ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நாளை மற்றொரு திருநாளே!

கனிமொழி விவகாரத்தில்,நேற்றைய நடப்பாக தட்ஸ்தமிழ் செய்தி இப்படிச் சொல்கிறது:

டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, தனது மகள் கனிமொழி தீபாவளிப் பண்டிகைக்குள் வீட்டில் இருக்க வேண்டும் என்று தனது துணைவி ராஜாத்தியம்மாள் விரும்புவதாக கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் கனிமொழியை சிறையில் சந்தித்த போதும் கனிமொழிக்கு கருணாநிதியும், ராஜாத்தியம்மாளும் ஆறுதல் கூறி விட்டு வந்துள்ளனர்.

நேற்று டெல்லி சென்ற கருணாநிதி அங்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு சோனியா காந்தியை, கருணாநிதி நேற்றுதான் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சோனியாவிடம் கருணாநிதி நலம் விசாரித்தார். மேலும் கனிமொழி குறித்தும் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், கடந்த ஐந்து மாத காலமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி தீபாவளிக்குள் தங்களது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று ராஜாத்தியம்மாள் விரும்புவதாக கருணாநிதி சோனியாவிடம் கூறினார்.

தனது மனைவியின் வலியுறுத்தலின் பேரிலேயே சோனியாவை கருணாநிதி சந்தித்ததாக கூறப்படுகிறது. தனது மகளும், பேரனும், தீபாவளிக்குள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று கருணா நிதியிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார் ராஜாத்தியம்மாள் என்றும் கூறப் படுகிறது. கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க சிபிஐ தரப்பிலிருந்து எந்த முட்டுக்கட்டையும் இருக்கக் கூடாது. இதை காங்கிரஸ் தரப்பு உறுதி செய்ய வேண்டும் என்று கருணாநிதி மூலம் ராஜாத்தியம்மாள் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து கனிமொழி ஜாமீன் குறித்து உத்தரவாதமான பதில் ஏதும் வரவில்லை என்று தெரிகிறது. முன்னதாக டெல்லி வந்து சேர்ந்ததும், மத்திய சட்ட அமைச்சரான சல்மான் குர்ஷித் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போதும் கனிமொழியின் ஜாமீன் குறித்து கருணாநிதி பேசியதாக
த் தெரிகிறது.  ஆனால் உறுதியான பதிலை குர்ஷித் தரவில்லை என்று கூறப் படுகிறது.இதனால் கருணாநிதியின் டெல்லி பயணத்தை வெற்றி என்று கூற முடியாத நிலையே ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

Section 409 of IPC. Criminal breach of trust by public servant, or by banker, merchant or agent


Whoever, being in any manner entrusted with property, or with any dominion over property in his capacity of a public servant or in the way of his business as a banker, merchant, factor, broker, attorney or agent, commits breach of trust in respect of that property, shall be punished with [imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.


CLASSIFICATION OF OFFENCE


Punishment—Imprisonment for life, or imprisonment for 10 years and fine—Cognizable—Non-bailable—Triable by Magistrate of the first class—Non-compoundable.

ஆனால், நாளை, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசா, பெஹுரா, சந்தோலியா மூவர் தவிர்த்து, கனிமொழி மற்றும் மற்றும் பதின்மூன்று நபர்கள் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிகிறது. மொத்தம் பதினேழுபேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 409 ஆம் பிரிவின் கீழ் ஜாமீனில் விட முடியாத நம்பிக்கை மோசடிக் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால் நீதிபதி என்ன முடிவெடுக்கிறார் என்பதை இப்போதே சொல்லிவிட முடியாத சூழ்நிலை. தவிர, கனிமொழி தான் ஒரு பெண் என்ற காரணத்தைக் காட்டி, அதே தண்டனைச்சட்டத்தின் 437 ஆம் பிரிவின் கீழ் ஜாமீன் கோரியிருப்பதால், இந்த வழக்கு, ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தப் போகிற டெஸ்ட் கேஸ் என்று மட்டும் சொல்ல முடிகிறது.

கனிமொழி ஜாமீன் கோரிச் சொல்லியிருக்கும் காரணங்கள், வாதங்கள் எல்லாம் பழையவைதான்! குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யும் போது நீதிபதி திரு ஒ பி சைனி இவற்றைஒவ்வொன்றாகக் குறிப்பிட்டே நிராகரித்திருக்கிறார். எழுநூறு பக்கத் தீர்ப்பின் பகுதிகள் இதுவரை ஊடகங்களில் வெளியானதில் நீதிபதி இந்த வாதங்களை நிராகரித்ததும் இருக்கிறது.

பிரிவு 437 ஐயும், சிபிஐ ஜாமீன் கோருவதை எதிர்க்கப் போவதில்லை என்ற அம்சத்தையும் மட்டுமே கனிமொழி தரப்பு நம்பியிருப்பது, கருணாநிதியின் டில்லி சந்திப்புக்களால்  உறுதிப்படுகின்றன.

ஒன்றுக்கொன்று ப்ரீ ஆஃபர் மாதிரி, கனிமொழியை வெளியே விட்டால், மாறன் விஷயத்தில் கண்டுகொள்ள மாட்டோம் என்ற பேரம் இருந்ததா, இருக்கிறதா என்பது வரும் வாரங்களில் தெரிந்து விடும்.
மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதை ஏற்கெனெவே  ஒன்றரை மாதங்கள் தாமதம் செய்தாகி விட்டது.

