையமாக வைத்துத் தான்! நாலாவது தூண் என்று சொல்லப்படும் பத்திரிகைகள், எப்படி விலைபோய்க் கொண்டிருக்கின்றன என்பதைச் சொல்வது தான் என்னுடைய முக்கியமான செய்தி.

    அதற்கு இந்தக் கதையில் வருகிற வில்லனின் கொக்கரிப்பு, நாலாவது தூண் என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறாய்? ஜனங்களுடைய அறியாமை! என்று சொல்வதை, இங்கே பொருத்தமாக இருந்ததால் எடுத்துக் கொண்டேன்!

    சஸ்பென்ஸ் என்று நாம் நினைப்பது சமயங்களில் மிகச் சின்ன விஷயமாகக் கூட இருப்பதுண்டு. உதாரணமாக ஃப்ரெடெரிக் ஃபொர்ஸைத் எழுதிய ஓடிஸா ஃபைல் கதையில், யூதர்களைக் கொன்று குவித்த நாஜி ஒருவனைத் தேடி ஒரு பத்திரிகையாளன், தன்னுடைய எல்லாவற்றையும் பணயம் வைத்து அலைகிறான்.நாஜி கொலைகாரனைக் கண்டுபிடித்து, அவனை சிக்க வைக்கும் நேரத்தில், அவன் ஒரு கேள்வி கேட்கிறான்:"நீயும் ஒரு ஜெர்மானியன், மிகவும் இளைஞன். உனக்கும் எனக்கும் எந்த வழக்குமே இருந்திருக்க நியாயமே இல்லை. அப்படியிருக்க, நீ ஏன் என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இவ்வளவு அலைகிறாய்?"

    கதாநாயகன் சொல்லும் பதில் உண்மையிலேயே எவரும் முன்கூட்டியே முடிவு செய்திருக்க முடியாது என்பது தான் உண்மையிலேயே சஸ்பென்ஸ்.

    ReplyDelete
  9. அவரோட கதைகள் எதையுமே படிச்சதில்லை!

    சுருக்க சொல்லுதல் உண்மையிலேயே கஷ்டம் போல!

    ReplyDelete
  10. சுருங்கச் சொல்லுதல் என்றால் என்ன?

    சுருக்குகிறேன் என்ற பெயரில், விஷயத்தைக் கோட்டை விடுவதா? அல்லது, வெறும் மொக்கைகளிலேயே பதிவுலகம் சுருங்கிப்போய் விடத்தான் வேண்டுமா?

    நமக்குத் தெரிந்த அல்லது புரிகிற ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்கிறேன், அதற்கப்புறம் அதை வைத்துக் கொண்டு அதே மாதிரித் தோன்றுகிற இன்னொரு விஷயத்தைத் தொட்டுச் சொல்லுகிறேன். இந்தப் பதிவு நீளம் தான்! ஆனால் சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களின் சத்தியத்திற்கு முன்னால் அது பெரிய குறையா என்ன?

    விஷயம் முழுமையாக இருக்கிறதா, அல்லது சொல்லப்பட்டதில் உண்மை இல்லையா இப்படிக் கேள்விகள் மட்டும் ஏன் வருவதில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இல்லை!

    எண்டமூரி கதைகளில் அவர் பாத்திரங்களின் வழியாக அடிக்கடி இதற்கான விடையைச் சொல்லியிருக்கிறார்!

    ReplyDelete
  11. //இந்தப் பதிவு நீளம் தான்! ஆனால் சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களின் சத்தியத்திற்கு முன்னால் அது பெரிய குறையா என்ன?//

    நீங்கள் நினைத்திருந்தால் குறைத்திருக்கலாம்!
    நீங்கள் தான் நினைக்கவேயில்லையே!

    ReplyDelete
  12. / நீங்கள் நினைத்திருந்தால் குறைத்திருக்கலாம்!
    நீங்கள் தான் நினைக்கவேயில்லையே!/

    எனக்கு பள்ளி நாட்களில் ஒரு தமிழ் வாத்தியார் இருந்தார்.

    கஷ்டப்பட்டு, நெட்டுருப் போட்டுப் படித்ததைத் தேர்வில் யோசித்து யோசித்து விடையாக எழுதினால், பாவி வாத்தியான் என்ன எழுதியிருந்தது, சரியா தவறா என்று கூடப் பார்க்காமல், விரற்கடையால் அளந்து குத்து மதிப்பாக மார்க் போடுவார் என்ற ரகசியம் பின்னாட்களில் தெரிந்தது. ஒருக்கால் அந்த தமிழ் வாத்தியாருடைய பாதிப்பாகக் கூட இருக்கலாம்!

