Showing posts with label குரு வணக்கம். Show all posts
Showing posts with label குரு வணக்கம். Show all posts

இது கடவுள் வரும் நேரம்! ஸ்ரீ அரவிந்தர் மலர்ப்பதங்கள் வாழி!



"Sri Aurobindo has come to tell us: It is not necessary to leave the earth to find the Truth, it is not necessary to leave life to find one's soul, it is not necessary to give up the world or to have limited beliefs in order to enter into relation with the Divine. The Divine is everywhere, in everything, and if He is hidden it is because we do not take the trouble to discover Him.

We can, simply by a sincere aspiration, open a sealed door in us and find... that Something which will change the whole significance of life, reply to all our questions, solve all our problems and lead us to the perfection we aspire for without it, that Reality which alone can satisfy us and give us lasting joy, equilibrium, strength, life.. . .

The starting-point: to want it, truly want it, to need it. The next step: to think, above all, of that. A day comes, very quickly, when one is unable to think of anything else.

That is the one thing which counts."


- The Mother

 
ஓம் சத்யம் ஞானம் ஜ்யோதிர் அரவிந்த!
 

சாவித்திரி எனும் மகா மந்திரம் தந்தாய்! திருவடி போற்றி!



ஒளிபொருந்திய பாதையைக் காட்டிய கருணைக்கு நன்றி சொல்ல முயல்வதும் கூட
அந்த சூரியனுக்கே கற்பூர ஆரத்தி எடுக்கிற அறியாமை தான்!
ஸ்ரீ அரவிந்த தேவே! திருவடி போற்றி!



ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

எப்படி அஞ்சலி செலுத்துவது என்பதும் கூட
ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்னது  தான்!


அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா!


சுவாமிமலையில் தகப்பன் சாமியாக ஒரு சின்னக் குழந்தை, தகப்பனுக்கே 'தன்னை' அறிந்துகொள்ளும் உபதேசத்தைச் சொல்லிக் கொடுத்தது. மோன குருவாக இருந்தவனை, மௌனத்திலேயே எல்லாம் கற்பித்தவனாகச் சொல்லப்படுபவனுக்குமே மௌனம் கலைய வைத்து, பிரணவத்தின் பொருள் எதுவென்று தெளிந்து கொள்ளச் சிறு குழந்தையிடம் 'உனக்குத் தெரியுமோ, தெரிந்தால் சொல்' என்று கேட்க வைத்தது.

"இப்படிக் கேட்டால் எப்படி? கேட்கிற முறையில் கேட்டால் சொல்லுவேன்!" என்றதாம் சிறு குழந்தை! தந்தை, தான் பெரியவன், தனக்கே உபதேசமா, அதுவும் நேற்று முளைத்த இந்த சிறு குழந்தையா என்றெல்லாம் யோசிக்கவில்லை. பணிவோடு, ஒரு குருவிடம் சீடன் எப்படி, உண்மையான பணிவோடு, அக்கறையோடு கேட்கவேண்டுமோ, அப்படிப் பாடம் கேட்டானாம். அந்த வினயமும், அக்கறையும் வந்தபோது தெரிய வேண்டியதும் தெரிந்தது, சொல்லப்பட்டது என்கிறது கதை!

கந்தா கடம்பா கதிர்வேலா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு திருநீற்றை மட்டும் பூசிக் கொள்வதோடு நின்று விடுகிறவர்களுக்குக் கதையாக மட்டும் தான் இது நிற்கும். இவர்களுக்குத் தகப்பன் சாமியாக வந்த அந்த சுவாமிநாதனே வந்து சொன்னாலும் ஏறாது என்பதால், சென்ற பதிவில் ஆசிரியர் பனி புதிரா புனிதமா என்ற கேள்வியை எழுப்பி விட்டு, ஒன்றிரண்டு அனுபவங்களை மட்டும் சொல்லியிருந்தேன்.

