Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

சுயபுராணம்



   ஏர்டெல் இணைப்பு வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்து, பிஎஸ்என்எல் இணைய இணைப்பைத் தற்சமயம் உபயோகித்து வருகிறேன்.

ஒரு பொதுத்துறை நிறுவனம் எப்படித் தள்ளாடுகிறது, தள்ளாட வைக்கிறார்கள் என்பதை இன்னொரு பொதுத்துறை நிறுவனத்தில் முப்பது வருடம் பணியாற்றிய அனுபவத்தில் நிறையவே பார்த்திருக்கிறேன்-அனுபவித்திருக்கிறேன்.  முந்தைய காலத்தோடு ஒப்பிடும்போது, பி எஸ் என் எல் நிறையவே மாறியிருக்கிறது! ஆனாலும் வாடிக்கையாளருக்குத் திருப்தி ஏற்படுகிற விதத்தில் இருக்கிறதா என்றால், இன்னமும் இல்லை என்பதை வருத்தத்தோடு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

யாகூ அஞ்சலைத் திறக்க முடியவில்லை. பலதளங்கள் திறக்க மாட்டேன் என்று பிரவுசரில் மேலே சுற்றிக் கொண்டே அடம் பிடிக்கின்றன. சிலதளங்கள் அதைவிடப் பரிதாபம் ஐபிஎன் லைவ், தினமணி தளங்களின் முகப்பில் ஒருபகுதி லோடாகிறது. செய்திகளைக் காணோம். இரண்டு தெரு தள்ளி இருக்கும் நண்பருக்கும் ஆரம்ப காலத்தில் இதே பிரச்சினை இருந்திருக்கிறது. இப்போது இல்லை எக்ஸ்சேஞ்சில் இணையத் தொடர்புகளில் எழும் பிரச்சினைகளுக்கு உதவுவதற்கென்றே இரண்டு எண்கள் இருக்கின்றன. ஒன்றில் தொடர்பு கொண்டபோது, மிகக் கூலாக நாங்கள் வெறும் சர்வீஸ் ப்ரொவைடர் தான்! முப்பதாயிரம் சந்தாதாரர்களில் ஒருவர் நீங்கள்! மற்றவர்களுக்கு என்ன கிடைக்கிறதோ அது உங்களுக்கும் கிடைக்கும் என்று எந்த நம்பிக்கையில் சொன்னாரோ எனக்குத் தெரியாது! அவர் சொன்னபடி கிடைக்கவில்லை என்பதை, அப்போது கோளாறைப் பார்ப்பதற்காக வந்த தொழில்நுட்பப் பணியாளர் முன்னிலையிலேயே காண்பித்தாயிற்று!உதவி அந்த மட்டோடு அவர்கள் பக்கலில் நின்றுபோனது!

கூகிள் பஸ்ஸில் பகிர்ந்து கொண்ட போது நண்பர்கள் ஆர் போகனும் ஜீவ்சும்,பாலாஜி கிருஷ்ண மூர்த்தியும் சில தீர்வுகளைச் சொன்னார்கள். 
 ஓபன் டிஎன்எஸ்ஸுக்கு மாறியும் பலனில்லை!  கூகிள் டி என் எஸ் உபயோகித்துப் பார்த்தும் பலன் இல்லை. இன்றைக்கு பி எஸ் என் எல் எக்ஸ்சேஞ்சுக்குப் போய் நேரடியாக முறையிட்டு வந்ததில், JTO அம்மாவும் இன்னொரு தொழில் நுட்பப் பணியாளரும் நேரடியாகவே, அவர்களுடைய லேப்டாப்பையும் எடுத்துக் கொண்டு சோதனை செய்து பார்த்தார்கள். இன்னமும் சரியாகவில்லை. இணையத்தை பி எஸ் என் எல் வழியாகத் தொடர்பு கொள்வதில் ஏகப்பட்ட தடங்கல்கள் இருப்பதைக் கொஞ்சம் பொறுமை யிழந்துகொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொருநாளும் வெவ்வேறு விஷயங்களை விவாதிக்கும் தளங்களுக்குப் போய் நேரடியாக வாசிக்கும் பழக்கத்துக்கு, பி எஸ் என் எல் தற்காலிகமாகத் தடை விதித்திருக்கிறது.  
 
ஒரு பொதுத்துறைவங்கியில் இத்தனை நாள் பணியாற்றிவிட்டு, பொதுத் துறையை இங்கே எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதுதான் மிக வேதனைப்பட வைக்கிற விஷயம்! ஊழியர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. ஊழியர்கள், முன்பை விடப் பொறுப்போடு செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்!பொறுமையாகப் பதில் சொல்கிறார்கள். ஆனாலும் குறைகளைத் தீர்க்க முடியவில்லை.தங்களுடைய நிறுவனத்தில் என்ன நடக்கிறதென்றே அவர்களுக்கும் புரிவதில்லை.

பதினைந்துநாட்கள் தான் ஆகிறது!அதற்குள், என்னுடைய ஸ்கீமில் தரவிறக்க லிமிட்டாக இருக்கும் எட்டு ஜிபி தீர்ந்துவிட்டதாம்.இணைப்பு இப்போது கட்டைவண்டி போகிற வேகத்துக்கும் சற்றுக் கீழாக, 256kbps என்ற பெயரில் அதிலும் முக்கால் பங்கு வேகத்தோடுதான் இருக்கிறது. ஸ்கீம் மாற விண்ணப்பித்திருக்கிறேன்.

அதாவது, இணையத்தில் உலாவ எனக்கிருக்கும் குறைகளைத் தீர்த்து வைக்கும் பட்சத்தில்......!
  இணையத்தின் பக்கமே வராமல், இயல்பான வாழ்க்கைக்கு மாற முயற்சித்துப் பார்த்து...............

முடியவில்லை! 
 
இணையம் அந்த அளவுக்கு வாழ்க்கையின் அன்றாட செயல்பாடுகளில் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது.

ஒன்றிக் கரைவதும், முளைத்தெழுவதும்......!



மீபகாலமாக, சில வலைக் குழுமங்களில் என்னுடைய நேரத்தை கொஞ்சம் அதிகமாகவே வீணடித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது, திரும்பிப் பார்க்கும்போது சுளீரென்று உறைக்கிறது. இது முதல் தடவை அல்ல! ஏற்கெனெவே இப்படி சில குழுமங்களில் வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருந்து, பிறகு அதிலிருந்து விடுபட்டு வந்ததும் நடந்திருக்கிறது.இப்போது மறுபடியும்....!

ந்த முறை கொஞ்சம் அதிகமான, அழுத்தமான பாடத்தைக் கற்றுக் கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.இந்த அனுபவத்தைக் கொஞ்சம் கசப்பாக இருந்தாலும், எனக்குக் கற்றுக் கொடுத்த ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனுக்கு, தனிப்பட என்னுடைய நன்றியை சொல்லியாக வேண்டும்! தவிர இதுமாதிரியான கசப்பு எனக்குப் புதியதும் அல்ல!