    பதிவுலகிலும் அந்த மாதிரி பதிவைப் படிப்பதற்கு முன்னால், அது எத்தனை மீட்டர் நீளம் என்று பார்த்து, அதற்குப் பின்னால் படிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்கிற வாத்தியார்கள் நிறைய இருக்கிறார்கள் போல!

    மேலே வால்பையனுடைய பின்னூட்டத்திற்கும், இங்கே சொல்லப்பட்ட பாவி வாத்தியான் கதைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை! சம்பந்தம் இல்லை!! சம்பந்தம் இல்லை!!!

    ReplyDelete
  13. //இப்போதுகூட, தமிழில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன, யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லை! தவிர சொல்லிக் கொள்ளுமபடியாகக் கூடக் காப்பியடிக்கத் தெரியாதவர்கள் இங்கே அதிகம்!
    //

    கலக்கல், உண்மைதான்.

    *****

    உங்கள் இலக்கிய வாசிப்பு அனுபவம் வியக்க வைக்கிறது. இதுல 5 விழுக்காடுகள் கூட எனக்கு வாசிப்பு அனுபவம் இல்லை.

    ReplyDelete
  14. //நாலாவது தூண்!

    இது, என்டமூரி வீரேந்திர நாத் என்ற தெலுங்குக் கதையாசிரியர் எழுதிய புதினம் ஒன்றின் தலைப்பு!

    ...இவருடைய கதைகள் தொடர்ந்து திரைப்படமாக எடுக்கப் பட்டன. சிரஞ்சீவி நடித்து பல வெற்றிப் படங்களும் ஆயின.
    //

    இந்த நாவலை பாதி படித்திருக்கிறேன். படிக்கும்போது நினைவுக்கு வந்தது, இது நாகர்ஜுனா, ஸ்ரிதேவி, சுஹாசினி நடித்த ஆக்கரி போராட்டம்

    //ஆந்திராவிலும், மகாராஷ்டிரா மாநிலங்களில் விலை கொடுத்துப் போடப்பட்ட செய்திகள் இந்த வருடம் நடந்த தேர்தல் சமயங்களில் எல்லை மீறிப்போய் விட்டதாக ஹிந்து பத்திரிக்கை மிகவும் வருத்தப் பட்டிருக்கிறது.//

    இதை லங்காரத்னா சொல்லும்போது 'ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத' கதைதான் நினைவுக்கு வருது.

    ReplyDelete
  15. தெலுங்குப்படத்தில் சிரஞ்சீவி, விஜயசாந்தி நடித்ததாகத் தான் என் நினைவு. நீங்கள் கொடுத்திருக்கும் விக்கிபீடியா/ஐஎம்டிபி சுட்டியில் இருந்து வேறு விவரம் தெரிந்துகொள்ள முடியவில்லை.

    பதிவின் மையக் கரு, படத்தைப் பற்றியது அல்ல! ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்று சொல்கிற மாதிரி, பண பலத்தின் நான்கு தூண்கள் என்பதைத் தொட்டுச் சொல்வது மட்டுமே! அந்தக் கருத்தை உள்ளடக்கி இருந்ததால், பதிவின் முதல் பகுதி, என்டமூரியைப் பற்றியும், அவர் கதைசொல்லும் விதத்தைப் பற்றியும் ஒரு சின்ன அறிமுகம், கதையின் ஒரு சிறு பகுதி இருந்தது.

    லங்காரத்னா?

    ஹிந்து ராமிடம் நாம் காணும் குறைகள் நிறைய இருக்கலாம், அது வேறு. அதில் வெளிவந்த செய்தியை ஒரேயடியாகப் புறக்கணித்து விடுவது என்பது வேறு. ஒரு உணர்ச்சி வேகத்தில் ஆடு நனைவதைப் பார்த்து ஓநாய் அழுவதாக உருவகப் படுத்துகிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  16. Yes. Akari Poraattam Cinema in Telugu. But Endamuri is Telugu's Sujatha. He, the writer brought some honour to Telugu story writing. In his stories he use to give stats in interesting manner including how many seconds that hero kissed her (?!), like that.

    Now he speaks lot in Educative platoforms' than writing. He also authored books (part from novels) like 'how to earn money' how to live long', how to avoid stress, like earlier Tamilvanan's

    Dhivakar

    ReplyDelete
  17. வாருங்கள் திவாகர் சார்!