"உங்களால அவங்க கேக்குற கேள்விக்குப் பதில் சொல்ல முடியலையா? பேசாம விட்டுட்டு எங்கள மாதிரி கிருஷ்ணா ராமான்னு இருந்துடுங்க" என்று எனக்கு உபதேசம் செய்திருந்ததை ஓரிடத்தில் படித்த பிறகு தான், யார் ஆசிரியன்,எவன் வந்தனைக்கு உரியவன் என்ற சிந்தனையே வந்தது. என்னுடைய பதிவுகள் முழுவதுமே தனிமனிதத் தாக்குதல்கள் தான் என்பது அவர் "புரிந்து" கொண்டதாக நினைத்துக் கொண்டு எழுதியிருக்கிறார். வாத்தியார், நீங்க, இன்னும் கொஞ்சம் கவனமாப் படிக்கணும்! இந்த மாதிரியே, முழுசாப் படிக்காமலேயே அப்டேட் செய்துகொண்டு பாடம் நடத்தினா......... உங்க கிட்டப் படிக்க வர்ற புள்ளைங்கபாவம் இல்லீங்களா! 
 
வாத்தியார்னா எல்லாத்தையும் படிச்சுப் பாத்துட்டு அப்புறம் தான் மார்க் போடணும்னு ஏதாச்சும் சட்டம் இருக்குதா என்ன? கட்டுரை எழுதச் சொன்னாள் விரக்கடையால் அளந்து பாத்து மார்க் போடும் ஒரு வாத்தியாரைப் பத்தி, இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே எழுதின தடம் கூட இன்னமும் மறையலே! படிச்சுப் பாக்காமலேயே, தெரிஞ்சுக்காமலேயே, இவரு நாங்க வாத்தியார் வேலைய சைடாத் தாங்க செய்யறோம்னு சொல்லாமயே சொன்னாரு!

இன்னொருத்தர், சரக்கு என்ற ஒரே வார்த்தைப் பிரயோகத்தில் என்னுடைய தராதரத்தைக் கணித்து விட்டார்! இங்கே வலைப்பக்கங்களில்,சுப்பையா வாத்தியாரெல்லாம் பனிரெண்டு கட்டங்கள், இருபத்தேழு நட்சத்திரங்கள், இன்னும் என்னென்னமோ விஸ்தாரமாக கணக்குப் போட்டு ஒருத்தர் தலையெழுத்து எப்படியிருக்கும் என்று ஜோசியம் பக்கம் பக்கமாகக் கணித்துக் கொண்டிருக்கிறார்கள். இவரென்னவென்றால், ஒரே வார்த்தையில் கண்டுபிடித்து விட்டாராம்! அய்யோ, தமாசுன்னா ஒரே தமாசுதான் போங்க!

அது வரை ஆசிரியர் தினத்திற்காகப் பதிவு எழுதும் உத்தேசமே இருக்கவில்லை. காதலர் தினம், கல்லறைதினம், கத்தரிக்காய் தினம், அம்மாக்கள் தினம், அப்பாக்கள் தினம், இப்படியே ஆசிரியர் தினம் என்றும், மேல்நாட்டுப் பாணியில் அப்படியே காப்பியடித்துக் கொண்டாடும் சடங்குமயமான விஷயங்களில் எனக்கு எப்போதுமே ஈடுபாடு இருந்ததில்லை.

"மேலும் சில பார்வைகள்" என்று இன்றைய கல்வியைக் குறித்து, ஆசிரியர்களைக் குறித்து இந்திரா பார்த்தசாரதி எழுதியதின் ஒரு பகுதி இது:
‘தொட்டனைத் தூறு மணற்கேணி
மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு' என்பது குறள்.
ஆனால் இன்றைய கல்வித் திட்டத்தில் காலியாக இருக்கும் அறையைப் பொருள்கள் வைத்து நிரப்புவது போல், ஒரு மாணவனின் மூளையைத் தன்னளவில் செயல்பட வைக்காமல், ஏட்டுக் கல்வியை வைத்துத் திணிக்கிறார்கள்.