னிதன் சமூகப் பிராணிதான்! ஒரு குழுமத்தில் என்னை அவர் விமரிசித்த மாதிரி சாதுப் பிராணி அல்ல!ஒருவருக்கொருவர் பழகி கருத்தோடு கருத்து என்று முட்டி மோதி அல்லது தோளில் கை போட்டுக் கொண்டு கதை சொல்லி எப்படியோ, ஒரு குழுவாக, சிறு சமூகங்களாக, விரிந்த சமுதாயமாக பரிணமிப்பதாக சமுதாய வரலாறு சொல்கிறது.அப்படிச் சொல்லப்பட்டாலும் கூட, கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால் அன்றும் சரி, இன்றும் சரி, இரண்டு விதமான போக்குகள் எதிர்மறையாக இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். தனிநபரின் கருத்து வெர்சஸ் பொதுக் கருத்து அல்லது பொதுவெளியில் ஒன்றித் தனிநபர் (காணாமலேயே) கரைந்து போவதாக இன்றைக்கும் பார்க்க முடியும்.

சேத் கோடின் தன்னுடைய பதிவில் இப்படி சுருக்கமாக சொல்கிறார்! வெளிப்படுதல் (emerging), ஒன்றுதல் அல்லது கரைந்து போதல் (merging) என்று இரண்டு விதமான தன்மைகளைத் தொட்டு,அதன் முடிவாகத் தன்னுடைய கருத்தைக் கடைசி வரியில் வைக்கிறார்.

ன்னுடைய இன்றைய அனுபவங்களோடு, ஒத்துப் போகிற இந்தப் பதிவைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்ததில், சில அடிப் படை உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. சேத் கோடின் சொல்வது இது:

Emerging is when you use a platform to come into your own. Merging is when you sacrifice who you are to become part of something else.

Merging is what the system wants from you. To give up your dreams  and your identity to further the goals of the system. Managers push for employees to merge into the organization.

Emerging is what a platform and support and leadership allow you to do. Emerging is what we need from you.

விவாதங்கள், குழுமங்கள்,கருத்துப் பரிமாற்றம் இவைகளில் எல்லாம் தன்னுடைய சிந்தனைப்போக்கை வளர்த்துக் கொண்டு வெளிப்படுவது ஒருவிதம்! இதில் தன்னை சமரசம் செய்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. வீணான போலித்தனங்கள் இல்லை.தன்னுடைய அடையாளத்தை இழக்க வேண்டிய அவசியம் ஒருபோதும் இருப்பதில்லை.

ருமித்தல் என்று சொல்லப்படுவது நேர் எதிர் ரகம்! இதில் நீங்கள் யார் என்ற சுயத்தை, எதிலோ ஒருமிப்பதற்காக, நீங்கள் இழக்க வேண்டி வரும்! அப்படி உங்கள் சுயத்தை இழந்தால் மட்டுமே நீங்கள் ஒருமிப்பீர்கள், ஏற்றுக் கொள்ளப்படுவீர்கள்!

நிறுவனங்களாகட்டும், உங்களைச் சுற்றியுள்ள சமூகமாகட்டும், நீங்கள் அதனுடன் ஒருமிப்பதையே எதிர்பார்க்கின்றன.

ங்களுடைய கனவுகள்,தனித்த அடையாளம், சிந்தனை,இப்படி எல்லாவற்றையும் உதறிவிட்டு, அந்த நிறுவனம், சமூகம் அல்லது ஒரு குழுவின் எதிர்பார்ப்புக்களோடு ஒன்றுவதையே நிர்பந்தம் செய்கின்றன. ஒரு நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், யாரோ ஒரு கண்காணி அல்லது மேலாளர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

முதாயம் அல்லது குழுமங்களை எடுத்துக் கொண்டால், அங்கேயும் யாரோ ஒரு தலைவர் அல்லது தல இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். இதன் விளைவு, ஒருவித ஜடத் தன்மைக்கு இட்டுச் செல்வதாகவே, சுயசிந்தனை அற்றதாகவே ஆகிவிடுவது தான் மிகப்பெரிய பரிதாபம்!

வெளிப்படுதல் என்பது, களங்களில் கிடைக்கும் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று  ஒரு நல்ல தலைமை உங்களிடமிருந்து விரும்புவது! எதிர்பார்ப்பதும் அதையே!

ரு விதை பூமிக்குள் விழுந்து, கிடைக்கும் ஈரம், வெப்பம் இதைப் பயன்படுத்திக் கொண்டு, பூமியைக் கீறி முளைத்து எழுவதையே இயற்கை ஆதரிக்கிறது!

தற்காகவும் சுயத்தை இழந்து ஏதோ ஒரு கும்பல், குழுமத்துடன் ஒன்றிக்கரைந்து ஜடமாக ஆவதற்காக நாம் படைக்கப்படவில்லை!!

சொன்னது சரிதானா? கொஞ்சம் சொல்லுங்களேன்!


பத்து இல்லைன்னா பத்தாதாமே!




என்ன இது? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!


இப்படி வடிவேலு டயலாக்ல எதுனாச்சும் எடுத்துவுடாதவங்கல்லாம் பதிவுலகத்தில் பிரபலம் ஆகவே முடியாதாமே, நெசந்தான் போல இருக்கு!


இன்னைக்குக் காலையில தான் பரிசல்காரன் பதிவுல, இப்படி ஒரு பின்னூட்டம் எழுதினேன்:"பத்து இல்லைன்னா பத்தாதுன்னு ஏதோ டூத்பேஸ்ட் விளம்பரத்துல வர சின்னப்பையன் மாதிரி, எங்க பாத்தாலும் பத்து'மயமாகிடப்போகுது! "


ஊழ்வினைவந்து உறுத்தூட்டும்னு சிலப்பதிகாரத்துல இளங்கோ அடிகள் அனுபவிச்சுத் தான் சொல்லியிருக்கார்னு இப்பத்தான் தெரிஞ்சது.



தீராத பக்கங்களில் பிடித்ததும் பிடிக்காததும் ஏழு என்று , மாதவராஜ் அவரை ஒரு சங்கிலிப் பதிவில் கோர்த்து விட்டதற்கு உடன்பட்டு எழுதிய பிடித்தவர், மிகவும் பிடித்தவர் என்று பதிவில், என்னையும் கோர்த்துவிட்டிருக்கிறார்!


ரொம்பவும் முன்னெச்சரிக்கையாக, "இப்ப நான் எனது நண்பர்களை இதில் சிக்க வைக்க வேண்டும், தலைப்பை மாற்றி விட்டதால் சிரமம் இல்லாமல் எழுதுவார்கள் என நம்புகிறேன்" என்றும் சொல்லிவிட்டு


4.கிருஷ்ணமூர்த்தி ஐயா(அவரே தான்) என்று இட ஒதுக்கீடும் செய்திருக்கிறார்!


