சுயபுராணம்



   ஏர்டெல் இணைப்பு வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்து, பிஎஸ்என்எல் இணைய இணைப்பைத் தற்சமயம் உபயோகித்து வருகிறேன்.

ஒரு பொதுத்துறை நிறுவனம் எப்படித் தள்ளாடுகிறது, தள்ளாட வைக்கிறார்கள் என்பதை இன்னொரு பொதுத்துறை நிறுவனத்தில் முப்பது வருடம் பணியாற்றிய அனுபவத்தில் நிறையவே பார்த்திருக்கிறேன்-அனுபவித்திருக்கிறேன்.  முந்தைய காலத்தோடு ஒப்பிடும்போது, பி எஸ் என் எல் நிறையவே மாறியிருக்கிறது! ஆனாலும் வாடிக்கையாளருக்குத் திருப்தி ஏற்படுகிற விதத்தில் இருக்கிறதா என்றால், இன்னமும் இல்லை என்பதை வருத்தத்தோடு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

யாகூ அஞ்சலைத் திறக்க முடியவில்லை. பலதளங்கள் திறக்க மாட்டேன் என்று பிரவுசரில் மேலே சுற்றிக் கொண்டே அடம் பிடிக்கின்றன. சிலதளங்கள் அதைவிடப் பரிதாபம் ஐபிஎன் லைவ், தினமணி தளங்களின் முகப்பில் ஒருபகுதி லோடாகிறது. செய்திகளைக் காணோம். இரண்டு தெரு தள்ளி இருக்கும் நண்பருக்கும் ஆரம்ப காலத்தில் இதே பிரச்சினை இருந்திருக்கிறது. இப்போது இல்லை எக்ஸ்சேஞ்சில் இணையத் தொடர்புகளில் எழும் பிரச்சினைகளுக்கு உதவுவதற்கென்றே இரண்டு எண்கள் இருக்கின்றன. ஒன்றில் தொடர்பு கொண்டபோது, மிகக் கூலாக நாங்கள் வெறும் சர்வீஸ் ப்ரொவைடர் தான்! முப்பதாயிரம் சந்தாதாரர்களில் ஒருவர் நீங்கள்! மற்றவர்களுக்கு என்ன கிடைக்கிறதோ அது உங்களுக்கும் கிடைக்கும் என்று எந்த நம்பிக்கையில் சொன்னாரோ எனக்குத் தெரியாது! அவர் சொன்னபடி கிடைக்கவில்லை என்பதை, அப்போது கோளாறைப் பார்ப்பதற்காக வந்த தொழில்நுட்பப் பணியாளர் முன்னிலையிலேயே காண்பித்தாயிற்று!உதவி அந்த மட்டோடு அவர்கள் பக்கலில் நின்றுபோனது!

கூகிள் பஸ்ஸில் பகிர்ந்து கொண்ட போது நண்பர்கள் ஆர் போகனும் ஜீவ்சும்,பாலாஜி கிருஷ்ண மூர்த்தியும் சில தீர்வுகளைச் சொன்னார்கள். 
 ஓபன் டிஎன்எஸ்ஸுக்கு மாறியும் பலனில்லை!  கூகிள் டி என் எஸ் உபயோகித்துப் பார்த்தும் பலன் இல்லை. இன்றைக்கு பி எஸ் என் எல் எக்ஸ்சேஞ்சுக்குப் போய் நேரடியாக முறையிட்டு வந்ததில், JTO அம்மாவும் இன்னொரு தொழில் நுட்பப் பணியாளரும் நேரடியாகவே, அவர்களுடைய லேப்டாப்பையும் எடுத்துக் கொண்டு சோதனை செய்து பார்த்தார்கள். இன்னமும் சரியாகவில்லை. இணையத்தை பி எஸ் என் எல் வழியாகத் தொடர்பு கொள்வதில் ஏகப்பட்ட தடங்கல்கள் இருப்பதைக் கொஞ்சம் பொறுமை யிழந்துகொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொருநாளும் வெவ்வேறு விஷயங்களை விவாதிக்கும் தளங்களுக்குப் போய் நேரடியாக வாசிக்கும் பழக்கத்துக்கு, பி எஸ் என் எல் தற்காலிகமாகத் தடை விதித்திருக்கிறது.  
 
ஒரு பொதுத்துறைவங்கியில் இத்தனை நாள் பணியாற்றிவிட்டு, பொதுத் துறையை இங்கே எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதுதான் மிக வேதனைப்பட வைக்கிற விஷயம்! ஊழியர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. ஊழியர்கள், முன்பை விடப் பொறுப்போடு செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்!பொறுமையாகப் பதில் சொல்கிறார்கள். ஆனாலும் குறைகளைத் தீர்க்க முடியவில்லை.தங்களுடைய நிறுவனத்தில் என்ன நடக்கிறதென்றே அவர்களுக்கும் புரிவதில்லை.

பதினைந்துநாட்கள் தான் ஆகிறது!அதற்குள், என்னுடைய ஸ்கீமில் தரவிறக்க லிமிட்டாக இருக்கும் எட்டு ஜிபி தீர்ந்துவிட்டதாம்.இணைப்பு இப்போது கட்டைவண்டி போகிற வேகத்துக்கும் சற்றுக் கீழாக, 256kbps என்ற பெயரில் அதிலும் முக்கால் பங்கு வேகத்தோடுதான் இருக்கிறது. ஸ்கீம் மாற விண்ணப்பித்திருக்கிறேன்.

அதாவது, இணையத்தில் உலாவ எனக்கிருக்கும் குறைகளைத் தீர்த்து வைக்கும் பட்சத்தில்......!
  இணையத்தின் பக்கமே வராமல், இயல்பான வாழ்க்கைக்கு மாற முயற்சித்துப் பார்த்து...............

முடியவில்லை! 
 
இணையம் அந்த அளவுக்கு வாழ்க்கையின் அன்றாட செயல்பாடுகளில் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது.

3 comments:

  1. anubava pathivu.. enkalukkum payanullathaaka ullathu..vaalththukkal

    ReplyDelete
  2. very correct
    i also work for a ps bank
    that is the sole reason for sticking on to bsnl

    private players are also no better

    ReplyDelete
  3. திரு.பாலு!

    ஒரு கதை உண்டு.

    ஒருவருக்குத் தன்னுடைய தகப்பனைப் பிடிக்காது. அதனால், தகப்பன் வெட்டிய கிணற்றில், நல்லதண்ணீர் என்றாலும் குடிக்க மாட்டாராம்.அதே கதையில், இன்னொருவருக்குத் தன்னுடைய தகப்பனை ரொம்ப ரொம்பப் பிடிக்கும், அதனால், தகப்பன் வெட்டிய கிணற்றில் உப்புநீராக இருந்தாலும் அதைத் தான் குடிப்பேனென்று பிடிவாதம்! இரண்டில் எது சரி?

    பொதுத்துறையில் பணியாற்றியதாலேயே, பொதுத்துறை நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மையை சகித்துக் கொள்வேன் என்பது இரண்டாவது நபரைப் போல இருக்கிறதே! சரிதானா?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!