இன்று நம் பள்ளிக்கூடங்களோ, அல்லது பல்கலைக் கழகங்களோ அப்படி இயங்குகின்றனவா? வகுப்பறைகள் நாடக அரங்குகளாயிருக்கின்றன. ஆசிரியர் நிகழ்த்தும் கலைஞர். மனனம் செய்தவற்றை வசனமாக ஒப்பிக்கின்றார். மாணவர்கள் பார்வையாளர்கள். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே அறிவு பூர்வமான உரையாடல் ஏதுமில்லை. எல்லாம் ஆசிரியரின் தனிமொழிதான். மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டினால்தானே உரையாடல் சாத்தியம்? 
 
"பதில் சொல்லத் தெரியலைன்னா, தங்களை மாதிரியே கிருஷ்ணா ராமான்னு ஒதுங்கிக் கிடக்க" ஆலோசனை தந்த ஆசிரியருக்கு, நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அது சுயமாகச் சிந்திக்கத் தெரியாதவர்களுக்கு!பதிலைத் தேட முனையாதவர்களுக்கு!

என்னுடைய நல்ல காலம், உண்மையிலேயே நல்ல ஆசிரியர்களிடம் பாடம் கற்றுக் கொள்கிற புண்ணியம் எனக்கு வாய்த்திருக்கிறது. 

 

புதிரா? புனிதமா? ஆசிரியர் தினச் சிந்தனைகள்

சின்ன வயது. பத்து வயது தான். எல்லாவற்றையும் பார்வையிலேயே ஏன், எதற்கு என்று கேட்கிற பள்ளிச் சிறு வயது. ஒவ்வொரு நாளும், பள்ளிக்குச் செல்வதற்கு, மதுரை சுப்ரமணியபுரம் பாலத்தைக் கடந்து தான் போகவேண்டும், திரும்ப வேண்டும். பாலம் என்றால் இப்போது இருக்கிற மேம்பாலம் இல்லை. ரயில் பாதைக்கு மேல் இருந்த சிறுபாலம். ஒட்டியே கிருதமால் நதி, சாக்கடைத் தண்ணீர் கலந்து ஓடும். மதுரையை அறியாதவர்களுக்காக, கிருதமால் என்ற முனிவர் பெருமாளைக் குறித்துத் தவம் இருந்த போது, கிருதமாலை என்று நதியாக உருவெடுத்து, கூடல் அழகர் கோவிலை ஒட்டி, ஓடியதாகக் கதை சொல்வார்கள். ஆறிரண்டும் காவேரி, அதன் நடுவே ஸ்ரீ ரங்கம் என்று அங்கே பாடுவது போல, இங்கேயும் இரண்டாற்றுக்கு நடுவே இருந்த பெருமாள் என்று கூடல் அழகரைச் சொல்வதுண்டு. வைகைக்கும் கிருதமாலைக்கும் நடுவே இருந்த பெருமாளாம்!

காலப்போக்கில், கிருதமாலை நதியாக ஓடவில்லை. கிருதமால் நதி என்பது சாக்கடை நீர் கலந்து ஓடுகிற சிற்றாறாகவே ஆகிப் போனது. ஒரு மினி கூவம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்!

தெருக்கூட்டி, சுத்தம் செய்யும் தோட்டிகள், தங்களுடைய வேலை முடிந்ததும், கிருதமால் நதியில், கை, கால் கழுவி சுத்தம் செய்து கொள்வதை ஆச்சரியத்தோடு அந்தப்பள்ளிச் சிறுவன் பார்த்துக் கொண்டே வருவான். சமயங்களில், ஓடுகிற சாக்கடை நீரையே இரண்டு கைகளிலும் அள்ளிக் குடிப்பதைப் பார்க்கும் போது மூச்சே நின்று போகும். உவ்வே..எப்படி இந்த சாக்கடைத் தண்ணீரைக் குடிக்கிறார்கள்?

கேள்வி? யாரிடம் போய்க் கேட்பது?யார் பதில் சொல்வார்கள்?