பிடிச்சது, ரொம்பப் பிடிச்சது, பிடிக்காதது, சுத்தமாகவே பிடிக்கதுன்றதெல்லாம் என்னங்க? மாறிக் கொண்டே இருக்கும் அளவுகள், அபிப்பிராயங்கள் தானே! சிறுவயதில் பிடித்த விஷயங்கள், மீசை அரும்பும் பருவத்தில் மாறிப்போகும். தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக நினைத்துக் கொளும்போதோ, அதுவரை பிடித்ததெல்லாம் பிடிக்காமல் மாறிவிடக் கூடும், இல்லையா?


எனக்குப் பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா என்ற கேள்வியே அடிப்படையில் தவறு என்ற நிலையை அனுபவம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும், அது எந்த அளவுக்கு சரியாக இருக்கும், சாத்தியமானதாக இருக்கும், மாற்றத்திற்கு நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம் என்ற அம்சங்களே தீர்மானிக்கின்றன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.


பத்து இல்லைன்னா பத்தாதாமே!


வாங்க, அது என்னென்னன்னுதான் கொஞ்சம் ஒரு கை என்ன ரெண்டு கைவிரலையும் நீட்டி எண்ணிப் பாத்துடலாம்!


1.அரசியலில் ---


எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நாட்களில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனாவை அடுத்து ஆனா, கானாவை அடுத்துக் கானா என்று அடுக்குமொழி, எதுகை மோனை, அதையும் மூக்கினால் கரகரத்த குரலில் புரியாதபடி பேசுகிற தனித்தமிழ்வாணர்கள், செய்தித்தாளைப் புரட்டினால் கன்னித்தீவு கார்டூன் கதையைப் படிக்காமல் எப்படி இருக்க முடியாதோ, அந்த மாதிரித் தவிர்க்க முடியாதவர்களாகிப் போனார்கள்! அத்தனை உணர்ச்சி வெள்ளம்! முதிர்ச்சி இல்லாத இளம்பருவத்தில் பிடித்த அவஸ்தைகள் அவை!


எந்த வெள்ளமாக இருந்தால் தான் என்ன? வடிந்துதானே ஆக வேண்டும்?


வெள்ளிமூக்கு முளைத்தபிறகு, இது குதிரையல்ல, கழுதைதான் என்று தெரிந்து கொள்கிற நேரம் அவர்கள் ஆட்சிக் கட்டிலில் ஏறிய இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே வந்தபோது பிடிக்காமல் போனதும் இயற்கைதானே!


ஒரு நல்ல மாற்றாக உருவாகும் என்று நம்பி இணைந்த இடது சாரி இயக்கங்களுமே கூட, இந்த நச்சுச் சூழலில் நீர்த்துப் போனதையும் ஒரு ஓரத்தில் முனகலாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.


2.எழுத்தாளர்களில்---


என்னிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம், இது தான் என்று எல்லைகட்டிக் கொண்டு படிக்காமல், என் கைக்குக் கிடைக்கிற அத்தனை தலைப்புக்களிலும், எழுத்துக்களையும் படிப்பது ஒன்றுதான்! இருக்கிற ஒரே ஒரு நல்ல விஷயத்தையும், இப்படி சமயம் கிடைக்கும்போது தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி?


தமிழில் ஒவ்வொரு எழுத்தாளருமே, அவரவர்க்குக் கிடைத்த தளங்களில் முடிந்த வரை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்று ஒருவர் ஆங்கிலத்தில் துப்பறியும் சாகசங்கள் மாதிரித் தமிழிலும், தமிழர்கள் படித்து உய்ய வேண்டும் என்பதற்காகவே அந்த நாட்களில், லோகலைஸ் பண்ணி, உல்டா அடித்துக் கதைகள் எழுதியிருக்கிறார். லோகல் லைப்ரரியில் அவருடைய புத்தகங்களையுமே, கிடைத்தவரை படித்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா?


கல்கி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஆர்வி, பிவிஆர், பி எஸ் ராமையா, என்று என்னுடைய விருப்பப் பட்டியலில் அனேகமாக அத்தனை எழுத்தாளர்களுமே இருக்கிறார்கள்! சுஜாதாவை விட்டு விட முடியுமா? பாலகுமாரன், சீக்கிரமே அலுத்துப்போனார் என்றாலும் பட்டியலில் இருப்பவர் தான்!


பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட என்னை அதிகமாக மிரட்டிய ஒரே எழுத்தாளர் ராபின் குக் தான். நண்பர் டாக்டர் சுந்தரவடிவேல் இதைப் படியுங்கள் சார் என்று சிபாரிசு செய்த புத்தகம், தி ஃபீவர், இப்போது நினைத்தால் கூட சுரம் வந்து விடும்! அயன் ராண்ட் முதல், லியோன் யூரிஸ், இப்படி எத்தனையோ எழுத்தாளர்களை சகித்துக் கொள்ள முடிந்தவனை வெறுப்பேற்றுகிற புத்தகம் அது!


3.கவிதைகள், கவிஞர்கள்--


1980 ஆம் வருடங்களில் எங்களுக்குப் புதுவிதமான பைத்தியம் ஒன்று பிடித்திருந்தது. புதுக்கவிதை! மு.மேத்தா, வைரமுத்து, மீரா, இன்னும் நிறையப்பேர், புதிது புதிதாக புதிய வடிவங்களில் கவிதையாக கருத்தை எழுதிக்கொண்டிருந்தார்கள்! கணையாழி மாதிரி சிற்றிதழ்களுக்கு வாசகனாக்கி  வைத்த வேகம் கொண்ட மோகம் அது!தவமிருந்து படித்த பொற்காலங்கள் அவை! புதுக்கவிதைகளின் தோற்றமும் வரலாறும் என்று வல்லிக்கண்ணன் எழுதிய புத்தகத்தை எத்தனை முறை படித்து, நாங்களும் எப்படிப் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தோம் என்று இப்போது வர்ணிப்பது கொஞ்சம் ஓவர்!


ஒரு வாக்கியத்தில் இருக்கும் எட்டு அல்லது பத்து சொற்களை ஐந்து அல்லது ஏழு வரிகளில் உடைத்துப் போடுவதுதான் கவிதை என்றாகிப்போன பிறகு, இன்னமும் பிடித்திருக்கிறது என்று சொன்னால், பிடித்திருப்பது கவிதை அல்ல-பைத்தியம்!


