அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா!


சுவாமிமலையில் தகப்பன் சாமியாக ஒரு சின்னக் குழந்தை, தகப்பனுக்கே 'தன்னை' அறிந்துகொள்ளும் உபதேசத்தைச் சொல்லிக் கொடுத்தது. மோன குருவாக இருந்தவனை, மௌனத்திலேயே எல்லாம் கற்பித்தவனாகச் சொல்லப்படுபவனுக்குமே மௌனம் கலைய வைத்து, பிரணவத்தின் பொருள் எதுவென்று தெளிந்து கொள்ளச் சிறு குழந்தையிடம் 'உனக்குத் தெரியுமோ, தெரிந்தால் சொல்' என்று கேட்க வைத்தது.

"இப்படிக் கேட்டால் எப்படி? கேட்கிற முறையில் கேட்டால் சொல்லுவேன்!" என்றதாம் சிறு குழந்தை! தந்தை, தான் பெரியவன், தனக்கே உபதேசமா, அதுவும் நேற்று முளைத்த இந்த சிறு குழந்தையா என்றெல்லாம் யோசிக்கவில்லை. பணிவோடு, ஒரு குருவிடம் சீடன் எப்படி, உண்மையான பணிவோடு, அக்கறையோடு கேட்கவேண்டுமோ, அப்படிப் பாடம் கேட்டானாம். அந்த வினயமும், அக்கறையும் வந்தபோது தெரிய வேண்டியதும் தெரிந்தது, சொல்லப்பட்டது என்கிறது கதை!

கந்தா கடம்பா கதிர்வேலா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு திருநீற்றை மட்டும் பூசிக் கொள்வதோடு நின்று விடுகிறவர்களுக்குக் கதையாக மட்டும் தான் இது நிற்கும். இவர்களுக்குத் தகப்பன் சாமியாக வந்த அந்த சுவாமிநாதனே வந்து சொன்னாலும் ஏறாது என்பதால், சென்ற பதிவில் ஆசிரியர் பனி புதிரா புனிதமா என்ற கேள்வியை எழுப்பி விட்டு, ஒன்றிரண்டு அனுபவங்களை மட்டும் சொல்லியிருந்தேன்.

"உங்களால அவங்க கேக்குற கேள்விக்குப் பதில் சொல்ல முடியலையா? பேசாம விட்டுட்டு எங்கள மாதிரி கிருஷ்ணா ராமான்னு இருந்துடுங்க" என்று எனக்கு உபதேசம் செய்திருந்ததை ஓரிடத்தில் படித்த பிறகு தான், யார் ஆசிரியன்,எவன் வந்தனைக்கு உரியவன் என்ற சிந்தனையே வந்தது. என்னுடைய பதிவுகள் முழுவதுமே தனிமனிதத் தாக்குதல்கள் தான் என்பது அவர் "புரிந்து" கொண்டதாக நினைத்துக் கொண்டு எழுதியிருக்கிறார். வாத்தியார், நீங்க, இன்னும் கொஞ்சம் கவனமாப் படிக்கணும்! இந்த மாதிரியே, முழுசாப் படிக்காமலேயே அப்டேட் செய்துகொண்டு பாடம் நடத்தினா......... உங்க கிட்டப் படிக்க வர்ற புள்ளைங்கபாவம் இல்லீங்களா
 
வாத்தியார்னா எல்லாத்தையும் படிச்சுப் பாத்துட்டு அப்புறம் தான் மார்க் போடணும்னு ஏதாச்சும் சட்டம் இருக்குதா என்ன? கட்டுரை எழுதச் சொன்னாள் விரக்கடையால் அளந்து பாத்து மார்க் போடும் ஒரு வாத்தியாரைப் பத்தி, இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே எழுதின தடம் கூட இன்னமும் மறையலே! படிச்சுப் பாக்காமலேயே, தெரிஞ்சுக்காமலேயே, இவரு நாங்க வாத்தியார் வேலைய சைடாத் தாங்க செய்யறோம்னு சொல்லாமயே சொன்னாரு!

இன்னொருத்தர், சரக்கு என்ற ஒரே வார்த்தைப் பிரயோகத்தில் என்னுடைய தராதரத்தைக் கணித்து விட்டார்! இங்கே வலைப்பக்கங்களில்,சுப்பையா வாத்தியாரெல்லாம் பனிரெண்டு கட்டங்கள், இருபத்தேழு நட்சத்திரங்கள், இன்னும் என்னென்னமோ விஸ்தாரமாக கணக்குப் போட்டு ஒருத்தர் தலையெழுத்து எப்படியிருக்கும் என்று ஜோசியம் பக்கம் பக்கமாகக் கணித்துக் கொண்டிருக்கிறார்கள். இவரென்னவென்றால், ஒரே வார்த்தையில் கண்டுபிடித்து விட்டாராம்! அய்யோ, தமாசுன்னா ஒரே தமாசுதான் போங்க!

அது வரை ஆசிரியர் தினத்திற்காகப் பதிவு எழுதும் உத்தேசமே இருக்கவில்லை. காதலர் தினம், கல்லறைதினம், கத்தரிக்காய் தினம், அம்மாக்கள் தினம், அப்பாக்கள் தினம், இப்படியே ஆசிரியர் தினம் என்றும், மேல்நாட்டுப் பாணியில் அப்படியே காப்பியடித்துக் கொண்டாடும் சடங்குமயமான விஷயங்களில் எனக்கு எப்போதுமே ஈடுபாடு இருந்ததில்லை.