ஒருநாள், இப்படிச் சாக்கடைத் தண்ணீரை அள்ளிக் குடித்துக் கொண்டிருப்பதை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனை, அந்த வயதான தோட்டி, கூப்பிட்டார்.
போகலாமா......வேண்டாமா, கொஞ்சம் தயக்கம். சிறுவன் கொஞ்சம் பக்கத்தில் போனான்.

"என்ன தம்பி பாக்கறே ? எப்படிச் சாக்கடைத் தண்ணியைக் குடிக்கறான்னா? இங்க பாரு, ஓடற தண்ணி, கொஞ்சம் கூட அழுக்கு இல்லாம, வாசம் இல்லாம, சுத்தமா இருக்குன்னு!நீ வேணா ரெண்டு மடக்குக் குடிச்சுப் பாக்கறியா?"

சிறுவன் கொஞ்சம் தயக்கத்தோடு பின்வாங்குவதைப் பார்த்த அந்தத் தோட்டி சொன்னார்.
"ஓடற தண்ணிஎப்பவுமே சுத்தமாத் தான் இருக்கும், அழுக்கு வாடை எல்லாம் ஓடற ஓட்டத்துல காணாமப் போகும்."

நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னாள் நடந்தது இது. அந்தச் சிறுவன் நான் தான் என்று சொல்ல வேண்டியது இல்லை. ஒரு வாழ்க்கை உண்மையைச் சொல்லிக் கொடுத்த அந்தத் தோட்டி யார், எவர் என்பது தெரியாது, அவசியமும் இல்லை. பின்னாட்களில் செயல்பட வேகப் படுத்திய போது, வேகமாகச் செயல்பட்டபோது, இவனுக்கு அனுபவ சத்தியமாகக் கிடைத்த உபதேசம் இது:

"துணிந்து செயல்பட ஆரம்பி, தவறு வரும் என்று பயந்து, தயங்கி, அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று வெட்டியாக யோசனை செய்து கொண்டே இருப்பதை விட, தவறு வந்தாலும் அதைப் போகிற போக்கிலேயே, செயல்படுகிற வேகத்திலேயே சரி செய்துகொள்ளலாம்!"

ஓரஞ்சு அஞ்சு ஈரஞ்சு பத்துன்னு எண்ணவும், எழுதவும் படிக்கக் கற்றுக் கொடுக்கிறவர்களும் ஆசிரியர்கள் தான். வாழ்க்கையின் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறவர்களும் ஆசிரியர்கள் தான். நீங்கள் எந்த ஆசிரியரைக் கொண்டாடுவீர்களோ, அது எனக்குத் தெரியாது, நான் ஆசிரியராகக் கொண்டாடுவது, வாழ்க்கையை நேசிக்கவும், துணிவோடு வாழ்ந்து காட்டவும் சொல்லிக் கொடுப்பவர்களைத் தான்!

குரு என்ற வார்த்தைக்கு, அறியாமையாகிற இருட்டைப் போக்குகிறவன் என்று தான், சாத்திரம் சொல்கிறது. அறியாமையை போக்க வல்லவன் எவனோ அவனே வணங்கத் தக்கவன், அவனே ஆசிரியன்!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று படிப்புச் சொல்லிக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் இல்லையா என்று கேட்டால், ஆசிரியராக வேலை செய்கிற அத்தனை பேருமே ஆசிரியர் என்று வணங்கப் படும் தகுதி உள்ளவர்கள் இல்லை என்று ஆணித்தரமாகவே சொல்லுவேன்.