4.பிடித்த நடிகர், நடிகை--


என்னிடம் இருக்கும் இன்னொரு நல்ல பழக்கம்,ஒரு திரைப்படம் பிடித்திருக்கிறது என்று தோன்றினால், அதை இரண்டாவது, மூன்றாவது தடவை பார்ப்பது மட்டும் தான்! சினிமா நடிகன், நடிகைக்கு எல்லாம் இதயத்திலோ, தெரு ஓரத்திலோ கோவில் கட்டுகிற அளவுக்குப் போய் விடுவதில்லை. அப்படிப்பட்ட முற்றிப்போன கேஸ்களைப் பக்கத்திலேயே அண்ட விடுவதில்லை.


தொழில் மட்டுமே நடிப்பு, நிஜ வாழ்க்கையிலும் அல்ல என்றிருப்பவர்களைப் பிடிக்கும்.. அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?!


5.செய்தித்தாட்கள், வார இதழ்கள்--


ஹிந்து, இன்றைக்கு என் பார்வையில் நம்பகத்தன்மை மிகவுமே குறைந்து போனாலும், பழக்கமாகி விட்ட படியால், சிறுவயதில் இருந்தே தொடர்ந்து படித்து வரும் நாளிதழ். தினமணியும், இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழ்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்த காலம் இருந்தது. இப்போது இல்லை.எகனாமிக் டைம்ஸ், தொழில் ரீதியாகப் படிக்க ஆரம்பித்து இன்றைக்கும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் நாளிதழ்.


அபத்தக் களஞ்சியம் ஆனாலும் சிறு வயதில் இருந்தே வீடுகளில் தவறாமல் வாசிக்கப்படும் பத்திரிகையான குமுதம் ஒருகாலத்தில் நான் விரும்பிப்படித்த பத்திரிகையாக இருந்தது, படிப்பதை நிறுத்திப் பல வருடங்கள் ஆகி விட்டன. அதே மாதிரி, ஆனந்த விகடன், கல்கி ஜூவி, என்று ஏராளமான இதழ்கள், இப்போது எதுவுமே என்னுடைய வாசிக்கும் பட்டியலில் இல்லை. நிம்மதியாக இருக்கிறது!


6.இசையமைப்பாளர்


இளைய ராஜா தான்! ரஹ்மான், ஹாரிஸ் என்று எவரெவரோ வந்தாலும் ராஜா ராஜா தான்! அவருக்கு முன்னால் ஜி.ராமநாதனைப் பிடிக்கும், எம் எஸ் விஸ்வநாதனைப் பிடிக்கும், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார் வேதா அவரையும் பிடிக்கும் !


7.திரைப்படப்பாடகர், பாடகி--


டி எம் எஸ் சுசீலா, பி பி ஸ்ரீநிவாஸ், ஜானகி, சந்திரபாபு, அனுராதா ஸ்ரீராம், ஹரிஹரன், முஹம்மத் ரஃபி, கிஷோர் குமார், முகேஷ் என்று அன்றும் இன்றுமாக இன்னும் நீளமான பட்டியல் இருக்கிறது. எஸ் பி பாலசுப்ரமணியம் இவர்களில் தனித்து உயரமான இடத்தில் இருக்கிறார்!


8.தலைவர்கள்---


சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக மகாத்மா காந்தி இருந்தார். வல்லபாய் படேல், லால் பஹதூர் சாஸ்திரி என்று உறுதியோடு செயல்படத் தெரிந்த தலைவர்கள் ஒரு பக்கம், இருபத்துநான்கு காரட் தங்கம் என்று இவர்களைச் சொல்ல முடிந்தால், இருபத்திரண்டு, இருபது, பதினெட்டு, பதினான்கு எனக் கொஞ்சம் கம்மியான தங்கங்களாக வேறு பலரும் இருந்தார்கள்.


இப்போதோ காக்கைப் பொன்னே எவ்வளவு பீற்றிக் கொள்கிறது!?


9.வலைக்குழுமங்கள்--


கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வலைக் குழுமங்களில் நான் இருந்திருக்கிறேன். வலைக் குழுமங்களில் ஒரு நல்ல கருத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஒரு வலைக் குழுமம் மின்தமிழ். தமிழ் மரபு அறக்கட்டளையின் அங்கமாக வெளிவரும் இந்தக் குழுமத்தைப் பற்றி என்னுடைய பல பதிவுகளில் தொட்டுப் பேசியிருக்கிறேன்,


ஒரு தனி வலைப்பதிவராக, நம்மால் ஒரு எல்லைக்குட்பட்டுத் தான் செயல்பட முடியும், அதுவே ஒரு குழுவாக என்றால், நிஜமாகவே பல நல்ல விஷயங்களை நடத்திக் காட்ட முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக மின்தமிழ் வலைக்குழுமம் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழிலும், ஆங்கிலத்திலும் இரண்டு வலைக் குழுமங்கள், இடது பக்கம் கூகிள் க்ரூப்ஸ் என்று இருக்கும் பகுதியிலேயே தொடர்புக்கான சுட்டி இருக்கிறது.




10..பதிவர்கள், பதிவுகள்--


தமிழில் கிட்டத்தட்ட நூறுக்கும் மேலான பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் கொஞ்சம் கம்மி தான், முப்பது! இது தவிர சில வலைக் குழுமங்கள், வலைத்தளங்கள் என்று ஒரு பரந்த வாசிப்பு இருக்கும் ஒரு வாசகனாக மட்டுமே என்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.


இதில் பிடித்த, அல்லது பிடிக்காதவை என்பது சொல்லப்படும் உள்ளடக்கத்தை வைத்து மட்டுமே வைத்து முடிவு செய்கிறேன். முனைவர் நா.கண்ணன் சொல்வது போல இங்கே நீங்களும் நானும் உரையாடிக் கொண்டிருப்பது ஒரு மின் வெளியில், மின்னெழுத்துக்களால் ஆன ஒரு உண்மைபோலத் தோன்றும் ஒரு மாயக் கண்ணாடி முன்னால் என்பதை நினைவு வைத்துக் கொண்டோமேயானால், இங்கே வெளிப்படுவது நம்முடைய சொந்த மன விகாரங்கள் தான் என்பது தெரியும்.


இதையும் கடந்து போக வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.


வால்பையன் திரு அருண் அழைப்புக்கு இது என்னுடைய பதில்! ஆர்வத்தோடு விவாதக்களங்களில் பங்கு கொள்ளும் துடிப்பான இளைஞருக்கு நான் செய்ய வேண்டிய மரியாதை!


வேறு எவரையும் சங்கிலியில் பிணைப்பதற்கு எனக்குத் தோன்றவில்லை!






வருகிற பாதையும், தொடர்கிற பயணமும்!