"மேலும் சில பார்வைகள்" என்று இன்றைய கல்வியைக் குறித்து, ஆசிரியர்களைக் குறித்து இந்திரா பார்த்தசாரதி எழுதியதின் ஒரு பகுதி இது:
தொட்டனைத் தூறு மணற்கேணி
மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு' என்பது குறள்.
ஆனால் இன்றைய கல்வித் திட்டத்தில் காலியாக இருக்கும் அறையைப் பொருள்கள் வைத்து நிரப்புவது போல், ஒரு மாணவனின் மூளையைத் தன்னளவில் செயல்பட வைக்காமல், ஏட்டுக் கல்வியை வைத்துத் திணிக்கிறார்கள்.

இன்று நம் பள்ளிக்கூடங்களோ, அல்லது பல்கலைக் கழகங்களோ அப்படி இயங்குகின்றனவா? வகுப்பறைகள் நாடக அரங்குகளாயிருக்கின்றன. ஆசிரியர் நிகழ்த்தும் கலைஞர். மனனம் செய்தவற்றை வசனமாக ஒப்பிக்கின்றார். மாணவர்கள் பார்வையாளர்கள். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே அறிவு பூர்வமான உரையாடல் ஏதுமில்லை. எல்லாம் ஆசிரியரின் தனிமொழிதான். மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டினால்தானே உரையாடல் சாத்தியம்
 
"பதில் சொல்லத் தெரியலைன்னா, தங்களை மாதிரியே கிருஷ்ணா ராமான்னு ஒதுங்கிக் கிடக்க" ஆலோசனை தந்த ஆசிரியருக்கு, நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அது சுயமாகச் சிந்திக்கத் தெரியாதவர்களுக்கு!பதிலைத் தேட முனையாதவர்களுக்கு!

என்னுடைய நல்ல காலம், உண்மையிலேயே நல்ல ஆசிரியர்களிடம் பாடம் கற்றுக் கொள்கிற புண்ணியம் எனக்கு வாய்த்திருக்கிறது

 

4 comments:

 1. நீங்க யாரை சொல்றிங்கன்னு கண்டுபிடிச்சிட்டேன்!

  சரி சிவனுக்கே தெரியாத விசயங்கள் இருக்கா!?
  சிவனெல்லாம் என்ன கடவுள்!?
  நல்ல பள்ளிகூடமா பார்த்து சேர்த்து விடுங்க!

  ReplyDelete
 2. யாரைச் சொன்னேன்னு தெரிஞ்சுக்கிறது ரொம்ப ஈசியானது தான்! யார் யாரைச் சொல்லலேன்னு கேட்டாத் தான், நானே தடுமாறணும்:-))

  அடுத்துச் சொன்னது தான் கொஞ்சம் கஷ்டம்! நல்ல பள்ளிக் கூடமா, அதுலயும் நல்ல வாத்தியார்லாம் இருக்கறமாதிரி அமையறது! எதுக்கும் எங்க வால் பையன் அருணோட சுட்டிப் பொண்ணு கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு, அவ அப்பாவையும் சிவனோட ஒண்ணா, ஒரே பெஞ்சுல நிக்க வைக்கிற க்ளாசாப் பாத்துச் சேத்துடலாம்!

  ReplyDelete
 3. பிறர் சொல்லும்போது, எத்தனை அறிவுபடைத்தவராக இருந்தாலும் பொறுமையாக கேட்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அழகாக சொன்ன பதிவு.

  பின்னர் அதற்கேற்ற பதிலையும் தரவேண்டும் என அறிவுறுத்திய பதிவு. மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 4. முந்தின பதிவையும், இதையும் சேர்த்துப் படித்தால் என்ன சொல்ல வருகிறேன் என்று தெளிவாகவே தெரிந்து விடும், திரு ராதாகிருஷ்ணன்!

  ஆசிரியராக வேலை செய்வதும் ஒரு தொழில் தான் என்பதை நானுமே ஏற்றுக் கொள்கிறேன். அந்தத் தொழிலிலும், Professionalism வளர வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்திச் சொல்கிறேன். இங்கே ஆசிரியராக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு எந்தத் துறைக்கும் போக முடியாமல் தோற்று இந்தப் பணிக்கு வந்தவர்கள். அல்லது, ஆசிரியராகத் தங்கள் தகுதியைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளவும், கல்வித் துறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல், வெறும் நோட்ஸ் எழுதிப் போட்டவுடனேயே தங்களுடைய கடமை முடிந்து விடுவதாக நினைப்பவர்கள். "கற்பிக்க வேண்டிய அவசியமே இல்லை, கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதே ஒரு நல்ல ஆசிரியரின் ப"ணி என்பதையோ, ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள உதவியாக இருப்பது என்பதும் இங்கே உள்ள பெரும்பாலான ஆசிரியர்களிடம் இல்லை என்பதுமே நான் சொல்ல வரும் முக்கியமான கருத்து.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!