அந்தநாட்களில் குருகுல வாசம் என்று, மாணவர்கள், குருவுடைய இடத்திலேயே தங்கிக் கற்ற நாட்களில், கற்றதை முறையாகப் பெற்றார்களா என்பதை சோதித்துப் பார்க்கிற முறை ஒன்று இருந்தது. அன்றைய கல்வி என்பது, வெறும் ஏட்டுப்படிப்பு, மனப்பாடம் அல்லது பிட் அடித்து அப்படியே வாந்தி எடுப்பது என்ற பின் நவீனத்துவம் எல்லாம் இல்லாத, குழப்பம் இல்லாத கல்வி முறை. கற்றது, வாழ்க்கைக்குப் பயன்படுகிறதா என்பதை, ஒவ்வொரு கட்டத்திலும் பிரயோகிக்கவும், உன்னதமான ஒழுக்கத்தோடு வாழ்வதே கல்வியின் பயன் என்றும் இருந்த நாட்கள். இதைப்பற்றி இங்கே எழுதியிருப்பதைப் படிக்க
வாழ்க்கைக்கு உதவாத கல்வியை, நோட்ஸ் எழுதிப் போட்டு விட்டு, நீ என்ன ஆனாலும் எனக்கு ஒரு பொறுப்பும் இல்லை என்று போய்க்கொண்டே இருக்கும் ஆசிரியர்கள் மத்தியில், அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில விதி விலக்குகள், வைகை பெருகி வருமோ-குறை தீருமோ என்று ஏங்கிக் கிடப்பவர்கள் சிலரும், இருக்கத் தான் செய்கிறார்கள்.
“அறிவுச் சந்தையில் விலை போய்விடும் அக்கிரமங்கள், அன்றாட நிகழ்வுகளாகப் பல பல்கலைக் கழகங்களிலும், தன்னட்சிக் கல்லூரிகளிலும் நடந்தேறி வருவதைக் காணும் நடுநிலையாளர்கள் அறச் சீற்றம் கொண்டு குமுறாமல் இருக்க முடியாது.

"
படிச்சவன் சூதும், வாதும் பண்ணினல் போவான், போவான் ஐயோவென்று போவான்'' என்று தன் புதிய கோணங்கி'யில் அன்றே சுட்டிக் காட்டினன் பாரதி! அவனது வழித் தோன்றலாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் இன்றைய நவீன முனைவர்களின் (Ph.D. பட்டம் பெற்றவர்கள்) சூதுவாதுகள் சொல்லில் அடங்காதவை. “
இப்படி ஆதங்கப் படுபவரும் ஒரு ஆசிரியர் தான், கல்வித் துறையில் பெருகி வரும் சீர்கேட்டைத் தாங்க முடியாமல் மனம் வெதும்பி எழுதிய வார்த்தைகள். ஆசிரியர் என்று பணி செய்த ஒரு காரணத்தாலேயே புனிதராகி விட்டதாகக் கருதிக் கொள்ளாமல், "நான் ஆசிரியன்! மண்டியிடு! இது புனிதப் பணி" என்று தங்களுக்குத் தாங்களே புனிதர் பட்டம் வழங்கிக் கொள்ளாமல், சுயசிந்தனையும் சுய விமரிசனமும் மேற்கொள்ளும் மனவலிமையும் பெற்ற ஆசிரியர் ஒருவரின் அறச் சீற்றம் இது. 

 
எம்ஜியார் ஆட்சிக் காலத்தில் ஆசிரியர் அரசு அலுவலர்கள் கூட்டுக்  குழு, சில கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களைத் தீவிரப் படுத்திக் கொண்டிருந்த நேரம்.ஒரு பிரசாரக் கூட்டத்தை முடித்த பிறகு,அரசு கல்லூரி ஆசிரியர் சங்க உள்ளூர் கிளைசெயலாளரும் நானும், இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போனோம். திரையரங்கில், இடையே, ஆசிரியர் எழுந்து யாருக்கோ விஷ் பண்ணினார். நான் யார் என்று கேட்பதற்கு முன்னாலேயே, தன்னிடம் படிக்கும் பையன் என்று சொன்னார். எனக்குள் எழுந்த அருவருப்பை ஊகித்தாரோ என்னவோ, 'என்ன பண்ணறது? அவன் தயவுல அவனும் இன்னும் ஐந்தாறுபேர் சேர்ந்து ட்யூஷனுக்கு வருகிறார்கள்.' சற்று ஈனஸ்வரமாகச் சொன்னார். நடந்த சம்பவம் இது.