வலிகளை மறக்கக் கவிதையில் வடித்து எழுதிப்பார்த்ததும் ஒரு காலம்
வலிகளைக் கூட்டின கவிதை வரிகளை மறந்துமிருந்தது ஒரு காலம்!
எனக்கு மட்டுமே இப்படி ஏன் என ஏங்கித் தவித்ததும் ஒரு காலம்
தனக்கு மட்டுமே தாயின் பரிவு முழுதாய் வேண்டின சவலைப் பிள்ளையாய்
அழுதால் உன்னைப்பெறலாமே என யாரோ சொன்னதை நம்பினபோதில்
அழுதுபுரண்டு கதறின நேரம் அவள் வரவில்லை! ஒரு பதில் தரவில்லை!



சவலையழுதது! திவலையளவும் வினையணுகாமல் காத்திடவேண்டும்!
கேட்டது எல்லாம் தந்திட வேண்டும்! என்னைத் தனியன் ஆக்கிவிடாமல்
கூடவே இருந்தென்னைப் பார்த்திட வேண்டும்! கேட்டதனைத்தும் அதிகம் தான்!
விடையாய்க் கிடைத்ததோ பொருள் பொதிந்தவோர் மௌனம்தான்!
பாராமுகமாய் இருந்தாள் எனப்பெரும் கோபமும் வந்தது வீம்பு வளர்ந்தது.
தாயே! நீ இல்லை! நீ வெறும் பொய் தான்! அழுகை வெடித்தது ஆத்திரம் வந்தது!



நாத்திகம் பேசின காலமும் வந்தது! வாய் கூசாமல் ஏசின காலமுமானது
சாத்திரம், கோத்திரம் சொல்வது பொய்யெனத் தருக்கமும் வந்தது.
ராகுவின் பார்வையில் அப்படியிருக்கும் சோதிடம் சொல்லும் கணக்கு இது
சோதிடம் சொல்வதை நம்பவில்லை ஏளனம் செய்வதை நிறுத்தவில்லை
ஒவ்வொரு இருட்டும் பெருவெளிச்சம் வயிற்றில் சுமப்பதை அறிகிற
தருணமும் வந்தது ஒருநாள்! இருளைக் கிழித்துப் புலரும் வைகறை வந்தது!



ஒளிவரும் முன்னால் துயிலெழும் தன்மை வைகறை சொல்லும் குறியீடு!
ஒளிவர வேண்டும் மனிதர்கள் உணர்வில் விழிப்புச் சொல்லும் குறிச் சொல்லே!
தனித்திருந்த ஒருபோது! எதுநடந்தாலும் எனக்கென்ன என்று இருந்த பொழுதினிலே
என்னது என்பதைப் புரியச் சொன்னாள்! அப்போதெனக்கு ஒருசிறிதும் உறைக்கவில்லை!
பொறுத்துக்கொள்வது முதல்தேவை பொறுத்தால் அங்கே வரும் தீர்வு
பொறுமையிழந்தால் நோவும் வரும் வலிகூடும் பொறுத்திரு மகனே! என்று சொன்னாள்



அன்னை சொன்னது அப்போதெனக்கு ஒருசிறிதும் புரியவில்லை! எப்பொழுதும்போல்
ஒரு ஆர்ப்பாட்டம்! ஆடி அடங்கட்டும் என்றவள் காத்திருந்தாள். ஆடிமுடித்ததில்
சேர்ந்த வலி!தோற்றதில் விளைந்த அவமானம்! இரண்டும் சேர்ந்தால் என்ன வரும்?
திருப்புகழ் பாடத் தெரியவில்லை! குரைத்தல் தவிர்த்துத் தெருநாய்க்கு வேறென்ன வரும்?
தாயென்று நம்பியழைத்தேனே!நீயுமொரு தாய்தானோ? அடிமேலடி விழப்பார்த்திருந்தாயே! தயவில்லாதவள்நில்லாதென்முன்! போய்விடு! போய்விடு!



இததனைகோபம் ஏதுக்கடா? இரும்பாய் இருக்க ஆசைகொண்டால்
பழுக்கக் காய்ச்சி அடிமேல் அடிதான் மாற்றம் தரும்! தங்கமாய் இருந்து
நெகிழ்ந்திருந்தால், இத்தனை வாட்டம் வேண்டாமே! உனக்கேன் இன்னமும்
புரியவில்லை?குறுநகையோடவள் சொன்னாள் எனக்கோ கோபம் குறையவில்லை!
வாட்டுதல் இங்கே எதற்காக? இந்தச் சாக்குகள், ஆறுதல் எதற்காக?
வாட்டுவதுனக்குப் பெருஞ்சுகமோ? பிள்ளையைப் படுத்தல் தாயாமோ?



அழகாய் இருக்கிறதே உன் நீதி! ஜாலம் செய்யவா இது நேரம்?
புரியவில்லை அம்மா! போய்விடு என்னைத் தனியாய் இருக்கவிட்டு!
பொறுமித் தீர்த்தவன் கண்களிலே வெள்ளத்தைப் பார்த்துப் பரிவுடனே
அருமை மகனே! எத்தனை நேரம் அழுதாலும், வருகிற அனுபவம் நில்லாது!
வளர்ச்சி என்பதுமே வலியில் தான் பிறக்கும் என்பது தெரியாதா?
இருளில் இருந்து வெளிச்சம் பெறுவதற்கு வலிதான் பாதை!அறியாயோ?
 


அழுவதும் உதவாது! ஆற்றாமை உதவாது! புரிதல் இங்கே வேண்டுமென்றால்
அழுவதை உடனே நிறுத்திவிட்டு அனுபவம் சொல்வதைக் கேட்டுப் பார்!
வலியைத் தருபவள் தான் வலியையும் தாங்குகிறேன் இடையில் நீயேன் குழப்பம் கொண்டு
இது எனது! வலி எனது! என்பதும் எதற்காக? நீஎன்பதும் நானென்பதும் வெவ்வேறா?
விளையாட்டாய்ப் பிரபஞ்சம் இயங்கும் விதி இது தான்! விளையாடப் பழகிக் கொள்!
ஒவ்வொரு இருட்டுக்குள்ளும் பெருவெளிச்சம் கருவினிலே இருப்பதைப் பார்!



ஒவ்வொரு உண்மையுமே வெளிப்படும் தருணம் எதிர்நோக்கி இருப்பதும் பார்
இவ்விதமாகப் புரிந்துகொண்டால் வலியேது? துயரேது? சொல்லிவிட்டுப்போய் விட்டாள்!
சொன்னதென்பது  புரியாமல் என்னமோ ஏதோ செய்துவிட்டு அவத்தை கூடவுமே
என்னம்மே! விரைந்து நீ வா! கதறி அழுதவன் குரல் கேட்டு ஓடிவந்தாள்
எது நடந்தாலும் எனக்கொரு அன்னை இருக்கின்றாள், அவள் அதை நலமாய்ப் பார்த்துக் கொள்வாள்
சும்மாயிருப்பதுமே பெருந்தவம்தான்! சும்மா இருக்கப் பழகிக் கொள்! ஒளியும் வரும்!