இனி, அதுவும் கொஞ்சம் விரைவாகத் தாக்கல் செய்யப்பட வேண்டிய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.கேடி பிரதர்ஸ் அமுக்கி வாசித்துக் கொண்டிருப்பதில் இருந்தே திரைமறைவு வேலைகள் இரண்டுபக்கமும் நடந்துகொண்டிருப்பது தெளிவாகப் புரிகிறது.

வழக்கு விசாரணை நவம்பர் பதினொன்றாம் தேதி முதல் தொடங்கும் என்று நீதிபதி அறிவித்திருக்கிறார்.இருபத்தெட்டு சாட்சிகள் விசாரிக்கப் பட இருக்கிறார்கள்.அவர்கள் விசாரிக்கப்படும் போது துணை குற்றவாளிகள்  ஆஜராகத் தேவையில்லை என்றும் நீதிபதி சொல்லியிருக்கிறார்.

இது ஒரு ட்ராக்கில் ஓட ஆரம்பிக்கும்போதே, டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற தனது வாதத்தை எடுத்து வைக்கப்போவதும் இதே சிறப்பு நீதிமன்றத்தில், நாளைக்குத்தான். 

இதுபோக, இந்த மாதம் 31 ஆம்  தேதி, உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப் படவேண்டிய மனு ஒன்றும் இருக்கிறது. ஆக, கனி மொழிக்கு நாளைக்கே ஜாமீன் கிடைக்கப்போவதில்லை என்றும் ஊடகங்கள் சொல்கின்றன.

திமுக எம்பி இளங்கோவனிடம் நம்பிக்கை மோசடிக் குற்றமும் கனி மொழிமீது சுமத்தப் பட்டிருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதை அவர்கள் நிரூபிக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார். போபார்ஸ் வழக்கு மாதிரியே இதையும் சிபிஐ சொதப்பிவிடும் என்பதில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை!


ஆனால், இத்தனையையும் மீறி, சம்பந்தப்பட்ட ஒவ்வொருவர் அடி வயிற்றிலும் கலக்கத்தை ஏற்படுத்துகிற மாதிரியே, இந்த வழக்கில் சிபிஐ சில விஷயங்களைச் செய்து வருகிறது.

உதாரணமாக, கனிமொழி ஜாமீனுக்கு விண்ணப்பித்தால் சிபிஐ அதை எதிர்க்காது என்ற ரீதியில் தொடர்ந்து ஊடகங்களுக்கு செய்திகள் கசிய விடப்பட்டன.அது அப்படித்தானா என்று உச்சநீதிமன்றம் சிபி ஐ வழக்கறிஞரைக் கேட்டது. தன்னிடம் இருக்கும் குறிப்பில் அப்படி எதுவும் இல்லை என்று மழுப்ப முயன்றவரைக் கிடுக்கிப் பிடி போட்டு,சிபிஐ  கனிமொழி ஜாமீனுக்கு மனுச் செய்தால் அதை எதிர்க்கும் என்று சொல்ல வைத்தது. இப்போது சிபிஐ கனிமொழி ஜாமீனுக்கு விண்ணப்பித்தால் எதிர்க்காது என்ற செய்திகள் மறுபடி உலவ ஆரம்பித்திருக்கின்றன.

கருணாநிதி,அவருடைய 'மகள் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளுடன்' டில்லியில் முகாமிட்டுக் காத்திருக்கிறார்.

எவரெவர் கருணாநிதியை சந்தித்தார்கள் என்பதைக் கூட, மாற்றி மாற்றி செய்தி வெளியிட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.குர்ஷித், சிதம்பரம் இருவரும் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குப்போய் சந்தித்தார்கள் என்று ஒரு செய்தி! இல்லை இல்லை, அதே ஹோட்டலில் தங்கியிருந்த நேபாளப் பிரதமரை சந்தித்துவிட்டு, கருணாவை சந்திக்காமலேயே அவர்கள் இருவரும் திரும்பி விட்டார்கள் என்று இன்னொரு செய்தி! அப்புறம் சிதம்பரம்  முன்னதாகவே சந்தித்துவிட்டார் என்றொரு செய்தி!!


ஆக, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, நீதிமன்றத்தில் மட்டுமல்ல, அரசியல் குதிரை பேரங்களிலும் கூட சேர்ந்தே நடந்துகொண்டிருப்பது புரிகிறதா?

ஆக, ஒருவழியாக ஸ்பெக்ட்ரம் வழக்குத் தேர் நகர ஆரம்பித்து விட்டது. வழக்கு நகர நகர, இன்னும் எத்தனை பேரை ஒரு வழி பண்ணிவிட்டுப் போகப்போகிறதோ, தெரியவில்லை! 


சிதம்பரத்துக்கு முன்னால், தயாநிதி மாறன் அடுத்த நகர்வில் காத்திருக்கிறார் என்பது மட்டும் இப்போது நன்றாகத் தெரிகிறது.

1 comment:

  1. தீபாவளி ஆரியர் பண்டிகை அல்லவா ? அதற்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு ? அதனை நாங்கள் கொண்டாட மாட்டோமே ? நாங்கள் கிருஸ்துமஸ், ரமதான் இதற்க்கு தானே வாழ்த்தே சொல்லுவோம். தீபாவளி அன்று எங்களுக்கு வெறும் விடுமுறை நாள் கொண்டாட்டம் தானே ?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!