சம்பளப் பட்டியலைக் கருவூலத்தில் கொடுத்துக் காசைவாங்கி, ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் இடத்திலேயே, ஏலச்சீட்டு, வட்டி வசூல் நடத்திவிட்டு, மப்போடு திரியும் ஆசியர்களையும் பார்த்தாயிற்று. கல்விக்கூடங்கள் தான் வியாபாரமாகிவிட்டது என்று வருத்தப் படுபவரா நீங்கள்? நிறைய ஆசிரியர்கள் ட்யூஷன் வியாபாரம் ஆரம்பித்துக் கல்லாக் கட்டுவது, வாத்தித் தொழிலை ஒரு சைடு பிசினசாகச் செய்கிறவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?
 
மறைந்த திரு. கா.காளிமுத்து, ஒரு அரசியல் வாதியைப் பார்த்துச் சொன்ன இந்த வார்த்தை மிகப் பிரபலம், இந்த நேரம் பார்த்து நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

"சிலரைப் பார்த்தால் கும்பிடத் தோன்றும்! சிலரைப் பார்த்துக் கூப்பிடத் தோன்றும்!"

இதெல்லாம் இப்பொழுது எதற்கு?

நாளை ஆசிரியர் தினம்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை இந்திய அரசு, ஆசிரியர் தினமாக ஒரு அர்த்தமில்லாத சாங்கியமாகக் கொண்டாடி வரும் தினம் செப்டெம்பர் ஐந்தாம் தேதி! தமிழ்நாடு அரசும் தன் பங்கு சாங்கியமாகக் கொஞ்சம் பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்குகிற தினம் அவ்வளவு தானே, இதற்கு ஏன் 'வோல்கா முதல் கங்கை வரை' மாதிரி, கிருதமால் நதியில் ஆரம்பித்து, நல்லாசிரியர் விருது வரை பேச வேண்டும் என்கிறீர்களா?

இந்தப் புதிரா--புனிதமா என்ற கேள்விக்கு நீங்கள் தான் விடை தேடியாக வேண்டும்!

தத்தாத்ரேயனிடம் உன்னுடைய குரு யார்  என்று கேட்ட போது, எனக்கு இருபத்துநான்கு குருமார்கள், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையைப் போதித்தார்கள் எனப் பதில் வந்ததாம். வாழ்க்கையை நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொடுப்பவனே குரு! ஆசிரியன்! வெறுமே நான் வாத்தியார் வேலையில் இருக்கிறேன், சம்பளம் வாங்குகிறேன், எனக்குப் புனிதர் கும்பிடு போடு என்றால் வேலைக்கு ஆகாது! 

கற்றுக்கொள்வதும் கற்பித்தலின் ஒரு பகுதியே!  ஈரல் முதல் எல்லாம் சீரழிந்து கிடக்கும் கல்வித்துறையில் மாற்றங்களைக் குறித்த சிந்தனையும், விவாதங்களும், மாற்றத்திற்கான முயற்சியும் ஆசிரியர்களிடமிருந்து தான் வர வேண்டும்!

சுய சிந்தனையோடு  மாற்றத்திற்கான விதையாகவும் இருக்கும் ஆசிரியர்களை வணங்குகிறேன்! ஆசிரியர் தினமாக, இந்த ஒருநாள் மட்டும் அல்ல, உங்களிடமிருந்து பெற்ற உந்து விசையோடு வாழ்நாள் முழுவதுமே, ஆசிரியரைக் கொண்டாடும் நாளாக மாற வாழ்த்துக்கள்!

அறிவித்த எழுத்து எங்கள் வாழ்க்கைக்கும் உதவுகிறதா எனப்பார்த்து எழுத்தறிவித்தவன் எவனோ, அவனே நல்லாசிரியன்! நாங்கள் வணங்கும் ஆசிரியன்!