வருகிற வேளை வரும்வரை என் பெயர் சொல்லி காத்து இரு! என்று சொன்னாள்
வைகறைப் பொழுதில் இருள்விலகும்! அவள் பெயர் சொல்வது என் வேலை!
எனக்கென்று தனித்தவொரு அடையாளம் இங்கில்லை எல்லாம் இங்கே அவள் சித்தம்
வருவது எல்லாம்அவள்தரும் அனுபவம் தான்! வலியோ, வழியோ அவளே
இருப்பதனால் நான் சுமப்பதென்று எதுவுமில்லை! இதுதான் நான் வரும் பாதை
வருகிற பாதை தொடர்கிற பயணம் எல்லாம் என் அன்னை காட்டுவதே!

 இது வேறோர் பதிவில் எழுதிய பின்னூட்டக் கவிதையின் விரிவு படுத்திய பதிவு


அ முதல் அஃகு வரை!


நான்கைந்து நாட்களுக்கு முன்னால் தான் இந்த எ பி சி டி தொடர் விளையாட்டை, ஒரு பதிவில் பார்த்தேன்! மல்டிலெவல் மார்கெடிங் மாதிரி, இந்தத் தொடர், ஸ்டார்ஜன் பதிவிலிருந்து, கோவி கண்ணனுக்குத் தொற்றி, என் வரை பரந்திருக்கிறது! லண்டனில் இருந்து திரு வெ.ராதாகிருஷ்ணன் சங்கிலியில் எல்லாம் இருக்கும் வரை என்ற தெம்போடு முந்திக்கொண்டிருக்கிறார்! யாஹூ!360 நாட்களில், இந்தமாதிரித் தொடர்கிற அல்லது ம்யூசிகல் சேர் விளையாட்டில் என்னை அழைத்தபோது, தயங்கித் தயங்கியே எழுதின ஞாபகம் இப்போது வருகிறது!

இப்போதும் கூடத் தயங்கியபடியே தான் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தேன். அதனால் தான், ஒரு நாள் தள்ளி, இந்தப் பதிவு வெளி வருகிறது.

கோவி கண்ணன் சொன்ன மாதிரி, அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்ற யோசனை, குழப்பமெல்லாம் இல்லை. எழுத, பேச வேண்டுமானால், ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன! தவிர, அடிப்படையில் நான் ஒரு வாசகன். என்ன எழுதப்படுகின்றன என்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து வருவதை மட்டுமே முக்கியமாகக் கொண்டிருப்பதால், என்ன எழுதலாம், அதையும் எப்போது எழுதலாம் என்ற எண்ணங்களே எனக்கு முக்கியமாகப்படுவதில்லை!


தவிர, இப்போது எழுதுவது, இந்த நேரத்து மன நிலையை ஒட்டி மட்டுமே இருக்கும், அதிலும், சொல்லாமல் விட்டதில் தான் அறிந்துகொள்வதற்கான தடையங்கலுமே இருக்கும் என்பதால், இதை வைத்து மட்டுமே என்னை என்றில்லை, எதையுமே முடிவு செய்து விட முடியாது என்றும் தோன்றுகிறது!
இன்னொரு வகையில், திரு கோவி.கண்ணன் சொன்ன மாதிரி, "நாலு பேருக்கு நம்மைப் பற்றித் தெரியணும்னா தொடர்பதிவு தப்பே இல்லை !" அப்படியும் வைத்துக் கொள்ளலாம்!இங்கே எதுவுமே .தப்பு இல்லை! தப்புவதும் இல்லை!!



1. A – A for Apple ன்னு சொல்வேன்னு தானே நெனச்சீங்க? உங்க ஆசைக்கு ஆப்பிள்னும், என் ஆசைக்கு Aravindhar என்று கூட வைத்துக் கொள்ளலாமே! All life is Yoga இது அரவிந்தருடைய அருமையான அமுதமொழி!

2. B – Best friend? : ஒருத்தன் தானே தான் தனக்கு முதல் நண்பனாகவும், முழு எதிரியாகவும் இருக்கிறான்!.அந்த வகையில், என்னையே பிரதிபலித்து,நிறையப்பேரில் பார்க்கிற வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆக, எல்லோருமே!

3. C – dictionary.com இல்  C என்று மட்டும் கொடுத்துத் தேடிப்பாருங்கள்! குறைந்தது பதினைந்து பிரயோகங்கள் வரும்! சி எனும் போது குறைந்தது பத்து நாவலாசிரியர்கள், அவர்கள் எழுதிய புத்தகங்கள் நினைவுக்கு வருகிறது.



4. D – Distinction தனித்துத் தெரிகிற திறமையும் நினைவு வரும்! Dooms Day என்று பயமுறுத்துகிறவர்களைப் பார்த்துச் சிரிப்பும் வரும்!


5. E அய்யே! இந்த வயசுல போயி ஈன்னு இளிச்சா நல்லாவா இருக்கும்? தவிர, எனக்கு ஈ புடிக்காது!


6. F – favorites...... ஹ்ம்ம்... நிறைய இருக்கே! பூக்களைப் பிடிக்கும்! புத்தகங்களைப் பிடிக்கும்! குழந்தைகளைப் பிடிக்கும்! நல்ல தமிழ் பிடிக்கும்! சொல்லிக்கொண்டே போனால் நிறைய வருஷமும் பிடிக்கும்!


7. G – G ன்னதும் Guns of Navarone, Gregory Peck ன்னு நிறைய ஞாபகம் வரும்! கோவிந்தா என்று நாமம் சொல்லும்  நினைவும் வரும்!



8. H – Hometown? - சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கம், பிறந்ததோ செட்டிநாடு, சொந்தமாகிப்போனது,ஒண்ட வந்தது, அடைக்கலம் தந்தது மருதேய்ய்ய்ய்ய்! என்ன கொஞ்சம் அழுக்கா, வேர்வைக் கசகசப்பா, எங்க திரும்பினாலும் ஜனங்க கூட்டம் கூட்டமா, பேச்சுல கொஞ்சம் அராத்தா...பேசிப் பழகினதுக்கு அப்புறம் ரொம்பப் பாசக்காரப்பயலுவளா,அப்புடி, இப்புடி, எப்புடிப் பாத்தாலும், மருதை, மருதைதான்! மருதையச் சுத்தின களுத கூட மருதயை விட்டுப் போகாதுன்னு, அதுனாலதான் சொன்னாங்களோ!


9. I – Indulgence-- ஆசை, ஆவலாதிஎல்லாம் காலாவதியாகிப் போச்சு! ஆசை அறுமின்! ஆசை அறுமின்! ஈசரோடாயினும் ஆசை அறுமின்! இது தான் இப்ப ஓடிட்டிருக்கும் ஒரே indulgence!