    என்டமூரியைத் தமிழில் இருபது வருடங்களுக்கு முன்னால், சுஜாதாவைப் படித்த அதே வெறித்தனமான வாசக ரசனையோடு படித்திருக்கிறேன்.
    இப்போது Fourth Estate ஆகச் சொல்லப்படுகிற பத்திரிகைத் துறை எந்த அளவுக்குச் சீரழிந்திருக்கிறது என்பதைப் பணம் வாங்கிக் கொண்டு செய்தி போட்ட கதையை ஹிந்துவில் திரு பி.சாய்நாத் அம்பலப்படுத்தி எழுதிய முதல் கட்டுரையும், அப்புறம் வெளிவந்த தலையங்கமும் தான் இந்தப் பதிவுக்கு மூலக் கரு. நாலாவது தூண் கதையில் இதையே வேறுவிதமாக, தன்னுடைய சக்தியின் நாலாவது தூணாக, ஜனங்களுடைய அறியாமையைச் சொல்கிற பரமானந்த சாமிகள், கதையில் மட்டுமே அல்ல நிஜத்திலும் இருக்கிறார்கள் என்பது தான் சொல்ல வந்தது.

    அவருடைய பிற்காலப் பரிணாமத்தை, அவருடைய வலைப்பக்கங்களிலும் கொஞ்சம் படித்தேன். சுட்டியை பதிவிலுமே தந்திருக்கிறேன்.

    ReplyDelete
  18. ஜனங்களின் அறியாமை என்பதை விட அலட்சியப் போக்கு என்று சொல்லலாமா.. இன்றைய மக்களுக்கு அனைத்தும் தெரியும் - அரசியல்வாதிகளின் ஏமாற்று வேலை முதற்கொண்டு.. ஆனாலும் இவர்கள் ஏமாறுவது போல நடிக்கிறார்களோ என்ற சந்தேகமும் கூடவே வருகிறது.. (காலத்தின் கோலம்)

    பத்திரிகையாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு பரபரப்பான செய்தி மட்டுமே முக்கியம். ஒரு தீக்குளிப்பு நடக்கும்போது அதை தடுக்காமல் வீடியோ ஷாட் எடுத்துக் கொண்டு அதைப் பணம் செய்கிறவர்கள். அவர்களிடம் நியாயம், தர்மம் என்பதெல்லாம் எதிர்பார்க்கவே முடியாது. (நானும் ஒரு பத்திரிகையாளன்.. ஆனால் அரசியல் எழுதுவதில்லை என்பதால் தப்பித்துவிட்டேன்)

    ReplyDelete
  19. இல்லை திவாகர் சார்! இது அறியாமை தான்! அலட்சியப்போக்கு இல்லை. நம்மால் என்ன செய்ய முடியும் என்பது தெரியாமலேயே ஏமாந்துகொண்டிருப்பது ஒருவகையான அறிவின்மைதான்! அதே மாதிரி, நாம் எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றும் ஆகப் போவதில்லை,ஏதோ கிடைக்கிறதே அதையாவது வாங்கிக் கொள்வோம் என்ற அவலம், அதுவும் கூட ஒருவகையில்,அறியாமைதான். வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்துத் தட்டுக் காசு சம்பாதிக்கத் தெரிந்த சாமர்த்தியம், ஓட்டுக்கு எத்தனை தருவீர்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிற சாமர்த்தியம், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, ஏதோ ஒரு நாளைக்குத் தானே வருகிறது. அதுவும் கூட அனைவருக்கும் கிடைப்பது இல்லை! Winner takes all என்ற பிரிட்டிஷ் தேர்தல் முறைகூட ஊழல் செய்கிறவனுக்குத் தான் உபயோகமாக இருக்கிறது.

    ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியும் தான், ஆனால் என்ன செய்வது என்பதில் தெளிவில்லாத, அறியாத ஜனங்கள் தான், இவர்கள் தான் இந்த தேசத்து இனமானத் தலைவர்களுக்கும், ராஜசேகர ரெட்டி மாதிரி தண்ணீரில் கூட சம்பாதிக்கத் தெரிந்த அரசியல் வாதிகளுக்கும், சிபுசோரென், மது கோடா போல எல்லாவிதமான பெருச்சாளிகளுக்கும் நாலாவது தூண்! சாய் நாத் மாதிரி ஒருவர் மட்டும் எழுதி என்ன பயன்?