10. J ஜெ'ன்னா, தி.ஜானகிராமன்! அதுக்கப்புறம்,ஜெ'ன்னா ஜெய காந்தன்! ஜெகசிற்பியனை மறக்கலாகுமோ? ஜெ' வரிசை கொஞ்சம் பெரிசு! வாசிப்பு அனுபவத்தை மிக இயல்பான தவமாக ஆக்கிக் கொடுத்தவர்கள் இவர்கள்! அவ்வப்போது, ஜெயமோகனும் கொஞ்சம் ஈர்க்கிறார்!


இன்னொருத்தரை இதிலும் சேத்துக்கலாம், அடுத்த எழுத்துக்கும் சேத்துக்கலாம்! ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி!


11. K – Kids & their names? ஒரே பையன்தான்! சரியான வால்பையன்! வாசுதேவன்!


12. L – Life is incomplete without? - Life, Love எல்'லுன்னு ஆரம்பிக்கும்போதே , ஒண்ணு இல்லாம, மத்தது கிடையாதுன்றதும் தெரியணும்! தெரிஞ்சுக்கறது தான் வாழ்க்கையோட உண்மையான தேடலே! தெரிஞ்சப்புறம், இதுவேற அதுவேறன்றதே இல்லாம ஆயிடணும்!



13. M – Marriage date? ஒரு படத்துல நாகேஷ் "ம்ம்ம்ம்மாட்டிக்கினான்!"ன்னு ம்ம்ல கொஞ்சம் அழுத்தம் கொடுத்துச் சொல்வாரே, நினைவுக்கு வருகிறதா? நான் ம்ம்ம்ம்மாட்டிக்கினு அடுத்த மாசம் இருபத்தோராம் தேதியோட இருபத்தோரு வருஷம் நிறையுது!


14. N – No Entry! இது நோ என்ட்ரின்னும், வாத்தியார் மாதிரி,'நான் சொல்றதைத் தான் கேக்கோணும்! கேள்வி ஏதும் கேக்கக் கூடாது'ன்னு சொல்லும் போது, பீச்சே மூர்னு 'இங்க திரும்பி வராதே'ன்னு சொல்லும்போது கேள்வி நிறையக் கேக்கத் தோணும்! இந்த மனோபாவத்தை, ஆசிரியப் பணியாற்றும் சில பதிவர்களிடம் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்! என்னிடம் இந்த சுபாவம், மறந்தும் ஒட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதில் கவனமாகவும் இருக்கிறேன்!


15. O – Oranges or Apples? இதுல எதுக்கு ஓர வஞ்சனை! ஸ்டார்ஜன் சொன்ன மாதிரியே, இதுல ஆறு!(ஆரஞ்சி!) அதுல அஞ்சு!(ஆப்பிள்)ன்னு சொல்லிட்ட்ப்போச்சு! இங்க, இந்திய தேர்தல் முறைகளில் இருக்கும் குறைகளைக் கண்டு கொதித்துப் போன போது, இரண்டு மூன்று வருடங்களாகத் தேர்தல் வருகிற நேரத்தில் மட்டும், ஒரு ஓவோ, இரண்டு ஓவோ இல்லை 49(O) அப்படீன்னு ஒரு சத்தம் கேட்கும்! ரெகுலர் தேர்தல்னா ஐநூறா, ஆயிரமா, இல்லே திருமங்கலம் மாதிரி இவங்க நாலாயிரம்னா அவங்க மூவாயிரம், இடைத்தேர்தல்னா ஜாலிதான்னு ஜனங்க, மானாட மயிலாடற ரேஞ்சுக்குப் போன வளர்ச்சியைக் கண்ட பிறகு 
49 O' ன்னாலே  எனக்குக் கொஞ்சம் அலெர்ஜி!


16. P – Phobias/Fears? இது இல்லாத உயிரினம் எது? நேரடியாகத் தெரியாவிட்டாலும், இந்த ஒரு அச்சமே, உயிரினங்களின் வளர்ச்சிக்கும், அழிவுக்கும் காரணமாக இருப்பதை மறுக்க முடியுமா? இன்றைக்கு ஹிந்து நாளேட்டில், முதல் பக்கச் செய்தி! காசாப் பகுதியில் இஸ்ரேலி ராணுவம் திட்டமிட்டே,சிவிலியன்களைப் படுகொலை செய்தது என்று ஒரு விசாரணை அறிக்கை வெளிவந்திருக்கிறது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல்! அது நேற்று! இன்றைக்கு ஒன்றுக்குப் பத்து, நூறு, ஆயிரம், லட்சம்! எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?


17. Q – Quote for today? : “All life is Yoga” - Sri Aurobindo. வாழ்க்கை முழுவதுமே யோகம்! யோகம் என்பது, உலகத்தைத் துறப்பது அல்ல, உலகத்து நடப்புகளில் இருந்து விலகி இருப்பதும் அல்ல.இந்த நேரத்தின் அவசியம்,விழிப்புணர்வில் ஏற்படும் மாற்றமே! ஸ்ரீ அரவிந்தரை வணங்கி,அவருடைய அமுதமொழிகளை உள்வாங்கி, ஒளிபொருந்திய பாதையில் பயணிக்கவே இவன் செய்யும் பிரார்த்தனையும்!


18. R – Reason to smile? : இடுக்கண் வருங்கால் நகுகன்னு சொல்லிட்டுப்போயிட்டாங்களே! அதுக்காகவாவது..:-))


19. S – Season?   இங்கே டீவீக்காரங்க அடிக்கிற கூத்து, சீசன் ஒன, சீசன் டூ, சீசன் த்ரீன்னு போயிகிட்டே இருக்கறதால, சீசன்ற வார்த்தையைக் கேட்டதுமே அலெர்ஜியாத்தான் இருக்கு!

அட, நீங்க பருவகாலத்தைச் சொன்னீங்களா? வசந்தகாலம் தான்!


20. T – Tag 4 People? நாலெல்லாம் கம்மி! அப்ப...நாப்பது, நானூறு, நாலாயிரம்? அதுவும் கூடக் கம்மியாத்தான் தோணுது! அதனால, படிக்க வர்ற எல்லோரையுமே! இஷ்டமிருந்தாக் கோத்துக்கலாம்!

இல்லேன்னா, ஒரு பின்னூட்டத்தில் சொல்லிட்டு அபீட்டாயிக்கலாம்! பெப்சி உங்க சாய்ஸ் மாதிரி, இந்தக் கோத்துக்கற சங்கிலியும் உங்க சாய்ஸ் தான்!


21. U – Unknown fact about me? அதெப்படி தெரியாத ஒண்ணை...? சொல்லிட்டாத் தெரிஞ்சதாப்போயிடுமே! அப்புறம் அதை எப்படித் தெரியாத ஒரு உண்மைன்னு பீலா வுடறது:-))

எனக்கே கூடத் தெரியாமத் தான் இருக்கு! அதனால, ஒரு ஒப்பந்தம் செஞ்சுக்கலாம்! என்னைப்பத்தித் தெரியாத உண்மை ஏதாவது உங்களுக்குத் தெரிய வந்தா, நீங்களே சொல்லிடுங்க! எனக்குத் தெரிய வந்தா, நானே சொல்லிடறேன்! காட் ப்ராமிஸ்! போதுமா!

22. V – V for Vendetta! படம் புடிக்கும்! மத்தபடி, வென்டெட்டா, வெண்டைக்காய் எதுவுமே புடிக்காது!


23. W – Worst habit? ஒண்ணு, ரெண்டு இல்ல,நிறைய இருக்கு! ஹாபிட்ஸ், பழக்கங்களுடைய அடிமையாகவே நாம் இருந்துவிடாமல், நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறது. பழக்கங்களின் பிடியில் இருந்து விடுபடும்போது, மனிதன் இப்போதிருக்கும் நிலையைத் தாண்டி அடுத்த நிலைக்கு உயர முடியும். இந்த டாபிக், என்னுடைய பதிவுகளின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது.


24. X – X கிராஸ் ரோட்னு சொல்வோமே, அது மாதிரி!வெறும் கிராஸ், சிலுவை இல்லை! வாழ்க்கையின் பல தருணங்களில், எதிரும் புதிருமான விஷயங்கள் சந்தித்துக் கொள்வதை, அதன் பின் எழும் ஒரு புதிய வீச்சு, வேகத்தை அனுபவித்திருக்கிறேன்!


25. Y – இந்த எழுத்தைக் கொஞ்சம் கவனித்துப்பார்த்திருக்கிறீர்களா? இல்லையானால், WHY?

ஒரு பாதை, ஒருகட்டத்தில் இரண்டு எதிரெதிர் திசைகளில் பிரிவதைச் சொல்வது போல இல்லை? ஏதோ ஒரு பாதையில், பயணிக்க மட்டும் நமக்கு சுதந்திரம் இருக்கிறது. அந்தப்பாதை எப்படி இருக்கும், எங்கே அழைத்துச் செல்லும் என்பது, வாழ்க்கைப் பயணத்தில் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாது. நாம் செல்லுகிற பாதையில், என்னென்ன அனுபவங்கள் காத்திருக்கும் என்றும் தெரியாது. ஆனால், பயணம் செய்கிறவன், அந்த அனுபவங்களை, அனுபவித்துத் தானாக வேண்டும். கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்!

26. Z – Zombie or Zombi..? நிறைய நேரம் கணினி முன்னாலேயே பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பதால், என்னை ஒரு Computer Zombie என்று நினைத்தால், அது தவறு ஏதுமில்லை! ஆனால், நான் மூளை களைத்துப் போன சோம்பேறி மட்டும் இல்லை!




அன்புக்குரியவர்கள்: ......அன்பு செலுத்தத் தெரிந்தவர்கள் அத்தனைபேரும் தான்!

ஆசைக்குரியவர்: ...நிறையப்பேர்! சின்னச் சின்ன ஆசைகளில் இருந்து, பேராசைகளாக நிறையப்பேரை இந்த வகையில் என்னால் சொல்ல முடியுமே! ரவா முறுகல் தோசை..? நம்ம ஊட்டுல அதெல்லாம் தெரியாது!அதுனால தான் கோவி கண்ணன் சொன்ன மாதிரிச் சொல்ல முடியவில்லை:-))

இலவசமாய் கிடைப்பது: .....வேறென்ன, உபதேசம் தான்! ஒருத்தருக்குச் சக்கரை வியாதி இருக்கிறது என்று நாக்குத் தவறிக்கூடச் சொல்லிவிடக் கூடாதே? எத்தனை இலவச உபதேசங்கள், மருத்துவ டிப்ஸ்,கிடைக்கும் தெரியுமா?!வைத்தியருக்கே அத்தனை மருந்து, வைத்தியம் தெரிந்திருக்காது!

ஈதலில் சிறந்தது: .....இந்த ஈதல், இசைபட வாழ்தல் இதை பற்றி எல்லாம் நானும் நண்பர் டாக்டர் சுந்தர வடிவேலுவுடன், கொஞ்சம் வள்ளலார் ஈடுபாடு கொண்ட அன்பர்களோடு நிறைய விவாதித்துக் களைத்துப்போயிருக்கிறேன். ஈயென்று இரங்கும், உண்மையிலேயே தேவையும் தாகமும் இருப்பவனுக்கு எதுவும் ஈயப்படுவதில்லை. புளித்த ஏப்பக்காரனும், பொய் முகம் காட்டுகிறவனுமே இங்கே ஈ'க்களை விரட்டிவிட்டுத் தாங்களே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு முன்னாள் மறைந்த திரு (டணால்) தங்கவேலு, அன்னதானம் செய்து, "வாங்கிக்கட்டிக் கொண்ட" கதையை குமுதம் வார இதழில் நொந்துபோய்ச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. நான் கடவுள் படத்தில், விளிம்புநிலை மாந்தராக வரும் ஒரு கதாபாத்திரம் பேசுகிற வசனம் இது:"புண்ணியம் தேடுறாங்களாம்!"

இதைப்பற்றின பார்வைகளே கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது.


உலகத்தில் பயப்படுவது: ....எங்க வீட்டு வால்பையனுக்குத்தான்!


ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், ஒலகம் புரிஞ்சுகிட்டேன்! கண்மணி என் கண்மணி! இதுக்குத் தனியா வேற விவரிச்சுச் சொல்லணுமாக்கும்!

எப்போதும் உடனிருப்பது: நம்ம சத்யராஜ் கணக்கா, 'லொள்ளு"! அப்புறம்,ஸ்பெக்ஸ்..கண்ணாடி! போட்டிருக்கிறது கூட நினைவில்லாமல் குளிக்கவும் போயிருக்கிறேன்! அந்த அளவுக்கு கூடவே பழகிவிட்டது!


ஏன் இந்த பதிவு: ....அதானே? ஏன்? ஏனிந்தக் கொலைவெறி?

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!


ஒரு ரகசியம்: ........சொல்லிட்டா அது ரகசியமா இருக்காதேன்னு தான்!!


ஓசையில் பிடித்தது: ஒருகை ஓசை!......மௌனம்!

ஔவை மொழி ஒன்று: ஔவியம் பேசேல்!


()ஃறிணையில் பிடித்தது: புத்தகங்கள்! அவை அஃறிணை அல்ல! உங்களையும் என்னையும் விட உயிருள்ளவை! உயிரூட்டக் கூடியவை!


இவ்வளவு தூரம் வந்தீங்க, ஒண்ணும் சொல்லாமலே  போனா எப்படி?