    எப்போதெல்லாம் சர்குலேஷன் சரிந்து விழுகிறதோ அப்போதெல்லாம் அரசை எதிர்த்து பரபரப்புச் செய்திகளை வெளியிடுவார் என்று அந்த நாட்களில் எக்ஸ்பிரஸ் கோயன்காவைப் பற்றி ஒரு கிண்டலான விமரிசனம் உண்டு. ஹிந்து வேறுரகம்!

    அரசுக்கு எதிரான செய்திகளை,ஹிந்து ராம்களும், தங்களுக்குவசதி படுகிற வரை பிரசுரிப்பார்கள்! விளம்பரவருமானம் குறைவில்லாமல் கொடுத்தால், அவர்களும் ஒரு கட்டத்தில், முன்பு எழுதியதையே மறக்கடிக்கும் விதமாக சாதனை மலர்கள் வெளியிடுவார்கள். வேறென்ன?

    ReplyDelete
  20. பதிவுலகத்தில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு வார்த்தை ரொம்ப நீளமாக இருக்கு. ஆனால் படிக்க வருபவர்கள் ஒரு உத்சேத கணக்கோடு தான் வருவார்களோ என்று நினைத்துக் கொள்வதுண்டு.

    இதையும் ஆராய்ந்து சுருங்கக்கூறின் என்ற கணக்கில் எடுத்துக் கொண்டு நீங்கள் சொல்வது போல சொல்ல நினைப்பதை அது எந்த அளவுக்கு பெரிதாக இருந்தாலும் சொல்லியே தீருவது என்ற கொள்கையை வைத்துக் கொண்டேன். காரணம் தேடி படிப்பவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள் என்பது கூகுள் தேடு பொறியில் குறிப்பிட்ட வார்த்தைகள் கொண்டு வருபவர்களை வைத்து பார்த்து என் எண்ணம் சரிதான் என்பதையும் புரிந்து கொண்டேன்.

    நிச்சயம் எதிர்காலம் அச்சு ஊடகம் மாறிப்போய்விடும். இப்போது நமது எழுத்துக்கு உரிய கவனிப்பு இல்லையே என்ற அங்கலாய்ப்பு என்பது தேவையற்றது. தளங்களை எவரும் கெடுக்காமல் அல்லது உடைக்காமல் இருந்தால் நிச்சயம் உலகம் அழியும் வரைக்கும் தமிழ் இணையம் இருந்து கொண்டே தான் இருக்கும். இந்த நோக்கத்தில் தான் உருப்படியான விசயங்களை முடிந்தவரைக்கும் எழுதி வைக்க ஆசைப்படுகின்றேன்.

    கண்ணன் சொன்னது போல உங்கள் வாசிப்பு அனுபவங்களுக்கு என்னுடைய பாராட்டும்.

    ReplyDelete
  21. வாருங்கள் ஜோதிஜி!

    //நமக்குத் தெரிந்த அல்லது புரிகிற ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்கிறேன், அதற்கப்புறம் அதை வைத்துக் கொண்டு அதே மாதிரித் தோன்றுகிற இன்னொரு விஷயத்தைத் தொட்டுச் சொல்லுகிறேன். இந்தப் பதிவு நீளம் தான்! ஆனால் சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களின் சத்தியத்திற்கு முன்னால் அது பெரிய குறையா என்ன?//

    இது இந்தப்பதிவில் வால்பையன் எழுப்பிய சங்கிலிப் பின்னூட்டங்களுக்குப் பதிலாக சொல்லியிருந்தது. அந்த நிலைப்பாடு என்வரையில் சரியாகத் தான் இன்னமும் தோன்றுகிறது.

    2009 தேர்தல் களங்களில் காசுக்கு செய்தி என்ற வியாபாரத்தைக் கொஞ்சம் கூட அசிங்கம் பார்க்காமல் ஊடகங்கள் செய்ய ஆரம்பித்த செய்திகள் வெளியே நாற ஆரம்பித்தது. தவிர அதே ஆண்டில் யாருக்கு என்ன துறை மந்திரிப்பதவி என்பதையும் வாங்கித்தருகிற அளவுக்கு, என்டிடீவீயின் பர்க்கா தத்தும் ஹிந்துஸ்தான் டைம்சின் வீர் சங்வியும் அதிகாரத் தரகு வேலையில் ஈடுபட்டிருந்தது அம்பலமாயிற்று.

    பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்வார்கள்!இங்கே இந்தியாவில் கதையே வேறு என்பதை ஒரு பழைய கதையை சொல்லி, இந்திய நடப்புக்களோடு பொருத்திச் சொல்ல வேண்டியது அவசியம் என்று பட்டதால், நீளம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று எழுதினேன்.

    இப்போதும் அப்படித்தான்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!